Wednesday, March 30, 2016

அமெரிக்கக் காபி.


நண்பனின் அமெரிக்கக் காபி பதிவைப் பார்த்ததும் என் நாவின் நரம்புகள் நினைவெனும் வீணையின் கம்பிகளாய் மாறி, நாதம் எழுப்பத் துவங்கி விட்டது. அந்த இனிய இசையை உங்களுடன் பகிர்வதில் தானே இன்பம். அமெரிக்கா சென்ற புதிது. எங்காவது வெளியே சுற்றிவிட்டு வரலாம் என்று எண்ணி வெளியே புறப்பட்டோம். அது ஒரு ஜூன் மாதம், ஆதலால் ஏழரை மணிக்குக் கூட அஸ்தமிக்காத சூரியன், வலப்பக்கமாகவே செல்லும் கார்கள், மஞ்சள் விளக்கு விழுந்தவுடன் நிற்க ஆயத்தமாகும் வாகன ஓட்டிகள், பேருந்தில் ஏறுவதற்கு நிற்கும் மக்கள் வரிசை என திரும்பிய திசையெல்லாம் எனக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் அந்தக் கடைக்குள் நுழைந்தேன். 'ஆனந்த், ஒரு காபி குடிச்சுட்டு போகலாம்' என்று அமெரிக்காவில் நான்கைந்து வருடங்கள் குப்பை கொட்டிய சாரி, ஒரு சீனியர் நண்பர் கூற நானும் 'ஒகே' என்றேன். வரிசையில் கடைசியில் நின்றது தான் தவறாகப் போய்விட்டது. எனக்கு முன் நின்றவர்கள் எல்லோரும் ஆர்டர் செய்துவிட்டு சென்று விட என்னுடைய முறை வந்தது.



பில் கவுண்டரில் நின்றிருந்த வெள்ளை அமெரிக்கன் என்னிடம் "நீ என்ன சாப்பிட விரும்புகிறாய்' என்று பச்சை ஆங்கிலத்தில் கேட்க, அதை அப்படியே தவறில்லாமல் புரிந்து கொண்ட நான் 'ஒரு காபி' என்றேன். சுற்றியிருந்த அனைவரும் என்னை நோக்கி சிரிக்க ஆரம்பித்து விட்டனர். எனக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. சரியாகத் தானே புரிந்து கொண்டோம் என்று என் உள் மனது கூறியது. மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக "ஆம், நான் காபி தான் சாப்பிட விரும்புகிறேன்" என்று கூறினேன். அந்த இளைஞன் இப்போது வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான். அந்நிய தேசத்தில் என் கோப ஸ்வரூபத்தை வெளிக்காட்ட வேண்டாம் என்று எண்ணி பொங்கி வந்த கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு முகத்தை இறுக வைத்துக் கொண்டு "ஏன் சிரிக்கிறாய்?" என்றேன். அவன் என்னுள் ஊற்றெடுத்த கோபத்தை என் கண்களில் பார்த்திருக்க வேண்டும். அதனால் தான் உடனே சிரிப்பை நிறுத்திவிட்டு "மன்னிக்க வேண்டும் ஐயா, இந்தக் கடையில் காபி மட்டும் தான் கிடைக்கும். இந்த மெனுவில் உங்களுக்குப் பிடித்த காபியை கூறினால் தருகிறேன்." என்று என்னிடம் ஒரு மெனு கார்டை நீட்டினான்.

அதை நாலைந்து முறை திரும்பிப் பார்த்தேன். சுமார் நூற்றியைம்பது காபி வகையறாக்கள் இருந்தன. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மேலிட, நண்பர்களைப் பார்த்தேன். அவர்கள் தூரத்தில் பேசிக் கொண்டும் சிரித்தபடியும் அமர்ந்திருந்தார்கள். எது நன்றாக இருக்கும் என்று அங்கே கேட்கச் சென்றால் இந்த வெள்ளையனின் முன் மீண்டும் அவமானப்பட வேண்டிவரும். அதனால் நானே ஒரு காபியைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்தேன். மீண்டும் ஒரு முறை மெனு கார்டை வாசித்தேன். கொஞ்சம் சொல்ல எளிமையான ஒரு காபியை தேர்வு செய்து அவனிடம் 'எஸ்பிரஸ்ஸோ" என்றேன்.  

அப்பாடா என்றிருந்தது எனக்கு. ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்திவிட்ட உணர்வு எனக்கு. ஆனால் அவன் ஒரு விடாக்கொண்டன், மீண்டும் என்னை நோக்கி. 'எஸ்பிரஸ்ஸோ ஆர் டபுள் எஸ்பிரஸ்ஸோ?" என்றான். சரி எவ்வளவு விலையானாலும் சரி வாங்கி நம் இந்தியாவின் மானத்தை ஒருமுறை சவுத் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி காப்பாற்றியது போல இங்கே அமெரிக்காவில் நான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து "டபுள் எஸ்பிரஸ்ஸோ" என்றேன். ஒகே என்று வார்த்தையை அவனிடமிருந்து கேட்ட பின்பு தான் கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

சற்று நேரம் காத்திருந்த எனக்கு அவன் ஒரு சிறிய கிளாசைக் கொடுத்தான். 'சிறிய' என்ற வார்த்தை மிகவும் பெரியது. ஆம் சிறுகுழந்தைகள் விளையாட்டு சாமான்களில் ஒரு கிளாஸ் இருக்குமே, அந்த அளவு தான் இருந்தது. நண்பர்களை திரும்பிப் பார்த்தேன், அனைவரிடமும் பெரிய கிளாஸ் இருந்தது. கிளாஸின் உள்ளே எட்டி நோக்கினேன். ஆழத்தில் துளியூண்டு காபி (அதை காபி என்பதை விட கபி என்றே சொல்லலாம், அவ்வளவு கொஞ்சமாக) இருந்தது. எனக்கு கோபம் ப்ளஸ் ஏமாற்றம், அவனிடம் சென்று ஏன் சிறிய கிளாஸ் என்று கேட்டேன். "டபுள் எஸ்பிரஸ்ஸோ" அப்படித்தான் வரும் என்று கூறினான். சோகத்தோடு வந்து அமர்ந்து ஒரு வாய் குடித்தேன். என்னைப் பார்த்த நண்பன் கேட்டான் "ஏண்டா உன் கீழுதடு ஸ்ரீலங்காவுக்கு போகுது" என்று. என் காபியை தாராள மனதுடன் அவனிடம் நீட்டினேன். அவன் குடித்துப் பார்த்துவிட்டு ரெஸ்ட் ரூமிற்கு ஓடினான். திரும்பி வந்த அவன் 'அடேய், என்னடா வாங்கினே, வாயிலையே வைக்க முடியல" என்றான். நானோ இப்போது பெருமையுடன் "டபுள் எஸ்பிரஸ்ஸோ" என்றவாறு மீதமுள்ளதை குடித்(தூ) முடித்தேன்.


                           ***************************

Saturday, March 26, 2016

தள்ளிப் போகாதே..


அப்படி என்ன இருக்கு இந்தப் பாட்டுல. ஏ.ஆர். ரகுமான் எதை வாசிச்சாலும் அதைக் கொண்டாட ஒரு கூட்டமே இருக்கு. இந்த வருஷத்திலேயே நான் கேட்ட ஒரு சுமாரான பாட்டு இது தான். என்ன இருந்தாலும் எங்க இ******* போல வருமா? எத்தனை பாட்டு போட்டிருக்கார் தெரியுமா?


-ஒரு ஞான சூனியம் பேசிகிட்டே போச்சு இது மாதிரி. அடேய், அவரும் நல்லா தான் போட்டார், இவரும் நல்லா தான் வாசிக்கறார். மைசூர்பாவையும் பாதுஷாவையும் ஏண்டா கம்ஃபேர் பண்ணறீங்க? ரெண்டுமே நல்லா தான் இருக்கும். உனக்கு இந்தப் பாட்டோட  அருமை தெரியலேன்னா கேளு நான் சொல்றேன்.



நல்லா கண்ணை மூடி இந்தப் பாட்டோட இசையை மட்டும் கேளு. வரிகளை மறந்துவிட்டு அந்த இசையில் மட்டும் கவனம் வை. எந்த மூடில் இருந்தாலும் தலையை வருடிக் கொடுப்பது போல ஒரு இதமான ஒரு ஃபீலிங்  கிடைக்குதா?  அமைதியாய் ஐந்து நிமிடம் கேட்ட அவன் முகத்தில் சிறு மாற்றம்.

சரி ஒகே, இப்போ வரிகளுக்கு வருவோம். (மீண்டும் முதல் இருந்து பாடலைக் கேட்கிறான்)


ஏனோ வானிலை மாறுதே, 
மணித்துளி போகுதே. 
மார்பின் வேகம் கூடுதே.
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே, 

கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய்,
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன். 
இமை மூடிடு என்றேன். 
நகரும் நொடிகள்..
கசையடி போலே..
முதுகின் மேலே..
விழுவதினாலே..
வரிவரிக் கவிதை.

எழுதும் வலிகள்,
எழுதா மொழிகள், எனதே.

கடல் போல பெரிதாக நீ நின்றாய். 
சிறுவன் நான், சிறு அலை மட்டும் தான்.

பார்க்கிறேன், பார்க்கிறேன்.
எரியும் தீயில் என்னை நீ ஊற்று.
நான் வந்து நீராடும் நீரூற்று!

ஓ.. ஊரெல்லாம், கண்மூடித் தூங்கும் 
ஓசைகள் இல்லாத இரவே.. ஓ..ஒ 

நான் மட்டும் தூங்காமல் ஏங்கி 
உன் போல காய்கின்றேன், நிலவே!

கலாபம் போலாடும்,
கனவில் வாழ்கின்றேனே!

கைநீட்டி..
உன்னை..
தீண்டவே..
பார்த்தேன்..
ஏன் அதில் 
தோற்றேன்?

ஏன் முதல் முத்தம்..
தரத் தாமதம் ஆகுது? 
தாமரை வேகுது.

தள்ளிப்போகாதே.. எனையும்
தள்ளிப் போக சொல்லாதே..

(இந்த வரிகள் வரும் போது அவனும் உடன் சேர்ந்து பாட ஆரம்பித்து விட்டான். இது அவனையும் அறியாமல் நடந்தது. )

இருவர் இதழும்
மலர் எனும் முள் தானே.


தள்ளிப்போகாதே.. எனையும்
தள்ளிப் போக சொல்லாதே..
இருவர் இதழும்
மலர் எனும் முள் தானே.


தேகம் தடையில்லை, 
என நானும்..
ஒரு வார்த்தை சொல்கின்றேன்.

ஆனால் அது பொய் தான் 
என நீயும்,
அறிவாய் என்கின்றேன். 

அருகினில் வா!


தள்ளிப்போகாதே.. எனையும்
தள்ளிப் போக சொல்லாதே..
இருவர் இதழும்
மலர் எனும் முள் தானே. (தள்ளிப் போகாதே 3)

பாடலை முழுமையாக ஒருமுறை கேட்ட அவன் இப்போது "டே மாப்ளே, ரொம்ப நல்லா இருக்குடா" என்று கூறிவிட்டு சென்றான்.

பாடலை தூரத்தில் இருந்தே அரைகுறையாக கேட்டுவிட்டு கூறும் பலரின் நிலையும்  இதுதான். ஒரே ஒரு முறை முழுதாகக் கேட்டால் நிச்சயம் பிடிக்கலேன்னு சொல்ல முடியாது.


                                             *********** x ***********




ஆவி டாக்கீஸ் - ஜீரோ


இன்ட்ரோ  
                             கடவுள், சாத்தான், மனப்பிறழ்வு, என எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் சொல்லி சிறு பிள்ளைகளுக்கு பாட்டி சொல்லும் கதையை ஆடியன்ஸிற்கும் சொல்ல நினைக்கிறார் இயக்குனர். பைபிளில் சொன்ன ஆதாமும் ஏவாளும் மனிதர்களாய் உலவும் போது பாம்பு உருவத்தில் சாத்தானும் உலவுவது நியாயம் தானே என்று கேட்கிறார். ஆமென்!    


                          

கதை
                          பூமியில் கடவுளை அழிக்க எப்போதும் சாத்தான் முயன்று கொண்டே இருப்பான். அவன் கடவுள் படைத்த மனிதனின் ரூபத்தில் வந்து உலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தான் உருவாக்கிய ஓர் உலகத்தில் நடமாட வைத்துவிடும் என்று மூக்கை கால் விரல்களால் தொட முயற்சித்துக் கூறுகிறார்கள்.          
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                            அஸ்வின் முந்தைய படங்களைக் காட்டிலும் இதில் நல்ல நடிப்பு. சத்தமில்லாமல் விஜய் சேதுபதி, சிவாகார்த்திகேயன்  ஆகியோருக்கு சவால் விடுகிறார். நாயகி 'நெடுஞ்சாலை' புகழ் ஷிவதா. அம்மணி பெர்பார்மென்ஸில் பின்னுகிறார். குறிப்பாக கடைசி பதினைந்து நிமிடங்கள் அதகளப் படுத்துகிறார். இவரது நடிப்பிற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.
                         
                               அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்தர் கோடம்பாக்கத்தின் புதிய டாடி. சக்ரவர்த்தி வழக்கம் போல் சைக்கோவாக வந்து  பின் சாத்தானை எதிர்த்து போரிடுகிறார். ஓ மை சாத்தானே!                               

இசை- இயக்கம்
                             இசை 'தெகிடி' புகழ் நிவாஸ் பிரசன்னா.பாடல்கள் சூப்பர் ஹிட். பின்னணி இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான அளவில் அமைந்திருந்தது.. இயக்குனர் ஷிவ் மோஹா, பல லாஜிக் ஓட்டைகளை விட்டு இருந்தாலும் ஒரு வித்தியாசமான படம் தந்ததற்காக ஒரு ஷொட்டு.

                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                               கடைசி பத்து நிமிடங்கள். 'உயிரே உயிரென' பாடலும், 'எங்கே சென்றாய்' பாடலும் இதமான சோகம் ததும்பும் மெலடி.

                  


Aavee's Comments -  Zero also means a big hole!

ஆவி டாக்கீஸ் - தோழா


இன்ட்ரோ  
                   'இன்டச்சபில்ஸ்' என்ற பிரெஞ்சு காமெடிப் படத்தின் தழுவல் தான் இந்த தோழா. தழுவல் என்ற போதும் நம் கலாச்சாரத்துக்குத் தேவையான விஷயங்களை பார்த்து பக்குவமாக மாற்றியதில் தான் மக்களின் மனதுக்குப் பிடித்தவனாகிறான் இந்த தோழா.                


                          

கதை
                           ஒரு விபத்தில் தலையைத் தவிர மற்ற உடல் உறுப்புகள் செயலிழந்த ஒரு பணக்காரன், தன்னை கவனித்துக் கொள்ள வரும் ஒரு ஏழையின் சிரிப்பில் தோழனைக் காண்கிறான். இந்த இருவருக்குள் தோன்றும் நட்பு இருவரின் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பதே கதை.
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                         கார்த்திக்கு நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார். அவருடைய கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். மெட்ராஸ் படத்துக்கும் இதற்கும் உடல்மொழி, உச்சரிப்பு என எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும்  முன்னணி நடிகர்கள் வரிசையில் தன் பெயரையும் பதிவு செய்கிறார். நாகர்ஜுனா வீல் சேரிலிருந்து எழுந்திருக்காமலே நம்மை கதைக்குள் கட்டிப் போடுகிறார். சீனியர் அண்ட் சீசன்ட் ஆக்டிங்.
                           
                             தமன்னா இதில் வெறும் கிளாமர் பதுமையாக வந்து போகிறார். நடிப்பில் இல்லாவிட்டாலும் முகத்தில் கொஞ்சமாய்த் தெரிகிறது முதிர்ச்சி. பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆங்காங்கே கதை ஓட்டத்துக்கு பயன்பட்டிருக்கிறார்கள். பட்ஜெட்டை பார்த்தபடி காட்சிகளை அமைத்ததால் சிறப்பாய் வந்திருக்க வேண்டிய கார் சேசிங் சீன அவ்வளவாக மனதில் இடம் பிடிக்கவில்லை.
      

இசை- இயக்கம்
                             இசை கோபி சுந்தர், கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் மலையாளம் என்று இசையில் கூட கொஞ்சம் அந்நியத் தன்மை. ஆனால் உருக்கமான காட்சிகளுக்கு நல்ல ரீ-ரெக்கார்டிங். வம்சியின் அழகான இயக்கமும், பிரவீனின் நேர்த்தியான படத்தொகுப்பும் நமக்கு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. ராஜு முருகனின் ஷார்ப் அண்ட் ஸ்வீட் வசனங்கள் படம் நெடுக கைதட்டலைப் பெறுகிறது.

                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                               கிளீஷேவாக இருந்தாலும் உறவுகள் ஒன்று சேரும் இடம் ஒரு அழகான கவிதை.

                  


Aavee's Comments -  Family Entertainer!

Sunday, March 20, 2016

நட்பும் கடந்து போகுமா, நண்பா?

காதலும் கடந்து போகுமா?

ஒரு முறை பூத்த  காதல் என்றென்றைக்குமாய் நெஞ்சில் நிற்குமே, என்னுள் பூத்த காதல்கள் எல்லாமே பசுமரத்தாணி போல் 'பச்சக்' என்று இன்றும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே, அப்புறம் இந்த டைட்டிலே கொஞ்சம் உதைக்கிறதே. கடந்து போவதெல்லாம் காதலா? மங்கை கடந்து செல்லும் கணத்தில் தோன்றுமே காதல், அது எப்படி நம்மை விட்டு கடந்து போகும்?
இங்கே கடந்து சென்ற ஒரு பெண்ணைத் தான் 'காதல்' என்று உருவகம் செய்கிறாரா இயக்குனர்?

இப்படி இதைப் பற்றி இன்னும் ஆழமாக யோசித்த போது தான்  நான் இங்கு உன்னைப் பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். ஆம். உனக்கு நினைவிருக்கிறதா  என்று  எனக்கு தெரியவில்லை, ஒருமுறை பால்யத்தில் பாத்திமாவின் பின் நீ சென்ற கதையை எழுதியிருந்தாய். (சரி, சரி அது உனக்கு  நடந்தது அல்ல என்று எப்போதும் போல இப்போதும் வாதிக்கத் துவங்காதே!)  உன்  வாழ்வில் காதலே கடந்து செல்லவில்லை என்று நீ கூறிய போது சத்தியமாக  நான் உன் வார்த்தையை நம்பவில்லை. ஆனால் 'காதல் போயின் காதல்' குறும்பட ஷூட்டிங்கில் நாயகியிடம் பேசுவதற்காய் ஒரு வசனத்தை நான் உனக்கு சொல்லிக் கொடுக்க, அதைப் பொறுமையாய் கேட்டுவிட்டு 'காதலர்கள் இப்படித்தான் பேசிக் கொள்வார்களா, பாஸ்?' என்று என்னைப் பார்த்து அப்பாவியாய் ஒரு லுக் விட்டாயே, அன்று  நிஜமாய் நம்பிவிட்டேன். சரி அதற்கு மேல் பகிர்ந்து தொலைதூரத்திலும்  உன்னை நெளிய  வைக்க நான் விரும்பவில்லை.

அடடே, உனக்கு கடிதம் எழுத  ஆரம்பித்த சுவாரஸ்யத்தில் கடிதத்தின் சம்பிரதாய வார்த்தைகளை எல்லாம் மறந்து விட்டேனே. பிறகு இந்த தமிழ்ச் சமூகம் எப்படி இதை கடிதம் என்று ஏற்றுக் கொள்ளும்?

அன்பு நண்பா! நான் இங்கு நலம். நீ அங்கு நலமா?

என்ன தான் தொலைபேசியில் இடைஞ்சல் இல்லாமல் (இது  எப்போதும்  சிக்னல்  கிடைக்கும் மற்றவர்களுக்கு) பேசி விடலாம்  என்றாலும் கடிதத்தில் மனதை பகிர்வது போல் எந்த ஒரு ஊடகத்திலும் சாத்தியமில்லை என்பது நான் என் வாழ்வில் உணர்ந்த ஒன்று. அது கல்வி கற்க தொலைதூரம் சென்ற போது அன்னை எழுதிய கடிதமாகட்டும், கல்லூரி வாழ்க்கைக்குப் பின் என் கல்லூரி நண்பன் எதிர்பாரா நேரத்தில் அனுப்பிய கடிதமாக இருக்கட்டும், நேரில் சந்திக்க முடியாத நாட்களில் ஒற்றர், ஒற்றிகள் (?!!) மூலமாக காதலி அனுப்பிய கடிதங்கள் ஆகட்டும் அனைத்துமே இன்றும் படித்துப் பார்க்க சுகமானவையே.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். நான் வாழ்ந்து, இன்பம் அனுபவித்த அமெரிக்க தேசத்திற்கு சென்றிருக்கிறாய். மகிழ்ச்சி! அமெரிக்கா ஒரு அழகான காதலி போன்றது. தொலைவில் இருக்கும் வரை அவள் நம்முடன் பேசமாட்டாளா? அவளுடன் சிறிது காலமேனும் வாழ்ந்திட மாட்டோமா என்று எண்ணத் தோன்றும். ஆனால் அவள் காதலை ஏற்றுக் கொண்டு அருகே வந்த பிறகு தான், அவள் நம்மைப் போல அல்ல, சிந்தனை, செயல், பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் நம்மில் இருந்து முற்றிலும் மாறுபட்டவள் என்ற உண்மை தெரிய வரும். அந்த சமயத்தில் அவளை, அவள் விருப்பங்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறவர்கள் அவளோடு வாழ்க்கையில் ஐக்கியமாகி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவளோடு ஒன்ற முடியாதவர்கள் தாயகம் தேடி ஓடி வருவர். தவிர, அவளோடு வாழ விரும்பி ஆனால் வழியின்றி ஏங்கித் தவிக்கும் ஜீவன்களும் உண்டு. பார்க்கலாம், அவள் காதல் உன்னைக் கடந்து போகிறதா? இல்லையா என்று!


என்ன தான் கிரகாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தாலும் எனக்கென்னவோ 'மார்க்'கை தான் பிடித்திருக்கிறது. அவன் ஏதோ புத்தகத்தைக் கண்டுபிடிக்கப் போய் தானே நீ அதன் மூலம் எல்லாரோடும் உரையாடித் தீர்க்கிறாய்? மேடையில்லை, மைக் செட் இல்லை. ஆனாலும்
உன்னை சுற்றி ஒரு பெருங்கூட்டம். ஒரு நண்பனாய் மிகவும் பெருமையாய் இருக்கிறது. அதே சமயம் பொறாமையாகவும் இருக்கிறது. இந்த பொறாமை புகழை நோக்கியதல்ல, நட்பினைப் பங்கிடும் ஆட்கள் கூடுகிறதே என்பதால் வருவது. அது வெறும் ஒரு கணம் தான்,. குறிப்பாய் நீ ராகவனுடன் கைகோர்க்கத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஓர்நாள் மாபெரும் மேடையில் ஆளுயர மாலையைத் தாங்கி நீ நிற்கும்  போது 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் கூட்டத்தின் கடைசியில் நின்று கார்த்திக் ரோஜாவைப் பார்த்து பெருமிதம் கொள்வாரே, அவ்வாறே நானும் நிற்பேன்.. (கண்களில் ஆனந்தக் கண்ணீர்) ஹஹஹா!

நாம் இருவரும் எப்போது சந்தித்துக் கொண்டாலும் ஒரு 70 சதவிகிதம் சம்பாஷனை நான் பேசியதாகத் தான் இருந்திருக்கும். அந்த முப்பதும் நான் கேட்ட கேள்விகளுக்கு நீ சொன்ன பதில்களாய் தான் இருந்திருக்கும். அது சரி, இப்போது எண்ணிப் பார்க்கிறேன், உன்னையும் கொஞ்சம் பேச விட்டுக் கேட்டிருக்கலாம் என்று. இது எனக்கே எனக்காய் கிடைத்த ம்ம்ம்ம் வரம்.. இல்லையில்லை சாபம், ம்ம் வரமென்றே கருதுகிறேன். இப்போது எண்ணிப் பார்க்கையில் தான் இது உன்னோடு மட்டும் இல்லை என்னோடு நெருங்கிப் பழகிய எல்லா ஜீவன்களோடும் இப்படித்தான் இருந்திருக்கிறேன். இப்போது அவர்கள் சொல் கேட்க முடியாமல் ஏங்கி நிற்கிறேன். (கண்களில் சூடான கண்ணீர்) ஹஹஹா!

சரி போதும், ஹர்பஜனிடம் ஸ்ரீசாந்த் அடி வாங்கி அழுது கொண்டே நின்றபோது கைகொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன். இப்போது நான் அழுகையிலும் ஏதாவது ஒரு 'பிக்காலிப் பயல்' கைகொட்டி சிரித்துக் கொண்டிருப்பான் தானே. அப்புறம் அதைக் கண்டு பொறுக்க முடியாமல் ஷைனிங் ஸ்டார் வெகுண்டு எழுந்து ஆக்க்ஷனில் இறங்கி விட்டால் அமெரிக்கா தாங்காது. இப்போது தான் டெர்ரராக இருந்த அமெரிக்காவை ஒபாமா  சாந்தப் படுத்தி வைத்திருக்கிறார். ஹஹஹா!

அலுவலகத்தில் எதிரே வருபவர்கள் எல்லோரும் வணக்கம் சொல்லி புன்னகைத்துச் செல்வதாய் எழுதியிருந்தாய். அமெரிக்கக் கலாச்சாரத்துக்குள் உன்னை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். இங்கிருந்து கொண்டு இவன் என்ன வரவேற்பது என்று யாரேனும் எண்ணக் கூடும். அதைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அமெரிக்காவைப் பற்றி, அமெரிக்க கலாச்சாரத்தைப் பற்றி நீ இந்தியாவில் இருந்து கேள்விப் பட்டது எல்லாம் எவ்வளவு குறைவானது/ பெரும்பாலும் தவறானது என்பதை நேரடியாக உணரும் தருணம் இது. உன் எழுத்துகளில் எனக்கும் வாழ்வளித்த அந்த தேசத்தைப் பற்றி கேட்க/வாசிக்க ஆவலாய் இருக்கிறேன்.

சரி, துவங்கிய பாதையிலிருந்து எங்கோ சென்று விட்டு, இதை எதற்குச் சொன்னேன் என்று கேட்பதே என் வாடிக்கையாகி விட்டது. காதலும் கடந்து போகும் உனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினாய். வாழ்க்கையில் பனிக்கூழ் ஒருபோதும் சுவைத்திராதவனுக்கு ஐபாகோவின் அருமை எப்படித் தெரியும். இந்த உதாரணமும் வழக்கமாக நான் கூறும் அபத்தமான ஒரு உதாரணம்  தான்..ஆனாலும் உன்னை ஒரு காதல் கடந்து போகையில் இந்தக் 'காதலும் கடந்து போகும்' உனக்குப் பிடிக்கலாம். இல்லை அப்போதும் பிடிக்காமல் கூடப் போகலாம்!  காலம் மட்டுமே அறிந்த ஓர் பதில் இது. நீ சென்ற பிறகு இந்தப் பதினைந்து நாட்களில் மொத்தம் நான்கைந்து திரைப்படம் தான் பார்த்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை, பரபரப்பாக இருக்கும் மேடவாக்கமே இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. டாட்! ஹஹஹா!

புன்னகைகளுடன்,
ஆவி.                                                                                                 மார்ச்சு 20, 2016






How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...