Saturday, January 30, 2016

இறுதிச்சுற்று Vs தாரை தப்பட்டை.

SPOILER ALERT:



                இரண்டு  படங்களும்  வெவ்வேறு கதைக் களங்கள், வெவ்வேறு இயக்குனர்கள், முற்றிலும் வேறுபட்ட படங்களைப் போல தோன்றினாலும் அவற்றுள் இழையோடிய ஒரு மெல்லிய ஒற்றுமையைக் காண முடிந்தது. இரண்டிற்குமான சூழல் ஆங்காங்கே ஒத்திருப்பதாய் தோன்றியது. 'கதை சொல்லும் பாணியிலா' இல்லை 'கதை சொல்லி' யின் எழுத்திலா அந்த சூழலை மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் சொன்னதில் அறிமுக இயக்குனர் என்ற போதும் ஒருவர் வெற்றி பெறுகிறார், மற்றவர் தேர்ந்த இயக்குனர் என்ற போதும் தோல்வியடைகிறார்.

தைரியமான கதாநாயகி:  இரண்டு படங்களிலுமே நாயகியின் கதாப்பாத்திரங்கள் வலுவானதாகவும், மிகுந்த தைரியசாலியாகவும் படைக்கப் பட்டிருந்தது. தனது தனித்திறமையை வெளிக்கொணர்ந்த குருவின் மேல் காதல் கொள்கிறாள். குருவுக்கு ஒரு அவமானம் எனும் போது அதைத் துடைக்க தன் திறமையை வெளிப்படுத்தி உலகிற்கு தான் யார் என்பதை நிரூபிக்கிறாள். இவள் திறமையின் மீது ஆர்வம் கொண்டு அழைப்பது போல் அழைத்து அடைய நினைக்கும் எதிராளி. இப்படி பலப்பல ஒற்றுமைகள்


திறமையே உருவான நாயகன்: தான் கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தையும் கதாநாயகிக்கு கற்றுக் கொடுத்து அவளை ஊரிலேயே சிறந்த வித்தகியாய் மாற்றுகிறான். நாயகியின் மேல் தனக்கு காதல் இருந்த போதும், தன் மீது காதல் கொண்டு தன் பின்னால் வரும் அவளின் காதலை சூழ்நிலையால் ஏற்க மறுக்கிறான். அவள் மேல் பிரியங்கள் நிறைந்திருந்த போதும்  அதை வெளிக்காட்டாமல் அவள் மீது கடிந்து கொள்கிறான்.

மாறுபட்ட இரண்டாம் பகுதி: நாயகனின் பிரிவின் போது வேறொருவன் ஆசை வார்த்தைகள் கூறி நாயகியின் கற்பை சூறையாடப் பார்க்கிறான். இதுவரை இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட ஒரே பாதையில் பயணிப்பதாய் தோன்றுகிறது. இதன் பின் முதல் பகுதியில் தைரியமான பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட அந்த நாயகியின் கதாப்பாத்திரம் ஒரு சிறு எதிர்ப்பையும் காட்டாமல் பணிந்து போவது போல் தாரை தப்பட்டையில் காட்சியமைப்பு இருக்கும். இறுதிச் சுற்றில் தன்னை அடைய நினைக்கும் கயவனுக்கு தக்க பதிலடி கொடுத்து திரும்புகிறாள்.

சோகமான முடிவுக்காக வைக்கப்பட்ட காட்சியமைப்புகள் என்ற போதும் நாயகியின் பாத்திரப் படைப்பு திசைமாறிப் போன காரணம் கூட படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கக் கூடும். அந்தக் கதாப்பாத்திரம் தனக்கு முன் வைக்கப்பட்ட சவாலை எங்ஙனம் எதிர்கொண்டு வாழ்வில் வெல்கிறாள் என்று ஒரு ரசிகன் எதிர்பார்க்கும் முடிவைக் கூறியதாலேயே புதிய இயக்குனர் என்ற போதும் இறுதிச் சுற்று இறுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடுகிறது.

நகைச்சுவைக் காட்சிகள்: மேலும் திணிக்கப்பட்டதாய் இருக்கக் கூடாது என்பதற்காக தவிர்க்கப்பட்டிருக்கும் நகைச்சுவை காட்சிகள். காட்சிகளோடு ஒன்றி வரும் மெல்லிய நகைச்சுவை ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும். வழக்கமாக அதில் வெற்றி பெறும் இயக்குனர் பாலா இதில் கோட்டை விட்டிருக்கிறார். அதே சமயம் காளி வெங்கட்டின் கதாப்பாத்திரம் மற்றும் லிவர் ஃபிரை பற்றி நாசர் பேசும்போதும்  ஒரு சாமான்ய ரசிகன் தன்னையும் மறந்து சிரித்து விடுகிறான்.


இசை : இசையைப் பொறுத்தவரை இசை ஆளுமையின் இத்தனை வருட அனுபவம் நிச்சயம் படத்திற்கு பக்கபலமாய் இருக்கிறது. ஆயினும் சந்தோஷ் நாராயணனின் இளமை துள்ளும் இசை, படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும்படி இருந்தது.


                 மாதவனின் யதார்த்த நடிப்பு, ரித்திகாவின் குறும்பு ப்ளஸ் இளமை ததும்பும் நடிப்பு, தமிழ்நாடு திரையில் வெல்லும் போது ஒவ்வொரு ரசிகனும் தானே வெல்வது போல் உணர்கிறான். வரலட்சுமி மற்றும் சசிகுமார் சிறப்பாக முயன்ற போதும் சரியாக வடிவமைக்கப்படாத திரைக்கதையால் அது விழலுக்கிறைத்த நீராகிறது. தாரை தப்பட்டை சப்தமில்லாமலும், இறுதிச்சுற்றில் வெற்றி மணி ஓங்கியும் ஒலிக்கிறது.




                  

Friday, January 8, 2016

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (6)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3  பகுதி 4 பகுதி 5

டோனா பாலாவில் அவள் கூறியதைக் கேட்டவுடன் துரிதமாகச் செயல்பட்டேன். அவளையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றுவது என
தீர்மானித்தேன். அவளிடம் சென்னையில் உள்ள அவளது அப்பாவையும் தம்பியையும் இடம் மாறும்படி கூற சொல்லிவிட்டு கொல்கத்தாவில் இருந்த என் நண்பனுக்கு அழைத்தேன். சிறிது நாட்கள் இடம் மாற்றமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிக தீர்வாய்த் தோன்றியது. டோனா பாலாவில் இருந்து அவளுடைய காரில் கொல்கத்தா நோக்கிப் பயணித்தோம். மும்பை வழி செல்ல வேண்டாம் என்று அவள் கூறியதால் அன்றிரவு விசாகப்பட்டினம் சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கொல்கத்தா செல்ல முடிவெடுத்து பயணத்தை துவக்கினோம். இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுனர் இருக்கையை பகிர்ந்து கொண்டே விசாகப்பட்டினம் அடைந்தோம். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் நான் காரை பார்க் செய்து வருவதற்குள் அவள் தங்கும் அறையை புக் செய்திருந்தாள்.

அறை எண் முன்னூற்றி ஒன்று, இந்த எண் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு எண்ணாக மாறிவிட்டதாய் உணர்ந்த நாள் அது. இருவர் தங்கக்கூடிய அந்த அறையில் அவள் உடைமாற்றிக் கொள்ள வசதியாய் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கதவைத் திறக்க உள்ளே சென்று அவள் கேட்ட ரெட் ஒயினையும், எனக்கு வோட்கா வும் இருவருக்கும் உணவும் போனில் ஆர்டர் செய்துவிட்டு அவள் அருகே அமர்ந்தேன். "அம்மா கிட்ட சத்தியம் செய்திருக்கிறேன், குடிக்க மாட்டேன், என்று சொன்னதாய் ஞாபகம்." என்றாள். "ஆமாம், அம்மாவிடம் பீர் எல்லாம் அடிப்பதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். இன்றுவரை பீர் அடித்ததே இல்லை. ஹாட் மட்டும் தான்" "யூ நாட்டி" என்று என் கன்னங்களைக் கிள்ளினாள். சற்று நேரத்தில் நாங்கள் ஆர்டர் செய்த மதுவும், உணவும் வந்து சேர்ந்தது.

இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே மதுவை அருந்தினோம். மணி பன்னிரெண்டைத் தாண்டியும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறையின் பால்கனியிலிருந்து தெரிந்த முழு நிலவும் அவள் முகமும் ஒன்று போலத் தோன்றியது எனக்கு. அந்த வெள்ளைப் பனிக்கு நடுவே ஓர் சிவப்பு ரோஜாவாய் அவள் இதழ்கள். வோட்கா தந்த போதையும் அவள் இதழ்கள் தந்த கிறக்கத்திலும் அவள் இதழ்களில் இதழ் பதித்தேன். அவள் சட்டென விலகிச் சென்றாள். "ஐயாம் சாரி, நான்.." சற்று தடுமாற்றத்துடன்  "ஐ திங்க் ஐ லவ் யூ.." என்றேன். நான் செய்த செயலுக்காக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன். நிமிர்ந்த போது அவள் அருகே அமர்ந்திருந்தாள். "மீ டூ கார்த்திக்" என்றவாறு என்னைக் கட்டியணைக்க, வானில் இருந்த வெண்ணிலவு மேகத்தோடு கலந்து காதல் செய்தது. அன்றைய நள்ளிரவு நல்லிரவாய்க் கழிந்தது.


அந்த இரவின் முடிவு எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருந்தது.
எங்கள் உறவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருந்ததாய் உணர்ந்தேன். விசாகப்பட்டினத்திலிருந்து கொல்கத்தா வரையிலான  எங்கள் பயணத்தில் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது. அவளிடம் என் வாழ்க்கைத் திட்டமிடல்களை விவரித்துக் கொண்டே வந்தேன். அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டேன். முடிந்து போன அவள் பிறந்த நாளுக்கு ஒரு நீல நிற சுடிதார் பரிசளித்தேன். "சங்கு, இந்த ப்ளூ சுடிதார் நான் உனக்குக் கொடுக்கும் முதல் காதல் பரிசு. இதை நீ நம்ம காதலின் நினைவுச் சின்னமா  எப்பவும் வச்சிருக்கணும்."  க்ளீஷே வான இந்த டயலாக்கை சொல்லியவுடன் அவள் என்னைப் பார்த்து "டோன்ட் ஒர்ரி,  நான் செத்துப் போனாக் கூட இதே சுடிதாரில் தான் வருவேன், போதுமா?" என்று கண்களை உருட்டி சந்திரமுகி ஜோதிகா போல் பேசிவிட்டு சிரித்தாள். 


அந்த நெடும் பயணம் சுகமான ஒன்றாக அமைந்தது அவளின் ஆங்கிலம் கலந்த பிள்ளைத் தமிழ் வார்த்தைகளாலா, இடையிடையே அவள் சிந்திய புன்னகைத் துளிகளாலா என்று அறியாமல் தவித்திருந்தேன்.  கண்மூடி உறங்கும் நேரம் கற்றை முடிகள் குறுக்கே விழுந்து அவள் முகத்தை மறைத்த போது வண்டியை நிறுத்தி அந்த முடிகளை ஒதுக்கிவிட்டு அவள் முகம் பார்த்தபடியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன். அவளிடம் காதல் சொன்ன கணம் முதலாய் அவளுடன் வாழத் துவங்கியிருந்தேன். அவள் தான்  என் வாழ்க்கைத் துணை, இனி ஒருநாளும் அவளைப் பிரிவதில்லை என ஓர் உறுதி எடுத்துக் கொண்டேன்.  கொல்கத்தாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். ஆயிரம் காலத்துப் பயிரை எண்ணியபடி மகிழ்வுடன் இருந்த நான் அடுத்த ஆயிரம் நிமிடங்களில் நிகழப் போகும் விபரீதத்தை அப்போது உணர்ந்திருக்கவில்லை.



அந்த நிமிடங்களை இப்போது நினைக்கும் போதும் ஒவ்வொரு செல்லிலும் வலிக்கிறது, உள்ளத்தில் வேதனை அதிகரிக்க, கண்களில் ஏதோ ஒரு இருள் சூழ ஆரம்பிக்கிறது. என் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்த போது அங்கே நான் வந்த பஸ் என்னை விட்டுவிட்டு புறப்பட்டிருந்தது. நான் பதறியபடி என்ன செய்வதென்று சிந்தித்தபடியே கையில் இருந்த குளம்பியை ஒரே மிடற்றில் குடித்து முடித்தேன். கிளாஸை கடையில் வைக்கச் சென்ற போது தான் கவனித்தேன். அதில் அவள் முகம் தெரிந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிளாஸில் குளம்பி முழுவதுமாய் நிரம்பி இருந்தது.

-தொடரும்.






How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...