Thursday, October 31, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-1)


முன்குறிப்பு: நண்பர்களே,  நான் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் எழுதிய (என் கன்னி முயற்சி) ஒரு க்க்க்க்க்ரைம் தொடர். இப்போது படிக்கையில்  பல அபத்தங்கள்  என் கண்ணுக்கே புலப்படுகிறது. ஆயினும்  அதை ஒரு  பொருட்டாக்காமல் இந்த கதையை படித்து உங்கள் மேலான விமர்சனங்களால்  என்னை ஒரு நல்ல எழுத்தாளனாக்கும்  சீரிய பணியில்  நீங்களும்  ஈடுபடுவீர்களாக!! 



                             அவர் சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். அவருக்குச் சுமார் நாற்பது, நாற்பத்தியிரண்டு வயதிருக்கலாம். "தேவர் மகன்' ஸ்டைலில் மீசை. "குருதிப் புனல்" ஸ்டைலில் கட்டிங். கண்களில் கம்பீரம் அவரது காக்கி உடுப்பு  அவரது போலிஸ் உத்தியோகத்தை சுட்டிக் காட்டியது. அவர் பேட்ச் சிவஞானம் IPS என்று பறை சாற்றியது. அவருக்கு எதிரில் இந்தி நடிகர் அமீர்கானை நினைவு படுத்தும் முகத்துடன் டிடக்டிவ் ஏஜென்ட் சுந்தர் அமர்ந்திருந்தான். அவனுக்கு சற்று தள்ளி அவனது அசிஸ்டன்ட் ஆனந்த் அமர்ந்திருந்தான்.
                           
                                  சிவஞானம் பேச ஆரம்பித்தார் "மிஸ்டர் சுந்தர், இப்ப நான் சொல்லப் போற விஷயம் ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும். கடந்த ஒரு மாசத்துல நடந்த இரண்டு கொலைகளைப் பத்தி பேப்பர்ல படிச்சிருப்பீங்களே? " "ம்ம்.. சொல்லுங்க.." "நான் ஸ்ட்ரேயிட்டா  விஷயத்துக்கு  வர்றேன். " என்றபோது ஆனந்த் " அப்ப இவ்வளவு நேரம் க்ராஸா  கிராஸா  வந்துட்டு இருந்தீங்களா?" என்ற ஆனந்தைப் பார்த்து " ஆனந்த், பீ சீரியஸ்" என்று கூறிவிட்டு சுந்தர் சிவஞானத்திடம் " ப்ளீஸ் கண்டின்யு ஸார் "  ஆனந்தை முறைத்தவாறே  "அந்த ரெண்டு கொலைகளும் திட்டமிட்டு செய்யப்பட்ட கோல்ட் ப்ளட்டட்  மர்டர்ஸ்." "ப்ளான் பண்ணி பண்ணியிருக்காங்களா" என்று வடிவேலு தொனியில் கேட்ட ஆனந்தை இருவரும் முறைத்துவிட்டு "ரெண்டு பேருமே பெரிய பிஸினஸ்  மேக்னட்ஸ். இந்த ரெண்டு கொலைகளையும் கொலைகாரர்கள் அல்லது கொலைகாரன் சர்வ ஜாக்கிரதையா ஒரு சின்ன தடயத்தைக் கூட மிஸ் பண்ணாம சாமர்த்தியமா பண்ணியிருக்கான். எங்க டிபார்ட்மெண்ட் எவ்வளவோ முயன்றும் அவனைப் பிடிக்க முடியல. சோ வீ நீட் யுவர் ஹெல்ப் டு பைண்ட் ஹிம்.." என்றார்.

                                    " ஹிம் முன்னு நீங்களே முடிவு பண்ணிட்டா   எப்படி?"  என்று குறுக்கிட்ட ஆனந்த்தை சுட்டெரிக்கும் பார்வையால் அமர்த்திவிட்டு சுந்தர் அவரிடம் "கொலை செய்யப்பட்ட அழகேந்திரன், பத்ரிநாத் ரெண்டு பேரோட வீட்டையும் நான் சேர்ச் பண்ணனும்.  பர்மிஷன் வாங்கித் தாங்க. எங்க வேலையில எங்களுக்கு பூரண சுதந்திரம் இருக்கணும்.  எக்காரணம் கொண்டும் இந்த விசாரணையை  பாதியில நிறுத்த சொல்லக் கூடாது. மற்றபடி வீ வில் ட்ரை  அவர் பெஸ்ட். நீங்க போயிட்டு வாங்க." என்று கூறினான். 

                             அவர் சென்றபின் ஆனந்திடம் "அவர் சொன்னதிலிருந்து   உனக்கு என்ன தோணுது.?" "சூடா ஒரு கப் காபி சாப்பிடனும்னு தோணுது"  என்றான். "ஆனந்த் கமான், யுவர் ஹ்யூமர் இர்ரிடேட்ஸ்  சம்  டைம்ஸ்" " என்ன தோணுது.. அவர் என்னமோ வந்தாரு, எதோ மொட்டைத்தலையன்  குட்டையில விழுந்த மாதிரி ஒரு கதைய சொன்னாரு. இத பாரு சுந்தர், அந்த ரெண்டு கேஸும் தமிழ்நாடு போலீஸால  அக்கு வேறா  ஆணி    வேறா   ஆராயப்பட்டு தோல்வி கண்ட கேஸ். நாம என்ன செய்ய முடியும்?" "ஏதாவது செய்யணும் ஆனந்த். அப்பத்தான் நம்ம கோல்டன் ஈகிள் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு மக்கள் மத்தியில ஒரு நல்ல பேர் கிடைக்கும்." "ஆனந்த் இட்ஸ் எ சேலஞ்ச்  பார் மீ" "பார் அஸ் ஸுன்னு  சொல்லு" என்றவாறு இருவரும் சிரித்தனர். பின் ஆனந்த் சுந்தரிடம் "ஒக்கே சுந்தர். லெட்  அஸ்  ஸீ  டுமார்ரோ, மை வுட் பீ வில் பீ வெயிட்டிங் பார் மீ" என்று கூறிவிட்டு தன் யமஹாவில் கிளம்பினான். சுந்தர் அவனை அனுப்பிவிட்டு  உள்ளே சென்றான்.

      
தொடரும்...


Monday, October 28, 2013

ஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை (MUSIC)

                   

                   ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், ஆண்ட்ரியா நடித்து வெளிவரவிருக்கும் என்றென்றும் புன்னகை படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது.

                1.  "ஏலே, ஏலே தோஸ்த்துடா" பாடல் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து பாடும் பாடலாக வருகிறது. ஹாரிஸின் ஆஸ்தான பாடகர் கிருஷ் மற்றும் நரேஷ் ஐயரின் குரல்களில் உற்சாகம் கொப்பளிக்கும் பாடல் கேட்கும் போது கொஞ்சம்  "பார்த்த நாள் முதலே" பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

                2. மறைந்த வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளில் "கடல் நான் தான்" பாடல் சுதா ரகுநாதனின் வெண்கல குரலில் பெண்ணின் காதலை உணர்த்தும் பாடல்.. சூசன் மற்றும் பாலாஜியின் குரல்கள் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

                3.  விஜய், தனுஷ், சிம்பு , விஷால் முதல் சிவகார்த்திகேயன் வரை நடிகர்களே பாட வந்த பிறகு கொஞ்ச நாட்கள் காணாமல் போயிருந்த ஹரிஹரன் ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருக்கும் மெலடி "என்னை சாய்த்தாளே".. தாமரையின் தித்திக்கும் தமிழ் பாடலில் ஸ்ரேயா கோஷலின் உச்சரிப்பு அத்துணை அருமை.

                4. படத்தின் ஹைலைட்டான பாடல் "வான் எங்கும் நீ மின்ன மின்ன" முன்னரே வந்து மக்களின் பேராதரவை பெற்ற பாடல். ஹரிணி மற்றும் ஆலாப் ராஜு பாடியிருக்கும் டூயட் இளைஞர்களின் ரிங்டோனாய் இருக்கப் போவது உறுதி. "என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய், அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்கப் பார்க்கிறாய்" போன்ற வரிகள் அருமை.

               5.  இப்போது படங்களில் தவறாது இடம்பெறும் "டாஸ்மாக்" சோகப் பாடல் இதிலும் உண்டு. குத்துப் பாட்டுக்கும் மெலடிக்கும் சின்ன இடைவெளி விட்டு கார்த்திக், ஹரிசரண், வேல்முருகன் மற்றும் ரமேஷ் விநாயகம் குரல்களில் வரும் இந்த "என்னத்த சொல்ல"  பாடல் 'சி செண்டர்' ரசிகர்களின் ரசனைக்காக..

               6. கவிஞர் கபிலனின் வரிகளில்  திப்பு மற்றும் அபய் பாடியிருக்கும் "ஒத்தையில உலகம்" உறவின் பிரிவை வேதனையுடன் பாடும் பாடல். வழக்கமான ஹாரிஸின் வீணை மீட்டல்கள் பாடலுக்கு மெருகு சேர்க்கிறது.

                 சில பாடல்கள் முன்பே கேட்ட இசையை நினைவு படுத்தினாலும் இனிமை சேர்க்கும் பாடல்களே!! என்றென்றும் புன்னகை தரும் பாடல்களாக இல்லாவிட்டாலும் சில காலம் நம்மை முணுமுணுக்க வைக்கும்.


                 

Saturday, October 26, 2013

"தல" டா !!


                     தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வருடம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வரவிருக்கும் படம் தான் "ஆரம்பம்"!!




                       ** யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி மக்கள் மனதில் ஒட்டிக் கொண்டது. "என் ப்யுஸும் போச்சு" இளமை மெலடியாகட்டும், "ஆரம்பமே அதிருதடா" பாடலாகட்டும். "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" பாடலின் துள்ளல் இசையாகட்டும், "ஸ்டைலிஷ் தமிழச்சி" ஹிப்-ஹாப் ஆகட்டும் ஒவ்வொன்றும் அருமை.


                       ** "தல' அஜித்தின் 53 வது படம் இது.

                       ** இதற்கு முன் தீபாவளிக்கு வெளிவந்த படம் தான் "அட்டகாசம்". இந்தப் படத்தில் தான் முதன் முதலில் அல்டிமேட் ஸ்டாரை ரசிகர்கள் செல்லமாக "தல" என்று அழைக்க ஆரம்பித்தனர்.



                        ** மங்காத்தாவில் வைத்த "சால்ட் அண்ட் பெப்பர்" லுக்கை இந்தப் படத்திலும் தொடர்கிறார் "தல".. ஹாலிவுட்டின் ஜார்ஜ் க்லூனிக்கு பிறகு இந்த ஹேர்ஸ்டைல் அதிகம் பொருந்துவது நம்ம "தல" ஐக்கு தான்.



சரி விஷயத்துக்கு வருவோம்,

           
                         ** "ஒப்பனிங் கிங்" என்று பெயர் பெற்ற அஜித் அவர்களின் படங்கள் இன்றைய தேதிக்கு முதல் மூன்று தினங்களில் ஆகும் வசூல் தென்னிந்திய நடிகர்கள் எல்லோரையும் விட மிக அதிகமாகும்.



                         ** இந்த முறையும் இதவரை எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத எண்ணிக்கையில் திரையரங்குகள் ஆரம்பம் படத்திற்கு கிடைத்துள்ளது.

                       ** தமிழகமெங்கும் சுமார் ஐநூறு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சென்னையின் எல்லா முக்கிய தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது.

                        ** சென்னை மாயாஜாலில் ஒரே நாளில் 91 காட்சிகள் "ஆரம்பம்" மட்டுமே திரையிடப்படுகிறது.



                         ** கோவை ஈரோடு, திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 75 திரையரங்குகளில் 50 இல் ஆரம்பம் வெளியாகிறது. கோவையில் மட்டும் 15 அரங்குகளில் வெளியாகின்றது.

                         ** அமெரிக்காவில் தென்னிந்திய திரைப்படம் ஒன்று முதல் முறையாக 72 தியேட்டர்களில் வெளியாகிறது.



                         ** UK யில் 32 அரங்குகளிலும், மற்ற உலக நாடுகள் சேர்த்து 25 அரங்குகளிலும் வெளியாகிறது.

                         ** அஜித், ஆர்யா, ராணா (தெலுங்கு), நயன்தாரா, தாப்சி என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு களமிறங்கும் ஆரம்பத்தின் ட்ரைலர் அசத்தலாக இருந்தது.

                         ** அஜித்-விஷ்ணுவர்த்தன் கூட்டணி இணைந்த "பில்லா" மாபெரும் வெற்றி பெற்றது யாவரும் அறிந்ததே!



                       ** இந்தப் படத்திற்காக மணிக்கணக்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து உடலை "பிட்"டாக்கிய 'தல" சில துணிகர ஸ்டன்ட் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.



                       "வரலாறு" காணாத "ஆரம்பம்" காணப் போகும் இந்தப் படத்திற்கு "தல" ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தமிழ் ரசிகர்களும் ஆவலாக இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. "தல" ராக்ஸ்!!


                                                       **********

Friday, October 25, 2013

ஆவி டாக்கீஸ் -சுட்ட கதை


இன்ட்ரோ  
                             கொரிய மொழிப் படத்த பால் கூட ஊத்தாம அப்படியே பிளாக் காப்பி போட்டுட்டு பிளாக் காமெடிங்கிற பேர்ல உலவ விட்றவுங்க மத்தியில "சுட்ட கதை" ன்னு பேர் வச்சிருக்கிற இவங்க நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா எங்கிருந்தாவது சுட்டாவது படமெடுத்திருக்கலாம்னு கடைசில தோணிச்சு.. சரி விடுங்க, இந்தப் படத்துல கண்டிப்பா ட்விஸ்ட் இருக்குன்னு நான் படம் தொடங்கிய பதினைந்தாம் நிமிடத்தில் உலகசினிமா ரசிகனிடம் சொன்னேன். அதே போல் இரண்டாம் பாதி முழுக்க ட்விஸ்ட் தான்!!




கதை        
                                திருட்டுப் பசங்க நிறைஞ்ச ஒரு மலையோர கிராமத்துல ஒரு போலிஸ் ஸ்டேஷன். எல்லா நேரமும் தூங்குற இன்ஸ்பெக்டர் (நாசர்) நேர்மையாக வேலை செய்யும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ( பாலாஜி மற்றும் வெங்கடேஷ்), எப்போதும் பகையுடன் அலையும் அரச குடும்பம் ( சிவாஜி ) மற்றும் பழங்குடி இனத்தவர் ( MS பாஸ்கர், லக்ஷ்மிப்ப்ரியா ). ஆண் போல் அசத்தும் பழங்குடிப் பெண் லக்ஷ்மியை இரு தலையாய் (?!!) காதலிக்கின்றனர் கான்ஸ்டபிள் பாலாஜி மற்றும் வெங்கி. ஆனால் அவளோ தன் தந்தையை கொன்றவனை பழிவாங்க செல்கிறாள். குடி போதையில் முகம் தெரியாத ஒருவரை பாலாஜி சுட்டுவிட அதைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளே கதையின் முடிச்சு.

                                                                                                                     ஆக்க்ஷன் 
                                ஹீரோவாக புரமோஷன் பாலாஜிக்கு, நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார். நண்பராக வரும் வெங்கடேஷ் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.. இருவரும் சேர்ந்து சொதப்பும் காட்சிகள் சில நம்மை சிரிக்க வைக்கின்றன. உதாரணம் சைக்கிள் திருடனை துரத்தும் காட்சி.. கதாநாயகி லக்ஷ்மிப் பிரியா, இந்திய கிரிக்கட் அணியில் இருந்தவராமே. கௌரவம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுத்தால் நல்ல உயரம் போகலாம். ஜெயபிரகாஷ், நாசர், ms பாஸ்கர், சிவாஜி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

                              கான்ஸ்டபிள் சிங்கமாக வருபவர் வரும்போதெல்லாம் தண்ணி டேங்க் சப்தம்  கொடுப்பது நல்ல ஹ்யூமர். கதாநாயகனின் திருட்டு குணம், மற்றொருவனுக்கு காது கேட்காதது என சின்ன சின்ன விஷயங்கள் படத்தின் காமெடி ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது. இடையிடையே சாம்பசிவம் துப்பறியும் நாவல் காமெடி புதிய டெக்னிக்.



                                                                                                          இசை-இயக்கம்
                            இசை மேட்லி ப்ளுஸ் - படத்தின் லாஜிக் ஓட்டைகளை அடைக்க இசைதான் உதவுகிறது. பாடல்களுக்கு SPB மற்றும் MSV ஆகியோரை பயன்படுத்தியிருப்பது இனிமை. காட்டுக்குள் சென்று இப்படி ஓர் படம் எடுத்த இயக்குனர் சுபுவுக்கு பாராட்டுகள். அதே சமயம் கொஞ்சம் கதையுடன் சேர்த்து படம் எடுக்கும் போது மக்களும் ரசிக்க முடியும். 


                                                                         ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                            ஸ்லோவாக போய்க் கொண்டிருக்கும் படத்தை சரியான சமயத்தில் ஸ்டடி செய்யும் டிங்கு டாங்கு குத்து சாங்கு பாடல் SPB யின் குரலில் நம்மை நிமிர்ந்து உட்கார செய்கிறது. ஹீரோயினின் ATTITUDE படத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறது. பலத்த விவாதத்திற்கு இடையில் புலி உறுமும் சப்தம் கேட்க "உஷ்.. பேசிகிட்டு இருக்கோம்ல" எனும் காட்சி நல்ல நகை. சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மொக்கை இல்லை.


                  Aavee's Comments - Comedy rarely tickles us.                           

Wednesday, October 23, 2013

ஒளி காட்டும் வழி!




தீப ஒளியாம் தீபாவளி
தீபாவுக்கு மட்டும் ஏன் இல்லை முகத்தில் ஒளி?

ட்டம் போட்ட சட்டையும், நீல நிற ஜீன்ஸுமே,
வட்ட வட்ட பொட்டுடன் வண்ண சுடிதாருமே,
காரின் மீது ஏறியே கடைக்கு சென்று வாங்குவோம்.

ழுத்தாரம், கடியாரம் ஒரு வாரம்,
லோலாக்கும், மிதியடியும் மறு வாரம்,
செல்வத்தின் மிகுதியினை உலகிற்கு காட்டுவோம்.

திரைப்படத்தை கண்டிடவே சில ஆயிரம்,
ஒரு நேரம் உண்டு மகிழ சில ஆயிரம்,
ஆடம்பர வாழ்க்கைமுறை இதை பறைசாற்றுவோம்.

ருப்பதற்கு மாளிகை போல் ஒரு வீடு,
அடிக்கடிதான் மாற்றிக்கொள்ளும் செல்பேசியோடு,
மேல்தட்டின் மேன்மையை நாம் உணர்த்திடுவோம்.

சிகையதனை திருத்திடுவோம் சீரோடு,
வகைதொகையாய் சுற்றிடுவோம் ஊரோடு,
வருமானப் பெருக்கத்தின் வளர்ச்சியையும் காட்டிடுவோம்.

சாலையிலே, சந்தினிலே, மூலையிலே,
பசியோடும், ஏக்கத்தோடும், வருத்ததோடும் 
ஆங்காங்கே சந்திக்கும் ஒரு பெண் தான் நம் தீபா.

ண்ணில் பிறந்ததிவள் குற்றமில்லை,
மன்றாடி பெற்றுக்கொள்ள யாருமில்லை,
வறுமைக்கோடெனும் வெம்மையான கூரையின் கீழ் வாழும் இவளுக்கு,

லகாரம், பட்டாசு, பட்டாடை தேவையில்லை,
வேண்டுவது மூன்று வேளை உணவேயன்றி வேறு இல்லை,
பகட்டான வாழ்க்கைக்கு மத்தியில் நாம்,
இயன்றதையே மனமுவந்து கொடுத்திடலாம்.

ரெங்கும் கொண்டாடும் தீபாவளி! 
தீபாவின் முகத்தினிலே ஏற்றிடலாம் நீங்களும் ஒளி!!


                                        *******************

ரூபன் அவர்களின் தீபாவளிச் சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பும் கவிதை இது.. எப்படியிருக்குன்னு உங்க கருத்துகளை சொல்லுங்க..

Tuesday, October 22, 2013

நினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)




                      நினைத்தாலே இனிக்கும் ன்னதும் பட விமர்சனம் ன்னோ, இல்ல வாத்தியார் ஸ்பெஷல் ன்னதும் MGR பற்றிய ந்யூஸ் ன்னோ நீங்க நினைச்சீங்கன்னா நீங்க ஆவியாலஜில ரொம்ப வீக்குன்னு அர்த்தம். இது என்னோட(எங்க) வாத்தியார் பாலகணேஷ் பற்றிய நியுஸ். கோவை வந்த போது கேஜி தியேட்டர் வாசலில் ஒட்டியிருந்த "நினைத்தாலே இனிக்கும்" போஸ்டரைப் பார்த்து "ரொம்ப நல்ல படம், திரைக்கு வந்தா பார்க்கணும்" என்றார்.. அவர் சொல்லும் போது நான் இடப்பக்கம் பிஷப் அப்பாசாமியின் அழகுகளை ரசித்துக் கொண்டிருந்தது தெரியாமலிருக்க, "ஷ்யூர் சார், இப்போவே போலாமா" என்றேன். "என்ன, நினைத்தாலே இனிக்கும் ரிலீஸ் ஆயிடுச்சா" என்று அதிர்ந்தவரை "ரிலீஸ் ஆனதும் போலாம்னு சொன்னேன் சார்" என்றேன். சென்னை செல்லும் போது என் பிரியமான ராஜாராணியையும், "நினைத்தாலே இனிக்கும்" படத்தையும் அவருடன் பார்த்து விடுவது என முடிவு செய்தேன்.

                     சென்னை சென்ற ஆவி, முதல் நாளிலிருந்தே வாத்தியாரின் தோள்களில் தொற்றிக் கொண்டது. "ஆவி பாவியெல்லாம் வந்தப்புறம் என்னை மறந்துட்டீங்களே" என சுற்றமும் நட்பும் புலம்பும் அளவிற்கு இறுகப் பற்றிக் கொண்டது. ( டேய், நீ என்ன ஐஸ் வச்சாலும் சகோதர பாசத்துக்கு அப்புறம் தான் இந்த குரு-சிஷ்யா ரிலேஷன்ஷிப்பெல்லாம் ன்னு வாத்தியார் சொல்றது மைல்டா கேட்டுது). காலையிலேயே கிளம்பி ஒரு வேலையாக குருவுடன் "காபி டே"  சென்றேன். அவர்கள் எழுதியிருந்த தொனி (தோணி இல்ல!!)  தென் தமிழ்நாட்டில் "வாடே, போடே " என்பது போல் "காபி டே"  என்று படிக்கத் தோன்றியது.  "இரயிலில் வந்த மயிலை" பற்றி கூறிக் கொண்டே உள்நுழைந்த போது அங்கே ஒரு IT குயில் அமர்ந்திருந்தது. காதில் ஹெட்போனும், கழுத்தில் ஐடி கார்டும் அணிந்தவாறே அந்த ஸ்லீவ்லெஸ் சிட்டு தன் ஐ-போனை  நோண்டிக் கொண்டிருந்தது.

                        சபை நாகரீகம் கருதி எங்கள் சுருதியை குறைத்துக் கொண்டோம். எனக்கு ஒரு 'கேப்பச்சினோவும்', தலைவருக்கு ஒரு 'காபி லாட்டே' வும் ஆர்டர் செய்துவிட்டு எங்கள் பேச்சில் மும்மரமானோம். சற்று நேரத்தில் ஒரு ஆள் பல்சரில் வந்ததையோ, அந்தக் குயிலின் முன் அமர்ந்ததையோ, அவனுடைய கோடுபோட்ட மஞ்சள் ஷர்ட்டின் மீது ஒரு ஈ உட்கார்ந்திருந்ததையோ சத்தியமாய் நாங்கள் கவனிக்கவே இல்லை. அது அவளுடைய டீமில் கீழ் பணிபுரிபவன் போல் இருந்தது. அதுவரை குத்து விளக்காய் அமர்ந்திருந்தவள் சட்டென்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு எடிசனின் மொழியில் உரையாட ஆரம்பித்தாள். அவள் செய்கைகள் பலதும் "சற்று முன் சைலண்டாக இருந்த சுனாமி இவள்தானா?" என நினைக்க வைத்தது. எதிரில் அமர்ந்திருந்தவன் "சோனியாவைக் கண்ட மம்மு" போல் கப்சிப் என்றிருந்தான். இவ்வளவு நேரம் நடந்த களேபாரம் எதையும் கண்டுகொள்ளாமல் தன் லாட்டேவை சுவைத்த தலைவரைப் பார்த்த போது திருவள்ளுவரின் எதோ ஒரு குறள் தான் நினைவுக்கு வந்தது..

                           சுமார் ஒரு மணி நேரம் கதைத்து விட்டு நாங்கள் வெளியேறிய போது கொஞ்சமாய் பசித்தது. அருகிலிருந்த ஒரு பெரியவரிடம் "இங்க நல்ல ஹோட்டல் எங்கிருக்கு" என்றதற்கு அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு பின் பேசாமல் நடக்க ஆரம்பித்தார். ஆவிக்கு நேர்ந்த அசிங்கத்தை அசட்டை செய்துவிட்டு அருகிலிருந்த ஒரு டீக்கடையில் கேட்டு "ஹோட்டல் அஞ்சுகம் " சென்றோம். முட்டையுடன் பிரியாணி அந்த ரேட்டுக்கு நல்ல டெஸ்டுடன் இருந்தது. இடையிடையே அது ஒருவேளை காக்கா பிரியாணியாயிருக்குமோ என்ற சந்தேகம் உள்ளே தோன்றினாலும் காக்காவும் நான்-வெஜ் தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.  மதியம் ரங்கநாதன் தெருவில் கொஞ்சம் சுற்றிவிட்டு, ஸ்கூல் பையன் உட்லண்ட்ஸ் தியேட்டரில் "நினைத்தாலே இனிக்கும்" படத்திற்கு டிக்கட் எடுத்து வைக்க சரியான நேரத்துக்கு இருவரும் ஆஜரானோம்.. தன் கல்லூரிக்கால நினைவுகளை ஒவ்வொன்றாக கூர்ந்தார் தலைவர்.

                          "நினைத்தாலே இனிக்கும்" கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என அலை திரண்டு இரண்டு மூன்று வரிசைகள் மட்டும் நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்ததும் என் போன்ற "கமல் பக்தர்கள்" உற்சாகக் குரலெடுத்து கூவுவதும் பாடலுக்கு எழுந்து ஆடுவதுமாய் அமர்க்களப்பட்டது.. இடையிடையே டிஜிட்டல் என்ற பெயரில் பல நல்ல காட்சிகளை கபளீகரம் செய்தும், மெல்லிசையை மெர்சலாக்கியும் மொத்தப் படத்தையும் "நினைத்தாலே வெறுக்கும்"படி செய்திருந்தார்கள். படம் முடிந்ததும் மின்னல் பள்ளிச் சிறுவன் போல் கதை பேசிக் கொண்டே மெதுவாய் நடக்க, ஸ்கூல் பையனோ மின்னல் வேகத்தில் பறந்துபோனார். அதற்கான காரணம் அப்போது விளங்கவில்லை. ஆனால் ஓரிரு நாட்களில் விளங்கியது. மறுநாள் சில பிரபலங்களை சந்திக்க வேண்டியிருந்ததால் அன்று பாலகணேஷ் சார் வீட்டிலேயே தங்கிவிட்டேன்.

-தொடரும்..


                         

Monday, October 21, 2013

காதலும் சினிமாவும்!!





காத்திருந்தேன் கவலையின்றி மணிக்கணக்காய் 

காதலியின் முகம் காண, 
சினிமாவை நான் காண,


சந்தோஷப் பூக்கள் பூத்திடுமே என் முகத்தில்,

பஸ்ஸிலிருந்து இறங்கிடும் அவளை காண்கையில்,
டிக்கட் கவுண்டர் ஒப்பன் செய்திடும் அக்கணத்தில்,


மின்சாரம் சுர்ரென்று பரவியதே உடலெங்கும்,

வண்டியில் என் பின்னால் அவள் அமர்ந்து என் தோளில் கைவைத்தபோது,
முதல் காட்சி கண்டிடவே முந்தி நானும் இருக்கையில் அமர்ந்திட்ட போது,


உள்ளே ஓர் இனம்புரியா அமிலமுமே சுரந்ததுவே,

ஆளில்லா சாலையிலே அப்பகலில் சும்பனமும் நிகழ்ந்திட்ட போது,
ஆதர்ச நாயகனும் வெள்ளித் திரையினிலே தோன்றித் தெரிந்த  போது,


இல்லையென தெரிந்தபோதும் நெஞ்சினிலே ஒரு சலனம் நொடிப்பொழுதில்,

முத்தத்தில் காமத்தை கண்டு கோபித்துக் கொள்வாளோ?
வில்லனின் வஞ்சக வலையில் வல்லவனும் வீழ்ந்திடுவானோ?


சுகம் தேடும் மூளையின் நரம்புகளின் பணிச் சிறப்பின் காரணமாய்,

மாதம் ஒன்றிரண்டு எனக்கிட்டிய அன்பின் அடையாளங்கள் அளவற்றதாயின..
மாதம் ஒன்றிரண்டு எனக்கிட்டிய அன்பின் அடையாளங்கள் அளவற்றதாயின..


ஆசை எனும் மோகத்தை அடுத்த கட்டம் கொண்டு செல்ல,

இச்சமூகங்கள் வகுத்திட்ட ஒரு வழியாம் திருமணம் பேச,
கல்வி கற்ற மாணவன் போல் ஒரு படத்தை இயக்க எண்ணி,


காகிதத்தில் அச்சடித்த செல்வம் தான் எல்லாவற்றுள்ளும் தலை என உணர,

தேடித்தேடி அவமானங்கள் கூட, பொருள் தேடி,
தேடித்தேடி அவமானங்கள் கூட, பொருள் தேடி,


விலையில்லா அறிவுரைகள் வீட்டுக்கே வந்திடவே,

காதல் திருமணத்தின் கேவலங்கள் பலர்  கூற,
சினிமாவில் ஜெயித்தவர்கள் சில பேர் தான் என ஓத,


மண்ணில் இன்னும் மனிதத்தின் மிச்சங்கள் இருப்பதனால்,

நல்ல உள்ளங்களும், நண்பர்களும் உதவிட நிறைவேறியது ஒருவழியாய்
நல்ல உள்ளங்களும், நண்பர்களும் உதவிட நிறைவேறியது ஒருவழியாய்


'முப்பதும்', 'அறுபதும்' பழமொழிகள் அல்ல, 
வாழ்வியலின் அங்கங்களென உணர்ந்திட்ட போது,

திரையில் வரும் காட்சிபோல உறவில் விரிசல் விழ,
மனதில் வைத்த காதலுக்கு, மக்கள் அபிமானமின்றி கலையங்கே மரித்து விழ,


சிந்திக்கத் தோன்றுதடி "சித்திரமே",

உனைத் தவிர்த்து நானும் சமூகத்தின் வழி போயிருக்கலாமோ?
உனைத் தவிர்த்து நானும் சமூகத்தின் வழி போயிருக்கலாமோ?



Sunday, October 20, 2013

ஆவி டாக்கீஸ் - நுகம்


இன்ட்ரோ  
                         பார்க்க போனதென்னவோ "எஸ்கேப் ப்ளான்". அத்தோட திரும்பியிருக்கலாம். விதி எங்க விட்டுது. வளரும் இயக்குனர்களை நம்மளே ஊக்குவிக்கலேன்னா அவங்க எங்க போய் ஊக்கு விப்பாங்க? என்ற நல்ல எண்ணத்துல இதுக்கும் டிக்கட் வாங்கி போய் உட்கார்ந்தா, வழக்கம் போல முகேஷ் வந்தாரு. என்னடா எப்பப்பாரும் இதையே போட்டு (முகேஷை??)  சாவடிக்கிறாங்கன்னு பீல் பண்ணின அஞ்சு நிமிஷத்துல முகேஷ் படத்தையே இன்னும் ஒரு பத்து நிமிஷம் சேர்த்து பார்த்திருக்கலாம்ன்னு தோணிச்சு. ரெண்டு மூணு காட்சிகள் கூட ஓடியிருக்காது உலக சினிமா ரசிகன் தெறிச்சு வீட்டுக்கு ஓடிட்டார். நம்ம தான் எவ்வளவோ கொடூரப் படத்தையும் கடைசி வரை பாக்குற ஆளாச்சே. பார்த்து தொலைச்சேன்.! சரி கதைக்கு வருவோம்.





கதை         
                             இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு  வெடிக்க வைத்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டி ஒரு அண்டை நாடு இரண்டு தமிழர்களை சுவிட்சர்லாந்திலிருந்து சென்னைக்கு அனுப்புகிறது. (கிட்டத்தட்ட சீனா கவர்மெண்ட் டோங் லீ ய அனுப்பின மாதிரி). வந்த இடத்துல வீடியோ கேம்ஸ் விளையாடுவதும், இனியாவை லவ்வுவதுமாக ஹீரோவும், அப்பாவி பெண்ணை வசைபடுத்தி மோசம் செய்வதும், மெகா சைஸ் ஓட்டைகளுடன் ப்ளான் போடுவதுமாக வில்லன் என இருவரும் பிசியாக இருக்கின்றனர். கடைசியில் தமிழ் கலாச்சாரப்படி ஹீரோ திருந்தி வில்லனை தண்டிக்கிறார்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              படத்தின் ஹீரோ ரிஷ்கதிர் STR ன் சாயலில் இருந்தாலும் நடனம், முகபாவங்கள் இன்னும் கற்றுத் தேற வேண்டும். வில்லனாக வரும் ஜெயபாலா  கொஞ்சம் பரவாயில்லை. கதையில் உள்ள தொய்வினால் இவர் நடிப்பு பளிச்சிடவில்லை.இனியா இனிக்கவில்லை. "இனியா"வது நடிப்பை நிறுத்தினால் நலம்.கஞ்சாகருப்பு கிரேன்  மனோகரின் காமெடிகள் கடுப்பை கிளப்புகின்றன. மற்ற கதாபாத்திரங்களும் வீணடிக்கப்பட்டே இருக்கிறது..



இசை-இயக்கம் 
                                 ஜெபியின் இயக்கத்தில் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்  இருக்கின்றன.ஒரு சில காட்சியமைப்பு நன்றாக இருக்கிறது. காதல் காட்சிகளில் கிரியேட்டிவிட்டி  மிகக் குறைவு. கோபிநாத்தின் இசையில் இரண்டு பாடல்கள் மெல்லிய தாலாட்டு. வேகமாக கொண்டு செல்லவேண்டிய  திரைப்படத்தில் தேவையற்ற காட்சிகளால் படம் பார்ப்பவருக்கு சோர்வை கொடுக்கிறது. பின் பாதியில்  மக்களின் சுயநலத்தை விளக்கும் காட்சிகள் மட்டுமே சிறப்பு.

                                  தீபாவளி படங்கள் வரவிருக்கும் நிலையில் இதுபோன்ற டம்மி பீஸு கள்  தீபாவளி படங்களுக்கு மாஸ் ஓபனிங் கொடுக்க தயாராக இருந்தாலும் மக்கள், மேல் சொன்ன படத்த தவிர்ப்பது .

                                 
                                  Aavee's Comments - NO COMMENTS..


Saturday, October 19, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (செல்வம் இல்லாதவனின் காதல்) -12




                   பஸ் கிராயூரை அடைந்ததும் நான் இறங்கி கொஞ்சம் தயங்கியபடியே அவள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகே இருந்த ஒரு பஞ்சாயத்து டிவி வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன். நான் அங்கிருந்து அவள் வீட்டின் வாயிலை நோக்கியபடியே அவள் முன்னால் தென்பட வேண்டுமென கடவுளை பிரார்த்தித்தேன். அன்றும் கடவுள் என் பக்கமே இருந்தார். நான் நினைத்த இரண்டாவது நிமிடம் அந்த வீட்டினின்றும் அவள் வெளியே வந்தாள். ஆனால் முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது. அவளைக் கண்டதும் ஓடிச்சென்று பேச எண்ணிய போதும், அவள் தவறாக எண்ணிக் கொள்வாளோ என்று நினைத்து அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னால் சென்று மறைய முற்பட்டேன்.. ஆனால் அவள் என்னைப் பார்த்துவிட்டாள் என்பதும் என்னை நோக்கி வருகிறாள் என்பதையும் உணர்ந்து முன்னால் வந்தேன். 
                    
                   அவள் அவசரமாக ஓடி வந்து என்னிடம் "ஆனந்த், நல்லவேளை நீங்க வந்தீங்க.. கொஞ்சம் என்கூட வாங்க" என்றபடி அவள் வீடு நோக்கி சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து சென்ற நான் வீட்டின் வாயிலில் நின்றேன். "உள்ள வாங்க" என்றாள். நான் தயங்கியபடி நிற்க அவள் என் கரம் பற்றி உள்ளே அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தாள். அப்போதுதான் கவனித்தேன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் எங்களுடன் படிக்கும் சிவா என்கிற சிவசங்கரி படுத்திருந்தாள். "சிவாவுக்கு ஈவ்னிங் வந்ததிலிருந்தே வயித்து வலி. யார்கிட்ட ஹெல்ப் கேக்கறதுன்னு தவிச்சுட்டு இருந்தேன். வெளியே வந்ததும் உங்களைப் பார்த்தேன். அவளை மோகனூர் வரை கூட்டிட்டு போகணும்." தன் கைப்பையை எடுத்தபடி பேசிய ரமாவிடம் ஒன்றும் பேசாமல் சிவாவின் அருகில் சென்றேன்.அதற்குள் ரமாவும்  வந்துவிட இருவரும் அவளைக் கைத்தாங்கலாய் பிடித்து மெதுவாய் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்து வந்தோம். அந்த ஊரில் ஆட்டோவோ, டாக்சியோ இல்லாத காரணத்தால் பஸ்ஸிலோ, ட்ராக்டரிலோ தான் மோகனூர் செல்ல வேண்டும்.

                   சில மணித்துளிகள் காத்திருப்புக்குப் பின் பேருந்து ஒன்று அங்கு வர, எங்கள் இருவரின் உதவியுடன் பஸ்ஸில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள் சிவா. அருகில் துணைக்கு ரமாவும் அமர நான் அருகிலிருந்த கம்பியில் சாய்ந்தபடி நின்றிருந்தேன். மோகனூர் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு நான் வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் வெளியே வந்த ரமா என்னிடம் மருந்து சீட்டு ஒன்றைக் கொடுத்து வாங்கி வரும்படி சொன்னாள். மாதக் கடைசி என்பதால் என் கையில் அவ்வளவாக பணம் இல்லை. நான் நிற்பதை பார்த்து தன கைப்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து என் கையில் திணித்தாள் . அதை வாங்கும்போது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. மருந்துகளை வாங்கி வந்ததும் "ஆனந்த், லேட் ஆயிடுச்சு..இப்பவே பசிக்குது. இனி வீட்டுக்கு போய் சமைக்கிறது நடக்காத காரியம். பக்கத்துல கடையில ஏதாவது பரோட்டா வாங்கி வர முடியுமா.. மூணு பேருக்கும் வாங்கி வந்துடுங்க. நாம வீட்டுக்கு போய் சாப்பிடலாம்." என்றவாறே மீண்டும் பணத்தை எடுக்க தன் கைப்பையை திறக்க, நான் "மருந்து வாங்கினது போக பாக்கி இருக்கு.. அது போதும்" என்று சொல்லிவிட்டு கடைக்கு சென்றேன்.

                     இந்த இடத்தில் அவளிடம் பணம் வாங்காமல் நான் செலவு செய்திருக்க வேண்டுமென தோன்றியது. மனதில் அது ஒரு சஞ்சலமாகவே இருந்தது. காசு இல்லாதவனுக்கு காதல் தேவையா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றியது. பரோட்டாவை வாங்கிக் கொண்டு அவர்கள் இருவருடன் பஸ் ஏறினேன். பஸ் புறப்பட சிறிது நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு நடத்துனர் இறங்கிச் சென்றார். காலியாக இருந்த அந்த வண்டியின் கடைசி இருக்கையில் சிவா படுத்துக் கொள்ள அவள் தலையை தன் மடியில் வைத்தபடி ரமா அமர, ரமாவுக்கு அருகில் நான் அமர்ந்தேன். "ஆனந்த், கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம கடவுள வேண்டிகிட்டு இருந்தேன். வெளிய வந்து பார்த்தா நீங்க நிக்கறீங்க. ஆமா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க அங்கே" என்று கேட்டதும் ஒரு நிமிடம் தடுமாறி பின் சுதாரித்து "உனக்கு ஏதோ உதவி தேவைப்படுதுன்னு கடவுள் தான் இந்த தேவதூதனை அனுப்பி வைத்தார்" என்று சொல்லவும் சிரித்துவிட்டு "எனிவே, ரொம்ப தேங்க்ஸ் ஆனந்த். உங்களை கடைக்கு எல்லாம் போகச் சொல்லி ரொம்ப கஷ்டப் படுத்தீட்டனா?" "ஏய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அதுசரி டாக்டர் என்ன சொன்னாங்க?"

                    "ஜஸ்ட், கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் தானாம். வேற ஒண்ணும் இல்லையாம்" என்றவளிடம் "எனக்கு ஒரு டவுட்டு." "என்ன" "இல்ல இன்னைக்கு நீ செய்த பாயாசத்தை அவ குடிச்சிருப்பாளோன்னு தான்" என்றதும் ஓரிரு நொடிகள் யோசித்து பின் அர்த்தம் புரிந்ததும் என் தோள்களில் செல்லமாய் ஒரு குத்து விட்டாள். நடத்துனர் ஏறி டிக்கட் கொடுக்க பஸ் புறப்பட்டது. "ஆனந்த், நம்ப விஷயத்த கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரியாம பார்த்துக்கணும். சரியா".. "நம்ப விஷயமா, என்னது அது?" என்று கேட்கவும் ரமா என்னை முறைக்க "ஒ..நம்ப லவ் மேட்டர் சொல்றியா" என நான் உரக்க கேட்கவும் "நான் எதுவும் கேட்கல" என்றாள் சிவா கண்களை மூடிக் கொண்டே. மூவரும் ஒருசேர சிரிக்க பஸ் கிராயூரை அடைந்தது. அவர்கள் வீட்டில் மூவரும் உண்டுவிட்டு பின் அவர்களிடமிருந்து விடைபெற்று இரவு பத்து மணிக்கு மேல் பஸ்  எதுவும் இல்லாததால்  வண்டிகேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இரண்டரை கிலோமீட்டர் தூரத்தையும் ரமாவைப் பற்றிய நினைவுகளோடு என்னால் எளிதாக கடக்க முடிந்தது.

                        சந்தோஷ எண்ணங்கள் அலைமோத நான் காம்ப்ளெக்சுக்கு வந்து சேர்ந்தேன். படுக்கையில் கிடந்தவுடன் அன்றைய நிகழ்வுகளை மனம் அசை போட்டது. ரமா தன் காதல் சொன்ன கணம் தேனாய் என் எண்ணங்களில் தித்தித்தது. மாலையில் மருத்துவரிடம் சென்ற போது அவள் பணம் கொடுத்ததை நினைத்தபோது மனதில் மீண்டும் ஒரு சஞ்சலம். பெற்றோரின் காசில் காதலிக்கு வாங்கிக் கொடுக்கும் மல்லிகைப் பூ மணக்குமா? அது நியாயமாகவும் இருக்காது என்று என் மனம் எனக்கு எதிராக வாதாடியது.. ஒரு முடிவுக்கு வரும்முன் உறங்கிப் போனேன்.


தொடரும்..



Friday, October 18, 2013

ஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம் (MUSIC)

                                     

பெயர் சர்ச்சைக்கு பின் "நவீனத்தின்" துணை கொண்டு களமிறங்கியிருக்கும் காமெடி என்டர்டெயினர் இந்த சரஸ்வதி சபதம். ஜெய், VTV கணேஷ், நிவேதா தாமஸ் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை ப்ரேம் குமார்.

1. "காத்திருந்தாய் அன்பே" பாடல் முன்பே வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்றது. "சின்மயி" யின் சொக்க வைக்கும் குரலில் மெல்லிய டூயட். இடையில் நிவாஸ் மற்றும் அபயின் குரல்கள் பாடலுக்கு மெருகேற்றுகிறது. "பூக்களை திறக்குது காற்று, புலன்களை திறக்குது காதல்"  போன்ற  வைரமுத்துவின் எழுத்துகள் ஆங்காங்கே மின்னுவது தெரிகிறது.

2.  "சாட்டர்டே பீவர்" பாடல் விஜய் பிரகாஷ், சயனோர பிலிப்பின் குரலில் டிஸ்கோ பாடலாய் வலம் வருகிறது.  "மதன் கார்க்கியின் ட்ரெண்டியான  வார்த்தைகள் தற்போதைய இளைஞர்களின் அளவுக்கதிகமான  "பார்ட்டி" கலாச்சாரத்தை பட்டியலிடுகிறது.

3. 'கானா' பாலா எழுதி, பாடியிருக்கும்  "வாழ்க்கை ஒரு கோட்டை" என்ற தத்துவப் பாடல் வாழ்க்கை எந்த சூழலிலும் வாழலாம், வாழ்வதற்கு முயற்சி மட்டும் தான் தேவை என்று அறிவுரைக்கும் பாடல். " உழைச்சா தாண்டா நீ அம்பானி. இல்லேனா அம்போ நீ" போன்ற வரிகள் ரசிக்கும்படி உள்ளது.

4. வைரமுத்து எழுதிய "நெஞ்சாங்குழி ஏங்குதடி"  பாடல் கார்த்திக்கின் கவர்ந்திழுக்கும் குரலிலும், மெல்லிய பின்னணி இசையிலும் மென் சோகத்துடன் நம்மை தாலாட்டி உறங்க வைக்கும். பூஜாவின் கணீர் குரல் பாடலுக்கு மெருகை கூட்டுகிறது.

5.  "நெஞ்சாங்குழி ஏங்குதடி"  பாடல் இரண்டாம் முறையாய் ஒலிக்கும் போது கார்த்திக்கின் குரலில் மட்டும் ஒலிக்கிறது. இரண்டில் எது படத்தில் இடம்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

                       சரஸ்வதி சபதம் என்றதும் நம் கண் முன் தோன்றும்  "கல்வியா, செல்வமா, வீரமா"  பாடலை மறந்துவிட்டு இந்த டிஜிட்டல் சபதத்தை கேட்டால் நமக்கு நிச்சயம் பிடிக்கும்.


Wednesday, October 16, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (மனசுக்குள் மத்தாப்பு (தொடர்ச்சி) ) -11




                       "ம்ம்.. பிடிச்சிருக்கு.. ஆனா.." என்ற அவளின் முகத்தையே உற்று நோக்கிய என்னிடம் " ஆனா, அதுக்காக காலேஜ் கட் அடிச்சுட்டு ஊர் சுத்த கூப்பிடக் கூடாது" " இதுவரைக்கும் அப்படி ஒரு ஐடியா இல்லை, நீ சொன்னதுக்கப்புறம் தான் தோணுது." " ம்ம்.. (என்று சிணுங்கியபடி) என்னை முழுசா சொல்ல விடுங்க.. மறந்திடுவேன்." என்று கெஞ்சிய  அவளின் சிறுபிள்ளைத்தனத்தை ரசித்தேன். "அப்புறம், இப்போதைக்கு இத யார்கிட்டவும் சொல்ல வேணாம், சங்கீதாவுக்கு கூட தெரிய வேணாம், நீங்களும் பாஸ்கர் கிட்ட இப்ப சொல்லாதீங்க. அப்புறமா சொல்லிக்கலாம்." "எனக்கே, இன்னைக்கு தான் தெரிஞ்சிருக்கு, அவங்களுக்கு அப்புறம் தெரிஞ்சா ஒண்ணும் பிரச்சனையில்ல. அவ்வளவுதானா, வேற ஏதும் இருக்கா?" "ம்ம்.. இப்போ அவ்வளவுதான். சரி லேட்டாச்சு, நான் கிளம்பட்டுமா?" என்றவளிடம் "உடனே போகணுமா. கொஞ்சம் பேசிட்டு போலாமே."

                          நான் சொல்வதற்காய் காத்திருந்தவள் போல் " சரி, சொல்லுங்க." " உன் கை பிடிச்சிக்கலாமா" "ம்ஹூம்" என்றபடி தன் கைகளை பின்னுக்கு இழுத்தவள் என் முகம் மாறியதைக் கண்டு "யாராவது பார்த்தா தப்பா நினைச்சுக்குவாங்க" என்றபடி கையை முன்னுக்கு கொண்டு வந்தாள். அவள் கைகளை எடுத்து என் கைகளில் வைத்துக் கொண்டு "நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?" என்றதும்  "எவ்ளோ" கண்களை சிமிட்டியபடி அவள் கேட்டது அழகாய் இருந்தது. அவளுடைய மற்றொரு கையை என் இடக் கையால் பிடித்து அகல விரித்து "இவ்ளோ" என்றேன். "ஓஹோ, இவ்வளவு தானா" என்று செல்லமாய் கோபிப்பது போல் முகத்தை திருப்பினாள். "இல்ல.. ரொம்ப நிறைய" என்றதும் சிரித்துவிட்டு "சரி, நான் போகட்டுமா" என்றாள். "ம்ம்" என்றதும் ஒரு மான்குட்டியை போல் துள்ளி ஓடினாள்.

                      கதவருகில் சென்றவள் நின்று என்னைப் பார்த்து "நானும் இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்று கூறினாள். "எவ்ளோன்னு நான் கேட்க மாட்டேன்" "ஏன்" "எனக்கே தெரியும்" அவள் மெலிதாய் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர முயல "ரமா" என்று உரக்க விளித்தேன். "ம்" என்று திரும்பி பார்த்தாள். "நான் வேணும்னா வண்டிகேட்ல சைக்கிள் வாடகைக்கு எடுத்து உன்னை கிராயூர்ல விடட்டுமா" என்றேன். "ம்ம்.. அதுசரி, அதுக்குள்ளயேவா.. அதெல்லாம் வேணாம்பா.. ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க. வண்டிகேட்ல எனக்காக பிரெண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..நான் போகட்டுமா".. "சரி" என்றேன் அரை மனதாய்..

                        அவள் சென்றதும் மெதுவாய் என் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு உள்ளத்தில் இனம் புரியா இன்பம் குடிகொள்ள ஏக குஷியோடு கல்லூரியை விட்டு வெளியேற, வழியில் ஓடிவந்து என்னோடு நடக்க ஆரம்பித்தான் அன்பு.. "என்ன சார் ஒரே ஹேப்பியா இருக்கார் போல" அவனைப் பார்த்ததும் நடந்த எல்லாவற்றையும் சொல்ல "சூப்பர்டா" என்று என் மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டான். வரும் வழியில் வண்டிகேட்டில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் பாஸ்கர் உட்கார்ந்திருந்தான். இவன் இங்கே எதற்கு உட்கார்ந்திருக்கிறான் என்று எண்ணியபடியே அன்புவுடன் கவுண்டர் காம்ப்ளெக்ஸை அடைந்தோம். 

                       "இந்த சந்தோசத்தை கொண்டாட வேலூர் போறோம். நல்ல ஹோட்டல்ல சாப்பிடறோம், நைட்டு வர்றோம்" என்ற அன்புவிடம் "இல்லடா, அவளைப் பார்க்கணும் போல இருக்கு. நான் கிராயூர் போறேன்." "நான் துணைக்கு வரட்டுமா" "இல்லடா, யார்கிட்டவும் இப்போ சொல்ல வேணாம்னு சொன்னா. எனக்கு உன்னைப் பார்த்ததும் எல்லாமே சொல்லனும்னு தோணிச்சு.. அதான் சொல்லிட்டேன்.. தெரிஞ்சா வருத்தப் படுவா" "சார் இப்போவே மேடத்துக்கு ரொம்ப பயப்படற மாதிரி தெரியுது" "இல்லடா" என்று நான் விளக்க ஆரம்பிப்பதற்குள் "நீ ஒன்னும் சொல்ல வேணாம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நீ போ.. இருட்டிட்டா பார்க்குறது கஷ்டம்" "ஆமாமா" என்றபடி கைக்கு கிடைத்த ஒரு டி-ஷர்ட்டை மாற்றிக் கொண்டு கிளம்பினேன். 

                     வழியில் பாஸ்கரை பார்த்து நின்றேன். இப்போது அந்த ஒர்க் ஷாப்புக்கு அருகில் நின்றிருந்த டீக்கடையில் நின்றிருந்தான். நான் பஸ்சுக்காக நின்றிருந்த நேரம் அவனைக் கவனித்தேன். அடிக்கடி ஒர்க் ஷாப்பை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தான். பஸ் வருவதைப் பார்த்த நான் ஓடிச்சென்று ஏறினேன். பஸ்ஸில் அமர்ந்து அந்த இருக்கையில் இருந்து பார்த்த பின் தான் எனக்கு தெரிந்தது. அவன் பார்த்துக் கொண்டிருந்தது ஒர்க் ஷாப்பை அல்ல, அதன் அருகில் ஒரு சிறிய சந்தில் உள்ள வீட்டையும் அதன் முன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணையும் என்று..


தொடரும்..



Saturday, October 12, 2013

ஆவி டாக்கீஸ் - ஆல் இன் ஆல் அழகுராஜா (MUSIC)

                   

"OKOK" இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி , காஜல் நடித்து வெளிவரும் இப்படத்திற்கு இசை தமன். இந்த ஆல்பமும் வழக்கமான ராஜேஷ் படங்களின் இலக்கணத்துடன் வெளிவந்திருக்கிறது.




                       "ஆல் இன் ஆல் " என்று தொடங்கும் டைட்டில் பாடலில் பெல்லிராஜ்  மற்றும் குழுவினரின் அதிரடி அதகளம் தெரிகிறது. பாஸ் என்கிற பாஸ்கரன் பாடல் போல சாயல் தோன்றினாலும் அறிமுகப் பாடலுக்கு ஏற்ற துள்ளல் இசை.

                        "என் செல்லம்" பாடல் என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்" பாடல் மெட்டில்  ஆரம்பித்து மெலடி மெட்டாய் நம் காதுகளை வருடுகிறது. ஒரு பெண்ணை வர்ணிக்கும் இந்தப் பாடல் இளைஞர்கள் விருப்பப் பாடலாகப் போவது உறுதி.

                        "உன்னை பார்த்த நேரம்" பாடல் விஜய் ஏசுதாசின் குரலில் இனிமையான டூயட். எண்பதுகளின் மெட்டில் ஓர் இசை தாலாட்டு. மற்ற எல்லாப் பாடல்களை விட இது இனி எல்லா தொலைக்காட்சிகளிலும் இடம்பிடிக்கலாம்.

                          "யம்மா, யம்மா" பாடல் கமெர்ஷியல் குத்து. சூரஜ் சந்தோஷ் மற்றும் ஸ்ரேயா கோஷலின் குரலில் தாளம் போட வைக்கும் ஐட்டம் நம்பர். இந்தப் பாடலுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு இருக்கும்.

                         ஜாவேத் அலி தன் மென்குரலில் பாடிய "ஒரே ஒரு வரம் " பாடல் "மாங்கல்யம் தந்துனானே" என்று ஆரம்பித்து தன் காதல் உணர்வை சொல்லும் பாடல். உன்னைப் பார்த்த நேரம் பாடலின் சாயல் தெளிக்கப் பட்டிருக்கிறது. காதல் ரசம் சொட்டும் பாடல் இது.

                      All in All Azhagu Raja பாடல்கள் இதற்குமுன் வெளியான ராஜேஷ் படப்பாடல்கள் அளவுக்கு வெற்றி பெறுவது சந்தேகம்


\

ஆவி டாக்கீஸ் - நய்யாண்டி, வணக்கம் சென்னை






ஆவி டாக்கீஸில் மொக்கை படங்கள் என உலகமே அறிந்து கொண்ட காரணத்தால்  நய்யாண்டி, வணக்கம் சென்னை விமர்சனங்கள் இடம்பெறாது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.


Thursday, October 10, 2013

ரயிலில் வந்த மயில்!!

சென்னை செல்லும் திட்டத்துடன் கோவையில் இன்டர்சிடி எக்ஸ்பிரஸ்ஸைப் பிடித்த சமயம், சென்னையில் பல புதிய அனுபவங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்ததே தவிர, ரயிலிலேயே ஒரு வித்தியாசமான அனுபவத்தைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் ரிசர்வ் செய்திருந்த எண்ணைக் கண்டுபிடித்து இருக்கையில் அமர்ந்து, 'விண்ட்மில்ஸ் ஆஃப் காட்' புத்தகத்தை எடுத்து மேயத் தொடங்கினேன். அப்போ என் எதிர் சீட்ல அந்தப் பெண் வந்து உட்கார்ந்தாள். சுமாராக 30 வயது மதிக்கலாம். ஜன்னலோரமாக நின்றிருந்த அவளின் பெற்றோர் அட்வைஸிக் கொண்டிருந்தனர். "பாத்துப் போம்மா... அங்க போய்ச் சேர்ந்ததும் ஃபோன் பண்ணு" போன்ற வார்த்தைகளால் அந்தப் பெண் தனியாகப் பயணிக்கப் போவதை உணர்ந்து நிமிர்ந்து அவளைக் கவனித்தேன்.

வட்ட முகம், கோலிக்குண்டு கண்கள் என லேசாய் நஸ்ரியா சாயலில் இருந்தாள். (டேய் ஆவி... நீ நஸ்ரியாவை இழுக்காம இருந்தாதான் எல்லாரும் ஆச்சரியப்படுவாங்கன்னு ஒரு குரல் அசரீரியாய் ஒலித்தது). 'எங்கேயோ பார்த்த முகம்' என்று என் மனதிற்குள் ஒரு மணி அடித்தது. அடுத்த சில நிமிடங்களில் ரயில் நகர ஆரம்பிக்க, உள்ளே திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். என் பக்கத்து இருக்கைகளும் சரி, அவள் அருகில் இருந்த இருக்கைகளும் சரி காலிதான்... கீழே குனிந்து ஸிப்பை சரியாகப் போட்டிருக்கிறேனா என்று சரிபார்த்துக் கொண்டேன். அட.. எல்லாம் கரெக்ட்... என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறாள். நானும் ஒரு புன்னகையைச் சிந்தினேன். வாத்தியாரின் நம்பரை டயல் செய்து, "சார், வண்டியை எடுத்துட்டாங்க" என்றேன். "எடுக்கறதுக்கு அதென்ன டெட் பாடியாய்யா? வண்டி கிளம்பிருச்சு, நான் கோவைய விட்டுக் கிளம்பிட்டேன்னு வேற ஏதாவது வார்த்தைல சொல்லக் கூடாதா?" என்ற அவரின் பதிலுக்கு வாய்விட்டுச் சிரித்தேன். அவள் திரும்பி என்னைப் பார்க்க... மறுபடி 'எங்கோயோ பார்த்திருக்கோமே...' என்று என்னுள் அடுத்த மணி!

ரயில் திருப்பூரை அடைந்தபோது ஐந்து வயதுச் சிறுவனுடன் ஏறிய ஒரு ஆசாமி இருக்கை எண்ணைச் சரிபார்த்து அவள் அருகில் அமர்ந்தார். 'விண்ட்மில்'லின் தீவிரம் என்னை இழுகக, சில பக்கங்கள் படித்துவிட்டு நிமிர்ந்தபோது அவள் அந்த ஆசாமியுடன் சகஜமாக பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் என் காதோரம் லேசாய்ப் புகை! அந்தச் சிறுவன் மூளை வளர்ச்சியடையாத சிறுவன் என்பது பார்த்தாலே தெரிந்தது. இவர்கள் இருவரையும் மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டிருந்தான். "ஏய்... இந்த மாதிரி செப்பல்ஸ் நான் ராஜஸ்தான்ல லாட்டா வாங்கிட்டு வந்துருவேன். உங்க கடைய விட, எங்க கடையில இன்னும் சீப் ரேட்ல விக்கறோம் தெரியுமா...?" என்று அவன் சொன்னதை வைத்து அவள் அப்பாவும், அவனும் செருப்புக் கடை ஓனர்கள் என்பது புரிந்தது.

அடுத்த ஸ்டேஷனில் இன்னும் சிலர் ஏறவும், என் அருகாமை இருக்கைகளும் எதிர் இருக்கைகளும் நிரம்பின. அவர்கள் இருவருக்கும் அருகில் ஒரு வயதான பெண்மணி வந்து அமர்ந்தார். மீண்டும் நான் புத்தகத்தில் மூழ்கி சில பக்கங்களைக் கடந்துவிட்டு நிமிர்ந்து பார்த்த பொழுது, அவள், அவன் தோளில் சாய்ந்து குறுந்தூக்கம் மேற்கொண்டிருந்தாள். இப்போது லேசாய் அல்ல... பலமாகவே புகை! ஹஹ்ஹஹ்ஹா...! 'போங்கடா நீங்களும் உங்க நெர்ர்ருக்கமும்' என்று மனதுக்குள் சபித்தபடி மீண்டும் மர்மத்தை அள்ளித் தெளித்த புத்தகத்தின் பக்கங்களில் ஆழ்ந்து போனேன்.

மூன்றாவது முறையாக புத்தகத்தை கீழே கிடத்திவிட்டு நான் நிமிர்ந்தபோது அவள் இருக்கையில் இல்லை. அவன் அருகில் அமர்ந்திருந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்தாள். "கோயமுத்தூர்ல நல்ல ஹாஸ்பிடல் இருக்கு. ............. ஹாஸ்பிடல் எனக்குத் தெரிஞ்ச இடம்தான். அங்க பையனைக் கூட்டிட்டுப் போனா நல்லா ட்ரீட்மெண்ட் கொடுப்பாங்க..." என்று சொல்லவும், அவள் சீட்டில் வந்து அமரவும் சரியாக இருந்தது. (இல்லாவிட்டால் என்ன குடிமுழுகி விடும்?) அவளிடமும் அதையே அந்த அம்மாள் சொல்ல, அவள் புன்சிரித்து, "பாக்கணும்.." என்றாள். ஓ...! இவர்கள் கணவன் மனைவி தானா? அடுத்த ஸ்டேஷனில் அவன் ஏறியதால் நான்தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேனோ அவர்களை...? என்று என் தலையில் நானே குட்டிக் கொண்டேன் - மானசீகமாய்!

பொதுவாக பயணங்களில் அருகில் வருபவர்களிடம் பேச்சுக் கொடுத்து, அசடு வழியும்/வாங்கிக் கட்டிக் கொள்ளும் ரகம் அல்ல நான் என்பதால் இதைப் பற்றி மேலே எதுவும் நினைக்காமல் மீண்டும் புத்தகத்தில் ஆழ்வதும், அவ்வப்போது நிமிர்கையில் அவர்களின் நெருக்கத்தைக் கவனிப்பதுமாக பொழுது ஓடிக் கொண்டிருந்தது - ரயிலும் கூடத்தான்! இத்தனைக்கு இடையிலும் 'எங்கே பார்த்தேன் இவளை?' என்ற கேள்விப் புழுவும் மனதில் குடைந்து கொண்டேதான் இருந்தது.

சென்னை சந்திப்பில் ரயில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நிற்பதற்கான ஆயத்தமாக மெதுவான சமயம் புத்தகத்தை மடித்து என் பேகில் வைத்துவிட்டு நான் நிமிர்ந்தேன். அவர்கள் இருவரும் கண்ணில் படவில்லை. ரயிலிலிருந்து இறங்குவதற்காக நின்ற க்யூவில் நானும் சேர்ந்து கொண்டபோது எனக்கு இரண்டு பேருக்கு முன்னே அவள் நின்றிருந்தாள். அவன்...? என்று நினைத்தபடியே நான் கீழே இறங்க, எனக்கு முன்னால் இறங்கியிருந்த அவளை இரண்டு முதிய தம்பதிகள் வரவேற்று, "பயணம்லாம் சுகமா இருந்திச்சா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து நான் முன்னேற, கம்பார்ட்மெண்ட்டின் முன் வாசல் படிகளில் தன் மகனுடன் இறங்கிக் கொண்டிருந்தான் அவன். அவள் இருக்கும் பக்கமே திரும்பாமல் விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.

ஆஹா...! அவனுக்கு அவள் சம்சாரம் என்று நான் நினைத்தது தப்பா? இது சம்சாரம் அல்ல, சமாச்சாரமா? என்னடா இது கொடுமை...! என்று மனதுக்குள் புலம்பியபடியே நான் வந்து கொண்டிருந்த சமயத்திலும் 'எங்கே பார்த்திருக்கிறோம் அவளை?' என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரிந்த பாடில்லை. "சரிதான்... விடை தெரிஞ்சுட்டா மட்டும் என்ன பண்ணிடப் போறோம்? விட்டுத் தள்ளு இந்த நினைப்பை" என்று என்னை நானே கடிந்தபடி ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன். சென்னை என்னை வரவேற்றது...! அங்கு சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் எல்லாம்...

.....இன்னும் வரும்...!

( இது என்னுடைய இருநூறாவது பதிவு.. இதுவரை எனக்கு நீங்கள் அளித்து வந்த ஊக்கமும், ஆதரவும் இனியும் தொடர வேண்டுகிறேன். வாசகர்கள்  அனைவருக்கும் என் நன்றிகள்!! )


டிஸ்கி : மேலே உள்ளது என் அனுபவம், ஆயினும் அதை உள்வாங்கி  எழுத்தில்  வடித்து உங்களுக்கு படைத்தது ஒரு பிரபல பதிவர். எழுத்து நடையை வைத்து யாரென்று கணியுங்கள் பார்க்கலாம்!!

Wednesday, October 9, 2013

ஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)



                   
                                ஆவி's  கிச்சனுக்கு ஒரு நல்ல படம் தயார் செய்து தரச் சொல்லி கேட்க நம்ம வாத்தியார் கிச்சனை விட்டு நகர முடியாதபடி திகட்ட திகட்ட ஒரு படத்தை தயார் செய்து கொடுத்து திக்கு முக்காட செய்துவிட்டார். டேங்க்ஸ் வாத்தியாரே!!
                                   
 சிக்கன் குலோப் ஜாமூன் 



தேவையான பொருட்கள்:
                              
குலோப் ஜாமூன் மிக்ஸ் -  1 பாக்கெட் ( MTR சிறப்பாக இருக்கும், ஆனால் அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது.)

பாத்திரங்கள்  - 2 ( மாவு பிசைவதற்கும், ஜீரா தயாரிப்பதற்கும்)

வாணலி  - 1

பால்                 - அரை கப்  (காய்ச்ச வேண்டாம்)

வெண்ணை  - 1/4  டீ-ஸ்பூன் மட்டும் 

சிக்கன்            - 100 கிராம்  ( பொடிப் பொடி துண்டுகளாய் வெட்டி வைத்துக் கொள்ளவும்.)

சர்க்கரை - 2 கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப

பட்டர் ஷீட் - 1

எலுமிச்சை - 1

ஏலக்காய் - 2



செய்முறை விளக்கம்: 
  1. குலோப் ஜாமூன் மிக்ஸ் பாக்கெட்டை பிரித்து பாத்திரத்தில் கொட்டி அரை கப் பாலை ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். 
  2. சிக்கன் துண்டுகளை குக்கரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும் (விசில் வேண்டாம் )
  3. அதற்குள் சர்க்கரைப் பாகு தயாரித்து விட்டு வந்தால் நேரம் சரியாக இருக்கும். (கீழே பார்க்கவும் )
  4.  ஊற வைத்த மாவை பந்து போல் (பட்டர் ஷீட் மேல் ) உருட்டவும். பட்டர் ஷீட் தேவைக்கு அதிகமான ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.
  5. பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். ( ரொம்பவும் சிறியதாக இருந்தால் இனிப்பு அதிகம் உறிஞ்சி விடும், ரொம்பவும் பெரியதாக செய்தால் உள்ளே வேகாமலும் வெளியே கருகிவிடும் அபாயமும் உள்ளதால் மீடியம் சைசில் பிடிக்கவும்)
  6. வேக வைத்த சிக்கன் துண்டுகளை உள்ளே வைத்து மீண்டும் உருண்டை பிடிக்கவும்.
  7. வாணலி (அ ) வடசட்டியில் எண்ணெய் ஊற்றவும். சற்று சூடான பின் ஒரு துளி மாவைக் கிள்ளிப் போட்டுப் பார்த்து சூட்டைக் கணிக்கவும்.
  8. சூடானதை உறுதி செய்த பின் உருண்டைகளை நான்கு அல்லது ஐந்து செட்களாக போடலாம். 
  9. உருண்டைகள் பொன்னிறமாக மாறும் போது எடுத்து எண்ணையை வடிகட்டி பின் மிதமான சூட்டில் கொதிக்கும் ஜீராவில் போடவும்.
  10. எல்லா உருண்டைகளும் தயாரான பின் அடுப்பை அணைத்து உருண்டைகளை சிறிது சூடு ஆற விடவும். 
  11. ஒரு மணி நேரம் சர்க்கரைப் பாகில் ஊறிய பின் வேறொரு கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்..
  12. சுவையான சிக்கன் குலாப் ஜாமூனை பரிமாறவும்..


சர்க்கரை பாகு (ஜீரா) தயாரிக்க:

  1. ஒரு அகண்ட பாத்திரத்தில் 2 கப் நீருக்கு  2 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். 
  2. மணம் சேர்க்க பொடி செய்யப்பட்ட ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
  3. சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள பாகு கெட்டியாகாமல் இருக்கும்.
  4. மிதமான சூட்டில் இதை கொதிக்க வைத்தபடியே குலாப் ஜாமூன் ரெடி பண்ணப் போகலாம். (கம்பி பதம் தேவையில்லை )
( பி.கு) : சிக்கன் சேர்த்திருப்பதால் காலையில் செய்த பதார்த்தத்தை மாலைக்குள் முடித்து விடுவது நல்லது.

                                                   **************


Wednesday, October 2, 2013

ஆவி டாக்கீஸ் - இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா


இன்ட்ரோ  
                          ஒரே ஒரு பாடல் ஒரு ரசிகனை திரையரங்குக்குள் இழுக்குமா என்று சந்தேகப்படுபவர்கள் இந்தப் படத்தின்  முதல் காட்சிக்கு சேர்ந்த கூட்டம் கட்டியம் கூறும். விவேகமாக  புதன்கிழமையே வெளியிட்டு  காந்தி ஜெயந்தி விடுமுறையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட அறிவிற்கு ஒரு சல்யுட். சரி கதைக்கு வருவோம்.


கதை         
                            அலுவலகம், காதலி என இருபுறமும் பிரஷர் அதிகரிக்க குடி ஒன்றே தீர்வு என்று முடிவெடுத்து போதையில் ஒரு விபத்தில் மாட்டிக் கொள்ளும் பாலா மற்றும், எதிர்த்த வீட்டுப் பெண் குமுதா ஹீல்ஸ் செருப்பாய் பாவித்த போதும், அவரது தந்தை அடியாட்கள் வைத்து அடித்த போதும் களங்கப்படாத தன் காதலுக்காக துடிக்கும் சுமார் மூஞ்சி குமார் ஆகியோர் எப்படி காதலில் வென்று குடியையும் விடுகிறார்கள் என்பதே கதை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              படத்தின் இயக்குனர் உலகத்துக்கு எதோ செய்தி சொல்ல வருகிறார் என்று இன்டர்வெல் போடும்போது புரிந்தது. ஆனால் அவர் சொன்ன அதே விஷயத்தை படம் போடுவதற்கு முன் முகேஷ் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொல்லி விடுவதால் இவர் இரண்டரை நேரம் கழித்து சொல்லும் மெசேஜ் குமுதாவை மட்டுமே ஹேப்பியாக வைக்க உதவுகிறது. கடைசி அரை மணி நேரம் தவிர மீண்டும் யாயா பார்ட் டூ பார்ப்பது போன்ற உணர்வு. (சீட்டின் முன்னும் பின்னும் நகர்ந்து எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது.) சென்னைத் தமிழ் என்ற பெயரில் ரொம்ப கலீஜாக டயலாக் பேசும் விஜய் சேதுபதி குடும்பம். அதற்கு எதிர்த்த வீட்டில் இருக்கும் ராஜா குடும்பத்தினர் சென்னைத் தமிழ் பேசாதது முரண். மங்காத்தா "அஸ்வின்" ஒக்கே.. ஆனால் ரோமென்ஸ் காட்சிகளில் இன்னும் தேர்ச்சி அவசியம்.

                         விஜய் சேதுபதி பீட்சா, சூது கவ்வும் படங்களில் காட்டிய டிக்கேஷனை, சாரி டெடிக்கேஷனை இந்தப் படத்தில் காட்டவில்லையோ என்று தோன்றியது. காமெடி என்ற பெயரில் பசுபதியின் முன் இவர் செய்யும் சேஷ்டைகள் அறுவை. கொஞ்சம் வேறு மாதிரியான ரோல்களை தேர்வு செய்யாவிடில் "மிர்ச்சி" சிவாவின் நிலைதான் இவருக்கும். சுவாதி அழகான அடங்காப்பிடாரி. தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை பாங்காய் செய்கிறார். மற்றொரு கதாநாயகி நந்திதா. இவருக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பிருந்தும் பெரிதாய் ஒன்றும் செய்ததாய் தெரியவில்லை. சொற்ப காட்சிகளில் வரும் M.S. பாஸ்கர், ராஜேந்திரன், சூரி ஆகியோர் கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.

இசை-இயக்கம்
                                இசை சித்தார்த் விபின் பாடல்கள் தவிர பின்னணி இசையில்  சுமார் மூஞ்சி குமாருக்கு கம்பெனி கொடுக்கிறார்.  இயக்கம் "ரௌத்திரம்" படம் இயக்கிய கோகுல். காமெடி படம் கொடுக்க நினைத்து பல்பு வாங்கியிருக்கிறார். இவர் இனி சீரியஸ் படங்களை இயக்குவது நலம்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 மிகவும் பிடித்த "ப்ரேயர் சாங்" படமாக்கிய விதம் சுமார் என்றாலும் இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் ஆனந்த ராசா என்று  கூறுவது போல் இருந்தது. "ஏனென்றால் இன்று உன் பிறந்த நாள்" பாடல் அருமை. நகைச்சுவை என்பது கஷ்டமான ஒன்றுதான் என்பது இதுபோன்ற படங்களை பார்க்கும்போது தெரிகிறது.

                  Aavee's Comments - Could've done better to make                        Audience laugh.




ஆவி டாக்கீஸ் - ELYSIUM (ஆங்கிலம்)




கதை   
                          நீல் ப்ளோம்கம் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தில் மேட் டேமன், ஜுடி பாஸ்டர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 2154 ஆம் வருடம் உலகில் உள்ள வசதி படைத்த மக்கள் எல்லோரும் பூமியை விட்டு சற்று தள்ளி மனிதர்களால் உருவாக்கப்பட்ட "எலிசியம்" என்னும் விண்வெளி தளத்தில் குடியிருக்கிறார்கள். பூமி மக்கள் தொகைப் பெருக்கத்தால் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடும் இடமாக இருக்கிறது. ஆனால் எலிசியத்திலோ ஆடல், பாடல் கேளிக்கைகள், நீச்சல் குளம் வசதியான வாழ்க்கை, எல்லாவற்றையும் விட எல்லா வகையான நோய், உடல் குறைகள் நீக்கும் உபகரணங்கள் இருப்பதால் இங்குள்ள மக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்.


                        எலிசியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் பூமியிலிருந்து இங்கு வருபவர்களை கொன்றும் சிறை பிடித்தும் அராஜக ஆட்சி செய்கின்றனர். பூமியில் வாழும் மனிதர்களின் உயிர்களை துச்சமாக  எண்ணுகின்றனர். அரசாங்கத்தின் அடிமையாக இருக்கும் நாயகன் மேக்ஸ் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் அலட்சிய போக்கால் உயிரை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப் படுகிறான். உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எலிசியத்துக்கு செல்ல வேண்டும். இதனால் திருட்டுத்தனமாக எலிசியதிற்கு விண்கலம் அனுப்பும் ஆட்களின் உதவியுடன் எலிசியம் செல்ல முயல்கிறான். அவனை தடுக்க எலிசியத்தின் செக்ரட்டரி அனுப்பிய அடியாள் ஒருவன் அவனைத் துரத்துகிறான். அவர்களிடம் தப்பித்து எலிசியம் சென்றானா, தன்னையும் பூமியையும் அவனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே கிளைமாக்ஸ்.


                                                                   ஆக்க்ஷன் & கிராபிக்ஸ் 
                              படத்தில் எந்தெந்த காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது எது கிராபிக்ஸ் என்று பிரித்தறிய முடியாத வண்ணம் பிரமாதமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. மேட் டேமன் ஆரம்ப காட்சிகளில் ரோபோக்களிடம் கலாய்ப்பதாகட்டும், பின்னர் உடல்நிலை மோசமாகி தளர்ந்த நடையுடன் போராடுவதாகட்டும் செம்ம ஆக்டிங். இவருக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் ஜூடி பாஸ்டர். ஆட்சியை தன்வயப்படுத்த சதித்திட்டம் தீட்டுவதும் பின் தன் தவறுக்கு உணரும் போதும் அசத்தல் பெர்பார்மென்ஸ். வயசானாலும் அந்த அழகும் ஸ்டையிலும் அப்படியே தான் இருக்கு. வில்லன் ஸ்பைடராக வேக்னர் நம்மை மிரட்டுகிறார். அதுவும் வெடிகுண்டு வெடித்து முகத்தை இழந்த இவருக்கு எலிசியத்தில் முகம் மீண்டும் வளரும் காட்சியில் மிரண்டு தான் போகிறோம்.

                             
                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 அந்த பிரம்மாண்டமான எலிசியத்தை கண்ணில் காட்டி பிரமிக்க வைத்த காட்சி. மேக்சுக்கும்  ஸ்பைடருக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. லுக்கேமியாவால் பாதிக்கப்பட்ட சிறுமி கதை சொல்லும் காட்சியும் அருமை. கற்பனை விண்வெளி தளத்தின் வீடுகளின் கட்டமைப்புகளும், ஹெலிகாப்டர், போன்ற சாதனங்களும்.. மனித மூளையையே ஹார்ட் டிஸ்காக பயன்படுத்திக் கொள்ளும் கிரியேட்டிவிட்டியும் ரசிக்க வைத்தன. அமெரிக்க பாட்டி எலிசியத்தில் சுடும் வடையை ஜாலியாக சுவைக்கலாம்.

                  Aavee's Comments - Awesome Graphics and Creativity.




Tuesday, October 1, 2013

'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..!

                               நேற்று ஒரு நண்பருடன் அளவளாவிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் "'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடுறது கஷ்டம். " "ஏன் பாஸ்" " அது பாலகுமாரனோட ஒரு நாவல் பேரு. நாவலில் இருந்து எடுத்த பெயரை படத்துக்கு வச்சா எப்படி ஓடும்". "பாஸ்.. இந்த லாஜிக் சரின்னா சூது கவ்வும் கூட மஹாபாரதத்தில் இருந்து தானே எடுக்கப் பட்டது. சரியா ஓடலியா?" -இது நான்.

                               

                                 படம் ஓடுவதற்கும் ஓடாததற்கும் படத்தின் பெயர் நிச்சயம் காரணமாக இருக்க முடியாது என்று நம்புபவன் நான். படத்தின் கதை, திரைக்கதை சொன்ன விதம், நல்ல பாடல்கள் இருந்த போதும் அது படத்திற்கு தேவையான இடத்தில் வந்தால் மட்டுமே படத்தின் வெற்றிக்கு அது உதவும். (உதாரணம்: ரிதம்) நல்ல இசை. நடிகர்களின் சிறப்பான நடிப்பு, இவை எல்லாவற்றையும் விட இயக்குனரின் ஆளுமைத் திறன்.வயதிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபித்த ராஜா ராணி படத்தின்  இயக்குனர் அட்லீ. (இட்லி சைஸ் இருந்துகிட்டு இந்தப் பையன் பின்னி எடுத்திருக்காப்புல.)



                                 நம்ம ஊர் பாட்டி கதைகளை வச்சே பெரும்பாலான ஹாலிவுட் படங்களை எடுத்த நம்ம மனோஜ் நைட் ஷ்யாமளன் கூட அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் தான். நாளை வெளியாகவிருக்கும்  'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் முக்கிய ஹைலைட் கொஞ்ச நாள் முன்னால வெளிவந்த "Prayer Song" தாங்க.. தன்னை விட்டுச் சென்ற காதலிக்காய் எழுதப்பட்ட அந்த பாட்டு எல்லோருடைய மனதையும் கொள்ளையடித்தது. (குறிப்பாக இளைஞர்களை)  தவிர வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம். படம் எப்படி இருக்குன்னு நாளைக்கு தெரிஞ்சிடும். இப்போ அந்த  ப்ரேயர் சாங் பார்ப்போமா??


                         ******************************************************



          

நியுஸ் ப்ரம் தி கலெக்டர்..20131001 (நஸ்ரியா ஸ்பெஷல்)

         
                              நியுஸ் ப்ரம் தி கலெக்டர் ன்னதும் கலெக்டர் சொன்ன செய்திகள்ன்னு தப்பா புரிஞ்சிக்கப் படாது. இது ஆவி அங்க இங்கேன்னு கலெக்ட் பண்ணின நியுஸ் ன்னு அர்த்தம். சரி இப்போ கலெக்ட் பண்ணின சிலத பார்ப்போமா??

                                ************************************************
                                பதினைந்து வருடங்களா ஆவியின் தீவிர வாசகனான ஆவி கார்டூனிஸ்ட் "மதன்" அவர்களை துரத்தி அடித்த நாளில் இருந்து அந்த இதழை பாய்காட் செய்ய முடிவு செய்து நெடுநாட்கள் வாங்காமலிருந்த போதும், இடையிடையே "தல" மற்றும் "நஸ்ரியா" அட்டைப்படத்தில் தோன்றும் போது மட்டும் வாங்கிக் கொண்டிருந்தார், ஓரிரு வாரங்களுக்கு முன்பு அதே போல் நஸ்ரியாவின் அட்டைப்படம் தோன்ற வாங்கிப் படித்தேன். அந்த இதழில் நஸ்ரியாவின் பேட்டி வெளியாகி இருந்தது. இன்று காலை யு-டியுபில் மேய்ந்து கொண்டிருந்த போது எதேச்சையாய் (நம்புங்கப்பா!!) கண்ணில் பட்டது இந்த வீடியோ.. நீங்களும் பார்த்து ரசியுங்கள். நஸ்ரியா பாடும் பாடலும் கேட்டு மகிழுங்கள்..



                               *************************************************

                                நஸ்ரியா  நடித்த "ராஜா  ராணி" வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அதில் நஸ்ரியாவின் துருதுரு நடிப்பை பாராட்டிய எத்தனை பேருக்கு அவர் ஒரு நல்ல பாடகர் என்பது தெரியும் (எனக்கே இன்னைக்கு காலையில பிலாசபி பிரபாகரனுடைய வலைதளத்தில் கீழே உள்ள வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியும்)



                               ************************************************

                              ராஜா ராணியை தொடர்ந்து தற்போது நஸ்ரியா தனுஷுடன் நய்யாண்டி, ஜெய்யுடன் "திருமணம் எனும் நிக்காஹ்", நடிகர் மம்மூட்டியின் மகன் நடிகர் துல்கீர் சல்மானுடன் "சலாலா மொபைல்ஸ்" என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன் நடித்த படங்களை பற்றிய இவரது பேட்டி ஏசியாநெட் தொலைக்காட்சியில் வந்தது.. மலையாளத்தில் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. (பார்த்து முடிக்கும் போது எனக்கும் ஜலதோஷம் பிடிச்சுகிச்சுன்னா பாருங்க. ஹிஹிஹி )



                                 ***********************************************

                             நய்யாண்டி படத்திலிருந்து ஒரு புதிய ஸ்டில்..




                                **********************************************

                           MAAD DAD படத்தில் வரும் (மானத்தே வெள்ளித்திங்கள்)  பாடல் உங்கள் பார்வைக்காக..



                                ************************************************

                            நேரம் படத்தில் ஒரு பாடல்.. (நீங்க படத்துல பார்த்திருக்க வாய்ப்பில்லே.. படத்தின் நீளம் கருதி வேட்டிப்புட்டாங்க.)





                               *************************************************

                            இன்னைக்கு அவ்ளோதான்.. அடுத்து வேற சில நியுஸோட வர்றேன்...






How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...