"தல" பட ரீலிசுக்கு காத்திருந்த அதே டென்ஷன், எதிர்பார்ப்பு, சந்தோசம், ஆர்பரிப்பு எல்லாமே இந்த பதிவர் திருவிழாவுக்கும் உண்டு. காலண்டரின் தேதிகளை கண்ணா பின்னவென்று கிழித்து செப்டம்பர் ஒன்றில் நிறுத்தியபோது உற்சாகம் பீறிட்டது. ஆனால் முன்கூட்டியே தேதிகளை கிழித்து விட்டபடியால் வீட்டில் ஏச்சுகளும் பேச்சுகளும் ஏராளம்.. சரி, ஏசுநாதரையே ஏசிய கூட்டம் தானே இது என்று விட்டுவிட்டு மற்றொரு காலண்டரைக் கிழிக்க புறப்பட்டேன்.
அடுத்த காலண்டரில் கை வைத்ததும் ஆளாளுக்கு தடுக்க வந்தார்கள்.. கைகள் குணமாக வேண்டுமெனில் சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுமாறு டாக்டர் கூறியுள்ளார், அதில் இதுவும் ஒன்று என்றதும் அமைதியானார்கள். காலண்டரில் தேதிகள் கிழித்ததற்கு எதற்கு இவ்வளவு ஆவேசம் என்று யோசித்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் அவர்கள் கோபம் நியாயமாக பட்டது. எங்கள் வீடு மட்டுமல்லாமல் இந்த ஒரு மாதத்தில் நான் சென்ற உறவினர் வீடு, நண்பர்கள் வீடு என எல்லார் வீட்டு காலண்டரிலும் இப்போது செப்டம்பர் ஒன்று சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
நான் சென்னையில் நடக்கும் பதிவர் மாநாட்டிற்கு செல்வதை எப்படியோ தெரிந்து கொண்ட (??) என் உறவினர்களும் நண்பர்களும் ஆலோசனை கூற, சில நாட்கள் முன் அனுமதி அளித்த அம்மா இப்போது "கை கொஞ்சம் சரியாகட்டுமே பா.." என்றார்.. நானோ "அம்மா, நீங்க வலுவிழந்த இந்த இரு கைகளை பார்க்காதீங்க.. என் வலக்கையாக ஜீவாவும், பாஸ்கரன் சாரும் வர்றாங்க.. இடக்கையாக எழில் மேடமும், கலாகுமரன் சாரும் வர்றாங்க.. கூட என் மனதில் இருக்கிற நம்பிக்"கை".. அப்புறம் எப்பவும் என் கூட இருக்கும் நீங்க வேண்டுற பிள்ளையாரின் தும்பிக்"கை".. என்றதும் மறுபேச்சு ஏதும் இல்லாமல் சரியென்றார்.
உற்சாகத்தின் உச்சியில் இருக்கும் நான் உலகத்துக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் (அரசியல்வாதி பேசுற மாதிரி ஆயிடிச்சோ??) வரும் செப்டம்பர் முதல் தேதி பதிவர் சந்திப்பை முன்னிட்டு கோவையிலிருந்து சென்னை செல்லும் சிறப்பு பேருந்து "கோநேஜீ டிராவல்ஸ்" (விரிவாக்கம் கேக்கப்படாது) சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) காலை கோவை நேரத்தில் கிளம்பும் சாரி ஒன்பது மணி சுமாருக்கு கோவை காந்திபுரம் அருகில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு முன் இருந்து பயணம் துவங்கும் என்பதை இந்த நிகழ்காலத்தில், இனியவை கூறலாய் எடுத்துக் கொண்டு சிற்றுந்தில் பல உலக சினிமாக்களை ரசித்த படியே புன்னகையை சின்ன சின்ன சிதறல்களாய் விட்டு வண்ணத்துப்பூச்சியாய் செல்லலாமென்றும் ஆண்களுக்கும், புதுமை பெண்களுக்கும் மகிழ்ச்சியுடன் கூறி, இந்த பொன்னான சந்திப்புக்கு வாய்ப்பளித்த சென்னை பதிவர் சந்திப்புக் குழு கமிட்டி மெம்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, மேலும் இதுபோன்ற சந்திப்புகள் அமைவது குறிஞ்சிப் பூ பூப்பது போல் எப்போதாவது நிகழும் என்பதால் (யாருப்பா மைக்கை பிடிங்கினது)..
சரி சரி, கொங்கு நாட்டு அன்பர்களே.. இதுவரை நீங்க முடிவெடுக்கலைன்னாலும் பரவாயில்ல.. திருவிழாவிற்கு வர நீங்க இப்ப ஆசைப்பட்டா உடனே உங்க செல்பேசியை எடுத்து 9894401474 என்ற எண்களை ஒற்றி "ஹலோ, நெப்போலியனா?" என்று கேட்டவுடன் "நீங்க பதிவர் சந்திப்புக்கு வர்றீங்களா" என்ற கேள்வி மறுமுனையிலிருந்து ஒலிக்கும். உங்கள் வருகையை அங்கே பதிவு செய்துகொண்டு திருவிழாவில் கலந்து கொண்டு கவி மழையில் நனைய வருமாறு நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. வர்ட்டா..