Wednesday, October 31, 2012

ஃபன் சினிமாஸ் ( FUN CINEMAS )


                கோவையைச் சேர்ந்த சினிமா பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி.. கோவை பீளமேட்டில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஃபன் ரிபப்ளிக் மாலில் புதியதாக ஃபன் சினிமாஸ் திறந்துள்ளார்கள். கடந்த வாரம் வெள்ளி (அக்டோபர் 26) முதல் இது செயல்படத் துவங்கி உள்ளது..


                     

                  பி.எஸ்.ஜி. என்ஜினியரிங் கல்லூரியின் மிக அருகில் அமைந்துள்ள இந்த திரையரங்கிற்கு செல்ல ஏராளமான பேருந்துகள் உண்டு. எனினும் நகரத்தை விட்டு மிகத் தொலைவில் உள்ளது நிச்சயம் ஒரு மைனஸ் பாய்ன்ட். மேலும் இது போன்ற திரையரங்குகள் நடுத்தர மற்றும் உயர்குடிக்கு மட்டும் என்றாகிவிட்ட நிலையில் எல்லோரிடம் டூ-வீலர் அல்லது மகிழுந்து இருக்கும்.


                 பில்டிங்கின் கீழ்த் தளத்தில் மிகப் பெரிய பார்க்கிங் உள்ளது.. கிட்டத்தட்ட 50 முதல் 60 கார்களும், சுமார் 300 டூ-வீலர்களும் நிறுத்தும் வசதி உள்ளது. பார்க்கிங் செய்வதற்கு (முதல் இரண்டு மணி நேரம்) கார்களுக்கு ரூ. 20 டூ-வீலர்களுக்கு ரூ.10  . பின் அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 10 வசூலிக்கிறார்கள்.

                    திரையரங்கினுள் தின்பண்டங்கள் மட்டுமல்லாது நம் கைப்பை, பேக்பேக் ( Backpack ) ஆகியவற்றையும், காமிரா உள்ளிட்ட சாதனங்களையும் வெளியே டோக்கன் பெற்று வைத்துசெல்ல சொல்கிறார்கள்.. திரைப்படம் துவங்க பத்து நிமிடங்களுக்கு முன் உள்ளே நுழைய அனுமதி இல்லை. ஒவ்வொருவரையும் மெட்டல் டிடக்டர் சோதனை மற்றும் ஒரு சிப்பந்தி சோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

                 
                  உள்ளே ஐந்து ஸ்க்ரீன்கள் உள்ளன. உள்ளே சுமார் 1250-1300  பேர் அமரலாம். 7.1 ஒலி கட்டமைப்பு கொண்டிருப்பதால் துல்லியமான ஒலியினை கேட்கலாம். இத்திரையரங்கில் டிக்கட் புக் செய்ய பின்வரும் சுட்டியை கிளிக் செய்யலாம் அல்லது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட்  பயனீட்டாளர்கள் FUNAPP எனும் அப்ளிகேஷனை இறக்கிக் கொள்ளலாம். https://www.funcinemas.com/. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.120 மட்டுமே(??)!! இத்திரையரங்கம் சிறப்பாக செயல்பட்டு வரும் புருக்பீல்ட்ஸ்-தி சினிமாசுக்கு  போட்டியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



Tuesday, October 30, 2012

அமெரிக்காவின் சோகம்!!

                           பணம் உள்ளவன் வீட்டில் தான் பிரச்சனைகளும், கவலைகளும் அதிகம் இருக்கும் என்பது போல வல்லரசான, வலிமை மிக்க அமெரிக்காவுக்கு தான் எத்தனை எத்தனை சோகங்கள்!



                                2001  TWIN TOWER சோகத்தை நம்மால் இன்றும் மறக்க முடியாது.இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் தாக்கும் புயல் மழையும், பனிப்பேரழிவுகளும், டொர்னாடோ எனப்படும் சூறாவளியாலும் வீடிழந்து, உற்றார் உறவினர்களை இழந்து தவிப்பவர்கள் ஏராளம் பேர் அமெரிக்காவில் உள்ளனர்.



                                   நான் ஆறு வருடங்கள் அமெரிக்காவில் வசித்த போது  கேட்டிராத ஒரு வார்த்தை "POWER CUT".. ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ்.. அமெரிக்காவின் நியுயார்க் மற்றும் நியுஜெர்சி நகரங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் முற்றிலும் துண்டிக்கப் பட்டிருக்கிறது காரணம் "Sandy" என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த கொடூரப் புயலினால் "ஈஸ்ட் கோஸ்ட்" என்று சொல்லப்படும் நியுயார்க், நியுஜெர்சி, நார்த் கரோலினா, மாசசூசட்ஸ், வாஷிங்டன்  டி.சி. கென்டக்கி (KFC யின் பிறப்பிடம்), வர்ஜீனியா, மேரிலேண்ட் போன்ற கிழக்கு கடலோர மாநிலங்களும், சிகாகோ, மிசிகன், விஸ்கான்சின், போன்ற மாநிலங்களும் தாக்கப் பட்டிருக்கிறது..


                             அமெரிக்காவில் பரவலாக பாதிப்புகள் இருந்தாலும் பெரும் பாதிப்பு என்னவோ நியுயார்க் நகரத்தில் தான்!! தூங்க நகரமான "மன்ஹட்டன்" இன்று இருளில் மூழ்கிக்  கிடக்கிறது.. மேலும் இது பற்றிய தகவல்களை அறிய பின்வரும் சுட்டியை கிளிக்கவும்.. http://www.huffingtonpost.com/huff-wires/20121029/us-superstorm-sandy/




                             மாநிலமே வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. 11 பேரை பலியும் வாங்கியிருக்கிறது.. இந்தப் புயல் இத்தோடு  நின்றாலே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது ஓரிரு மாதங்கள் ஆகும்.. இதுவும் கடந்து போகும் என்றாலும் இவை விட்டுச் செல்லும் சோகங்கள், நம்மைப் போல் அங்கு வாழும் மக்கள் படும் சிரமங்கள் குறைய நாம்  பிரார்த்திப்போமாக!!
                              

Sunday, October 28, 2012

பீட்சா - திரை விமர்சனம்



                      மலேசியா சிங்கப்பூர்ன்னு சுத்தீட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் ஆறிப் போயிடிச்சி இந்த பீட்சா.. ஆனாலும் இந்த விமர்சனத்தை எழுதி என் வாசகர்கள்  ஒன்றிரண்டு பேரையாவது இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டுமென்பது என் ஆவல்..

                         

                         "நாளைய இயக்குனர்" புகழ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் முதல் படம் இது. "Hallucination", "Psycho Thriller", "Serial Killer" இப்படி பல த்ரில்லர்களை பார்த்து விட்ட தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லி இருப்பது இயக்குனரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. இன்னும் பல நல்ல படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் சார்..


                              விஜய் சேதுபதி - கதையின் நாயகன், பொருத்தமான தேர்வு.. இதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் இவருக்கு நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமையும். சில இடங்களில் காதல் கொண்டேன் தனுஷை நினைவுபடுத்தினாலும் தன் இயல்பான நடிப்பினால் மக்கள் மனம் கவர்கிறார்.  நாயகி ரம்யா நம்பீசன் - இவருக்கு அதிகம் வேலை இல்லையென்றாலும்  தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

                                       
                           
                                 ஆவிகள் உலகில் இருக்கிறதா, என்ற கேள்வியில் துவங்கும் படம் காதல், லிவிங் டுகெதர், ப்ரெக்னன்ட் என தடம் மாறிச் செல்கிறதோ என நாம் நினைக்கும் போது பீட்சா டெலிவரிக்கு செல்லும் நாயகன் மூன்று பேய்களிடம் மாட்டிக் கொள்கிறான். அது மூன்றும் பேய் தானா இல்லை வேறு யாராவது கொலை செய்கிறார்களா என நாம் நினைப்பதற்கு முன், தன் மனைவி கொல்லப்பட்டதாய் சொல்வதை  நம்ப முடியாமல், தன் மனைவி தான் பேயோ என நாயகன் நினைப்பது போல் நாமும் நினைக்க.. இப்படி படம் பல திருப்பங்களுடன் நம்மை ஒரு ரோலர் கோஸ்டர் ரைடில் ஏற்றிச் செல்கிறது.. 


                                   இசையின் பங்கும் இந்த படத்தின் முக்கிய பலம்.குறிப்பாய் ஸ்மிதா மற்றும் பாபியின் ரிங்க்டோன்களும் , மிரட்டும் ரீ-ரெக்கார்டிங்கும் கலக்கல். படத்தின் கிளைமாக்ஸ் ஹாலிவுட் படங்களை நினைவு படுத்துகிறது. ரூ.345, தில்லு முள்ளு பாடல், திவ்யா என படம் முடிந்தும் ரசிகர்கள் பேசிக் கொண்டே வெளிவருவது கேட்கிறது..குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்த தமிழ் பீட்சாவை நீங்களும் சுவைத்து பாருங்களேன்..



88 / 100
                       

டிஸ்கி -  எல்லாம் ஒகே.. ஆனா பீட்சாவுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்.. படத்தை இன்னொரு முறை பார்க்கணுமோ?? 

Friday, October 26, 2012

மைனாவுக்கு இன்று பிறந்த நாள்!!







நிமிர்ந்து நிற்கும் சிந்து சமவெளிப் பூவே!
சிந்தனையில் நின்ற தெய்வத் திருமகளே!!
காதலில் சொதப்புவது எப்படி என இளைஞர்களுக்கு
கற்றுக் கொடுத்து அவர் மனங்களில் முப்பொழுதும் உன்
கற்பனைகளை விதைத்து வேட்டையாடும் மைனாவே!
இன்று பிறந்த நாள் கொண்டாடும்  நீ இன்றுபோல்
என்றும் RUN  BABY  RUN!!


Tuesday, October 16, 2012

கனவுகள் மெய்ப்படுமா??



தாய் போல வேண்டுமென்றேன்- சிறு 
பிள்ளையாய் நீ வந்தாய்!
'பெண் நட்பு' பாராட்டும் -நல்ல 
தோழியாகவும் நீ இருந்தாய்!



சிகரங்கள் வேண்டாம் - சின்ன சின்ன 
ஆசைகள் போதுமென்றாய்!
முன்னும் வேண்டாம், பின்புறமும் வேண்டாம் 
உடன் வரவே விரும்பினாய்!



விடியல் வந்தால் எனக்கென்னவென்று - ஏழரை 
மணிவரை முகம் புதைத்துறங்குகிறாய்!
நீ அழகாய் இருக்கிறாய் என்று தினம் நான் 
பொய்யுரைக்க ஆசைப்பட்டாய்!!

கனவுகள் மெய்ப்பட வேண்டுமென்று- நான் 
எப்போதோ படித்திருந்தேன்..
கனவாய்ப் போன நீ மெய்யாய் 
வேண்டுமென விரும்புகிறேன்!!

Saturday, October 13, 2012

மாற்றான் - திரை விமர்சனம்

                 சுமார் 3 மணி நேரம் ஓடும் இந்த மாற்றான் படத்தின் கதைச் சுருக்கம் இதுதான். இந்திய அரசாங்கத்தால் பல மட்டங்களிலும் பலரால் புறக்கணிக்கப் படும் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர், மனம் வெறுத்து தன கண்டுபிடிப்பை தீய வழிகளில் பயன்படுத்துகிறார். இதன் மூலம் பல குழந்தைகள் பாதிக்கப் படும் அபாயம் இருக்கிறது. இந்த விஷயம் இவருடைய பிள்ளைகளான இரட்டையர்களுக்கு தெரிய வரும் போது நிகழும் சம்பவங்களே கதை.


                    சூர்யா வழக்கம் போல் அசத்தல் நடிப்பு. படத்தின் முதுகெலும்பு என்று கூட சொல்லலாம். அகிலன்-விமலன் எனும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடம்.. இரண்டு வேடங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை, வார்த்தை உச்சரிப்பு மற்றும் உடல் மொழி வாயிலாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.. யாரோ யாரோ பாடலில் கண்களில் நம்மையும் அறியாமல் எட்டிப் பார்க்க வைக்கிறார். தனது அண்ணனை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டு விமலன் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது  அகிலன் அழுது புலம்புவதாகட்டும் மனதில் நின்று விடுகிறார். 




                       கார்த்தி-காஜல் இடையே நாம் பார்த்த கெமிஸ்ட்ரி அண்ணன் சூர்யா- காஜல் ஜோடியிடம் இல்லை. தவிர வழக்கமான துருதுருப்போ, முக பாவனைகளோ, கவர்ந்திழுக்கும் நடனமோ காஜலிடம் இல்லை. விஞ்ஞானி அப்பாவாக நடித்திருப்பவர் (13 B  வில்லன்) தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக செய்து போகிறார்.. இரண்டாம் பாதி காமெடி இல்லாததாலும், தேவையற்ற சில காட்சிகளாலும் தொய்வுடன் செல்கிறது..



                         இரட்டையர்களை காண்பிப்பதாகட்டும், வெளி நாடுகள், இயற்கை என்று அனைத்தையும் அற்புதமாக படம் பிடித்த புகைப்பட வல்லுனருக்கு ஒரு சொட்டு.. சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் தன்னை மீண்டும் ஒரு முறை சிறந்த இசையமைப்பாளராய் நிரூபித்துள்ளார்.. 


                         நல்ல கதை தேர்ந்தெடுத்து படம் இயக்கிய கே.வி. ஆனந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் சில லாஜிக் இல்லா காட்சிகளை பற்றிய கேள்விகள். தன் நாட்டிலிருந்து உண்மை கண்டறிய வந்த வோல்கா ஏன்  மற்ற விளையாட்டு வீரர்களை முன்பே சந்திக்கவில்லை? தன் நண்பன் அசோக் மற்றும் வோல்கா இறப்புக்கு அழும் காஜல் தன் காதலன் இறந்த செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விசாரணையில் குறியாய் இருப்பது நெருடல்.. இது போன்ற ஓட்டைகளை தவிர்த்து இழுவையான கிளைமாக்ஸை தவிர்த்திருந்தால் இந்தப் படம் உலகத் தரத்துக்கு இணையான படம் என்பதில் ஐயமில்லை!!


75 / 100

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...