Saturday, June 29, 2013

உறக்கம் பறித்த ஸ்னேகிதியே !! (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)

                       பதிவுலகின் புதிய "காதல் மன்னன்" சீனு பதிவர்கள் அவரவர் காதலிக்கு எழுதிய/ எழுத நினைத்த/ எழுத மறந்த காதல் கடிதம் ன்னு ஒரு பரிசுப்போட்டி  அறிவிச்சிருந்தாரு. எல்லா பதிவர் நண்பர்கள், அவர்களுடைய கவிஞர் நண்பர்கள் கிட்ட இருந்தும் கடிதம் அனுப்ப சொல்லி கேட்டிருந்தாரு.. (பரிசு கிடைக்குமா இல்லையாங்கறத விட இந்த லெட்டர் எல்லாம் வச்சு பயபுள்ள என்ன பண்ணப் போகுதுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்).

                        கொஞ்சம் வருஷம் முன்னாடி எழுதினது. கற்பனையா, காவியமா, இந்தக் கடிதம் எந்தக் காதலிக்கு எழுதியதுன்னேல்லாம் கேக்கப்படாது. ஏன்னா, முதல் காதல் மட்டும் தான் புனிதம்.. இரண்டாவது மூன்றாவது காதல் எல்லாம் டெஸ்டோஸ்ட்ரான் (Testosterone) செய்யும் மாயம்ன்னெல்லாம்  சொல்ல மாட்டேன். எல்லா காதலும் புனிதம் தான் நாம சின்சியரா இருக்கிற வரை. 

                        எனக்குள் கொஞ்ச நாளா தூங்கிக் கிடந்த கவிஞன கிள்ளி விட்டு எழுப்பி இந்த கடிதத்தை எழுத வச்ச (டிங்கரிங் பார்த்தத சொன்னேன்) சீனுவுக்கு நன்றி. இப்போ அவன் நைட்டெல்லாம் தூங்காம ஆவிப்'பா' எழுதிகிட்டு இருக்கான். (நல்லா வகையா மாட்டுனீங்களா??) நடுவர்களை புகழ்ந்து பேசக்கூடாதுன்னு சொல்லிட்டதனால குருநாதர்க்கு மானசீகமா நன்றி தெரிவிச்சுட்டு தொடங்கறேன்.

                                                  பெண்ணே!
  
இரவுகளில் சரியாய் உறங்குவதில்லை - இது நீ என் மீது வைத்த குற்றச்சாட்டு!
சிந்தித்து பார்க்கிறேன் - இது எப்போது தொடங்கியதென்று?

முதன் முதலாய் பார்த்த போது
மை கொண்ட இரு விழியாலும், கவர்கின்ற புன்னகையாலும் களங்கமற்ற என் இதயத்தை அபகரித்தாயே, அப்போதா?

கலைகளிலே முதல்வனாய் வலம் வந்த என்னை 
கடைக் கண்ணில் காதல் காட்டி
கடை நிலை மாணவனாய் மாற்றினாயே, அப்போதா? 

உன் பால் நான் கொண்ட காதலை 
உள் மனதில் மூடி போட்டு வைத்திருந்த அந்நாளில் என் பாரம் புரியாமல் 
தள்ளி நின்று எள்ளி நகையாடினாயே, அப்போதா?

பூடகமாய் என் காதல் உன் காதில் நான் சொன்ன போது
புரியாத புதிர் ஒன்றை கேட்டதைப் போல்
புன்னகைப்  பூ ஒன்றை சிந்தி விட்டு சென்றாயே, அப்போதா?

ஏற்பாயா, மறுப்பாயா விடை ஏதும் அறியாமல் 
வலியோடும் பயத்தோடும்
பல மாதம் காத்திருக்க வைத்தாயே, அப்போதா?

அயல் நாடு செல்லுமுன் வழியனுப்ப வருவாயா 
என்றதற்கு விழி நீரில் ஒன்றுதிர்த்து 
விடையனுப்பி வைத்தாயே, அப்போதா?

தொலை தூரத்தில் உன் விளி,
தொலைபேசி கம்பி வழி 
குரல் மட்டும் தூதாய் அனுப்பினாயே, அப்போதா?

வெட்கத்தின் தலை களைந்து 
உள் மனதின் ஆசைகளை ஒவ்வொன்றாய் சொன்ன போது
மௌனத்தின் மொழி பேசினாயே அப்போதா?

பெற்றவளும் என் மனம் அறிந்து
பல மடங்கு உளம் மகிழ்ந்து  
பெண் பார்க்க சென்றாளே அப்போதா?

பரிசம் போட்ட பின்னும் 
பதினோரு மாதங்கள் காத்திருந்து
பின் மனம் திறந்து உன் காதல் சொன்னாயே, அப்போதா?

மணப்பெண்ணாய் மேடையிலே 
உன் கரம் பற்றிய போது
அன்பின் ஸ்பரிசத்தை தந்தாயே, அப்போதா?

பெயர் சொல்லி அழைத்திடவே 
நாணத்தில் கன்னம் சிவந்து
நெஞ்சத்தில் முகம் புதைத்தாயே, அப்போதா?

கார்கூந்தல் நீ முடித்து
மல்லிகையும் அதில் சேர்த்து 
காற்றில் உந்தன் வாசம் தன்னை பரவவிட்டாயே, அப்போதா?

தேன் சுவையும் தீஞ்சுவையும் 
திருக்குறளின் முப்பாலும் 
கலந்தெனக்கு நீ கொடுத்தாயே, அப்போதா?

அயல் நாட்டில் தனி வீட்டில் 
கேளீரற்ற  கானகத்தே 
அத்துணை சொந்தமுமாய் இருந்தாயே, அப்போதா?

நான் பாடும் திரைப் பாடலை 
தாலாட்டாய் எண்ணி நீயும் 
நள்ளிரவில் கண்ணுறக்கம் கொண்டாயே, அப்போதா?

ஓர் ஆராய்ச்சி எலி போலே,
உன் சமையல் நான் உண்ண 
உப்பித்தான் போனேனே, அப்போதா?

மகிழுந்தில் சில தருணம் 
மகிழ்ச்சியுடன் பல தருணம் 
சந்தோசம் வழிந்தோடியதே, அப்போதா?

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் 
பெருகிப் பொங்கும் 
உனதன்பை என்மேல் பொழிந்தாயே, அப்போதா?

மரித்தாலும் ஒருபோதும் 
மறக்காது உன்மேல் நான் கொண்ட 
பாசம் என்று சொன்னாயே, அப்போதா?

யாழ் இனிது, குழல் இனிது,
எனினும் அதனினிது  உன் மனது,
என்றிருந்த எனை விட்டு மறைந்தாயே, அப்போதா?

பார் பேசும் பல வார்த்தை- நீ, 
நான் வாழ்ந்த வாழ்க்கை 
அதை நினைக்க சில கணங்கள் மறந்தாயே, அப்போதா?

கனவினிலும் உனைக் காண 
தவங்கிடந்த எனைவிட்டு 
கனவெனவே மறைந்தாயே, அப்போதா?

எரியும் பனிக் காட்டினிலே 
எனை மட்டும் தவிக்க விட்டு 
தொலைதூரம் சென்றாயே, இப்போதா?  

பல நாட்கள் விழித்திருந்தேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!
ஆம் ! இப்போதும் விழிக்கின்றேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!!!

நீயில்லா பூமியிலே 
நீர் கூட கசக்குதம்மா.. 
நீர் இல்லாப் பாலையிலே 
செடி என்ன முளைத்திடுமோ?

கண்ணிமைக்கும் நேரத்தில் 
நிகழ்ந்திட்ட விபத்திதுவோ?
பின் சென்று அதைத் திருத்த 
காலக் கண்ணாடி தான் இல்லையோ ?

நடந்தது எல்லாம் ஒரு கனவாய் 
எண்ணி நானும் கண் மூட,
நாளைக் காலை விழிக்கையிலே  
நேரில் நீயும் வருவாயோ?
பலுப்பு (தெலுங்கு) - திரை விமர்சனம் (18+)

                     

                              மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் அட்டகாசமான நடிப்பில் வந்திருக்கும் ஒரு முழுமையான என்டர்டெயினர் தான் இந்த பலுப்பு. 'தெனாவெட்டு' என்ற பொருள் தரும் இந்த படத்தில் ரவிதேஜாவுடன் ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, பிரம்மானந்தம் மற்றும் பிரகாஷ்ராஜ் இனைந்து நடித்துள்ளனர். ஆக்க்ஷன், காதல், காமெடி என எல்லா அம்சங்களும் நிறைந்த இந்த படம் எல்லாரும் பார்க்கக் கூடிய படமென்றாலும் ஒரு சில வன்முறைக் காட்சிகளுக்காய் இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும்.


                               தனக்கு நிச்சயக்கப் பட்ட திருமணத்தை நிறுத்த வேண்டி (?!!) தன் மாமாவுடன் (பிரம்மானந்தம்) சேர்ந்து கொண்டு ஸ்ருதி பார்க்கும் பலரையும் விரும்புவதாக விளையாட்டுக்கு சொல்லி ஏமாற்ற, அதில் ரவியின் நண்பன் ஒருவனும் மாட்டிக்கொள்ள ஸ்ருதிக்கு பாடம் புகட்ட வேண்டி அவரை காதலிப்பது போல் நடிக்கிறார் ரவி. ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்ருதி உண்மையிலேயே ரவியை விரும்ப, அதை மறுத்து அவருக்கு அட்வைஸ் செய்து செல்கிறார். இதற்கிடையில் தன் மகனுக்கு ஸ்ருதியை பெண் பார்க்க பிரகாஷ் ராஜ் செல்ல இதனால் ஸ்ருதியின் திருமணம் நின்று போகிறது.


                                ரவி ஸ்ருதியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? திருமணம் நின்றுபோன மாப்பிள்ளை எப்படி பழி தீர்த்தான் என்பதே படத்தின் திருப்பம்.
ரவிதேஜா வழக்கம்போல் அசத்தல். அதிலும் இரண்டாம் பாதியில் ரவுடியாக வரும்போது செம்ம மாஸ்.. தமிழில் நமக்கு இது போன்ற ஒரு ஹீரோ இல்லையே என்ற வருத்தம் தோன்றியது. ஸ்ருதி முந்தைய படங்களுக்கு நல்ல தேர்ச்சி. பாவனைகளில், நடனங்களில் நம்மை ஈர்க்கிறார். அஞ்சலி சிறிய வேடமேன்றாலும் நிறைவாய் வந்து போகிறார்.


                                 தன் மகனுக்கு பெண் பார்க்க வேண்டி பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பெண்ணிடம் பேஸ்புக் ஐடி கேட்பதில் ஆரம்பித்து, நாசரின் வீட்டில் படு பாந்தமாய் பெண் கேட்பதும் பிரகாஷ்ராஜ் அருமை. பிரம்மானந்தம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் செய்யும் சேட்டைகள் அட்டகாசம். தமனின் இசையில் பாடல்கள் ஓகே.  மொத்தத்தில் பலுப்பு - தாருமாறு!


75 / 100
Tuesday, June 25, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு.. திரை விமர்சனம்


                             பாசமலர் சிவாஜி சாவித்திரி மாதிரி  ஒரு நல்ல அண்ணன் தங்கை (சந்தானம்-ஹன்சிகா).  தந்தையின் தவறான புரிதலால் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அண்ணன் குடும்பத்தின் தொடர்பை இழந்து, சென்னை வந்து ஊரே போற்றும்   மோக்கியாவாக (Correcting  People )  மாறி காதலர்கள் சேர யோசனை சொல்லும் நிறுவனம் (?!!) ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் போது வில்லனாக வருகிறார் சித்தார்த். இவர் தன் காதலை சேர்த்து வைக்க நாடுவது மோக்கியாவை.                                தன் தங்கைதான் சித்தார்த் காதலிக்கும் பெண் என்று அறியாமல் அவருக்கு ஐடியா பல கொடுத்து (ஒவ்வொரு ஐடியாவுக்கும்  பத்தாயிரம் பீஸ் )  பர்சனாலிட்டி அதிகமுள்ள கணேஷ் வெங்கட்ராமனை ஹன்சிகா காதலித்த போதும் அவரை ஒதுக்கிவிட்டு சித்தார்த்தை காதலிக்க வைக்கிறார். சில சுமாரான டூயட்களுடன் முதல் பாதி இப்படி போகிறது.


                                எதேச்சையாய் ஒரு கோவிலில் சித்தார்த்துடன் ஹன்சிகாவைப் பார்த்துவிட சேர்த்து வைத்த காதலை தானே பிரிக்கும் முயற்சியில் இறங்குகிறார் சந்தானம். அதில் ஒவ்வொரு முறையும் தோல்வியே கிடைக்க, தன் பெற்றோரிடம் சென்று இதைக் கூற, சந்தானத்தின் மேல் இருக்கும் கோபத்தில் சித்தார்த்- ஹன்சிகா திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய, ஒரு கட்டத்தில் ஹன்சிகாவுக்கு கணேஷிடமிருந்து தன்னை பிரிக்கவும், தன்னை காதலிக்கவும் சித்தார்த் தீட்டிய திட்டங்கள் தெரிய வர அவரைப் பிரிகிறார் ஹன்சிகா..


                               பெற்றோரின் முடிவைக் கேட்டு  சித்தார்த்தை கொல்ல  வரும் சந்தானம், அங்கே அவரின் உண்மையான காதலை உணர்ந்து மீண்டும் அவரை ஹன்சிகாவுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறார். படத்தின் முதல் பாதியில் RJ பாலாஜி, தேவதர்ஷினி, பாஸ்கி, சமந்தா ஆகியோரும், பின் பாதியில் வித்யுலேகா, மனோபாலா, ஜான் விஜய், சித்ரா லட்சுமணன் ஆகியோரும் படத்தின் ஓட்டத்துக்கு உதவுகிறார்கள். பழைய சுந்தரை பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது அவருடைய டச் தெரிகிறது.. பாடல்களும் இசையும் சுமார் ரகம்.  மொத்தத்தில் சந்தானம் மட்டும் தான் தீயா வேலை செஞ்சிருக்காரோன்னு தோணுது..


65 / 100


Sunday, June 23, 2013

சென்னையின் "மொட்டை" வெயிலில்.. 2 (பதிவர் சந்திப்பு)                                புஷ்பேக் என்ற பெயரில் "புஷ் பேக்-புல் நாட்" (Push  Back-Pull  Not)  இருக்கை  ஒன்றை எனக்கு கொடுத்த அந்த மனிதருள் மாணிக்கத்தை வாழ்த்திவிட்டு கண்மூடினேன். சீனுவின் காதல் கடிதப் போட்டிக்கு யோசித்த போது கண்முன்னே நஸ்ரியா தோன்ற மனதிற்குள் ஒரு EFL பல்பு. கூடவே முந்தய நாள் முகநூலில் பார்த்த "Ganesh Bala  likes Nazriya" என்ற ஸ்டேட்டஸ்  மனதை உறுத்த நஸ்ரியாவை தலைவருக்கு 'விட்டுக்' கொடுத்துவிட்டு உறங்க முயன்றேன். முனிவர்கள் மலைகளிலும், காடுகளிலும் சென்று கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட "இடம் எதுவாயினும் கண் மூடியவுடன் நித்திரை தழுவும் யோகம்" ஒன்று என் பால்ய பருவத்திலிருந்தே எனக்கு வசப்பட்டிருந்ததால் உடனே உறங்கிப் போனேன்.

                                 கண்விழித்தபோது செங்கல்பட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.. முன் சீட்டில் அந்த உராங் உட்டானுக்கு பக்கத்தில் மற்றொரு பெண் உறங்கிக் கொண்டிருந்தாள்.. துப்பட்டா கொண்டு தன் தலையை முழுவதுமாய் போர்த்தியிருந்த போதும் அந்த பொலிவான முகம் தெளிவாக தெரிந்தது. ரம்யமான அந்த முகத்தை ரசித்துக் கொண்டிருக்கும் போது செல்பேசி அழைத்தது. அட, நம்ம தலைவர்.. "என்ன சார் நீங்க இந்நேரத்துக்கே எழுந்துட்டீங்களா?" "ஆமாப்பா, யூசுவல் டைம் தான்.. அப்புறம் நீ கோயம்பேடு போக வேணாம்.. தாம்பரத்தில் எறங்கி ட்ரெயின் புடிச்சு மாம்பலம் வந்துடு.. நான் பிக் பண்ணிக்கிறேன்" என்றார்.. "சார் உங்களுக்கு எதுக்கு சிரமம், நான் கோயம்பேடு வந்து வந்துடறேனே" என்றேன் அவளை உடனே பிரிய மனமின்றி.. "இல்ல ஆனந்து, இதுதான் பக்கம்" என்று சொல்லி எல்லா தொடர்பையும் கட் பண்ணிட்டார்.
      
                                      அவர் கூறியபடி மாம்பலம் வந்தடைந்த போது ரயில் நிலையத்துக்கே வந்திருந்தார் தலைவர். கோவையில் ஜீன்ஸ் டீ-ஷர்ட்டில் "காதல் பரிசு" கமல்ஹாசன் போல இருந்தவர், அன்று "மகராசன்" கமல் கெட்டப்பில் வித்தியாசமாக வந்திருந்தார். அவருடைய வண்டியில் சிறிது தூரம் பயணித்து வீட்டை அடைந்தோம். அங்கே குளித்து ரெடியாகிவிட்டு பாலகணேஷ் சாரின் அம்மா அன்புடன் செய்து கொடுத்த தோசையை உண்டுவிட்டு பதிவர் சந்திப்புக்கு தயாரானோம்.
                       

                                       மயிலாப்பூரில் ஒரு சிறிய வேலையை முடித்துக் கொண்டு கிளம்பிய போது தென்றல் மாம்பலத்தில் இரயிலிறங்கிய செய்தி கேட்டு வண்டியை வேகமாக விரட்டினார் தலைவர். கோடம்பாக்கத்தில் புலவர் ஐயாவின் வீட்டிற்குள் நுழைந்த போது சபை களை கட்டியிருந்தது. புலவர் ஐயா, கவிஞர் கவியாழி, கவிஞர் மதுமதி மற்றும் அவர் நண்பர், கவிஞர் மஞ்சுபாஷினி, கவிஞர் தென்றல் சசிகலா ஆகியோர்  அமர்ந்திருக்க ஏதோ சூடான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  கோவையில் பதிவர் சந்திப்புகள்  பொதுவாக  குறிப்பிட்ட சில விஷயங்களை பற்றிய விவாதங்களாக இருக்கும். ஆனால் இங்கே பொதுவான எல்லா விஷயங்களும் விவாதப் பொருளாயின. கவிஞர்களுக்கு கவிதை மட்டுமல்ல, கலாய்த்தலும் கை வந்த கலைதான் என்று ஒவ்வொருவரும் நிரூபித்தார்கள்.

                                        பாலகணேஷ் சார், சேட்டைக்காரன் அவர்களை அழைத்து வர செல்ல, கவிஞர் மதுமதியும் வேறொரு வேலையாய் வெளியே சென்றுவிட புலவர் ஐயா நடுநிலை காக்க, பெண் கவிஞர்களின் கேள்வி அம்புகளால் தாக்கப்பட்டு நிராயுதபாணியாய் வீழ்ந்த பீஷ்மரின் நிலையில் அமர்ந்திருந்தார் கவியாழி ஐயா. நான் அவருக்கு உதவ நினைத்த போதும் மெஜாரிட்டி குறைவு என்பதால் அமைதி காத்தேன். அலுவல் காரணமாய் "பதிவுலகின் புதிய காதல் மன்னன்" சீனு, ரூபக் மற்றும் ஸ்கூல் பையன்  "சரவணர் "  ஆபிசுக்கு வர்ற மாதிரியே லேட்டா வந்துட்டு சீக்கிரம் கிளம்பீட்டாங்க.. முதல் சந்திப்பு என்பதாலோ, இல்லை என்னுடைய புதிய டெர்ரர் லுக்கைப் பார்த்தோ எல்லோரையும் வயது பேதமின்றி கலாய்த்த  சீனு என்னை மட்டும் கலாய்க்காமல் விட்டது ஆச்சர்யம்.

                                           "மது" (கவிஞர் மதுமதி) இல்லாத சபை கொஞ்சம் களையிழந்திருந்த  போது  பாலகணேஷ் சார் சேட்டைக்காரன்  சாருடன்  வந்து சேர இடமே கலாகலா  சாரி கலகல..ஸ்கூல்பையனை பார்ட்னர்ஷிப் போட்டு ஒட்டிய வைபவங்களும், தன்னை சீண்டியவர்களை சீனு திடங்கொண்டு போராடியதும் அரங்கேறின. எம்ஜியாரின்  நவரச நடிப்பை பற்றி ஆரம்பித்து பல்வேறு உலக சினிமாவின் அபத்தங்களையும் விவாத்துக் கொண்டிருக்கும் போது ஒரு செல்பேசி அழைப்பு வர,சுந்தரத் தெலுங்கினில் தமன்னாவின் குரலில் யாரோ  மாட்லாட பேச்சுகள் சட்டென நின்றது.


தொடரும்..Friday, June 21, 2013

சென்னையின் "மொட்டை" வெயிலில்..


                   
                       அலுவல் நிமித்தமாக சென்னை வரும் வாய்ப்பு அமைய, அதே நேரம் இந்த ஏகலைவனின் குருநாதரிடமிருந்து ஒரு முகநூல் அழைப்பு - குவைத்தை சேர்ந்த ஒரு பதிவரின்  சென்னை வருகையை ஒட்டி புலவர் ஐயா வீட்டில் பதிவர்கள் சந்திப்பு நடப்பதாக கூற, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சென்னை நண்பர்களை சந்திக்க முடிவு செய்து நானும் கலந்து கொள்ளலாமா என தலைவருக்கு தொலைபேசி வழி என் அவாவை தெரிவிக்க, அவரும் அவா ஒண்ணும் சொல்லமாட்டா, நீ வர்றது சந்தோசம் தான் என தன் உபசாரத்தை அங்கேயே துவங்கினார்..


 
                      தாமதமாக முடிவெடுத்த காரணத்தினால் நீலகிரியிலும் சேரனிலும் வரமுடியாமல் போக பேருந்தில் செல்ல முடிவெடுத்து காந்திபுரம் மெயின் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தேன்.. இறங்கிய இரண்டாவது நிமிடமே சூது கவ்வும் என நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. குள்ளமான ஒரு இளைஞன் என்னருகில் வந்து 'எங்க சார் சென்னைக்கா?? பஸ் ரெடியாயிருக்கு" என்றான். நாங்க கொஞ்சம் உஷாரில்ல "எந்த ட்ராவல்ஸ்" என்றேன்.. அவன் "ஆப்பிள் ட்ராவல்ஸ்" என்றான். அப்போதாவது சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸின் ஸ்பெசல் அப்பாயிண்ட்மெண்டில்  வந்தவன் போல் 'ஆப்பிள்' என்ற வார்த்தையை அவன் உச்சரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

                       அவன் கூறிய ரேட்  எனக்கு மேலும் அதிர்வை ஏற்படுத்த "புஷ்பேக் தானே" என்றேன்.. "ஆமா சார், ஸ்லீப்பர் வேணும்னா சொல்லுங்க, ஒரு ஐம்பது ரூபா கூட ஆவும்" என்றான். இந்த ரேட்டுக்கு சென்னைக்கு எந்த  ட்ராவல்ஸும்  வராது என்று நன்கு அறிந்திரிந்தபடியால் கடைசியாக ஒரு கேள்வியை வைத்தேன்.. "வண்டி எத்தனை மணிக்கு எடுப்பாங்க?" என்றேன்.. சரிதான் ஒரு அடிமை சிக்கிட்டான்  என்று நன்கு உணர்ந்த அவன் "இப்போ எட்டரை சார், ஒன்பது மணிக்கு எடுப்பாங்க" என்று கூறி அவன் கையிலிருந்த ஒரு "வெள்ளைத்தாளில்"  4 என்று எழுதி அதைச் சுற்றி அழகாய் ஒரு வட்டமிட்டு "அதோ நிக்குது பார் பஸ்சு, ஏறிக்கோ  சார் " என்றான். "என்ன இது பேப்பர்லே எழுதி கொடுக்கறீங்க" என்றவனுக்கு "இதான் சார் டிக்கட்டு" என்று என் கைகளில் இருந்து ஒரு ஐநூறை பிடிங்கிக் கொண்டு மீதி நூற்றி ஐம்பதை திணித்தான்.

                      பஸ் எப்படி இருக்குமோ என்ற குழப்பத்தோடே பஸ்ஸை நோக்கி நகர்ந்தேன். இயற்கை உபாதை வேறு தொல்லை கொடுக்க பஸ் எடுக்க இன்னும் அரை மணி நேரமே உள்ளதால் ஓட்டமும் நடையுமாய் பேருந்தை அடைந்தேன். பேருந்தின் உள்ளே ஏறி நான்காம் நம்பர் சீட்டை பிடித்த போது  கொஞ்சம் ஆறுதல். (எதிர்பார்த்த அளவுக்கு மோசமில்லை). நான் கொஞ்சம்  'அவசரத்தில்' இருந்ததால்  இருக்கையில் என் பேக்கை வைத்துவிட்டு கீழிறங்கி வெள்ளை சட்டை அணிந்த டிரைவரிடம்  "ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்.. அதுக்குள்ள எடுத்துடுவீங்களா?" என்றேன்.. அவரோ என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "அத  வண்டி டிரைவர்கிட்ட கேளுங்க" என்றபடி அவர் அருகிலிருந்த காரில் ஏறிச் சென்றார்.

                      நான் சுற்று முற்றும் பார்த்த போது வேறொருவரையும் அருகில் காணவில்லை. பொங்கி வரும் ஆத்திரத்தை அடக்கும் கலை கற்றிருந்த எனக்கு இந்த ஒரு கலை மட்டும் வசப்பட மறுத்த காரணத்தால் அருகிலிருந்த திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டின் உள்ளிருந்த கட்டண சேவை மையம் நோக்கி ஓட, அப்போதும் என் கண்கள் பின்புறமாய் பஸ் நின்றிருந்த திசையை நோக்கியபடி இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டு பேருந்தை நோக்கி வெற்றி நடை போட, பஸ்ஸை அடைய சில நூறு அடிகள் இருக்கும் போது அந்த பஸ் நகரத் தொடங்கியது.

                       வேகத்தள (fast track) மணிக்காட்டி ஒன்பதைக் காட்ட மனம் பதைபதைக்க,  பின்னங்கால் என் புதிய மொட்டை மண்டையில் அடிக்க ஓட்டம் எடுத்து, பஸ்சின் அருகில் வர, பஸ் நின்றது. உள்ளிருந்து டிரைவர் இறங்கி கதவை சாத்திவிட்டு எதிரில் இருந்த பேக்கரிக்கு சென்று ஒரு தம்மைப் பற்ற வைத்தார்.. பயபுள்ள இதுக்குத்தானா என்னை ஓட வச்சான் என்று திட்டிக் கொண்டே (மனதிற்குள் தான்) பஸ்சிற்குள் ஏற அப்போது தான் கவனித்தேன். உள்ளே என் சீட்டிற்கு முன் ஒரு கல்லூரி படிக்கும் பெண்ணும்  (கொஞ்சம் சுமார் தான்) எனக்கு பின் இரு சீட்டுகளும்  மட்டுமே நிரம்பியிருக்க வண்டியே காலியாக இருந்தது.

                          வண்டி ஏறியதும் தலைவருக்கு போன் செய்து " சார் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வண்டி எடுத்திடுவாங்க.. காலைல கோயம்பேடு வந்ததும் கூப்பிடறேன் என்றேன்.. அவரும் சரியென்று சொல்லிவிட்டு அவரின் மூத்த சிஷ்யப் பிள்ளை சீனு இன்னும் சற்று நேரத்தில் என்னை கூப்பிடுவார் என்று சொல்லிவிட்டு உறங்கச் சென்றார். நான் அந்த வார ஆனந்த விகடனில் பாரதிராஜா அவர்கள் இயக்குனர் மணிவண்ணன் அவர்களை புகழ்ந்து கூறிய வரிகளை படித்துக் கொண்டே கண்ணயர்ந்தேன். திடும்மென விழித்த போது வண்டி எங்கோ நின்றிருந்தது. செல்பேசி மணி பதினொன்றை காட்டியது. சீனுவின் காலைத் தவற விட்டுவோட்டோமா என்ற பதைபதைப்பில் பார்த்த போது அந்த "பிரபல பதிவரிடமிருந்து" கால் ஏதும் வந்திருக்கவில்லை. சரி எந்த ஊர் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டி தலையை சன்னலூடே வெளியே எட்டி நோக்கிய போது ஒரு விளம்பரப் பலகையின் முடிவில் காந்திபுரம், கோவை என்றிருந்தது. ஏஸி  பஸ் என்று கூறிவிட்டு என் மொட்டை மண்டையில் வியர்வைப் பூக்கள் வேறு பூத்திருந்தது. கிளைமாக்சில் வீறுகொண்ட மொட்டை ரஜினி போல் பஸ்ஸை விட்டு கோபத்துடன் இறங்கினேன்.

                           "ஏய் மொட்டை, அவனுகளே பஸ்ஸ  நிறுத்தி வச்சு இவ்வளவு நேரமா லந்த கொடுத்துட்டு இப்பதான் வண்டி எடுக்கறான்.. நீ எங்க எறங்கற?" என்று மதுரைத் தமிழில் ஒருவர் அன்புடன் கொஞ்ச அப்போதுதான் கவனித்தேன். டிரைவர் வண்டி எடுக்க தயாராய் இருந்தான். நிலைமையை உணர்ந்து "சாரி பாஸ்" என்றவாறு என் சீட்டில் அமர்வதற்காக நகர்ந்தேன். முன் அமர்ந்திருந்த அந்த மொக்கை பிகர் என்னைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தது, எரியும் பயரில் ஆயிலை ஊற்றியது. ஒருவாறாக வண்டி சென்னையை நோக்கி சீறிப்பாய்ந்தது..தொடரும்..
 

Wednesday, June 19, 2013

எனைக் காணவில்லையே நேற்றோடு..
விழித்ததும் வழக்கம் போல் 
தேடினேன் உன்னை..
வெறுமையை உணர்ந்து 
வேதனை அடைந்தேன்..

குளிக்கையிலும் உனைத் 
தொட முடியாமல் 
தேடித்தேடி வெதும்பியது 
வெள்ளந்தி மனது.

வாகனத்தில் செல்கையில் 
வலக்கண்ணாடியில் பார்க்கையில் 
வெற்றிடத்தை பார்த்து 
வாடியது எந்தனுள்ளம்..

நிதர்சனம் புரிகிறது- இன்று 
நீ இல்லை என்னோடு 
நிலைக் கண்ணாடியிலும் 
அழகாய்த் தெரிவது என் மொட்டை மட்டுமே..


Sunday, June 16, 2013

தில்லுமுல்லு - திரை விமர்சனம்
                             இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கி சூப்பர் ஸ்டார் தன் நகைச்சுவை நடிப்பால் அசத்திய படம் தில்லு முல்லு.. அந்தப் படத்தின் அக்மார்க் ரீமேக் தான் இந்த புதிய தில்லு முல்லு.  அதே அண்ணன்-தம்பி ஆள்மாறாட்டக் கதை. கண்ணா லட்டு திங்க ஆசையா படம் போல் அல்லாமல் இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு பட்டி பார்த்திருக்கிறார்கள்.                               பழைய தி.மு வில் கதாநாயகனின் பெயர்க்காரணம் (அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன்) போல் புதிதிலும் நாயகன் பெயருக்கு (பசுபதி) விளக்கம் கொடுப்பதில் ஆரம்பித்து கிளைமாக்சில் சந்தானத்தின் உதவியுடன் படத்தை முடிப்பது வரை ஜாலிலோ ஜிம்கானா.. நாயகனாக சிவா, (இவருக்கு ஏற்ற மாதிரியே படங்கள் எப்படி அமைகிறதோ??) இயல்பான நக்கல் கலந்த டயலக்குகளால் மனம் கவர்கிறார்.  தேங்காய் சீனிவாசன் இடத்தில் பிரகாஷ் ராஜ். (சில இடங்களில் சொதப்புகிறார்)                              கதாநாயகி இஷா தல்வார் ஓட்டவச்ச சிங்கி போல் இருக்கிறார். ஒரு சாயலில் பழைய ஊர்மிளா மடோன்கரை நினைவு படுத்தினாலும் நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பொடியனின் கேரக்டருக்கு பதில் நண்பனாக வரும் சூரி, இளவரசு, கோவை சரளா என ஆளாளுக்கு அசத்துகிறார்கள். இருந்தாலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பார்த்த அந்த கிளாசிக் படத்திலிருந்து ஏதோ மிஸ்ஸிங்.                               சிவா கராத்தே மாஸ்டர் கங்குலியாகவும், பசுபதியாகவும் பின்னியெடுக்கிரார். தன் வழக்கமான பாணியில் சிக்சர் அடிக்கிறார். ஆனால் இதே போன்ற படங்களில் நடித்தால் முத்திரை குத்தப்பட்டுவிடுவார். என்னதான் பழைய சாதத்தை புது பிளேட்டில் போட்டாலும் டேஸ்டு  கொஞ்சம் குறைவுதான்..


60 / 100

Tuesday, June 11, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (இதயத்தை கடன் கொடுத்தாள்)-7


முந்தைய பதிவுகளுக்கு...                     


                      மீண்டும் எல்லா பாக்கெட்டுகளையும் தேடிப் பார்த்தும் பர்ஸைக் காணவில்லை. கண்டக்டர் டிக்கெட்டை கைகளில் திணித்துவிட்டு என்னைப் பார்க்க நானோ அவரைப் பார்க்காமல் பணத்தை தேடிக் கொண்டிருக்க அவர் பின்பக்கமாக சென்றார்.. அவர் திரும்பி வருவதற்குள் பணத்தை கொடுக்க வேண்டுமே என்ற பதட்டத்தில் நான் குழம்பி நிற்க, ரமா என்னிடம் "என்னாச்சு ஆனந்த்" என்றாள். வேறு வழியின்றி அவளிடம் பர்ஸ் மிஸ்ஸான கதையை சொல்லிவிட்டு "ஒரு நூறு ருபாய் கடன் கொடு.. நான் வண்டிகேட் போனதும் திருப்பி கொடுத்திடறேன்" என்றேன்.. அவள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் "முடியாது" என்றாள்.. எனக்கோ அதைக் கேட்டதும் பகீரென்றது.

                     "ப்ளீஸ் ரமா, இங்க வேற யாரையும் தெரியாது.." என்றேன்.. அவளோ 'ம்ஹும்..முடியாது" என்றபடி  என் கண்களில் வழியும் அவஸ்தையை ரசித்தாள். கண்டக்டரும் எனை நோக்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் என் மூளை வேலை செய்ய மறுத்த அந்த கணத்தில் "ஆனந்த், கடனெல்லாம் கொடுக்க முடியாது. கடன் அன்பை முறிக்குமாமே?" என்றபடி  தன் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தாள். நான் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அவள் விளையாட்டுத்தனத்தை ரசித்தேன்.. அன்று முழுவதும் எனக்கும் சேர்த்து எல்லாவற்றிற்கும் அவள் செலவு செய்தாள்.

                        அவளுடன்  யோகா கற்றுக் கொண்ட போது, உலகில் எல்லா பிரச்சனைகளையும் அமைதியான முறையில் தீர்த்துவிடலாம், கராத்தே போன்ற வன்முறை வழிகள் அவசியம் இல்லை என்ற உலக சிந்தனைகள் உதித்தது.. (அதற்குப் பிறகு காதலுக்காக கராத்தே கிளாஸ் கைவிடப்பட்டது)   பின்னர் இருவருமாய் நாமக்கல் ஆஞ்சினேயர் கோவிலுக்கு சென்றபோது மனதிற்குள் ஒரு அமைதி. அவளுடன் இருந்த அந்த ஒரு ஏழெட்டு மணி நேரம் எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வரும் வழியில் கிராயூரில் அவளை இறக்கி விட்டுவிட்டு அந்த சந்தோஷத்துடனே வண்டிகேட் வந்திறங்கினேன்.

                          வரும் வழியில் அந்த டீக்கடையை கடக்கும் போது அதன் முன் அமர்ந்திருந்த அந்த 'நாய்' இப்போது என்னை அமைதியுடன் பார்த்தது. கவுண்டர் காம்ப்ளக்சை நெருங்கிய போது தெருவெங்கும் மின்சாரம் இருக்க எங்க காம்ப்ளெக்சில் மட்டும் மின்சாரம் இல்லை. உள்ளே நுழைந்ததும் வீட்டின் முன் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கவுண்டரிடம் "என்ன ஓனர்  எல்லா வீட்டுலயும் கரண்ட் இருக்கு, இங்க மட்டும் இல்லே" என்றேன்.. "ஏதோ பீஸ் போயிருக்கும் போல, அந்த லைன் மேன  கூப்பிட்டா அவன் நாளைக்கு காலைலே  வரேன்கிறான்.." என்றார்..

                        நான் என் அறைக்குள் சென்று ஒரு தடிமனான ஒயரை எடுத்து அதன் ஆடையை துகிலுரித்து அதன் இரு நுனிகளையும் கத்தி கொண்டு சீவிவிட்டு ப்யூஸ் கட்டையை அகற்றினேன். என் செய்கையை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த கவுண்டர் "பார்த்துப்பா, ஷாக் அடிச்சுடப் போவுது.. " என்றார். நான் கம்பியை சுற்றிவிட்டு மீண்டும் பொருத்திய போது காம்ப்ளெக்ஸ்  மொத்தமும் ஒளிர்ந்தது. கவுண்டர் பெருமிதத்துடன் என்னருகில் வந்து "காலேஜுல இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்களா" என்றார்.. "ம்ம்.. எல்லாமே சொல்லிக் கொடுப்பாங்க ஓனர்" என்றேன்.. "அப்ப என் புள்ளையையும் இந்த காலேஜிலேயே சேர்த்தனும்" என்றபடி வீட்டிற்குள் சென்றார்.

தொடரும்..Friday, June 7, 2013

AFTER EARTH - திரை விமர்சனம்

                             இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்  பிறகு மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டு மனித இனமே வாழத் தகுதியற்றதாகிவிடும் புவியை விட்டுவிட்டு சூரிய குடும்பத்திற்கு அப்பால்  பல மைல் தொலைவில் இருக்கும்  நோவா ப்ரைம் எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாழும் மனிதர்களுக்கு தொல்லை உர்ஸா  எனப்படும் பிரிடேட்டர் வகை ஜந்துவால் ஏற்படுகிறது. இவர்களின் பாதுகாவலனாய் இருக்கும் சைபர் (வில் ஸ்மித்), அவரது மகன் கிட்டாய் ( ஜேடன் ஸ்மித்) மற்றும் சில வீரர்களுடன் ஒரு விண்கலத்தில் செல்லும்போது ஏற்படும் ஒரு விபத்தில், பூமியில் விழும் இவர்களில் வீரர்கள் அனைவரும் இறந்துவிட, சைபரின் கால்களில் முறிவு ஏற்பட நோவாவிற்கு சிக்னல் அனுப்பும் கருவி பல மைல்  தாண்டி விழுந்து விடுவதால் அதை எடுத்து இருவரையும் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு கிட்டாயிடம் வருகிறது. எப்படி இருவரும் தப்பித்து  நோவா கிரகத்திற்கு திரும்ப செல்கிறார்கள் என்பதே கதை..


                          இளையதளபதிக்கு அவரது தந்தை வரிசையாக படம் எடுத்து தூக்கிவிட்டது போல் தனது மகனைத் திரைத் துறையில் நிலைநிறுத்த வில்ஸ்மித் எடுத்திருக்கும் முயற்சி. தயாரிப்பாளரும் அவரே, கதாசிரியரும் அவரே.படத்தின் முடிவில் இயக்குனர் என்று நைட் சியாமளன் பெயர் வரும்போது தான் தெரிகிறது. (இயக்குனரின் டச் சுத்தமாக இல்லை என்பது சியாமளனின் முந்தைய படங்களைப் பார்த்தவர்களுக்கு  தெரியும்.) 


                          ஜேடன்  ஸ்மித் இதற்கு முன் நடித்த "பர்சூட் ஆப் ஹேப்பினஸ்" மற்றும் "கராத்தே கிட்" படங்களில் கலக்கி இருந்தான். இந்தப் படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் முந்தைய படங்களின் அளவுகோளின்படி இது கொஞ்சம் சுமார் ரகம் தான். சில இடங்களில் டைகருக்கு பிறந்தது டாங்கி ஆகாது என்பதை நிரூபிக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளிலெல்லாம் குட்டிப்புலி அட்டகாசமாய் ஸ்கோர்  செய்கிறான்.


                           முதலில் சைபர் கேரக்டருக்கு டென்சல் வாஷிங்டன் நடிப்பதாக இருந்தது. பிறகு இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்கி (?!!) வில்ஸ்மித் நடித்ததாக கேள்வி. ஆனால் இவருக்கு இந்தப் படத்தில் ஹீரோயிசம் கொஞ்சம் குறைவு தான். மேலும் இவரின் சில காட்சிகள் நம்ம சூப்பர் ஸ்டார் முன்பே செய்துவிட்டதால் நமக்கு போரடிக்கிறது. உதாரணத்திற்கு இவர் அடிபட்ட காலை கிழித்து தானே முதலுதவி செய்வது மனிதன் படத்தில் நாம் பார்த்தது. ஜேடன்  சிறுத்தையுடன் போடும் சண்டைகள் நாம் சிவாவில் பார்த்தது.


                           அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிசில் இந்தப் படம் தோல்வி என்றாலும் உலகளவில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. நம்முடைய இப்போதைய பயமெல்லாம் இந்தப் படத்தை நம்மூர் இயக்குனர்கள் உருவி இளைய தளபதியை வைத்து எடுத்து விடுவார்களோ என்பது தான்..


60 / 100
How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...