பெண்களின் ஆடைகள் பற்றிய சர்ச்சைகள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. சேலை கட்டுவது மட்டுமே தமிழ் கலாச்சாரமென்றிருந்த போது புதிதாய் வந்த சல்வாரும் சுடிதாரும் கூட அணிவது கலாச்சார சீர்கேடாய் அறியப்பட்டது. நைட்டியின் வரவு கூட அவ்வாறே தான். இன்று திரும்பிப் பார்த்தோமானால் நைட்டியோ சுடிதாரோ அணியாத இல்லத்தரசிகளோ, பள்ளி கல்லூரி செல்லும் பெண்களோ மிகமிகக் குறைவே. மேற்கத்திய கலாச்சாரமோ, வடக்கத்திய கலாச்சாரமோ எதுவாயினும் அது இங்கே பரவத்தான் போகிறது.. இன்னும் சில வருடங்களுக்கு பின் திரும்பிப் பார்க்கையில் லெக்கின்ஸும் நம் கலாச்சார உடையாக மாறியிருக்கவும் கூடும். வேறு ஏதாவது ஒரு உடை கூட வந்திருக்க வாய்ப்புண்டு.
அதிருக்கட்டும்! பெண்கள் ஆபாச உடை அணிகிறார்கள் என அவர்களின் அந்தரங்க பகுதிகளை புகைப்படமெடுத்து அதை வியாபாரமாக்கும் பத்திரிக்கைகள் எவ்வளவு தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளவும். ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட்டுகளும் பெர்முடாக்களும் அணிந்து கொண்டு ஆண்கள் உலவலாம் என்றால் அந்த சுதந்திரம் நிச்சயம் பெண்களுக்கும் உண்டு. தன்னுடைய உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தடுத்து அணியும் உரிமை அந்த பெண்ணுக்கு மட்டுமே உள்ளது. அந்தப் பெண்ணை இந்த உடை தான் அணிய வேண்டும், இதெல்லாம் கூடாது என்று கூற சமூகத்திற்கு நிச்சயம் அருகதை கிடையாது.
அதே சமயம் தன் உடல்வாகுக்கு ஏற்ற உடையணிந்து பழகுதல் பெண்களின் கடமையாகும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான உடை தேர்விற்கு உதவுதல் வேண்டும். மேலும் எந்தெந்த இடங்களுக்கு செல்கையில் எந்த மாதிரியான ஆடைகள் அணியலாம் என்பதிலும் நிச்சயம் உதவலாம். தன் காலத்தில் இல்லாத ஆடைகளை தம் பிள்ளைகள் அணிவது கலாச்சார சீர்கேடாய் நினைக்கும் பெற்றோர்கள் நிச்சயம் மாற வேண்டும்.அந்த உடைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டு பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். சமூகப் பொறுப்புணர்வோடு அணியும் எந்த ஆடையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அது லெக்கின்ஸாக இருந்தாலும் சரி!