உலக சினிமாக்கள் பார்க்க, அதைப் பற்றி பேசுவதற்கே நிச்சயம் ஒரு Qualification அவசியம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி விரிவாக விரிவாக எழுத எனக்கு அனுபவம் போதாது என்ற போதும். என்னை பாதித்த, நான் ரசித்த ஒரு சில படங்களைப் பற்றி என் நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்காக பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். இம்முறை ஒரு குறும்படத்திற்கான ஸ்க்ரிப்டை எழுதி முடித்துவிட்டு இதில் கலந்து கொண்டதாலோ என்னவோ படங்களில் வரும் ஷாட்கள், கேமிரா ஆங்கிள்கள், திரைக்கதை உத்திகள் போன்றவற்றை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.சரி அதெல்லாம் விடுங்க. இப்ப படங்களின் சுருக்கமான விமர்சனங்களை பார்ப்போமா?
THE PRESIDENT (IRAN)
DIRECTOR: Mohsen Makhmalbaf
ஈரான் நாட்டு இயக்குனர் மக்மல்பப் இயக்கிய இந்தப் படம் திரைப்படத் திருவிழாவின் முதல் படமாக திரையிடப்பட்டது. ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அவரை சிறைப்பிடிக்க இடைக்கால அரசு அவரைத் தேடுகிறது. சர்வாதிகாரி தன் பேரனுடன் தப்பிச் செல்வதும், பின் மக்களோடு மக்களாக செல்லும் போது மக்கள் தன் மீது வைத்திருந்த வெறுப்பையும் தன் கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் பட்ட துன்பத்தை உணர்வதுமாக செல்கிறது கதை. ராணுவத்திடம் மாட்டிக் கொள்ளும் அவரின் கதி என்ன என்பதை சொல்கிறது கிளைமாக்ஸ். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல படம்.
THE LAST ADIEU (DOCUMENTARY/ INDIA/ 92 mins)
DIRECTOR: Shabnam Sukhdev
சுக்தேவ் என்ற ஒரு இயக்குனரை ( பிலிம் டிவிஷனுக்காக பல டாகுமென்ட்ரிகள் எடுத்தவர்) பற்றி அவர் மகள் ஷப்னம் இயக்கிய டாகுமென்ட்ரி இது. படத்தின் பெரும்பகுதிகள் Repeat ஆவதால் நீண்ட கொட்டாவிகளுடன் பார்க்க நேர்ந்தது.
3 HEARTS ( FRANCE/106 mins) -- 18+
DIRECTOR: Benoit Jackquot
தான் விரும்பும் பெண்ணை சந்திக்க செல்லும் ஒருவன் சில காரணங்களால் தாமதமாக செல்ல அவர்கள் காதல் தோல்வியில் முடிகிறது. சிறிது காலத்துக்கு பின் அவன் அவளுடைய சகோதரியை சந்தித்து காதலித்து கொள்கிறான் ( தன் காதலியின் சகோதரி என்று தெரியாமலே) திருமணத்துக்கு அமெரிக்காவிலிருந்து வரும் தங்கை தன் அக்காளின் கணவரை பார்த்து திடுக்கிடுகிறாள். தன் பழைய காதலை மறக்க முடியாமல் அக்காவுக்கு தெரியாமல் இருவரும் ரகசியமாக காதல் கொள்கின்றனர், அக்காவுக்கு தன் கணவருக்கும் தங்கைக்கும் இடையே உள்ள உறவு தெரிய வரும்போது நடக்கும் உணர்வுப் போராட்டமே கிளைமாக்ஸ். இம்மி பிசகினாலும் ஆபாசமாக போய் விடக்கூடிய அபாயமுள்ள கதையை அழகாக கொண்டு செல்வது அற்புதமான திரைக்கதையே. ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.
I AM YOURS (NORWAY/ 96 mins) -- 18+
DIRECTOR : Iram Haq
நார்வேயில் வாழும் இந்திய வம்சாவளியை சார்ந்த ஒரு பெண்ணின் கதை. இந்திய கலாச்சாரத்தை வலியுருத்தும் தாய் தந்தைக்கும் , பருவத்தின் வனப்பில் சுதந்திரமாக தன் காதல் (காம?) உணர்வுகளுக்கும் நடுவே சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு யுவதியின் கதை. கதாநாயகிக்காகவே ஒருமுறை பார்க்கலாம். ;)
-- இன்னும் வரும்