பெண்ணே!
இரவுகளில் சரியாய் உறங்குவதில்லை - இது நீ என் மீது வைக்கும் குற்றச்சாட்டு!
சிந்தித்து பார்க்கிறேன் - இது எப்போது தொடங்கியதென்று?
முதன் முதலாய் பார்த்த போது
மை கொண்ட இரு விழியாலும், கவர்கின்ற புன்னகையாலும்
களங்கமற்ற என் இதயத்தை அபகரித்தாயே, அப்போதா?
கலைகளிலே முதல்வனாய் வலம் வந்த என்னை
கடைக்கண்ணில் காதல் காட்டி
கடைநிலை மாணவனாய் மாற்றினாயே, அப்போதா?
உன்பால் நான் கொண்ட காதலை
உள் மனதில் மூடி போட்டு வைத்திருந்த அந்நாளில்
என் பாரம் புரியாமல் தள்ளி நின்று எள்ளி நகையாடினாயே, அப்போதா?
பூடகமாய் என் காதல் உன் காதில் நான் சொன்ன போது
புரியாத புதிர் ஒன்றை கேட்டதைப் போல்
புன்னகை பூ ஒன்றை சிந்தி விட்டு சென்றாயே, அப்போதா?
ஏற்பாயா, மறுப்பாயா விடை ஏதும் அறியாமல்
வலியோடும் பயத்தோடும்
பல மாதம் காத்திருக்க வைத்தாயே, அப்போதா?
அயல் நாடு செல்லுமுன் வழியனுப்ப வருவாயா
என்றதற்கு விழி நீரில் ஒன்றுதிர்த்து
விடையனுப்பி வைத்தாயே, அப்போதா?
தொலை தூரத்தில் உன் விளி,
தொலைபேசி கம்பி வழி
குரல் மட்டும் தூதாய் அனுப்பினாயே, அப்போதா?
வெட்கத்தின் தலை களைந்து
உள் மனதின் ஆசைகளை ஒவ்வொன்றாய் சொன்ன போது
மௌனத்தின் மொழி பேசினாயே அப்போதா?
பெற்றவளும் என் மனம் அறிந்து
பல மடங்கு உளம் மகிழ்ந்து
பெண் பார்க்க சென்றாளே அப்போதா?
பரிசம் போட்ட பின்னும்
பதினோரு மாதங்கள் காத்திருந்து
பின் மனம் திறந்து உன் காதல் சொன்னாயே, அப்போதா?
மணப்பெண்ணாய் மேடையிலே
உன் கரம் பற்றிய போது
அன்பின் ஸ்பரிசத்தை தந்தாயே, அப்போதா?
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
பெருகிப் பொங்கும்
உனதன்பை என்மேல் போழிகின்றாயே, இப்போதா?
பல நாட்கள் விழித்திருந்தேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!
ஆம் ! இப்போதும் விழிக்கின்றேன் - எனக்காய் நீ கிடைத்த சந்தோஷத்தில்!!!
பன்னிரெண்டை எட்டியவுடன் கணக்கீட்டை புதிதாய் தொடங்கும் கடிகாரம் போலே - நாமும்
ஒவ்வோராண்டு கழியும் போதும் நம் காதலை புதுப்பித்துக் கொள்வோம்!