அமெரிக்கா சென்ற புதிதில் பாஸ்டன் நகரத்தில் தங்குவதற்கு ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்தேன். அச்சமயம் சிங்கிள் பெட்ரூம் கிடைக்காததால் ஒரு டபுள் பெட்ரூமை வாடகைக்கு எடுத்திருந்தேன். அதன் முழு தொகையையும் செலுத்தும் அளவிற்கு அப்போது வசதி இல்லாததால் அந்த அபார்ட்மெண்ட்டை ஷேர் செய்ய ஒரு ரூம் மேட் தேவை என இணையத்தில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தேன். நான் விளம்பரம் கொடுத்து மூன்று வாரம் வரை எதுவும் ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு போன் கால். இணையத்தில் என் விளம்பரத்தை பார்த்ததாகவும் அபார்ட்மெண்டை பார்க்க விரும்புவதாகவும், பிடித்திருந்தால் ரூம் மேட் ஆக சம்மதம் எனவும் கூறியது. மறுமுனையில் ஒலித்தது ஒரு பெண் குரல் போலிருந்தது. நான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்ததால் அது மென்குரல் கொண்ட ஆணினுடையதா இல்லை பெண்ணினுடையதா என்று அனுமானிக்க முடியவில்லை. பெயரையும் நான் சரியாக கேட்காமல் விட்டுவிட்டேன். இருப்பினும் நாளை காலை வருமாறு கூறிவிட்டு போனை அணைத்துவிட்டேன்.
மறுநாள் விடுமுறை நாளாதலால் காலையிலேயே "ஐடாகோ" உருளைக்கிழங்கை கொண்டு பிரமாதமான ஒரு சாம்பார் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டு நான் அணிந்திருந்த "ஏப்ரனோடு" சென்று கதவைத் திறந்தேன். எதிரே பத்தொன்பது, இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். அமெரிக்கர்களுக்கே உரிய தங்க நிறத்தில் ஜொலித்த அவள் கூந்தல் அவள் தோள் வரை நீண்டிருந்தது. நீலக் கண்களும், பளீரென்ற பல்வரிசையும், முழுக்கை டீஷர்ட் மற்றும் ஜீன்ஸில் ஒளிந்திருந்த அழகுகளும் அவள் பேரழகி என்று பறை சாற்றியது. கதவின் தாளை முழுதும் விலக்காமல் "யெஸ்" என்றேன். "அனாந்த ராஜா" என்று எதோ ஒரு பெயரை உச்சரித்தாள். ஓரிரு நொடிகளுக்கு பின் தான் அவள் உச்சரித்தது என் பெயர் தான் என்று விளங்கியது. "எஸ், இட்ஸ் மீ" என்றேன் தாளை விலக்காமல். "ஐ, ஸ்போக் டு யு எஸ்டர்டே" என்று தன் தேன் குரலில் சொன்னபோது கொஞ்சம் சிலையாகிப் போனேன்.
ரூம் மேட் தேவை என்று சொல்லியிருந்தேன். ஆனால் ரூம் மேட்டாக வேண்டி ஒரு தேவதையே வந்து கதவை தட்டும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு அமெரிக்க தேவதை அதிகாலையில் என் வாசல் கதவை தட்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை.அவசர அவசரமாக கதவை திறந்து "ப்ளீஸ், கம் இன் " என்றேன். உள்ளே நுழைந்த அவள் ஒவ்வொரு அறையாக பார்க்க ஆரம்பித்துவிட்டாள். நேற்று அழைத்துச் சொல்லியிருந்த போதும் நான் தயாராக இல்லாததால் ஆங்காங்கே இறைந்து கிடந்த என் உடைமைகளை பொறுக்கியபடியே அவளிடம் "சாரி, ஐ டிடின் கெட் யுவர் நேம் ஓவர் தி போன்" என்றேன். "ஒ.. ஐயம் மெலிஸா" என்றபடி அவள் மெல்லிய கைகளை நீட்டினாள். வலக்கையில் வைத்திருந்த சாம்பார் கரண்டியை இடக்கைக்கு மாற்றி வலக்கையை அவளுக்கு நீட்டினேன். பஞ்சு போன்ற அவள் கரங்களை பற்றியபோது அவள் பெற்றோர் அவளுக்கு பொருத்தமான பெயரை இட்டதாகவே உணர்ந்தேன்.
அறையை நான் எப்போதும் சுத்தமாக வைத்திருப்பேன் என்பதால் எல்லா அறையையும் சுற்றிக் காண்பித்தேன். பின் அபத்தமாக ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன். "திஸ் ரூம் ஈஸ் பார் யு, ஆர் பார் சம்படி எல்ஸ்?" என்றவுடன், அவள் நிதானமாக என் கண்களைப் பார்த்து "பார் மைசெல்ப்" என்றாள். இன்னமும் ஆச்சர்யம் விலகாத நிலையில் நான் "ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங் எ மேல்" என்று உண்மையை உளறிவைத்தேன். ஹாலின் மையத்தில் நின்று கொண்டிருந்த அவள் சட்டென்று திரும்பி "ஈஸ் தேர் எ ப்ராப்ளம்?" என்றாள். "நோ, நாட் அட் ஆல். இட்ஸ் ஜஸ்ட் தட் ஐ பெல்ட் யு மைட் பீல் அன்கம்பர்டபில்". "வொய் ஷுட் ஐ பீல் அன்கம்பர்டபில்?" என்று அவள் உடனடியாக கேட்ட கேள்விக்கு நான் கொஞ்சம் தயங்கியபடியே கொடுத்த பதில் "இட்ஸ் நாட் ஸோ காமன் இன் இண்டியா" என்றேன்.
"ஒய் ஈஸ் தட்" என்றவளிடம் நான் தமிழ்நாட்டின் கலாச்சாரங்களையும், ஆண்களும் பெண்களும் ஒரே அறையில் தங்குவது என்பது அரிதாய் கூட நடக்காது என்பதையும் கூறினேன். அப்பொழுதும் அவள் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. "இஸ் தேர் சம்திங் ராங் இன் தட்" என்றவளுக்கு திருமணத்துக்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் தனியாய் தங்கும் வழக்கம் இல்லை என்று கூறினேன். அவள் அடுத்த கேள்விக் கணையை அனுப்பும் முன்னரே நான் " பிகாஸ் இன் இண்டியா ப்ரீ-மாரிடல் செக்ஸ் இஸ் நாட் அலவுட்" என்று நான் சொன்னதை ஆச்சர்யத்தோடு கேட்டுவிட்டு என்னிடம் "ஸோ, ஆர் யூ சேயிங் பீபிள் இன் இண்டியா நெவர் ஹேவ் செக்ஸ் பிபோர் மேரேஜ்?" என்றாள். கொஞ்சம் பப்பி ஷேமாக இருந்தாலும் "யெஸ், அண்ட் மோஸ்ட் ஆப் தெம் கெட் மேரீட் ஒன்லி எபவ் ட்வண்டி பைவ் ஆர் சிக்ஸ்." என்றேன். அவள் அன்று நான் சொன்னதை முழுதாக நம்பவில்லை என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.
ஆனால் இன்று நிச்சயம் அதே நிலைமை இல்லை. சென்ற பத்து பதினைந்து வருடங்களில் "வெஸ்டர்னைசேஷன்" என்ற பெயரில் கலாச்சாரத்தை இழந்து இன்று செக்ஸ் என்பது கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கூட வியாபித்திருக்கிறது என்பதே திடுக்கிட வைக்கும் உண்மையாக இருக்கிறது. இலைமறை காயாக இருந்த விஷயங்கள் பலவற்றையும் இணையத்தில் தரவிறக்கி கற்றுக் கொள்ளும் தலைமுறைக்கு கலாச்சார பாடங்கள் என்பது நகைப்புக்குரிய விஷயங்களாகிவிட்டது. சென்ற வார "இந்தியா டுடே" நாளிதழைப் படித்த என் தலைமுறைக்கு முந்தையவர்களுக்கு எல்லாம் அந்த செய்திகள் நிச்சயம் அதிர்ச்சிகரமான தகவல்களாகத்தான் இருக்க முடியும். பெரும்பாலான பள்ளி/கல்லூரி செல்லும் பதின்வயது பாலகர்கள் தம்முடன் பயிலும் மற்ற பாலினத்தவரோடு உடலுறவு வைத்திருந்ததாக கூறும் அந்த புள்ளிவிவரங்கள் நம் வயிற்றில் புளியை கரைக்கின்றன.
மேலும் டேட்டிங், லிவ்விங் டுகெதர் போன்ற மேலைநாட்டு கலாச்சாரங்களை பின்பற்றும் தலைமுறை நமக்கு அச்சமூட்டுபவையாகத்தான் இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ளது போன்ற சட்ட திட்டங்களோ, தவறுகளுக்கான தண்டனைகளோ நம் நாட்டில் இல்லை என்பதே நம் நாட்டில் ஆங்காங்கே நடக்கும் பாலின கொடுமைகளுக்கான முக்கிய காரணம். இணையத்தை பயன்படுத்த வயது வரம்பு, சிறுவர்களின் இணையப் பயன்பாட்டின் போது பெற்றோரின் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் பல இருந்த போதும் அரசாங்கமும் மக்களும் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினாலே அன்றி எதிர்கால இந்தியா ஒளிரப்போவது இல்லை..!
மேலும் டேட்டிங், லிவ்விங் டுகெதர் போன்ற மேலைநாட்டு கலாச்சாரங்களை பின்பற்றும் தலைமுறை நமக்கு அச்சமூட்டுபவையாகத்தான் இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ளது போன்ற சட்ட திட்டங்களோ, தவறுகளுக்கான தண்டனைகளோ நம் நாட்டில் இல்லை என்பதே நம் நாட்டில் ஆங்காங்கே நடக்கும் பாலின கொடுமைகளுக்கான முக்கிய காரணம். இணையத்தை பயன்படுத்த வயது வரம்பு, சிறுவர்களின் இணையப் பயன்பாட்டின் போது பெற்றோரின் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் பல இருந்த போதும் அரசாங்கமும் மக்களும் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினாலே அன்றி எதிர்கால இந்தியா ஒளிரப்போவது இல்லை..!