Friday, December 24, 2010
மன்மதன் அம்பு - கமலின் பார்வையில்
கலைஞானியின் பேட்டி என்றால் சும்மாவா? கவிஞர் அறிவுமணி தன்னுடைய "எதையோ எழுதறேன் " ப்ளாகிற்காக கமலிடம் பேட்டி எடுக்க ஆசைப்படுவதாக கூற, கமலும் சம்மதிக்க உற்சாகத்துடன் கிளம்பிய அறிவுமணி ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டின் வரவேற்பறையில்...
"வணக்கம், மிஸ்டர் அறிவுமணி!!" என்றபடி உள்ளே நுழைந்த கமல் அறிவுமணிக்கு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
அறிவுமணி : " வணக்கம் சார்.. என்னைப் போல சாதாரண மனிதனுக்கும் பேட்டி கொடுக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி."
கமல் : " நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுஷன் தான்..என்ன, நான் சினிமாவுல இருக்கேன். நீங்க இல்ல அவ்வளவுதான்"
அறிவுமணி : " மன்மதன் அம்பு படத்துல இன்னும் இளமையா தெரியரீங்கலே, எப்படி?
கமல்: " நீங்க இந்த மாதிரி சொல்லும் பொய்களை நம்பி விடுகிறேன், அதனாலதான்!
அறிவுமணி: " இந்த படத்தை எல்லா தரப்பு மக்களும், குறிப்பா குழந்தைகள் பாக்க முடியாது போலிருக்கே.."
கமல்: " இந்த காலத்து பசங்க எல்லாம் படு சுட்டி. இதெல்லாம் அவங்களுக்கு நாம கத்து தர வேண்டியது இல்லை. தவிர, இந்த மாதிரி இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லிட்டு இருக்கப் போகிறோம். எத்தனையோ வன்முறைகளை எல்லாம் பசங்க சினிமாவின் மூலம் கத்துக்கறாங்க. நல்ல விஷயம் கெட்ட விஷயம் ரெண்டும் கொட்டிக் கிடக்கு. நல்லதை மட்டும் எடுக்க பெற்றோர் தான் பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அறிவுமணி : " இது ஒரு முழு நீள நகைச்சுவைப் படம்னு சொன்னாங்களே?"
கமல்: " அப்படியா, யாரு சொன்னது? "
அறிவுமணி: " த்ரிஷாவுடன் முதல் படம். அது பற்றி.."
கமல் : " வெல், கதைக்கு தேவையான அளவு வந்து போயிருக்காங்க. அவங்க மட்டும் இல்ல, மாதவன், சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி , உஷா உதூப் இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்காங்க..
அறிவுமணி : "ஒ, இந்த படத்தின் கதை, திரைக்க்கதை, வசனம் எல்லாமே.. நீங்க தான் எழுதியிருக்கீங்கன்னு போட்டிருக்கு, ஆனால் இந்த கதை ஏற்கனவே வந்த "There's Something about Mary" ங்கிற படத்தின் தழுவல்னு பேசிக்கறாங்களே!!
கமல் : " சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. அதெல்லாம் பார்த்திருந்தா நமக்கு கம்ப ராமாயணம் கிடைச்சிருக்காது, லேட்டஸ்டா ஒரு எந்திரனும் கிடைச்சிருக்காது"
அறிவுமணி : " அந்த சர்ச்சைக்குரிய பாடலைப் பற்றி.."
கமல்: " நான் எது எழுதினாலும் சர்ச்சைக்குள்ளாயிடுது. இப்படித்தான் குணாவில் கண்மணி அன்போட ன்னு நான் எழுதின பாட்டைக் கேட்டுட்டு கண்மணின்ற பொண்ணோட வீட்டுக்காரர் கேஸ் போட்டுட்டார்"
அறிவுமணி : " ம்ம்.. பாவம் சார் நீங்க.. அதுசரி. அவ்வளவு செலவு பண்ணி படத்தை பாரிஸ், வெனிஸ் மற்றும் கப்பலில் எல்லாம் எடுத்திருக்கிறீர்களே.. இதே கதைய ஏன் பாரிஸ் கார்னரிலோ, நேப்பியர் பிரிட்ஜ் கிட்டயோ ஏடுத்திருக்கலாமே?"
கமல் : " ஓசில ஒரு உல்லாசப் பயணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூவத்தில் படமெடுப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் தான்.
அறிவுமணி : "சரி, இந்த படம் மூலம் என்ன சொல்ல வர்றீங்க?"
கமல் : " எல்லாத்திலயும் ஒரு மெசேஜ் எதிர் பார்த்தா எப்படிங்க?"
அறிவுமணி : " இதுல, நடிகைகள் மோசமானவர்கள் என்பது போல் சித்தரிச்சுருக்கீங்களே?"
கமல் : " அட, நான் எங்கீங்க நடிகைகள மோசமானவங்கன்னு சொன்னேன். அவங்க நல்லவங்களா இருந்துருக்கலாமேன்னு தானே சொன்னேன்."
அறிவுமணி : " சரி, இந்த பேட்டி மூலம் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?"
கமல் : " எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!"
தலைவர் படத்துக்கு விமர்சனமா? அது நிச்சயம் தேவையில்லை. இந்தப் படத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். இந்தப் படத்தில் பெரிய நகைச்சுவயையோ, சண்டைக் காட்சிகளையோ, எதிர்பார்த்து செல்ல வேண்டாம். ஒரு முழு நீள நாடகத்தை விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்!!
Friday, December 17, 2010
மேலே ஒரு சூரியன்!!
இந்தக் காதல் என்னுள் எப்போது தோன்றியது என்று சரியாக நினைவில் இல்லை. ஆறு மாதக் குழந்தையாய் இருந்த போது அன்னை தன் மடியிலிருத்தி அடுத்த வீட்டுப் பெண்குழந்தையைக் காட்டி சோறூட்டிய போதா? வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா? வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா? தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா? எப்போது இந்தக் காதல் என்னுள் தோன்றியதென்று சரியாக நினைவில் இல்லை.
என்னங்க, டைட்டிலுக்கும், படத்திற்கும் சம்பந்தம் இல்லாம ஏதோ எழுதிகிட்டு இருக்கேன்னு பாக்கறீங்களா? அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு "சின்னக் கவுண்டர்" " சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா?? ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க!!! விஷயத்துக்கு வர்றேன்)
முதல் பத்தியில் நான் எழுதியது என் எதிர் வீட்டு கமலாவைப் பற்றியோ, கல்லூரியில் என்னுடன் படித்த விமலாவைப் பற்றியோ அல்ல. காய்கறிகள் ஏதுமில்லாத போதும் தாய்மார்களுக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஏழைச் சிறுவர்களுக்கு கொடுத்தது.. Polymorphism எனப்படும் ஓருடல் பல வடிவம் எடுக்கும் திறன் படைத்த (?!!!) நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேக்கறது புரியுது, சொல்றேன்!!)
நல்லா படிச்சும் முட்டை வாங்கனும்கிற ஒரே காரணத்துக்காக பரிட்சையில வெள்ளைத் தாளை மடிச்சு கொடுத்துட்டு வந்தவங்க.. நண்பர்கள திட்ரதுன்னா கூட "ஆப்பாயில்"ன்னு தான் திட்டுவேன்னா பாத்துக்கோங்க. அதென்னமோ தெரியல.. முட்டைய விட்டு நான் விலகிப் போகப் போக அது என்னை நோக்கி நெருங்கி வந்துகிட்டே இருந்தது.. கோவையில் எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு கோழிப் பண்ணை இருந்தது.. கல்லூரிக்காக வேற ஊர் போயிருவோம், முட்டைய பிரியப் போறோம்னு நெனச்சா போய் சேந்த ஊர் நாமக்கல். இப்படி முள்ளங்கி, முருங்கக்கா எதுவும் இல்லேன்னாலும் முட்டை இருந்தாப் போதும்னு சிம்பிளா வாழ்ந்துட்டு இருந்த என் வாழ்க்கையில வில்லனா இந்த அமெரிக்கா வரும்னு கொஞ்சம் கூட நெனச்சு பாக்கல.
சமையல் செஞ்சு எரிவாயுவ வீணாக்க வேண்டாமேன்னு (?!!)ஹோட்டல்லயே சாப்பிட்டு பழகிய எனக்கு இங்க அமெரிக்காவுல எந்த ஹோட்டலிலும் முட்டை கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருந்தது.. இந்திய உணவகத்தில் கூட பிரியாணியில் முட்டை இல்லாமதாங்க கொடுத்தாங்க..தேடி தேடி பார்த்ததுல சில உணவகத்துல "Scrambled Eggs " அப்புடீன்னு உப்பும் இல்லாம, ஓரப்பும் இல்லாம முட்டைய கொடுத்தாங்க. அதுவும் எனக்குப் பிடிச்ச ஆப்பாயில் எங்கயுமே கிடைக்கல. (குவார்டர் கட்டிங் கிடைக்காத சிவா மாதிரி தவிச்சு போயிட்டங்க)
ஆறரை வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் ஹவாய் தீவுக்கு போன போது எதேச்சையா இந்த டென்னிஸ் உணவகத்துக்குள்ள போனேன். மெனு கார்ட பார்த்த எனக்கு 1000 வாட்ஸ் பல்பு. இருக்காதா பின்ன, அட்டை படத்துலயே ஆப்பாயில்.
சர்வர கூப்பிட்டு எனக்கு "Half boil " வேணும் என்று கேட்டேன். அவனுக்கு சத்தியமாய் நான் கேட்டது புரியவில்லை. நீண்ட விவாதத்துக்குப் பின் மெனு கார்டில் இருந்த ஆப்பாயிலை தொட்டுக் காட்டி எனக்கு அது வேண்டுமென்று சொன்னேன். அவனும் கொண்டு வந்து வைத்துவிட்டு அதன் பெயர் "Sunny side up" என்று சொல்லிவிட்டு சென்றான். மேல்நோக்கிய சூரியனை உள்நாக்கில் படாமல் உள்ளே தள்ளிய போது என் கால்கள் பூலோகத்தில் இல்லை..
.
Monday, December 13, 2010
தி டூரிஸ்ட் - திரை விமர்சனம்
கதாநாயகி கதாநாயகன், பணக்கார வில்லன், துரத்தும் போலிஸ், இடையிடையே பாடல், கொஞ்சம் காதல் இப்படி தமிழில் பலமுறை பார்த்து அலுத்துப் போன கதை, சிறு சிறு திருப்பங்களுடன்(?) அமெரிக்க அழகி ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் நடித்திருக்கும் இந்த படம்தான் "தி டூரிஸ்ட்".
இரண்டு வரிகளில் அடங்கி விடக்கூடிய கதை. வெனிஸ் நகரில் உள்ள ஒரு பெரும் பணக்காரனிடமிருந்து (வில்லன்) எழுநூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்த அலெக்ஸாண்டர் பியர்ஸ் என்பவனைத் தேடி ஸ்காட்லாந்து போலிஸ் தெருவெங்கும் அலைகிறது. அவனை இதற்கு முன்னர் யாரும் பார்த்தது கிடையாது. (பணத்தை பறிகுடுத்த வில்லன் மற்றும் மனதை பறிகொடுத்த நாயகி உள்பட). இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு பியர்சின் காதலி எலிஸ் (ஏஞ்சலினா ஜோலி) மட்டுமே!! அவளை சந்திக்கும் எல்லோரையும் கைது செய்து விசாரிக்கும் போலிஸ் ஒவ்வொரு முறையும் பல்பை வாங்கிக் கொள்கிறார்கள்.
போலிசை குழப்புவதற்காக தன் காதலி எலிசிடம் தன் போன்ற உயரமுள்ள ஒருவனை தேர்ந்தடுத்து அவனுடன் நெருங்கி பழகுமாறு கூறுகிறான் அலெக்ஸ். அப்படி அவள் தேர்ந்தடுக்கும் நபர் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு கல்லூரி ஆசிரியரான "ப்ரான்க்" (ஜானி டெப் ). எலிசின் அழகில் மயங்கிய பிரான்க் அவளுடன் வெனிஸ் செல்ல, வம்பில் மாட்டிக் கொள்கிறான். அங்கே அவனை போலிஸ் துரத்த, கூடவே வில்லனின் ஆட்களும் துரத்த ஓடி ஓடி வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.
இதற்கிடையில் இவன் படும் பாட்டை பார்த்த எலிஸ் அவன்மேல் பரிதாபப் பட அது பின்னர் காதலாக மாறுகிறது. இதற்காக அவள் அவன் காதலனையும் காட்டிக் கொடுக்க துணிகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் ஸ்காட்லாந்து போலீசில் பணிபுரிகிறாள் என்பது தெரிய வருகிறது. வில்லன் அவளைக் கடத்தி அவள் மூலம் அலெக்சை பிடிக்க திட்டமிடுகிறான். போலிஸ் அவனை பிடித்தார்களா? எலிஸ் தப்பித்தாளா? பிராங்கின் காதல் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க..
அழகு, அதிரடி இரண்டிலும் வழக்கம் போல் கலக்கி இருக்கும் ஏஞ்சலினா. வித்தியாசமான நடிப்பில் ஜானி டெப். இவர்களுக்கு இடையே இருக்கும் அழகான வேதியியல் (Chemistry ??) படத்திற்கு பெரிய பலம். இது போன்ற கதைகளை நாம் பலமுறை பார்த்துவிட்டதாலும், வில்லன் நம்முடைய நம்பியாரை நினைவு படுத்துவதாலும் கொஞ்சம் அலுக்கிறது. இருந்தாலும் எழில் மிகுந்த வெனிசும், அழகுக்கு அழகு சேர்க்கும் ஏஞ்சலினா ஜோலியும் சினிமா டூரிஸ்டுகளை நிச்சயம் மயங்க வைக்கும்!!!
4௦ / 100
.
Subscribe to:
Posts (Atom)
How to sell your Infosys stocks through buyback?
Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why? Basically a com...
-
விபத்துக்கு பிறகு கடந்த ஆறு மாத காலமாய் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்த்து வந்தேன். எங்கு ச...
-
நேற்று ஒரு நண்பருடன் அளவளாவிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் "'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார...
-
இது சுயநலமாகக்கூட இருக்கலாம். ஆனால் கமல் என்னும் நடிகர் அரசியலுக்கு வருவதை விரும்பாத ஒரு ரசிகன் நான்! . தமிழ்நாட்டை (...