Showing posts with label food. Show all posts
Showing posts with label food. Show all posts

Wednesday, March 30, 2016

அமெரிக்கக் காபி.


நண்பனின் அமெரிக்கக் காபி பதிவைப் பார்த்ததும் என் நாவின் நரம்புகள் நினைவெனும் வீணையின் கம்பிகளாய் மாறி, நாதம் எழுப்பத் துவங்கி விட்டது. அந்த இனிய இசையை உங்களுடன் பகிர்வதில் தானே இன்பம். அமெரிக்கா சென்ற புதிது. எங்காவது வெளியே சுற்றிவிட்டு வரலாம் என்று எண்ணி வெளியே புறப்பட்டோம். அது ஒரு ஜூன் மாதம், ஆதலால் ஏழரை மணிக்குக் கூட அஸ்தமிக்காத சூரியன், வலப்பக்கமாகவே செல்லும் கார்கள், மஞ்சள் விளக்கு விழுந்தவுடன் நிற்க ஆயத்தமாகும் வாகன ஓட்டிகள், பேருந்தில் ஏறுவதற்கு நிற்கும் மக்கள் வரிசை என திரும்பிய திசையெல்லாம் எனக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் அந்தக் கடைக்குள் நுழைந்தேன். 'ஆனந்த், ஒரு காபி குடிச்சுட்டு போகலாம்' என்று அமெரிக்காவில் நான்கைந்து வருடங்கள் குப்பை கொட்டிய சாரி, ஒரு சீனியர் நண்பர் கூற நானும் 'ஒகே' என்றேன். வரிசையில் கடைசியில் நின்றது தான் தவறாகப் போய்விட்டது. எனக்கு முன் நின்றவர்கள் எல்லோரும் ஆர்டர் செய்துவிட்டு சென்று விட என்னுடைய முறை வந்தது.



பில் கவுண்டரில் நின்றிருந்த வெள்ளை அமெரிக்கன் என்னிடம் "நீ என்ன சாப்பிட விரும்புகிறாய்' என்று பச்சை ஆங்கிலத்தில் கேட்க, அதை அப்படியே தவறில்லாமல் புரிந்து கொண்ட நான் 'ஒரு காபி' என்றேன். சுற்றியிருந்த அனைவரும் என்னை நோக்கி சிரிக்க ஆரம்பித்து விட்டனர். எனக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது. சரியாகத் தானே புரிந்து கொண்டோம் என்று என் உள் மனது கூறியது. மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக "ஆம், நான் காபி தான் சாப்பிட விரும்புகிறேன்" என்று கூறினேன். அந்த இளைஞன் இப்போது வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான். அந்நிய தேசத்தில் என் கோப ஸ்வரூபத்தை வெளிக்காட்ட வேண்டாம் என்று எண்ணி பொங்கி வந்த கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு முகத்தை இறுக வைத்துக் கொண்டு "ஏன் சிரிக்கிறாய்?" என்றேன். அவன் என்னுள் ஊற்றெடுத்த கோபத்தை என் கண்களில் பார்த்திருக்க வேண்டும். அதனால் தான் உடனே சிரிப்பை நிறுத்திவிட்டு "மன்னிக்க வேண்டும் ஐயா, இந்தக் கடையில் காபி மட்டும் தான் கிடைக்கும். இந்த மெனுவில் உங்களுக்குப் பிடித்த காபியை கூறினால் தருகிறேன்." என்று என்னிடம் ஒரு மெனு கார்டை நீட்டினான்.

அதை நாலைந்து முறை திரும்பிப் பார்த்தேன். சுமார் நூற்றியைம்பது காபி வகையறாக்கள் இருந்தன. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மேலிட, நண்பர்களைப் பார்த்தேன். அவர்கள் தூரத்தில் பேசிக் கொண்டும் சிரித்தபடியும் அமர்ந்திருந்தார்கள். எது நன்றாக இருக்கும் என்று அங்கே கேட்கச் சென்றால் இந்த வெள்ளையனின் முன் மீண்டும் அவமானப்பட வேண்டிவரும். அதனால் நானே ஒரு காபியைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்தேன். மீண்டும் ஒரு முறை மெனு கார்டை வாசித்தேன். கொஞ்சம் சொல்ல எளிமையான ஒரு காபியை தேர்வு செய்து அவனிடம் 'எஸ்பிரஸ்ஸோ" என்றேன்.  

அப்பாடா என்றிருந்தது எனக்கு. ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்திவிட்ட உணர்வு எனக்கு. ஆனால் அவன் ஒரு விடாக்கொண்டன், மீண்டும் என்னை நோக்கி. 'எஸ்பிரஸ்ஸோ ஆர் டபுள் எஸ்பிரஸ்ஸோ?" என்றான். சரி எவ்வளவு விலையானாலும் சரி வாங்கி நம் இந்தியாவின் மானத்தை ஒருமுறை சவுத் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி காப்பாற்றியது போல இங்கே அமெரிக்காவில் நான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து "டபுள் எஸ்பிரஸ்ஸோ" என்றேன். ஒகே என்று வார்த்தையை அவனிடமிருந்து கேட்ட பின்பு தான் கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

சற்று நேரம் காத்திருந்த எனக்கு அவன் ஒரு சிறிய கிளாசைக் கொடுத்தான். 'சிறிய' என்ற வார்த்தை மிகவும் பெரியது. ஆம் சிறுகுழந்தைகள் விளையாட்டு சாமான்களில் ஒரு கிளாஸ் இருக்குமே, அந்த அளவு தான் இருந்தது. நண்பர்களை திரும்பிப் பார்த்தேன், அனைவரிடமும் பெரிய கிளாஸ் இருந்தது. கிளாஸின் உள்ளே எட்டி நோக்கினேன். ஆழத்தில் துளியூண்டு காபி (அதை காபி என்பதை விட கபி என்றே சொல்லலாம், அவ்வளவு கொஞ்சமாக) இருந்தது. எனக்கு கோபம் ப்ளஸ் ஏமாற்றம், அவனிடம் சென்று ஏன் சிறிய கிளாஸ் என்று கேட்டேன். "டபுள் எஸ்பிரஸ்ஸோ" அப்படித்தான் வரும் என்று கூறினான். சோகத்தோடு வந்து அமர்ந்து ஒரு வாய் குடித்தேன். என்னைப் பார்த்த நண்பன் கேட்டான் "ஏண்டா உன் கீழுதடு ஸ்ரீலங்காவுக்கு போகுது" என்று. என் காபியை தாராள மனதுடன் அவனிடம் நீட்டினேன். அவன் குடித்துப் பார்த்துவிட்டு ரெஸ்ட் ரூமிற்கு ஓடினான். திரும்பி வந்த அவன் 'அடேய், என்னடா வாங்கினே, வாயிலையே வைக்க முடியல" என்றான். நானோ இப்போது பெருமையுடன் "டபுள் எஸ்பிரஸ்ஸோ" என்றவாறு மீதமுள்ளதை குடித்(தூ) முடித்தேன்.


                           ***************************

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...