Monday, January 27, 2014

ஆவி டாக்கீஸ் - திருமணம் எனும் நிக்காஹ் (Music)



                ராஜாராணி வெற்றிக்கு பின் தலா  ஒவ்வொரு தோல்வியை சந்தித்த ஜெய் மற்றும் நஸ்ரியா இணைந்து நடிக்கும் படம் திருமணம் எனும் நிக்காஹ்.. ராஜாராணி படத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருந்தாலும் அடுத்த வருடம் தான் வெளிவருகிறது. இந்தப் படத்தின் இசை எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா?



                 1. "என்தாரா..என்தாரா" - ஷதாப் பரிதி, சின்மயி பாடியிருக்கும் இந்தப் பாடல் மின்சாரம் பாய்ச்சும் காதல் பாடல். கார்த்திக் நேதா எழுதியிருக்கும் வரிகளும், ஜிப்ரானின் இசையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது. "TAAL" படத்தில் அக்க்ஷய் கண்ணா, ஐஸ்வர்யா ராய்க்கு இடையில் காதல் அரும்பும் முதல் பாடலின் சாயலில் இருக்கிறது.

                  2. சாருலதா மணி, சாதனா சர்கம், விஜயபிரகாஷ், Dr. கணேஷ் இணைந்து பாடியிருக்கும் கிளாசிக்கல் கலக்கல் "கண்ணுக்குள் பொத்தி வைப்பவன்". பாடலுக்கு இடையே காதலனும் காதலியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் "சரச" வரிகளும் உண்டு. கவிஞர் பார்வதியின் எழுத்தாணியில் உருவான பாடலிது.

                   3. "க்வாஜா ஜி"  கடவுளிடம் வேண்டிப் பாடும் பாடலாய் வருகிறது. அரிதுல்லா ஷா, காலிப்-ஈ-ரிபாயி குழுவினர் பாடியிருக்கும் பாடல்.

                  4. தேன்மொழி தாஸ் எழுதியிருக்கும் "ரயிலே ரா" பாடல் இந்த ஆல்பத்தில் அதிவேகத்தில் செல்லும் ஒரு பாடல். போனி சக்ரபர்த்தி, "இசைமழை"ஹரிஷ், அஸ்விதா  மற்றும் நிவாஸ் பாடியிருக்கும் இந்தப் பாடல் இரயில் சிநேகம் போலிருக்கும் காதலை பற்றி பேசுகிறது.


                   5. யாசின் நசிர் சோக கீதம் பாடியிருக்கும் "யாரோ இவள்" பாடல் அவ்வளவாக நம்மை ஈர்க்காவிட்டாலும்

  "மேலே போடும் நீலத் திரை தாண்டி என்னை பார்ப்பாயா, சட்டென வாழ்ந்திடும் சட்டத்தை விட்டுட்டு என் மன ஓசை கேட்பாயா?"

                    எனும் பார்வதியின்  வரிகள் கவனிக்க வைக்கின்றன.

                  6. காதல் மதியின் காதல் ரசம் பொங்கி வழியும் "சில்லென்ற சில்லென்ற" பாடலை சுந்தர் நாராயண ராவ் தமிழிலும், கௌசிகி சக்ரபர்த்தி ஹிந்தியில் பாட கேட்பதற்கு இனிமையான பாடல். கௌஷிகியின் தமிழ் உச்சரிப்பும் அழகு. முன்னா சவுகத் அலி மற்றும் ஜிப்ரான் உச்சஸ்தாயியில் பாடும் போது நாமும் மெய்மறந்து தான் போகிறோம்.

                   முஸ்லிம் திருமணத்தின் பின்னணியில் அமைந்த பாடல்கள் மெல்லிசை தாலாட்டு..

Monday, January 20, 2014

தேவதைக்கு திருமணம்..

                 
                                               

ஆம்.. தேவதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டது. இயக்குனர் பாசில் அவர்களின் மகனும், இளம் நடிகருமான பஹத் -பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் ஆகஸ்டில் திருமணம் என பாசில் இன்று காலை அறிவிப்பு செய்தார். இன்று காலையில் கேட்டதும் சோகம் வந்து அப்பிக் கொள்ள, மனதை தேற்றிக் கொண்டு வாழ்த்துகளை தெரிவிக்க புறப்பட்டு விட்டேன்.. நீங்களும் வாங்க.. என்னோடு வாழ்த்துகளை சொல்ல..





Sunday, January 19, 2014

பீமனும் சோனி எரிக்சனும்!

                           எனக்கும், மொபைல் போன்களுக்கும் இடையேயான காதல் பற்றி எனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். சோனி எரிக்ஸன் W810i மியுசிக் பிளேயர் மொபைல் ஒன்றை வாங்கி இரண்டு மாதங்கள் விடாது ஹெட்போனும் காதுமாக அலைந்து கொண்டிருந்த காலம் அது. ஸ்டீவின் அரிய கண்டுபிடிப்பான ஆப்பிளை ருசிக்க சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தேன்.அமெரிக்காவை பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறை செல்போன் கம்பெனியின் போஸ்ட் பெய்டு காண்ட்ராக்டை நீட்டிக்கும் சமயம் புதிய மொபைல்களை இலவசமாக அல்லது மலிவு விலைக்கு பெறலாம். இன்னும் இரண்டு மாதத்தில் பழைய காண்ட்ராக்ட் காலாவதி ஆவதை உணர்ந்த போதும் கைக்கு அடக்கமான இந்த சோனி மிகவும் பிடித்துப் போனதால் ஆப்பிள் போனை வாங்கும் முடிவை தள்ளிப் போட்டிருந்தேன்.




                            ஒரு வியாழக் கிழமை மாலை வழக்கம் போல் அந்த வாரம் வெளியாகியிருந்த "பீமா" படத்தின் ப்ரிவ்யு ஷோ பார்க்க கிளம்பினேன். வழக்கமாக நாங்கள் பார்க்கும் பிக் சினிமாஸ் திரையரங்கு அல்லாமல் சிகாகோவில் உள்ள வேறொரு புதிய அரங்கில் திரையிட்டிருந்தார்கள். அதன் அட்ரஸை மட்டும் குறித்துக் கொண்டு என்னுடைய கார்மின் நேவிகேட்டரில் (வழிகாட்டி) உள்ளீடு செய்யுமாறு நண்பனிடம் கொடுத்துவிட்டு டிக்கட்டின் பிரிண்ட் அவுட்டையும் வீட்டு சாவியையும் எடுத்துக் கொண்டு கதவை இழுத்து சாத்தினேன்.. ஒருமுறை சரியாக பூட்டியிருக்கிறதா என பரிசோதித்துவிட்டு காருக்கு வந்தோம். எப்போதும் காரில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை எல்லாம் பர்ஸ், போன் மற்றும் கார் சாவி இருக்கிறதா  என்று உறுதி செய்து கொண்டு ஏறுவது வழக்கம்.அன்றும் தொட்டுப் பார்த்து விட்டு கார் சாவியை மட்டும் கையில் எடுத்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்..

                            ஷோ ஆரம்பிக்க குறைவான நேரமே இருந்ததால் கொஞ்சம் வண்டியை அடித்து ஓட்டினேன். பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் என்பதாலும், என்னுடைய அப்போதைய பேவரைட் த்ரிஷா நடித்திருந்த காரணத்தாலும் முதல் காட்சியிலிருந்து பார்க்க வேண்டும் என்கிற பரபரப்பு வேறு. ஜனவரி மாத பனிப் படலத்தில் சறுக்கியபடியே தியேட்டரை வந்தடைந்தோம்.. படம் துவங்க ஐந்து நிமிடமே இருந்த காரணத்தால் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தோம்.. டிக்கட்டின் பிரிண்ட் அவுட்டை பர்ஸ் வைத்திருந்த பாக்கெட்டில் வைத்திருந்த காரணத்தால் பர்ஸை முதலில் எடுத்து கவுண்ட்டரின் மேல் வைத்துவிட்டு பின் பிரிண்ட் அவுட்டை எடுத்து கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.. நல்லவேளை அப்போதுதான் படத்தின் சர்டிபிகேட் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.



                            படம் துவங்கி "ரகசிய கனவுகள் ஜல் ஜல்" என்றதும் மெய்மறந்து அவ்வளவு நேரம் இருந்த பரபரப்பும் அடங்கி அமைதியாக பார்த்தேன். இடைவேளையின் போது வெளியே வந்து இருவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்துவிட்டு படத்தை பற்றி நண்பர்களுக்கு சொல்லலாம் என்று போனை தேடிய போது கிடைக்கவில்லை. சட்டை பேன்ட் பாக்கெட்டுகளில் தேடிப் பார்த்து கிடைக்கததால் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து நாங்கள் அமர்ந்திருந்த சீட்டின் பின்புறம், இடுக்குகளில் தேடிப்பார்த்து கிடைக்காமல் போகவே, "காரில் விட்டிருப்பேனா" என்று நண்பனிடம் கேட்க, "இல்லடா, நீ டிக்கட் வாங்கும் போது பர்ஸ், போன் எடுத்து எப்பவும் போல கவுண்ட்டர் மேல வச்சியே ஞாபகம் இருக்கா? போனை எடுக்க மறந்திருப்பே!" என்றான்.. அவன் சொன்னதும் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.. உடனே ஓடிப்போய் கவுண்ட்டரில் பார்த்தேன்.. அதே ஆள் நின்று குளிர்பானம் விநியோகம் செய்து கொண்டிருந்தான்.

                           என் கண்கள் அவன் மேசையை துழாவ அங்கே என் சோனியை பார்த்துவிட்டேன். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு கூட்டம் கலைய காத்திருந்தேன்.  சற்று நேரத்தில் படம் தொடங்க எல்லோரும் உள்ளே சென்றனர். கடைசி ஆளும் சென்று விட நான் கவுண்டரை நெருங்கி அந்த நபரைப் பார்த்து "அது, சோனி எரிக்ஸன்.." என்று இழுத்தேன். அவன் அந்த மொபைலை எடுத்து "ஆமாங்க, மியுசிக் ப்ளேயரோட வந்திருக்கும் புது மாடல்" என்று கூற, "ஆமாங்க, வாங்கி ரெண்டு மாசம் தான் ஆச்சு, ப்ரீ-ஆர்டர்  பண்ணி வாங்கினேன். " என்றதும் அவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு "நானும் ப்ரீ-ஆர்டர் பண்ணிதான் வாங்கினேங்க" என்றான். எனக்கோ பகீரென்றது, "அது உங்க போனா, என் சோனி எரிக்ஸன் போனை இந்த கவுண்டர் மேல வச்சிட்டு போயிட்டேன்" என்றேன். "சாரி, நான் அதை பாக்கலே, என்று அவன் போனை என் கைகளில் தராமல் எனக்கு டிஸ்ப்ளே தெரியுமாறு காண்பித்தான். அதில் அவன் அப்போது நின்று கொண்டிருந்த இடத்தின் பின்புலத்தோடு அவன் புகைப்படம் இருந்தது.

                         நான் வருத்ததோடு உள்ளே சென்று நண்பனிடம் கூற, உடனே என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். இப்போது கவுண்ட்டரில் அவன் இல்லை. அங்கிருந்த வேறொருவரிடம் "சார் இப்ப இங்க இருந்தவரு எங்கே?" என்றேன். "அவருக்கு உடம்பு சரியில்லைன்னு வீட்டுக்கு கிளம்பிட்டாரு" என்றார். நண்பன் உடனே "மச்சி, அவந்தாண்டா போனை எடுத்திருக்கான்.. நீ போனை வாங்கி கால் பண்ணி பாத்திருக்கணும்." என்றான். நான் என்னை நானே நொந்து கொள்ள "சரி விடுடா, ஏமாத்தணும்னு நினைச்சவன் கண்டிப்பா உன் சிம் கார்டையும் மாத்தி இருப்பான், விடுடா பீல் பண்ணாதே. எனிவே நீ ரெண்டு மாசத்துல ஐ-போன் வாங்கணும்னு சொல்லிட்டு இருந்த தானே.. விடுடா" என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்..

                        அதற்கு பிறகு படத்தில் மனம் லயிக்கவில்லை. த்ரிஷாவும் வெறுப்பாக தோன்றினாள். அந்த சோனி எரிக்ஸன் மேல் எனக்கு உண்டான காதல் எனை படம் பார்க்க விடாமல் இம்சித்தது. படம் முடிந்ததும் டின்னர் செல்வதாக போட்டிருந்த பிளானை கேன்சல் செய்துவிட்டு நண்பனை அவன் வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டை அடைந்தேன். வழியெங்கும் சோனி எரிக்ஸன் கண்ணுக்குள் மின்னி மறைந்தது.. இவ்வளவு எளிதாக ஒருவனிடம் ஏமாந்து விட்டோமே என்ற வருத்தம் வேறு. கைக்கு எட்டிய போனை வாங்கிப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கமும் மனதை பிசைய வருத்தத்துடன் கதவைத் திறக்க டேபிளின் மேல் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது அந்த "மெல்லிசை மன்னன்"!!!


                                                  *****************

Thursday, January 16, 2014

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (ஊடலுக்கு பின் காதல்) -14

முந்தைய பதிவுகளுக்கு...


                         அன்பு சொல்ல வருவதை கேட்கப் பிடிக்காமல் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற ரமாவின் பின்னே சென்று சமாதானப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான் அன்பு. இதற்கு மேலும் அகிம்சை உதவாது என உணர்ந்த நான் அவர்கள் பின்னே சென்றேன். ஒரு மரத்தடியில் நின்று கொண்டு அன்பு ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அவள் தன் காதுகளை இரு கைகளாலும் அடைத்தபடி நின்றிருந்தாள். அவர்கள் அருகே சென்ற நான் அவள் கையை பிடித்து இழுத்தபடி கல்லூரி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. என் கைகளிலிருந்து அவள் கைகளை விடுவிக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைய "கைய விடுங்க, எல்லாரும் பார்க்கிறாங்க". "ஐ டோன்ட் கேர். நான் உன்கிட்ட சில விஷயம் பேசியாகணும்.." வழியெங்கும் நின்றிருந்த மாணவர்கள் எங்களையே உத்துப் பார்ப்பதை கவனித்த அவள் "சரி நான் வர்றேன். கைய விடுங்க"  என்றாள். அப்போதும் அவள் கையை விடாமல் பற்றிக் கொண்டு கல்லூரியின் வாயிலை அடைந்தேன்.



                           என் பிடியிலிருந்து அவள் கைகளை விடுவிக்க சொல்லி அவள் இதழ்கள் சொல்லியது. ஆனால் அவள் கைகள் அதற்கெதிராய் அந்த தொடுதலை ரசித்தது போல் இருந்தது. என் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி ஓட்டமும் நடையுமாய் வந்த அவள் வண்டிகேட்டின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவுடன் "எங்க போறோம்னு தெரிஞ்சுக்கலாமா" என்றாள். நானோ புன்முறுவலுடன் "ம்ஹும்.. சொல்லமாட்டேன். சேர்ந்த பின் நீயே தெரிஞ்சுக்குவே." என்று கூறியவாறே நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தில் அவளுடன் ஏறினேன். "ரெண்டு கரூர் கொடுங்க" என்று டிக்கெட் வாங்கியதும் "கிளாஸ் கட் பண்ணிட்டு இப்ப எதுக்கு கரூர்?" "வா சொல்றேன்" என்று கூறிவிட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சில நிமிஷங்கள் முகத்தை திருப்பிக் கொண்ட போதும் மீண்டும் என் பக்கமாய் திரும்பி என் கண்கள் அவளை கவனிக்கின்றனவா என உறுதி செய்தபடி வந்தாள்.

                           "ரமா, உனக்கு பச்சை கலர்ன்னா ரொம்ப பிடிக்குமா?" என்று பேச்சை ஆரம்பித்தேன். அவளிடம் அதற்கு பதிலில்லை. "ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?" அதற்கும் மௌனமே பதிலாய் கிடைத்தது. "இதப் பாரு ரமா, உலகத்தில் மிகப் பெரிய கொடூரத்தை பண்ணினவனுக்கு கூட தூக்கு தான் உச்சபட்ச தண்டனை. ஆனா நீ இப்படி பேசாம இருக்கிறது அதை விட கொடுமையான தண்டனை. ரொம்ப சங்கடமா இருக்கு. உனக்கு என்னை பிடிக்கலையா?" என்றேன். சட்டென்று திரும்பிய அவள் "பிடிக்காமதான் உங்க பக்கத்துல இவ்வளவு நேரம் உங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கேனா?" என்றாள். "அப்பாடா, கோபம் போயிடுச்சு." "இல்ல இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு" என்றவாறு என் பக்கம் திரும்பி சிரித்தாள். கண்களில் ஓரிரு துளி நீரை உதிர்த்துக் கொண்டே அவள் சிரித்ததை பார்த்ததும் "ச்சே.. மனோ..ரமாவுக்கு அப்புறம் இப்படி ஒரு சூப்பர் பெர்பாமென்ஸ் தர இந்த ரமாவால தான் முடியும்." என்றதும் என் தோள்களில் குத்து விட்டு "இது ஒண்ணும் பெர்பார்மன்ஸ் இல்ல" என்று பொய்க்கோபம் காட்டினாள்.

                                 அதற்குள் கரூர் வந்துவிட பஸ்ஸை விட்டு இறங்கினோம். அவளை அழைத்துக் கொண்டு தைலா சில்க்ஸ் சென்றேன். இதுவரை அமைதியாக வந்த அவள் துணிக்கடைக்குள் நுழைந்ததும் "ஆனந்த், இப்ப எதுக்கு இங்கே?" அவள் பேச்சை பொருட்படுத்தாமல் நேரே புடவை செக்க்ஷனுக்கு  சென்றோம். "பச்சை கலர் இருக்கிறமாதிரி  கொடுங்க" என்றேன்.. "இப்ப எதுக்கு புடவை எல்லாம்?" "எந்த புடவை பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு" என்றேன். அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க நானே வெள்ளை புடவையில் பச்சையும் கருப்பும் பூக்கள் போட்ட ஒன்றை தேர்வு செய்து "இது பிடிச்சிருக்கா" என்றேன். "பிடிச்சிருக்கு, ஆனா இப்ப எதுக்குப்பா?" இப்போது அவள் குரலில் ஒரு சாந்தம் தெரிந்தது. "ம்ம்.. விஷயம் இருக்கு, சொல்றேன்"  என்று கூறிவிட்டு அந்த சேலையை பேக் செய்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

                                என் கைகளை பிடித்தபடியே நடந்த அவள் "இப்பவாவது சொல்லுங்க.. என்ன விஷயம்". "அது ஒண்ணுமில்லடா.. உன் பர்த்டேக்கு ட்ரெஸ் வாங்கும்போதே பாஸ்கர் கிட்ட கடன் வாங்கித்தான் என்னால வாங்க முடிஞ்சது. அப்புறம் சிவாவ ஹாஸ்பிடல் கூட்டிப் போகும்போதும் என் கையில சுத்தமா பணம் இல்லே. அதனால.." "அதனால?" "அதனால.. நீங்கெல்லாம் செமஸ்டர் ஹாலிடேஸ் ஊருக்கு போனப்போ நான் இங்க தான் இருந்தேன். அந்த ஒரு மாசமும் மோகனூர்ல ஒரு பிரிண்டிங் பிரஸ்சுல வேலைக்கு போனேன்.  மதியம் மூணு மணிக்கு போனா பதினோரு மணி வரை வெளியே வர முடியாது. இடையிலே ரெண்டு மூணு டீ ப்ரெஸ்ஸுக்கே கொண்டு வந்திடுவாங்க.. அதனால தான் என்னால சிக்ஸ் டூ சிக்ஸ் தேர்ட்டி உனக்கு கூப்பிட முடியல.. சாரிடா"

                               ஆதரவாய் என் கரங்களை பற்றியபடி, "ஆனந்த், நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்கறதுக்காக வேலைக்கு போனது பெருமையா இருக்கு..ஆனா அதே சமயம் மனசுக்கு கஷ்டமாவும் இருக்கு.. இன்னும் ரெண்டு வருஷத்துல நீங்களும் ஒரு இஞ்சினியர் ஆயிடுவீங்க.. அதுக்கப்புறம் ஒரு நல்ல வேலைக்கு போய் நீங்க எனக்கு என்ன செய்யணும்னு நினைக்கறீங்களோ? அதெல்லாம் செய்யுங்க.. இந்த வேலை வேணாங்க, ப்ளீஸ்.." என்று அவள் வைத்த வேண்டுகோளை ஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..


..தொடரும்..

Saturday, January 11, 2014

ஆவி டாக்கீஸ் - ஜில்லா


இன்ட்ரோ  
                           மலையாளத்தில் "த்ரிஷ்யம்" எனும் அற்புதமான படத்தை கொடுத்த மோகன்லால் எனும் நல்ல நடிகனை பஞ்ச் டயலாக் பேசவிட்டு 'தாதா' வாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் நம்மவர்கள். இதுபோன்ற பல மாஸ் படங்களில் அவர் நிறைய நடித்திருந்தாலும் விஜய் போன்ற ஒரு இளைய தலைமுறை நடிகரிடம் அடங்கிப் போகும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது விஜய் ரசிகர்களை வேண்டுமானால் திருப்திபடுத்தலாம். கேரள ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.




கதை         
                            வளர்ப்புத் தந்தையின் (மலையாள வாடையுடன்)  அரவணைப்பில் இருக்கும் போது சரியென தெரியும் தந்தையின் தவறுகள் ஒரு சமயம் தவறென புரிய வருகிறது நாயகனுக்கு. அதன் பிறகு தந்தையை தவறு செய்யாமல் தடுக்க முயல்கிறார். தந்தை தன்னை விரோதியாக பார்க்கும் நிலை வருகிறது. எப்படி அதிலிருந்து மீண்டு தன் தந்தையை காப்பாற்றினார் என்று சொல்வது தான் ஜில்லா.. கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா.. யு ஆர் ரைட்.. 'தல' நடிச்ச தீனா வ கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சுரேஷ் கோபிக்கு பதிலா மோகன்லால நடிக்க வுட்டு ஜில்லாவாக்கி கல்லா கட்ட பார்த்திருக்காங்க. உஷார் மக்களே!!
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                                 டைட்டிலில் மோகன்லால் பெயர் போடுவதற்கு அனுமதி வழங்கிய பெருந்தன்மைக்காக விஜய்க்கு இரண்டாவது டாக்டர் பட்டம் வேண்டுமானால் கொடுக்கலாம். சரளமாக வரும் நையாண்டி, அட்டகாசமான நடனம் இவருக்கு கைவசப் பட்டிருந்தாலும் நடிப்பு என்ற ஏரியாவை பற்றி சற்றும் கவலைப் பட்டதாய் தெரியவில்லை. தங்கையின் கல்யாணத்திற்கு அழையா விருந்தாளியாய் வரும் காட்சியில் பெர்பாமன்ஸ் பின்னியிருக்க வேண்டாமா? நாயர் கடையில் சாயா குடித்த ரியாக்சன் தான் அவர் முகத்தில் காண முடிந்தது..

                                  மோகன்லால் இதுபோன்ற படங்களில் நடிக்காமல் இருப்பது நலம் பயக்கும். ஆனால் கொடுத்த கேரக்டரை அசால்டாக செய்து அசத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் லாலேட்டன் என்பதை மறந்து சிவன் என்ற பெயரே நம் மனதில் நிலைக்கும்படி செய்திருப்பது அழகு. பின்புறத்தில் 'கை' வைப்பதை காமெடியாய், காதல் பொங்கும் காட்சியாய் வைப்பது மூன்றாம் முறையாய் விஜய் படங்களில் பார்த்து புளங்காகிதம் அடையும் ரசிகர்கள் இருக்கும்வரை தளபதி காட்டில் என்றும் மழைதான்.. இந்தப்படத்தில் காஜல் போலிஸ் உடுப்பில் அழகாய் தெரிந்தார். சூரியின் மறுபக்க வேதனைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. இதிலும் பிரதிப் ராவத் டம்மி பீஸ் தான். சம்பத் வழக்கமான வில்லன் என்பதால் சலிப்பு தட்டுகிறது.

இசை-இயக்கம்
                                 இமானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு ஆறுதல். "பாடகர் விஜய்" கண்டாங்கி சேலையை கச்சிதமாக பாடி மனம் கவர்கிறார். இயக்குனர் நீசன் இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணும்போது காட்சிக்கு தேவையான விஷயங்களை அவர்களிடம் வாங்குவதற்கு தயக்கம் காட்டக் கூடாது. இதை ஒரு நல்ல முயற்சியாக மட்டும் பாவித்து இன்னும் சிறப்பான படைப்பை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                  காஜலை பெண் பார்க்க செல்லும் காட்சி, இரண்டாம் மூன்றாம் முறை பின் விளைவால் சூரி அவதிப்படும் காட்சி. கண்டாங்கி மற்றும் வெரசா போகையிலே பாடல் காட்சிகள்..

                  Aavee's Comments - Same ?#@$ in a new package.



ஆவி டாக்கீஸ் - வீரம்


இன்ட்ரோ  
                          அஜித் என்ற ஒரு நல்ல "நடிகனை" மாஸ் என்ற வட்டத்துக்குள் சிக்க வைத்து, பஞ்ச் டயலாக் பேசவிட்டு, பத்து பதினைந்து அடியாட்களை பறக்க விட்டு, இடையிடையே ரோமேன்ஸ் என்ற பெயரில் ஆடவிட்டு, செண்டிமெண்ட் என்ற பெயரில் காமெடி செய்து, காமெடி என்ற பெயரில் அழ வைத்து, "வீரம்" என்பது உருட்டுக் கட்டையிலும், அரிவாளிலும் தான் இருக்கிறது என சொல்ல  வந்திருக்கும் இந்த மசாலாவில் கொஞ்சம் "ராயலசீமா" வாடை தூக்கலாக இருக்கிறது.
         


கதை         
                            தம்பிகளைக் காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக இருந்த அண்ணனை அவருடைய விளக்கெண்ணை பிரதர்ஸ் (அப்படித்தான் படத்திலேயே சொல்றாங்க) சந்தானத்தோடு சேர்ந்து தமன்னாவை காதலிக்க வைக்கிறார்கள். அங்கு ஆரம்பிக்கும் அவருடைய ஏழரை படம் முடியும் போது ரசிகர்களுக்கும் வந்து சேர்கிறது. அடிதடி பிசினஸ் செய்யும் அவரை அம்பியாய் நினைத்து காதலிக்கும் தமன்னா "கௌதம புத்தரின்" பாசறையிலிருந்து வேலை பார்க்கும் தன் தந்தையிடம் அஜித்தை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்லும் வழியில் எதிர்வரும் "ரத கஜ பராக்கிரமர்களை" வதம் செய்து ரயிலின் மேற்கூரையில் நங்கூரமிட்டு நிறுத்த அப்போது அவர் வீரத்தை பார்த்து 'மயங்கி' விழுவது தமன்னா மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையரங்கமே தான். மயங்கிய ஆடியன்ஸை இடைவேளை விட்டு கொஞ்சம் தெளிய வைத்து அவர்களுக்கு பாப்கார்ன், ஐஸ்க்ரீம் எல்லாம் வயிறார  கொடுத்து விட்டு மீண்டும் இரண்டாம் பாதியில் "ஹைதராபாத்"  தம் பிரியாணி படைக்கிறார். வயிறு நிறைந்து நாம் சீட்டை விட்டு எழும்போது கடிக்கவே முடியாத ஒரு "காமெடி கொட்டைப்பாக்கை" நம் வாயில் திணித்து அனுப்புகிறார் சந்தானம். ஷப்பா...
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                                 'தல' என்ற ஒற்றை அச்சாணி கொண்டு கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்ட முயல்கிறார்கள். மறுபுறம் குடை சாயும் வண்டியை தாங்கிப் பிடிக்க தம்பிகளோ, சந்தானமோ, தமன்னாவோ யாராலும் முடியவில்லை. மாஸ் எல்லாம் ஒக்கே "தல".. நல்ல படத்தில் உங்க நடிப்ப இன்வெஸ்ட் பண்ணுங்க என்று அலறும் "தல" ரசிகனின் கதறலை அஜித்தின் காதில் சென்று சேர இயக்குனர்கள் விடுவார்களா என தெரியவில்லை. அதிலும் அவர் பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் போது "வணக்கம் சென்னை" சிவாவை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவே உணர முடிந்தது. தமன்னா பெயின்ட் அடித்த பப்பாளி, முதல் முறை பார்க்கிறவங்க கிட்ட தன் செல்லப் பேரையெல்லாமா சொல்வாங்க.. ஒரே மாதிரியான ரியாக்க்ஷன்ஸ் பார்த்து பார்த்து போரடித்து விட்டது. Babe, இட்ஸ் டைம் டு லீவ்..

                                  நான்கு தம்பில ஒருத்தன் கூடவா பெர்பார்மன்ஸ் பண்ண முடியல? சரி தல இருக்கும் போது வால் எப்படி ஆட முடியும். சந்தானம் சில காமெடி ஒக்கே என்றாலும் சீக்கிரம் விவேக், வடிவேலு லிஸ்டில் சேர வாய்ப்புள்ளது. நாசர் டம்மி பீஸாக வந்து போகிறார். 'தல' க்கு பிறகு நிறைவான நடிப்பை தந்த ஒரே ஆள் அப்புக்குட்டி தான்.  செண்டிமெண்ட் காமெடிகளுக்கு நடுவே நெஞ்சின் ஓரத்தை சுரண்டிய ஒரே காட்சி இவருடையது தான். அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத் ஆகியோர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து 'தல'யிடம் அடிவாங்கி செல்கிறார். கிராமத்து சப்ஜெக்ட் என்பதற்காக ஜெயிலில் இருந்து தப்பிய கைதி ராமராஜ் வேஷ்டியை மாற்றிக் கொண்டு வந்து அடிவாங்கி செல்வதெல்லாம் டூ மச்..


இசை-இயக்கம்
                                 DSP தன் பங்கிற்கு தாரை தப்பட்டைகளை முழங்க விட்டிருக்கிறார். ஒரே ஆறுதல் "ரத கஜ பதாதி" பாடல் மட்டுமே.. அதுவும்
டீசரில் பார்த்தபோது கலக்கலாக இருந்தது. ஆனால் படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வரும்போது கொஞ்சம் வேறுபேற்றுகிறது என்பது தான் உண்மை. 'சிறுத்தை' சிவா சார், உங்க பெயரில் சிறுத்தையை சேர்த்துக் கொண்டது சரி, எடுக்கும் எல்லா படங்களையும் அதே டெம்ப்ளேட்டில் எடுப்பது நல்லா இருக்காது சார், தமிழ்நாட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணுங்க..

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 மாஸ் நிறைந்த அந்த ரயில் சண்டைக் காட்சி மற்றும் தமன்னாவிடம் தயங்கி தயங்கி பெயர் கேட்கும் அஜித்தின் நடிப்பு. இருந்தாலும் படம் முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சியும் நினைவில் இல்லை என்பதே நிதர்சனம்.

                  Aavee's Comments - Valour with lot of bloodshed.



Wednesday, January 8, 2014

யார் படிக்க இந்த "ஆவிப்பா" ?

                 "எல்லாம் தெரிந்தவர்கள்தான் கவிதைகளும், கதைகளும் எழுத வேண்டும் என்றிருந்தால் தமிழில் இவ்வளவு புத்தகங்கள் வெளிவந்திருக்காது."
                                                                                                    -கோவை ஆவி 

                   இலக்கியமோ,  இலக்கணத்தோடு கூடிய சொற்றோடரோ எதிர்பார்க்கின்ற ஆள் நீங்கள் என்றால்  ஆவிப்பா நிச்சயம் உங்களுக்கான புத்தகம் அல்ல. எளிமையான வார்த்தைகளும், எதார்த்த உணர்வுகளும் மட்டுமே இதில் இருக்கும்.  யாரையும் "பகடி" செய்தோ, மற்றவர்களை காயப் படுத்தும் வார்த்தைகளோ நிச்சயம் இதில் இருக்காது.  

                     ஆகச் சிறந்த "உலக சினிமாக்களின்" நடுவே வந்த "வருத்தப்படாத வாலிபர் சங்கமும்" மக்களால் ரசிக்கப்பட்டு  வெற்றியடைந்த படம்தான். இந்த "ஆவிப்பாவும்" அதுபோன்ற ஒரு படைப்பு தான்.  கண நேரம் கூட சிந்திக்காமல் வெளிவந்த முத்தாக மற்றவர்களுக்கு தெரியலாம்.. ஆயினும் எந்த ஒரு படைப்பையும் ஒரு புத்தகமாக கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் யாவையும் கடந்தே, பல பேருடைய உழைப்பை தாங்கி வெளிவருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.



                      ஒரு வாசகனாய் இந்த புத்தகத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு நிச்சயம் உரிமை இருக்கிறது. ஆனால் வெளிவராத ஒரு புத்தகத்தின் தரத்தை பற்றி விமர்சிப்பது நிச்சயம் வேதனைக்குரியது. இது போன்ற பலவற்றையும் நான் எதிர்பார்த்து தானிருந்தேன் என்ற போதும் என் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்த ஒரு கூர்வாளே கீறுமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எது எப்படியோ யார் மீதும் திணிக்கப் படுவதற்கு அல்ல இந்த ஆவிப்பா.. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். இல்லையென்றால் வழக்கம் போல் கேலி பேசிவிட்டு 'வெளிநாடு' செல்லுங்கள்.. இரண்டும் எனக்கு சந்தோசம் தான்.. குடிக்கறதுக்கு காப்பி வேணும், அது உயர்தர "காபி டே" வோ இல்லே தெருமுனையில் இருக்கும் டீக்கடையோ அது எனக்கு கவலையில்லை.. நட்போடு குடிப்பதில் தான் சந்தோசம் இருக்கிறது..

                     வெளியிடும் தேதி ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்.. விருப்பமும், வாழ்த்த மனதும் இருப்பவர்கள் சென்னைக்கு வர முடிந்தால் வாருங்கள். மிகவும் சந்தோஷப் படுவேன்!

Saturday, January 4, 2014

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (முதல் பிரிவு ) -13

முந்தைய பதிவுகளுக்கு...


                       ஓரிரு வாரங்களில் தேர்வுகள் முடிந்து எல்லோரும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். கல்லூரியின் எல்லா பாகங்களிலும் மாணவர்கள் கும்பல் கும்பலாக நின்று கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள் விடுமுறை திட்டங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ரமா நாங்கள் எப்போதும் அமர்ந்து அளவளாவும் சிவில் இஞ்சினியரிங் அருகில் இருந்த ஒரு பெஞ்சில் கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்தாள். என் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு அவள் அருகே சென்றேன். என் வரவுக்காய் காத்திருந்தவள் போல் அந்த பெஞ்சில் அமர்ந்தாள். சிவில் இஞ்சினியரிங் பிரிவு மாணவர்களுக்கு முன்பே தேர்வுகள் முடிந்து விட்டதால் அங்கே நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.


                         மெதுவாய் சென்று அவள் அருகே ஒன்றும் பேசாமல் அமர்ந்தேன். புத்தகப் பையின் மேல் வைத்திருந்த என் கையை எடுத்து தன் கைகளோடு சேர்த்துக் கொண்டாள். அவள் பக்கமாய் திரும்பிய போது தான் அவள் கண்களில் கோர்த்திருந்த நீரைப் பார்த்தேன்.. "ஏ.. ஏண்டா அழறே" என்றேன் நான். "ம்ம்.. இன்னும் ஒன் மன்த் உங்களை பார்க்க முடியாதே.. அதை நினைச்சதும் என்னையும் அறியாமல் கண்ணீர் வருது. மனசுக்கு கஷ்டமா இருக்கு.." என்றாள். "என்னடா நீ, ஒன் மன்த் இதாங்கறதுக்குள்ள போயிடும். தவிர உன் போன் நம்பர் கொடு. நான் தினமும் கூப்பிடறேன்.." "நான் நம்பர் தர்றேன். ஈவ்னிங் சிக்ஸ் டு சிக்ஸ் தேர்ட்டி கூப்பிடுங்க. நான் உங்க காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். நீங்க கூப்பிடும் போது என்னைத் தவிர யாரும் எடுத்தா ஒண்ணும் பேசாம வச்சிடுங்க."  "ஏன், ரமாகிட்ட கொடுங்க ன்னு சொல்லி உங்கிட்டே பேசறேன்" "அச்சச்சோ, அப்படி ஏதும் பண்ணிடாதீங்க. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவருக்கு மட்டும் தெரிஞ்சா தொலைச்சுடுவார்." "அப்புறம் கண்டுபிடிக்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பாரா?" என்றதும் "சீரியஸா பேசும்போது விளையாடாதீங்க. " என்று சினமுற்றாள். "ஒக்கே டா, ஐ வில் கால் யு டெய்லி டா.." . அவளை சமாதானப் படுத்தி பின் சிறிது நேரம் பேசிவிட்டு அவளை வண்டிகேட் வரை அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்டேன். அவள் சென்ற மறு வினாடி அவள் இறக்கி வைத்த பாரம் என் மனதில் ஏறிக் கொண்டது. 

                          "ஐ வில் கால் யு டெய்லி" என்று அவளுக்கு வாக்குறுதி கொடுத்த போதும் அடுத்து வந்த இருபத்தியெட்டு நாட்களும் அவளுக்கு அழைக்கவே இல்லை. அவளை நான் அழைக்காததற்கு என் தரப்பு நியாயங்கள் பல இருக்கவே செய்தன. குரல் மட்டும் கேட்டால் முகம் பார்க்கும் ஏக்கம் தோன்றும் என்பதாலோ, அவளை அழைக்கும் போது வேறு யாராவது பேசிவிடுவார்களோ என்ற பயமோ நிச்சயம் காரணம் இல்லை. இருபத்தியெட்டு நாட்கள் கடும் விரதத்தை என்னால் தொடர முடியாமல் அவள் எண்களை பொதுத் தொலைபேசியில் ஒற்றி எடுத்தேன். ட்ரிங் ட்ரிங் என்று ஒவ்வொரு முறை மணி அடித்த போதும் என் மனசில் அவள் குரலை கேட்கும் சந்தோசம் பொங்கியது. பல ட்ரிங்குகளுக்குப் பிறகு யாரும் எடுக்காத காரணத்தால் நிசப்தமானது தொலைபேசி. 

                         ஏமாற்றத்துடன் திரும்பிய நான் அவளுக்கு ஒரு கடிதம் எழுதத் துவங்கினேன். இருபத்தியெட்டு நாட்கள் இறுமாப்புடன் இருந்த காரணத்தை காகிதத்தில் விவரிக்க தொடங்கினேன். இன்று அவளிடம் பேச எண்ணிய எல்லாவற்றையும் வார்த்தைகளாய் வடித்து, இடையிடையே அவளை தவிக்க விட்ட காரணத்திற்கு பல "Sorry" களையும் உடன் சேர்த்து எழுதி முடித்தேன். இன்னும் இரண்டு நாட்களில் அவள் வரும் போது கொடுக்க எண்ணி அதை மடித்து என் டைரிக்குள் வைத்தேன். (கதை கதையாய் சம்பவங்களை விவரிக்கும் பழக்கம் இருந்ததால் அன்றெல்லாம் ஒரு குயர் நோட்டுதான் என்னுடைய டைரி) என் தன்னிலை விளக்கத்தை அவள் புரிந்து கொள்வாள் என மனம் நம்பியது. இரண்டு நாட்களும் இமைப்பொழுதில் நகர்ந்து விட அவளை வரவேற்க வேண்டி மோகனூர் சென்று காத்திருந்தேன். அவள் எப்போதும் காலை ஆறு மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் மூன்றரை மணிக்கு வந்து சேரும் வழக்கத்தை நான் அறிந்திருந்ததால் மூன்று மணியிலிருந்து அங்கே காத்திருந்தேன். மூன்றரை மணிக்கு சேலத்திலிருந்து வந்த பேருந்து வந்து நின்றது. அவள் அன்று பூத்த மல்லிகை மொட்டாய் இறங்கினாள்.

                         ஓடிச்சென்று அவள் பைகளை வாங்க  முற்பட்ட போது என் கைகளை தட்டிவிட்டு தானே சுமந்தபடி என்னை புறக்கணித்து முன்னே சென்றாள். "ரமா, நீ எம் மேலே கோபமா இருப்பேன்னு எனக்குத் தெரியும். நான் உனக்கு ஏன் போன் பண்ணலேன்னு தெரிஞ்சா இப்படி பேசாம போகமாட்டே" என்றேன். என் வார்த்தைகளை  அலட்சியப்படுத்திவிட்டு அவள் கிராயூர் செல்லும் பஸ்ஸில் ஏறினாள். எனக்கு சங்கடமாய் இருந்த போதும் அவள் கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது. பஸ்ஸில் நிறைய பேர் அமர்ந்திருந்ததாலும்  அதற்கு மேலும் அவளை தொல்லை செய்ய விரும்பாததாலும் அங்கிருந்து அகன்று விட்டேன். சற்று தொலைவு சென்று திரும்பிப் பார்த்த போதும் அவள் என் பக்கம் பார்க்காமல் வேறு பக்கம் தலையை திருப்பியிருந்தாள். அப்போதைக்கு அவள் கண் முன்னிருந்து தூரச் செல்வதே அவள் கோபம் குறைய ஒரே வழி என்றுணர்ந்த நான் அருகிலிருந்த கடைக்குள் சென்று அமர்ந்துவிட்டு அந்த பஸ் அங்கிருந்து  சென்ற பிறகு வெளியே வந்தேன். 

                         மறுநாள் கல்லூரிக்கு சென்ற நான் வழக்கம் போல் என் இருக்கையில் அமர்ந்தேன். சிவசங்கரி மற்றும் ரமா அமர்ந்திருக்க, என்னை கவனிக்காதது போல் பாவனையில் இருந்தாள். "குட் மார்னிங் சிவா, குட் மார்னிங் ரமா" என்று நான் சொல்ல சிவசங்கரி மட்டும் தலையசைத்தாள். அப்போது அங்கே வந்த அன்பு ரமாவிடம் சென்று "ரமா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான். "சொல்லுங்க" என்றவளிடம் "நேத்து ஆனந்த், ரொம்ப பீல் பண்ணினான்" "அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்" "இல்லே, என்ன நடந்ததுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்." "ப்ளீஸ், வேணாங்க.. ஒவ்வொருத்தருக்கும்  முக்கியமான வேலைகள் பலதும் இருக்கும். அதை எல்லாம் நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லே.." "இல்லே நீங்க கேட்டுத்தான் ஆகணும்." என்றபடி அவன் சொல்ல ஆரம்பிக்க அவள் அதைக் கேட்க விரும்பாமல் வேகமாக வகுப்பறையிலிருந்து வெளியேறினாள். அன்புவும் விடாமல் அவள் பின்னால் சென்றான். 

                         
தொடரும்..



                    

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...