அந்த கிராமத்தின் செம்மண்ணை போகுமிடமெல்லாம் பரப்ப தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது அந்த பேருந்து. தன் பிரியமான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சிவகாமி. அவள் அணிந்திருந்த நீல தாவணியும், வெள்ளை ரிப்பனும் அவள் அரசு பள்ளியில் படிப்பதை உரைத்தன. எப்பொழுதும் போல் அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பின்புறம் அமர்ந்திருந்தான் ராசு என்ற ராசுக்குட்டி. அவள் கடைக்கண் பார்வை ஒன்றிற்காய் காத்திருந்து, ஏமாந்து பின் பேருந்து புறப்பட்டவுடன் அதிலிருந்து இறங்கி தன் சைக்கிளில் வீட்டிற்கு செல்வான். இன்றும் அதே இடத்தில் தான் அவனுடைய தவம்.
ந்யுட்ரல் கியரில் வண்டி அதிர்ந்து கொண்டிருக்க , கண்டக்டர் டிக்கட் டிக்கட் என்று அலறியபடி பேருந்து முழுக்க நடந்து கொண்டிருக்க சில கீரைக் கட்டுகளும், காதில் பாம்படமுமாய் ஒரு பாட்டி ஏற, முன்புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் கையிலிருந்த கைக்குழந்தை "வீர்" என்று அலறத் துவங்க அந்த பேருந்தின் உள்ளே இரைச்சலின் ஆதிக்கமே நிறைந்திருந்த போதும் சிவகாமியிடம் அவள் அருகே அமர்ந்திருந்த தோழி "அவன் இன்னும் பொறகால தாண்டி இருக்கான்" என்று சொல்வது அவன் காதில் தெளிவாக விழுந்தது. அது ஒரு வகையான சந்தோஷத்தையும் கொடுத்தது. அவள் தன்னை கவனிக்கிறாள் என்ற உணர்வு உற்சாகத்தை கிளப்பியது.
அப்போதுதான் அவன் சற்றும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சிவகாமி அவன் புறமாய் திரும்பி "ராசு" என்றழைத்தாள். இந்த விளித்தளுக்காய் அவன் காத்திருந்த மணித்துளிகள் தான் எத்தனை எத்தனை? அவள் அழைத்ததும் அவன் முன் சென்று "சொல்லு சிவகாமி" என்றான். "ராசு, நான் ஒண்ணு கேப்பேன், தருவியா?" என்றாள். இதைக் கேட்கும் போதே அவள் கருப்பான கன்னமும் கோவைப்பழமாய் சிவந்திருந்தது. ஹார்மோன்கள் உச்சந்தலைக்குள் வேகமாக ஓட "சொல்லு சிவகாமி, என்ன வேணும் உனக்கு?" "ம்ம்ம்.. எனக்கு... எனக்கு.. எனக்கு உன் 'தல' போட்டோ வேணும்" என்றாள்..
"இந்தா, இப்ப வர்றேன்" என்று கூறி பேருந்தில் இருந்து இறங்கி தன் சைக்கிளுக்கு சென்றான். எப்போதும் "தல" படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ராசுக்குட்டிக்கு தான் விரும்பிய பெண்ணும் 'தல' ரசிகையாய் இருந்தது இன்னமும் சந்தோஷத்தை அளித்தது. வேகமாக சைக்கிளின் பின்புறம் வைத்திருந்த பையை திறந்து அதிலிருந்து ஜாமென்ட்ரி பாக்ஸை எடுத்தான். உள்ளே காம்பஸ், ஸ்கேல், ப்ரொடக்டர் போன்றவைகளுக்கு பதிலாக அதில் முழுக்க முழுக்க அஜித்தின் புகைப்படங்களே நிறைந்திருந்தன. அதில் தனக்கு மிகவும் பிடித்த ஸ்டில் ஒன்றை எடுத்தபடி பேருந்தை நோக்கி ஓடி வர அதற்குள் டிரைவர் முதல் கியருக்கு மாற்றி வண்டியை நகர்த்த ஆரம்பித்திருந்தார்.
தன் வேகத்தை கூட்டி சிவகாமி அமர்ந்திருந்த ஜன்னல் அருகில் வந்தான்.. அவள் ஜன்னலினூடே கை நீட்ட அவள் கைகளில் அந்த படத்தை திணித்து விட்டு மூச்சிரைக்க நின்றான் கண்களில் ஆயிரம் வாட்ஸ் சந்தோஷத்தோடு. புகைப்படத்தை வாங்கிய சிவகாமி அதை பார்த்தாள். முன்னும் பின்னும் திருப்பி நோக்கினாள். பின்னர் தன் தோழியிடம் "தெனமும் பொறவால வர்றானே, எனக்கும் பிடிச்சிருக்கேன்னு பர்சுல வச்சுக்க அவன் தல போட்டோவ கேட்டா அவன் எதோ சினிமா நடிகனோட தலைய கொடுத்துட்டு போறான்.. இந்த லூச நான் லவ் பண்ண மாட்டேன்பா" என்றவாறு "தல" போட்டோவை கீழே எறிந்தாள்.
*********************