நான் பொதுவா என் காரிலேயே குறைவா யூஸ் பண்றது ரிவர்ஸ் கியர் தான். ஏன்னா முன் வச்ச டயர பின் வைக்க வேண்டாமேன்னு தான். நம்ம 'வாத்தி' ராஜா "திரும்பிப் பார்க்கிறேன்" ன்னு சொன்னதும் நான் வருடக் கடைசில எழுதிக்கலாம்ன்னு அப்படியே விட்டுட்டேன்.. நேத்து ட்ராப்ட்ல பார்த்தப்போ தான் இதை மறந்துட்டஞாபகம் வந்தது. அது என்னன்னு பார்ப்போம். இந்த வருடம் ஆவிக்கு நிறைய 'சம்பவங்கள் நிறைந்த வருடமாக' (Eventful Year - Translation அது!).இருந்தது.
வருடத் துவக்கத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்த கடவுளின் திரைப்படம் சில அரசியல் காரணங்களுக்காய் தடை செய்யப்பட்டு, அதை காணவேண்டி கோவையிலிருந்து நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து கேரளா சென்று படம் திருப்தி அடைந்தேன். அதே சமயத்தில் என் வாழ்வில் நானும் ஒரு மீள முடியாத சோகத்தில் இருந்த போது தான் "திரைக்கடவுள்" படத்தை வெளியிடாவிட்டால் நாட்டை விட்டே போவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடே துணை நின்றது. எனக்கு ஆதரவாக பாஸ்கர், ஆனந்த குமார் இருவரும் நின்ற போது இடிந்து போகாமல் பிடித்து நிற்க முடிந்தது. உற்ற துணையாய் நின்ற 'SAM' என்கிற சமீரா என் வாழ்வில் எனக்கு கிடைத்த அற்புதமான தோழி.
புண்ணிய ஸ்தலமான வெள்ளியங்கிரி பயணம் கோவை நேரம் ஜீவா, ஆனந்தகுமார், உதய் ஆகியோருடன் சென்று வந்தது மனதுக்கு இதம் தந்தது. தங்கையின் திருமண வேலைகள் என்னை பிஸியாக வைத்திருந்தது. கல்யாணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் என் வீட்டிற்கு வலது "டயர்" எடுத்து வைத்து உள்ளே வந்தாள் அனாமிகா. (Hyundai i20) அமெரிக்காவில் "இன்பினிட்டி" என்று ஒரு சொகுசு கார் உண்டு. அதில் இருந்த எல்லா வசதிகளும் அனாமிகாவில் இருந்தது கண்டு அதிசயித்தேன். தங்கையின் திருமணம் விமரிசையாக குருவாயூர் கோவிலில் நடந்தது. வாத்தியாரின் (பாலகணேஷ்) கோவை வருகை மகிழ்ச்சி தந்தது. கவியாழி ஐயாவின் வருகையும் சந்திப்பும் கோவையில் நடைபெற்றது. புலவர் ஐயா வீட்டில் வைத்து சில இணைய நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி கொடுத்தது. குறிப்பாக அன்று அறிமுகமான மஞ்சுபாஷிணி அக்காவின் அன்பும் பாசமும் மெய்சிலிர்க்க வைத்தது. கவிஞர் மதுமதி மற்றும் சேட்டைக்காரன் ஐயாவையும் அன்று சந்திக்க முடிந்தது.
நண்பர்களுடன் குற்றாலம் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். வரும் வழியில் திண்டுக்கல் தனபாலன் அவர்களை சந்தித்த அனுபவம் இனிமை. நண்பர் ஜீவாவுடன் (கோவை நேரம்) முதன் முதலாய் நீச்சல் குளத்திற்கு சென்று ஆழம் தெரியாமல் காலை விட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த அனுபவம் மறுபிறப்பை போல் உணர வைத்தது. அதைத் தொடர்ந்து நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நண்பன்/உறவினன் பிரகாஷ் சவுதியிலிருந்து திரும்பியது இன்னும் உற்சாகத்தை கூட்டியது. இருவரும் தியேட்டர்கள், உணவகங்கள், மால் என பல இடங்களுக்கும் சுற்றி பால்ய கால நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டோம். அதே ஜோரில் இருவரும் கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் முப்பது கிலோமீட்டர் வேகத்திலும், எதிரே வாகனங்கள் எதுவும் வராத போதும் விபத்தில் சிக்கிய போது "விதி" என்ற ஒன்றின் மேல் நம்பிக்கை வந்தது.
அடிபட்டு ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போடும்போதும் அலப்பறைகள் விட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ரெண்டு கைலையும் எலும்பு நொறுங்கியிருக்கு எப்படி சிரிச்சு சிரிச்சு பேசறீங்க என்று சுற்றி நின்ற சிஸ்டர்களிடம் இதை விட பெரிய காயங்கள் ஏற்கனவே தாங்கிக் கொண்டதால் இது மிகவும் சிறியதாக தோன்றுகிறது என்று நான் கூறவில்லை. ஆஸ்பித்திரியில் இருந்த சமயத்தில் அன்புடன், ஆதரவுடன் போன் செய்தும், நேரில் வந்தும் என்னை உற்சாகப்படுத்திய நண்பர்கள், இணையத் தோழர்கள், முகநூல் அன்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்.
சந்திப்பின் பிறகு "வாத்தியார்" என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டதும், சீனு, ரூபக் போன்றோர்கள் நண்பர்களாக ஏற்றுக் கொண்டதும், என்னை அண்ணனா காயத்ரி (ஜி.டி) தத்து எடுத்துக் கொண்டதும் சந்தோஷமான நிகழ்வுகள். என் எழுத்துகளுக்கு ஊக்கம் கொடுத்து பல பதிவுகள் எழுத ஆதரவு அளித்த அனைத்து வாசகர்களுக்கும் குறிப்பாக, வடிவு பாஸ்கர், நண்பன் ஜெயராஜ் ஆகியோருக்கு நன்றிகள். வருடக் கடைசியில் வந்த "சென்யோரீட்டா" (மஹிந்த்ரா செஞ்சுரோ) சந்தோஷங்களை இரட்டிப்பாக்கியது. நான் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட "கடவுள் எனும் கோட்பாடு" பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன். அருண், அகிலா மற்றும் விக்கியுடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி.
உலக சினிமா ரசிகன் அவர்களுடன் கோவையிலும், சென்னையிலும் (உலக சினிமா திருவிழா) பார்த்த படங்கள் குதூகலம் மட்டுமல்லாது அவர் என்னுடன் பகிர்ந்த சினிமாவின் நுணுக்கங்கள் பற்றிய அறிவும் அளப்பரியது. முகநூலில் இவருடைய சொல்லாடல்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். டிசம்பரில் சீனுவின் வருகை உவகை அளித்தது. இந்த வருடம் பல சோகங்களையும், சந்தோஷங்களையும் கொடுத்திருந்தாலும் அது சிறப்பானதாகவே உணர்கிறேன். அடுத்த வருடம் எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.. வாசகர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!!
H A P P Y N E W Y E A R - 2 0 1 4 !!!