"பாதர், என்னை மன்னிச்சுடுங்க!"
"மை சன், கடவுளுக்கு முன்னாடி மண்டியிட்டு எவனொருவன் தன் பாவங்களைச் சொல்லி அழுதாலும் அவன் கடவுளால் மன்னிக்கப்படுகிறான். " சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாதரின் செல் போன் சிணுங்கியது. பாதர் செல்போனை அணைத்துவிட்டு தனக்கு எதிரில் இருந்த சிறுவனைப் பார்த்தார்.
"இல்ல பாதர், நான் செஞ்ச காரியத்துக்கு, மன்னிப்பு கிடைக்குமான்னு தெரியல. "
"ஒ மை சன், கவலைப்படாம என்ன நடந்ததுன்னு சொல்லுப்பா. இந்த சின்ன வயசுல நீ என்ன தவறு செய்திருக்கப் போறே, தைரியமா சொல்லு" மீண்டும் செல்போன் சிணுங்க அதை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு அவன் சொல்வதை கேட்க ஆயத்தமானார்.
"பாதர், இன்னைக்கு காலைல நான் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருக்கும் போது ரோட்டுல யாரோ ஒரு பெரிய கல்ல போட்டிருந்ததாலே, எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு அதை கடந்து போய்க்கிட்டு இருந்தாங்க."
"சரி"
"அப்போ அந்த வழியா போன நான் இந்த கல் இருக்கறத பாத்துட்டு என் சைக்கிளை ஓரமாக நிறுத்திட்டு அந்த கல்லை ரோட்டின் ஓரத்திற்கு அகற்றிவிடலாம்னு அந்த கல்லுக்குப் பக்கத்தில் போனேன். அந்தக் கல் மிகவும் வலிமையாக இருந்த காரணத்தால் மிகுந்த சிரமப்பட்டு அந்த கல்லை தூக்கி ரோட்டின் ஓரமாய் எறிந்து விட்டேன்"
"ஆஹா, இந்த சின்ன வயசுலயே இவ்வளவு நல்ல குணத்தோடு இருக்கியே. தட்ஸ் குட். நீ ஒரு நல்ல காரியம் தானே பண்ணிருக்கே. அப்புறம் எதுக்கு பாவ மன்னிப்பு"
" கல்லை அகற்றிவிட்ட மன திருப்தியுடன் சைக்கிளை எடுக்கப் போக, யாரோ முனகுவது போன்ற சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்த போது அங்கே ஒரு சிறுவன் வலியால் துடித்துக்கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்த போது அவன் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனே அருகிலிருந்த டெலிபோன் பூத்துக்கு சென்று போன் செய்து ஆம்புலன்சை வரவைத்து அவனை அதில் ஏற்றிவிட்டேன்."
"இந்த வயதில் இவ்வளவு பொறுப்போடும் பக்குவத்தோடும் நடந்து கொண்டிருக்கிறாய், நீ எதற்காக மன்னிப்பு கேட்க வந்தாய் " மிகுந்த மரியாதையுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டார். அப்போதுதான் பாதர் அவனை முற்றிலுமாய் கவனித்தார். நெற்றியில் திருநீறும், கழுத்தில் உத்திராட்சமும் இருந்தது.
"நான் அகற்றிய கல்லின் கீழே ஒரு பெரிய பள்ளம் இருந்தது. அதில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த கல்லை யாரோ அங்கே போட்டிருக்கிறார்கள். ஆனால் அது தெரியாமல் நான் அதை அகற்றிவிட பின்னால் வந்த சிறுவன் அதில் தவறி விழுந்து விட்டான்"
"இதில் உன் குற்றம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதில் எந்த காரியத்தையும் நீ வேண்டுமென்று செய்யவில்லை. ஆதலால் நீ வருத்தப் பட வேண்டிய அவசியமே இல்லை. கவலைப் படாம வீட்டுக்கு போ "
"ரொம்ப நன்றி பாதர்" என்று கூறிவிட்டு சிறுவன் அங்கிருந்து அகன்றான்.
பாதரின் செல்போன் மீண்டும் சிணுங்க அதை உயிர்பித்த பாதர் போனில் வந்த செய்தி கேட்டு சற்று அதிர்ந்து போனார் "பாதர், காலைல ஸ்கூலுக்கு போன உங்க பையன் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடக்கறான். இதுக்கு யார் காரணம்னு இன்னும் தெரியல பாதர். அந்த வழியா கடவுள் மாதிரி வந்த ஒரு சின்னப் பையன் தான் போன் பண்ணினான்."
ஆ..டிஸ்கி: (ஆவியின் டிஸ்கி) "கடவுள் பாதி, மனிதன் பாதி" எனும் தலைப்பில் நான் முன்பு எப்போதோ எழுதியது இது..