Monday, November 11, 2013

கடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)

                           

                             என் கண்கள் சிவந்து போயிருந்தன. கண்களுக்கு கீழ் பல வருடம்  FC வாங்காத வண்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி ஓட்டும் போது வெளிவரும் புகையின் கரிய நிறம் அப்பியிருந்தது. மனதிலோ விடிய விடிய ஜெகன் மோகினி பார்த்துவிட்டு, விடிந்ததும் ஜெயமோகன் புத்தகத்தை படித்ததால் என்ன உணர்வு ஏற்படுமோ அதுபோன்ற ஒரு விதமான குழப்பமும், வருத்தமும், பயமும் கலந்த உணர்வும் இருந்தது. கண்கள் அகல விரிந்து தொலைக்காட்சியில் தினமும் பார்த்து ரசிக்கும் ஜெர்ரியை தேமே என்று பார்த்துக் கொண்டிருந்தது. விடை இல்லா விடுகதையாய் வாழ்க்கை, கார்ப்பரேஷன் தெருவிளக்கைப் போல் ஒரு பிடிப்பில்லாமல் மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது.. இது போன்ற நிகழ்வுகள் என்னைப் போன்ற மனசாட்சிக்கு பயப்படும் மடசாம்பிராணிகளுக்கு மட்டும் தானா அல்லது ஏய்த்துப் பிழைக்கும் ஏட்டுச் சுரக்க்காய்களுக்குமா?

                                   நேசம், பாசம் எனும் உறவுகள் பொய்த்தபின் புதிய உறவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தது மனது. ஏமாற்றமும், அவமானமும் ஒரு புறம் துரத்த, ஏக்கங்களும், நினைவுகளும் மறுபுறம் துரத்த மன்னித்தல், மறத்தல் என்னும் மனிதம் தாங்கிய நிலைகளைத் தாண்டி வெகுதூரம் ஓடித் தொலைந்த மனது களைத்துப் போன ஒரு நொடியில் மரணம் வேண்டி யாசித்தது. எழுபிறப்பில் நம்பிக்கையில்லை, இவ்வொரு பிறப்பே தேவையில்லை, எனை ஆட்கொள்ள இறைவன் அவன் வந்தபாடில்லை. "வன்" இருக்கின்றானா என்ற கேள்வியேதும் தோன்றவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் என் துயர் தீர்க்க வந்திருப்பானே..  எங்கே அவன், என்றாவது ஒருநாள் அவனை சந்திக்கும் வேளையில் கேட்பதற்காய் நெஞ்சில் ஓராயிரம் கேள்விகள். எங்கே அவன்.. இன்றைய என் மனநிலையை சந்திக்கும் துணிவற்ற கோழையாய் விண்ணுலகை விட்டு என் வாசல் வர பயந்தானோ?  வதம் செய்து வாரணம் ஆயிரம் கொன்றானே, அரக்கர்களை அழித்து துவம்சம் செய்தானே, இன்று என் முன் வர துணிவில்லையோ?

                                 "டொக், டொக்.. " என் வாசல் கதவு தட்டப்பட்டது. தேவன் தேரில் வந்திருப்பானோ? இல்லை தேவதூதனை காற்றில் அனுப்பி இருப்பானோ? காலை நேரம் ஒருவேளை போஸ்ட் மேனோ? பலவாறாய் சிந்தித்தபடியே வாயிலை திறக்க "மச்சி, தூங்கிட்டு இருந்தியா? "  கருநிற உடையில் நண்பனின் குரல். மங்கலாய்த் தெரிந்தது அவன் உருவம். "என்ன மச்சி, டல்லாயிருக்கே, வா வெளியே போவோம்".  எங்கே என்று கூட கேட்கத் தோன்றவில்லை. கால்சட்டையை அணிந்துகொண்டு அவன் காரில் ஏறி பயணித்தேன். ஏறும் போதுதான் கவனித்தேன். பின்சீட்டில் அவன் பெண் குழந்தை. பத்து வயதிருக்கலாம். "அங்கிள் நீங்க ஸ்விம் பண்ணுவீங்களா" என்றது. புதுமுகமாய், அறிமுகமாய் இருந்த என்னைப் பார்த்து பல நாட்கள் பழகிய தோரணையில் அந்த பிஞ்சுக் குழந்தை என்னிடம் கேட்டதை வித்தியாசமாய் உணர்ந்தேன். "உன் பேர் என்னம்மா" என்றேன். "நீங்க என் கூட பிரெண்ட் ஆனா தான் சொல்வேன்" என்றது. புதிய உறவுகளை ஏற்கப் போட்டிருந்த தடை உத்தரவை தற்காலிகமாய் தள்ளி வைத்தேன்.

                                  கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையோடு "ம்ம்..ஒக்கே. பிரெண்ட்ஸ்" என்றேன். நட்புக்காய் கைகுலுக்கியவாறு அந்தச் சிறு பெண் தன் பெயரை சொன்னாள். ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அப்பெயர் திங்களின் மறுபெயர். நாஸ்திகம் பேசுவோர் அதை நடிகை ஜோதிகாவின் கடைசி திரைப்பெயராய் உணர்ந்து கொள்வர். "ஸ்விம்மிங் தெரியுமா உங்களுக்குன்னு கேட்டேன்" என்றவளுக்கு "ம்ம்.. கடப்பாரை நீச்சல்" என்று சொல்லி சிரித்தேன். என் காமெடி அந்த சிறு பிள்ளைக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.. "டாடி, இந்த அங்கிளுக்கு ஸ்விம்மிங் தெரியுமாமே" என்று அப்பாவியாய் கேட்டது.. "இல்லம்மா, அங்கிளுக்கு தெரியாதுன்றத தான் அப்படி சொல்றார்" என்று விளக்கினான் நண்பன். அந்தப் பெண் அந்தக் கேள்வியை கேட்டதற்கான அர்த்தம் எனக்கு கார் அந்த ஸ்விம்மிங் பூலின் வளாகத்தினுள் நுழையும் போதுதான் புரிந்தது..                                     காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம்.. செல்லும்போதே நண்பன் என்னிடம் "உள்ளே ஒரு பெரிய பூல் இருக்கும். ஸ்விம்மிங் தெரிஞ்சவங்க அங்கே நீச்சலடிச்சுட்டு இருப்பாங்க. பக்கத்துல ஒரு சின்ன பூல் இருக்கும். அங்கே சின்ன பசங்க, ஸ்விம்மிங் தெரியாதவங்க எல்லாரும் மிதக்கலாம்.. உன் கழுத்தளவு தான் தண்ணி இருக்கும். அது சேப். என்றவாறு தன் பெர்முடாவை அணிந்துகொண்டான். அவன் கொண்டு வந்திருந்த ஒரு சார்ட்ஸை எனக்கு கொடுத்தான். அதற்கு முன் பலமுறை நீச்சல் குளத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு பாதுகாப்பு வளையத்துடன் தான் இறங்கியிருக்கிறேன். ஆனால் அன்று எதோ நம்பிக்கையில் அந்த சிறிய குளத்தில் இறங்கினேன். நன்றாக நீச்சல் தெரிந்த காரணத்தால் நண்பன் பெரிய குளத்தில் நாலைந்து முறை அக்கரைக்கும் இக்கரைக்கும் சென்று வந்தான். அந்த சின்னத் தேவதையும் இப்போது எடை இழந்த மீனாய் மிதந்து கொண்டிருந்தாள். "பிரெண்ட்,, உங்களுக்கும் நான் ஸ்விம்மிங் சொல்லித் தரட்டுமா" என்றாள். என் பதிலுக்கு காத்திராமல் சில நீச்சல் முறைகளை சொல்லிக் கொடுத்தாள்.

                                           கொஞ்ச நேரம் அந்த சிறிய நீச்சல் குளத்தில் இருந்த எனக்கு பெரிய நீச்சல் குளம் செல்ல ஆசை வந்தது. தண்ணீருக்கு மேலேயும், உள்ளேயும் மிதந்தவாறு நீந்திக் கொண்டிருந்தவர்களை பார்த்த போது நீச்சல் என்பது மிக எளிமையாக தோன்றியது. அதே சமயம் என் புதிய சின்னஞ்சிறு தோழி "அங்கிள் நான் அந்த பெரிய குளத்தில நீச்சல் அடிக்க போறேன். நான் சின்ன பொண்ணு இல்லையா அதனால நான் அந்த ஓரத்தில இருக்கிற கம்பிய பிடிச்சுகிட்டே போயிட்டு வருவேன். நீங்க இங்கேயே இருங்க" என்று சொல்லிவிட்டு அந்த கம்பியை பிடித்தவாறே நீந்தத் துவங்கினாள். எனக்கும் நீந்த வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அவள் சென்ற தடம் பின்பற்றி அந்த பெரிய குளத்தில் இறங்கினேன். இறங்கிய மறுநொடி அந்த கம்பியை இரு கைகளாலும் பிடித்தவாறே அந்த நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற ஒரு பிரமையுடன் மெதுவாக நகர்ந்து சென்றேன். உள்ளுக்குள் ஒரு பூரிப்பு, இனம் பிரிக்க தெரியாத ஒரு சந்தோஷ உணர்வு. நீரின் குளுமையும், புதிய முயற்சியும் அதுவரை மனதில் அப்பியிருந்த சோகத்தை தடமறியாமல் அழித்திருந்தது.

                                         மெதுவாக சென்று கொண்டிருந்த நான் அந்த சிறுபெண்ணின் வேகத்திற்கு ஈடுகொடுக்க நினைத்து இன்னும் வேகமாக என்னை செலுத்தினேன். கிட்டத்தட்ட அந்த பெரிய நீச்சல் குளத்தின் பகுதி தூரம் கடந்த போதுதான் கவனித்தேன், அந்தச் சிறுமி ஒரு சுற்றை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். அவள் செல்வதற்கு வழி விட வேண்டி என் கைகளை அந்த கம்பிகளில் இருந்து விளக்கி அவள் கடந்த பின் பிடிப்பதற்காக நீட்டினேன். அந்தக் கம்பி என் கைகளுக்கு தட்டுப்பட மறுத்தது. அதே நேரம் என் உடல் எடை தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்த காரணத்தாலும், புவியீர்ப்பு சக்தியின் இடையறா செயல்பாட்டாலும் நான் மெல்ல மெல்ல தண்ணீருக்கு உள்ளே சென்று கொண்டிருந்தேன். எவ்வளவோ முயன்றும் அந்த கம்பி கைகளில் சிக்கவில்லை. இறங்கும் போது சற்றும் உணராத ஆழம் அப்போது என்னால் உணர முடிந்தது. பத்திலிருந்து பதினோரு அடி ஆழம் இருந்த அந்த குளத்தின் அடியை என் கால்கள் தொட்டபோது சக்க்ரவியுகத்திலிருந்து வெளிவரும் வழி மறந்து போன அபிமன்யு போல சற்று முன் அந்த பெண்ணிடம் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாம் மூளையின் மேல்தட்டுக்கு வர மறுத்தது.

                                          கீழே சென்ற ஓரிரு நொடிகளில் நாசித் துவாரங்களில் தண்ணீர் செல்ல கொஞ்சம் நிலை தடுமாறினேன். நியுட்டனோ, ஆர்க்கிமெடிஸோ கண்டுபிடித்த தத்துவத்தின்படி மீண்டும் மேலே அழைத்து வரப்பட்டேன்.. தண்ணீருக்கு மேல் என் தலை இருந்தது.. அப்போது தான் கவனித்தேன் அந்த கம்பி சுமார் ஐந்தடி தொலைவில் இருந்தது. ஓரிரு நொடிகளில் மீண்டும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேன். இம்முறை மனதுக்குள் இனம்புரியா ஒருவித பயம்.. காலையில் விரும்பிக் கேட்ட மரணம் நெருங்கி வரும்போது அதை வரவேற்க மனது இப்போது தயாராய் இல்லை. இம்முறை நான் வேகமாக கீழே உந்தி என் உடலை வெளியே தள்ள முயற்சித்தேன். மேலே வந்த கணத்தில் உதவி வேண்டி "மச்சி" என்று உரக்க அழைத்தேன். என் சப்தம் அவன் காதுகளில் விழுந்ததா என உறுதிப் படுத்தக் கூட சமயம் தாராமல் தண்ணீர் தேவதை என்னை ஆலிங்கனம் செய்ய வேண்டி ஆக்ரோஷத்துடன் உள்ளே இழுத்தாள்.

                                         அந்த ஒரு நொடி மனம் இதுவரை ஒரு நாளும் கண்முன் சந்தித்திராத அந்த மாயப் பிம்பத்தை, கடவுள் எனும் ஒரு சக்தியிடம் உயிர் பிழைக்க வேண்டி மன்றாடியது. மூன்றாம் முறை மேலே செல்ல, இம்முறை தலை தண்ணீருக்கு வெளியே செல்லவில்லை. தவிர கைகளும் கால்களும் நம்பிக்கை இழந்து சோர்ந்துவிட வாய் வழியே நீர் செல்ல கண்முன் தாயின் உருவம் மின்னி மறைந்தது. கண்கள் திறந்தபடியே உடல் உள்ளே செல்ல, தப்பிக்கும் எண்ணங்கள் தவிடுபொடியாக, எமதர்மராஜனுக்கு கைகுலுக்க தயாராகிவிட்ட அந்த ஒரு கணம் மீண்டும் மேலே மீண்டு வருவது போன்ற ஓர் உணர்வு.. யாரோ என் தலைமுடியை பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். ஓரிரு நொடிகளில் நீச்சல் குளத்தின் மேல் என்னை இழுத்துப் போட்டு என் முன் நின்றிருந்தார் காவலுக்கு வந்த அந்த செக்யுரிட்டி. தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த நண்பனும் அவன் மகளும் தெரிந்தனர். காப்பாற்றிய அந்த கனவான் என்னிடம் "நீச்சல் தெரியாம ஏம்ப்பா உள்ளே இறங்கறீங்க" என்றார். அந்த நிலையிலும் உள்ளே குந்திக் கொண்டிருந்த குசும்பன்  வெளியே வந்து "அதுல தாண்ணே த்ரில்லே" என்றேன்.. அவர் ஒரு கேவலமான பார்வையை என் மேல் சிந்திவிட்டு அங்கிருந்து அகன்றார். உள்ளுக்குள் சென்ற க்ளோரின் கலந்த நீரை துப்பியவாரே மனம் சிந்தித்தது "எனைக் காப்பாற்றியது அந்த நீச்சல் குளத்தின் காவலரா, இல்லை இந்த உலகத்தையே காக்கும் காவலரா?"
அலசல் தொடரும்...

                                

47 comments:

 1. வணக்கம்
  நான்றாக உள்ளது கதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன். முதல் வருகைக்கு நன்றி..

   Delete
 2. மிக அருமையான கதை, வார்த்தை பிரயோகங்கள், மற்றும் அந்தக் குழந்தையின் வெளிப்படுத்தல்கள். இந்த மாதிரி தண்ணீரில் மூழ்கி இருமுறை நானும் உயிர் பிழைத்துள்ளேன், இருமுறையும் கடவுள் வரவே இல்லை காப்பாற்ற. மனிதன் பிரபஞ்சத்தில் தனித்து விடப்பட்டுள்ளான், அத் தனிமையில் எதிர் கொள்ள நேரிடும் ஆபத்துக்கள் உண்டாக்கும் அச்சத்தை போக்கி தன்னைத் தானே காக்க மனம் உருவகித்துக் கொண்ட கற்பனைச் சோளக்காட்டு பொம்மையே கடவுள். அது அங்ஙனமே இருக்கும், நாம் தான் அச்சம் என்னும் காக்கைகளை விரட்டி நம் உள்ளப் பயிரை காக்க கடவுள் என்ற சோளக் காட்டு வைக்கோல் பொம்மையை உண்டாக்கி வைத்துள்ளோம். காக்கைகள் வராது போகும் காலங்களில் வைக்கோர் போரில் எரியூட்டப்படலாம் அச் சோளக் காட்டு பொம்மை..

  ReplyDelete
  Replies
  1. முதலில் உங்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு காரணம் இந்தப் பதிவின் சாராம்சத்தை உட்கிரகித்து உங்கள் வாழ்வின் ஒரு சம்பவத்தையும் சொல்லி நான் எதிர்பார்த்துக் காத்திருந்த பின்னூட்டத்தை பதிவு செய்ததற்காக. என்னைப் போல் நீங்களும் தண்ணீருக்குள் போதிமரத்தை கண்டீர்களோ என்னவோ? ;-)

   உங்களின் தெளிவான விளக்கம் நீங்கள் எவ்வளவு தூரம் அந்த கடவுள் எனும் மாய பிம்பத்தை தேடிச் சென்றுள்ளீர்கள் என்பதை எடுத்துச் சொல்கிறது. கடவுளின் நிலையற்ற தன்மையை வைத்து இருக்கிறான் என்று எப்படி உருவகித்துக் கொள்ள முடியாதோ, அது போல இல்லை என்றும் சொல்லிவிட முடியாதல்லவா.. நம் சமகாலத்தில் யாரும் பார்த்ததில்லை, பார்த்தாய் வரலாறுகளும் இல்லை. ஆயினும் உலகெங்கும் பெருந்திரளான மக்கள் கூட்டம் பின்தொடரும் ஒரு விஷயம் ஒன்றுமே இல்லாமல் போவதற்கு சாத்தியங்கள் குறைவல்லவா? தொடர்ந்து அலசுவோம்..

   Delete
 3. காலையில் விரும்பிக் கேட்ட மரணம் நெருங்கி வரும்போது அதை வரவேற்க மனது இப்போது தயாராய் இல்லை. //ஏன் என்னாச்சு ஆவிக்கு? கதை எழுதப் போறீங்களா ? வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க ஐயா. கதை எழுதப் போறேன். எல்லோருக்கும் தெரிஞ்ச கதை.. ஆனா யாருக்கும் புரியாத கதை.;-)

   Delete
  2. பாலகணேஷ் ஸார் - :))))

   Delete
 4. இருவரும் இல்லை. நீங்கள் காப்பாற்றப் பட்டது ஒரு தற்செயலான நிகழ்வே. இதற்குக் காரண காரியம் எதுவும் கிடையாது. கதை எப்படி வேண்டுமானாலும் போகலாம். உதாரணத்திற்கு:
  நீங்கள் ஏன் நீச்சல் குளம் போக முடிவு செய்ய வேண்டும்?
  அப்படிப் போனாலும், அடுத்தவனின் ஷார்ட்ஸை ஏன் அணிய வேண்டும்?
  அப்படியே அணிந்தாலும், ஏன் ஆழமான பகுதிக்குச் செல்ல முடிவெடுக்க வேண்டும்?
  அப்படியே மூழ்கினாலும், காவலர் அங்கு ஏன் இருக்க வேண்டும்?
  இவ்வளவு முடிவுகளும் உங்கள் கையிலே இருக்கும் போது, மூழ்கும் வேளையில் மட்டும் கடவுள் காப்பாற்றினார் என்று எப்படிக் கூறலாம்?
  சில சமயம் எல்லாம் இருந்தும் நீச்சல் குளத்தில் சாவுகள் நிகழ்வது ஏன்?

  பின்வரும் இரண்டில் ஒன்று நிச்சயம்.
  1. எல்லாம் திட்டமிட்ட படி நிகழ்கிறது. (நீங்கள் காப்பற்றப் பட வேண்டியவர், அதனால் காப்பாற்றப் பட்டீர்).

  அல்லது
  2. எதுவும் திட்டமிட்டபடி நடப்பதில்லை. எந்த நேரத்தில் எது நடக்குமோ என யாருக்கும் தெரியாது.
  நீங்கள் காப்பாற்றப்படும் வரை அது நிச்சயமில்லை.

  ReplyDelete
  Replies
  1. Probability எனும் நிகழ்தகவின் அடிப்படையில் நீங்கள் சொல்வது ஒத்துப்போகிறது. நடந்த சம்பவங்களில் ஏதேனும் ஒன்று மாறியிருந்தாலும் கூட முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று சொல்ல வருகிறீர்கள். ஒன்று எல்லா செயல்களும் முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். அல்லது திட்டங்கள் ஏதுமில்லாமல் தற்செயலாய் நடந்திருக்க வேண்டும். திட்டமிடப்பட்டது எனில் திட்டமிட்டது யார்? அதைப்பற்றி தான் அலசப் போகிறோம். வருகைக்கும் உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி ரங்குடு அவர்களே!!

   Delete
 5. நல்ல அலசல்! கடவுள் என்கிற ஒன்றை கஷ்டம் வரும்போது கற்பித்துக் கொள்வதும், இன்பம் வரும்போது நினைக்க மறப்பதும் மனித இயற்கை ஆனந்து! அதே மனதின் விசித்திரங்களில் ஒன்றுதான் ‘அந்தக் கடவுளுக்குக் கருணையே இல்ல.... எமனை அனுப்பி என்னைக் கூப்பிட்டுக்க மாட்டேங்கறான்’’ என்று புலம்பும் பாட்டி கூட மரணம் அருகில் வருகையில் அதை எதிர்கொள்ளத் திராணியற்று அழுது புலம்புவதும். இந்த விஷயத்தை மிக அழகாகக் கையாண்டு அசத்திட்டப்பா! மனமெனும் சுரங்கத்தினை இன்னும் ஆழமாகத் தோண்டுங்கள்! தொடரட்டும் இந்த (நல்ல) அலசல்!

  ReplyDelete
  Replies
  1. நிலையாக ஓரிடத்தில் கட்டப்பட்ட ஆறடுக்கு கட்டிடத்தை கொஞ்சம் நகற்றி வைக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. மனிதனை தாக்குகின்ற நோய்கள் தெய்வச் செயலல்ல, பாக்டீரியா மற்றும் வைரஸ் என்று சொல்லும் அறிவியல் நமக்கு இன்னும் விடை சொல்ல முடியாத சில கேள்விகள் இருக்கத்தானே ஸார் செய்கிறது! அதை அலசி பின் தெளிய வைத்து உண்மை அறிந்து கொள்ளும் சிறு முயற்சி தான் அது... உங்க வாழ்த்துகளுடன் தொடர்கிறேன் ஸார்..

   Delete
 6. இதுவரை எழுதிய கதைகளிலிருந்து மாறுபட்ட வித்தியாசமான எழுத்துநடை... தற்கொலை செய்துகொண்டால் கூட அது நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட சாவாக இருக்கவேண்டும், அப்படி இல்லாத சாவை ஒருபோதும் மனிதன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை நினைவூட்டுகிறது....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சரவணன்.. நீண்ட நாட்களாய் எழுத நினைத்து பின் பல்வேறு காரணங்களால் ( ரொம்ப சீரியசான சப்ஜெக்ட், என்னைப் போன்ற ஆட்கள் எழுதினால் காமெடியா பார்த்துருவாங்களோ என்ற பயம் இருந்தது. தவிர கடவுள் சம்பந்தமான பதிவுகளுக்கு வரும் எதிர்ப்புகள்) எழுதாமல் இருந்தேன். நேற்று ஒரே முடிவோடு எழுதிவிட்டேன். கருத்திட்டு என்னை வழக்கம்போல் ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி.

   Delete
 7. இந்தக்கதையை எங்கோ கேட்ட சாரி பார்த்த மாதிரி இருக்கே....

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. உன் கணிப்பு சரிதான் மாப்ளே. இன்பாக்ட் இந்த பகுதிக்கு சந்திரமுகி ன்னு தான் பேர் வச்சிருந்தேன் முதல்ல.. :-)

   Delete
 8. இனிமேல் ஆழம் தெரியாமல் காலை விடாதே...சாரி நீச்சல் தெரியாமல் நீந்தாதே...

  ReplyDelete
  Replies
  1. "மச்சி"!! அந்த செக்யூரிட்டி கிட்ட சொன்ன பதில் தான் உனக்கும். - "அதுல தான த்ரில்லே இருக்கு?".. ;-)

   Delete
 9. கடவுள் கிடக்கிறார் விடுங்கள்.

  நீச்சல் குளத்தின் அடி ஆழம்வரை என்னையும் இழுத்துச் சென்று மூச்சுத் திணற வைத்துவிட்டீர்கள்.

  பிரமிப்பில் ஆழ்த்தும் அற்புதமான காவிய நடை.

  படைப்பிலக்கியத் துறையில் உங்களால் நிறையவே சாதிக்க முடியும்.

  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய பாராட்டு என்னை புளங்காகிதமடைய செய்தது. நன்றி. நீண்ட நாட்களுக்கு பின் வருகிறீர்கள்.. நன்றி தொடர்ந்து படியுங்கள்..

   Delete
 10. கத சொல்றேன்னு தண்ணிக்குள்ள முக்கி எடுத்துட்டீங்க எங்கள.... ஸ்ஸ்ஸ்.... இப்போ தான் மூச்சே வந்துச்சு

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. இதுக்கே டெர்ரர் ஆயிட்டீங்கன்னா எப்படி.. "தல" சொல்ற மாதிரி இது வெறும் 'ஆரம்பம்' தான்!! கருத்துக்கு நன்றிங்க.

   Delete
 11. இது கதையா என்று யோசிக்க மனம் வரவில்லை. இருப்பினும் இதை படிக்கும் போது என் மனதில் வந்த நினைவுகளை அப்படியே சொல்லிவிட நினைக்கிறேன். பொதுவாக நான் சந்தித்த அல்லது நாம் பா◌ார்க்கும் சினிமாவில் கூட ஆண்டவா ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லா கஷ்டத்தையும் குடுக்குற இப்படி சொல்றவங்களத்தான் நான் கேட்டிருக்கேன். பார்த்தும் இருக்கேன்.
  ஆனா என் நண்பர் ஒருவர் இது வரை என்றுமே எந்த சம்பவத்தின் போதும் ஆண்டவரை மட்டுமல்ல வேறு எவரையும் கூட குற்றம் சொல்லாமல் எல்லாம் நம்மால் நிகழ்வதே நாமே அனுபவிக்க வேண்டும். நம் கையே நமக்கு உதவி என்று சொல்வார். எந்த நிலையிலும் நிதானத்துடன் அந்த நிலையை சமாளிக்கும் திறமையை வளர்ப்பதை விடுத்து கடவுளை வேண்டுவதால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது என்பதே என் கருத்தும்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய படிச்சு பகுத்தறிவை வளர்த்துகிட்டதால இப்படி தோணுதோ நமக்கு?

   Delete
  2. நீ சொல்றது சாதாரண மனிதர்களுக்கு சரி சசிம்மா... பிறவியிலேயே ஏதாவது ஒரு குறையோட, ஊனத்தோட பிறக்கறவங்க என்ன பாவம் பண்ணினாங்க? எதனால அவங்க ‘இறைவன்’ அப்படிங்கற ஒன்றினால பழிவாங்கப்படறாங்கன்னு ஒரு கேள்வி எழுதே... அதுக்கு என்னம்மா பதில்?

   Delete
 12. வேறு தளத்தில் பயணித்து இருக்கிறீர்கள்.
  ஆழ்ந்த படிப்பும்...அனுபவமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்லிட்டீங்க.. அடுத்தடுத்த பகுதிகளில் உங்க மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன்..

   Delete
 13. அருமை!உள்ளே சென்று வந்த அதே உணர்வு வாசிக்கும் போது எனக்கும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுப்பிரமணியம் அவர்களே.. தொடர்ந்து வாங்க..

   Delete
 14. ஆனந்த் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை..உங்கள் எழுத்து நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது... எடுத்துக்கொண்டுள்ள தளமும் விசாலமானது...தொடர்கிறேன் ..மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேடம்.. வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தக் களத்தில் இருவேறு தரப்பட்ட மக்களை நான் எதிர்பார்க்கிறேன்.. ஒரு புறத்தில் பகுத்தறிவையும் அறிவியலையும் சார்ந்திருக்கும் கூட்டம். மறுபுறம் காலம் காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கைகளும், அதை சார்ந்து வாழும் கூட்டமும்.. இந்த அலசலின் நோக்கம் எந்தப் பக்கம் உயர்ந்தது என்பதை நோக்கி அல்ல.. ஏன், எதற்கு, எப்படி என்ற ஒரு தேடல் மட்டுமே.. தொடர்ந்து படிங்க.. நீங்க விவாதம் பண்ணவேண்டிய தருணம் நிச்சயம் நிறைய இருக்கு..

   Delete
  2. ஆமா ஆனந்து...! தளத்துல மட்டுமில்ல... நேர்லயும் நிறையப் பேசி விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம்தான் இது! அதற்கான நாளை ஆவலுடன் எதிர்நோக்கி...!

   Delete
 15. காலையிலே படிச்சேன்... படிச்சவங்க சில பேர டெரராக்கீட்டிங்க போல, ஆன்மீகத்த விட்டு கொஞ்சம் வெளியில வந்தாப்பல இருக்கு இன்னும் வாங்க பகுத்தறிவு வாசல்ல நுழைந்தால் பல தோற்றங்களும் தெரியும். எழுத்தின் ஆழம் காட்சிக்குள்ளும் படிப்பவரை உள்ளிளுப்பது அருமையான உத்தி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாஸ்.. உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்.. இந்த தொடர் எழுத எனக்கு உங்க உதவி தேவைப்படும். உதவி செய்ய ரெடியா இருங்க.. ஹஹஹா..

   Delete
 16. நான் கிராமத்தில் ஆற்றில் செத்தே போய்விட்டேன்..நீச்சல் என்ற ஒன்று இருக்கு என்று தெரியாமல் தண்ணீரில் குதித்திதனால்! பிறகு எழுதுகிறேன்!
  தமிழ்மணம் பிளஸ் +1 வோட்டு

  ReplyDelete
  Replies
  1. வோட்டுக்கு நன்றி பாஸ்.. தெரிஞ்சே குதிக்கிறவங்களை என்ன சொல்றது சொல்லுங்க.?

   Delete
 17. தடையின்றி வரும் நடை நன்று!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, ஐயா உங்க வரவு மகிழ்ச்சியளிக்கிறது.. வருக..வருக..

   Delete
 18. அட ரெம்ப புதுசா இருக்கே இந்த எழுத்து ...! வாழ்த்துக்கள் ஆவி ...! ரெம்ப ஆழத்துக்கு கூட்டினு போயிராதீங்க நம்மால தாங்க முடியாது ...!

  ReplyDelete
  Replies
  1. எப்படி ஷங்கரால பாலா மாதிரி படம் எடுக்க முடியாதோ, அது மாதிரிதான்பா என்னாலயும் ரொம்ப சீரியஸா எல்லாம் எழுத முடியாது. முடியாதுன்னு சொல்றத விட தெரியாதுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்.

   Delete
 19. பிரம்மிக்க வைக்கும் எழுத்து நடையில் ஒரு பிரமாதமான கருவை எடுத்து கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது சிறப்பு! சிறப்பான அலசல்! தொடருங்கள்! தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா.. வாழ்த்துக்கு நன்றி..

   Delete
 20. ஆழம் தெரியாமல் காலைவிட்டு சாவை ருசிபார்த்து திகைக்கவைக்கும் கதை..!

  ReplyDelete
 21. வணக்கம் தல ...
  ஒரு படைப்பின் வெற்றியாக கருதுவது வாசிக்கும் போது அந்த காட்சி மனத்திரையில் ஓடவேண்டும் என்று ... இதை படிக்கும் போது முழுக்க முழுக்க அப்படியே மனதில் காட்சியாக விரிந்தது ...

  சில இடங்களில் காட்சி விவரிப்புகள் கொஞ்சம் உறுத்தலாய் இருக்கிற உணர்வை தருகிறது //"டொக், டொக்.. " என் வாசல் கதவு தட்டப்பட்டது. தேவன் தேரில் வந்திருப்பானோ? இல்லை தேவதூதனை காற்றில் அனுப்பி இருப்பானோ? //

  //ஸ்விம்மிங் தெரியுமா உங்களுக்குன்னு கேட்டேன்" என்றவளுக்கு "ம்ம்.. கடப்பாரை நீச்சல்" என்று சொல்லி சிரித்தேன். என் காமெடி அந்த சிறு பிள்ளைக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.. //

  இப்படி சின்ன சின்ன தொய்வுகள் தான் எனக்கு(மட்டும்) தோன்றியது ,,,, பிடித்திருப்பது புலிவாலை சளைக்காமல் தொடரவும் ப்ரோ

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...