Tuesday, July 23, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! ( இருதயத்தில் ஒரு வலி )-9

முந்தைய பதிவுகளுக்கு...


                          கவுண்டர் காம்ப்ளெக்ஸ் முழுவதும் அமைதி நிலவிய அந்த மதிய வேளையில் ஒர்கஷாப்  லேப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக மதிய உணவு சாப்பிட வந்தான் அன்பு.  தட்டை கழுவ வந்த அன்பு எதேச்சையாய் என் அறையை பார்க்க, அது உள்பக்கமாக தாளிட்டிருப்பதை பார்த்து கதவைத் தட்டினான். பலமுறை தட்டிய பின் கதவைத் திறந்த நான் ஒன்றும் பேசாமல் உள்ளே பாயில் சென்று அமர்ந்தேன். என் முகவாட்டத்தை பார்த்த அன்பு "ஆனந்த், என்னாச்சுடா" என்றான். அப்போதும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கவே அவன் என்னருகில் வந்தமர்ந்து "ஆனந்த், என்னடா.. ஏன் இப்படி உட்கார்ந்திருக்கே.. உடம்புக்கு எதுவும் சரியில்லையா.. டாக்டர் கிட்ட போகலாமா" என்றான். நான் வேண்டாம் என்பது போல் தலையசைக்க "சாப்பிட்டயா " என்றான்.
                                 நான் இல்லை என்று தலையாட்ட தன் அறைக்கு சென்று இரண்டு தட்டுகளில் சாப்பாடு போட்டு வந்தான். நான் உண்ணாமல் அமர்ந்திருக்கவே அவன் என் தட்டிலிருந்து ஒரு கவளம் சோறு எடுத்து ஊட்டி விட்டான். அவன் செயல் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து நீரை வார்க்க " இன்னைக்கு ரமாகிட்டே சொல்லிட்டேண்டா"  என்றேன்.. அவன் உண்பதை நிறுத்திவிட்டு "வ்வாட்.. நிஜமாவா சொல்றே" என்று சந்தோஷமாக 
ஆரம்பித்தவன் வாடியிருந்த என் முகத்தைப் பார்த்து " அவ என்ன சொன்னாடா" "சரின்னு சொன்னாளா?  முடியாதுன்னுட்டாளா?" என்று அவள் கூறியதை தெரிந்து கொள்ளும் ஆவலில் படபடவென கேள்விகளை அடுக்கினான்.

                                  நான் பதிலொன்றும் சொல்லாமல் இருக்கவே.. "விடுடா, அவ இல்லாட்டி பரவா இல்ல. கருப்பா, குள்ளமா உனக்கு கொஞ்சம் கூட மேட்சே இல்லே." என்று சரமாரியாக அடுக்கிக் கொண்டே போக "இல்லடா, அவ வேணாம்னு எல்லாம் சொல்லலே" என்றேன். சற்றே குழப்பத்துடன் "அப்ப சரின்னு சொன்னதுக்கு நீ எதுக்கு பீல் பண்றே?" என்றான். "ம்ம்.. அவ சரின்னும் சொல்லலே" என்றதும் "எனக்கு ஒண்ணுமே புரியல.. அவ சரின்னும் சொல்லலே, வேண்டானும் சொல்லலையா.. என்னடா சொல்றே.. புரியற மாதிரி சொல்லு.."  "நான் அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். லவ் பண்றேன்னும்  சொன்னேன். அதைக் கேட்டதும் எதுவும் பேசாமலே அங்கிருந்து போய்ட்டாடா." என்றேன்.                                  "அவ இல்லாத  ஒரு லைப்ப என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. அவ வேண்டாம்னு  சொல்லிட்டா அத ஏத்துக்கற தைரியம் இல்லடா. அதான் மதியம் கிளாசுக்கு கூட போகலே." என்ற என்னைப் பார்த்து  " டே ஸ்டுப்பிட், இதுக்குத்தான் இவ்வளவு பீல் பண்ணினாயா. பொண்ணுங்க எப்பவும் அப்படித்தான். இந்த மாதிரி விஷயத்தை நேருக்கு நேர் சொல்ல மாட்டாங்க. அவளுக்கு உன்னை கட்டாயம் பிடிக்கும்டா.. தைரியமா இரு. இப்படி பயந்துகிட்டு இருக்கிற ஆனந்த்தை அவளுக்கு நிச்சயம் பிடிக்காது. எப்பவும் போல கலகலன்னு பேசி சிரிக்கிற ஆனந்தைத்தான் அவளுக்கு பிடிக்கும். வா.. சாப்பிட்டு கிளாசுக்கு கிளம்பு" என்றான். அவன் வார்த்தைகள் மனதிற்கு தைரியம் அளிப்பதாய்  இருந்தன.

                                      தட்டில் இருந்த உணவை உண்டுவிட்டு முகத்தை அலம்பிவிட்டு கல்லூரியை நோக்கி அன்புவுடன் சென்றேன். போகும் வழியில் எனக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கூறி என்னை ஊக்கப்படுத்தினான். கல்லூரியை அடைந்ததும் ஹிருதயம் இருமடங்காய்த் துடிக்க ஆரம்பித்தது. வகுப்பறைக்குள் நுழையும் போது ஆசிரியர் ஏற்கனவே வந்திருந்தார். அவரிடம் ஒரு பொய்யைக் கூறிவிட்டு என் இருக்கைக்கு சென்றேன். அவளைப் பார்க்க விரும்பிய போதும் எதோ ஒன்று அவளைப் பார்க்கவிடாமல் தடுத்தது. அருகிலிருந்த பாஸ்கர் டெஸ்க்கின் உள்ளிருந்து ஒரு கவரை எடுத்து "அவ உன்கிட்ட கொடுக்க சொன்னாடா" என்றபடி என்னிடம் கொடுத்தான். அது நான் ரமாவுக்கு வாங்கிக்கொடுத்த சுடிதார் போட்டிருந்த அதே கவர்..


தொடரும்..
Friday, July 19, 2013

மரியான்- திரை விமர்சனம்                          'வந்தேமாதிரம்' கொடுத்த விளம்பரப் பட இயக்குனர் பரத்பாலா முதன்முதலாய் எடுத்திருக்கும் திரைப்படம். ஹிந்தியில் ராஞ்சனா எனும் படத்தில் நடித்து வடக்கிலும் கால் பதித்துள்ள தனுஷுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் இது. பூ, சென்னையில் ஒரு நாள் என்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த பார்வதி மேனன் கதாநாயகி. தேசிய விருது பெற்ற மூன்று பேரை படத்தில் நடிக்க வைத்து ஆஸ்கர் நாயகனை இசையமைக்க வைத்து ஆஸ்கர் ரவிச்சந்திரனை தயாரிப்பாளராக்கிய பரத்பாலாவிற்கு ஒரு ஷொட்டு.
                             

                               சரி கதைக்கு வருவோம். வறுமைக்கு பெயர் போன ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை வரவழைத்து (Cheap Labor) பணிக்கு அமர்த்துவதால் கோபம் அடையும் ஒரு பிரிவினர் தீவிரவாதிகளாக உருவெடுத்து அந்த கம்பெனியின் பணியாளர்களை கடத்தி மிரட்டுகின்றனர். இப்படி மாட்டிக் கொள்ளும் ஒரு பணியாளாக தனுஷ்.. பிளாஷ்பேக்கில் பார்வதியுடனான அவர் காதல். இவர்களுக்கு உதவி செய்யும் அப்புக்குட்டி, பார்வதியின் காதலுக்காக அவர் பெற்ற கடன் தீர்க்க வேண்டி சூடான் செல்கிறார் தனுஷ். அங்கே தீவிரவாதிகளிடமிருந்து  மரியான், பிழைத்தானா  மரித்தானா  என்பதே கிளைமாக்ஸ்.
                         
                               
                               கடல், சர்ச், ஹீரோ ஹீரோயின் என்று மீண்டும் கடல் படத்தை ஞாபகப் படுத்த, உடன் ரகுமானின் இன்னும் கொஞ்ச நேரம் நெஞ்சுக்குள்ளே பாடலை நினைவுபடுத்த நாம் கொஞ்சம் மிரளத்தான் செய்கிறோம். பரத்பாலா சார், முதல் படம் என்பதால் பொறுத்துக் கொள்கிறோம். அப்பப்பா தனுஷ் டிரவுசரில் இருப்பதை விட நிறைய ஓட்டைகள் படத்தில்.  தீவிரவாதி தலைவன் தனக்கு பெண்களே பிடிக்காது என்று சொல்லும் ஒரு காட்சி உண்டு. அடுத்த காட்சியிலேயே ஒரு பெண்ணுடன் நடனமாடுகிறார். பிணைக்கைதியிடம் ஐ.எஸ்.டி வசதியுள்ள போனைக் கொடுப்பது. அதே போல் கொள்கைக்காக கடத்திவிட்டு கேளிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் கொஞ்சமும் ஒட்டவில்லை. அதிலும் தனுஷை சித்ரவதை செய்ய அவரை பாட சொல்லும் போது அவர் சித்ரவதை செய்வது தனுஷை அல்ல, நம்மைத்தான்.


                                    தனுஷிடமிருந்து நிறைவான நடிப்பு. பார்வதி "கிளாமர் குத்துவிளக்கு". சிறிய  வேடமென்றாலும் உமாரியாஸ், ஜெகன், சலீம் ஆகியோர் நடிப்பு பிரமாதம். இசைப்புயலின் மெல்லிய இசையில் காதல் காட்சிகள் மனதை அள்ளுகிறது.பின்னணி இசையில் படத்தை தரதரவென்று இழுத்து செல்கிறார். பொருத்தமான இடத்தில் நெஞ்சே எழு பாடல் படத்தின் தொய்வை குறைக்கிறது.  ஒளிப்பதிவு கடலையும், பாலைவனத்தையும், மேக்கப் போடாத பனிமலரையும் அழகாக காட்டுகிறது.


                                  கதையின் பலத்தை ஈடுகொடுக்க முடியாத பலவீனமான திரைக்கதையால் ஆங்காங்கே கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்தப் படத்தில் வரும் அப்புக்குட்டியின் காமெடிகளுக்கு என் அருகில் அமர்ந்திருந்த இரண்டு பிகர்கள் விழுந்து விழுந்து சிரித்த கொடுமையும் அரங்கேறியது.. மொத்தத்தில் சிங்கத்தின் எதிரே நிற்கக்கூடிய துணிவோ ஆயுளோ மரியானுக்கு இருப்பதாய்  தெரியவில்லை.


55 / 100


Wednesday, July 17, 2013

ஆவியின் புதிய முகவரி..


                         ஆவிக்கு எதுக்குடா அட்ரஸ்ஸுன்னு  நீங்க கேக்கறது புரியுது. சரி நாமளும் எவ்வளவு நாள் தான் வாடகை வீட்டுலயே குடியிருக்கிறது.. சொந்தமா ஒரு முகவரி வேணாமான்னு யோசிச்சதனால வந்த விளைவு.. என்னடா இவன் புதுசா வீடு வாங்கிட்டானான்னு நினைக்க வேண்டாம்.. kovaiaavee.blogspot.com  என்கிற தள முகவரியிலிருந்து  www.kovaiaavee.com எனும் முகவரிக்கு மாறியிருக்கேன்.. எல்லாரும் திறப்பு விழாவுக்கு குடும்பத்தோட வந்திருந்து சிறப்பித்து தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

(குறிப்பு-அனானிகளுக்கு நிச்சயமாக அனுமதி இல்லை)                            இன்னைக்கு காலையில தள மாற்றத்திற்காக "போஅப்பாவிடம்" (GoDaddy யின் தமிழாக்கமாம் ) ஒரு ஆபர் போட்டிருந்ததை பார்த்ததும் கண்கள் விரிய படிக்கத் தொடங்கினேன். வெறும் நூற்றயொன்பது ரூபாய்க்கு தள முகவரி தருவதாக அவர்கள் விளம்பரம் கண்ணைப் பறிக்க உடனே சென்று பதிவு செய்துவிட்டேன்.. (இந்த விளம்பரம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.. அவர்கள் தளத்தில் நேரடியாக சென்றால் நானூற்றி நாற்பத்தி ஒன்பது செலுத்த வேண்டும்) உங்களில் யாருக்கேனும் வேண்டுமென்றால் கூறுங்கள் அந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..

                             இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் கூகிளின் வழி சென்று தள முகவரி வாங்கியவர்களுக்கு கூகிளே எல்லா செட்டப்பும் (தள முகவரிக்கு தேவையான செட்டப்ப சொன்னேன்) செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஆபரில் வாங்கும் போது நாமே சில செட்டிங்குகள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. தள முகவரி வாங்கிட்டு சந்தோஷமா உள்ளே வந்து ரீ-டைரக்ட் அப்புடீன்னு கோவைஆவி பேரை குடுத்தா, பய புள்ள கண்ணா பின்னான்னு திட்டுது.

                         

                              சரி, யாராவது விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கலாமுன்னு யோசிச்சப்போ நினைவுக்கு வந்தது சீனுவும், எல்.கே வும்.. சீனுவுக்கு கால் போட்டதும் (போன்  கால் தாங்க) வழக்கம் போல் ஏழெட்டு ரிஙகுக்குப்  பின் எடுக்க.. நான் விஷயத்தை சொல்ல..பயபுள்ளையும் என்னை மாதிரியே தலைய சொறிஞ்சுகிட்டு நின்னது.. ஸ்க்ரீன்ஷாட் அனுப்புங்க பார்க்கிறேன்னாரு.. சரின்னு அனுப்பிட்டு, ப்ளாக்கை பார்க்க அங்கே என்னுடைய ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! ங்கிற தலைப்பு என்னைப் பார்த்து ஏளனமாக சிரிக்க,  ஆங்கிலத்தில் அவர்கள் அதட்டலாக சொன்னதையெல்லாம் பொறுமையாக செய்து முடித்து "Save" பொத்தானை பெருமையுடன் அமுக்க இம்முறை தவறேதும் சொல்லாமல்  ஏற்றுக் கொண்டது. 

                             முதல் முறையாக www.kovaiaavee.com  என்னும் முகவரியை அடிக்க ஆச்சர்யம்.. அங்கே நஸ்ரியா ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றாள். (அட, Maad Dad  பட விமர்சனம் போட்டிருந்தேங்க..) அப்படிக்கா, புது ஊட்டுக்கு வந்தாச்சு.. ஒரு ஐம்பது பேராவது தினம் வந்து ஆவியோட மானத்த காப்பாத்திடுங்க.. 

Sunday, July 14, 2013

MAAD DAD (மலையாளம்) - திரை விமர்சனம்                                உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனநிலை சரியில்லாதவர்களாகவே இருக்கின்றனர். அது வெளிப்படும் அளவுகளை பொறுத்து அவர்கள் "மனநிலை சரியில்லாதவர்கள்" என்று முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுவதும், சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப் படுவதும் நடக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு, அவனுடைய மகள் எப்படி ஆதரவாய் நின்று வழிநடத்துகிறாள் என்பதே இப்படத்தின் கதை.


                                    சிறு வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்துவிட்ட ஒருவனுக்கு ஆதரவாய் ஒரு காதலி வருகிறாள். அவன் சோகங்களை எல்லாம்  சுகங்களாய் மாற்றும் அவள் அவன் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வருகிறாள். ஆனால் அதுவும் அதிக நாள் நிலைத்திருக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட இருவரும் பிரசவம் முடித்து திரும்பி வரும் வழியில் ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். விபத்தில் மனைவியை இழக்கும் அவன் மனது அதை ஏற்க மறுத்து அவள் அவனுடன் உயிருடன் வாழ்வதாகவே எண்ணி காலம் கழிக்கிறான்.  அவனுடைய கலப்புக் காதல் திருமணத்தை இரு வீட்டாரும் எதிர்த்த போதும் அவன் நம்பிக்கைகளுக்கு துணையாய் நிற்கும் அவன் நண்பன்.
                                 

                                 அவனுடைய மகள் பெரியவளாகி வெளிநாடு சென்று படித்து வந்த போதும் தன் தந்தையின் கற்பனை மனைவியை சிதைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறாள். இவளுடைய காதலனின் குடும்பத்தின் மூலம் பிரச்சனைகள் வீட்டிற்குள் வருகிறது. ஒரு கட்டத்தில் காதலன் வீட்டார், இவள் தந்தைக்கு மனநிலை சரியில்லை என்றும், அவள் தாயார் இறந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது என்றும் உண்மையை அவள் தந்தை முன் கூற, அவன் உணர்ச்சிவயப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படுகிறான். அவன் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினானா, மகளின் காதல் என்னவாயிற்று என்பதே படத்தின் முடிவு.


                                  படத்தின் கதாநாயகனாக மோகன்லால் நடிக்கவிருந்த இப்படம் சில காரணங்களால் லாலின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. இவர் மகளாக நஸ்ரியா நசீம். டெப்யு (DEBUT) மேட்சிலேயே செஞ்சுரி போட்டது போல் அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்தியாவுக்கு ஒரு சிறந்த நடிகை அறிமுகமாகி உள்ளதை தெரிவிக்கிறார். தந்தையின் மூளையிலிருந்து தாயின் நினைவுகளை சிகிச்சை மூலம் அகற்ற முயலும் மருத்துவரிடம் பொரிந்து விழுவதாகட்டும், தந்தையிடம் குறும்பு செய்யும் சின்னப் பெண்ணாய் சுற்றி வரும் போதாகட்டும் படு கேஷுவலாக செய்திருக்கிறார். ( நஸ்ரியா எனக்கு பிடிக்கும் என்பதற்காக இவ்வாறு சொல்வதாய் யாரும் நினைக்க வேண்டாம்.)


                                   வழக்கமான மலையாளப் படங்களைப் போல் மெதுவாக செல்லும் திரைக்கதை, மற்றும் எளிதில் ஊகித்து விடக்கூடிய திருப்பங்கள் மைனஸ் என்றாலும், லால், நஸ்ரியா, மேக்னா ராஜ், லாலு அலெக்ஸ் மற்றும் பத்மப் பிரியாவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் முழுக்க எல்லா பிரேமிலும்  பச்சை நிறத்தை காண முடிகிறது. கண்களுக்கு குளிர்ச்சியை தரும் இந்த யுக்திக்கு இயக்குனர் ரேவதி வர்மா மற்றும் ஓளி  ஓவியர் பிரதீப்புக்கும் ஒரு சொட்டு. சென்டிமென்ட் பட விரும்பிகளுக்கு இது ஒரு நல்ல படமாக இருக்கும்.

55 / 100

                                   

Friday, July 12, 2013

MSD - The Magician

                           

                           இரண்டு வாரம் முன்பு சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற இந்திய அணி தான் ஆடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அதனால்தானோ என்னவோ மேற்கிந்திய தீவில் மேற்கிந்திய தீவு, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு போட்டியில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருந்தது. தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்று சொதப்பிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் கடைசியில் வெளியேறும் அபாயத்தில் இருந்தது, கடைசி இரண்டு போட்டிகளையும் வென்றே ஆகவேண்டிய கட்டாயம் வேறு.


                          மேற்கிந்திய தீவுடனான மூன்றாவது போட்டியில் வருங்கால கேப்டன் விராட் கோஹ்லியின் அட்டகாசமான சதம் மற்றும் ஷிகார்  தவானின்  அரை சதமும் கைகொடுக்க அருமையான வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் இலங்கையை வெல்ல வேண்டிய கட்டாயம்.  வருண பகவான் மற்றும் யாருக்கும் இதுவரை விளங்காத டக்வர்த் லூயிஸ் முறை இரண்டும் கைகொடுக்க இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய வெற்றி பெற்றது. முதலிடத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகளை போட்டியில் இருந்து வெளியேற்றிவிட்டு இலங்கையும் இந்தியாவும் பைனல்ஸில் நுழைந்தது.


                          நேற்று வியாழனன்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்  செய்த இலங்கையை பொறுமையாக வழிநடத்திச் சென்ற சங்ககாரா திரிமன்னே ஜோடி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கைவிட, கடைசி எட்டு விக்கெட்டுகளை இருபது ரன்களுக்குள்ளாகவே இழந்து இருநூற்றி ஒரு ரன்களைப் பதிவு செய்தது. ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கட்டுகள் எடுத்தார்.


                          பின்னர் ஆடவந்த இந்தியாவிற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு விக்கட்டுகளை சீக்கிரம் இழந்துவிட்ட போதும் ரோஹித் ஷர்மா பொறுமையாக நின்று அரைசதம் அடித்தார். ரங்கனா ஹீராத்தின் அற்புத சுழலில் விக்கட்டுகள் சரிய ஒரு கட்டத்தில் இந்தியா தத்தளிக்க ஆரம்பித்தது. ஒரு முனையில் தோனி  அஹிம்சையை கடைபிடிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து வந்தது.. ஒன்பது விக்கட்டுகளை இழந்த இந்தியாவிற்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது..


                              மிகவும் கனமான பேட்  ஒன்றை தேர்வு செய்த தோனி  எரங்கா  வீசிய முதல் பந்தை  அடிக்க முயல அது பேட்டில்  படாமல் வெளியே சென்றது. ஐந்து பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட இரண்டாவது பந்தை பலம் கொண்ட மட்டும் மட்டையை சுழற்ற பந்து கூரையின் உச்சிக்கு சென்றது. 9 ரன்கள் தேவை. இப்போது தோனி  ஆப் சைடில் போர் அடிக்க இலங்கை வீரர்கள் முகத்தில் கவலை ரேகைகள்.. மூன்று பந்துகளில் 5 ரன்கள் தேவை. தோனி  தன் அகன்ற தோளை குலுக்கியபடி பந்தை சிக்சருக்கு அனுப்ப இந்தியா கோப்பையை கைப்பற்றியது. அதிர்ஷ்டம் மட்டுமே தோனியின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லும் மூடர்கள் இனியாவது திருந்துவார்களா?

Thursday, July 11, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (காதல் சொல்ல வந்தேன்)-8


முந்தைய பதிவுகளுக்கு...                   அவளின்  அண்மை சந்தோஷத்தின் கதவுகளை திறந்துவிட்ட  போதிலும் அவளிடம் என் காதல் சொல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்ட முள்ளாய் வார்த்தைகள் வெளிவர மறுத்தது. அதுவரை மெதுவாக ஓடிக்கொண்டிருந்த என் கைக்கடிகாரம் வேகமாக சுழன்றது. நாட்காட்டி தேதிகளை திருடிக் கொள்ள சில மாதங்கள் உருண்டோடியது. தேர்வுக்கு சில நாட்களே இருக்கையில் குருவின் பார்வை உச்சத்தில் இருந்த ஒரு நன்னாளில் எப்போதும் போல் கல்லூரிக்கு  சென்ற எனக்கு சங்கீதா பெஞ்சுக்கு மிக அருகில் வைத்திருந்த ஒரு கிப்ட் பேக் செய்த பெட்டி கண்ணை உறுத்தியது.. "சங்கீதா.. என்ன கிப்ட் எல்லாம்.. யாருக்கு பர்த்டே" என்றேன். "க்ளோஸ் ப்ரெண்ட் நீ, உனக்கு தெரியாதா.. நம்ம ரமாவுக்கு தான் இன்னைக்கு பர்த்டே.." என்றாள்.

                         அன்று அவள் பிறந்த நாள் என்றதும் ஓர் இனம்புரியா சந்தோசம். அவளிடம் காதல் சொல்ல  இன்று தான் சிறந்த நாள் என மனதிற்குள் அமர்ந்திருந்த  மாயக் கண்ணன் கூற, அவளுக்கு நல்ல ஒரு பரிசுடன் என் காதலையும் சேர்த்துக் கொடுக்க எண்ணினேன். மாதக் கடைசியாதலால் (?!!) கையில் சொற்ப பணமே இருக்க என் கண்கள் ஆபத்பாந்தவனைத் தேடியது. வேற யாரு, நம்ம பாஸ்கர் தான். லேப்பில் பிப்பெட்டை உடைத்து விட்டதாய்க் கூறி அவனிடமிருந்து ஒரு இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு நாமக்கல் நோக்கி பஸ் ஏறினேன். என்ன பரிசு வாங்குவது என்று மனசுக்குள் ஒரு பட்டிமன்றமே நடக்க கடைசியில் மாயக் கண்ணன் சாலமன் பாப்பையாவாகி அவளுக்கு ஒரு சுடிதார் வாங்கித் தர பணித்தார். 

                          நாமக்கல் பஸ்ஸ்டாண்டின் எதிரே இருந்த  ஒரு சிறிய துணிக்கடைக்கு சென்றேன். சுடிதார் வாங்கலாம்னு முடிவு பண்ணியாச்சு என்ன அளவு சொல்லி வாங்கனும்னு ஒரே குழப்பம். அங்கு வேலை செய்த பெண்ணிடம் வெளியே பொம்மைக்கு போட்டிருந்த சுடிதார் போல் வேண்டுமெனக் கேட்டேன். அந்தப் பெண்ணும் சில சுடிதார்களை எடுத்துப் போட நான் அவரிடம் "என் உயரம் இருப்பாங்க. கொஞ்சம் பூசினா மாதிரி இருப்பாங்க.. இந்த சைஸ் கரெக்டா இருக்குமா?" என்றேன். அந்தப் பெண் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு " இது ப்ரீ சைஸ் தாங்க.. கரெக்டா இருக்கும்." என்றாள்.  அவள் பதில் எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. அதெப்படி ஒரே சைஸ் எல்லோருக்கும் பொருந்தும் என்ற குழப்பம். 

                          அவள் எடுத்துப் போட்ட சுடிதாரில் பலவற்றை நிராகரித்து ஒரு பத்து நிமிட போராட்டத்துக்குப் பின் (கிட்டத்தட்ட அந்தக் கடையில் இருந்த எல்லா சுடிதாரையும் எடுத்துக் காண்பித்தார் அந்தப் பெண்மணி) இரண்டு சுடிதார்களை தேர்வு செய்தேன். எனக்குப் பிடித்த நீல நிறத்தில் ஒன்று. அவளுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் ஒன்று. சுடிதாரின் விலையை அப்போதுதான் கேட்டேன். நூற்றி எழுபத்தி ஐந்து என்றாள் அவள். என்னிடம் இருந்ததோ பாஸ்கரின் இருநூறும், மேலும் ஒரு ஐம்பதும்..  நீண்ட யோசனைக்கு பிறகு நீல நிற சுடிதாரை தேர்வு செய்து பணத்தைக் கொடுத்தேன் . இந்த ஒரு சுடிதாருக்கு தான் இவ்வளவு ஆர்ப்பட்டமா என்பது போல் ஒரு கேவலமான பார்வை பார்த்தார் அந்தப் பெண். சுடிதாரை கைகளில் வாங்கும் முன் அவரிடம் " சைஸ் கரெக்டா இல்லேனா, மாத்தி குடுப்பீங்களா" என்றேன். சற்றே கோபத்துடன் அந்தப் பெண் " அதெல்லாம் மாத்த மாட்டோங்க ." என்றபடி வேறு வேலை பார்க்க சென்றார்.

                           அந்த சுடிதாரை எடுத்துக் கொண்டு கல்லூரி நோக்கி பயணமானேன். பயண நேரம் முழுவதும் இந்த நீல நிற சுடிதாரில் அவள் எப்படி இருப்பாள் என்று மனம் கற்பனை செய்து பார்த்தது. மேலும் அவளிடம் எப்படி காதல் சொல்லலாம் என ஒத்திகை வேறு. வண்டிகேட்டில் இறங்கி கல்லூரிக்குள் ஓட்டமும் நடையுமாய் நுழைந்தேன். என் கணக்குப் படி இடைவேளை முடிந்து மூன்றாவது பாடவேளை அப்போதுதான் ஆரம்பித்திருக்க வேண்டும். சுடிதாரோடு வகுப்பில் நுழைய சங்கடப்பட்டு அதை சன்னலின் வழி ஆசிரியருக்கு தெரியாமல்  பாஸ்கரின் மேசை மேல் 
வைத்துவிட்டு ஆசிரியரின் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். 

                              நான் வருவதற்குள் அந்த சுடிதாரைப் பார்த்துவிட்ட பாஸ்கர் அனல் தெறிக்கும் பார்வை ஒன்றை வீசினான்.. அதை கண்டுகொள்ளாமல் அவன் அருகில் அமர, "இதுதான் பிப்பெட்டா" என்றான் ஆவேசமாய்.. "சாரி டா.. உன்கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்" என்றேன். "எக்கேடோ கேட்டுப் போ" என்றான் கோபத்தில். அவனைப் பிறகு சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே பார்வையை பக்கத்து டெஸ்குக்கு திருப்பினேன். என் தேவதை அன்று வெள்ளை நிற சுடிதாரும், சிவப்பு நிறத்தில் ஒரு ஷாலும்  அணிந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எங்கே சென்றாய் என்பது போல் கண்களால் கேட்டாள் . நான் அதைக் கண்டு கொள்ளாதது போல் தலையை திருப்பி ஆசிரியரை கவனிப்பது போல் அமர்ந்தேன். அவள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு பின் கோபத்துடன் திரும்பிக் கொண்டாள். நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டே இன்னும் ஒரு பாட வேளை  முடியட்டும் என்று காத்திருந்தேன். 

                           மதிய உணவு இடைவேளையும் வந்தது. சாப்பிட அழைத்த  பாஸ்கரிடம் "நீ முன்னாடி போடா.. நான் வர்றேன்" என்றேன்.. அவனோ "நீ திருந்த மாட்டே" என்றபடி அவ்விடத்தை விட்டு அகன்றான். ஒவ்வொருவராக வகுப்பறையை விட்டு வெளியேற இப்போது நான், ரமா சங்கீதா மூவர் மட்டுமே  இருந்தோம். சங்கீதாவும் ரமாவும் கேண்டீனுக்கு செல்ல எத்தனிக்க "ரமா" என்றழைத்தேன். அவளும் திரும்பி "அப்பாடா, என்னையெல்லாம் ஞாபகம் இருக்கா சாருக்கு." என்றாள் பொய்க்கோபத்துடன்." "ம்ம்.. ரமா, உன்கூட கொஞ்சம் தனியா பேசணும்" என்றேன். நான் கேட்டது ரமா, சங்கீதா இருவருக்கும் பிடிக்கவில்லை என்பது அவர்கள் முகபாவத்திலிருந்து தெரிந்தது. "நீ பேசிட்டு வா ரமா" என்றபடி சங்கீதா அகல, ஒரு கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தாள் ரமா.. 

                            சங்கீதா வகுப்பறையை விட்டு வெளியேறியதை உறுதி செய்து கொண்டு "ரமா, பர்ஸ்ட் ஆப் ஆல் மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே" என்றவாறு என் வாழ்த்து சொல்ல என் கைகளை நீட்டினேன். "தேங்க்ஸ் என்றவாறு கைகுலுக்கி விட்டு எனக்காய் வைத்திருந்த டெய்ரி மில்க்கை கொடுத்தாள். "எனக்கு கிப்ட் ஏதும் இல்லையா" என்றாள் கண்களைச் சிமிட்டியவாறே. அப்போதுதான் என் டெஸ்க்கின் உள்ளிருந்து அந்த சுடிதாரை எடுத்து கொடுத்தேன்.  "இது என்ன சுடிதாரா? எதுக்கு சுடியெல்லாம் வாங்கனீங்க?" என்றாள். அதே சமயம் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றேன். புதிர்ப் போட்டியில் விடை தெரியாத சிறுமி போல் முகத்தை வைத்துக் கொண்டு "என்ன" என்றாள். ஆண்டவா தைரியத்த கொடு என்று வேண்டிக் கொண்டே" ரமா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ திங்க் ஐயம் இன் லவ் வித் யூ.." என்றேன்.தொடரும்..


Friday, July 5, 2013

சிங்கம் II - திரை விமர்சனம்


                          "நான் உன்னை ரொம்ப காக்க வச்சுட்டேன்.." "பரவாயில்லே, நீங்க அவ்வளவு பெரிய வேலைய விட்டுட்டு வந்து இங்க வேலை பார்க்கறீங்க.. அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். அது என்னன்னு என்கிட்டே சொல்லனும்னு அவசியமில்லை. உங்களுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்".  ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன்/ காதலனிடம் இந்த புரிதலோடு  இருந்தால் நாட்டில் பிரச்சனைகளின் அளவு குறைவாக இருக்கும். சரி கதைக்கு வருவோம்..


                               சென்ற பாகத்தில் ஆள்கடத்தல், லேண்ட் மாபியா என சில விஷயங்களை துப்பி அறிந்த சாரி துப்பறிந்த துரைசிங்கம் இந்த முறை தூத்துக்குடியில் துறைமுகத்தில் போதை மருந்து கடத்தலை கண்டறிந்து வேர் அறுக்கிறார்..இடையிடையே ஹன்சிகாவையும் அனுஷ்காவையும் மாறி மாறி காதலிக்கிறார். ( ஹன்சிகாவின் காதலுக்கு புதிதாய் ஏதாவது ஐடியா யோசித்திருக்கலாம். போன படத்து ஐடியாவை அப்படியே கட் காப்பி பேஸ்ட் , ஒய்  ஹரி சார்) சந்தானமும், விவேக்கும் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.


                               டி.எஸ்.பி யின் புண்ணியத்தில் எல்லாப் பாடலும் காதுக்குள் இம்சையை ஏற்படுத்திய காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றேன். ஆனால் ஹரியின் அற்புதமான திரைக்கதையும் பாடல் படமாக்கிய விதமும் எல்லாப் பாடல்களையும் ரசிக்க வைத்தது. குறிப்பாக முதல் பாடலை கண்ணிமைக்காமல் பார்த்தேன்.(அதற்கான காரணம் படம் பார்த்தவர்களுக்கு தெரியும்). ஹீரோ இன்ட்ரோவிற்குஅய்யனார் கோவில் திருட்டு, போலிஸ் ஜீப், சூர்யா பாய்ந்து வர,  தெரியாம மறுபடியும் சிங்கத்துக்கே வந்துட்டமா என்று எண்ணுகையில் இது முதல் பாகத்தின் ரீ-கேப் ( RECAP) என்று சொல்லி நம்மை ஆசுவாசப் படுத்துகிறார்கள்.


                            சென்ற பாகத்தில் தூத்துக்குடி, சென்னை என்று லோக்கல் ரவுடிகளை விரட்டி அடித்த துரைசிங்கத்திற்கு இந்த படத்தில் "சிம்ம" சொப்பனமாக இருப்பது இன்டர்நேஷனல் போதை கடத்தல் மன்னன் டேனி (இந்தியப் பெருங்கடலுக்கே ராஜான்னு அப்பப்போ சொல்லிக்கிறார்). ஹரி ஸ்கிரிப்ட் எழுதும் போது கிரிக்கட் பார்த்துக் கொண்டே எழுதியிருப்பார் போல. வெஸ்ட் இண்டியன் போல இருக்கும் டேனி முதலில் ஒரு ஆஸ்திரேலியன் போலீசுடன் சண்டை போடுகிறான்.. பின்னர் சூர்யாவை அடிக்க ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு ஆளை வரவழைக்கிறார் வில்லர். கடைசியில் இந்தியன் துரைசிங்கம் பைனலை முடிப்பது சவுத் ஆப்ரிக்காவில் உள்ள டர்பனில்..ஷப்பா..


                            சூர்யாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. மூன்றேகால் மணிநேரம் ஓடும் படத்தில் அவரை துரைசிங்கமாகவே பார்க்க வைக்கிறார். வசன உச்சரிப்பில் சில இடங்களில் கமலை நினைவு படுத்துகிறார். கீப் இட் அப் சூர்யா.. இதுவரை கவர்ச்சி பொம்மையாக (Glam Doll ) வந்து போன ஹன்சிகா  கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். அனுஷ்கா இரண்டு பாடலுக்காகவும், சென்ற பாகத்தின் கண்டினியுடிக்காக மட்டுமே பயன்படுகிறார். முதல் பாதியில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் "காமெடி சூப்பர் ஸ்டார்" சந்தானம் இரண்டாம் பாதியில் மொக்கை போடுகிறார். விவேக் இந்த படத்துல இருக்கீங்களா? துரைசிங்கம் கேட்பதை எல்லாம் கொடுக்கும் பணியில் விஜயகுமார். சூர்யா மற்றும் ஹரிக்காக இந்தப் படம் பார்க்கலாம். அனுஷ்காவுக்கும் சூர்யாவுக்கும் இந்த பாகத்திலும் திருமணம் ஆகவில்லை.. ஆகவே மக்கள்ஸ் கெட் ரெடி பார் சிங்கம் 3...76 / 100


Monday, July 1, 2013

சென்னையின் "மொட்டை" வெயிலில்.. 3 (பதிவர் சந்திப்பு)

                     
                         அதுவரை தமிழில் பேசிக் கொண்டிருந்த கவிஞர் மஞ்சுபாஷிணி தெலுங்கிலும் பேசி அசத்த.. சபை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. வேறென்ன சாப்பாடு தான்.. எல்லோரும் பிரியாணியும் மட்டன் சுக்காவும்
கவிஞர் மஞ்சுபாஷினி, கவிஞர் தென்றல் சசிகலா மற்றும் கவிஞர் சேட்டைக்காரன் ஆகியோர் தயிர் சாதமும் சாப்பிட ( தயிரின் குளுமையோ என்னவோ, காலையில் இருந்த அனல் பறக்கும் பேச்சு பெண் கவிஞர்களிடம் பிற்பகுதியில் இல்லை)


                            சீக்கிரம் போக வேண்டும் என்று அடம் பிடித்த ஸ்கூல் பையன் மற்றும் சீனுவுக்காக உணவுக்கு பிறகு பதிவர்கள் எல்லோருமாய் ஓரிரு (?!!)  புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தோம். பின் பாலகணேஷ் சார் சேட்டைக்காரன் ஐயாவை வீட்டில் விட்டுவர, பின் மற்றொரு பதிவர் சாதிகா அவர்களை அவர் இல்லத்தில் சென்று  சந்தித்தோம். நேரமாகிவிட்ட காரணத்தால் தென்றல் காற்றில் பறந்தது.


                            உணவருந்திவிட்டு அப்போதுதான் வந்திருந்ததால் அவர் வீட்டில் அருமையாய் செய்திருந்த கேக்கை உண்ணுவதற்கு இடமில்லாமல் போயிற்று. "கேக்கு போச்சே" என்று வருத்தத்தோடு வெளிவந்த போது கவிஞர் மதுமதியும் அதே கருத்தை சொல்ல கொஞ்சம் ஆறுதல். இப்போது பதிவர்களின் எண்ணிக்கை மொத்தமாக குறைந்து விட்டது. இப்போது கவிஞர் மஞ்சுபாஷினியை அவர் வீட்டில் விட கவிஞர் கவியாழி, கவிஞர் மதுமதி, கவிஞர் மின்னல் மற்றும் நான், கவியாழி ஐயாவின் வண்டியில் சென்றோம்.                              கவிஞர் கவியாழி அவர்கள் வண்டியின் குறுக்கே வருபவர்கள் எல்லோரையும் அன்புடன்(?!!) நலம் விசாரித்த விதம் அருமை. மஞ்சுபாஷினி அவர்களின் இல்லம் சென்று அவர் இல்லத்தார் அனைவரையும் கண்டுவிட்டு திரும்பும்போது அவர் ஆளுக்கொரு லட்டு கொடுத்தனுப்பினார். தலையில் மொட்டையும் கையில் லட்டுமாய் வந்தபோது திருப்பதி சென்று வந்த பீல் கிடைத்தது. பல சந்தோசமான தருணங்களை கொடுத்த சென்னை-பதிவர் சந்திப்பு ஒரு நல்ல அனுபவம் கொடுத்தது.                                 இந்த  சந்திப்பை தன் இல்லத்தில் ஏற்பாடு செய்த புலவர் ஐயா, மதிய உணவளித்த கவிஞர் மஞ்சுபாஷினி,  தென்றல் என்ற பெயரில் சூறாவளியாய் சுழன்று எல்லா வேலைகளையும் செய்து கடைசியில் அறுசுவை தேனீர் கொடுத்த கவிஞர் சசிகலா, வாகனத்தில் எங்களை அலேக்காக கூட்டிச் சென்ற கவியாழி ஐயா, மற்றும் தம் பேச்சால் எல்லோரையும் மகிழ்வித்த கவிஞர் சேட்டைக்காரன், கவிஞர் மதுமதி, நண்பர் சீனு, நண்பர் ஸ்கூல் பையன், நண்பர் ரூபக் அனைவருக்கும் நன்றி. இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து தன் மேலான உபசரிப்பை நல்கிய என் குருநாதர் பாலகணேஷ் சாருக்கு நன்றிகள் பல. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு சந்திப்புக்காய் காத்திருக்கிறேன்.


-முடிஞ்சு போச்சு..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...