Saturday, July 31, 2010

பேரம்!!

                  

                      "பங்கஜம், நான் மார்கெட்டுக்கு போயிட்டு வர்ரேன்" - மனைவியிடம் கூறிவிட்டு சந்தைக்கு தனது டி.வி.எஸ். 50 இல் கிளம்பினார் மாசிலாமணி. சந்தையில் கூட்டம் குறைவாக உள்ள ஒரு கடைக்குச சென்று "ஏம்பா, தக்காளி கிலோ என்ன விலை?" " அறுபது ரூபா அய்யா". " என்னப்பா இந்த வெல சொல்லரே, "ஐம்பது தான் தருவேன். ஒரு கிலோ போடு". கடைக்காரன் அரை மனதுடன் "பாத்து குடுங்கய்யா, காலையிலிருந்து வியாபாரமே சரியா நடக்கல" என்றவாரே தக்காளியை அவர் பையில் கொட்டினான். "அதெல்லாம் முடியாது. ஐம்பது தான்." என்று கூறிவிட்டு பேரத்தில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அடுத்த கடையை நோக்கி நகர்ந்தார்.

                     சந்தையில் பல கடைகளில் பேரம் பேசி குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கிய பின் பக்கத்தில் இருந்த ஒரு பூக்கடைக்கு வந்தார். "ஏம்மா, பூ முலம் என்ன வெல" " இருபது ரூபா சாமி" " முலம் பத்து ரூபான்னு ரெண்டு முலம் கொடு' "கட்டுபடியாகாது சாமி" என்றவளிடம் " அப்போ பூவ நீயே வச்சிக்க" என்றபடி நடக்க ஆரம்பித்தார். "இப்பிடி போனா எப்படி சாமி, நீ கேட்ட வெலைக்கே தர்ரேன்" என்றவாறு இரண்டு முலம் பூ மடித்து தந்தாள்.

                    தன்னுடைய எல்லா பேரங்களிலும் வெற்றி பெற்ற இறுமாப்பில் தனது டி.வி.எஸ். 50 இல் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றிருப்பார் ஒரு காவல் அதிகாரி அவரை வழிமறித்து "பெருசு, லைசென்ஸ் வச்சிருக்கியா" என்றார். ஒரு மஞ்சள் பையில் பத்திரபடுத்தி வைத்திருந்த லைசன்சை அவரிடம் கொடுத்தார். "இன்சூரன்ஸ் இருக்கா" - அதே மஞ்சள் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்துக் கொடுத்தார். "சரி ஓவர் ஸ்பீடுக்கு ஒரு இருநூத்தம்பது கட்டிட்டு சாவி வாங்கிக்க." என்றபடி வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டார்.

                  "அய்யா, நான் மெதுவா தானே வந்தேன்" என்றார் மாசிலாமணி. "இங்க கட்டுனா இருநூத்தம்பது, கோர்ட்டுக்கு போனா ஐநூறு, எது பெட்டரு". வேறு வழி அறியாதவராய் சட்டைப்பையில் இருந்து இருநூற்றம்பதை காவலரின் கையில் வைத்து விட்டு சாவியை பெற்றுக்கொண்டார். அவர் மனதில் ஒரு நொடி அந்த காய்கறி கடைக்காரனும், பூக்கடைகாரியும் கண்முன்னே தோன்றி மறைந்தார்கள்.

                              வலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின்
                              மெலியார்மேல் செல்லு மிடத்து.

2 comments:

  1. என்னால் யூகிக்க முடிந்தது அவனுக்கு எதாவது நிகழும் என்று. கதையின் போக்கை மாற்றியிருக்கலாம் யூகிக்க முடியாதவண்ணம்.

    ReplyDelete
  2. i thought tvs would be gone for ever.. nice twist.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...