இன்ட்ரோ
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை பாரத்ததிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தமிழில் துப்பறியும் கதைகள் என்பது அதிகம் வரும் வகையறா கிடையாது. அதிலும் செவிகளுக்கு இனிமையான இரு பாடல்களும் இருக்க, என் பிரியப்பட்ட கிரிக்கட்டை கூட புறக்கணித்து விட்டு படம் பார்க்கச் சென்றேன்.
கதை
கல்லூரியை முடித்த கையோடு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்க தன் குருநாதரின் ஆசியோடு வேலையில் சேர்கிறான் நாயகன். சேர்ந்த இடத்தில் ஒரு சில நபர்களை நிழல் போல் தொடர்ந்து அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து கொடுக்க வேண்டும். இப்படி நான்கு பேருக்கு கொடுத்த பிறகு ஐந்தாவதாக தான் விரும்பும் பெண்ணையே பின்தொடர வேண்டிய நிலைமை. அப்போதுதான் தான் நிழலாய் தொடர்ந்து தகவல் கொடுத்த இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து போயிருப்பதை கண்டு சுதாரித்து மற்றவர்களையும் தன் காதலியையும் காப்பாற்ற, இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டறியவும் முனைகிறான். இவர்களை காப்பாற்றினானா இல்லையா என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஆக்க்ஷன்
நாயகன் அசோக் செல்வன் வில்லா படத்திற்கு பின் நடித்திருக்கும் படம், இன்னும் முகபாவங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு கம்பெனி கொடுக்கிறார். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் பாஸ்.. துப்பறியும் கதை என்பதாலோ என்னவோ இவர் பேசும் டயலாக் எல்லாமே அதிகபட்சம் பத்து வார்த்தைகள் மட்டுமே. ஆனாலும் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கக் கூடிய தகுதிகளும் இருக்கிறது. ஜனனி ஐயர் பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லாவிட்டாலும் பாடல் காட்சிகளில் அழகாக வந்து போகிறார்.நாயகனின் நண்பனாக வரும் காளி நல்ல குணசித்திர நடிகர். இயல்பான காமெடியும் இவரிடம் தமிழ் திரையுலகம் எதிர்பார்க்கலாம். ஹோட்டலில் அசோக்கிடம் இவர் வந்து மெதுவாக சாப்பிட்ட பில்லுக்கு பணம் கொடுத்துட்டு போ என்பது தியேட்டரில் எல்லோரும் ஒருசேர சிரித்த காட்சி.. ஜெயபிரகாஷ் வழக்கமான நடிப்பு. துப்பறியும் நிறுவன முதலாளி மற்றும் அசோக்கின் குரு ஆகியோரும் நல்ல நடிப்பு. ஆனாலும் காதல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்போடு இருந்திருக்கும்.
இசை-இயக்கம்-தயாரிப்பு
அறிமுக இசையமைப்பாளர் நிவாஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் குறைவில்லாமல் செய்திருக்கிறார். முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அனுபவமிக்க இசையை கொடுத்துள்ளார். நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமான ரமேஷின் முதல் முயற்சி நிச்சயம் சிறப்பான ஒன்றுதான். வழக்கம்போல் நல்ல, விறுவிறுப்பான படத்தை தயாரித்திருக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சி.வி குமாருக்கு ஒரு ஷொட்டு..
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
"யார் எழுதியதோ" மற்றும் "விண்மீன் விதையாய்" பாடல்கள். சங்கரன் குளக்கரை காட்சி மற்றும் கமலக்கண்ணன் சந்திப்பு இப்படி சில காட்சிகள் படத்திற்கு வலு சேர்க்கும் காட்சிகள்.
Aavee's Comments - Inspiring Detective with too much of love..!