Wednesday, February 23, 2011

ஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!!



                         ஆப்பிள் நிறுவனம்  தனது "ஐ-பேட் 2 "  எனும் மடிக்கணணியை மார்ச் 2 ஆம் தேதி வெளியிட உள்ளது. இதற்கான அழைப்பை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் : 

                              இந்த "ஐ-பேட் 2 " அதிக செயல்திறன் உடையதாகவும், அதிக Resolution உடையதாகவும் இருக்கும். ஐ-போனில் உள்ள "ரெட்டினா  டிஸ்ப்ளே" வை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் முன்புறமும், பின்புறமும் ஒரு கேமிரா இருக்கும். அதன் மூலம் "பேஸ் டைம்" எனப்படும் தொலைபேசியில்லா தொலைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் இது முந்தைய "ஐ-பேட் 1 " ஐக் காட்டிலும் மிகவும் மெல்லியதாக இருக்கும் எனவும் கூறப் படுகிறது..


   

Friday, February 18, 2011

பயணம் - திரை விமர்சனம்



மொழி, அபியும் நானும் போன்ற மெல்லிய படங்களை கொடுத்த ராதா மோகன் படமா இது, அட! 

                       இப்படித்தான் சொல்லணும்னு ஆரம்பிச்சேன்.. ஆனா எதார்த்த சினிமாவை காட்டுவதாக சொல்லி எல்லா காட்சிகளும் எதிர்பார்த்தபடியே இருக்க சிறிது அலுப்பு தட்டுவது மறுக்க முடியாது.. பிளைட் ஹைஜாக் பற்றிய கதையை முடிந்த வரையில் லோ பட்ஜெட்டில் சொல்ல முனைந்திருக்கிறார்கள்.. 

                       இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண், துறுதுறுப்பான டாக்டர், அன்னியோன்யமான தம்பதி, பாசமே வடிவான ஒரு பாதிரியார், ஒரு நடிகன், அவனுடைய ரசிகன், ஜோதிட சிகாமணி, கார்ல்மார்க்ஸ் வழி நடக்கும் பட்டதாரி இளைஞன், ஒரு மாஜி மிலிட்டரி மற்றும் ஒரு அரசியல்வாதி. இவர்களுடன் மதத்திற்கு கட்டுப்பட்ட, பண்பாடுகளை மதிக்கிற, பெரியோர்களை போற்றுகிற, குழந்தைகளையும் நேசிக்கும் மனம் கொண்ட நான்கைந்து நல்ல (???) தீவிரவாதிகளும் கடத்தப்பட்ட அந்த விமானத்தில் பயணம் செய்தால் எப்படியிருக்கும்.. இதுதான் கதை..



                        விமானத்தில் சிறை வைக்கப்பட்ட இவர்கள் அனைவரையும் சேதாரமின்றி கமாண்டோ நாகார்ஜுன் காப்பாற்றுவது கிளைமாக்ஸ். வித்தியாசமான ஒரு படத்தை கொடுக்க நினைத்த இயக்குனருக்கு முதல் பாராட்டு.. பெரிய பட்ஜெட்டுக்கு சங்கர் பேமஸ் என்றால் கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் படமெடுக்க ராதா மோகனால் மட்டுமே முடியும்! கொடுக்கப்பட்ட சிறிய பட்ஜெட்டில் ரெண்டு பிளைட்டையும், நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் ( தெலுங்கின் காஸ்ட்லி காமெடியன்) ஆகியோரை மிகச் சாமர்த்தியமாக கையண்டிருப்படிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

                         பிளைட் ஹைஜாக், நான்கு நாட்கள் சிறை வைக்கப்பட்ட மக்கள், காப்பாற்ற துடிக்கும் கமாண்டோக்கள். இந்த கதையில், காமெடி இருக்க முடியுமா, சென்டிமென்ட் இருக்குமா, ஆக்க்ஷன் இருக்குமா, மெசேஜ் இருக்குமா. எல்லாமே இருக்குங்க. குறிப்பாக தன் ஆதர்ச நடிகன் அருகில் இருப்பதை மனைவிக்கு போன செய்து சொல்லும் ரசிகன், "சார் போன படத்துல பறந்து வந்த புல்லட்ட பல்லால கடிச்சு துப்பனீங்களே!!" "தாய்க்கு ஒண்ணுன்னா ஆம்புலன்சை கூப்பிடுவேன்.. தாய்நாட்டுக்கு ஒண்ணுன்னா நானே ஓடுவேன்" போன்ற டயலாக்குகள் நம்மையும் அறியாமல் சிரிக்க(சிந்திக்க) வைக்கிறது!!



                          காஷ்மீர் ஆபரேஷன் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இசை பிரவின் மணி- பரவாயில்லை.. பாதிரியாராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கடி புல்லரிக்க வைப்பது கொஞ்சம் ஓவர்.. ஐந்து நிமிடமே வந்தாலும் கமாண்டோ காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. பிரம்மானந்தம் நாகர்ஜுனாவிடம் எப்போது அடி வாங்கப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்த என் போன்ற ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம்.

                             பயணம் -- ஏர் பஸ் அல்ல டூர் பஸ்!!

55/ 100 

         


Sunday, February 13, 2011

காதலர் தினம்!!!



 காதலர் தினம்!!!

பிப்ரவரி பதினாலு மட்டுமல்ல பெண்ணே!!
வருடத்தில் ஒவ்வொரு நாளும்தான்!!


நீ சிந்திய புன்னகையை என் இதயத்தில் சேமிக்கிறேன்!!
நீ அனுப்பிய ஸ்மைலிகளை என் வன்தகட்டில் சேமிக்கிறேன்!!

னக்கு பிடிக்காதவைகளை புறந்தள்ளி வைக்கிறேன்!!
என்னை புறக்கணிக்கும் போது மட்டும் கொஞ்சம் வருந்துகிறேன்!!

முள்கிரீடம் அணிவித்தாய் ஆனந்தப்பட்டேன்!!
வலிகளும் சுகமாவது, காதலில் மட்டும் தானே ?


Wednesday, February 9, 2011

அன்புள்ள நண்பர்களுக்கு,


                                           இன்றோடு இந்த 'கோவை ஆவி ' எனும் வலைப் பூவை ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் முடிந்து இரண்டாமாண்டில் காலடி(?!!) எடுத்து வைக்கிறோம். அது மட்டுமல்ல, இது நான் தமிழில் எழுதும் ஐம்பதாவது பதிவு. இந்த நாளில் நான் ஐம்பது பதிவுகள் எழுதுவதற்கு காரணமாக இருந்த சிலருக்கு நன்றி சொல்ல விழைகிறேன்.


                                          ஆறாவது அகவையிலிருந்து எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தி, எழுதும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்து, என் கிறுக்கல்களை எல்லாம் காவியங்களாய் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட என் தாய்க்கு முதல் நன்றி. தமிழ் எழுத்துக்களின் மேல் ஒரு மோகத்தை உண்டாக்கிய அப்பாவின் அழகிய கையெழுத்துக்கு ஒரு நன்றி. நான் எழுதும் பஎல்லாவற்றிற்கும் மேலாக எழுதும் திறனை எனக்களித்த இறைவனுக்கு ஒரு நன்றி.


நண்பேண்டா விருது !!


                                             என் எல்லா பதிவுகளையும் உடனுக்குடன் படித்து விமர்சனங்களைத் தரும் ஜானு செந்தில் மற்றும் செந்தில் பொன்னையா, சரவணா, ஜெயராஜ், புவனா கோவிந்த், எல்.கே, எஸ்.கே, அகிலா ராகவன், பனித்துளி சங்கர் மற்றும்  Philosophy பிரபாகரன்


                                     இவர்கள் மட்டுமல்லாமல் மனோஜ்,தமிழ்ப் பையன், எம் அப்துல் காதர், Richie, ம.பாண்டியராஜன், gomathy komu, ♠புதுவை சிவா♠, Jemini, vivek life, London Temples, Aadhiraa Mullai, kousalya, Ganesan P, peace train, kannan, பிரஷா, புஷ்பா, Sujeeth Chandramouli, soundar, கௌதமன், Muniyandi Perumal, Siva Sankari, hariharan manickam, reena joseph, Ravikumaar மற்றும் manoj theetharappan.


                                      இவர்கள் அனைவருக்கும் "கோவை ஆவி" வலைப்பூவின் சார்பாக என் நன்றிகளையும், மேலே உள்ள நண்பேண்டா விருதினையும் வழங்க ஆசைப்படுகிறேன். மேலும் உங்கள் ஆதரவினை என்றென்றைக்குமாய் வேண்டுகிறேன்!!

Tuesday, February 8, 2011

உலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2011

                       இந்த வருட நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடந்தது. அவற்றிலிருந்து சில துளிகள்..




Saturday, February 5, 2011

ராஜா , இது நியாயமா ?




அமைதியாக நடந்த பட்டிமன்றங்களை
ஆரவாரம் மிக்கதாக மாற்றியது நியாயமா ?
தொடர்மழையென பேசும் பேச்சாளர்களின் மத்தியில்
அழகிய சாரல் மழையாய் நீங்கள் பேசுவது நியாயமா ?

சாலமன் பாப்பையாவின் படைகளுக்கு தலைமை தாங்கி
எதிர் பேச்சாளர்களை திண்டாடச் செய்வது நியாயமா ?
கருத்துச் செழுமை மட்டும் நிறைந்திருந்த பட்டிமன்றங்களில்
மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது நியாயமா ?

செந்தமிழாய் பேசிய அரங்கங்களில்
'சென்னை' த் தமிழையும் உலவ விட்டது நியாயமா ?
 வள்ளுவனையும் பாரதியையும் துணைக்கழைக்காமல்
அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையே பேசுவது நியாயமா ?

இவை மட்டுமா ? ஆசையாய் பழக வந்த
சூப்பர் ஸ்டாருக்கு "நோ " சொன்னது நியாயமா?
இதுபோல் நகைச்சுவையாய் பேசி எங்கள்
உள்ளங்களை கொள்ளை கொண்டது நியாயமா ?

சொல்லுங்க ராஜா, இது நியாயமா ?



                                                                                  .
(பி. கு) சிகாகோவில் ஒரு பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள வந்த ராஜாவிடம் கொடுக்கப்பட்ட புகார் கவிதை இது.. இந்தக் கவிதையைப் படித்து விட்டு "நியாயமா என்ற கேள்விக்கு என் பதில்.. சின்னதாய் ஒரு புன்னகை" என்று எழுதி கையொப்பமிட்டுத் தந்தார்..

Thursday, February 3, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் - ஒரு முன்னோட்டம்



                      

                  உலகக் கோப்பை கிரிக்கெட் துவங்குவதற்கு இன்னும் பதினாறு நாட்களே உள்ள நிலையில் அதை பற்றிய ஒரு முன்னோட்டம் இதோ இங்கே....இந்த உலகக் கோப்பைக்கு குரூப் A மற்றும் குருப் B என்ற இரு வேறு குழுக்களில் மொத்த அணிகளும் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.



                           இந்தியா குரூப் B யில் உள்ளது. இந்த குழுவில் நெதர்லாந்து, அயர்லாந்து  மற்றும் பங்களாதேஷை தவிர மற்ற எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. குரூப் A வில் கனடா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகள் உள்ளதால் இக்குழுவில் உள்ள அணிகள் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

                                               

                              வெற்றி வாய்ப்பு: மூன்று முறை தொடர்ந்து (ஹாட்ரிக்) வெற்றி பெற்று உலகக் கோப்பையை தக்க வைத்திருக்கும் ஆஸ்திரேலியா இம்முறை சற்று பலம் குறைந்து காணப்படுகிறது. ஏ குழுவில் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் பலம் மிகுந்த அணிகளாக உள்ளது. பி குழுவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் பலம் மிகுந்ததாக தெரிந்தாலும் தோனியின் தலைமையில் இளஞ்சிங்கங்களை உள்ளடக்கிய இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 



                              சொந்த மண்ணில் விளையாடுவதாலும், கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதாலும் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதற்கு மகுடம் வைத்தாற்போல் கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் "சச்சின்" இந்திய அணியில் உள்ளது மிகப்பெரிய பலம். (அவர் இன்றும் மற்ற அணிகளுக்கு டெர்ரர் ஆகவே உள்ளார் என்பது நமக்கெல்லாம் சந்தோஷமான செய்தி). இந்த வெற்றிக் கூட்டணி உலகக் கோப்பையை நமக்கு இரண்டாவது முறையாக மீட்டுத் தரப்போவதை பொறுத்திருந்து காண்போம்!!


Wednesday, February 2, 2011

அசுரப் புயலின் அட்டகாசம்!!



அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் மிகுந்த பனிப்பொழிவு இருந்தது. அவற்றிலிருந்து சில படங்கள்





How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...