இன்ட்ரோ
கதை
குடிப்பழக்கம் இன்றைய காலகட்டத்தில் அநேகமாக எல்லா இளைஞர்களிடமும் பரவிக் கிடக்கிறது. குடிப்பது நாகரீகமாகவே கருதப்படும் நிலையும் உருவாகி வருகிறது. இன்றைய இளைஞர்களை வழிநடத்த, குடிப்பழக்கம் தவறானது என்று உணர்த்த கடவுள் நடத்தும் சித்து விளையாட்டு தான் படத்தின் கதை. இதனிடையே ஜெய்-நிவேதா தாமஸ் இடையே மெல்லியதாய் ஒரு காதல் கதையும்..
ஆக்க்ஷன்
படத்தின் எதார்த்த ஹீரோ VTV கணேஷ் தான். மனிதர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை வெளுத்து வாங்கியிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் படத்தை நகர்த்திச் செல்வது இவர்தான். ஓரிரு படங்களுக்கு பிறகு இவர் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ராஜா ராணியின் வெற்றிக்கு பின் ஜெய் நடித்து வந்திருக்கும் படமென்பதால் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். சத்யன் இடையிடையே சிரிப்பை வரவழைத்தாலும் இன்னும் கொஞ்சம் உழைத்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.சுப்பு பஞ்சு சிவபெருமான் வேடத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறார். இவரும் மனோபாலாவும் வரும் காட்சிகள் கலகல.. பார்வதி வேடம் தேவதர்ஷினிக்கு, அம்மணி காமெடியில் கலக்குகிறார். கேரள இறக்குமதி நிவேதா தாமஸ் பெரிய வேடம் இல்லையென்றாலும் தமிழில் ஒரு ரவுண்ட் வருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளது. மனோபாலா, படவா கோபி, சித்ரா இலட்சுமணன், ராஜ்குமார் என ஒவ்வொருவரின் தேர்வும் அருமை.
"கோவை காமராஜ் சித்த வைத்தியசாலை", வாரிசு அரசியல், விலை கொடுத்து வாங்கும் தண்ணீர் என தற்போதைய தமிழ்நாட்டு நிலவரங்களை கிண்டல் செய்வதில் துவங்கி, நகைச்சுவையாய் நகர்ந்தாலும் நான்கே கதாபாத்திரங்கள் கொண்டு கதை நகர்த்த முற்படும் போது இன்னும் கொஞ்சம் வலுவான திரைக்கதை இருந்திருக்கலாம். வசனங்களில் சிக்ஸர்கள் அடித்த போதும் காட்சியமைப்புகள் சில இடங்களில் தள்ளாடுவதை தவிர்த்திருக்கலாம்.
இசை-இயக்கம்-தயாரிப்பு
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப்படத்தில் பிரேமின் இசை பாடல்களில் இனிமையாக இருந்த போதும் பின்னணி, முன்னணியில் குறைவாகவே இருந்தது. தனித்தீவில் சிக்கிக் கொண்ட நால்வர் செய்யும் சேட்டைகளை துறுதுறு இசையால் இன்னும் சிறப்பாய் மீட்டியிருக்கலாம். சந்துருவின் இயக்கம் எழுத்தாளர் சந்துருவின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஆனால் நல்ல முயற்சி என்றே சொல்லலாம்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
தேங்காய் தலையில் விழுந்து செந்தமிழ் பேசும் கணேஷின் காமெடி. வைத்திய குடும்பத்தை கிண்டல் செய்து வரும் காட்சிகள். "தமிழ் கடவுள்" முருகன் ஆங்கிலம் பேசும் காட்சி என பல இடங்கள் நல்ல நகைச்சுவை. சில இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பேமிலி ஆடியன்ஸும் ரசித்திருக்க வாய்ப்பிருந்தது.
Aavee's Comments - Saraswathi's Challenge brings lots of fun.