ஹலோ, கிச்சனுக்குள்ள நீங்க வரப்படாது.. ஹால்ல வெயிட் பண்ணுங்க. நான் செஞ்சு கொண்டு வர்றத சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. புரிஞ்சுதா? ( மைன்ட் வாய்ஸ்: அகில உலக சூப்பர் செப் ஆவியின் கிச்சனுக்குள்ள நீங்க வந்தா தீய்ஞ்சு போன ஐட்டத்தை எல்லாம் நான் கரெக்ட் பண்ற விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சுடும்.. சரியா வரலேன்னு பேக் சைடில ஹோட்டல்ல ஆர்டர் பண்ண விஷயம் மட்டும் தெரிஞ்சா பயபுள்ளைக சும்மாவா இருப்பாங்க)
கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி
தேவையான பொருட்கள்:
கேஸ் அடுப்பு அல்லது இண்டக்க்ஷன் ஸ்டவ்.
கேஸ் அடுப்பு எனில் கேஸ் சிலிண்டர் ( ஆதார் நம்பர் வாங்கி கேஸ் கம்பெனிக்காரன் கிட்ட கொடுத்தாச்சா நீங்க?)
லைட்டர் (அ) கரண்ட் (அடுப்பை பற்ற வைக்க, இண்டக்க்ஷன் பயனாளர்கள் ஈ.பி பில் கட்டியாச்சான்னு சரிபார்த்துக்கோங்க )
சிறிய பாத்திரம்- 2- (இரண்டு கிளாஸ் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு.. சின்னதா இருந்தா பால் பொங்கும்போது வழியும். பெருசா இருந்தா பாத்திரம் சூடாக பிடிக்கிற நேரம் அதிகமாகும். மைன்ட் வாய்ஸ் - எரிபொருள் சிக்கனம்..ம்ம்! )
குழம்பித் தூள்* - 1 டீ-ஸ்பூன் ( காப்பி வைக்கவும் டீ ஸ்பூன் தான் பயன்படுத்த வேண்டுமென்பதை நினைவில் "கொல்க" )
சர்க்கரை - 1 1/2 டீ-ஸ்பூன் ( வாழ்க்கை இனிப்பா இருக்கணும்னா ரெண்டு ஸ்பூன் போட்டுக்கோங்க.)
பால் - அரை டம்ளர் ( காப்பி லைட்டா வேணும்னா முக்கால் கிளாசும், திக்கா வேணும்னா கால் கிளாசும் எடுத்துக்கோங்க)
நல்ல தண்ணி - அரை டம்ளர் ( கின்லே, அக்வா பினா போன்ற மினரல் வாட்டர்களை தவிர்ப்பது நலம்.. மைன்ட் வாய்ஸ் - சமூக சிந்தனையாம்!! )
கிடுக்கி - பாத்திரத்தை பிடித்து/கொள்ள/ இறக்க உதவும் சாதனம். இதை உங்க ஊர்ல எப்படி சொல்வாங்களோ அப்படி அண்டரஸ்டேண்டு பண்ணிக்கோங்க
வடிகட்டி - 1
வெள்ளி டவரா - 1
* குழம்பித் தூள் - இன்ஸ்டன்ட் குழம்பித் தூள் என்று கேட்டு வாங்கவும். ப்ரு அல்லது நெஸ்கபே போன்ற பெயர்களை உபயோகித்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் விளம்பரம் ஆகிவிடும் அபாயம் உள்ளதால் அவ்வாறு செய்யவில்லை. ( மைன்ட் வாய்ஸ் - அதான் இப்ப சொல்லிட்டியே!)
செய்முறை விளக்கம்:
1. அடுப்பை பற்ற வைக்கவும்.
2. பாத்திரத்தை நன்கு கழுவி அதன் அடியை துடைத்துவிட்டு அடுப்பின்மேல் வைக்கவும்
3. நல்ல தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
4. அதே சமயம் பாலை வேறொரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்ததும் அரை டம்ளர் பாலைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5. தண்ணீர் கொதித்தவும் குழம்பித்தூளை போடவும்.
6. ஓரிரு நொடிகள் கழித்து கிடுக்கியின் உதவியுடன் பாத்திரத்தை இறக்கவும்.
7. பால் இருக்கும் டம்ளரின் மேல் வடிகட்டியை வைத்து அடுப்பிலிருந்து எடுத்த குழம்பி நீரை ஊற்றவும்.
8. வடிகட்டியை எடுத்து விட்டு சர்க்கரையை சேர்க்கவும். (கலக்க வேண்டாம்.. சூடு ஆறி விடும்)
9. வெள்ளி டவராவில் வைத்து இரண்டு ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப அன்பையும் சேர்த்து பரிமாறவும்.
சூடான "ஆவி" பறக்கும் குழம்பி தயார். ( காப்பி வைக்க ஒரு விளக்கம் தேவையான்னு நீங்க கேக்குறது புரியிது. ஆனா வெறும் சுடுதண்ணி மட்டும் வைக்க தெரிஞ்ச பேச்சிலர் ஆசாமிகளுக்கு இது பயன்படுமே.. ஹிஹிஹி )
பி.கு: இது கும்பகோணம் டிகிரி பில்டர் காப்பிக்கு போட்டி அல்ல..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆவி 's கிச்சனில் அடுத்து வருவது - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~