Friday, May 31, 2013

குட்டிப்புலி - திரை விமர்சனம்

                                  சிங்கம் பார்ட் 2 வருதுன்னு தெரிஞ்சதுமே படத்துக்கு குட்டிப்புலின்னு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சசிகுமாரின் முந்தைய படமான சுந்தரபாண்டியனிலும் கிராமத்து கதாப்பாத்திரம் என்பதால் பார்த்த விஷயங்களையே மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு சலிப்பு.


                                 கதையின்னு பெருசா ஒன்னும் இல்ல. சொந்த ஊருக்குள் சண்டியராய் சுற்றி வரும் சசிகுமார் தாயின் மேல் அளவுகடந்த பிரியம் வைத்திருந்தாலும் தன உயிருக்கு ஆபத்து இருப்பதால் தாய் பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் லக்ஷ்மி மேனனை விரும்புகிறார். பின் தன் அடாவடிகளை நிறுத்த, பர்ஸ்ட் ஹாபில் இவரால் பாதிக்கப்பட்ட வில்லர்கள் இவரை தாக்க வர அவர்களிடமிருந்து தப்பித்தாரா, திருமணம் நடந்ததா என்பதை ஒரு வித்தியாசமான கிளைமாக்ஸோடு  முடிக்கிறார் இயக்குனர்.


                                  சசிகுமார் சார், போதும் சார் சிம்புளா சில அட்வைஸ், ஒண்ணு  கேரக்டர மாத்துங்க.. அப்புறம் ஹீரோயின மாத்துங்க.. சில சீன்ல மறுபடியும் சுந்தரபாண்டியன் பார்த்த பீலிங். முக்கியமா ரோமென்ஸ் காட்சிகள குறைச்சுகோங்க.. சத்தியமா தாங்கல. அதுலயும் நீங்க விடுற ரொமேன்டிக் லுக் கவுண்டமணி சாரையும் மிஞ்சிடுது. நீங்க நல்லா தானே டைரக்ட் பண்ணிட்டு இருந்தீங்க?? அதையே பண்ணுங்களேன்..



                                   போன வாரம் முழுவதும் குருவாயூரிலேயே சுற்றியதலேயோ என்னவோ லக்ஷ்மி மேனன் கொஞ்சம் சுமாராகத் தான் தெரிந்தார். அம்மணி, கொஞ்சம் நடிக்கவும் செய்யலாம். அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை அரிவாளால் வெட்டிய  போது  கூட வரவில்லை. காமெடி என்ற பெயரில் ஆளாளுக்கு கடித்து துப்ப AC  அரங்கில் அத்தனை ரத்த வெள்ளம். இன்னும் எத்தனை படங்களில் இளையராஜாவின் பாடல்களை பின்னணியில் காட்டி போரடிப்பீர்கள். போங்கப்பா!! மழை வருதுங்கற காரணத்துக்காக கூட இந்தப் படம் ஓடுற தியேட்டருக்குள்ள போயிடாதீங்க மக்களே..!

25 / 100

Monday, May 13, 2013

மின்னல் வரிகளும், உலக சினிமாவும் பின்னே ஆவியும்!





                                  சொந்த அலுவல் காரணமாக கேரளா வரை சென்று திரும்பிய அலுப்பில் ( கேரளாவின் உள்ளூர்  சாலைகள் இன்னும் மேம்படுத்தப் படாமலே இருக்கிறது.) காலை எட்டரை  மணி வரை நன்றாக உறங்கிவிட்டேன். தீடீரென்று திங்கட்கிழமை "மின்னல்வரிகள்" பாலகணேஷ் அவர்கள் அழைத்து ஞாற்றுக்கிழமை கோவையில் சிந்திப்போம் என்று கூறியது நினைவுக்கு வர மொபைலை எடுத்து அவரை அழைத்தேன். மதியம் சந்திப்பதற்கு ஒரு அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டு மற்ற காரியங்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
 
                                    ஒன்றரை மணியளவில் பாலகணேஷ் சாரை சந்திப்பதற்காக நானும் அனாமிக்காவும் பயணமானோம். சிவானந்தாகாலனி பஸ் ஸ்டாப்பில் வைத்து அவரையும் பிக்கப் செய்து கொண்டு புரூக்பீல்ட்ஸ் மாலுக்கு பயணமானோம். ( வெளியூரிலிருந்து வரும் எல்லோரையும் நேராக இங்கே அழைத்து வருவது வாடிக்கையாகிவிட்டது). சென்றமுறை பாலகணேஷ் சாரை முதல் முறையாக பார்த்தபோது எங்களுக்குள் நிகழ்ந்த அதிகபட்ச உரையாடலே "ஹாய்" என்பதாக இருந்தது. இந்தமுறை அவரின் எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் நிறைய பேச முடிந்தது. அவருக்கும் என் எழுத்துக்கள் பிடித்தது என் பாக்கியம்..

                                      மாலுக்கு செல்லும் வழியிலேயே "உலக சினிமா ரசிகன்" பாஸ்கரன் சாரையும் அழைத்து மாலுக்கு வருமாறு அன்புக்கட்டளை விடுத்தோம். அனாமிக்காவை பார்க்கிங்கில் விட்டுவிட்டு நாங்கள் மட்டும் புட்கோர்ட்டிற்கு சென்றோம். அங்கே KFC இல் ஒரு சிக்கன் பர்கரை வாங்கிக் கொண்டபோது தான் கூட்டம் கரைபுரண்டோடியதை காண முடிந்தது.  வெவ்வேறு வயதுகளில் பெண்களும், அம்மணிகளுமாய் ( மீட்டிங்கில் கொவைநேரம் ஜீவா மிஸ்ஸாயிருந்ததை உணர முடிந்தது) எதிரில் தென்பட அவர்களை கண்டுகொள்ளாமல் நாங்கள் பேச ஆரம்பித்தோம். (நம்புங்க!!)



                                      சற்று நேரத்தில் பாஸ்கரன் சாரும் வந்துவிட சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பல்வேறு விஷயங்கள் பேசினாலும் மூவருக்கும் பொதுவாக சினிமா விஷயங்களே அதிகம் பேசப்பட்டது. ( ஆவியின் கருத்துக் கணிப்பில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் உலகில் எங்கு சந்தித்துக் கொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் விவாதிப்பது அரசியல்,சினிமா அல்லது இசை பற்றித்தான்.)
அதற்குப் பிறகு ஒரு சினிமாவிற்கு செல்லலாம் என்பது என் திட்டமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன் பார்த்த திருமதி தமிழ் என்ற உலக சினிமாவின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாததால் பாலகணேஷ் சார் அன்புடன் அதை மறுத்துவிட்டார்.

                                     பின் அவரை மீண்டும் சிவானந்தா காலனியில் விட்டுவிட்டு பின் "கோணங்கள் பிலிம் சொசைட்டி" திரையிட்ட "அமோர்" எனும் பிரெஞ்சு மொழி படம் பார்க்க சென்றோம். (படத்தின் விமர்சனத்தை விரைவில் ஆவி டாக்கீஸில் எதிர்பார்க்கலாம்) படம் முடிந்து நேராக "தி வில்லேஜ்" எனும் ரெஸ்டாரெண்ட்டில் இரவு உணவை முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு அனாமிகாவும் நானும் வீடு வந்து சேர்ந்தபோது ஒரு நாளை பயனுள்ளதாய் (?!!) செலவு செய்த திருப்தி மனதிற்குள்!!






                               
                                  

Wednesday, May 8, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (முதல் பயணம்)-6

                                         மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து பெட்டியிலிருந்த சட்டைகளில் எனக்குப் பிடித்த நீலத்தை எடுத்த போது அவள் அதிகம் பச்சை நிற உடைகள் அணிந்து வந்தது நினைவுக்கு வர ஒரு கரும்பச்சை நிற சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன். கரைபுரண்டோடிய உற்சாகத்தை பார்த்து சந்தோஷப்பட்ட அன்பு என்னிடம் வந்து "எப்படி சொல்லணும்னு முடிவு பண்ணிட்டியா.. ஆல் தி பெஸ்ட்  டா". "தேங்க்ஸ் டா" என்று கூறியவாறே ஏழு மணிக்கே வீட்டைவிட்டு கிளம்பினேன். கிராயூர் செல்ல பத்து நிமிடங்களே பிடிக்கும் என்றாலும் வீட்டில் இருக்க பொறுமையில்லை.

                                         வீட்டிற்கு அருகில் ஒரு மெக்கானிக் ஷாப்பும் ஒரு டீக்கடையும் இருந்தது. டீக்கடைக்கு சென்று டீ சொல்லிவிட்டு கடையின் முன்னே நின்றிருந்தேன். எங்கிருந்தோ திடீரென்று வந்த ஒரு கருப்பு நிற நாய் என்னருகில் வந்து நின்றது. நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு என்னை முறைப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தது. சிறு வயது முதலே நாய்கள் என்றால் மெத்தப் பயம் எனக்கு.. அமைதியாக நின்று கொண்டிருந்த அந்த நாய் சட்டென்று என்னை நோக்கி குரைக்க தொடங்கியது. நான் சற்று நகர்ந்து கடைக்கு வெளியே வந்து நின்றேன்.

                                        அதுவும் விடாமல் என்னை நோக்கி குரைத்தபடியே இருந்தது. "சூ..சூ" என்று அதை விரட்டப் பார்த்தேன். இப்போது மெல்ல எனை நோக்கி ஓடி வர ஆரம்பிக்க நான் கற்றுக் கொண்ட கத்தாஸுகள் அதற்கு முன்னே எடுபடாது என உணர்ந்த நான் ஓட ஆரம்பித்தேன். அவனும் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல் என்னை விடாமல் துரத்த என் வாழ்வில் அவ்வளவு வேகமாக நான் எப்போதும் ஓடியதில்லை. திரும்பிப் பார்க்கக் கூட தைரியமின்றி வண்டிகேட் பஸ் ஸ்டாண்டையும் தாண்டி மின்னல் வேகத்தில் ஓடி சர்க்கரை ஆலையின் அருகில் வந்து நின்றேன். திரும்பி பார்த்த போது நல்ல வேளை.. அவன் வரவில்லை. அருகிலிருந்த ஒரு மரத்தடியில் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.. அங்கிருந்து கிராயூர் நடக்கும் தூரமே என்பதால் நடந்து செல்லத் தீர்மானித்தேன்.

                                        கிராயூரை அடைந்த போது மணி எட்டாகியிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் ஓட்ட வேண்டுமே என்று எண்ணி அருகிலிருந்த மாணிக்கத்தின் வீட்டில் சென்று இளைப்பாறினேன். எட்டே முக்காலுக்கு அங்கிருந்து கிளம்பி கிராயூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்து நின்றேன். ஒரு பதினைந்து நிமிடத்தில்  தொலைவில் அவள் வருவது தெரிந்தது. இன்றும் பச்சை நிற சுடிதாரே அணிந்திருந்ததை பார்த்த போது மனதிற்குள் சந்தோசம். "ஹாய்  ஆனந்த்" என்றபடி கையசைத்தாள். நானும் பதிலுக்கு கையசைத்தேன். அருகில் வந்த போது தான் கவனித்தேன். எப்போதும் போல இன்றும் முகப்பூச்சுகளோ உதட்டுச் சாயமோ  எதுவும் இல்லாமலும்,  நேர்த்தியாக வாரப்பட்ட கூந்தலும், அதில் குடிகொண்டிருந்த மல்லிகையும் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

                                         "வந்து ரொம்ப நேரம் ஆச்சா, சாரி.. " என்றாள்.

முக்தி வேண்டி முனிவர்கள் தவம் கிடப்பர்-உன் 
முகம் காண தவங்கிடப்பதில்  தான் எனக்கு முக்தி ..

                                          "இல்ல.. இப்பதான் வந்தேன்.." காதல் வந்தால் கள்ளமும் கபடமும் உடனே வருகிறதே.. நான் சொல்லவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது. அந்தப் பேருந்து நாமக்கல் வரை செல்லும் என்பதால் ஏறிக்கொண்டோம். முன்னே இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தது. அவள் சென்று அமர்ந்து கொள்ள நான் அருகில் நின்று கொண்டேன். "ஏன் நிக்கறீங்க.. உக்காருங்க" என்று தனக்கு அருகில் இருந்த இருக்கையை தொட்டுக் காட்டினாள். முதல் நொடி கூச்சப்பட்டாலும் அடுத்த நொடி அமர்ந்து விட்டேன்.

                                        இப்போதே சொல்லி விடலாமா என்று எண்ணி என் இதழ்களைப் பிரிக்க, அவளோ "உங்க வீட்ல எவ்ளோ பேர்? " என்றாள்.. " மூணு பேர்" என்றேன். " நீங்க, அப்பா அம்மா மட்டும் தானா?" " இல்ல, ஒரு தங்கையும், பாட்டியும் இருக்காங்க.." "அப்புறம் மூணு பேர்னு சொன்னீங்க.." "ஆமாங்க, வீட்டுல என்னை ஆனந்துன்னும் கூப்பிடுவாங்க, ராஜான்னும்  கூப்பிடுவாங்க, அம்மா சிலசமயம் கண்ணான்னு கூப்பிடுவாங்க.. அதைத்தான் கேக்கறீங்கன்னு நெனச்சேன்." நான் சொல்லவும் அவள் இதழ்களில் பூத்திருந்த புன்னகை என் மனதை என்னவோ செய்தது. உறவினர்கள் அல்லாது வேறோர் பெண்ணுடன் இவ்வளவு அருகாமையில் அமர்ந்து சென்றது அதுவே முதல் முறை.

                                          அவளின் இந்த நெருக்கம் மனதிற்கு இனிமையாக இருந்தது. ஆனால் வயதுக்கே உரிய ஒரு தயக்கம், அருகருகே அமர்ந்தும் அவள் மேல் படாமல் சற்று தள்ளியே அமர்ந்திருந்தேன். அவள் சன்னலினூடே  வேடிக்கை பார்க்கும் அழகை ரசித்தேன். என் காதல் சொல்ல நல்ல தருணம் இதுதான் என எண்ணி குரலை சரி செய்துகொண்டு அவள் பக்கம் திரும்ப,  என் தோளில் யாரோ தட்ட, திரும்பிய போது கண்டக்டர் என்னிடம் "டிக்கட்" என்றார்."ரெண்டு நாமக்கல் குடுங்க" என்றவாறு பின்புற பாக்கெட்டில் கைவிட அங்கே எதுவும் தட்டுப்படவில்லை.. ஆமாங்க, பர்ஸ காணோம்..


தொடரும்..





Saturday, May 4, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (பூவே உனக்காக)-5

முந்தைய பதிவுகளுக்கு...                     


                                    முதல் முறையாக அவள் என் பேர் சொல்லி அழைத்ததும் புளங்காகிதமடைந்த நான் நின்று அவள் இதழிலிருந்து வரும் சொற்களுக்காய் காத்திருந்தேன். "ஆனந்த், நாளைக்கு ஏதாவது ப்ளான்ஸ் இருக்கா உங்களுக்கு?" என்றாள். " ஒண்ணும்  முக்கியமான வேலை இல்லை.. ஏன் ரமா?" "இல்லே, நாளைக்கு காலைலே நாமக்கல் ஆஞ்சிநேயர் கோவில் பக்கத்துல வேதாத்திரி மகரிஷியோட யோகா கிளாஸ் நடக்குது.. சங்கரியும், விஜியும் இன்னைக்கு நைட் ஊருக்கு போறாங்க.. சங்கீதாவுக்கு ஏதோ ஒர்க் இருக்காம்.. அவதான் சொன்னா நீங்க வாரா வாரம் நாமக்கல் போவீங்கன்னு.. நான் எங்கயும் தனியா போனதில்ல..இப் யு டோன்ட் மைண்ட் என் கூட வர முடியுமா??"   என்று கேட்டாள்.

                                       தேவதையின் முகம் பார்க்க,
                                        ஏங்கி நின்ற பக்தன் நான்!!
                                       தேவதையே வரம் கொடுக்க,
                                         மறுப்பொன்று சொல்வேனோ??
                                         
                                       சந்திரனும் சூரியனும் 
                                           உனைப்பார்க்கத் தவங்கிடக்க- 
                                        என்னுடனே நீ நடக்க 
                                            சம்மதமும் அவசியமோ ?? 
                                         

                                   ஒரு நிமிடம் உறைந்து போயிருந்த என்னிடம் "பிஸியா  இருந்தா பரவால்லே, நான் அடுத்த வாரம் போய்க்கிறேன்" என்றாள். "இல்லே, இன்பேக்ட் நாளைக்கு நானே நாமக்கல் போகணும்னு ப்ளான் வச்சிருந்தேன்.. நோ ப்ராப்ளம். காலைலே ஒன்பது மணிக்கு கிராயூர் வந்திடறேன்.. அங்கிருந்து போயிடலாம்." என்றேன். "ம்ம்.. சரி.." என்றவாறு முன்னே சென்றாள். சொல்லி வைத்தது போல் அவள் சென்றதும் அங்கே பாஸ்கர் வந்தான்.. "என்னடா, என்ன சொல்லிட்டு போறா?" என்று கேட்டான். "ஒண்ணுமில்லே டா, மேத்ஸ் நோட்ஸ் கேட்டா" என்று சரளமாக ஒரு பொய் சொன்னேன். " சரி, அய்யனார்லே பூவே உனக்காக படம் போட்டிருக்கான், போலாமா?" என்று கேட்டான்.. விஜய் படங்களின் மேல் அவ்வளவு ஈர்ப்பு இல்லையென்றாலும் இந்த படத்தின் பெயரைக் கேட்டதும் சரியென்று சொல்லிவிட்டேன்.

                                   மாலையில் படத்திற்கு சென்றோம். அதுவரை நான் கண்டிராத அளவிற்கு பயங்கரமான கூட்டம். அந்த கூட்டத்தினூடே சென்று இருவருக்கும் டிக்கட் வாங்கி வந்தான் பாஸ்கர். நெருக்கமான இருக்கைகள் கொண்ட அந்த திரையரங்கில் ஒருவாறாக  இடம் பிடித்து அமரவும் படம் போடவும் சரியாக இருந்தது. படம் ஆரம்பித்தபோதும் என் மனம் ரமாவின் வார்த்தைகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது. படத்தின் நாயகியின் உருவத்திற்கு பதில் ரமாவின் உருவமே திரையில் தெரிந்தது. சொல்லாமலே யார் பார்த்தது என்றபோது என் நெஞ்சோடு பூத்திருந்த பூவும் தலையாட்டியது.

                                       இடைவேளையின் போது பாஸ்கர் என்னிடம் அதிகம் பேசவில்லை. பார்ப்பதற்கும் டல்லாக இருக்கவும்  "என்னடா தலை வலிக்குதா" என்றேன். ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டினான்.  மீண்டும் படம் ஆரம்பித்த போது நாயகனின் காதலை நிராகரித்துவிட்டு நாயகி வேறொருவரை திருமணம் செய்வதாய்  ஒரு காட்சி.. அதை பார்த்துக் கொண்டிருக்கும் போது அருகில் யாரோ அழுவது போல் தோன்றியது. திரும்பி பார்த்த போது பாஸ்கர் குலுங்கி குலுங்கி அழுது  கொண்டிருந்தான். என்னவென்று கேட்டபோது ஒன்றும் சொல்லாமல் கண்ணை துடைத்துக் கொண்டான்.

                                      படம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது நான் வற்புறுத்திக் கேட்டதால் ஊரில் இருந்த அவனுடைய முன்னாள்  காதலி பற்றியும், அவள் அவனுடைய காதலை நிராகரித்து விட்டு திருமணம் செய்து கொண்டதையும் கூறினான். அவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்பதாலும், அவனுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தெரியாததாலும் அவன் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாக வந்தேன். என் வீட்டை நெருங்கும்போது என்னிடம் "அனுபவிச்சு சொல்றேண்டா, தெரியாமக் கூட லவ் எல்லாம் பண்ணிடாதே. அது போல வலி எதுவும் குடுக்காது" என்று கூறிவிட்டு சென்றான்..

                                       அவன் கூறியதை கேட்டபோது மனம் பாரமாக இருந்தது.  ஹிருதயத்தை யாரோ ஓங்கிக் குத்தியது போன்ற உணர்வு. வேகமாக அன்பழகனின் அறைக்கு சென்றேன். அப்போதுதான் உறங்க ஆரம்பித்திருப்பான் போலும். அவனை உலுக்கி எழுப்பினேன். தூக்க கலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்து "என்னடா" என்றவனிடம் "நாளைக்கு ரமாவிடம் என் லவ்வ சொல்லப் போறேன்" என்றேன்..

(தொடரும்)



                                   

                                 

Friday, May 3, 2013

எதிர் நீச்சல் - திரை விமர்சனம்

     


                                      சினிமா பின்புலம் ஏதும் இல்லாமல் ஒருவர் திரைக் கடலில் எதிர் நீச்சல் போட்டு முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் அறிமுகமாகும் முதல் காட்சிக்கு விழும் கைதட்டல்களே அதற்கு சாட்சி.  விஜய், தனுஷ், விஷால் எல்லாம் அதிரடிக்கு போய்விட கொஞ்சம் கருப்பா களையா,  தமிழ்நாட்டு லவ்வர் பாய் கேரக்டர் இடம் காலியாயிருக்க, அங்கே கால்மேல் கால் போட்டு அமர்கிறார் இவர்.



                                      குஞ்சிதபாதம் என்ற தன் பெயரை நண்பர்கள், ஆசிரியர் மற்றும் எதிர் வீட்டு குட்டிப்பையன் வரை எல்லோரும் சுருக்கமாக கூப்பிடுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சிவா பின் தான் நேசித்த பெண் தன்னை நேசித்த போதும் இந்த பெயருக்காகவே இவரை விட்டு செல்லும் போது அவர் பெயரை மாற்றுகிறார். பெயரை  மாற்றியதும் சுக்கிரன் ப்ரியா ஆனந்த் வடிவில் எதிரில் வந்து நிற்கிறான். அரும்பாடுபட்டு பள்ளி ஆசிரியரான  ப்ரியாவை கரெக்ட் செய்த பின்பு இவருடைய பழைய பெயர் மீண்டும் வில்லத்தனம் செய்கிறது. அந்த பெயரால் ஏற்பட்ட களங்கத்தை (???) எப்படி துடைத்து நல்ல பெயர் (?!) வாங்குகிறார் என்பதே கதை.



                                      படத்தின் முக்கிய பலம் இசை. "மூணு" படத்திற்கு பின் அனிருத் இளைஞர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். "Poetu" தனுஷ் தேர்ந்திருக்கிறார். இடைவேளைக்கு முன்னரே நான்கு பாடல்கள் வந்த போதும் ரசித்து பார்க்க முடிந்தது. சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு தனி பாணியில் ஒன் லைன் டைமிங் நக்கலோடு கலக்கல் நடிப்பு. இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டால் தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு செல்லலாம். ப்ரியா ஆனந்த் கீதா மிஸ் கேரக்டரில் என்னுடைய பள்ளிக் கால மிஸ்ஸை நினைவு படுத்தினார். பெரிதாய் நடிப்பதற்கு இடமில்லாவிட்டாலும் கொடுத்த பாத்திரத்தை நன்றாய் கழுவியிருக்கிறார்.. சாரி நடித்திருக்கிறார்.



                                     படத்தின் இரண்டாம் பாதியில் வந்த போதும் எல்லோரின் நடிப்பையும் ஓவர்டேக் செய்வது  "அட்டகத்தி" நந்திதா தான். இவர் மூலம் இயக்குனர் ஒரு நல்ல மெசேஜ் சொல்கிறார். விளையாட்டு துறையில் நடக்கும் வியாபாரங்களை துகிலுரித்துக் காட்டுகிறார். இவருடைய அப்பாவாக வருபவரும் கனகச்சிதமான தேர்வு. இவர்கள் மட்டுமல்லாமல் படம் முழுவதும் சிவாவின் நண்பனாய் பயணிக்கும் சதீஷ் கலக்கல். ஆனால் சந்தானத்தை காப்பி அடிப்பது போன்ற உணர்வு. மேலும் ஜெயப்ரகாஷ், நந்திதாவின் பாட்டி, சிவாவின் ஹவுஸ் ஓனர், மதன் பாப், ஆர்த்தி  என ஒவ்வொருவரும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.



                                       தனுஷ் மற்றும் நயன்தாராவின் நடனம் படத்திற்கு தேவையில்லை என்றாலும் சி கிளாஸ் ரசிகர்களை குஷிப்படுத்த உதவுகிறது. கடைசியில் அட்டகத்தி தினேஷை பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் சாதுர்யம். மாரத்தான் நம்ம ஊருக்கு புதுசு என்றாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லியிருப்பதால் ஒகே. அஞ்சு முதல் அறுபத்தியஞ்சு வரை எல்லாரும் ரசித்து பார்க்கலாம் இந்த எதிர் நீச்சலை!



78 / 100



                             

Wednesday, May 1, 2013

கிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்!!

               

                               கிறிஸ்டோபர் நோலனுக்கும் நலன் குமாரசாமிக்கும் என்ன சம்பந்தம்னு பார்கறீங்களா.. கிறிஸ்டோபர் நோலன் என் மனம் கவர்ந்த ஹாலிவுட் இயக்குனர். இவருடைய முதல் படமான "Following", பெரிய நட்சத்திர வேல்யு இல்லாத நடிகர்களை வைத்து, தன் கதையின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கையின் காரணம் வெறும் ஆறாயிரம் டாலரில்  அற்புதமாக எடுத்திருந்தார்.. பெரிய வசூல் இல்லாவிட்டாலும் (ஐம்பதாயிரம் டாலர் வரை சம்பாதித்தது) இந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். இவரே தயாரித்த இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு இதை கதை திரைக்கதை எழுதி இயக்கியதோடு ஒளிப்பதிவு செய்ததும் இவரே.



                                இதற்குப் பிறகு இவர் எடுத்த மேமேன்ட்டோ (நம்ம ஊர் கஜினி) படத்தில் இவருடைய பின்னோக்கி கதை சொல்லும் யுத்தி பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படமும் வசூலில் மகசூல் செய்யவில்லை என்றாலும் உலகத்திற்கு தன்னை ஒரு சிறந்த இயக்குனராய் தன்னை நிரூபிக்க உதவியது இந்தப் படம். இதன் பிறகு இவர் எடுத்த இன்சோம்னியா, தி ப்ரெஸ்டீஜ்  படங்கள் வித்தியாசமான திரைப்படங்களை விரும்பியவர்களுக்கு விருந்தாய் அமைந்தது.


     
                               பின்னர் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ், சூப்பர் ஹீரோ ரசிகர்களை இவரை பின்பற்றும்படி செய்தது. இதன் தொடர்ச்சியாக வந்த டார்க் நைட் அவதாருக்குப் பின் அதிக வசூல் செய்த படமாக இன்றளவும் உள்ளது. இவருடைய இன்செப்ஷன் திரைப்படம் ஆஸ்கார் அரங்கில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே..  சரி இவருக்கும் நம்ம நலன் குமாரசாமிக்கும் என்ன சம்பந்தம்.. இருவரும் நல்ல உலக சினிமா படைச்ச இயக்குனர்கள். முதல் படத்திலேயே என் மனம் கவர்ந்த இயக்குனர்கள்.


                               நாளைய இயக்குனர் எனும் தனியார் தொலைக்காட்சி இயக்குனர் தேடலில் கிடைத்த ஓர் உலக சினிமா இயக்குனர். தமிழில் என்றில்லை, உலகிலேயே இனி புதிதாய் சொல்வதற்கு என்று ஒரு கதை இருப்பதாய்  எனக்கு தோன்றவில்லை.. தான் சொல்ல வந்த கருத்தை/கதையை மக்கள் மனம் உணர்ந்து அவர்கள் ரசிக்கும் வண்ணம் படைக்கும் திறமை ஒரு சிலரிடமே காண்கிறோம். அந்த வகையில் நலன் வெற்றி பெறுகிறார்.



                            இவரும் நோலனைப் போலவே அதிகம் பிரபலமாகாத விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரை வைத்து இயக்கியிருக்கும் "சூது கவ்வும்" படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஒரு முழு நீள எண்டர்டெய்னர்.. விறுவிறு க்ரைம் கதையில் காமெடி கலந்து கலக்கியிருக்கிறார் இயக்குனர். இனிவரும் படங்களில் முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்..




How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...