Showing posts with label பயணத்தின் சுவடுகள். Show all posts
Showing posts with label பயணத்தின் சுவடுகள். Show all posts

Wednesday, September 25, 2013

பயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 9;  தொலைவு: 13.

மனதை மயக்கும் மயாமி  (அமெரிக்கா)
( ப்ளாரிடா )



                              ஒரு நாள் முழுக்க சவுத் பீச்சிலும் Downtown எனப்படும் மயாமி நகர வீதிகளிலும் சுற்றித் திரிந்துவிட்டு மறுநாள் நார்த் பீச் சென்றோம். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானின் நீலத்தை உட்கொண்ட கடலும், கடல் அலைகளும், திரைப்படங்களில் மட்டுமே இது போல் நீலவண்ண கடல் நீரை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் காட்சியின் தரத்துக்கு (Richness) வேண்டி காமிராவில் வர்ணம் சேர்த்ததாகவே நினைத்து வந்தேன். நார்த் பீச் காதலர்களின் கனவு கடற்கரை என சொல்லலாம். 

நார்த் மயாமி  பீச்

ஓடி விளையாடு பாப்பா!


                               பெண்களின் ஆடைகள் குறைந்ததே வல்லுறவுக்கு காரணம் என்று சொல்லும் மூடர்கள் ஒருமுறை இங்கு வந்தால் தம் கருத்தை மாற்றிக் கொள்ளுவர் என்றே நினைக்கிறேன். 

யார் இவர்கள்..இளம் காதல் மான்கள்..
     

சலங்கை ஒலி?


ஆவி ஜம்ப் !!

                                கடற்கரைகளில் குப்பை போடுவதெற்கென்று ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்து கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கின்றனர். மக்களும் சிரமம் பார்க்காமல் குப்பைத்தொட்டியில் போடுவதால் அந்த அழகான இடம் அழகு குறையாமல் இருக்கிறது. 

ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள்.


                               அங்கிருந்து புறப்பட மனமில்லாமல் புறப்பட்டு அட்லாண்டா நோக்கி பயணித்தோம். நாங்கள் நேரமின்மையால் பார்க்க முடியாமல் போன இடம் கீ வெஸ்ட்  எனப்படும் ஒரு மயாமிக்கு  அருகிலிருக்கும் ஒரு தீவு. மயாமி செல்ல விரும்புவோர் இதற்கும் நேரம் ஒதுக்கி செல்லுதல் நலம். அமெரிக்காவில் காணவேண்டிய இடங்களில் மயாமி  மிக முக்கியமான ஒன்றாகும். எனக்கு மிகவும் பிடித்த இடங்களுள் இதுவும் ஒன்று. இதைப் போலவே மற்றொரு இடத்தை பற்றிய பதிவை  அடுத்த பயணச் சுவடுகளில் எழுதுகிறேன்..



பயணங்கள் முடிவதில்லை..


Tuesday, September 17, 2013

பயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 9;  தொலைவு: 12.

மனதை மயக்கும் மயாமி  (அமெரிக்கா)
( ப்ளாரிடா )

பகுதி 1 படிக்க..

                           பாதை மாறி சென்று கொண்டிருந்த காரின் ஸ்டீயரிங்கை நான் எட்டிப் பிடித்து திருப்ப, அதற்குள் ரஜினியும் விழித்துவிட கார் மீண்டும் ரோட்டில் சென்றது. அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில்  நிறுத்த சொல்லிவிட்டு பின்னால் திரும்பி பார்த்த போது இவ்வளவு கலவரத்திலும் கண்ணுறக்கம் கலையாமல் இருந்தனர் இருவரும். பெட்ரோல் பங்க்கில் வண்டியை நிறுத்திய போது பாதி தொலைவு தான் கடந்து வந்துள்ளோம் என தெரிந்தது. அடுத்து வண்டியை நான் ஒட்டுவதென தீர்மானித்து நான்கு ரெட்-புல்களும் தண்ணீர் பாட்டில்களும் வாங்கி நிரப்பிக் கொண்டு பயணம் தொடர்ந்தது.




                           இரவு நேரம் ட்ராபிக் அதிகம் இல்லையென்றாலும் அதிகபட்ச வேகத்திற்கு மேல் சென்றால் அந்நேரத்திலும் காவல் நண்பர்கள் வரும் அபாயம் இருந்ததால் காரின் க்ரூசரில் ( அதிக திருப்பங்கள் இல்லாத ஹைவேயில் செல்லும் போது நாம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை செட் செய்து விட்டால் ஆக்சலரேட்டரிலிருந்து காலை எடுத்து விடலாம். வேகம் கூட்டவும் குறைக்கவும் ஸ்டியரிங்கிலேயே வசதி இருக்கும். பிரேக் அழுத்தும் வரை வண்டி  அதே வேகத்தில் போய்க்கொண்டிருக்கும்) அதிகபட்ச வேகத்தை செட் செய்துவிட்டு ரகுமானின் ராகமழையில் நனைந்தபடி ஓட்டினேன். காலை நாலரை மணிக்கு மயாமி  வந்து சேர ஏற்கனவே பதிவு செய்திருந்த ஹோட்டலில் உறங்க சென்றோம்.



                              காலையில் பத்து மணி சுமாருக்கு எல்லோரும் தயாராகிவிட மயாமி நோக்கி பயணமானோம். நகர எல்லைக்குள் நுழையும் போதே அய்யனார் சாமி போல் வீற்றிருப்பது டோல் கேட் (Toll Gate ). ஒவ்வொரு சுற்றுலா தளத்துக்கு செல்லும்போதும் இதை கடக்க வேண்டும் என்பதாலும், கட்டபோம்மனே கிராஸ் செய்தாலும் வரி கட்ட வேண்டுமென்பதாலும், இங்கே வசூலிக்கப்படும் சுங்க வரி கொஞ்சம் அதிகம் என்பதாலும் (சுமார் 12 டாலர்கள்.) மக்களின் சலிப்பை காணலாம். அதையும் தாண்டி வழிநெடுக வளர்ந்திருந்த பனை மரங்களின் ஊடே உலகப் புகழ்பெற்ற மயாமி கடற்கரையை அடைந்தோம்.





                             உள்ளே நுழையும் போதே தூரத்தில் தெரிந்த நீலக் கடல் (White Sand  Sea என்பதால் எங்கு நோக்கினும் நீலமயமாக) மற்றும் வண்ணமயமான, "கண்களுக்கு குளிர்ச்சியான" சுற்றுப்புறமும் மனதுக்குள் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. 


 எழில் கொஞ்சும் மயாமி

சைக்கிள் மட்டுமா கவுந்து கிடக்கு?





மண்ணை தின்னும் அமெரிக்க கண்ணன்..

 ஹிப்னாடிசத்தால் தண்ணீர் பாட்டில் காற்றில் நிற்கும் மாயம்!


கடலுக்குள் மோட்டார் ரைட்

க்ரூஸ்,  அக்வா ப்ளோட்

பாரா செய்லிங், 

 கடற்கரையில் வீடு கட்டி!!

மணலுக்குள் புதைந்து விளையாடும் சிறுவர்கள்..


                               மயாமி  கடற்கரை நார்த் பீச்,சவுத் பீச் என இரு கடற்கரைகளாய்  பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பார்த்தது சவுத் பீச்..அடுத்த பதிவில் நார்த் பீச் சென்று பார்ப்போமா?

தொடரும்..



Tuesday, September 3, 2013

பயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 9;  தொலைவு: 11.

மனதை மயக்கும் மயாமி  (அமெரிக்கா)
( ப்ளாரிடா )


                                அமெரிக்காவின் தென்கிழக்கில் அட்லாண்டிக் கடற்பகுதியில் அமைந்துள்ள மிக நீண்ட கடற்கரைதான் மயாமி கடற்கரை. ப்ளாரிடா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஊர் பல்வேறுபட்ட மக்களையும்,கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. 




                          நெடுந்தூரப் பயணம் செல்வதென்றால் அலாதிப் பிரியம் எனக்கு. அதுவும் மகிழுந்தில் செல்வது இரட்டிப்பு சந்தோசம். மயாமி பற்றி சிறு வயதில் படித்த ஞாபகம். ஒரு முறை அமெரிக்காவில் பெஞ்சில் இருந்த போது   (பெஞ்சுன்னா உட்கார்ற பெஞ்ச் இல்லீங்க. வேலையில்லாமல் இருக்கும் காலத்தை குறிக்கும் சிலேடை மொழி அது) நண்பர்களுக்கும் "லாங் வீக்கெண்டு" வர ( அரசு விடுமுறை வெள்ளி அல்லது திங்கள் வரும்போது அதோடு சேர்த்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தால் நான்கைந்து நாட்கள் கிடைக்கும். அதுபோன்ற சமயங்கள் தான் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்) எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்து கேன்சஸில் உள்ள நண்பன் ஜெயராஜுக்கு போன் செய்ய உற்சாகத்துடன் அழைப்பை ஏற்றுக் கொண்டு மயாமி செல்லலாம் என்றும் கூறினான். பதிலுக்கு நான் அவனிடம் வைத்த ஒரே கண்டிஷன் காரில் செல்ல வேண்டும் என்பது தான்.


மகிழுந்தில் மகிழ்ச்சியுடன்..

CeeJay...

                             நான் இருந்த சிகாகோ நகரத்திலிருந்து கேன்சஸ் சிட்டி சுமார் எட்டு மணி நேர தொலைவில் இருந்தது. அதுவும் மயாமி செல்லும் திசைக்கு எதிர் திசையில் இருந்தது. ( மேலுள்ள படம் பார்க்க ) எங்களுக்கிருந்த ஐந்து நாட்களில் முழுவதும் காரில் செல்வது உசிதமல்ல என உணர்ந்த நாங்கள் ஒரு திட்டம் வகுத்தோம். சிகாகோவிலிருந்து நானும், கேன்சஸிலிருந்து CJ (ஜெயராஜின் சுருக்கப் பெயர்) மற்றும் அவன் நண்பர் ஒருவரும் அட்லாண்டா வரை பிளைட்டில் வருவதென்றும், அங்கிருந்து வாடகைக் கார் பிடித்து மயாமி செல்வதென்றும். திரும்பி வரும் வழியில் நேரம் இருப்பின் அட்லாண்டா சுற்றிப் பார்ப்பதென்றும் முடிவு செய்தோம். பயண நாளுக்காக ஐ-போனில் தேதிகளை ஸ்வைப் செய்தபடி காத்திருந்தோம்.


புறப்பட தயாராகும் டெல்டா விமானம்..

                             பயணத் தேதியும் வந்தது. டெல்டா ஏர்லைன்ஸில் ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் நாற்பதை கடந்திருந்த நதியா போன்ற ஒரு அம்மணி ட்ரிங்க்ஸ் கொண்டு வர ஆரஞ்சு பழச்சாறு மட்டும் (அட நம்புங்கப்பா!! ) வாங்கி குடித்துவிட்டு சற்று கண்ணயர்ந்தேன். (ஆமாங்க டெல்டா விமானத்தின் ஸ்பெஷாலிட்டியே லோக்கல் பிளைட்டிலும் டிரிங்க்ஸ் தருவார்கள்) முக்கால் மணி நேரத்தில் விமானம் தரை இறங்கியது.  அட்லாண்டா ஏர்போர்ட்டில் இறங்கியதும் வெதுவெதுப்பான கிளைமேட்டை உணர்ந்தேன்.. வருடத்தில் ஏழு மாதம் வெண் கம்பளம் விரித்தது போன்று பனி படர்ந்திருக்கும் சிகாகோ நகரத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. எட்டு லேன் கொண்ட சாலையின் பிரமாண்டத்தை ரசித்தவாறே முன்பதிவு செய்திருந்த நிஸ்ஸான் வெர்சாவை ( வாடகை கார் ) எடுத்துக் கொண்டு அருகிலிருந்த மெக்டோனல்ட்சை அடைந்தேன். (அங்குதான் சந்திப்பதாய் ஏற்பாடு )


தரையிறங்கும் விமானங்கள்..

எட்டு வழிச்சாலை..கடவுள் பார்வையில். (நன்றி :உ.சி.ர )


                                 நான் வருவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பே அங்கு வந்துவிட்ட CJ வும் அவன் நண்பர் ரஜினி உடன் மதிய உணவை முடிக்க  மற்றும் ஒரு நண்பர் அட்லாண்டாவில் வசிக்கும்  ஸ்ரீநி அங்கு வந்து சேர்ந்தார். அட்லாண்டாவிலிருந்து மதியம் மூன்று மணிக்கு  எங்கள் நிஸ்ஸான் புறப்பட்டது. எழுநூறு மைல் ( சுமார் ஆயிரத்து முன்னூறு கிலோமீட்டர் ) செல்ல வேண்டியிருந்ததால் காரை ஒவ்வொருவரும் இரண்டு மணி நேரம் ஓட்ட பின் இடையிடையே பிரேக் எடுத்தும் பயணித்தோம். சுமார் பதினோரு மணிக்கு சப்வேயில் இரவு உணவை முடித்துவிட்டு ரஜினி வண்டியை எடுக்க முன்சீட்டில் நானும் மற்றவர்கள் பின்னிலும் அமர வண்டி புறப்பட்டது.


நண்பர் ரஜினி..

                                ஆரம்பத்தில் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்த ரஜினி சற்று நேரத்தில் சடன் பிரேக்குகள்  இடுவதும், வளைவுகளில் சர்ரென்று திருப்புவதுமாக சென்று கொண்டிருந்தார். நான் சற்றே பயத்துடன் பின் சீட்டை பார்க்க இருவரும் புல்மீல்ஸ் சாப்பிட்ட கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்க திடீரென்று வண்டி ரோட்டிலிருந்து விலகி ஓரத்தில் இருந்த மரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போதுதான் கவனித்தேன் ரஜினியும் நித்திரையில் இருக்கும் நித்தியானந்தாவாக மாறி  இருப்பதை...

தொடரும்..


Friday, March 1, 2013

பயணத்தின் சுவடுகள்-10 (SIX FLAGS தீம் பார்க் )



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 8;  தொலைவு: 10.

SIX FLAGS  தீம் பார்க்  (அமெரிக்கா)
( சிகாகோ  )







                               அமெரிக்காவின் அதிபயங்கர த்ரில் ரைடுகள் உள்ள தீம்  பார்க் தான் இந்த six flags  தீம் பார்க். அமெரிக்காவில் மொத்தம் பத்தொன்பது இடங்களில் அமைந்துள்ள இது உலகிலயே அதிகம் திகிலூட்டக்கூடிய (Scariest) விளையாட்டுகளை  அமைத்திருக்கிறார்கள். பத்து வயது சிறார்களுக்கென சில விளையாட்டுகள் இருப்பினும், பெரும்பாலான விளையாட்டுகள் ஒரு பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடக் கூடியது.


                                சுமார் ஐந்தாயிரம் கார்கள் நிறுத்தக் கூடிய பார்க்கிங் வசதி செய்திருக்கிறார்கள். முன்பே (ஆன்லைனில்) டிக்கட் எடுத்திருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வொருவரையும் செக் செய்து விடுவதால் உள்ளே நுழைய சிறிது நேரம் ( ஒரு பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள்) ஆகிறது.  பெரியவர்களுக்கு 62 டாலர்களும், சிறியவர்களுக்கு 42 டாலர்களும் கட்டணமாக வசூலிக்கின்றனர். இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 


                               நுழைவாயிலிலேயே ஒரு அச்சடித்த பிரசுரத்தில் அங்குள்ள ரைடுகளைப் பற்றியும் அவற்றின் திகில் அளவையும் (Thrill level) உள்ளே  நுழைந்ததும் நம்மை வரவேற்பது ஒரு ரேஸ் ட்ராக் (த்ரில் அளவு-மைல்ட்).  இது நாம் ரோட்டில் கார் ஓட்டுவதைப் போன்ற உணர்வே தவிர அதிகம் பயமில்லை. காலை நேரம் மிகவும் எனர்ஜியோடு இருந்ததால் த்ரில் லெவல் அதிகம் உள்ள (பட்டியலை பார்த்து) பேட்மேன் ரைடரில் ஏறுவது என தீர்மானித்தேன்.. அதுவும் முதல் ஆளாக ஏறிக் கொள்வதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு.. இந்த வகை ரைடில் ஒரு இரண்டரை நிமிடங்கள் நாம் தொங்கிக் கொண்டே பயணிக்க வேண்டும். இடம், வலம், மேலே, கீழே என எல்லா திசைகளிலும் அதிவேகமாக இந்த கோஸ்டர் பயணிப்பதால் நமக்கும் கிட்டத்தட்ட பேட்மேனை போல பறக்கின்ற உணர்வு இருக்கும். ஆனால்  இறங்கிய பின்னரும் அடிவயிற்றில் ஒரு திரவம் கசிந்ததேன்னவோ உண்மை..



                                இதற்கு பிறகு பல ரோலர் கோஸ்டர்களில் ஏறிய போதும் முதல் அனுபவத்தில் கிடைத்த த்ரில் கிட்டவில்லை. ஒரு சில ரைடுகளில் நம்மை உயரத்திற்கு அழைத்துப் போய் அங்கிருந்து கீழே தள்ளி விடுவது போல் வேகமாக கீழே இறக்கிக் கூட்டி வருவார்கள்.


                                இங்குள்ள தண்ணீர் ரைடுகளும் மிக பிரசித்தி பெற்றவை. ஒரு ராட்சத பக்கெட்டின் உதவி கொண்டு ஒரு மண்டையோட்டின் வாய் வழியே நீரை கொட்டுகிறார்கள். நம்முடைய குற்றாலம் சென்ற பீலிங் இருந்தது. கொஞ்சம் மெலிந்த தேகமுள்ள ஆட்கள் தடுமாறி கீழே விழுந்த காட்சியும் அரங்கேறியது. இந்த வகை விளையாட்டின் பெயர் " சுனாமி எபெக்ட்" என்பதாகும்.. 




                                       மற்றொரு விளையாட்டில் தண்ணீரில் சறுக்கிக் கொண்டே வந்து ஒரு புனல் (funnel) போன்ற ஒரு அமைப்பில் மேலும் கீழுமாய் சுற்றி (தலையும் சுற்றி) பின் தண்ணீரில் விழ வேண்டும்.





                               நம்ம ஊர் ராட்டினம் போன்ற ஒரு விளையாட்டில் மேலும் கீழுமாய் சென்று வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் நம்மை திக்கெட்டிலும் சுழழ விட்டு பின் இறக்கி விடும் போது "சரக்கு" அடிக்காமலே நமக்கு ஒரு கிறக்கம் தோன்றும். இந்த வகை தீம் பார்க்குகளுக்கு அம்யூஸ்மன்ட் (Amusement) பார்க் எனவும் அழைப்பர். அந்த வார்த்தையின் உண்மையான பொருளை நாம் உள்ளே சென்று வரும் போது உணர்ந்திருப்போம்.



                              பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து மக்களும் தங்களுடைய வாரக் கடைசியை  மகிழ்ச்சியுடன் செலவிட இங்கே வருவதில் ஆச்சர்யமொன்றுமில்லை.. 

Monday, February 18, 2013

பயணத்தின் சுவடுகள்-9 (Dutch Village - டச்சு கிராமம் )


பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 7;  தொலைவு: 9.

டச்சு வில்லேஜ்  (அமெரிக்கா)
( ஹாலண்ட் )

                             ட்யுலிப்  கண்காட்சியைப் பற்றி சொல்லிவிட்டு அவற்றை வளர்க்கும் டச்சு மக்களைப் பற்றியும், டச்சு கிராமங்களைப் பற்றியும் கூறாவிட்டால் முறையாகாது.  ஒவ்வொரு ட்யுலிப்  தோட்டத்தின் அருகேயும் ஒரு டச்சு கிராமத்தின் மாதிரி வடிவமைக்கப் பட்டிருக்கும்.. அவர்கள் வசித்த வீடுகள், வாழ்க்கை முறை, அவர்களின் தொழில் இப்படி பல கலாசாரப் பகிர்வுகள்.. அவற்றில் சில உங்களுக்காக இதோ இங்கே..



டச்சு மக்களின் வீடுகள் 


டச்சு மீனவருடன் ஆவி


மீனவ நண்பர்களுக்கு மீன் விற்பனையில் உதவும் ஆவி 


டச்சு குதிரை வண்டிக்காரர் 


பழ வியாபாரிகள் 


துணி நெய்பவர் 


எடை பார்க்கும் டச்சுப் பெண்மணி 


                            டச்சு மக்களின் வாழ்க்கை முறையைப்  பார்த்த போது  நம் இந்திய மக்களின் கலாசாரத்தை ஒத்து இருப்பதை உணர்ந்தேன்.. மிச்சிகன் மாநிலத்தின் மற்றொரு சிறப்பு ஆங்காங்கே காணப்படும் "Sand Dunes" எனப்படும் மணற்குன்றுகள். இவை பார்ப்பதற்கு அழகாகவும், யாரோ செய்து வைத்தது போலவும் காட்சியளிக்கிறது..



                          அடுத்த பதிவில் ஒரு த்ரில் அனுபவத்தோடு உங்களை சந்திக்கிறேன்..


Saturday, February 9, 2013

பயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெஸ்டிவல் )


பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 7;  தொலைவு: 8.

ட்யுலிப்  பெஸ்டிவல்  (அமெரிக்கா)
( ஹாலண்ட் )





                      அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள ஹாலண்ட் எனும் இடத்தில் ஆண்டு தோறும் ட்யுலிப்  கண்காட்சி நடப்பது வழக்கம். கண்காட்சி என்று சொல்வதை விட திருவிழா என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். சிகாகோவிலிருந்து சுமார் நான்கு மணி நேர தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரின் எல்லையை அடைந்தவுடனே வண்ண வண்ண ட்யுலிப்  மலர்களின் கண்கவரும் அணிவகுப்பு நம்மை  வரவேற்கிறது..


                         அந்நியன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நாயகனும் நாயகியும் பூக்களின் மத்தியில் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
அதே போல திரும்பிய திசையெல்லாம் நமக்கு காணக் கிடைப்பது பல வண்ணங்களிலும் பூத்துக் குலுங்கும் இந்த ட்யுலிப்  மலர்களே.. பூக்களை ரசிக்காத மனிதர்களின் மனத்தையும் கொள்ளையடிக்கும் ஓர் பிரமாண்டமான அழகுப் பெட்டகம்.



                          ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ இந்த கண்காட்சி நடைபெறும். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சியை காண வருவர். குழந்தைகளும் ரசித்து மகிழும் இடமாதலால் பெரும்பாலும் குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பர்.


                          வருடத்தில் ஒரு முறை வரும் இந்த கண்காட்சிக்கு பிரத்தியேகமாக பல ஏக்கர் பரப்பளவில் ட்யுலிப்  மலர்களை வளர்ப்பர். இதற்கென்றே பல தோட்டங்கள் இருக்கின்றன.. இங்கு ட்யுலிப் மலர்களின் கண்காட்சி மட்டுமல்லாது ட்யுலிப் பல்ப் என்று சொல்லப்படும் ட்யுலிப் கன்றுகளையும் (?!!) விற்பனை செய்கின்றனர்.  ஓவ்வொரு வண்ணப் பூக்களுக்கு நடுவிலும் ஒரு எண் பதிக்கப் பட்டிருக்கும். கண்காட்சிக்கு வரும் மக்கள் தமக்கு பிடித்த பூவின் எண்களைக்  குறித்துக் கொண்டு வந்து விற்பனை நிலையத்தில் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். (ஒரு ஜோடி பல்பின் விலை சுமார் பத்து டாலரிலிருந்து ரகத்தைப் பொறுத்து ஐம்பது டாலர் வரை விற்கப்படுகிறது. )


                          இந்த ஆண்டு கண்காட்சியில் பல்புகளை வாங்கி வந்து நட்டு வைத்தால் அடுத்த வருடம் பூக்கள் பூக்கும். இந்த ட்யுலிப்  மலர்கள் பெரின்னியல் (perennial ) வகையைச் சேர்ந்தது. அதாவது ஆண்டு முழுவதும் மலரக் கூடியவை.. ஆனாலும் இவற்றின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளே..



                          இங்கு ட்யுலிப்  மலர்கள் தான் சிறப்பு என்றாலும், பல வண்ண ரோஜாக்களும், மற்ற மலர்களும் சொற்ப அளவில் காணக் கிடைக்கும். கிட்டத்தட்ட எல்லா வண்ணங்களிலும் பூத்துக் குலுங்கும் இந்த மலர்களைக் காண்பது கண்களுக்கு குளிர்ச்சியும்  அதே சமயம் மனதிற்கு இன்பமும் தருவதாகும். ஊட்டியில் பூக்கள் கண்காட்சிகளைக் கண்டிருந்தாலும் அவற்றை விட பல மடங்கு பரப்பளவில் பூக்களைக் கண்டபோது என் மனம் கொள்ளை போனதென்னவோ உண்மை..!


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...