நலம் மட்டுமே நாடும் நண்பன் சீனுவுக்கு,
வணக்கம்!!
உங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். மட்டற்ற மகிழ்ச்சி!! என்னடா இவன் சீனுவுக்கு நேர்ந்துவிட்ட சோதனையான சம்பவங்களை எல்லாம் வாசித்த போதும் மகிழ்ச்சி என்று சொல்கிறானே என்று எல்லோரும் நினைக்கக் கூடும், அல்லது அந்த பதிவையே நான் வாசித்திருக்கவில்லை என்று கூட எண்ணக் கூடும். ஆனால் இரண்டுமே தவறு! நீங்கள் அன்புள்ள என்று தொடங்கி இப்படிக்கு சீனு என்று முடித்தது வரை மொத்தம் எண்ணூற்றி இருபத்தி ஐந்து வார்த்தைகள் உள்ளன. ஒன்றையும் தவறிக்கூட விட்டுவிடவில்லை. சரி, பிறகு அதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்படி என்ன இருக்கிறதென நம்மைச் சுற்றி உள்ளோரெல்லாம் வியப்பில் புருவம் உயர்த்துவதை என்னால் காண முடிகிறது. உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த அந்த சில உண்மைகள் அவர்களுக்கும் தெரிந்தால், உங்கள் பதிவை தீவட்டியைக் கண்ட மின்மினிப் பூச்சி போல் டரியலான முகத்துடன் வாசித்திருக்க மாட்டார்கள்.
நீங்கள் கதை சொல்ல ஆரம்பித்த சுவாரஸ்யத்தில் நிறைய பேர் உங்கள் பதிவில் நீங்கள் சொன்ன 'மஞ்சோலை' எனும் சொல்லாடலை "மாஞ்சோலை" எனும் ஊர் என்பதாகவே அர்த்தம் கொண்டிருப்பர். ஆனால் அவர்களுக்கெல்லாம் நீங்கள் குறிப்பிட்டது 'மஞ்சு தவழும் சோலை' பெங்களூரு என்பது விளங்கியிருக்க வாய்ப்பேதும் இருப்பதாகச் சிறிதும் தோன்றவில்லை. பிறகு தானே நீங்கள் நாய் என்று உருவகப்படுத்தியிருப்பது என்னவென்று புரிந்து கொள்வதற்கு?
நாய்க்கும் உங்களுக்குமான நற்தொடர்பைப் பற்றி நீங்கள் சொல்லித்தான் நானும் கவனிக்க ஆரம்பித்தேன். நாய்கள் என்ற பெயரைக் கேட்டவுடன் காத தூரம் சென்ற எனக்கே நீங்கள் குறிப்பிட்ட நாய்களைப் பற்றி படித்ததும் அவற்றை நெருங்கி கவனிக்கும் ஆவல் ஏற்பட்டது. என் நால்வகை உணர்வுகளையும் கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு உங்களையும், உங்களைப் பின் தொடரும் 'so called' நாய்களையும் நான் பின்தொடர ஆரம்பித்தேன். அட, இது எப்போது நடந்தது என நீங்கள் ஆச்சர்யம் கலந்த ஒரு புன்னகையை உங்கள் இதழோரம் வழிய விட்டிருப்பது தெரிகிறது. அதை இப்போதைக்குத் துடைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பல ஆச்சர்யங்கள் இதோ இந்தக் கடிதத்திலேயே கொட்டிக் கிடக்கிறது. அப்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நண்பகலில் வீட்டை விட்டு நீங்கள் புறப்படும் போது உங்கள் தெரு முனையில் உள்ள அந்த நீர்த்தொட்டியின் அருகே வசிக்கும் வீட்டில் உள்ள அந்த ஆந்திர நாய் மெளனமாக உங்களை ஒரு பார்வை பார்த்துப் பின் ஒன்றும் சொல்லாமல் தன் பிடரியை தன் நாக்கால் வருடிக் கொண்டே உங்கள் காலைப் பயணத்திற்கு மன்னிக்கவும், நண்பகல் பிரயாணத்திற்கு 'பிரியா' விடை கொடுக்குமே, அதில் தொடங்கி நீங்கள் மேடவாக்கம் மெயின் ரோடு சேர்கையில் உங்களுக்கு இடப்புறமாக இருக்கும் barrigade இன் ஓரமாக நின்று கொண்டு உங்களை ஓரக் கண்ணால் பார்த்தபடி கடந்து செல்லுமே, அதை என்றாவது ஒரு பகலில் நீங்கள் நின்று கவனித்ததுண்டா? எப்படி? சப்தமிட்டு உங்கள் கவனத்தை ஈர்க்கும் நாய்களை மட்டும் தானே நீங்கள் கவனிக்கிறீர்கள்.
அது போகட்டும், சோளிங்கநல்லூர் பைபாஸ் வழி நீங்கள் செல்கையில் ஒரு அகன்றுமில்லாமல், குறுகியும் அல்லாமல் ஒரு பாலத்தை கடந்து செல்வீர்களே, ஆம் வேகமாக ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி நீங்கள் கணப்பொழுதில் கடந்து சென்று விடும் அந்த பாலம் தான், அதன் ஓரத்தில் வாரத்தின் ஐந்து நாட்களும் அட்டவணையிட்டு ஒப்பனை செய்தபடி உங்களை கவனித்தபடி நின்றிருக்கும் அந்த நாயை என்றாவது மதித்து ஒரு வணக்கம் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையே, கண்களில் கொடூரத்துடன் உங்களை வசைபாடும் இரவு நாய்களை மட்டுமே நீங்கள் பதிவு செய்து வந்திருக்கிறீர்கள் என்பது நீங்களே மறுக்க முடியாத ஓர் உண்மை.
சரி இதுமட்டுமா, அலுவலக வாயில், கேபிடேரியா செல்லும் வழி, நாவலூர் AGS அருகில் என உங்களுக்காய் தவங்கிடக்கும் பல நாய்களை நீங்கள் உங்களை அறியாமலே உதாசீனப் படுத்தி வருகிறீர்கள். இந்தக் கொடுமைக் காணச் சகிக்காமல் தான் நான் ஒரு நாள் உங்கள் மனம் புண்படா வண்ணம் 'இனிமேல் நாயைப் பற்றி எழுதாதீர்கள்' என்று கூறினேன். இந்தக் கடிதத்தை உங்களை அல்லாமல் வேறொருவர் யாரேனும் வாசித்தால் அவர்களுக்கு நான் சொன்னதில் உள்ள அர்த்தம் புரிந்து ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்.
பரவாயில்லை போகட்டும் நாய்கள்! இப்போது முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட 'மட்டற்ற மகிழ்ச்சிக்கான' காரணத்திற்கு வருவோம். நீங்கள் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் இப்போதெல்லாம் பேய்கள் பற்றிய பயம் உங்களை ஆட்கொள்வதாய் குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த ஒரு 'எளிய' பாமரனும் அதை நிச்சயம் பேயோ பிசாசோ என்றே தான் எண்ணியிருப்பான். எனக்குத் தெரியாதா நீங்கள் எவ்வளவு திடங்கொண்டவர் என்று, அந்த வரிகளின் மூலம் உங்கள் வீட்டில் திருமண ஏற்பாட்டை துவங்கி விட்டார்கள் என்பதை எவ்வளவு சூசகமாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அது நிச்சயம் இந்த் வருடம் தனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பி அனுப்பிய ஏதாவதொரு இலக்கியவாதிக்கோ அல்லது உங்களை நன்கு புரிந்து கொண்ட ஒரு நண்பனுக்கோ மட்டுமே புரியும் ஓர் பரிபாஷை.
இதுவரை நீங்கள் தவிர்த்து வந்த ஆந்திர நாய், Barrigade நாய், சோளிங்கநல்லூர் பைபாஸ் நாய், அலுவலக நாய்கள் இவற்றை எல்லாவற்றையும் விட அச்சம் தரக் கூடியது நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பேய். இப்போது எங்கோ தொலைவில் சாலையில் கிடக்கும் மோகினிப் பொம்மையாய் மட்டுமே தெரியும் அந்தப் பேய், சில சுபகாரியப் பூஜைகளுக்குப் பின் உங்கள் பில்லியனில் அமர்ந்து செல்லும் நாளும் தொலைவில் இல்லை என்பதை நான் நிச்சயம் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் கூறியாக வேண்டும். உள்ளூர பயந்து நடுங்கினாலும் 'நானும் ரவுடிதான்' என்பதைப் போலவே உங்கள் செல்ல ஸ்ப்ளேனடரில் இன்று போலவே என்றும் வலம் வரத்தான் போகிறீர்கள்!!
வாழ்த்துகள்!
இப்படிக்கு,
'நல்லதை மட்டுமே எண்ணும்' ஆவி.