Wednesday, November 26, 2014

International Film Festival of India (IFFI 2014) - A short glance

                      உலக சினிமாக்கள் பார்க்க, அதைப் பற்றி பேசுவதற்கே நிச்சயம் ஒரு Qualification அவசியம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி விரிவாக விரிவாக எழுத எனக்கு அனுபவம் போதாது என்ற போதும். என்னை பாதித்த,  நான் ரசித்த ஒரு சில படங்களைப் பற்றி என் நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்காக பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். இம்முறை ஒரு குறும்படத்திற்கான ஸ்க்ரிப்டை எழுதி முடித்துவிட்டு இதில் கலந்து கொண்டதாலோ என்னவோ படங்களில் வரும் ஷாட்கள், கேமிரா ஆங்கிள்கள், திரைக்கதை உத்திகள் போன்றவற்றை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.சரி அதெல்லாம் விடுங்க. இப்ப படங்களின் சுருக்கமான விமர்சனங்களை பார்ப்போமா?THE  PRESIDENT (IRAN)

DIRECTOR: Mohsen Makhmalbaf

ஈரான் நாட்டு இயக்குனர் மக்மல்பப் இயக்கிய இந்தப் படம் திரைப்படத் திருவிழாவின் முதல் படமாக திரையிடப்பட்டது. ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அவரை சிறைப்பிடிக்க இடைக்கால அரசு அவரைத் தேடுகிறது. சர்வாதிகாரி தன் பேரனுடன் தப்பிச் செல்வதும், பின் மக்களோடு மக்களாக செல்லும் போது மக்கள் தன் மீது வைத்திருந்த வெறுப்பையும் தன் கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் பட்ட துன்பத்தை உணர்வதுமாக செல்கிறது கதை.  ராணுவத்திடம் மாட்டிக் கொள்ளும் அவரின் கதி என்ன என்பதை சொல்கிறது கிளைமாக்ஸ். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய  நல்ல படம்.
THE LAST ADIEU (DOCUMENTARY/ INDIA/ 92 mins)

DIRECTOR: Shabnam Sukhdev

சுக்தேவ் என்ற ஒரு இயக்குனரை ( பிலிம் டிவிஷனுக்காக பல டாகுமென்ட்ரிகள் எடுத்தவர்) பற்றி அவர் மகள் ஷப்னம் இயக்கிய டாகுமென்ட்ரி இது. படத்தின் பெரும்பகுதிகள் Repeat ஆவதால் நீண்ட கொட்டாவிகளுடன் பார்க்க நேர்ந்தது.  3 HEARTS ( FRANCE/106 mins)  -- 18+

DIRECTOR: Benoit Jackquot

தான் விரும்பும் பெண்ணை சந்திக்க செல்லும்  ஒருவன் சில காரணங்களால் தாமதமாக செல்ல அவர்கள் காதல் தோல்வியில் முடிகிறது. சிறிது காலத்துக்கு பின் அவன் அவளுடைய சகோதரியை சந்தித்து காதலித்து  கொள்கிறான்  ( தன் காதலியின் சகோதரி என்று தெரியாமலே) திருமணத்துக்கு அமெரிக்காவிலிருந்து வரும் தங்கை தன் அக்காளின் கணவரை பார்த்து திடுக்கிடுகிறாள். தன் பழைய காதலை மறக்க முடியாமல் அக்காவுக்கு தெரியாமல் இருவரும் ரகசியமாக காதல் கொள்கின்றனர், அக்காவுக்கு தன் கணவருக்கும் தங்கைக்கும் இடையே உள்ள உறவு தெரிய வரும்போது நடக்கும் உணர்வுப் போராட்டமே கிளைமாக்ஸ். இம்மி பிசகினாலும் ஆபாசமாக போய் விடக்கூடிய அபாயமுள்ள கதையை அழகாக கொண்டு செல்வது அற்புதமான திரைக்கதையே. ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

I AM YOURS (NORWAY/ 96 mins)   -- 18+

DIRECTOR : Iram Haq

நார்வேயில் வாழும் இந்திய வம்சாவளியை சார்ந்த ஒரு பெண்ணின் கதை. இந்திய கலாச்சாரத்தை வலியுருத்தும் தாய் தந்தைக்கும் , பருவத்தின் வனப்பில் சுதந்திரமாக தன் காதல் (காம?) உணர்வுகளுக்கும் நடுவே சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு யுவதியின் கதை. கதாநாயகிக்காகவே ஒருமுறை பார்க்கலாம். ;)-- இன்னும் வரும் 
Tuesday, November 11, 2014

ஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..! (Three Angels)
கொங்கு மண்ணை கீழே உதறிவிட்டு - இரயில் நிலையம்
வந்தவனை வரவேற்றது சில படிக்கட்டு. என்னுடனே
சிற்சில சம்பாஷணைகளோடு வந்தது ஒரு அடித்தட்டு. சேருமிடம்
வேறேன்பதால் ஆங்கே பிரிந்தோம் Bye சொல்லிவிட்டு.

இரயிலுக்காய் காத்திருந்த நேரத்தில்
 எதிரே ஒளிர்ந்ததோர் காண்டீன்
கத்தி படம் பார்த்த பின்னே
கொஞ்ச காலம் புறக்கணித்திருந்தேன் Coke-Tin.

ரயில் நீரை மட்டும் வாங்கிக் கொண்டு
காத்திருக்கையில் கடந்தது பல teen.
இரயில் வந்து நின்றதும் Chart நோக்க
என் கம்பார்ட்மெண்டில் மூன்று F18.

இரவுப் பொழுதில் உறக்கம் வராவிடில் படிக்க
வைத்திருந்தேன் ஒரு புத்தகம், அதன் பேர் கள்ளம்.
வயதுக்கே உரிய அழகுகளுடன், கொஞ்சிக் கொஞ்சி பேசிய
தேவதைகளை கண்டவுடன் குதுகளித்ததோ என் உள்ளம்.

குலுங்கலோடு புறப்பட்ட தொடர்வண்டியில் புத்தகத்தை
மாரில் சாய்த்தபடி கட்டியணைத்தேன் நித்ராதேவியை.
கனவுதேசத்தில் காப்பி குடிக்க நிறுத்திய போது வண்ண வண்ண
ஆடைகளோடு காஜலோடு இம்மூவரும் சுற்றி வந்தனர் ஆவியை.

கட்-கட் என்ற 'சரவணரின்' ஒலி கேட்டு கண்விழித்தால்
வண்டி அசையாது நின்றிருந்தது ஈரோட்டில் - முகம் மட்டும் தெரிய
கம்பளிக் கதகதப்பில் கண்ணுறக்கம் கொண்டிருந்த
கோதைகளை நிழற்படமாய் மாட்டிவிட்டேன் என் மனப்பேரேட்டில்

அதன்பின் உறங்க மறுத்து
என் இமைகள் போராட்டம் ஒன்றை நடத்த,
புத்தகமும் போரடிக்க, வழியேதும்
நான் அறியவில்லை நேரம் கடத்த.

செல்போனில் சில நேரம்,
ஐ-பாடில் சில நேரம்,
நிற்காமல் ஓடிச்சென்ற சூப்பர் பாஸ்ட்
எக்ஸ்பிரெஸாய் கடந்தது என் நேரம்.

டீ-காபி, காபி-டீ என்ற இரைச்சல்
மீண்டும் கேட்கத் துவங்கிய அந்நேரம்,
எக்ஸ்க்யுஸ்மீ என்றொரு மெல்லிய இசை ஒலித்தது
படிக்கட்டில் நின்றிருந்த என் காதோரம்.

இறக்கைகளை Backpack இல் மடித்து வைத்துவிட்டு
இறங்கத் தயாரான அந்த தேவதைகளை,
கண்டபோது வந்த திசை அறியாமல் நெஞ்சில்
பச்சக் என்று ஒட்டிக் கொண்டது மனக்கவலை.

ஆவியை துயரமென்று சிலர்
நினைப்பதுண்டு.
ஆவியே, துயரமென்று நினைத்ததிந்த
திருச்சியைத் தானோ?

களையிழந்த கம்பார்ட்மென்ட்
கப்சிப்பென்று முகாரி வாசிக்க- எதற்கும்
கட்டுப்படாத காலத்தைப் போல்
கடந்து சென்றது தொடர்வண்டி.


அதுவரை 'அராத்தாய்'  அடங்கோண்டு
போராடிய என் கண்மணிகள்
இப்போது 'சமத்தாய்' சமந்தாவை எண்ணிக்கொண்டு
உறங்க முடிவு செய்தது.


முப்பத்து ஐந்தில் இந்தியன் கிரிக்கட் டீமில்
இடம்கிடைத்து உடனே ரிட்டையர் ஆன ப்ளேயர்போல்
தூக்கத்தின் 'சுகானுபவத்தை' ரசிக்க முடியாமல்
கெடுக்க வந்து சேர்ந்தது தஞ்சாவூர் ஸ்டேஷன்.

சூரியன் இன்னும் கண்விழிக்காத காலையிலே,
இராஜராஜன் நடை பயின்ற தஞ்சையில
ஆவி தன் கால் பதித்த அந்த வேளையிலே
அங்கும் வரவேற்றது ராம்ராஜ் வேட்டிகளே!

நேரத்தே எழுப்பி நண்பனின் துயில் கலைக்க
வேண்டாமமென நான் நினைக்க
பிளாட்பார்மில் பல்துலக்கி, தேநீர் குடிக்க,
இப்படியாய் அரைமணி நேரமும் மெதுவாய் கடக்க

 நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை மட்டுமே ஒலித்த
அந்த விளம்பரத்தை கேட்க முடியாமல் நான் தவிக்க
வேறு வழியின்றி செல்போனை எடுக்க
தஞ்சை வரும் அந்த தென்காசி அலைஸ் சென்னை நண்பனை அழைக்க

முதல்முறை முழு அழைப்பும் ஓயும் வரை எடுக்காமல் இருக்க
பின் பத்து நிமிடம் வரை மாறி மாறி இரு நம்பர்களுக்கும் விளிக்க
திடீரென அழைப்பு மணி ஓய்ந்து அவன் போனை எடுக்க
'ஹலோ' என்ற சொல்லோடு அவன் குரல் கேட்க நான் காத்திருக்க

மறுமுனையில் அவன் சொன்னான்
'என்ன பாஸ், மிட்நைட்ல எழுப்பிட்டீங்க?'


- தொடரும் (என்று தான் நினைக்கிறேன்.)
(பி.கு: ) இது சத்தியமாய் கவிதை நடையல்ல. 'கவிதாவின்' நடை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். (கவிதா யாரென்று பின்னூட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு 'அண்ணன்' சீனு பதிலளிப்பார்). ஆகையால் யாரும் 'கவிதை நன்றாக உள்ளது' என்ற பின்னூட்டத்தை மட்டும் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது.

Saturday, November 8, 2014

ஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)


இன்ட்ரோ  
                              சயின்ஸ் பிக்க்ஷன்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகக்கூடிய படமாய் நிச்சயம் இது இல்லை. தவிர கிறிஸ்டோபர் நோலன் எனும் மந்திரச் சொல் நிச்சயம் மாயம் செய்திருக்கிறது. விண்வெளிப் பயணம் என்ற அகன்ற வெளிக்குள் அப்பா-மகள் சென்டிமென்ட், விவசாயத்தின் வேதனைகள், சுய எள்ளல்கள் போன்றவற்றையும் கலந்து காக்டெயிலாக தந்த நோலனுக்கு ஒரு சல்யுட்..!


                          
கதை
                         
                           71 சதவிகிதம் நீராலும் 29 சதவிதிகம் நிலத்தாலும் சூழப்பட்ட இந்த பூமிதான் மனிதன் வாழ்வதற்காக படைக்கப்பட்டதா? இல்லை வேறேதும் நிலம் நீர் மற்றும் உயிர் வாழதகுந்த ஒரு  கிரகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர்களா இந்த மனிதர்கள் என்று தீர்க்கமாக யோசிக்க வேண்டிய உட்கருத்தை பிஸிக்ஸும் பீலிங்ஸும் ஒரு சேர கற்பனை கலந்து சொல்வதுதான் கதை. சில நாட்கள் முன் வந்த கிராவிட்டி, எலிசியம் போன்ற படங்களை தொடர்ந்து வந்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதையே காட்டுகிறது. ( இன்னமும் பேஸ் வாய்ஸில் 'நான்தாண்டா கொமாரு' என்று படமெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள் இதை கவனிப்பார்களா?)
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           நாயகன் மேத்யு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார், நோலன் தன் ஆஸ்தான நாயகன் கிறிஸ்டியன் பேல்லை விடுத்து இவரை தேர்வு செய்ததை இவர் சிறப்பான நடிப்பின் மூலம் நியாயப்படுத்தியிருக்கிறார். மெக்கன்ஸி பாய் (மர்ப்ப்) குழந்தை நட்சத்திரம் என்பதையும் தாண்டி மனதை வருடுகிறார். அன் ஹேத்வே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தியிருக்கிறார்.  சிறிது நேரமே வந்தாலும் மேட் டேமன் கலக்கல் நடிப்பு. தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் ஒரு நெகடிவ் கேரக்டரில் நடிக்க சம்மதித்தற்காகவே இவரை பாராட்ட வேண்டும்.

                          கேஸ் மற்றும் டார்ஸ்  ரோபோட்டுக்கு குரல் கொடுத்தவர்கள் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள்.
                               

இசை-இயக்கம்
                           நோலனின் படங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஹன்ஸ் ஜிம்மரின் இசை இதில் அதகளம் செய்திருக்கிறது. விண்வெளிக்கு சென்றவர்களுடன் நாமும் பயணித்தது போன்ற உணர்வை கொடுத்தது ஹன்சின் இசை. நல்ல இசைக்கட்டமைப்பு உள்ள திரையரங்கில் பார்க்க ஆவி டாக்கீஸ் பரிந்துரைக்கிறது. (பெங்களூர் மற்றும் வெளியூர் வாசிகள் முடிந்தால் ஐ-மேக்ஸில் பாருங்கள்)
  
                           நோலனின் படங்கள் முதல் காணலில் புரியாது என்ற வாதங்கள் ஒவ்வொரு முறையும் வைக்கப்படும். ஆனால் சிக்கலான இந்த கதையையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் திரைக்கதை அமைத்து வெற்றி காண்கிறார் நோலன். கிளைமாக்ஸ் புரிதலுக்காக வைக்கப்பட்ட Ghost காட்சிகள் சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                'ப்ளாக் ஹோல்' வழியாக விண்வெளி ஓடம் பயணிக்கும் காட்சி மயிர்கூச்செறிய வைக்கும் அருமையான காட்சி. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க அருமையான படம்.

                


Aavee's Comments -  A Journey to Space!

ஆவி டாக்கீஸ் - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா


இன்ட்ரோ  
                              கொஞ்சம் மொக்கை காமெடிகளை குறைத்துக் கொண்டு கதையின் வீரியத்தை ஆழமாக சொல்லியிருந்தால் படத்தின் வீச்சு நிச்சயம் வேறாக இருந்திருக்கும். சமூக கருத்துகளை மேலோட்டமாக சொல்லிவிடுவதாலேயே சிறந்த படமென சொல்லிவிட முடியாது. கண்ணன் இன்னும் கொஞ்சம் கைவரிசை காட்டியிருக்கலாம்..!


                          
கதை
                            ஸ்டீல் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அங்கிருக்கும் பழுதடைந்த முதலாளிகள் மற்றும் இயந்திரங்களால் ஏற்படும் உடல் பாதிப்பையும், ஆதிக்க சமூகத்தின் அலட்சிய போக்கையும் சுட்டிக் காட்ட முயலும் ஒரு பெண்ணுக்கு உதவ வரும் இரண்டு வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து கார்பொரேட் முதலைக்கு எதிராக போராடி அவர் மனதை மாற்றுவது தான் கதை.
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           விமல், நோ கமெண்ட்ஸ். சூரிக்கு இதுபோன்ற ஹீரோக்களுடன் நடிப்பதால் நிச்சயம் தன் காமெடியன் அந்தஸ்திலிருந்து காமெடி ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்திக்கொள்ள முடியும். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை சரி பகுதி ஆக்க்ஷன் இவருக்கும். நாசர் பலமுறை இவரை இதுபோன்ற பாத்திரங்களில் பார்த்து சலித்து விட்டதால் படத்தின் இறுக்கத்திற்கு பயன்படாமலே போகிறார்.

                              ப்ரியா ஆனந்த்- ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகளில் பாஸ் மார்க்கும் வாங்கி விடுகிறார். ஆனாலும் இதுபோன்ற படங்களில் கிளிவேஜ் தெரிய காஸ்டியும்ஸ், இனியாவின் ஐட்டம் டான்ஸ், படம் எங்கும் தெளிக்கப்பட்டிருக்கும் மொக்கை காமெடிகள் போன்றவை படத்தை ஆவரேஜ்ஜுக்கும் கீழ் கொண்டு செல்கிறது.

                             விசாகா சிங் அழகான கதாப்பாத்திரத்தில் வந்து போகிறார்.  ஒரு தொழிலாளி உயிர் விட்டதை விட தொழிலாளிகளுக்கு காது கேளாமல் போவது முக்கியமாக போய்விட்டதா, கோர்ட் காட்சிகளில் வசனங்கள் ஷார்ப்பாக இருந்திருக்கலாம்.
                               

இசை-இயக்கம்
                               இமான் சுமாருக்கு சற்று மேல். பாடல்கள் ஒக்கே. ரீரெக்கார்டிங் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். 'ஜெயம்கொண்டான்' கண்ணனை எதிர்பார்த்து போனால் அங்கே 'சேட்டை' கண்ணன் தெரிவது ஏமாற்றம்.


                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                'மழைக்காத்தா' மற்றும் 'சுந்தரிப் பெண்ணே' பாடல்கள் இனிமை. லக்ஷ்மி மேனனின் குரல் ஆளுமையில் 'குக்குறு' பாடல் கேட்பதற்கு அருமை.

                  


Aavee's Comments -  Powerless kings !

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails