குறும்படத்தின் எடிட்டிங் வேலைகளை நானே பார்த்துக் கொண்டதால் கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறது. இந்த கதையை முதன் முதலில் நான் சொன்னது ருபக்கிடம். மாஞ்சோலையில் வைத்து நான் சொன்னபோது 'நல்லா வரும் பாஸ். பண்ணுங்க' என்று முதல் உற்சாகம் கொடுத்தார். பின்னர் எப்போதும் போல் கீதா சேச்சி, மொக்கையான கதை சொன்னாலும் நல்லா இருக்கு ஆவி என்று தன் பாசத்தை பொழிபவர். படத்தின் கதை முடிவான பின் அனன்யா அவர்களுக்கு போன் செய்து 'அக்கா உங்களை பார்த்து ஒரு கதை சொல்லணும்' என்றதும் சரி என்றார்.
மறுநாள் அவர் வீட்டுக்குச் சென்று கதை சொன்னதும் 'நான் உன்னோட சோகக் கதை சொல்வேன்னு பார்த்தா, ஷார்ட் பிலிமா?' என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். 'எப்போ வச்சுக்கலாம் ஷூட்டிங், நாளைக்கா?' என்று எனக்கு ஸ்க்ரிப்ட் எழுதக் கூட சமயம் தராமல் (ஸ்க்ரிப்ட் எழுதாததற்கு ஏதாவது காரணம் சொல்லணுமே) படப்பிடிப்புக்கு தயாரானார்.
படப்பிடிப்புக்கென வீட்டைக் கொடுத்ததோடு படப்பிடிப்பு தினங்களில் உணவு பகிர்ந்தளித்து அன்பைப் பொழிந்தார். (கம்பெனிக்கு அதிகம் செலவு வைக்காத ஆர்டிஸ்ட் அவர் என்பதை இவ்விடம் பெருமையாக கூறிக் கொள்கிறேன்)
ஷூட்டிங் டைமில் எங்க ஹீரோயினின் நிஜ ஹீரோ மகாதேவன் சார் அவர்களின் ஒத்துழைப்பு பற்றி கூறியே ஆகவேண்டும். அனன்யா பெரும்பாலும் ஒரே டேக்கில் ஒகே செய்து விடுவார் எனினும் ஓரிரு இடங்களில் எக்ஸ்பிரஷன் மிஸ் செய்யும்போதெல்லாம் அவர் சரி செய்து கொடுத்து படத்தை விரைவாய் முடிக்க உதவினார். படம் பண்ணலாம் என்று சொன்னவுடன் என் ஆஸ்தான காமிராமேன் அஷ்வினிடம் கூறினேன். அவர் சிறிது பிஸியாக இருந்ததால் அந்த பொறுப்பை நானே கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். சுகமாய் அந்த சுமையை ஏற்றுக்கொள்ள தயாரானேன்.
ஷைனிங் ஸ்டார் சீனு தன் காமிராவை (அதற்கு தங்கம் என்று பெயரிட்டிருக்கிறார். கோவா செல்கையில் தங்கம் எங்க வச்சுருக்கீங்க என்று எதார்த்தமாக நான் கேட்டுவிட எதிரில் அமர்ந்தவர்கள் அந்த காமிரா பையை குறுகுறுவென பார்த்தது தனி கதை) கொடுத்து உதவி படப்பிடிப்பு இனிதே நடக்க உதவினார். படத்தின் இரண்டாம் பாகத்தில் (கடைசி இரண்டு நிமிடத்தில்) வரும் பிரின்சிபால் கதாபாத்திரத்தில் நடிக்க குடந்தை சரவணன் அவர்களை அழைத்தேன். பணிச்சுமை காரணமாக அவர் பிஸியாக, கீதா சேச்சியின் உறவினர் பாபு (காதல் போயின் காதல் சமயத்திலிருந்தே இவர் எங்கள் குழுவிற்கு செய்த உதவிகள் பல) அந்த கதாபாத்திரத்துக்கு தேர்வானார்.
படம் எடுக்க ப்ளான் செய்ததும் நான் அழைத்தவுடன் முதலில் ஓடோடி வந்தது ஸ்கூல் பையன் கார்த்திக் சரவணன். கொஞ்சம் கேமிராவில் உதவி, கேமிரா கோணங்கள் பற்றிய பகிர்வு என தானாக முன்வந்து சில உதவிகள் செய்தார். அடுத்து பாலகணேஷ் சார். வழக்கம் போல் போஸ்டர் ரெடி பண்ணுவதில் ஆரம்பித்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டு உற்சாகப் படுத்தி ஊக்கப் படுத்தினார். 'பெர்முடா' இயக்குனர் திவான் தானாக முன்வந்து படத்திற்கு ஒரு போஸ்டர் வடிவமைத்துக் கொடுத்தார்.
அடுத்து நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியது இருவரைப் பற்றி. முதலாமவர் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீவித்யா, படத்தில் வரும் செய்திகளை வாசித்திருப்பது இவரே. படத்தில் அந்த இரு வரிகளின் வலிமை ஐந்து நிமிட குறும்படத்தின் உயிர்நாடி. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார். இவர் எங்கள் படத்தில் பிரின்சிபாலுக்கு குரல் கொடுத்து மிடுக்கை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையாகாது. டப்பிங் அனுப்பிவிட்டு இது போதுமா, இன்னொரு முறை வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு செய்து கொடுத்தார்.
இறுதியாக படத்தின் முதல் காப்பியை பார்த்துவிட்டு நேர்மையாக தன் கருத்துகளை பகிர்ந்தார் 'ஒளிர் நாயகன்' சீனு. அவர் சொன்ன கருத்துகளை நீண்ட யோசனைக்கு பின் நிராகரித்து விட்டேன். இருப்பினும் அவர் என்னை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு. இதுவரை இக்குறும்படத்தினை பார்த்தவர்களுக்கும் இனி பார்க்கப் போகும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஏனைய ரசிகர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். இந்தப் படம் பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்களேன்!