Saturday, July 31, 2010

பேரம்!!

                  

                      "பங்கஜம், நான் மார்கெட்டுக்கு போயிட்டு வர்ரேன்" - மனைவியிடம் கூறிவிட்டு சந்தைக்கு தனது டி.வி.எஸ். 50 இல் கிளம்பினார் மாசிலாமணி. சந்தையில் கூட்டம் குறைவாக உள்ள ஒரு கடைக்குச சென்று "ஏம்பா, தக்காளி கிலோ என்ன விலை?" " அறுபது ரூபா அய்யா". " என்னப்பா இந்த வெல சொல்லரே, "ஐம்பது தான் தருவேன். ஒரு கிலோ போடு". கடைக்காரன் அரை மனதுடன் "பாத்து குடுங்கய்யா, காலையிலிருந்து வியாபாரமே சரியா நடக்கல" என்றவாரே தக்காளியை அவர் பையில் கொட்டினான். "அதெல்லாம் முடியாது. ஐம்பது தான்." என்று கூறிவிட்டு பேரத்தில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அடுத்த கடையை நோக்கி நகர்ந்தார்.

                     சந்தையில் பல கடைகளில் பேரம் பேசி குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கிய பின் பக்கத்தில் இருந்த ஒரு பூக்கடைக்கு வந்தார். "ஏம்மா, பூ முலம் என்ன வெல" " இருபது ரூபா சாமி" " முலம் பத்து ரூபான்னு ரெண்டு முலம் கொடு' "கட்டுபடியாகாது சாமி" என்றவளிடம் " அப்போ பூவ நீயே வச்சிக்க" என்றபடி நடக்க ஆரம்பித்தார். "இப்பிடி போனா எப்படி சாமி, நீ கேட்ட வெலைக்கே தர்ரேன்" என்றவாறு இரண்டு முலம் பூ மடித்து தந்தாள்.

                    தன்னுடைய எல்லா பேரங்களிலும் வெற்றி பெற்ற இறுமாப்பில் தனது டி.வி.எஸ். 50 இல் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றிருப்பார் ஒரு காவல் அதிகாரி அவரை வழிமறித்து "பெருசு, லைசென்ஸ் வச்சிருக்கியா" என்றார். ஒரு மஞ்சள் பையில் பத்திரபடுத்தி வைத்திருந்த லைசன்சை அவரிடம் கொடுத்தார். "இன்சூரன்ஸ் இருக்கா" - அதே மஞ்சள் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்துக் கொடுத்தார். "சரி ஓவர் ஸ்பீடுக்கு ஒரு இருநூத்தம்பது கட்டிட்டு சாவி வாங்கிக்க." என்றபடி வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டார்.

                  "அய்யா, நான் மெதுவா தானே வந்தேன்" என்றார் மாசிலாமணி. "இங்க கட்டுனா இருநூத்தம்பது, கோர்ட்டுக்கு போனா ஐநூறு, எது பெட்டரு". வேறு வழி அறியாதவராய் சட்டைப்பையில் இருந்து இருநூற்றம்பதை காவலரின் கையில் வைத்து விட்டு சாவியை பெற்றுக்கொண்டார். அவர் மனதில் ஒரு நொடி அந்த காய்கறி கடைக்காரனும், பூக்கடைகாரியும் கண்முன்னே தோன்றி மறைந்தார்கள்.

                              வலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின்
                              மெலியார்மேல் செல்லு மிடத்து.

Friday, July 30, 2010

மகா




" மகா- வெளியில என்னன்னவோ பேசிக்கறாங்க, அதெல்லாம் உண்மையா? " என்றபடி வீட்டுக்குள் நுழைந்தார் அப்பா.  "எதப்பத்தி கேக்குறீங்க அப்பா? " - மகா.
"உனக்கும் நம்ம பேமிலி டாக்டருக்கும் காதல் அது இதுன்னு பேசிக்கறாங்களே, இது நிசமா."

"ஆமாப்பா, நான் டாக்டரை மனசார காதலிக்கறேன். எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. நாங்க திருமணம் செய்துக்க ஆசைப்படறோம். அதுக்கு உங்க சம்மதமும், ஆசிர்வாதமும் வேணும்". "மகா, அப்பாகிட்ட என்ன இப்படியெல்லாம் பேசற. உனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது. தவிர அந்த டாக்டர் நம்ம ஜாதி கூட இல்ல" - அம்மா ஆவேசத்துடன் கேட்டாள்.

"என்ன பாக்கியம் இப்படி பேசறே. இந்த காலத்துல யாரு சாதி எல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்கறாங்க. அந்த டாக்டரை அவங்க அப்பா காலத்துல இருந்தே நமக்கு தெரியும். நல்ல குடும்பம். இந்த பசங்க நம்மள மதிச்சு நம்ம சம்மதத்தோட தானே கல்யாணம் பண்ணிக்க ஆசை படறாங்க. நாம பெரியவங்களா இந்த சின்னஞ் சிருசுங்களே சேர்த்து வைக்கறது தானே முறை!!" என்றார் அப்பா. "ரொம்ப தேங்க்ஸ் பா" மகிழ்ச்சியுடன் அப்பாவின் கால்களில் விழுந்தான் மகா என்கிற மகாதேவன்.



Saturday, July 24, 2010

அஜய் - THE HERO!

இக்கதையில் வரும் அனைத்தும் கற்பனையே! யாரையும் குறிப்பிடுவன அல்ல!!!

                     கோடம்பாக்கமே வெலவெலத்துப் போயிருந்தது. எங்கு பார்த்தாலும் போலிஸ் வண்டிகள் நின்றிருந்தன. எல்லா தொலைகாட்சிகளும் நடிகர் அஜய் காணாமல் போனதை பற்றிய செய்தியை திரும்ப திரும்ப அறிவித்து கொண்டிருந்தது. அவர் காணாமல் போய் இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது, அவரைபற்றிய எந்த தகவலும் போலிசுக்கு கிடைக்கவில்லை.
                      சமீபத்தில் தான் அவர் தனது நூறாவது படத்தை நடித்து இருந்தார். திரும்ப திரும்ப ஒரே மாதிரி கேரக்டரும், கதையே இல்லாத படங்களில் நடித்ததும், தேவையே இல்லாத பஞ்ச் டயலாக்குகளும்,  மக்களிடம் அவருக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் அவர் காணாமல் போனது எல்லோருக்கும் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
                        போலிஸ் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். தீவிரவாதிகள் யாரும் கடத்தியிருக்கக் கூடும் அல்லது அவர் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்லியிருந்ததால் அரசியல் கட்சிகளால் ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் விசாரித்துக் கொண்டிருந்தனர். தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ருபாய் சன்மானம் அளிப்பதாக அவர் தந்தை டைரக்டர் எஸ்.சி.சோமசேகரன் அறிவித்திருந்தார். 
                          அதே சமயம் விழுப்புரத்தை அடுத்த ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு கட்டடத்தில் நான்கு இளைஞர்கள் ஒரு அறையின் முன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த அறையின் உள்ளே நடிகர் அஜய் ஒரு சேரில் கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன் இருந்த ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து அவர் திரையில் நடித்த படங்கள் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ஒருவன் அறையின் உள்ளே நுழைந்தான்.. 
                            அவனிடம் அஜய் "சார்.. தயவு செஞ்சு இந்த படங்கள நிறுத்துங்க.  மூணு நாளா நான் என் படங்களையே பார்த்து எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போலிருக்கு. நான் பண்ணின தவறு எனக்கு புரிஞ்சிடிச்சு.. இனிமே தரமான, நல்ல கதையுள்ள படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன். ரசிகர்களோட கஷ்டத்த நான் இப்போதான் புரிஞ்சுகிட்டேன்" என்றான்.







Saturday, July 17, 2010

சிக்கன் (பேர கேட்டாலே எச்சில் ஊருதில்ல!!)

சிக்கனை உயிராக கொண்ட சிக்கடேரியன்களுக்கும், சிக்கனை சமைத்து போடும் எல்லா தாய்மார்களுக்கும், மிலிட்டரி ஹோட்டல்களுக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.



சிக்கனுண்டு வாழ்வாரே வாழ்வார்- மற்றோரெல்லாம் 
சுவைமிகு அமிழ்தொன்றை இழப்பர்


என்ற அங்கண்ணன் வாக்கிற்கிணங்க சிக்கனின் பெருமை அறியாதார் பலர் அதை உண்ணாமல் உதாசீனப்படுத்தி வாழ்வில் எல்லோருக்கும் எளிதாய் கிடைக்கும் அமிழ்தை இழக்கின்றனர். சிக்கன் சாப்பிடுவதால் உண்டாகும் சில நன்மைகளை அவர்களுக்கு எடுத்து சொல்ல விழைகிறேன்.

  • WHO வின் ஆய்வின்படி நாம் உண்ணும் உணவு வகைகளில் சிக்கனில் தான் மிக அதிக ப்ரோட்டீன் உள்ளது. 
  • மேலும் அது கேன்சர் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் திறன் வாய்ந்தது.
  • எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது. 
  • மனத் திறனிழப்பு (Alzheimer's Disease) நோயிலிருந்து நம்மை காக்கிறது.
  • மேலும் அன்றாட வாழ்வுக்கு தேவையான வைட்டமின் B, B6 போன்றவற்றை கொடுக்கிறது.
அது மட்டுமன்றி 
  • உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத பாவப்பட்ட செடிகளின், காய்கறிகளின் வாழ்வு காப்பற்றப் படுகிறது. 
  • சிக்கன் சாப்பிடுபவர்களால் அந்த சிக்கனின் வாழ்க்கைக்கோர் அர்த்தம் கிடைக்கிறது. 
ஒரே ஒரு சிக்கனை வைத்துக் கொண்டு சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் சாப்ஸ், சிக்கன் தந்தூரி, சில்லி சிக்கன், பட்டர் சிக்கன், சிக்கன் பிரியாணி, சிக்கன் பிரைடு ரைஸ்   இன்னும் பல வகைகள் செய்யலாம்.


அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் 

  • சிக்கனை தீண்டாதவர்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்
  • சத்துணவில் சிக்கனையும் சேர்த்து வழங்க வேண்டும்
  • மலிவு விலை சிக்கன் கடைகளை அரசே நடத்த வேண்டும்.
  • சிக்கன் பண்ணைகளுக்கு சலுகைகளை அளிக்க வேண்டும் 

சிக்கனின் பெருமைகளை போற்றுவோம்!!  சிக்கனை உண்டு செவ்வனே வாழ்வோம்!!





Wednesday, July 14, 2010

அம்மா-அப்பா





நாள் : வெள்ளிக்கிழமை, நேரம்: குழந்தை பிறக்க பத்து நிமிடத்திற்கு முன்...
அப்பா ஆபரேஷன் தியேட்டருக்கு முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். உள்ளிருந்து அம்மாவின் அலறல் கேட்டு மனம் பதைத்து கொண்டிருந்தவர் பத்து நிமிடத்திற்கு பின்னர் வெளியே வந்த டாக்டரிடம் " என்னாச்சு டாக்டர்" என்றார்.
"ஒண்ணும் கவலை படாதீங்க.. உங்களுக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கான். ஆனா அவங்களுக்கு தான் நிறைய ரத்தம் போயிடுச்சு.. ரொம்ப சிரமப்பட்டாங்க. நீங்க உள்ள போய் பாக்கலாம் " என்றார். உள்ளே சென்ற அப்பா அந்த பிள்ளையை கையில் ஏந்தி, அதன் பிஞ்சு விரல்களை முத்தமிட்டவாரே " அம்மாவை கஷ்ட படுத்திட்டயே படவா!"


ஒரு வயது குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு அம்மா அடுப்பில் பணி செய்கிறாள்... பக்கத்துக்கு வீட்டு பெண் " நாங்கல்லாம் புதுசா ரிலீஸ் ஆகியிருக்கற படத்துக்கு போறோம். நீ வரியா". "இந்த குட்டிய விட்டுட்டு நான் எப்டி வர்றது. நீங்க போயிட்டு வாங்க"


எட்டாம் அகவையில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் அந்த சிறுவன் பள்ளிக்கு செல்கையில்.. "அப்பா, ரொம்ப தூரம் நடக்க கால் வலிக்குது." " வாடா ராஜா நான் தூக்கிக்கறேன்". "இவ்வளவு பெரிய பையனாயிட்டு அப்பா இடுப்பில உக்காந்துட்டு இருக்கியே" ஆசிரியர் வினவ இறங்கி பள்ளிக்குள் ஓடினான்.


பத்தாம் வகுப்பில் படிக்கும் விடலையின் தாய் பணியிடத்தில் மயங்கி விழ...
"ஏம்மா, அவர்தான் கைநிறைய சம்பதிக்கராரே, அப்புறம் ஏன் நீங்களும் இப்படி கஷ்டப்படறீங்க". " இந்த காலத்துல ரெண்டு பெரும் சம்பாதிச்சாதானே பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்க முடியும்"


இரண்டாமாண்டு எஞ்சினியரிங் படிக்கும் இளைஞன் அப்பாவிடம்..
" அப்பா, காலேஜ்ல எல்லாரும் டூர் போறாங்க. நானும் போகணும் - ஒரு ரெண்டாயிரம் வேணும்." " ஆபிஸ்ல லோன் போட்டிருக்கேன். வந்ததும் கொடுக்கரேண்டா கண்ணு"


IT யில் பணிபுரியும் மகனிடம் மருந்து வாங்கி வரும்படி தந்தையிடம் சொல்லும் தாய்.. "அவனுக்கே இப்பதான் வேலை கிடைச்சிருக்கு. நிறைய செலவிருக்கும். ரெண்டு நாள்லே என் சம்பளம் வந்திடும். வாங்கி தர்ரேன்"
"டார்லிங்.. இன்னைக்கு ஈவனிங் சத்யம்லே சினிமாக்கு போவோமா ?"


திருமணத்தை குறித்த தீவிர சர்ச்சையில் தாயுடன் பிள்ளை.. 
" பட்டிக்காடு மாதிரி பேசாதேம்மா.. இப்போல்லாம் அரேஞ்சுடு மேரேஜ் எல்லாம் கிடையவே கிடையாது. யாரும் சாதி மதம் எல்லாம் பாக்கறதும் இல்ல. உனக்கும் பெருசுக்கும் பிடிக்கலேன்ன பேசாம இருங்க. போதும்"


நாள் : சனிக்கிழமை, நேரம்: குழந்தை பிறக்க பத்து நிமிடத்திற்கு முன்...



Tuesday, July 13, 2010

பார்த்த ஞாபகம் இல்லையோ

கடவுளை கண்டவர் இலர் - அதே போல் 
ஆவியை காணாதவரும் இலர்.


நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியே 
தேனிர் அருந்தும் போது


ஊட்டி மலை ஏறிடும் புகைவண்டியின் எஞ்சினில் 
அமர்ந்து கொண்டு புகை விடும்போது


அம்மா அடுப்பிலிருந்து இறக்கி வைத்த இட்லி 
தட்டின் மேலிருந்து நர்தனம் ஆடும் போது 


பால் குக்கருக்குள்ளிருந்து வாலிபன் போல் 
விசில் அடிக்கும் போது 


குளிர்கால விடியலில்  கம்பளியின் கதகதப்பில் 
சுவாசக்காற்று வெளியேறும் போது 


இப்படி ஆவியை நாம் அன்றாடம் பார்த்தும் 
பார்த்த ஞாபகம் இல்லாதது போல் உணர்வதேன்!!!



How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...