Saturday, November 30, 2019

ரவுடி பேபி 2.0 - ஹிட்மேன்

.

தயவு செய்து சற்று கீழே ஸ்க்ரோல் செய்து படிக்கவும். 


.


.
.
.
ஹிட்மேன்:

Tuesday, November 12, 2019

ஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..

சினிமா பார்க்கறது ஒரு சுகமான அனுபவம்னா, புதுப்புது தியேட்டர்ல போய் பார்க்கிறது அதைவிட ஒரு அலாதி சுகம் தர்ற அனுபவம் எனக்கு. கோவையில் இருந்த வரை பெரும்பாலும் எல்லா தியேட்டருக்கும் ஒரு விசிட் விட்டிருக்கேன். இப்போ இருக்கிற ஜெனரேஷனுக்கு ப்ரோஃஜோன் மால், ப்ரூக்பீல்ட்ஸ், ஃபன் சினிமாஸ்தான் சுகம். அவங்களுக்கு கேஜி, கற்பகம் காம்ப்ளக்ஸ், செந்தில் குமரன், சென்ட்ரல், பாபா காம்ப்ளக்ஸ் தெரிஞ்சிருந்தாலே பெரிய விஷயம்.

ஆனா என் பால்ய காலத்துல (அதாவது ஒன்ஸ் அபான் எ டைம் இன் கோவை) ராயல், கர்னாடிக், மாருதி, டிலைட், ராஜா, நாஸ், இருதயா, கீதாலயா, ஜிபி, சாந்தி, உக்கடம் லட்சுமி தியேட்டர், சிங்காநல்லூர் மணீஸ், அம்பாள், ஜெயசாந்தி, கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர்ன்னு நான் படம் பார்த்த லிஸ்ட் கொஞ்சம் நீளமாவே இருக்கும்.

சென்னை வந்தப்புறமும் ஸ்டார் தியேட்டர், சைதை ராஜ், ஆனந்த் தியேட்டர்,  மேடவாக்கம் குமரன், வில்லிவாக்கம் நாதமுனிவரை தேடித் தேடி பார்த்தது ஒரு பசுமையான அனுபவம். சமீப காலமா அந்த அனுபவங்களை எல்லாம் அசைபோட்டபடி படம் பாக்கணும்னா கமலா தியேட்டர்னு செட்டில் ஆகி சைலண்ட்டா இருந்தப்போதான் ஒருநாள் உள்ள உறங்கிகிட்டு இருந்த உலகநாயகன் விழிச்சுகிட்டு, புது தியேட்டர் போயி ரொம்ப நாள் ஆச்சேன்னு எங்கே போலாம்னு தேடின போதுதான் கார்னிவல் சினிமாஸ் கண்ணுல பட்டுது. என்னடா இது புதுசா இருக்கே, ஈசிஆர் மாயாஜால், கோயம்பேடு ரோகினி, மவுண்ட் ரோட்டுல சத்யம், தேவி, புரசைவாக்கம் ஹைவேல சங்கம், ஈகா, பக்கத்துல ஆல்பட், பெரம்பூர் எஸ்2, ஆலந்தூர் மார்லன் சினிமாஸ் வரை நாம எல்லா தியேட்டரிலும் படம் பார்த்து, கங்கை கொண்ட சோழனின் பெருமிதத்துடன் அமர்ந்திருந்த வேளையில் இத பார்த்ததும் எப்படி மிஸ் பண்ணினோம்னு ஒரு சிந்தனை.எவ்ரைட்டு, அது எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு லக்கேஜ்களோட (முன்ன மாதிரி தனியா போக முடியாது இல்ல) மேப் போட்டு பூந்தமல்லி வழியா அகத்தியர் பொதிகை மலையை கடந்த மாதிரி குண்டும் குழியும் இருக்கிற வழியில (அதுக்கு பெங்களூரு ஹைவேன்னு பேர் வச்சிருக்காங்க). கிட்டத்தட்ட பதினாலு கிலோமீட்டர் பயணம் செஞ்சு ஒரு வழியா கார்னிவல் சினிமாஸ் திரையரங்கை அடைந்தோம்.

அங்க ஆறேழு ஸ்க்ரீன் இருந்தாலும் நாங்க எல்லா படத்தையும் பார்த்துட்டதால வேற வழி இல்லாம "ஒத்த செருப்பு" படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு போய் உட்கார்ந்தோம். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்தாலும்
தியேட்டர் நல்லா இருந்தது. குட்டீஸ் விளையாட ப்ளே ஏரியா, சுத்தமான கழிவறைகள், கேபிடேரியான்னு சகல வசதிகளோட இருந்தது ஆறுதல்.

"ஒத்த செருப்பு" ன்னு டைட்டில்  போடும்போது திரும்பிப் பார்த்தா யாரையும் காணோம். நல்ல வேளை நான் குடும்பத்தோட வந்ததால, ஒத்த செருப்பை ஒத்தையா பார்க்கிற அனுபவம் கிடைக்கல. பார்த்திபன் முதல் காட்சியில் வர்றார், இரண்டாவது காட்சியில் வர்றார். மூணாவது காட்சியிலும் வர்றார். அட கடைசி வரை அவர் மட்டும்தான் வர்றார், இதை எப்படி சலிப்பில்லாம பார்க்கிறதுன்னு நண்பர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வந்தது. பெரும்பாலான ரஜினி படங்களை அப்படித்தானே பார்ப்போம். இதுல செகண்ட் ஹாப்ல டூயல் ரோல்ல வேற வருவார். அதையெல்லாம் நாம் சகிச்சுகிட்டு பார்க்கலையா?கதையைப் பத்தி பெண்ணியவாதிகள் துவைச்சு தொங்கப்போட்டுட்ட நிலையில் நான் அதைப் பத்தி பேசல, பட் ஸ்க்ரீன் ப்ளே, புதுசா ஒரு முயற்சி. கடைசி வரை ஆடியன்சை (எங்க மூணு பேரையும்தான் சொல்றேன்) வெளியே போகாம கட்டிப் போட்டிருந்தது. படம் முடிஞ்சு வந்த போது அந்த பரந்து விரிந்திருந்த பார்க்கிங் லாட்டில் இருந்து பைக்கை எடுத்துகிட்டு, ஹெல்மெட்டை மாட்டிகிட்டு, மறுபடியும் அந்த சபாரி ரைடுக்கு தயாரானபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது!

Wednesday, November 15, 2017

கயல்விழியாள் சமைக்கிறாள்! -3

400 வது பதிவு!

‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்கொண்டிருந்தது.‘நான் எங்கே கிண்டல் பண்ணினேன் செல்லம். உப்புமா கிடைக்கிறது பாக்கியம்ன்னு தானே சொன்னேன்’ என்றேன் அப்பாவியாக.


‘சரி, அத விடுங்க. தயிர்சாதத்தை ஏன் கிண்டல் பண்ணினீங்க?’ இம்முறை கடலைப்பருப்பும் சேர்ந்து வெடித்தது.


‘அச்சோ, ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு, நீ எனக்கு

தயிர்சாதம் செய்து கொடுத்தேன்னு உன்னை பாராட்டத்தானே செஞ்சேன். டோன்ட் ஆங்ரி மீ’’ என்ற என் ஆங்கிலத்தைக் கேட்டு அவள் விழித்து நிற்க,

‘என் மேல கோபப்படாதேன்னு சொன்னேன் கண்ணு’ என்றேன். அதுவரை இருந்த இறுக்கம் போய் உதட்டைக் கடந்து பொங்கி வந்த சிரிப்பிற்கு அணை போடமுடியாமல் சிரித்துவிட்டாள்.


‘சரி, இன்னைக்காவது கிண்டல் பண்ணாம சாப்பிட்டு வாங்க. எப்படி இருக்குன்னு போன் பண்ணி சொல்லுங்க’ என்றாள்.


‘சரிம்மா’, சரிம்மா’ என்றேன் ‘மெர்சல்’ வெற்றிமாறன் குரலில்.


மதியம் இரண்டு மணி.


டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கேண்டீன் சென்று அமர்ந்தேன். சாதத்துடன் சற்று உருளைக்கிழங்கு பொரியல்.

(அப்பாடா! - பெருமூச்சு)

மற்றொரு டப்பாவில் குழம்பு வடிவத்தில் ஏதோ இருந்தது. அதில் ஆங்காங்கே தக்காளியும் வெங்காயமும் நிறைந்திருந்தது.

டப்பாவைத் திறந்ததும் கடுகு கூட்டம் கூட்டமாக என்னை வரவேற்றது.

அதை கொஞ்சமாக டிபன் பாக்ஸில் ஊற்றி உண்ணத் துவங்கினேன்.

அருகே இருந்த நண்பர் ஒருவர், ‘சார் அந்த தக்காளித் தொக்கை குடுங்க’ என்றார். கொடுத்தேன். அவர் ஊற்றிவிட்டு, 'ரசமா?' என்றார். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றேன்.


அந்த நேரம் பார்த்து போன் அடிக்கத் துவங்கியது.


அவளேதான்! இப்போது இருதயம் இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக அடிக்கத் துவங்கியது. போனை எடுத்ததும் இன்று சமைத்தது என்ன? என்ற கடினமான கேள்வியை என் முன் வைத்துவிடுவாளோ என்ற பயம்தான்.

மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அதை எடுத்தேன்.


‘ஏங்க, புளிக்குழம்பு நல்லா இருந்ததா?’ என்றாள்.


ஓ, இதுதான் புளிக்குழம்பா? இத்தனை நாள், ஊர்ல எல்லாரும் வேற எதையோ கொடுத்து, புளிக்குழம்புன்னு நம்ப வச்சுட்டாங்களே. ப்ளடி ராஸ்கல்ஸ் -இது என் மைண்ட் வாய்ஸ்.

‘வாவ்..சூப்பரா இருந்தது மா. கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப்புறம் புளிப்பு சுத்தமா இல்ல. மத்தபடி அருமையா இருந்தது மா’ என்றேன்.


‘நல்லவேளை, உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு பயந்துட்டே இருந்தேன்.’என்றாள்.

மீ - ???????????
.
#அவளும்_நானும் #புளிக்குழம்பு

Thursday, July 20, 2017

கமல் அரசியலுக்கு வரக்கூடாது!


               

இது சுயநலமாகக்கூட இருக்கலாம். ஆனால் கமல் என்னும் நடிகர் அரசியலுக்கு வருவதை விரும்பாத ஒரு ரசிகன் நான்!
.
தமிழ்நாட்டை (குறிப்பாக சென்னையைப்) பொறுத்தவரை எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இரவில் அமைதிப்பூங்காவாய் இருந்தது, விடியலில் சுனாமி விஸ்வரூபம் எடுத்தது. வெயில் என்பதே அடையாளமாக இருந்த ஊரில் மழை சலங்கை ஒலி ஆடியது. எங்கிருந்தோ வந்த 'வர்தா' நமக்கு வாழ்வே மாயம் என்று காட்டிச் சென்றது. அதனால், சினிமாதான் என் உயிர்மூச்சு, அரசியலை நான் வெளியே இருந்து பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஆண்டவர் களத்தில் குதித்து சுத்தப்படுத்த அதிக நேரம் ஆகாது. அதற்கான நேரத்தைதான் மற்றவர்கள் குறித்துக் கொண்டிருக்கிறார்கள்.
.
நடிகர் அரசியலுக்கு வருவது தவறல்ல. நம் தமிழ்நாடு அப்படி பல அரசியல் தலைவர்களைக் கண்டிருக்கிறது. அதிலும், கமல் ஒரு 'வேட்டி கட்டிய தமிழன்' என்பதால் வெளியே இருப்பவர்கள் 'தமிழன் அல்ல' என்ற துவேஷம் போட முடியாது. அதிகபட்சம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டு, பொய்க்கால் குதிரை ஆடுவார்கள்.ஆனால் நம்மவர், உயர்ந்த உள்ளம் படைத்தவர். சதி லீலாவதிகளையும், தெனாலிகளையும், தில்லுமுல்லு பார்ட்டிகள் பலரையும் பார்த்து வந்தவர். இந்தக் கலைஞனை அவ்வளவு சீக்கிரம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட மாட்டார் என்றே நம்புகிறேன்.
.
இதுவரை அவர் ஒரு சினிமா பைத்தியமாக, என்னைப்போல், உன்னைப்போல் ஒருவனாக இருந்தவர், 'ஹே ராம்' என்று சொன்ன காந்தியின் வழியில் அன்பே சிவம் என்று போதித்தவர், சாதி வேண்டாம், 'புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா' என்று சொன்னவர், இந்த அரசியல்வாதிகளின் தூண்டுதலால் உத்தம வில்லனாய் மாறிவிடுவாரோ என்ற அச்சமே தலைதூக்குகிறது.
.
ஒரு பக்கம் அந்த மகராசன், அரசியலில் நாயகனாய் ஜொலிப்பதை பார்ப்பது மகிழ்ச்சிதான் என்றாலும், எனக்குள் ஒருவன், ஒரு ஆத்மார்த்த ரசிகனாய், கமல் என்ற அந்த நடிப்பின் மகாநதி, இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். அதே நேரம், அரசியல் சாணக்யனாய், வெளியில் இருந்தே விமர்சனம் செய்வதையே ஒரு இந்தியனாய், தமிழனாய் நான் விரும்புகிறேன்.
.
என் குரு தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதைப் பற்றி நினைத்தாலே இனிக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த சிகப்பு ரோஜாவையும் அரசியல் என்னும் குருதிப் புனலில் மூழ்கடித்துவிடுவார்களே என்பதுதான் என் தயக்கம். திரை உலகில் பிரகாசிக்கும் முழு நிலவான அவரை, அரசியல் மூன்றாம் பிறை ஆக்கிவிடக்கூடாதே என்பதுதான் என் வருத்தம். ஆயினும் அந்த புன்னகை மன்னன், சட்டத்தை கையில் எடுத்து லஞ்ச லாவண்யத்தில் ஊறிய அசுரர்களை சூர சம்ஹாரம் செய்யத் துணிந்துவிட்டால் அந்தப் படையில் ஒருவனாய் சேர்ந்து தலைவனோடு வெற்றிவிழா கொண்டாடத் தயாராக இருக்கிறேன்.
.

போர் உன்னைத் தேடி வரும்வரை காத்திருக்க வேண்டாம் தலைவா, இப்போதே நீ போர் தொடு!
நான் மட்டுமல்ல என்னைப்போல் லட்சோபலட்சம் இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர் உன் பின்னால் வர. மகளிர் மட்டும் என்னகுறைச்சலா? அவர்களும் போர்க்கொடி ஏந்தத் தயாராக உள்ளனர். தூங்காவனத்தில் சிறைப்பட்டிருந்தது போதும். தசாவதாரம் எடு! உன் ரசிகர்களுக்கு நல்லதோர் செய்தியை காதல் பரிசாய் கொடு!
.
இவண்,
பல கோடி பக்தர்களில் ஒருவன்

Thursday, June 1, 2017

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீஸன்2.

.

ரே,

புதிதாக சேர்ந்திருந்த அலுவலகத்தில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கும் சொந்த ஊர் கோவை என்று கூறினார். ‘அட நம்ம ஊர்க்காரர்’ என்ற உற்சாகம் மேலிட அவரைப் பற்றிய தகவல்களை விசாரிக்க, கடைசியில் அவர் படித்தது, நீ படித்த அதே கல்லூரியில்தான் என்று தெரிந்துகொண்டேன். ஓரிரு நிமிடங்கள் தயங்கி அவரிடம் ரேஷ்மா என்ற உன் பெயரைக் கூறி  ‘தெரியுமா?’ என்று கேட்டேன். அவர் சற்றும் தாமதிக்காமல் ‘அந்த வாயாடிப் பொண்ணா, சார்?’ என்றார். பின் சுதாரித்துக்கொண்டு ‘சாரி சார். ஏதோ ஞாபகத்துல அப்படி கேட்டுட்டேன். உங்களுக்கு வேண்டப்பட்ட பொண்ணா சார்?’ வேறு எதைச் சொல்லிக் கேட்டிருந்தாலும் இன்னும் நாலைந்து அடையாளங்களாவது தேவைப்பட்டிருக்கும் நீதான் அது என்று நான் உணர்ந்துகொள்ள. ‘இட்ஸ் ஓகே, யெஸ், அவ லொடலொடன்னு நிறைய பேசுவா. கன்னத்தில், உதட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மச்சம் இருக்குமே’ என்றேன். ‘ஆமா சார். அதே பொண்ணுதான். எனக்கு சீனியர்தான், ஆனா ஒண்ணா ட்யுஷன்ல படிச்சோம். உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா சார்?’ என்று மீண்டும் கேட்க, ஒரு புன்னகையோடு தலையை மட்டும் அசைத்தேன். இன்னும் அவ்வளவாய் அறிமுகம் இல்லாத அவரிடம் எப்படிச் சொல்வது, நீ என் ‘சக பயணி’ ஆன கதையை?
.

எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, அந்த டெலிபோன் உரையாடல். ‘இப்படி பல வாரமா பேசிக்கிட்டு இருக்கோமே?, நான் உங்களுக்கு என்ன ப்ரெண்டா?’
அவசரமாய் மறுத்தேன், ‘இல்லை’. ஒரு நக்கல் சிரிப்போடு ‘நான் உங்களுக்கு தங்கை முறையா?’ என்றதும் எனக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்  ‘நீ என்ன அண்ணனா நெனச்சா, நானும் தங்கையா நினைக்கத் தயார். நீ அப்படி நெனைக்கிறயா?’ என்றேன். ‘சேச்சே.. இல்ல’ என்று நீ பதறியடித்துக்கொண்டு பதிலளித்தது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அதே சமயம் மனதில் ஒரு ஆறுதல். ‘சரி, அப்ப, நம்ம ரிலேஷன்க்கு பேர் என்ன?’ என்று பந்தை என்னிடமே தூக்கிப்போட்டாய். ‘நீ எனக்கு....’ என்று சிறிது இடைவெளிவிட்டேன். ‘நான் உங்களுக்கு?’ ‘நீ எனக்கு கோ-பாசஞ்சர்’. இதை நான் சொன்னதும் நீ சிரிக்கத் துவங்கிவிட்டாய். ‘என்னது, கோ-பாசஞ்சரா? அப்படீன்னா?’ என்றாய். ‘என் வாழ்க்கைப் பயணத்தில் உடன் வரப் போறவள்னு அர்த்தம்’ என்றேன். சிறிது நேர மௌனம். பிறகு ‘அப்படீன்னா?’ என்றாய். ‘அப்படீன்னா, அப்படித்தான்’ என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

.
அன்று துவங்கிய நம் நெருக்கம், ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா, கங்கா யமுனா திரையரங்கம், நீ படித்த கல்லூரியின் அருகே இருந்த டீக்கடை, உன் வீட்டிற்கு அருகே இருந்த பாலம், க்ராஸ்கட் ரோடு, என்று கோவையின் புகழ்பெற்ற இடங்கள் அனைத்திலும் மெல்ல மெல்ல வளர்ந்தது. இருந்தாலும் நம் உறவுக்கு உரைகல்லாய் இருந்த இடம், நீ வழக்கமாகச் செல்லும் அந்த துர்க்கை அம்மன் கோவில்தான். இன்றும் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் போட்டு குழப்பிக்கொள்பவர்கள் நிச்சயமாக இதை முகச்சுளிப்போடுதான் வாசித்துக் கடப்பார்கள். வயதுக்கு வந்த ஒரு பெண், பொதுமக்கள் கூடும் கோவிலில் வைத்து, அவள் வயதுடைய ஆணுக்கு ‘இதழ் முத்தம்’ கொடுப்பது என்பது இன்றைக்கும் குற்றமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அன்றைக்கு எனக்கே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது; ஆனந்தமாகவும் தொடர்ந்தது.. அப்போது உன்னளவிற்கு தைரியம் என்னிடம் இல்லை எனக்கு. அதனால் உனக்கு பதில் முறை செய்யும் துணிவு வரவில்லை. காதலியின் முத்தமும் புனிதமானதுதான். அதிலும் கோவிலின் பின்புறம் வைத்து நீ கொடுத்ததால் அது இன்னும் பரிசுத்தமானது. அந்த ‘முதல் முத்தம்’ இன்னும் சில மில்லேனியங்களுக்கு நினைவில் இருக்கும். ஏனெனில் அந்த முத்தம் காமத்திற்கான அழைப்பு அல்ல. உண்மையான காதலின் சுவடு.

.
சரி, அதிருக்கட்டும். சென்னையில் நான் தங்கி பணிபுரிந்த போது ‘சென்னை பயங்கர சூடா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் கோயம்புத்தூர்லயே செட்டில் ஆயிடணும்’ என்று  கூறுவாயே. இப்போது சவூதி அரேபியாவிலும் வெப்பம் அதிகம்தானாமே? இந்நேரம் அந்த கிளைமேட் உனக்கு பழகியிருக்கும் என்று நம்புகிறேன். முகநூலில் உன்னைத் தேடிக் கண்டுபிடித்தவுடன் உனக்கு முதலில் ‘பிரண்ட்’ ரிக்வெஸ்ட் கொடுக்கத்தான் நினைத்தேன். ஆனால் நட்பு அழைப்பு கொடுக்க நீ ஒன்றும் என் தோழி அல்லவே! நீ அவ்வப்போது போடும் புகைப்படங்களை நான் பார்க்கத்தான் செய்கிறேன். அதிலும் இளஞ்சிவப்பு உடையில் உன் டிரேட் மார்க் புன்னகையோடு நீ நிற்கும் புகைப்படமும் இரண்டு அடியில் செய்து வைத்த வெண்கலச் சிலை போல் மின்னும் உன் பெண் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு நிற்கும் நீயும், அருகே அளவுக்கு அதிகமான ஆறரை அடி உயரத்தில் வளர்ந்திருந்த உன் கணவனும் நிற்கும் புகைப்படமும் கொள்ளை அழகு!

.
இதற்கு முன் நான் எழுதிய முந்நூற்றுச் சொச்ச கடிதங்களைப் போல இதுவும் என் குப்பைத் தொட்டிக்குள்தான் வாசம் செய்யப் போகிறது. ஆனாலும் அது என் மனம் முழுக்க நிறைந்திருக்கும் காதலை அலைவரிசைகளாய் மாற்றி உனக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். உன்னை நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றைப் பார்க்கும் வேளையில் அடுத்த கடிதத்தை எழுத என் பேனா ஆயத்தமாகிவிடும்! அதுவரையிலும் உன் நினைவுகளில் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.

புன்னகைகளுடன்,
உன் சக பயணி.
.
.
#அவளும்நானும்
.

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails