Wednesday, October 14, 2015

கிருஷ்ண பரமாத்மா's Visit to புதுக்கோட்டை!!



மதிய உணவை 'அருந்திவிட்டு' வேகமாக என் இருக்கைக்குச் சென்று அமர்ந்த போது என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை. எஸ்.ரா அவர்களின் பேச்சை அரங்கமே கவனித்துக் கொண்டிருக்க என் தொண்டைக் குழிக்குள் எதோ ஓர் வறட்சி. கவிஞர் வைரமுத்து அழகாய் எழுதி வைத்த 'வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஓர் உருவமில்லா உருண்டை'யை அவஸ்த்தையுடன் 'அனுபவித்துக்' கொண்டிருந்தேன். என்னுடன் பேச விழைந்த ஒன்றிரண்டு பேரை கண்டுகொள்ளாமல் என் 'நுண்ணறிவுப் பேசி' யில் முகப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன். நேரம் ஆக ஆக என்னால் சரியாக அமரக் கூட முடியவில்லை. யாரோ உள்ளே புகுந்து கொண்டு 'குத்தாட்டம்' போடுவது போன்ற உணர்வு. எழுந்து போய் அருகில் கடை எதுவும் இருந்தால் ஒரு "கார்பன் செறிவூட்டப்பட்ட" குளிர்பானம் குடித்தால் தேவலாம் என்று தோன்றியது. இரண்டு நாட்கள் வாகனம் ஒட்டியதன் அசதி நடந்து செல்லும் திட்டத்தை கைவிட வைத்தது. சுற்றிலும் நண்பர்கள் குழாம் எதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்க நான் மட்டும் அதைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் எரிச்சலுடன்.

அப்போது அங்கே வந்த ஒரு பெண்  கையிலிருந்த பணியாரத் தட்டை என்னிடம் நீட்டினார். நான் இருந்த அவஸ்தை ஒரு கணம் கோபமாக மாறியது. "வேணாங்க" என்று கொஞ்சம் கடுமையாக் கூறினேன். அடுத்த வினாடியே நான் அவரிடம் நடந்து கொண்ட விதம் எனக்கே தவறாகப் பட்டது. அந்த நேரத்தில் பின்னாலிருந்து சீனுவின் குரல் "பாஸ், உங்களுக்கு வேணாம்னா, எங்களுக்கும் வேண்டாமா?" என்று கேட்க சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு அந்தப் பெண்ணை அழைப்பதற்காகத் திரும்ப அவர் இரண்டு மூன்று வரிசைகள் முன்னே சென்றுவிட்டிருந்தார். 'சாரி' என்று சீனுவிடம் சொல்லிவிட்டு மீண்டும் என் "அவஸ்த்தானுபவத்தை" தொடர்ந்தேன். இப்போது வேறொரு பெண்மணி பணியாரம் கொண்டு வர நான் ஒரு பிளேட் வாங்கி சீனுவிடம் கொடுத்தேன். அதற்கு முன்பே அரசன் அவருடையதை பகிர்ந்திருக்க போதும் என்றார் சீனு. "போதுமென்றெல்லாம் சொல்லக் கூடாது. உங்களுக்காகத் தான் வாங்கினேன் என்று அவர் கைகளில் கொடுத்துவிட்டு திரும்பினேன். எனக்கும் பணியாரம் பிடிக்கும் தான் ஆனால் அதை ருசிக்கும் மனநிலையில் நான் இல்லை என்பதே உண்மை.

மேடையில் ஒய்யாரமாய் நின்றிந்த எஸ்.ரா அவர்களிடம் ஒவ்வொருவராய் கேள்விகள் கேட்க, அதற்கு அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என் பிரச்னைக்கு தீர்வு என்ன என்று நான் என் மனதுக்குள் சன்னமாய்க் கேட்ட கேள்விக்கு அவரும் சரி எவரும் சரி பதிலேதும் கூறவில்லை. என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற என் "தார்மீகக்" கோபத்துடன் கடவுளிடம் கண்மூடி பிரார்த்தித்தேன். அருகிலிருந்த ஒரு நண்பர் என்னைத் தட்டி "எஸ். ரா அங்கே சூப்பரா பேசிகிட்டு இருக்காரு நீங்க தூங்கறீங்களே" என்றார். கடவுளிடம் நான் என் இப்போதைய அவஸ்தையிலிருந்து விடுபட கோரிக்கை வைத்துக் கொண்டிருந்ததை அவர் நான் கண்ணயர்ந்து விட்டதாய் எண்ணிவிட்டார்.  "ஓ..மை..கடவுளே.. பூமியில் அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் நீ அவதரிப்பதாய் சொல்வார்களே, என்னுள் ஓர் அதர்மம் 'அசால்ட்' பண்ணிக் கொண்டிருக்கிறது. நீ அவதரிப்பது எப்போது?குட்டிக் கிருஷ்ணனாய் வளர்வது எப்போது? எனக்குள் தாண்டவமாடும் கம்சனை வதம் செய்வது எப்போது?



என் கேள்விகள் உனைச் சேர்ந்திடுமா என்ற ஓர் ஐயத்துடனே மீண்டும் கண்களை மூட எத்தனிக்க என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. அருகிலிருந்த நண்பராயிருக்கும் என எண்ணி கண்ணை மூடியபடி இருக்க அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது. "அங்கிள் தண்ணி வேணுமா?" என்று. கண்கள் திறந்தேன். அங்கே ஒரு குட்டிக் கண்ணன் கிளாஸ் அணிந்தபடி கையில் ஒரு கிளாஸுடன் நின்றிருந்தான். என் கண்களுக்கு கண்ணனை விடவும் அவன் என்னை நோக்கி நீட்டிய கிளாஸ் தான் Focus இல் இருந்தது. அனிச்சை செயலாய் உடனே வாங்கி அதை இரண்டே மிடற்றில் குடித்து முடித்தேன்.  "இன்னொரு கிளாஸ் வேணுமா அங்கிள்" என்ற கண்ணனிடமிருந்து மற்றொரு கிளாஸ் தண்ணீர் வாங்கிக் குடித்தேன். ஆச்சர்யம்!! இவ்வளவு நேரமாய் என்னுள் அட்டகாசம் செய்து கொண்டிருந்த  அந்த "காற்று தேவன்" இருந்த இடம் தெரியாமல் அகன்றிருந்தான். "தாங்க்ஸ்" என்றபடி கிளாசை நீட்டினேன். அந்த கண்ணனை இப்போதுதான் சரியாகப் பார்த்தேன். அது கண்ணன் அல்ல கண்ணன் அனுப்பிய தேவதை! ஒரு குட்டித் தேவதை!!

என் வியப்பு சற்றும் அகலாமல் நான் அந்த குட்டிப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க, பின்னாலிருந்து சீனு தனக்கும் தண்ணீர் வேண்டும் என கேட்க தன்னிடமிருந்த கூஜாவிலிருந்து கிளாசில் ஊற்ற எத்தனித்தாள் அவள். ஆனால் ஆச்சர்யம், அந்த கிளாசில் ஒரு சொட்டு தண்ணீர் கூட விழவில்லை. எப்படி விழும், அது கண்ணன் எனக்காக இந்த தேவதையிடம் கொடுத்தனுப்பிய மருந்தாயிற்றே. தன் மழலை மொழியில் "இருங்க எடுத்துட்டு வர்றேன்" என்று கூறிச் சென்றாள். மீண்டும் வந்தாள். தண்ணீரை சீனுவுக்கும் அரசனுக்கும் கொடுத்துவிட்டு நகர முற்பட்டவளிடம்  சீனு  இன்னொரு கிளாஸ் தண்ணீர் வேண்டும் என்று கேட்க ஒரு பொய்க் கோபத்துடன் "Jug ஏ காலியாயிடுச்சு. இதுக்கு மேல வேணும்னா அண்டா தான் கொண்டு வரணும்" என்று சொல்லிக் கொண்டே இன்னொரு கிளாசும் எடுத்து வந்தாள்.

சற்றும் விலகாத ஆச்சர்யத்துடன் சீனு என்னிடம் அவளைப் பற்றிக் கூறிய தகவல்களைக் கேட்டு இன்னும் அதிசயித்தேன். அந்த சிறு பெண் ஒரு வலைத்தளம் வைத்திருப்பதாகவும், அதில் அவளே எழுதவும் செய்வதாகவும் கூறினார். இந்த வயதில் இவ்வளவு பொறுப்புடனும் அதே சமயம் "துருதுரு" வென்றிருந்த அந்தக் குட்டிப் பெண்ணை நான் ஆச்சர்யம் துளியும் விலகாமல் பார்த்தபடியே அவள் பெற்றோர் யாரெனக் கேட்டேன். நண்பர் கஸ்தூரி ரங்கன் மற்றும் தோழி மைதிலியின் புதல்வி என்று கூறினார். "மகிழ்வாய்" இருந்தது அந்த 'நிறைமதி வதனா' வைப் பற்றித் தெரிந்து கொண்ட போது!!

அந்த குட்டிப் பெண்ணின் வலைத்தளம் இதோ: http://niraikasthurirengan.blogspot.in







22 comments:

  1. நிறைமதிக்கு நல்ல பாராட்டு. மதுவிற்கும் (கஸ்தூரி ரெங்கன்) மைதிலிக்கும் பிறந்த வலைப்பூ இன்னும் மலர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கொஞ்சம் மாறுபட்ட ரைட்டப் தல ... படிக்க சுவாரசியமாக இருந்தது ... நிறை மதி வதனாவிடம் சீனு போட்ட சண்டையை நீங்களும் சொல்ல மறந்துவிட்டிர்கள் அவரும் மறந்துவிட்டார் ...

    ReplyDelete
    Replies
    1. ஒவ் அது பேரு சண்டையா :-)

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சீனு . சின்ன குழந்தை கிட்ட சண்டை போட்டீங்களா :)

      Delete
  3. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு"நிறைமதி வதனா " ஒரு சான்று .. இதற்கு மேல் எனக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை ...

    ReplyDelete
  4. ஸ்வீட் செல்லம் .பெற்றோர் போலவே அறிவான குழந்தை.God bless her .

    ReplyDelete
  5. இன்னொரு விடயம் அடுத்த முறை வாயு பகவான் நடனமாட துவங்குமுன் நீங்கள் ஒரு கும்பா வெந்நீர் அருந்தவும் .

    ReplyDelete
  6. லேட்டா வந்த உம்மை
    பெஞ்சு மேல நிக்க வச்சு
    தண்டிக்கனும்னுதான்
    நினைச்சேன்.
    உம்மோட எடைய தாங்குற பெஞ்சு இன்னும் தயாராகலைன்னு சொன்னாங்க. அது போக இப்படி ஒரு பதிவு போட்டு என் கோபத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் தப்பிச்சிட்டீரு...

    ReplyDelete
  7. வணக்கம்

    அறியத்தந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அட! ஆவி! கவித்துவமான, இலக்கிய நடையுடன் ஒரு பதிவு!!! அதுவும் நாங்களும் மிகவும் ரசித்த எங்களுக்குத் தோழியான, ஏற்கனவே எங்களுக்குத் தெரிந்த, 32 அடி பாயும் அந்தக் குட்டிப் புலி நிறைகுடம் தளும்பாத பெற்றோரின் நிறை- நிறைமதி வதனா. பெயரிலேயே அந்த தேவதையைப் பற்றிய செய்தி அடங்கியுள்ளதோ!!

    மற்றுமொரு செய்தி தருகின்றோம். அந்தக் குட்டித் தேவதை எழுத்தில் மட்டும் வரைவதில்லை! படங்களும் கள்ளம் கபடமற்ற அந்தக் குழந்தை மனது வெளிப்பட வரைகின்றாள்...

    ReplyDelete
  9. ஆளாளுக்கு இப்படி எழுதி வராத என்னை இன்னும் வருத்தப்பட வைக்கிறேங்கீளப்பா! இதுக்காகவே தனியா ஒரு புதுக்கோட்டை ட்ரிப் ப்ளான் போட்டு கிளம்பிட வேண்டியதுதான் போல இருக்கு!

    ReplyDelete
  10. வதனா வளமுடன் பல்லாண்டு வாழ்க!வளர்க! கா(ஆ)விய நடை நன்று!

    ReplyDelete
  11. நிறை செல்லம் இப்படி எல்லாரையும் impress பண்ணியிருக்காளே.. :-) God bless her.
    உங்கள் எழுத்தாக்கத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  12. Good one Aavee.....

    May all the beautiful things happen to the little queen....

    ReplyDelete
  13. பதிவு கொஞ்சம் படிக்கும்போதே என்ன
    ஆவிப்பா பார்ட் 2 ஓ என்று நினைத்தேன்.

    கடைசியில் தான் புரிந்தது.

    இந்தப் பதிவை அந்தப் பெண்
    படித்து படித்து எப்படி மகிழ்வாள்.!!
    அவள் அன்னை
    எப்படி எப்படி பெருமிதம் கொள்வாள். !!
    அந்தப் பெண்ணுக்கு இந்த தாத்தாவின்
    ஆசிகளை ஸ்பீட் போஸ்டில் அனுப்புங்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  14. ஆவி சகா! உண்மையில் கண்கள் பனிக்கிறது. இதயம் இனிக்கிறது. நிறையிடம் ஆவி உன்னைபற்றி இப்படி ஒரு போஸ்ட் எழுதியிருக்கிறார் என சொன்னேன். அவள் அந்த அங்கிள் தொண்டையை நீவிகிட்டே இருந்தாங்க, அதான் அவங்கள கூப்பிட்டுக் கேட்டேன் என்று வேறு சொல்கிறாள். மேலே இத்தனை பேர் அவளை வாழ்த்தியிருப்பது சுப்புதாத்தா சொல்வது போல எண்ணி எண்ணி மகிழ வைக்கிறது சகா!! அவள் செல்ல கிரேஸ் அத்தை வேறு அத்தனை சந்தோசபடுகிறார். உங்கள் அன்புக்கெல்லாம் இந்த குடும்பம் என்ன கைம்மாறு செய்யபோகிறது?! இப்போ வலைப்பூவே ஒரு குடும்பம் போல இருப்பதாக தோன்றுகிறது! மிக்க நன்றி சகா!

    ReplyDelete
  15. சின்ன பிளாஸ்டிக் பௌச்சில் கொஞ்சம் சீரகம் வைத்திருங்கள். கொஞ்சம் மென்றுவிட்டு ஒரு மிடறு தண்ணீர் குடித்தால் போதும். வனமாலி வயிற்றுக்குள் அமைதியாய் தூங்குவான்.

    ReplyDelete
  16. இது அனுபவமா, பதிவர் சந்திப்பு பற்றிய பதிவா, நண்பர்களுடனான அரட்டையா அல்லது நிறை பற்றிய பதிவா எனக் குழம்பிவிட்டேன். நிறை பற்றிய அறிமுகம் அருமை.

    இதுவரை வாசித்திராதவகையில் ஆவியின் கைவண்ணத்தில் வித்தியாசமான - மிக சுவாரஸ்யமான - பதிவு...

    ReplyDelete
  17. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  18. வித்தியாசமா எழுதியிருக்கீங்க ரசித்தேன் அவ்வபோது தொடரட்டும் இது போன்ற எழுத்து நடை

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails