Saturday, December 29, 2012

CZ 12 - சைனீஸ் சோடியாக் - திரை விமர்சனம்

                            ஜாக்கி சானின் கடைசி ஆக்க்ஷன் திரைப்படம் என்ற முத்திரையோடு வெளிவந்திருக்கும் இந்தப் படம் "அகில உலக சூப்பர் ஸ்டார்" இவர்தான் என்பதை நிச்சயம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.. ஆக்க்ஷன், காமெடி, சென்டிமென்ட் மற்றும் இவற்றை தாங்கிப் பிடிக்கும் வலுவான கதை என்று வழக்கமான ஜாக்கி சானின் எல்லா அம்சங்களும் நிறைந்த படம்.



                             போரில் இங்கிலாந்து சீனாவிடமிருந்து கடத்தி சென்ற பன்னிரண்டு புராதன சின்னங்களை ( நம்ம ஊர் கோஹினூர் வைரத்த சுட்டுட்டு போன மாதிரி) மீட்டு வர பணியமர்த்தப் படுகிறார் JC  (ஜாக்கி சான் ). இவர் தன்  குழுவுடன் சென்று பல சாகசங்கள் செய்து ஆபத்தான எரிமலையின் முன் கடைசி சின்னம் வரை மீட்பது தான் கதை.


                              டைரக்டர், புரோடியுசர், பாடகர், சண்டைப் பயிற்சியாளர் என பதினைந்து பொறுப்புகளை ஏற்று அதற்காக கின்னஸ் ரெக்கார்டு புக்கில் (இரண்டு சாதனைகள்) இடம் பெற்றிருக்கிறார் நம்ம ஜாக்கி.. (நம்ம டி.ஆர். சார் ஏன் இதுக்கு முயற்சி செய்யல?) இந்த வயதிலும் உடலை வளைத்து அவர் சண்டை போடும் காட்சிகள் அபாரம். (இன்னமும் இளமைத் துள்ளல்). படத்தின் இறுதியில் வழக்கும் போல் இடம்பெறும் ப்ளூபர்ஸ் காட்சிகள் மட்டுமல்லாமல் ஜாக்கி பாடிய பாடலும் இடம்பெறுகிறது.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!




80 / 100

                                2012 நமக்கு எப்படி ஆரம்பித்ததோ தெரியாது. ஆனால் அதன் முடிவு நமக்கு நிச்சயம் சோகம் தருவதாய் உள்ளது. சச்சினின் ஓய்வு அறிவிப்பு மற்றும் ஜாக்கியின் கடைசி ஆக்க்ஷன் படம் என்பது வருத்தத்தை தந்தாலும் அவை இளைஞர்களுக்கு வழிவிட்டு வழிகாட்டும் என்பதால் சந்தோஷத்தோடு அவற்றை நாம் ஏற்றுக் கொள்வோம்..! இந்த வருடத்தின் கடைசி பதிவு இது என்பதால் எல்லோருக்கும் 2013 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கூறிக் கொள்கிறேன்..!


Saturday, December 22, 2012

2012 -சிறந்த 10 பாடல்கள்!

                   

                             2012 பல நல்ல திரைப்படங்களை கொடுத்திருக்கிறது. அவற்றில் ( எனக்கு மிகவும் பிடித்த..) சிறந்த 10 பாடல்களை  இங்கே தொகுத்துள்ளேன்.. இது 2012 ல் வெளியான திரைப்பாடல்களில் இருந்து மட்டுமே.



 10 வது இடம்
                            பாடல்:   வீசும் வெளிச்சத்திலே..
                              படம் :   நான் ஈ
                             இசை :   மரகதமணி



 09 வது இடம்
                            பாடல்:   தக்க தையா ..
                              படம் :   அலெக்ஸ் பாண்டியன்
                             இசை :   தேவி ஸ்ரீ பிரசாத்




 08 வது இடம்
                            பாடல்:    ஒரு பாதிக் கதவு
                              படம் :   தாண்டவம்
                             இசை :   ஜி.வீ. பிரகாஷ்



 07  வது இடம்
                            பாடல்:     கூகிள் கூகிள்
                              படம் :    துப்பாக்கி
                             இசை :    ஹாரிஸ் ஜெயராஜ்



 06 வது இடம்
                            பாடல்:   காற்றிலே நடந்தேனே
                              படம் :   ஆதி பகவன்
                             இசை :    யுவன் ஷங்கர் ராஜா



 05 வது இடம்
                            பாடல்:   என்னோடு வா வா
                              படம் :   நீதானே என் பொன் வசந்தம்
                             இசை :   இளையராஜா



 04 வது இடம்
                            பாடல்:   அவத்த பையா
                              படம் :   பரதேசி
                             இசை :   ஜீ .வி. பிரகாஷ்



 03 வது இடம்
                            பாடல்:   போடா போடி காதல்
                              படம் :   போடா போடி
                             இசை :   தரண் குமார்



 02 வது இடம்
                            பாடல்:   சொல்லிட்டாளே அவ காதல
                              படம் :   கும்கி
                             இசை :   இமான்



 01 வது இடம்
                            பாடல்:   மூங்கில் தோட்டம்
                              படம் :    கடல்
                             இசை :    ஏ. ஆர். ரகுமான்



உங்கள் விமர்சனங்களும், உங்களுக்கு பிடித்த பாடல்களையும் வழக்கம் போல் பதிவு செய்யுங்கள்..



Thursday, December 20, 2012

ஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் ..! (ஆப்பாயில் - Tragedy)


           சிலர் நல்லா தூங்கிட்டா எதுவுமே தெரியாதுன்னு சொல்ல கேட்டுருப்பீங்க.. சிலருக்கு அவ்வப்போது தூக்கத்தில் கனவுகள் வருவதுண்டு.. எனக்கு கோர்வையான ஒரு கதைகளும், கவிதைகளும் வருவதுண்டு. சில கதைகள் நேரமின்மையால் தொலைக்காட்சி தொடர் போல அடுத்த நாள் கனவில் தொடர்ந்ததும் உண்டு.. அதுபோல தோன்றிய ஒரு கற்பனை  தான் இந்த ஷேக்ஸ்பியர் தமிழனா இருந்தா? எனும் சிந்தனை.  (நகைச்சுவைக்காக மட்டுமே, இலக்கணம் எல்லாம் பாக்காதீங்க..! )

                              (ஆப்பாயில் - Tragedy)  

                     ஷேக்ஸ்பியர் எழுதின “ Hamlet “ தெரியும். அதே அவரு தமிழ்ல எழுதியிருந்தா.. “ஆப்பாயில்” ன்னு பேர் வச்சிருப்பாரு. ஒரு ஹாஸ்பிடல்ல ஒரு கோழிய ஸ்ட்ரெச்சர் ல போட்டு தள்ளிட்டு போறாங்க.. (அதுக்கு பிரசவமாம்..!) உடன் கணவன் சேவலும், அப்பா சேவல் மற்றும் அம்மா கோழி கூட ஓடுறாங்க.. வெள்ளை வெளேர்ன்னு கோட் போட்டுக்கிட்டு ஸ்டெதஸ்கோப்போட ஒரு முயல் முன்னாடி ஓடிகிட்டு இருக்கு. ரெண்டு மங்கி ( Monkey) நர்சுகள் மற்றவர்களை ஆபரேஷன் தியேட்டர் உள்ள வர விடாம தடுக்குது. பிரசவ கோழி, முயல் மற்றும் நர்சு மங்கிகள் உள்ளே செல்கின்றன..


            கணவன் சேவல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த போது பக்கத்து வீட்டு புறா அந்த சேவலின் மகன் கோழிக்குஞ்சை கூட்டி வருகிறது. கோழிக்குஞ்சு படபடப்புடன் “அப்பா அம்மா எங்கப்பா?” என்றது. “உனக்கு ஒரு தம்பி பாப்பா பொறக்கப் போகுதுடா கண்ணா..!” என்று கூறவும் அமைதியானது. தாத்தா சேவல் அந்த கோழிக்குஞ்சை மடியில் இருத்திக்கொள்ள ஆவலுடன் பிரசவ அறையையே எல்லோருடைய கண்களும் நோக்கிக் கொண்டிருந்தன.. அதே நேரம் இன்னும் ஒரு ஜோடி கண்கள் அந்த அறையை நோக்கி கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை..


            சிறிது நேரத்தில் ஒரு மங்கி நர்ஸ் வெளிய வர கணவன் சேவல் அதனுடன் சென்று “சிஸ்டர்” எனவும், “ட்வின்ஸ் போல இருக்கு.. சிசேரியன் தான்.. இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு வாங்க.” என்று ஒரு சீட்டை சேவலிடம் கொடுத்தது. அவசரமாக ஓடிச்சென்று அந்த மருந்துகளை வாங்கி வந்து கொடுத்தது. அதை வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற மங்கி கதவை சாத்திவிட்டு முயல் டாக்டரிடம் “டாக்டர் வெளிய எல்லாரும் கோழிக்குஞ்ச எதிர்பார்த்து காத்திருக்காங்க.. நாம பண்றது என்னமோ தப்பா தெரியுது” என்றது. முயல் மெதுவாக மங்கியிடம் நடந்து வந்து “ நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமே தப்பில்ல” என்றபடி தன் கோட் பாக்கெட்டிலிருந்து செல்பேசியை எடுத்து நம்பரை ஒற்றியது.. 



           இந்த போன்காலுக்காக காத்திருந்த, வெளியே நின்று கொண்டிருந்த அந்த இரு கண்களுக்கு சொந்தக்காரனான “நல்லவன் நம்பியார்” எனும் அந்த மனிதன், போனை உயிர்பித்து பேசத் தொடங்கினான். “சொல்லுங்க டாக்டர்” “மிஸ்டர் நம்பியார், இந்த முறை இரட்டைக் கரு இருக்கு அதனால நீங்க சொன்ன பணத்த விட ஒரு பங்கு அதிகம் கொடுக்கணும்.” “சரி டாக்டர்” “வழக்கம் போல் ஆஸ்பிட்டல் பின்னாடி வந்து முட்டைய வாங்கிக்கோங்க.. நான் அவங்ககிட்ட கரு இறந்தே பிறந்ததா சொல்லிடறேன்” என்று கூறி போனை வைத்தது.


          பின்பக்கம் சென்ற நம்பியார் முயலிடம் இருந்து அந்த இரட்டைக்கரு முட்டையை பெற்றுக் கொண்டு தன் ஹோட்டலுக்கு சைக்கிளில் விரைந்தான். தன் சைக்கிளை நிறுத்திவிட்டு கிச்சனுக்கு சென்ற அவன்.. தான் கொண்டு வந்திருந்த ,முட்டையை உடைத்து தோசைக்கல்லில் ஊற்றிய போது அந்த மஞ்சள் நிறத்தில் அப்போது விரிந்த முல்லைபோல் இரண்டு கருக்களும் கல்லின மேல் கிடத்தப்பட்டன.. தீயின் சூட்டில் உடலின் எல்லா பாகங்களும் பொசுங்க அவை இரண்டும் சிந்திய கண்ணீர் அந்த நம்பியாரின் கண்களுக்கு தெரியவே இல்லை..!
           
          
            

Tuesday, December 18, 2012

பறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )

                 
                      நம்மில் சிலர் கிராமத்தில் மாட்டு வண்டியில் பயணித்திருப்போம். மாடுகளின் கழுத்தில் பூட்டப்பட்ட அந்த மணியின் ஜல் ஜல் ஒலியும்,  டுர்  டுர்  என அந்த மாட்டை விரட்டும் மாட்டுக்காரனின் ரீங்காரமும்.. க்ளக் க்ளக்  என்று கேட்கும் குளம்படிச் சத்தமும்,  மேடு பள்ளங்களில் குலுக்கல்களும் அருமை எனும் ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாது. அந்த இனிமையான பயணத்தை அனுபவிக்க நிச்சயம் இந்த தலைமுறையினருக்கு கொடுத்து வைக்கவில்லை..


                      அது சரி விஷயத்துக்கு வருவோம்.. மாட்டு வண்டி தெரியும், அதென்ன பறக்கும் மாட்டு வண்டி என்று கேட்கிறீர்களா? நம்ம ஏர் ஏசியா விமானத்தை தாங்க அப்படி சொன்னேன். நானும் எத்தனையோ ஊருல எவ்வளவோ பிளைட்டுல ஏறியிருக்கேன்.. ஆனா இந்த மாதிரி ஒரு அனுபவம் எந்த பிளைட்டுலையும் கிடைச்சதில்ல..


                         "Now Everyone Can Fly" என்பது ஏர் ஏசியாவின்  முத்திரை வாக்கியம்.  நடுத்தர மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டுமென மற்ற விமான சேவைகளை விட குறைவான கட்டணத்தில் இயக்கப்படும் நோக்கத்திற்கு  என் பாராட்டுகள்.. ஆனால் அதற்காக இவர்கள் தரும் தரம் குறைந்த சேவைகளை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.. 


                            ஒரு சாதாரண பேருந்தில் இருப்பதை விட மிக மிக நெருக்கமான இருக்கைகள்,  கால்களை நீட்டுவதற்கு தேவையான லெக் ரூம் குறைவு.  மூன்று மணி நேரத்திற்கும் மேற்பட்ட  பயணத்திற்கு ஏற்ற சொகுசு இருக்கைகள்  இல்லாதது..வெளிநாட்டு விமானங்களில் கூட வீடியோ வசதியின்மை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் மலேசியா விமான தளத்திலிருந்து வெளியே வர சுமார் அரை மணி நேரம் நடந்து தான் வெளிவர வேண்டும். 


                                உள்நாட்டு விமானங்களில் குடிக்கும் தண்ணீருக்கு காசு வாங்குவதை ஏற்றுக் கொள்ளலாம்.. ஆனால் சர்வதேச விமானங்களில் பொதுவாக தண்ணீரும், ஏதாவது சிறிய அளவு உணவும் கொடுக்கப்படும். ஆனால் இங்கே குடிக்கும் நீருக்கே பணம் கொடுக்க வேண்டியுள்ளது  வருந்தத்தக்கது. ( நான் சொல்வது எகானமி கிளாஸ் என்று சொல்லப்படும் கடைநிலை சேவைகளைப் பற்றி ) .


                             
                                இத்தனை சிரமங்களுக்கு இடையிலும் நமக்கு ஆறுதல் அளிப்பது அவ்வப்பது குறுக்கும் நெடுக்குமாய் நம்மை கடந்து செல்லும் எழில் கொஞ்சும் விமானப் பணிப்பெண்கள் மட்டுமே..!
                        

Friday, December 14, 2012

நீதானே என் கும்கி..!

                              நீண்ட நாட்களாய்  நம் ஆவலை தூண்டிய நீதானே என் பொன் வசந்தம் மற்றும் கும்கி திரைப்படங்கள் இன்று வெளியாயின.. வழக்கம் போல் திரையரங்குகளில் முதல் நாள்  கூட்டம் அலை மோதினாலும் படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையும், அதை படமாக்கிய விதமும் தான்.


                              ஆன்மீக காரணங்களால் (??) இந்த திரைப்படங்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் வாய்ப்பு இல்லாததால், படம்பார்த்து விட்டு வந்த என் நண்பர்களின் விமர்சங்களின் சிறு தொகுப்பு இங்கே என் வாசகர்களுக்காய் ..  

                             நீதானே என் பொன்வசந்தம் - கெளதம் மேனன் கைவண்ணத்தில் வந்துள்ள இந்தப் படத்தில் கதை என்ற ஒன்றே கிடையாது ( இதை முன்பே இயக்குனர் கூறிவிட்டதால் அதை மன்னிப்போமாக).. இருப்பினும் சம்பவங்களின் கொர்வைகளையே படமாகும் வித்தையை முன்பே இதே இயக்குனரின் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் பார்த்து விட்டதால் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஆபத்பாந்தவனாய் சந்தனத்தின் குறும்புத் தனம் நிறைந்த காமெடிகள் மட்டும்.. (கெளதம் சார் மாத்தி யோசிங்க ப்ளீஸ்)


                            நான்கு பருவங்களை  வித்தியாசப் படுத்தும் முயற்சியில் ஜீவா ஜெயிக்கிறார்.. படத்திற்கு தொய்வை ஏற்படுத்துவது வசனங்கள், கெளதம் மேனோனின் சொந்தக் குரலில் பாடிய பாட்டு ( சார் நெக்ஸ்ட் நீங்க ஏன் ஒரு பேய் படம் எடுத்து எல்லா பாடலையும் பாடக் கூடாது??) இவருக்கு துணையாக சொந்தக் குரலில் பேசி  இரு(அறு )க்கும் சமந்தா.. இளையராஜாவின் பின்னணி இசை.. ( சச்சின் மாதிரி நீங்களும் ரிடையர்  ஆக வேண்டிய நேரம் வந்திடுச்சு சார்)

         
                              கும்கி - மலையாளத்திலிருந்து சுட்ட கதைன்னு சொல்லிக்கிறாங்க, ஆனா அதெல்லாம் படம் பாக்கும் போது மறந்து போகிறது.      அற்புதமான இசை (இந்த   வருடத்தின் சூப்பர் ஹிட்  பாடல்கள்).. ஜூனியர் சிவாஜியின்  முதல் படம்,  மைனாவை பறக்க  வைத்த  பிரபு சாலமனின் இயக்கம் இவை எல்லாவற்றையும் விட நம்மை கவர்வது (சுந்தர பாண்டியன் புகழ் ) லட்சுமி மேனோனின் அசத்தலான அழகும், கும்கி யானையின் அட்டகாசமான நடிப்பும்.. சந்தேகமின்றி போட்டியில் நம் மனம் கவர்வது கும்கியே..!




Thursday, December 13, 2012

பயணத்தின் சுவடுகள்-5 (மை டியர் மலேசியா)




பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 4;  தொலைவு: 5.

மை டியர் மலேசியா 
(புத்ர ஜெயா )


                               "அரசருக்கு வெற்றி" என்று பொருள் படும் இந்த ஊர், இட நெருக்கடியின் காரணமாக அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவை கோலாலம்பூரிலிருந்து இங்கே இடம்பெயர்ந்தது.. ஆயினும் கோலாலம்பூர் தான் இன்றும் மலேசியாவின் தலைநகராய் இருக்கிறது.. கெந்திங்கிற்கும் தலைநகருக்கும் இடையே புத்ரா ஆற்றங்கரையின் மேல் அமைந்த இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் உண்டு.. இங்குள்ள கட்டிடங்கள் யாவும் (அரசாங்க மற்றும் மக்களின் வீடுகள்) முன்பே திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே இங்கு மக்கள் குடியேறியதாக கூறுவர்.



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 5;  தொலைவு: 5.


மை டியர் மலேசியா 
(கோலாலம்பூர் )




                                  மலேசியாவின் தலைநகராம் கோலாலம்பூரில் நுழைந்தவுடன்  நம்மை வரவேற்பது உலகின் இரண்டாவது உயரமான கட்டமைப்பு கொண்ட பெட்ரோனாஸ் டவர் அல்லது இரட்டைக் கோபுரங்கள். (1998 இலிருந்து 2004 வரை உலகின் உயரமான கட்டிடம் இதுதானாம்!)  எண்பத்தி எட்டு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம்  மலேசியாவின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்று. 


                                 இந்த இரட்டைக் கோபுரங்களையும் இணைக்கும் ஒரு பாலம் இதன் 48 வது மாடியில் உள்ளது. இந்த கட்டிடம் மற்றும் பாலம் இஸ்லாம் மதத்தின் குறியீடு எனவும் கூறுவர். 


                               அது போலவே புகழ்பெற்ற மற்றொரு கட்டிடம் KL டவர். தொலைக்காட்சி ஒளிபரப்புக்கென கட்டப்பட்ட இந்த இடத்திற்கு செல்லும் போது கட்டிடத்தின் தாழ்நிலையில் (Basement) உள்ள 6D  தொழில்நுட்ப திரையரங்கிற்கு தவறாமல் செல்லவும், குழந்தைகளும் பெரியவர்களும் மனம்விட்டு ரசிக்கக் கூடிய ஒரு த்ரில் அனுபவம் அது.


                               சுதந்திர சதுக்கம் (Independance Square ) எனும் இந்த பரந்த வெளியில் தான் மக்கள் சுதந்திர தின விழா மற்றும் எல்லா அரசு விழாக்களுக்கும் கூடுவர். இங்கிருந்து நாம் சாலையை காணும் போது கிடைக்கும் ரம்யமான காட்சி. ஓங்கி வளர்ந்த கட்டிடங்கள், சாலையின் இரு புறமும் மரங்கள் (அசோகர் இங்க வந்தாரானெல்லாம் கேட்கப் படாது) கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.


                              இஸ்தானா நெகாரா ( மலாய் மொழியில் அரசாங்க மாளிகை) பொது மக்கள் வெளியிலிருந்து பார்க்க மட்டும் அனுமதி.  மலேசியாவின்  அரசர்கள் தங்கும் மாளிகை இது.


                               இந்த மாளிகையின் வாசலில் நம்  VGP  கோல்டன் பீச்சில் நிற்பது போல ஒரு மனிதன்  அசையாமல் நின்று கொண்டிருப்பார்.. புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடமிது. வேறு எதுவும் பார்க்க (?!!) நம்மை இங்கு அனுமதிக்காத காரணத்தால் இங்கிருந்து கெலுவார் ( மலாய் மொழியில் EXIT )


                                 
                               இங்கு மலேசியாவில் இன்னும் சில இடங்கள் (லங்காவி மற்றும் பெனாங் ) சுற்றுலா தளங்கள்.  இந்த தபா அங்கே போகதனால இதோட மலேசியா ஓவர்.. அப்பாடான்னு நீங்க சொல்றது கேட்குது.. அப்படி எல்லாம் விட்டுட மாட்டேன்.. அடுத்து வேற ஊர்  போலாம் கிளம்புங்க..!


பயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)     
பயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)                        
பயணத்தின் சுவடுகள்-2(மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-1(மை டியர் மலேசியா)

Saturday, December 8, 2012

பயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 3;  தொலைவு: 4.

மை டியர் மலேசியா 
(கெந்திங்  ஹைலண்ட்ஸ் )



                       பத்து மலையிலிருந்து நேராக பயணித்தது எழில் கொஞ்சும் கெந்திங் ஹைலண்ட்சிற்கு.  இங்கு செல்வதற்கு தரை மார்க்கமாகவும் செல்லலாம் அல்லது  கேபிள் கார் துணை கொண்டும் செல்லலாம். சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதால் இங்கு எப்பொழுதும் ஒரு மெல்லிய குளிர் இருந்து கொண்டேயிருக்கிறது.  அவ்வப்போது  சிறு சிறு தூறலாய் மழையும் நம்மை வரவேற்கத் தவறுவதில்லை.


                        கிட்டத்தட்ட நம் ஊட்டியின் தட்பவெப்ப நிலையைக் கொண்டிருக்கும் கெந்திங்கில் வழி நெடுக காடுகள் சூழ்ந்துள்ளதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் தேன்நிலவிற்கு ஏற்ற ஸ்தலம்  என்றே கூறலாம்..!

                          அங்கு நான் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் "First World". ஆனால் என்னைப் பொறுத்தவரை அதற்கு "பூலோக சொர்க்கபுரி" என்றே பெயரிட்டிருக்க வேண்டும். மொத்தம் 6718 அறைகளை கொண்ட இந்த தங்கும்  விடுதி உலகிலேயே மிக அதிக அறைகளைக் கொண்ட விடுதியாகும். ( 2008 க்கு முன்பு வரை இதுதான் முதலிடத்தில் இருந்ததாம்). Why  சொர்க்கபுரி  என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 


                               500,000 சதுர அடி பரப்பளவுள்ள இந்த விடுதியின் உள்புறத்தில் டவர் 1, டவர் 2 என இரு கட்டிடங்கள் உள்ளன. டவர் 1 இல் தங்கும்  அறைகளும், டவர் 2 இல் பிரம்மாண்டமான First World  Plaza  வும் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் இருபத்தி-ஐந்து  வாடிக்கையாளர்களை வரவேற்க வசதியான லாபியும், பணியாளர்களும்  உள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட கடைகளும், உணவகங்களும், ஒரு திரையரங்கமும் அமைந்திருப்பது சிறப்பு.  எட்டாவது மாடி முழுவதும் உணவுக்கென இருக்கிறது. ஆசிய உணவுகள் ஒரு பக்கமும், மேற்கத்திய உணவுகள் ஒரு பக்கமும் இருக்கிறது.  மேலும் ஒரு கேசினோ எனப்படும் ஒரு பிரம்மாண்டமான சூதாட்ட மையமும் உள்ளது.  ( இதன் உள்ளே செல்வதற்கு மலேசியா சிங்கப்பூர் வாசிகளை தவிர அனைவருக்கும் இலவசம்.. ) 


                               இவை மட்டுமா,  குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடி மகிழ ஒரு உள் விளையாட்டரங்கமும், வெளிப்புறம் தீம் பார்க் எனப்படும் விளையாட்டரங்கமும் இருக்கிறது. நான் மற்ற நாடுகளில் பார்க்காத ஒரு விளையாட்டு இங்கே இருந்தது. அது கெந்திங் ஸ்கை வென்ச்சர் (Genting  Sky Venture ) எனும் அந்த விளையாட்டு புதுமையாக இருந்தது. ஸ்கை பால் (Sky Fall ) சிமுலேட்டர் எனப்படும் இந்த விளையாட்டில் ஒரு சிறிய உருளை வடிவிலான அறையில் நம்மை ஒரு வலையின்  மேல் படுக்க வைக்கிறார்கள்.. பின் ஒரு ராட்சத விசிறி கொண்டு காற்றை உள்ளே செலுத்தி நாம் வானில் பறப்பது போன்ற உணர்வும்,  முன் இருக்கும் திரையில் நாம் கீழே இறங்குவது போன்ற ஒரு மாயையும் உருவாக்குகிறார்கள்.  (நமக்கும் தரைக்கும்  நான்கே அடிதான் உள்ளது என்பது நன்றாக தெரிந்தாலும் நம் மூளை அதை நம்ப மறுத்து நம் அடி வயிற்றில் ஒரு கிலி உண்டு பண்ணுவது என்னவோ உண்மை..!)



                              ஒரு இரவையும் ஒரு பகலையும் கெந்திங்கில் களித்த பின்னர் அந்த மூடு பனி உலகத்தை விட்டு மெல்ல கீழிறங்கி மீண்டும் கோலாலம்பூர் வந்தடைந்தேன். கோலாலம்பூரின் சிட்டி டூர் எனப்படும் நகர் உலா செல்ல கொஞ்சம் பொருத்திருப்போமா ?



Saturday, December 1, 2012

முஸ்தபா..முஸ்தபா..!! ( ஒரு நட்பின் கதை )


                        இது ஒரு நட்பின் கதை.. என் நட்பின் கதை.. கொஞ்சம் பொறுமையா படிங்க.. கதையும் புரியும்.. என் நட்பின் ஆழமும் தெரியும்..!

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...