இன்ட்ரோ
நான் கற்றுக் கொண்ட பாடங்களின்படி, நான் புரிந்து கொண்டது இதுதான். உலகில் உள்ள எல்லா உயிரினமும் ஏதாவது ஓர் உயிரினத்தை கொன்று புசித்து உயிர்வாழ்தலே "உணவுச் சுழற்சி"."அசையும் உயிரனங்களை கொன்று புசிப்பவர்கள் அசைவம். அசையா உயிரினங்களை கொன்று புசிப்பவர்கள் சைவம்."
கதை
காரைக்குடியில் ஒரு செட்டிநாடு வீட்டில் ஒரு நாள் மதிய உணவிற்கு ஆடு, கோழி, மீன், முட்டை என எல்லாம் தயாராவதுடன் துவங்குகிறது. அய்யாவின் வீட்டில் கோவில் பண்டிகையை ஒட்டி குடும்பத்தினர் அனைவரும் மூன்றாண்டுகளுக்கு பின் ஒன்று கூடுகின்றனர். குடும்பத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கும் காரணம் கடவுளுக்கு நேர்ந்துவிட்ட சேவலை பலி கொடுக்காதது தான் என புரிந்து (?!!) கொண்டு அந்த சேவலை பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். மறுநாள் அந்த சேவல் காணாமல் போகிறது.. அது கிடைத்ததா. குடும்பத்தின் பிரச்சனைகள் தீர்ந்ததா என்பது கிளைமாக்ஸ். இடையே ஒரு விடலைப் பருவ காதலும் சுவைபட சொல்லப்படுகிறது.
ஆக்க்ஷன்
சுட்டிப் பெண் சாரா கொள்ளை அழகு. தேர்ந்த நடிப்பு. வீட்டில் இருக்கும் எல்லாரிடமும் தோப்புக்கரணம் போட்டு உண்மையை சொல்லாதிருக்க வேண்டும் போது அசத்தல் பெர்பார்மன்ஸ். சாராவுக்கு இணையான நடிப்பு வாண்டு ரே பாலுடையது. ஒவ்வொரு முறையும் "ஷ்ராவன்" என்று தன் பெயரை திருத்தி சொல்லும்போதும் கைதட்டலை அள்ளுகிறான். நாசர் வழக்கம் போல் அமைதியான நடிப்பில் அசத்துகிறார். கெட்டப் சூப்பர். நாசரின் மகன் பாஷா விடலை சிறுவனாய் நல்ல நடிப்பு. த்வாரா தேசாய் ஜோர்.. பார்க்க சேட்டுப் பெண் போல் இருந்தாலும் துறுதுறு கண்களில் நளினமாய் நடித்துவிட்டு செல்கிறார்.வேலைக்காரராக வருபவர். வேலைக்காரியாக வருபவர், அத்தை கதாபாத்திரம், மகன்கள் என பெரிய பட்டாளம் நடித்திருக்கிறது.. ஒவ்வொருவரின் நடிப்பும் அளவோடு பதிவு செய்யப்பட்டிருப்பது அழகு. சுரேஷ் கிளைமாக்சில் வந்து படத்தில் ஒட்டிக் கொள்கிறார்.
இசை-இயக்கம்-மேக்கப்
நாசரின் சொட்டைத் தலை, வயதான தோற்றமாகட்டும், சாராவின் 'பளிச்' முகமாகட்டும், மற்றவர்களின் சிகையலங்காரங்கள் ஆகட்டும் எல்லாம் பக்காவாக பொருந்தும் வண்ணம் வடிவமைத்த பட்டணம் ரஷீதுக்கு ஒரு "ஒ". ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படம் முடிந்த பின்னும் நம் காதுகளில் இனிமையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. டைரக்சன் விஜய். இவருடைய எல்லா படங்களுமே நீட்டான படங்கள் தான் என்ற போதும், இவர் திருமணத்துக்கு பின் வெளியாகும் முதல் படம் குடும்பத்துடன் செகண்ட் ஷோவிற்கு மக்கள் கும்பலாக வந்து பார்க்கும் அளவுக்கு தரமான படைப்பை கொடுத்த விஜய் நல்ல இயக்குனர்கள் வரிசையில் சிம்மாசனமிட்டு அமர்கிறார்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
குட்டிப் பெண் உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியிருக்கும் "அழகே" பாடல் தித்திக்கும் தேனமுது. ஷ்ராவன் ஒவ்வொருவரிடமும் சேவல் இருக்குமிடம் சொல்லி அடிவாங்கி செல்லுமிடம்.Aavee's Comments - Saivam tastes better with KFC Grilled Chicken !