Tuesday, June 11, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (இதயத்தை கடன் கொடுத்தாள்)-7


முந்தைய பதிவுகளுக்கு...                     


                      மீண்டும் எல்லா பாக்கெட்டுகளையும் தேடிப் பார்த்தும் பர்ஸைக் காணவில்லை. கண்டக்டர் டிக்கெட்டை கைகளில் திணித்துவிட்டு என்னைப் பார்க்க நானோ அவரைப் பார்க்காமல் பணத்தை தேடிக் கொண்டிருக்க அவர் பின்பக்கமாக சென்றார்.. அவர் திரும்பி வருவதற்குள் பணத்தை கொடுக்க வேண்டுமே என்ற பதட்டத்தில் நான் குழம்பி நிற்க, ரமா என்னிடம் "என்னாச்சு ஆனந்த்" என்றாள். வேறு வழியின்றி அவளிடம் பர்ஸ் மிஸ்ஸான கதையை சொல்லிவிட்டு "ஒரு நூறு ருபாய் கடன் கொடு.. நான் வண்டிகேட் போனதும் திருப்பி கொடுத்திடறேன்" என்றேன்.. அவள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் "முடியாது" என்றாள்.. எனக்கோ அதைக் கேட்டதும் பகீரென்றது.

                     "ப்ளீஸ் ரமா, இங்க வேற யாரையும் தெரியாது.." என்றேன்.. அவளோ 'ம்ஹும்..முடியாது" என்றபடி  என் கண்களில் வழியும் அவஸ்தையை ரசித்தாள். கண்டக்டரும் எனை நோக்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் என் மூளை வேலை செய்ய மறுத்த அந்த கணத்தில் "ஆனந்த், கடனெல்லாம் கொடுக்க முடியாது. கடன் அன்பை முறிக்குமாமே?" என்றபடி  தன் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தாள். நான் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அவள் விளையாட்டுத்தனத்தை ரசித்தேன்.. அன்று முழுவதும் எனக்கும் சேர்த்து எல்லாவற்றிற்கும் அவள் செலவு செய்தாள்.

                        அவளுடன்  யோகா கற்றுக் கொண்ட போது, உலகில் எல்லா பிரச்சனைகளையும் அமைதியான முறையில் தீர்த்துவிடலாம், கராத்தே போன்ற வன்முறை வழிகள் அவசியம் இல்லை என்ற உலக சிந்தனைகள் உதித்தது.. (அதற்குப் பிறகு காதலுக்காக கராத்தே கிளாஸ் கைவிடப்பட்டது)   பின்னர் இருவருமாய் நாமக்கல் ஆஞ்சினேயர் கோவிலுக்கு சென்றபோது மனதிற்குள் ஒரு அமைதி. அவளுடன் இருந்த அந்த ஒரு ஏழெட்டு மணி நேரம் எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வரும் வழியில் கிராயூரில் அவளை இறக்கி விட்டுவிட்டு அந்த சந்தோஷத்துடனே வண்டிகேட் வந்திறங்கினேன்.

                          வரும் வழியில் அந்த டீக்கடையை கடக்கும் போது அதன் முன் அமர்ந்திருந்த அந்த 'நாய்' இப்போது என்னை அமைதியுடன் பார்த்தது. கவுண்டர் காம்ப்ளக்சை நெருங்கிய போது தெருவெங்கும் மின்சாரம் இருக்க எங்க காம்ப்ளெக்சில் மட்டும் மின்சாரம் இல்லை. உள்ளே நுழைந்ததும் வீட்டின் முன் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கவுண்டரிடம் "என்ன ஓனர்  எல்லா வீட்டுலயும் கரண்ட் இருக்கு, இங்க மட்டும் இல்லே" என்றேன்.. "ஏதோ பீஸ் போயிருக்கும் போல, அந்த லைன் மேன  கூப்பிட்டா அவன் நாளைக்கு காலைலே  வரேன்கிறான்.." என்றார்..

                        நான் என் அறைக்குள் சென்று ஒரு தடிமனான ஒயரை எடுத்து அதன் ஆடையை துகிலுரித்து அதன் இரு நுனிகளையும் கத்தி கொண்டு சீவிவிட்டு ப்யூஸ் கட்டையை அகற்றினேன். என் செய்கையை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த கவுண்டர் "பார்த்துப்பா, ஷாக் அடிச்சுடப் போவுது.. " என்றார். நான் கம்பியை சுற்றிவிட்டு மீண்டும் பொருத்திய போது காம்ப்ளெக்ஸ்  மொத்தமும் ஒளிர்ந்தது. கவுண்டர் பெருமிதத்துடன் என்னருகில் வந்து "காலேஜுல இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்களா" என்றார்.. "ம்ம்.. எல்லாமே சொல்லிக் கொடுப்பாங்க ஓனர்" என்றேன்.. "அப்ப என் புள்ளையையும் இந்த காலேஜிலேயே சேர்த்தனும்" என்றபடி வீட்டிற்குள் சென்றார்.

தொடரும்..10 comments:

 1. 'எல்லாமே' கற்றுக் கொள்ளலாம்...!

  ReplyDelete
 2. காதல் கரண்ட் கொடுக்குது...
  மச்சி..அப்படியே இந்த பக்கம் கொஞ்ச்ம் வந்துட்டு போ...வெறும் இருட்டா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. காதல் கரண்ட் கொடுக்காது மாப்ளே.. ஷாக் தான் கொடுக்கும்..

   Delete

 3. ## அவளுடன் யோகா கற்றுக் கொண்ட போது, உலகில் எல்லா பிரச்சனைகளையும் அமைதியான முறையில் தீர்த்துவிடலாம், கராத்தே போன்ற வன்முறை வழிகள் அவசியம் இல்லை என்ற உலக சிந்தனைகள் உதித்தது.. (அதற்குப் பிறகு காதலுக்காக கராத்தே கிளாஸ் கைவிடப்பட்டது) ##
  நல்ல தேர்ந்த எழுத்தாளருக்கான வரிகள்..... அருமையா தொடரை சுவாரசியமாக்கவும் எங்கு தொடரும் போடுவதென்பதையும் அழகாகக் கையாளுகிறீர்கள்... வாழ்த்துக்கள்... தொடருங்கள் தொடர்கிறோம்...

  ReplyDelete
 4. //"ஆனந்த், கடனெல்லாம் கொடுக்க முடியாது. கடன் அன்பை முறிக்குமாமே?" //

  ஆனந்த் காத்து ரமா மேல வீசியதன் விளைவா ?


  // நான் என் அறைக்குள் சென்று ஒரு தடிமனான ஒயரை எடுத்து அதன் ஆடையை துகிலுரித்து அதன் இரு நுனிகளையும் கத்தி கொண்டு சீவிவிட்டு ப்யூஸ் கட்டையை அகற்றினேன்.//

  தனித்திறமை கொண்ட சககலா வல்லவர்

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா..

   நன்றி..நன்றி.. நன்றி..

   Delete
 5. வெகு சுவார்யஸ்த்துடன் செல்கிறது உங்கள் எழுத்து நடை... எங்கும் நிற்க விடவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சரி படிச்சு முடிசுட்டீங்கள்ள.. இனி கொஞ்ச நேரம் உட்காருங்க..

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails