தேடல்கள் என்பது மனிதப்பிறவி ஆற்றவேண்டிய முக்கிய கடமைகளுள் ஒன்று. என் தேடல்கள் என் ஐந்தாம் பிராயத்தில் தொடங்கியதாக ஞாபகம். என் தேடல்களை வரிசைப்படுத்தியபோது மிக முக்கியமானதாக மூன்று தேடல்கள் தோன்றியது..
முதலாவது எதை தேட வேண்டும் என்ற தேடல். இரண்டாவது என் முதல் தேடலுக்கான தூண்டுகோல் எது என்ற தேடல். மூன்றாவதாக இந்த தேடலின் பயன் என்ன? நன்மை தீமையென்ன என்ற தேடல். என்னுடைய இந்த மூன்று தேடலுக்குமே இன்னமும் சரியானதொரு விடை கிடைத்தபாடில்லை. அந்த விடைக்கான தேடலே என் அடுத்த தேடலாய் அமைந்துவிட்டது.
இந்த தேடலின் அளவு பெரியதா, சிறியதா என்றொரு தேடல். தேடல்கள் வெற்றி பெறுமா தோற்றுப்போகுமோ என்றொரு தேடல். தேடல் நட்பை வளர்க்குமா, எதிர்ப்பைத் தூண்டுமா என்டுமொரு தேடல்.
நட்பு என்பது என்ன என்றொரு தேடல். அது அவசியமா இல்லையா என்றொரு தேடல். அவசியமென்றால் அதன் அளவுகோல் என்ன? அதன் எல்லை எதுவரை? பெற்றோரின் பாசத்தை விட பெரியதாக இருக்க வேண்டுமா, சிறியதாக இருக்க வேண்டுமா? என்றொரு தேடல் நட்பை அருகிலிருந்து வலிமைமிக்க வார்த்தைகளால் வளர்க்க வேண்டுமா, இல்லை தொலைவிலிருந்தும் மெல்லிய உணர்வுகள் கொண்டு வளர்க்க முடியுமா என்றொரு தேடல். நட்பு என்பது மிகப்பெரிய விஷயமென்று சிலர் கூறியபோது என் தேடல் இன்னும் தீவிரப்பட்டுப் போனது. என்னைப் பொருத்தவரை என் தேடலின் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது மற்றவர்கள் சொல்வது போல் நட்பு ஒன்றும் பெரிய விஷயமல்ல.. மிகவும் சிறியதுதான்.. ஒரு அணுவைப்போல், ஒரு திருக்குறள் போல்..!
ஹார்மோன்கள் மிகுதியால் உண்டாகும் காதல் எனும் கானல்நீர் தேவை தானா என்றொரு தேடல். வெறும் கிளர்ச்சியை தூண்டி, மாயபிம்பம் காட்டி மனிதனை போதையில் சிக்க வைக்கும் திரைப்படங்கள் தேவைதானா என்றொரு தேடல். தனிமனித சுயநலத்துக்காக ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றும் இந்த அரசியல் தேவைதானா என்றொரு தேடல்.
தேடல்கள் தேவைகளை தூண்டிவிடுகிறதா என்றொரு தேடல். இல்லை தேவைகளுக்காக தேடல் செய்கிறார்களா என்றொரு தேடல். தேவைகளுக்காக தேடல் செய்பவர்கள் தேவை தீர்ந்ததும் தேடலை நிறுத்தி விடுகிறார்களா? அதில் திருப்தி கொள்கின்றனரா என்றொரு தேடல். தேடல்கள் தேவைகளை தூண்டிவிடுகிறதேனில் அது முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறதா, இல்லை முரண்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குகிறதா என்றொரு தேடல்.
தீவிரவாதம் என்பது தேவைதானா என்றொரு தேடல். பொதுவாய்ப் பார்த்தால் தவறாய்த் தோன்றும் இத்தீவிர'
வாதம்' ஒரு தீவிரவாதியின் பார்வையில் பார்த்தால் சரியாய் தோன்றுகிறதே..! இந்த தொலைநோக்குப் பார்வை சரியா, தவறா என்றொரு தேடல். மதங்கள் என்பது அவசியம் தானா என்றொரு தேடல். கடவுள் யாரென்ற தேடல் ஒருபுறமிருக்க இந்த மதங்களின் பெயரால் உயிர்கள் மடிவது நியாயம்தானா என்றொரு தேடல்.
தேடல்களின் பிறப்பிடமே எதுவென்று தெரியாத போது அந்த தேடல்களைத் தேடித் தேடி தொலைந்து போவது நம் தலைவிதியாகிவிட்ட பின்பு ஒரேயொரு விஷயம் மட்டும் எல்லோருடைய மனதிலும் ஒருமித்து இருக்கிறது.
'அது' , அமெரிக்காவில் 9/11 இலும் இந்தியாவில் 26/11 லும் நடந்த கோரச் சம்பவங்களுக்கு பிறகு இரவு பகலாக கண்விழித்துப் பணியாற்றிய மீட்ப்பு பணியாளர்களிடம் இருந்த, உற்றாரில்லை உறவினரில்லை, நண்பருமில்லை யாரோ முகம் தெரியாத மனிதர்கள் தீயில் கருகிச் செத்த பொது அந்த அப்பாவி மக்களுக்காக கண்ணீர்விட்ட உலக மக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த மனிதாபிமானம்தான் அது .
மனிதம் காப்போம்..! உயிர்வதை தடுப்போம்..! என்பதையே என் தேடலின் தீர்வாய்ச் சமர்ப்பிக்கிறேன்..!