Sunday, November 24, 2013

அப்பாவின் ஸ்கூட்டி!

                 


                     விபத்துக்கு பிறகு கடந்த ஆறு மாத காலமாய் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்த்து வந்தேன். எங்கு செல்வதாயினும் அனாமிகாவுடன் (i20) மட்டுமே சென்று வந்தேன். மாலை அணிந்தபின் தினமும் காலையும் மாலையும் கோவில் செல்வது வழக்கம். கோவில் இருப்பது எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில். தினமும் காரில் செல்வது பெட்ரோல் விரயம், மேலும் கோவிலுக்கு அருகில் பார்க்கிங் செய்ய ஏதுவான இடம் இல்லை என்பதாலும் இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்லலாம் என்று முடிவு செய்தேன். விபத்திற்கு பிறகு பிரிஸ்ஸில்லாவை ( Passion Pro ) உபயோகிக்க வேண்டாம் என்றும், அதை விற்று விடுமாறும் நண்பர்களும், உறவினர்களும் கூற நானும் பிரிஸ்ஸில்லாவை தவிர்த்து விட்டேன். மீதம் வீட்டில் இருந்தது அப்பாவின் ஸ்கூட்டி மட்டுமே.

                     தங்கை ஓட்டுவதற்காக வாங்கியது என்றாலும் பெரும்பாலும் அப்பாதான் அதை அதிகம் பயன்படுத்துவார். நான் அந்த ஸ்கூட்டியை வாங்கியதிலிருந்து ஒருமுறை கூட ஒட்டியதில்லை. மேலும் ஸ்கூட்டி போன்ற சிறிய வாகனங்கள்  அதிகம் ஒட்டி பழக்கமும் இல்லை. நேற்று அப்பாவிடம் சாவி வாங்கிக் கொண்டு வண்டியை போர்டிகோவிலிருந்து வெளியே எடுத்தேன். ஆறு மாதங்களுக்கு பிறகு முதல் முறை வண்டியை எடுப்பதால் கைகள் வண்டியை தாங்கும் அளவிற்கு பலம் உள்ளதா என்று சுய பரிசோதனை ஒன்று செய்து கொண்டேன். பின்னர் கீயை நுழைத்து வண்டியின் செல்ப் ஸ்டார்ட்டை அழுத்த வண்டி ஒரு முக்கலோடு ஸ்டார்ட் ஆக மறுத்தது. மீண்டும் மீண்டும் அழுத்தியும் என் முயற்சி தோல்விதான். வண்டியை ஸ்டாண்ட் இட்டு கிக்கரை உதைத்தும் பயனில்லை. அப்போது உள்ளிருந்து வந்த அப்பா, 'இவ்வளவு வருஷமா வண்டி ஓட்டறே, ஸ்டார்ட் பண்ண தெரியல' என்றபடி  வந்து ஒரு உதை உதைத்தார். என்ன ஆச்சர்யம். ஸ்டார்ட் ஆகிவிட்டது. (அவர் கால்களில் செருப்பு இருந்தது, என் கால்களில் செருப்பில்லை என்பது வேறு விஷயம்)

                      வண்டியை நகர்த்திய மூன்றாவது நொடி மனதில் ஏதோ ப்ளாஷ் ஆக, பிரேக்கை அழுத்தினேன். உள்ளே சென்ற அப்பா வெளியே வந்து 'என்னாச்சு' என்றார். 'இல்ல, இங்க நீங்க ஸ்டார்ட் பண்ணி கொடுத்துட்டீங்க. அடுத்து கோவில்ல நான் நிறுத்திட்டு எடுக்கிறப்போ ஸ்டார்ட் ஆகலேன்னா என்ன பண்றது?' என்றேன். வேகமாக அருகில் வந்தவர் வண்டியை ஆப் செய்தார். மீண்டும் ஆன் செய்துவிட்டு 'இப்போ ஸெல்ப் ஸ்டார்ட் அமுக்கு' என்றார். நானும் அழுத்தவும் உடனே ஸ்டார்ட் ஆனது. நானோ ஆச்சர்யத்தின் விளிம்புக்கே சென்று விட்டேன். இப்போது முழு திருப்தியுடன் வண்டியை கிளப்பி பொறுமையாக கோவிலை அடைந்தேன். கோவிலில் தொழுதுவிட்டு வெளிவந்து வண்டியை ஆன் செய்து ஸ்டார்ட் பண்ண நினைத்தவனுக்கு ஒரு சந்தேகம். வண்டி ஸ்டார்ட் ஆகுமா என்று.

                        ஒரு சிறு சப்தமும் இன்றி அழகாக ஸ்டார்ட் ஆனது. இந்த வண்டியப் போய் ஸ்டார்ட் ஆகலேன்னு திட்டினேனே.. எனக்கு தான் சரியா ஹேண்டில் பண்ணத் தெரியல என்று என்னை நானே திட்டிக் கொண்டு வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தேன். ஒரு சிக்னல் கடந்த போது உள்ளே வந்துவிட்ட ஒரு ஆட்டோவின் மேல் இடித்துவிடாமல் இருக்க ஓரமாய் ரோட்டினின்றும் கீழிறக்க வண்டி நின்று போனது. மீண்டும் 'ஸெல்ப் ஸ்டார்ட்' டை அமுக்க ஸ்டார்ட் ஆகவில்லை. நான்கைந்து முறை ஸெல்ப் முயற்சித்தும் பயனில்லை. சென்டர் ஸ்டாண்ட் இட்டு வண்டியை அப்பா கிக் செய்தது போலவே உதைக்க ம்ஹும், இப்போதும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுத்தது. என் பால்ய கால எதிரி ஒருவனை மனதில் நினைத்தபடி ஓங்கி உதைத்த போதும் ஸ்டார்ட் ஆவதற்கான எந்த அறிகுறியும் காணோம். படபடவென பல முறை உதைத்தேன். பொறுமையாக சில முறை உதைத்தேன். எதற்கும் மசியவில்லை அது.

                           செருப்பில்லாத கால்கள் விண்ணென்று வலிக்க உதைக்கும் முயற்சியை தற்காலிகமாய் நிறுத்திவிட்டு செய்வதறியாமல் நின்றேன். என்ன சோதனை இது ஐயப்பா என்று மனதிற்குள் நினைக்க, அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் ஐயப்பனின் மெசஞ்சர் போல் தானே வந்து 'கொடுங்க நான் ட்ரை பண்றேன்' என்றார். அவரும் சில பல முறை உதைத்து பார்த்துவிட்டு முடியாமல் போகவே கடைசியில் வண்டியின் டேஷ் போர்டை பார்த்துவிட்டு என்னை நோக்கி நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்தார். "தம்பி, வண்டி ஓடுறதுக்கு பெட்ரோல் வேணும். இங்க பாருங்க சுத்தமா காலியா இருக்கு' என்று அவர் சொன்ன பிறகே அதை கவனித்தேன். பெட்ரோல் அளவை காண்பிக்கும் முள் என்னைப் பார்த்து "E" என்று இளித்தது. 'கொஞ்சம் தள்ளிட்டு போனா ஒரு கிலோமீட்டர்ல பெட்ரோல் பங்க் இருக்கு' என்று கூறிவிட்டு சென்றார்.

                               நானும் வேறு வழியின்றி வண்டியை தள்ள ஆரம்பித்தேன். எப்போதும் வண்டிக்கு புல் டாங்க் பெட்ரோல் அடிக்கும் எனக்கு எனது தந்தையின் செய்கை வித்தியாசமாக இருந்தது. என் வண்டியில் பெட்ரோல் எப்போதுமே ரிசர்வுக்கு கீழ் செல்ல விடமாட்டேன். அப்பாவின் வண்டியில் எப்போதும் ரிசர்வுக்கு மேல் வந்து பார்த்ததில்லை. என் நண்பர்கள் சிலர் கூட இதுபோல் தான் வண்டிக்கு பெட்ரோல் ஊற்றுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் கொடுமை. பெட்ரோல் நிறைய இருந்தால் ஆவியாகிவிடும் என்பது. இப்போது என் ஆவி போக தள்ளிக் கொண்டு சிரமத்துடன் நடந்த எனக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் பார்த்து திட்ட வேண்டும் போல் இருந்தது. இவர்களுக்கு ரிசர்வ் என்ற ஒன்றின் பயனே புரியவில்லையே என்ற ஆதங்கம் வேறு.

                             ஒரு வழியாய் வியர்த்து வடிய பங்க்கிற்கு முன் வந்து நின்றபோது அப்பாவிடமிருந்து போன். பெட்ரோல் இல்லாமல் ஏன் வண்டியை கொடுத்தார் என்று  அப்பாவிடம்  கேட்க எண்ணி வாய் திறந்த என்னை பேச விடாமல் 'சொல்ல மறந்துட்டேன், வண்டில பெட்ரோல் இருக்காது. வழில நின்னுடுசுன்னா சீட் கவர ஒப்பன் பண்ணிப் பாரு, உள்ளே ஒரு பாட்டில்லே பெட்ரோல் வச்சிருக்கேன். ஊத்திகிட்டு வா.. அந்த கைய வச்சுகிட்டு வண்டிய தள்ளிட்டு வராதே.' என்றவரிடம் 'சரி' என்பதை தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.



45 comments:

  1. //சிறிய வாகனங்கள் அதிகம் ஒட்டி பழக்கமும் இல்லை. // அடிங்...

    //நானும் அழுத்தவும் உடனே ஸ்டார்ட் ஆனது. நானோ ஆச்சர்யத்தின் விளிம்புக்கே சென்று விட்டேன். // காலையில் எடுக்கும் போது ஒருமுறை கிக்கர் உபயோகித்தால் போதும் என்ற சின்ன விதி கூட தெரியாத உம்மை எந்த சட்டத்தின் கீழ் செய்வது



    ReplyDelete
    Replies
    1. என் டூ-வீலரில் (ஸெல்ப் உள்ளது) இதுவரை அந்த "ஒருமுறை" கிக் எப்போதும் செய்ததில்லை.. தவிர, அப்பாவின் வண்டி சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு மேல் சர்வீஸ் செய்யாததால் கொஞ்சம் ஸெல்ப் எடுப்பது சிரமமாக உள்ளது.

      Delete
  2. // ஓங்கி உதைத்த போதும் ஸ்டார்ட் ஆவதற்கான எந்த அறிகுறியும் காணோம். // நல்லா வேணும்... தேவ தான்

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. இப்போ சந்தோசமா இருக்குமே? :)

      Delete
  3. //என்னைப் பார்த்து "E" என்று இளித்தது. '// EEEEEEEEEEEEEEEE

    ReplyDelete
  4. //ஆவியாகிவிடும் என்பது. இப்போது என் ஆவி போக தள்ளிக் கொண்டு // ஆவின்னாலே பிரச்சன தான :-)))))))))))

    //'சரி' என்பதை தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.// செம ட்விஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. எல்லாக் கஷ்டங்களும் பிறிதொரு நாளில் காமெடியாகவும் ட்விஸ்டுகள் நிறைந்ததாகவும் தான் தோன்றுகின்றன.. :)

      Delete
  5. கதை சுவாரசியம்... அருமை நண்பரே
    தம 2

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு.. சரவெடிப் பின்னூட்டங்களுக்கு!! :)

      Delete
  6. இறுதிப் பகுதி..............ஹ!ஹ!!ஹா!!!ஞாயித்துக் கிழமை நைட்டு செம சிரிப்பு,போங்க!ரொம்ப நன்றிங்க,பகிர்வுக்கு!!!

    ReplyDelete
    Replies
    1. இரசித்தமைக்கு நன்றி நண்பரே!!

      Delete
  7. சுவாரஸ்யமான பகிர்வு
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. //பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள் //

      தொடரவும் ன்னா இதே போல கஷ்டப்பட சொல்றீங்களா ஐயா.. ஹஹஹா .. :)

      Delete
  8. கையில் எதையோ வைத்துக் கொண்டு எதையோ தேடி அலைந்தது மாதிரி... சீட் கவரின் கீழேயே பெட்ரோலை வெச்சுட்டு ஆவி பறக்க தள்ளியிருக்கிறீர்...1 ஹா... ஹா... ஹா... ஐயோ பாஆஆஆவம்யா நீர்!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஸார்.. பெட்ரோல் டாங்க்க திறந்து பார்த்தபோது என் முகத்த நீங்க பார்த்திருக்கணுமே.. ம்ம்ம்

      Delete
  9. எனக்கு ஒரு டவுட்டு, அவ்வளவு பெரிய பெட்ரோல் டேன்க் இருக்கும்போது எதுக்கு பாட்டில்ல பெட்ரோல்? இருந்தாலும் ரசித்துப் படித்தேன்... சூப்பர்...த.ம.5

    ReplyDelete
    Replies
    1. இந்த ரிசர்வுக்கு கீழே பெட்ரோல் போட்டு நிறுத்தறவங்க நிறைய பேர் வண்டியில இத நான் பார்த்திருக்கேன்.. எனக்குதான் அந்த சமயத்துல நினைவுக்கு வராம போயிடுச்சு..

      Delete
  10. வணக்கம்
    ஆவி(அண்ணா)

    மனதை நெருடிய கதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. பால்ய கால எதிரி சரியில்லை போல... நண்பனாக்கி விட்டார்... ஹிஹி...

    // உள்ளே ஒரு பாட்டில்லே பெட்ரோல் வச்சிருக்கேன்... // இதை முதல்லேயே சொல்லக் கூடாதா...? ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. முதலிலேயே சொல்லியிருந்திருக்கலாம் தான்!! :(

      Delete
  12. //என்னைப் பார்த்து "E" என்று இளித்தது. '//
    போடா E mpty ன்னு சொல்லலையா ?
    த.ம +1

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் குறியீடு மூலம் விளக்கியது ஜி!

      Delete
  13. என் பால்ய கால எதிரி ஒருவனை மனதில் நினைத்தபடி ஓங்கி உதைத்த போதும் //ஓ..இப்படி எல்லாம் கூட இருக்கா..!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. வாங்க அக்கா, ரொம்ப நாள் ஆச்சு..

      Delete
  14. Replies
    1. வாங்க அமுதா.. வருகைக்கு நன்றி..

      Delete
  15. வண்டிக்கு எதிரே நின்று ஒரு ‘முறை’ முறைத்துவிட்டுக் கிக்கரை உதைத்திருந்தால் ஸ்டார்ட் ஆகியிருக்கும்.

    உங்கள் தோற்றம் அப்படி... கம்பீரமாக.

    ReplyDelete
    Replies



    1. அப்படியா சொல்றீங்க? (அவ்வளவு டெர்ரர்ராவா இருக்கோம் -மைண்ட் வாய்ஸ்)

      Delete
  16. நல்ல அப்பா..... நல்ல பிள்ளை.....

    ReplyDelete
  17. கடைசியில் கதை மாதிரி ட்விஸ்ட் வைச்சு முடிச்சிட்டீங்க! நிஜம்தானே! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நிஜமா நடந்தது தான் நண்பா!

      Delete
  18. முதல் சில பத்திகளுக்கு பட்டி , டிங்கரிங் பார்த்து போட்டுருந்தா அட்டகாசமான ஒரு சிறுகதை கிடைத்திருக்கும் . தி.கொ.போ.சீ. சிறுகதைகளை நூறு முறை படிக்க சிபார்சு செய்றேன் :)

    கடசி பத்தி சூப்பரு ....!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்.. மா.போ.சி க்கு அப்புறமா சிறப்பா இருக்கிறது நம்ம தி.கொ .போ.சீ தான்,. அவர் எழுத்துகள் கூட எல்லாம் கம்பேர் பண்ணலாமா.. தப்புப்பா தப்பு! ;)

      Delete
  19. // என் பால்ய கால எதிரி ஒருவனை மனதில் நினைத்தபடி ஓங்கி உதைத்த போதும் ஸ்டார்ட் ஆவதற்கான எந்த அறிகுறியும் காணோம்.// இந்த செய்முறையை குறித்துக் கொண்டேன் :) ... அன்பே சிவம் :)

    ReplyDelete
    Replies
    1. குறிச்செல்லாம் வைக்கிற அளவுக்கு பெரிய விஷயம் இல்லையே?

      Delete
  20. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் DD.. நன்றி..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...