ஆஷா மிஸ் - இதுதான் பள்ளியில் எல்லோரும் அவரை அன்புடன் அழைக்கும்
பெயர். வயது இருபத்தி சொச்சத்தில் இருக்கும். மகனின் கிளாஸ் டீச்சர். அவரை முதன்
முதலில் சந்தித்த நாள் இன்னும் என் நினைவில் உள்ளது. அன்று அவர் ஒரு ஊதா நிற சேலை
அணிந்திருந்தார். "ஆ. விஜயராகவன்" என்ற என் மகனின் பெயரை ஆவி ஜெயராகவன்
என்று தப்பாக வாசித்த போது அவரிடம் "தப்பா எழுதியிருக்கீங்க, அது ஆ.
விஜயராகவன்" என்றேன். உங்க பேர் "ஆவி தானே சார்?" என்றார்.
"ஆமா, ஆனா என் பையன் பேர் விஜயராகவன், ஜெயராகவன் இல்லே" என்றதும் தான்
செய்த தவறை புரிந்து திருத்திக் கொண்டார்.
மகனை பள்ளியில் கொண்டு போய் விடுவது மட்டுமே என்னால் சாத்தியம். மற்றபடி
அவன் படிப்பை கவனித்துக் 'கொல்வதெல்லாம்' என் மனைவியின் வேலை. என்றைக்காவது
விடுப்பிருந்தால் மாலையிலும் அவனை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன். பள்ளி
விடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். அந்த நேரத்தில் என்னையே சில
கண்கள் குறுகுறுவென்று பார்க்கும். (அல்லது பார்ப்பதாக எனக்கு தோன்றும்). ஒரு நாள்
அவர்கள் பேசுவது எனக்கு கேட்டுவிட்டது. "ஏய், இவர் தாண்டி நஸ்ரியாவோட
வீட்டுக்காரர்." "அப்படியா நான் கூட யாரோன்னு நினைச்சேன்". "அது
சரி, நாலு மணிக்கு விடப்போற ஸ்கூலுக்கு ரெண்டு மணிக்கு வந்து நிக்கறாரு"
என்று கூறிவிட்டு அவர்களுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு.
சரி ஓவர் டூ ஆஷா மிஸ். கடந்த வெள்ளிக்கிழமை என்று நினைவு (ரெண்டு
நாளைக்கு முன்னால நடந்ததுன்னு சொன்னா போறாதான்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கறது
புரியுது. ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கும் போது இப்படித்தான் பில்டப் கொடுக்கணும்).
அலுவலகத்திலிருந்து வந்ததும் என் மகன் ஓடிவந்து "அப்பா, என்னை அந்த ஆஷா மிஸ்
அடிச்சுட்டாங்க." என்றான். எனக்கோ கடும் கோபம். "ஏன் அடிச்சாங்க?"
என்றேன். என் மனைவியோ "இவன் என்ன செஞ்சான்னு கேளுங்க" என்றாள்.
"என்ன செஞ்சே?" என்றேன். "கிளாஸ்ல இடம் மாறி உட்கார்தேன் பா,
அதுக்கு அடிச்சுட்டாங்க." என்றாள்.
இடம் மாறி உட்கார்ந்ததற்காகவா அடித்தார்கள்? இதெல்லாம் ஒரு காரணமா?
என் மகன் பிறந்ததிலிருந்து எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறான். ஊர் வம்பை
விலைக்கு வாங்கியும் இருக்கிறான். ஒரு நாள் கூட அவனை கையை நீட்டி அடித்ததில்லை.
இந்த ஸ்கூல் மிஸ்சுக்கு அவ்வளவு தைரியமா? இதை தட்டிக் கேட்காவிட்டால் என் மகனுக்கு
என் மேல் இருக்கும் மதிப்பு என்னாகும். இதை நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே
என் மனைவி என் உள்ளக் கொதிப்பை புரிந்து கொண்டு "லேசா தான் அடிச்சாங்களாம்"
என்றாள். "நீ மிஸ் கிட்ட கேக்கலையா?" என்றேன். "விடுங்க இந்த
விஷயத்த பெருசு பண்ணாதீங்க" என்றாள். எனக்கு ஆறவில்லை. இன்னும் டென்ஷன் தலைக்கேறியது.
"அதெப்படி விட முடியும். நாளைக்கு நான் போய் கேக்குறேன்" என்றேன்.
உறக்கமில்லா அந்த இரவை அவசர அவசரமாக கடந்துவிட்டு அடுத்த நாள்
பாகுபலியின் நெஞ்சுரத்தோடு போருக்குத் தயாரானேன். ஆம் போர்தான். பள்ளியில்
மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு எதிரான போர். அடுத்த நாள் பள்ளிக்குச் எட்டரை
மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். மகனையும் உடன் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். அவன்
கன்னங்களில் நேற்று அடித்ததற்கான கைகளின் தடம் இன்னும் மெல்லிசாய் படிந்திருந்தது.
அவன் கைகளை பற்றியபடி டீச்சர்ஸ் ரூமுக்கு சென்றேன். எதிரே வந்த ஆசிரியர்
ஒருவரிடம் "ஆஷா மிஸ்" என்றேன். "ஆஷா மிஸ் உங்கள பார்க்க யாரோ
வந்திருக்காங்க" என்று கூறிவிட்டு அகன்றார். உள்ளிருந்து ஆஷா மிஸ் வெளியே
வந்தார்.
அவர் அழகு என்னை ஒரு நிமிடம் நிலைதடுமாறச் செய்த போதும் என் உள்ளே
ஸ்லீப்பிங் மோடில் இருந்த கோபக் குட்டிச்சாத்தான்களை கட்டவிழ்த்து விட்டேன். "பையன
போட்டு இப்படித்தான் அடிக்கறதா? அவன் கன்னத்துல இன்னும் வரிகள் இருக்கு பாருங்க. இடம்
மாறி உட்கார்ந்ததுக்கெல்லாம் அடிக்கிறதா? அதுவும் காட்டு மிராண்டித்தனமா? இதுதான் உங்க டீச்சர் ட்ரேயனிங்ல சொல்லிக் கொடுக்கறாங்களா? பொரிந்து தள்ளினேன்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆஷா மிஸ் "பேசி
முடிச்சிட்டீங்களா? ப்ளஸ் டூ படிக்கிற உங்க பையன் இடம் மாறி உட்கார்ந்தது என்
மடில, உட்கார வச்சு கொஞ்ச சொல்றீங்களா?" என்று அவர் கேட்டதும் என் மொத்த
கோபமும் அருகே நின்றிருந்த என் மகனின் மேல் திரும்பியது. அந்த இடத்தை விட்டு அவன்
எப்போதோ ஓடிப் போயிருந்தான்.