Tuesday, August 19, 2014

ஆவி டாக்கீஸ் - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்


இன்ட்ரோ  
                            வழக்கமான கிளிஷே படங்களுக்கு நடுவே 'வித்தியாசமான படம்' என்ற அடையாள அட்டையுடன் களமிறங்கி அதை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்ளவும் வைத்திருக்கிறார் பார்த்திபன். "அஞ்சான்"  எனும் மிகப்பெரிய எரிமலை (இப்போ புஸ் ஆயிடுச்சு!) மோதுவதற்கு தன் ஸ்க்ரிப்டுக்கு பலம் உண்டு என்ற நம்பிக்கைக்காகவே இயக்குனர் பார்த்திபனுக்கு ஒரு ஷொட்டு..!



                          

கதை
                           வாழ்வின் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எது வந்த போதும் அதுவும் கடந்தே செல்லும். பின்னால் நடக்கப் போவதை முன்பே அறிந்தாலும் அதை மாற்றவோ, தடுக்கவோ வாய்ப்பேதுமில்லை. ஆகையால் வாழ்வின் அந்தந்த நொடிகளை வாழ்ந்து விடுவதே புத்திசாலித்தனம் என்பதை சொல்வது தான். க.தி.வ.இ யின் கதை. இந்தக் கதையை இயக்குனராக நினைக்கும் ஒருவனின் வாழ்வோடும், அவன் இயக்கும் படத்தோடும் தண்டவாள ரயில் போல் எந்த ஒரு இடத்திலும் தடம் புரளாது சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               பார்த்திபனின் நாயகிகள் யாரும் இதுவரை சோடை போனதில்லை. அவ்வரிசையில் லேட்டஸ்ட் வரவு அகிலா கிஷோர். நயன்தாராவின் சாயலுடன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு சிம்ரன். கண்டிப்பாக கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர அனைத்து தகுதிகளும் உள்ளது. கேமிராவில் தான் உடைமாற்றும் காட்சி பதிவாகியிருப்பது கண்டு காதலனிடம் மன்றாடும் காட்சியும், பதறாமல், சிதறாமல் பக்குவமாய் நாயகனுக்கு நிஜத்தை உணர்த்திவிட்டு செல்லும் கடைசி காட்சியுமே அவர் நடிப்புக்கு நல்ல எ.கா.                            

                               இயக்குனர் வேடத்தில் நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் நல்ல அறிமுகம். காதல் காட்சிகளில் கொஞ்சம் தேற வேண்டும் என்ற போதும் மற்றபடி ஒக்கே. நாயகனுக்கு இணையாய் கலக்கியிருக்கும் மற்றொரு கதாப்பாத்திரம் தம்பி ராமையா. மனிதர் இதே போன்ற கதாப்பாத்திரத்தில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இதில் சலிப்பு தட்டவில்லை. தினேஷ், லல்லு, சாஹித்யா, விஜய் ஆகியோர் உதவி இயக்குனர்களாக தங்கள் கேரக்டரை அளவோடு செய்திருக்கிறார்கள்.

                                  படத்தில் சிறிதே வந்த போதும் மனதை அள்ளிச் செல்பவர் அமலா பால். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் சென்டிமென்ட் என செம்ம ஆக்டிங். ஆர்யா கூட நல்லாத்தான் நடிச்சிருக்கார். விஜய் சேதுபதி, விஷால், டாப்ஸி, விமல், இனியா, பரத், சாந்தனு,சேரன் மற்றும் பிரகாஷ்ராஜ் என நட்புக்காக ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. தயாரிப்பாளர் தனஞ்செயன் 'அவராகவே' நடித்திருக்கிறார். அப்பப்போ இடைச்செருகலாய் நடிகர் பார்த்திபனும்..!


இசை
                                  நடிகர்களை போலவே இசைக்கும் ஒரு பெரிய பட்டாளம் வேலை செய்திருக்கிறது. சத்யா பின்னணி இசையையும் ஒரு பாடலையும் கவனித்துக் கொள்ள தமன், விஜய் ஆண்டனி, சரத் மற்றும் அல்போன்ஸ் ஜோசப் ஒவ்வொரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.                                                                                                

                                                                                 கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் 
                                  கதையே இல்லாமல் திரைக்கதையின் மூலமே படத்தை நகர்த்திச் செல்வது மட்டுமல்லாமல், ஆடியன்ஸை அவ்வப்போது தன் "நச்" வசனங்களால் சிரிக்க வைத்து, அதே சமயம் திரைக்கதையின் ஓட்டத்தோடு ஒன்ற வைத்து நிச்சயம் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். ஒரு சில இடங்களில் கொஞ்சம் குறும்பட எபெக்ட் தெரிந்தாலும் மொத்தத்தில் சபாஷ் சொல்ல வைக்கும் படம்.


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                  ஆர்யா-அமலா பால் ஜோடியின் கதை ஆடியன்ஸ் ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் தன் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்க கூடிய அருமையான எபிசோட். "வெண்மேகம் போலவே", "காற்றில் கதையிருக்கு" பாடலும் இனிமை. இப்படி ஒரு கிளைமாக்ஸ் இதற்கு முன் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறதா என்பது சந்தேகமே!

                           
Aavee's Comments -  A complex algorithm looks simple!

Sunday, August 17, 2014

நாயகன் பாட்ஷாவும் அஞ்சானும் சுவைத்த ஜிகர்தண்டா..! (ஒரு அலசல்)

                        தமிழ்நாட்டின் புதிய டிரென்ட், படம் எவ்வளவு மோசமா இருந்தாலும் அதை மக்கள் பார்த்து வசூலில் வெற்றிப் படமாக்கிவிடுவது (முதல் மூன்று நாள் வசூலை சொன்னேன்) சமீபத்திய வரவுகள் "நான்தாண்டா டான்" என்ற வாசகம் எழுதிய டீஷர்ட் அணிந்த ஜிகர்தண்டாவும் அஞ்சானும். இந்தப் படங்கள் வெளிநாட்டுப் படங்களின் இன்ஸ்பிரேஷன் என்பதெல்லாம் தாண்டி எதனால் நெகட்டிவ் ரிவ்யுஸ் பெற்றன என்பதை கொஞ்சம் அலசுவோம்..!



Spoiler Alert

"டான்" எனும் புத்திசாலி:

                      இருபத்தியேழு வருடங்களுக்கு முன் வந்த "நாயகன்", இருபது வருடம் முன் வந்த "பாட்ஷா". இவை இன்னும் ட்ரெண்ட் செட்டர் படங்களாக இருப்பதற்கு காரணம் அதில் இருந்த உண்மை கலந்த மிகைப்படுத்தல்,  வேலு நாயக்கர் மற்றும் மாணிக் பாட்ஷாவுக்கு மக்கள் சப்போர்ட் இருப்பதாக காண்பித்ததற்கு பின்புலத்தில் மக்களுக்கு நல்லது செய்யும் காட்சிகள் வைத்திருப்பார்கள்.  துப்பாக்கியால் சுடுவது மட்டும் ஒரு "டானின்" கடமை என்றில்லாமல் அந்த கதாப்பாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை பின்னணியில் சொல்லியிருப்பார்கள். (உதாரணம்: உப்பு மூட்டை கட்டி கடத்தல் பொருளை கடலில் மறைக்கும் காட்சி) அங்கே போலீசை ஏமாற்ற/ திசை திருப்ப  ஒரு கிளாமர் பாடல் தேவைப்பட்டதால் வைத்திருப்பார்கள். அதேபோல் தன்னை கொல்ல வருபவனை கண்டுபிடிக்க ஆடிப்பாடி களிப்பது போல் நடித்து தன் வலையில் சிக்க வைப்பார் பாஷா பாய்.


                    அஞ்சானில் இன்டெர்நேஷனல் லெவலில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு தாதாவை புதிதாக முளைத்த இருவர், அதிலும் ஒருவரே சிங்கிள் மேனாக போய் டாய்லெட் கிளீனர் வண்டியில் வைத்து கடத்துவது ரசிகனை முட்டாளாக நினைத்து எடுக்கப்படும் காட்சி. லேப்டாப்பை பிடுங்கி செல்லும் சிறுவனை அடித்து ஊர் மக்கள் திரும்ப கொடுக்கும் காட்சிக்கு வலு சேர்க்க படத்தில் ஒரு காட்சியும் இல்லை. மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாத ராஜு பாய்க்கும், அவர் தம்பிக்கும் அவர்கள் எதற்காக உதவ வேண்டும்.



போலிஸ் பவர்: 

                     வேலு நாயக்கர் செய்யும் தவறுகளுக்காக அவரை  துரத்தும் போலிஸ் அதிகாரி நாசர் கடைசி வரை தொடர்ந்து அவரை கைதும் செய்து விடுவார்.. அஞ்சானில் போலிஸ் சமந்தாவை ராஜு பாய்க்கு தாரை வார்ப்பதோடு வாலின்டரி ரிட்டையர்மென்ட்டில் போய்விடுகின்றனர். பாட்ஷாவில் தம்பி கேரக்டர் நேர்மையாக இருந்து அவர் செய்யும் தவறுக்கு அரெஸ்ட் செய்ய முயல்வார். ஜிகர்தண்டாவில் போலிஸ் கண்ணில் ஒரு முறை மண்ணைத் தூவியதும் அப்புறம் போலிஸ் தென்படுவதேயில்லை.

                    திருடன் போலிஸ் என்பது தான் பர்பெக்ட் காம்பினேஷன். போலிஸ் என்பது பிரேமுக்குள் வராமலே போய்விட்டால் டான் படத்திற்கு மதிப்பு குறைந்து போவதில் ஆச்சர்யமில்லை.. இதே விஷயம் தான் பில்லா படம் வென்றதற்கும் பில்லா 2 தோற்றதற்கும் காரணம்.

'டெர்ரர்' டானின் காதல்:

                    டான் படங்களுக்கு காதல் என்பது அறவே இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். காதல் இல்லாத தமிழ் சினிமா மஞ்சள் கரு இல்லாத ஆப்பாயில் போன்றது. ஆனாலும் அந்த காதல் எபிசொட் முதல் பாதியில் சொற்ப காட்சிகளிலும் இரண்டாவது பாதியில் ஓரிரு காட்சிகளில் மட்டும்  வந்து போனால் நலம். காதல் காட்சிகள் முதல் பாதி முழுவதையும் ஆக்கிரமித்து விடுவது மக்களை சலிப்படைய செய்யும், அஞ்சானில் நிகழ்ந்த கொடூரமும் அதுதான். அதிரடியை பார்க்க ஆசையாய் வந்தவர்களுக்கு காதல் காட்சியை காட்டுவது பசியுடன் மட்டன் பிரியாணி எதிர்பார்த்தவனுக்கு சர்க்கரைப் பொங்கலை பரிமாறியது போலாகும்.

                        தவிர ஊரே பயப்படும் தாதா ஒருவன் யாரோ ஒரு பெண் சொல்வதற்காக நடிகனாக முயற்சிக்கிறான். அவனை வைத்து ஒரு காமெடி படம் எடுத்து பழிதீர்க்கிறான் நாயகன். தாதாவின் கம்பீரம் அங்கேயே விழுந்து விடுகிறது. அட்லீஸ்ட் அந்த தாதா அந்த பெண்ணை ஒன்-சைடாய் காதலித்திருந்தாலாவது அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

மிரட்டும் இசை :

                      இதுபோன்ற படங்களுக்கு தேவை மிரட்டும் இசை. இசைஞானி இளையராஜாவின் காந்த இசைதான் வேலு நாயக்கரின் நடிப்புக்கு பக்க பலமாக இருந்தது. ஜிகர் தண்டாவை பொறுத்தவரை இரண்டாம் பாதி காமெடி என்பதால் அதற்கு எப்படி இசையமைப்பது என்ற குழப்பத்திலேயே சந்தோஷ் நாராயணன் கோட்டை விட்டார். கடந்த இரண்டு வருடங்களாக சுமார் இசை மட்டுமே கொடுத்த யுவன் வெற்றியை ருசிக்க வேண்டி எதையோ முயற்சித்து குறட்டை விட்டிருக்கிறார்.


கதை கரு:

                       படத்தில் ட்விஸ்ட் இருப்பது படத்தை சுவாரஸ்யமாக கொண்டு போக உதவும் தான். ஆனால் படம் நினைத்த பாதையிலெல்லாம் போவதை ட்விஸ்ட் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. பாட்ஷா படத்தை பொறுத்தவரை எல்லோருக்குமே தெரியும் மாணிக்கம் என்னும் சாதாரண மனிதன் தான் பாட்ஷாவாக இருந்திருப்பான் என்று. இருந்தாலும் அதை மக்கள்  ரசித்தார்கள்.. ராஜு பாய் தான் கிருஷ்ணாவாக வந்தது என்று ட்விஸ்ட்ஐ அவிழ்க்கும் போது மக்கள் கொட்டாவி தான் விடுகிறார்கள்.

                        சூர்யா-தேவா நட்போடு வந்த தளபதியில் மம்முட்டியின் இறப்பு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் வித்யுத்தின் மரணம் நமக்கு சலிப்பையே கொடுக்கிறது. அது வித்யுத் புதுமுகம் என்பதால் அல்ல. திரைக்கதை செய்த குளறுபடியினால் மட்டுமே..!


                       ஜிகர்தண்டா, அஞ்சான் போன்ற படங்களுக்கு கிடைக்கும் வசூல் தமிழ் மக்கள் ஒரு நல்ல கேங்ஸ்டர் மூவியை எதிர்பார்த்து ஏமாந்து போயிருப்பதையே காட்டுகிறது. இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் வந்தால் மக்கள் நிச்சயம் "டான்" மூவியின் மேல் உள்ள ஆசையை இழந்துவிடுவார்கள். அதை மட்டும் மனதில் வைத்து இனி விளம்பரம் செய்யும் போது "இது வெறும் மசாலா படம் மட்டுமே" என்று விளம்பரம் செய்தால் சாலச் சிறந்தது.



பி.கு: (மற்றொரு மும்பை 'டான்' விஷ்வா பாயை நான் இதில் குறிப்பிடாததற்கு மன்னிக்கவும். அதற்காக யாரும் தயவு செய்து கண்டனக் கடிதங்கள் எழுத வேண்டாம்)




Saturday, August 16, 2014

ஆவி டாக்கீஸ் - அஞ்சான்


இன்ட்ரோ  
                          தமிழ் இயக்குனர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்க காதல் படம் எடுங்க, காமெடி படம் எடுங்க, எந்த மொக்கை படம் வேணும்னாலும் எடுங்க. கேங்ஸ்டர் மூவிங்கிற பேர்ல மசாலா படம் எடுக்காதீங்க.. பார்க்கவே அருவருப்பா இருக்கு. "கேங்ஸ் ஆப் வசேப்பூர்" ன்னு ஒரு இந்திப்படம். படம் முடியும்போது ஆடியன்ஸ் ஒவ்வொருத்தனும் ஆடிப் போயிருப்பான். ஒவ்வொருத்தன் வயித்துலயும் ஒரு அமிலம் சுரந்திருக்கும்.. நம்மாளுக எடுக்கிற படத்தின் முடிவுல ஆடியன்ஸ் வயித்துல பாப்கார்ன் மட்டும் தான் நிறைஞ்சிருக்கு..!


                          

கதை
                             "வேலு நாயக்கர்", "மாணிக் பாட்ஷா" போன்ற மிகப்பெரிய தமிழ் தாதாக்கள் ஆண்ட மும்பையை  நோக்கி கன்னியாகுமரியிலிருந்து ஒரு டிரெயின் பிடித்து  தன் அண்ணனை தேடி வருகிறார் "ஒற்றைக் கால்" கிருஷ்ணா. வந்த இடத்தில் ரூம் போட்டு குளித்து விட்டு, அங்கேயிருந்த தாதாக்களிடம் எல்லாம் சென்று தன் அண்ணனை பற்றி விசாரிக்க கடைசியில் தன் அண்ணனும், அவன் நண்பனும் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அதிர்கிறான். தன் அண்ணனை கொன்றவர்களை என்ன செய்தான் என்பதே கதை (சரி, படத்தின் மாபெரும் ட்விஸ்ட்டை நாம் உடைப்பானேன்?) இடையில் அண்ணன் 'ராசுத் தம்பி' யின்  (ராஜு பாய் ன்னா தமிழ்ல ராசுத் தம்பி தானே) காதல் எபிசோடும் தண்டவாளத்தின் இன்னொரு டிராக்காக ஓடுகிறது.

                              இந்தப் படத்தை ஒரு ஐந்து வயது சிறுவனுடன் அமர்ந்து பார்த்தேன். படத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு காட்சியையும் (கிளைமாக்ஸ் உள்பட) அவன் சொன்னது சத்தியமாய் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. 'ஜிகர்தண்டா' போலவே படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருப்பதாக இயக்குனர் சொன்னார். ஆனால் படத்தில் அப்பப்போ கார்கள் திரும்புவதை மட்டுமே காண முடிந்தது.
                            
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           சூர்யா, இவரது முந்தைய படங்கள் ஒவ்வொன்றும் அவருடைய நடிப்பு மெருகேறிக் கொண்டே வந்ததை காட்டியது. ஆனால் இந்தப் படம் நிச்சயம் சூர்யாவுக்கு பெருமை தேடித் தரக் கூடிய படங்கள் வரிசையில் இல்லை. ராஜு பாய் கேரக்டருக்கும்  கிருஷ்ணா கேரக்டருக்கும் உடல்மொழியில் வித்தியாசம் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. வித்யூத் ஜம்வால் நடிப்பதற்கு இன்னும் கொஞ்சம் இடமளித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் முயற்சித்தால், தமிழ் உச்சரிப்பை(வாயசைப்பை) சரி செய்தால் தேறலாம்.

                           ராஜு பாயிடம் அடிவாங்கி சாவதற்கென்றே வாயில் தக்காளி சாஸுடன் வரும் வில்லர்கள் பட்டாளம் நிறைய. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது மனோஜ் பாஜ்பாய். மனிதர் ஹிந்தியில் இத்தனை வருடம் சம்பாதித்த அத்தனை பெயரையும் இந்த ஒரே படத்தில் தாரை வார்த்து கொடுத்து விட்டார். சூரி அப்பப்போ கிச்சு கிச்சு மூட்டுவதாக நினைத்து நம்மை வெறுப்பேற்றுகிறார்.


                           தொய்வான பாடல் காட்சிகளில் ரசிகர்கள் வெளியே செல்லாமலிருக்க குத்துவிளக்கை தந்தூரி அடுப்பாய் மாற்ற முயற்சித்து தோற்றிருக்கிறார்கள். அதாங்க சமந்தாவை கவர்ச்சி நாயகியாக்க வேண்டி ஸ்விம்சூட், பிகினி, பொத்தான் தொலைந்து போன சட்டை என  அணியவைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். வெரி சாரி இதற்கெல்லாம் மயங்குகிற ஆட்கள் இல்லை நம் ரசிகர்கள். ஒக்கே ஒக்க காட்சியில் வரும் பிரம்மானந்தமும் அவ்வளவு பிரமாதம் இல்லை.

இசை- இயக்கம்-தயாரிப்பு
                              நம்ம யுவன்பாய்க்கு என்னதான் ஆச்சு? பின்னணி ரொம்ப ஆர்டினரி. அதுவும் வித்யுத் சாகிற காட்சியில் நமக்கு பரிதாபம் தோன்றுவதற்கு பதில் சீக்கிரம் செத்தால் தேவலை என்கிற உணர்வே இருந்தது. பாடல்கள் ஒலித்தட்டில் ரசிக்க முடிந்த ஒன்றிரண்டு கூட தேவையில்லாத இடங்களில் வந்து ரசிக்க முடியாமல் செய்வதோடு படத்தின் வேகத்தையும் குறைக்கிறது. லிங்குபாய், ஸ்க்ரீன்ப்ளேன்னு ஒரு விஷயம் எழுதீட்டு படம் எடுத்தீங்களா? இல்ல படம் எடுத்துட்டு அப்பால பேப்பர்ல நோட் பண்ணிகிட்டீங்களா? ஆனாலும் ஒரு விஷயத்துக்கு உங்கள பாராட்டியே ஆகணும். மத்த இயக்குனர்கள் மாதிரி இல்லாம அஞ்சான் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் மூவி கிடையாதுன்னு உண்மைய போட்டு உடைச்ச அந்த நேர்மை பிடிச்சிருந்தது.



                                      சரி, ஏதாவது நல்லாயிருக்கா?
                                படத்தில் திராபையான திரைக்கதை, பஞ்சரான பின்னணி இசை, மொக்கை காமெடிகள், தேவையற்ற இடங்களில் பாடல்கள், படத்தின் முதல் பாதி இவற்றைத் தவிர படம் நல்லாத்தாங்க இருந்தது. சந்தோஷ் சிவனின் அருமையான ஒளிப்பதிவு மும்பையின் கடற்கரை பிரதேசத்தையும், சமந்தாவின் "மத்தியபிரதேசத்தையும்" அழகாக காட்டியிருக்கிறது. பணமும் நேரமும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை பார்க்கலாம்..!

                           
Aavee's Comments -  Stylish Bheema!

Wednesday, August 13, 2014

பயணிகள் நிழற்குடை 2014AUG14



ப்ரிய சனா..!
கடந்த ஆகஸ்ட் பன்னிரென்டோடு என் தங்கை பெற்றெடுத்த தேவதை இப்பூவுலகில் அவதரித்து நூறு நாட்கள் ஆகின்றன. என் வலைப்பூ நண்பர்களின் ஆசிகள் வேண்டி இதோ என் ப்ரிய 'சனா' வுக்காக!



*****OOO*****

ஒரு காபி குடிக்கலாமா?
என் வாசிப்பு ஆர்வத்துக்கு ஆரம்ப காலத்தில் வித்திட்டவர்களில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் தமிழ்வாணன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் முதலிரண்டு பேர்களின் நாவல்கள் வெளியாகும் தினம் எல்லாம் எனக்கு தீபாவளி தான். இருவர் எழுத்திலும் இருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை எனக்கு பிடிக்கும். விவேக்-ரூபலாவை பிடித்த அளவுக்கு பரத்-சுசீலாவையும் பிடிக்கும்.கூடவே.. தொடர்ந்து படிக்க.

*****OOO*****

பரோட்டா கார்த்திக்- குறும்படம்
     சென்ற ஆகஸ்ட் ஏழு அன்று திரு. வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர்கள், எழுத்தாளர்கள் முன்னிலையில் "பரோட்டா கார்த்திக்" திரையிடப்பட்டது. படம் குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தன. எல்லா விமர்சனங்களும் ஒரு படைப்பாளியின் திறனை மேம்படுத்தவே என்பதால் அவற்றை காதாற கேட்டு, மனதில் இருத்திக் கொண்டோம். வருகை தந்த அத்துணை நண்பர்களுக்கும் இயக்குனர் திரு. துளசிதரன் அவர்கள் சார்பிலும், உதவி இயக்குனர் கீதா ரங்கன் அவர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

*****OOO*****


இந்த மாத கிராபிக்ஸ்..
    ஆவியை சிக்ஸ் பேக்கில் பார்க்க வேண்டும் என்ற குரு அண்ணாவின் (விபரீத) ஆசைக்கு வேண்டி கிராபிக்ஸ் செய்து முகநூலில் பகிர்ந்த படம், இதோ என் வலைப்பூ நண்பர்களுக்காக.. (ஒன்றிரண்டு பேர் இதை பார்க்க முடியாமல் போச்சேன்னு பீல் பண்ணினதால தான் நான் இங்கே ஷேர் பண்ணியிருக்கேன்.. ;) )



*****OOO*****

பார்த்திபன் கனவு - ஒலிப்புத்தகம்
பொன்னியின் செல்வன் அண்ட் ப்ரெண்ட்ஸ் எனும் குழு ஒன்றிணைந்து தயாரித்திருக்கும் ஒலிப்புத்தகம் "பார்த்திபன் கனவு". எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் தலைமையில் கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஒலிப்புத்தகம் அமரர் கல்கியின் அற்புதமான காவியத்தை தேர்ந்த கலைஞர்களின் குரல் கொண்டு நேர்த்தியான முறையில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்த Mp3 ஒலிப்புத்தகம் ஒலிக்கும் மொத்த நேரம் 12  மணி 10 நிமிடங்கள். விலை ரூ.250. (அறிமுக சலுகையாக ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.)
வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் திரு.'பாம்பே' கண்ணன் அவர்கள் தொலைபேசி எண் 09841153973. ஈமெயில்: bombaykannan@hotmail.com


*****OOO*****

இப்போதைக்கு அம்புட்டு தான்.. வர்ட்டா..!


Wednesday, August 6, 2014

பரோட்டா கார்த்திக் - குறும்பட முன்னோட்டம் (ஆவியின் முதல் திரைக்காவியம்..!)


கதைச்சுருக்கம்:

                நேர்மையான போலிஸ் அதிகாரி மயில்வாகனம் (குடந்தையூர் சரவணன்) புதிதாக பதவியேற்கிறார். அந்த ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டர் தில்லு துரைராஜ் (DD ) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் விநாயகம் (ஆவி) ஆகியோரால் இவருக்கு தொல்லை ஏற்படுகிறது. அதனால் கோபமடையும் மயில்வாகனம் தனது போலிஸ் வேலையை துறந்து அரசியலில் குதிக்கிறார். மந்திரியான மயில்வாகனம் தனக்கு குடைச்சல் குடுத்த இருவரையும் எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.




                   மேலே சொன்ன கதைச் சுருக்கம் வெறும் கற்பனையே. எதார்த்த கதையை நாளை (ஆக 7 மாலை ஆறரைக்கு காண வாருங்கள்). பதிவர் மற்றும் குறும்பட இயக்குனர் "துளசிதரன்" அவர்களின் மற்றுமொரு படைப்பு. "பரோட்டா கார்த்திக்" - குறும்பட திரையிடல் நிகழ்வு! 

"சமூகத்தின் அவலங்களை தட்டிக் கேட்க காந்தியடிகளும், பெரியாரும் வர வேண்டிய அவசியமில்லை. நல்ல மனம் கொண்ட பள்ளிச் சிறுவர்களே போதும் என்ற உயரிய கருத்தை வலியுறுத்தும் படம். "


                      சில "குளிர்பான" இயக்குனர்கள் தங்கள் படங்களில் உள்ள ட்விஸ்ட் ஐ வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்கள். ஆனா நாங்க எங்க படத்தை பார்த்து எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.!   
                     
 நன்றி..
வணக்கம்..


புன்னகைகளுடன்,
கோவை ஆவி


                   
           
                     




                   

Saturday, August 2, 2014

ஆவி டாக்கீஸ் - ஜிகர்தண்டா


இன்ட்ரோ  
                           கார்த்திக் சுப்பாராஜ் ஒரு மேடையில் இந்தக் கதையை சொதப்பலாக சொன்னார், ஸ்க்ரிப்ட் படித்து தான் புரிந்து கொண்டேன் என்று சித்தார்த் கூறினார்.. அது கார்த்திக்கின் குற்றமல்ல, இது போன்ற கதையை சொல்வதற்கு கொஞ்சம் தலைகீழாய் நின்று தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்.. முடிந்தவரை நடிகர்களுக்கு அந்தந்த காட்சிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கியிருக்கக் கூடும். வேலையில்லா பட்டதாரிக்கு பயந்து ஒரு வாரம் தயாரிப்பாளர் பின் வாங்கியதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.



                          

கதை
                           படத்தின் விளம்பரத்தை பார்த்துவிட்டு ஒரு காட்பாதரையோ, பாட்ஷா வையோ எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். மேலும் இந்தப் படத்திற்கு நியாயப்படி U கொடுத்திருக்க வேண்டியது.. U/A சர்டிபிக்கேட் நிச்சயம் ஒரு மாஸ் எபெக்டிட்காக டைரக்டர் போராடி வாங்கியிருக்க வேண்டும். சரி கதைக்கு வருவோம்..

                            ஒரு தாதாவின் கதையை படமாய்  எடுக்க வேண்டி தாதாவின் நடவடிக்கைகள், அவன் வாழ்க்கை முறை, அவன் தாதாவான கதை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வருகிறான் ஒரு அறிமுக இயக்குனர். தன் தலைக்கு தொழில் முறையிலும், போலிஸ் வகையிலும் ஆபத்து இருப்பதாலும் தன்னை கொலை செய்ய ஒரு உளவாளி வந்திருப்பதை  தெரிந்து கொண்டும்  எல்லோரையும் ஒரு சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறான் அந்த தாதா. ஒரு கட்டத்தில் அந்த உளவாளி யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் தாதாவிடம் சிக்கிக் கொள்கிறான் அந்த இயக்குனர்(ன்). தாதாவிடமிருந்து  அவன் தப்பித்தானா? இல்லையா என்பதுதான் கதை. இது முதல் பாதி மட்டுமே, இரண்டாம் பாதியில் எப்படி தப்பித்தான் என்பதை நகைச்சுவையோடு (?!!) சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகச்சிறந்த ட்விஸ்ட்டாம் (அப்படித்தாம்பா டைரக்டர் சொன்னாரு)
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           சிம்ஹா (சூது கவ்வும் படத்தில் பகலவனாய், நேரத்தில் வட்டி ராஜாவாய் வந்து கலக்கியிருப்பாரே, அவரேதான்) படத்தின் முதுகெலும்பு. அசத்தல் நடிப்பு. குறிப்பாக டாய்லெட்டில் தன்னை கொல்ல வருபனை முறைத்துவிட்டு உள்ளே செல்லும் காட்சி ஒன்றே இவர் நடிப்புக்கு சாட்சி.. தமிழ் சினிமாவில் ஒரு தனியிடத்தை பிடிக்க நிச்சயம் வாய்ப்புண்டு.. ஆனால் அதற்கு அவர் இனிமேல் ஜிகர்தண்டா போன்ற படங்களை தவிர்த்தால் நிச்சயம் சாத்தியம். சித்தார்த் அண்டர்ப்ளே பண்ணுகிறேன் பேர்வழி என கிட்டத்தட்ட பாரின் மாப்பிள்ளை கேரக்டர் தான். லக்ஷ்மி மேனனின் கதாப்பாத்திரம் கேக்கின் மேல் வைக்கப்பட்ட செர்ரி போன்றது.. (அது இல்லாவிட்டாலும் கேக்கை நம்மால் ருசித்திருக்க முடியும்)

                             படத்தில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் நம்மை உற்சாகப் படுத்துவது கருணாகரனின் உடல் மொழியும் டயலாக் டெலிவரியும் தான்.. செம்ம டைமிங் பாஸ். ஆனா நீங்களும் இந்த ஷார்ட்பிலிம் டைரக்டர்கள் கண்ணில் படாமல் ஒரு கேரக்டர் செய்தால் பிழைச்சுக்கலாம். இது ஒரு கேங்ஸ்டர் மூவி என்ற நினைப்பில் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள் எதிர்பார்த்து செல்வதை தவிர்ப்பது நல்லது..

இசை- இயக்கம்-தயாரிப்பு
                             இசை- ஒரு சில இடங்களில் நடிகர்களின் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு சிறப்பான இசையும் இருக்கிறது. சில இடங்களில் ஒரு கத்துக்குட்டியின் இசைக்கு மிக அருகாமையில் இருக்கிறது. மொத்தத்தில் சுமார் தான்..  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சந்தோஷ். உங்களை இளையராஜா, ரகுமான் வரிசையில் ஒப்பிடும் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் பிரமாதமாக ஒன்றும் தரவில்லை.

                              கார்த்திக் - ஒரு வித்தியாசமான கதையை கையாண்டது தவறில்லை.. ஆனால் பீட்சா எனும் படத்திற்கு அடுத்து பண்ணும் படம் இன்னும் கொஞ்சம் ஸ்க்ரிப்டில் கவனம் செலுத்தியிருக்கலாம். நாட் பேட்- நாட் சோ குட். பணம் போட்ட தயாரிப்பாளரையே கிண்டலடித்து எடுத்தால் அவரோடு பிரச்சனை வராமல் என்ன செய்யும் பாஸு?

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                டிங்-டாங், கண்ணம்மா, பாண்டி நாட்டு பாடல்கள் படத்துடன் பார்க்க இனிமையாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இவ்வளவு டீடைலிங் அவசியம் இல்லை.. சுருக்கமாக சொன்னால் ஆடியன்ஸ் புரிந்து கொள்ள மாட்டார்களோ என்பதால் ஒரு பத்து நிமிடம் நம்மை இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டாம்.

                             
Aavee's Comments -  Something missing in the Recipe!

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...