"யாத்ரீ க க்ரிப்யா ஜான் தீஜியே" என்று ஹிந்தியில் அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்த அந்த கோவை இரயில் நிலையத்திலிருந்து அந்த பல்சக்கர ஊர்தி புறப்படத் துவங்கியது. அந்த மெகாஸைஸ் வாகனத்தை பிடிக்க ஒரு பெண் முன்னே ஓடி வர, அவள் கரம் பற்றியபடி ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் பேக்கை தோள்களில் சுமந்தபடி ஒரு இளைஞனும் வந்து அந்த நீண்ட நீல நிற கம்பளிப் பூச்சியின் உள்ளே ஏறி தங்களையும் அடைத்துக் கொண்டனர். படிக்கட்டில் நின்றபடியே கோவை தங்களை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து செல்வதை ரசித்துக் கொண்டிருந்தனர். பீளமேடு ஸ்டேஷனை கடந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவள் அவன் தோள்களில் இதமாக சாய்ந்தபடி "டேய் ரிஷ்விக், இது மணிரத்னம் படம் மாதிரியே இருக்கில்ல." என்றாள். "இல்ல, கவுதம் மேனன் படம் மாதிரி" என்றான் அவள் கன்னங்களை கிள்ளியபடி..
----
கோவை இரயில் நிலையத்தின் படிக்கட்டுகளுக்கு பின்னிருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடை முன்னர் தன் மணிக்கட்டை திருப்பி அறுபத்தியாறாவது முறையாக மணி பார்த்தான். அப்போதும் சென்ற நொடியில் காட்டியே அதே மணியை காட்டிய குற்றத்திற்காக கடிகாரத்தை வெறுப்புடன் பார்த்தான் கார்த்திக். நெயில் கட்டர்களுக்கு நிரந்தர வேலையிழப்பு கொடுக்கும் மும்மரத்தில் அவன் பற்கள் ஈடுபட்டிருந்தன. அவனுக்கு இடப்புறம் இருந்த பிளாட்பாரத்தில் கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தன்னை சுற்றி ஒலிக்கும் ஒலிகளை மீறி அவளின் கொலுசொலி அவன் காதுகளில் ரீங்காரமிட்டது. அவன் பார்வை படிக்கட்டுகளை மேய்ந்தது. மல்லிகைப் பூவை அணிந்த அந்த பூவை அவனை நோக்கி வருவதை கண்டதும் அவன் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்தது.
****
"படிகிட்ட நிக்காதீங்க, டிக்கட்ஸ் ப்ளீஸ்" என்ற டீ.டீ.ஆரின் குரல் கேட்டதும் தான் ஒருவரின் மேல் ஒருவர் மெய்மறந்து சாய்ந்திருந்தது நினைவுக்கு வந்து இருவரும் விலகி நின்றனர். அவன் தன் செல்போனில் டிக்கட்டையும், ஐ.டி கார்டையும் காட்டிவிட்டு உள்ளே நகர்ந்தான். இருக்கையை சில நிமிட தேடல்களில் கண்டறிந்த பின் அமரச் சென்றவன் அங்கே ஒரு வயதான பெண்மணி தன் ஜன்னலோர சீட்டில் கண்ணயர்ந்திருப்பதை கண்டான் ரிஷ்விக். அருகே வயதான சிட்டிசன் அஜித் போன்ற உருவத்துடன் ஒரு பெரியவர் அருகே அமர்ந்திருந்தார். இவனைக் கண்டதும் அவர் அந்தப் பெண்மணியை எழுப்ப முயன்றார். அதைத் தடுத்தபடியே, "வேணாம் அங்கிள், ஆண்ட்டி நல்லா தூங்கறாங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்." என்றபடி எதிரே இருந்த சீட்டைப் பார்த்தான். அதில் இரண்டு வெள்ளைவேட்டி உடுத்திய ஆசாமிகள் அமர்ந்திருந்தனர். பெரியவருக்கு அருகே இருந்த சீட்டில் அந்தப் பெண்ணையும், அவளுக்கு எதிரே இருந்த சீட்டில் தானும் அமர்ந்து கொண்டான்.
----
"லாவண்யா, வா! நான் பயந்தே போயிட்டேன். இவ்வளவு லேட்டாவா வர்றது? என்றபடி டிரெயினை நோக்கி நகர்ந்த கார்த்திக்கின் கரங்களை பற்றி இழுத்தாள் லாவண்யா. "லேட்டாச்சு, வண்டி எடுத்துருவான் மா" என்றபடி திரும்பிய அவன் அவள் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர்ப் பூக்களை கவனித்தான். சட்டென தன் கைப்பையை கீழே போட்டுவிட்டு அவள் முகத்தை இரு கைகளிலும் வாரிக் கொண்டான் "என்னாச்சு டா" என்றவனின் மார்பில் சாய்ந்தவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். பின் தன் கைகளால் அவனை சற்று பின்னுக்கு தள்ளி விட்டாள். "இல்ல கார்த்திக், நான் உன்கூட வரல." அவள் சொல்வது புரியாமல் அவளை நெருங்க நினைத்தவனை ஒற்றைக் கைகளால் தடுத்து, "நான் உன் கூட வந்துட்டா அப்பா, அம்மா மரியாதை, தங்கச்சி கல்யாணம்னு எல்லாத்துக்கும் சேர்த்து பிரச்சனை வந்திடும். நம்மள இவ்வளவு வருஷம் பார்த்துக்கிட்ட நம்ம குடும்பத்துக்கு இதுதான் நாம செய்யுற நன்றிக் கடனா?" அவன் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. "எனக்கு உன்னைப் பிடிக்கும் கார்த்திக். நம்ம காதல் உண்மைனா நாம அடுத்த ஜென்மத்துல நிச்சயம் ஒண்ணு சேர்வோம். இந்த ஜென்மத்துல அதுக்கு குடுப்பினை இல்ல. என்னை மன்னிச்சிடு கார்த்திக்." என்றபடி வந்த வழியே திரும்பி சென்றாள். அவனுக்கு பின்னால் நின்றிருந்த புகைவண்டி மெல்ல நகர ஆரம்பித்தது. அவன் அதே இடத்தில் முழங்காலிட்டு சரிந்தான்.
****
இரயில் திருப்பூரை நெருங்கியது. அந்த வெள்ளைக் கரைவேட்டிகள் இறங்க எத்தனிக்க ரிஷ்விக் "ஹே ரேஷ்மா, இதோ பார் ஜன்னல் சீட்." என்று அவளை சீண்டியபடி ஜன்னலோரத்தில் அமர செல்வது போல் பாவனை காட்ட, ரேஷ்மா பாய்ந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்தாள். இந்த சலசலப்பில் எழுந்த சப்தத்தில் கண்விழித்தார் எதிரே இருந்த பெண்மணி. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்த ரேஷ்மாவின் கண்களில் இருந்து நீர் வருவதை கவனித்த ரிஷ்விக் தன் கைக்குட்டையை எடுத்து "ஏய், காத்து நிறைய அடிக்குது போலிருக்கு, இந்தா கண்ணை துடைச்சுக்கோ" என்றான். கைக்குட்டையை வாங்கி தன் மஸ்காரா மேல் பட்டுவிடாமல் கண்ணீரை ஒற்றியவள். "அது காத்துனால இல்ல, பீலிங்ஸ், ஸ்டுப்பிட்" "என்ன பீலிங்ஸ், உங்க அப்பன் அந்த மிலிட்டரி மீசை நியாபகத்துக்கு வந்துட்டாரா?" என்று கிண்டலாக கேட்டான். ஆம் என்பது போல் தலையாட்ட "இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல, ஈரோட்டில் இறங்கி பஸ் பிடிச்சு வீட்டுக்கு போயிடலாம். இந்த ஓடிப் போற ப்ளான் போட்டதே நீதானே? அப்புறம் என்ன பீலிங்ஸ்" என்றான் சற்று கோபமாக. "இடியட், பீலிங்கா இருக்குன்னு தானே சொன்னேன். உன்னை பிடிக்கலை, திரும்பிப் போயிடலாம்னா சொன்னேன்?" என்றபடி அவன் நெஞ்சில் செல்லமாக குத்தினாள்." "ஏய் வலிக்குதுடி.." என்றபடி அவள் கைகள் இரண்டையும் ஒன்றாக பிடித்தபடி கட்டியணைத்தான். ரேஷ்மா தனக்கு எதிரே இருந்த பெண்மணி தன்னையே பார்ப்பதை உணர்ந்து ரிஷ்விக்கின் பிடியிலிருந்து விலகினாள்.
----
தன் பார்வை அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதை உணர்ந்த அந்த பெண்மணி இப்போது அருகே அமர்ந்த பெரியவரை தேடினாள். அவர் படிக்கட்டின் அருகே நிற்பதை பார்த்ததும் எழுந்து அவரருகே சென்றாள். மெல்ல ஆதரவாய் அவர் தோள்களில் சாய்ந்தபடி "நானும் இப்படி ஒரு தைரியமான முடிவை முப்பத்தியஞ்சு வருஷம் முன்னாடி எடுத்திருந்தா நாமளும் சந்தோஷமா இருந்திருக்கலாம், இல்லையா கார்த்திக்?" என்றாள் லாவண்யா.
******
இதை Star Cast வச்சு ஒரு Short பிலிமா எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருந்தது (கனவுல தான்). அதுக்கு என் சாய்ஸ் அஜித்- அனுஷ்கா (கார்த்திக்-லாவண்யா), சிம்பு-கீர்த்தி சுரேஷ் (ரிஷ்விக்-ரேஷ்மா). இதுல ரிஷ்விக் கதாபாத்திரத்துக்கு சிம்புன்னு போட்டிருக்கிறது நம்ம ஷைனிங்கோட டேட்ஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காதுங்கிறதுனால தான்.. மத்தபடி அவர் தான் அந்த ரிஷ்விக் கேரக்டருக்கு என் முதல் சாய்ஸ். உங்க சாய்சை பதிவு செய்யுங்க.. :)