முதல் பட இயக்குனர்களின் படங்களை உதாசீனப் படுத்தும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒன்று படத்தில் ஏதாவது ஒரு பிரபல நடிகர் அல்லது நடிகை நடித்திருக்க வேண்டும். இல்லையேல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே வெளியூர் திரைப்பட விழாக்களில் வென்றிருக்க வேண்டும். அப்படியே வென்றிருந்தாலும் பெரிய பேனர் யாரவது மார்கெட்டிங் செய்ய வேண்டும். இல்லையேல் அந்த இயக்குனரின் திறமை கண்டுகொள்ளப் படாமலேயே போய்விடும்.
காக்கா முட்டை என்ற படம் வெளிச்சத்திற்கு வந்ததும் இது ஒரு காரணம். அந்தப் படம் வந்த போது நான் என் நண்பருடன் வாதித்தேன். இந்தப் படத்திற்கு நல்ல மார்கெட்டிங் அவசியமில்லை. Word of Mouth ஏ போதுமானது என்றேன். ஆனால் இன்று "குற்றம் கடிதல்" என்ற இந்திய தேசிய விருது பெற்ற படம் வெளியாகி இருக்கிறது. பல விருதுகள் வென்ற போதும் திரையரங்குகளை வெல்ல முடியவில்லை. மிகவும் சொற்ப திரையரங்குகளிலேயே வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரம் கூடுதல் அரங்கம் கிடைக்கும் வாய்ப்பும் இல்லை.
இன்னும் எத்தனை திரையரங்குகளில் காக்காமுட்டை ஓடுகிறது? இவ்வாறு நல்ல படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் அடுத்த படத்தில் படம் ஒடுவதற்காகவாவது பெரிய ஸ்டார்கள் யாரையாவது வைத்து படம் பண்ண வேண்டியிருக்கிறது. அவர்களுக்காக நல்ல கதையை பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து வெளி வருகையில் கிடைப்பது என்ன என்பது அந்த 'கபாலி'க்கே வெளிச்சம்.
தமிழ்நாட்டின் நிலைமை தான் இப்படி என்றும் கொள்ள முடியாது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் என்று சொல்லப்பட்ட கேரளாவில் கூட இப்போது த்ரிஷ்யம் பேரறியாதவர் என சொற்ப படங்களே நல்ல கதையம்சத்துடன் வந்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் மக்களா? இல்லை இதுதான் நீ பார்த்தாக வேண்டும் என்று எல்லா திரையரங்குகளிலும் குப்பைகளை கொட்டி நிரப்புபவர்களா? காரணம் யாராயினும் அழிவது சினிமா என்பது மட்டுமே நிதர்சனம்!