Saturday, June 29, 2013

உறக்கம் பறித்த ஸ்னேகிதியே !! (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)

                       பதிவுலகின் புதிய "காதல் மன்னன்" சீனு பதிவர்கள் அவரவர் காதலிக்கு எழுதிய/ எழுத நினைத்த/ எழுத மறந்த காதல் கடிதம் ன்னு ஒரு பரிசுப்போட்டி  அறிவிச்சிருந்தாரு. எல்லா பதிவர் நண்பர்கள், அவர்களுடைய கவிஞர் நண்பர்கள் கிட்ட இருந்தும் கடிதம் அனுப்ப சொல்லி கேட்டிருந்தாரு.. (பரிசு கிடைக்குமா இல்லையாங்கறத விட இந்த லெட்டர் எல்லாம் வச்சு பயபுள்ள என்ன பண்ணப் போகுதுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்).

                        கொஞ்சம் வருஷம் முன்னாடி எழுதினது. கற்பனையா, காவியமா, இந்தக் கடிதம் எந்தக் காதலிக்கு எழுதியதுன்னேல்லாம் கேக்கப்படாது. ஏன்னா, முதல் காதல் மட்டும் தான் புனிதம்.. இரண்டாவது மூன்றாவது காதல் எல்லாம் டெஸ்டோஸ்ட்ரான் (Testosterone) செய்யும் மாயம்ன்னெல்லாம்  சொல்ல மாட்டேன். எல்லா காதலும் புனிதம் தான் நாம சின்சியரா இருக்கிற வரை. 

                        எனக்குள் கொஞ்ச நாளா தூங்கிக் கிடந்த கவிஞன கிள்ளி விட்டு எழுப்பி இந்த கடிதத்தை எழுத வச்ச (டிங்கரிங் பார்த்தத சொன்னேன்) சீனுவுக்கு நன்றி. இப்போ அவன் நைட்டெல்லாம் தூங்காம ஆவிப்'பா' எழுதிகிட்டு இருக்கான். (நல்லா வகையா மாட்டுனீங்களா??) நடுவர்களை புகழ்ந்து பேசக்கூடாதுன்னு சொல்லிட்டதனால குருநாதர்க்கு மானசீகமா நன்றி தெரிவிச்சுட்டு தொடங்கறேன்.

                                                  



பெண்ணே!
  
இரவுகளில் சரியாய் உறங்குவதில்லை - இது நீ என் மீது வைத்த குற்றச்சாட்டு!
சிந்தித்து பார்க்கிறேன் - இது எப்போது தொடங்கியதென்று?

முதன் முதலாய் பார்த்த போது
மை கொண்ட இரு விழியாலும், கவர்கின்ற புன்னகையாலும் களங்கமற்ற என் இதயத்தை அபகரித்தாயே, அப்போதா?

கலைகளிலே முதல்வனாய் வலம் வந்த என்னை 
கடைக் கண்ணில் காதல் காட்டி
கடை நிலை மாணவனாய் மாற்றினாயே, அப்போதா? 

உன் பால் நான் கொண்ட காதலை 
உள் மனதில் மூடி போட்டு வைத்திருந்த அந்நாளில் என் பாரம் புரியாமல் 
தள்ளி நின்று எள்ளி நகையாடினாயே, அப்போதா?

பூடகமாய் என் காதல் உன் காதில் நான் சொன்ன போது
புரியாத புதிர் ஒன்றை கேட்டதைப் போல்
புன்னகைப்  பூ ஒன்றை சிந்தி விட்டு சென்றாயே, அப்போதா?

ஏற்பாயா, மறுப்பாயா விடை ஏதும் அறியாமல் 
வலியோடும் பயத்தோடும்
பல மாதம் காத்திருக்க வைத்தாயே, அப்போதா?

அயல் நாடு செல்லுமுன் வழியனுப்ப வருவாயா 
என்றதற்கு விழி நீரில் ஒன்றுதிர்த்து 
விடையனுப்பி வைத்தாயே, அப்போதா?

தொலை தூரத்தில் உன் விளி,
தொலைபேசி கம்பி வழி 
குரல் மட்டும் தூதாய் அனுப்பினாயே, அப்போதா?

வெட்கத்தின் தலை களைந்து 
உள் மனதின் ஆசைகளை ஒவ்வொன்றாய் சொன்ன போது
மௌனத்தின் மொழி பேசினாயே அப்போதா?

பெற்றவளும் என் மனம் அறிந்து
பல மடங்கு உளம் மகிழ்ந்து  
பெண் பார்க்க சென்றாளே அப்போதா?

பரிசம் போட்ட பின்னும் 
பதினோரு மாதங்கள் காத்திருந்து
பின் மனம் திறந்து உன் காதல் சொன்னாயே, அப்போதா?

மணப்பெண்ணாய் மேடையிலே 
உன் கரம் பற்றிய போது
அன்பின் ஸ்பரிசத்தை தந்தாயே, அப்போதா?

பெயர் சொல்லி அழைத்திடவே 
நாணத்தில் கன்னம் சிவந்து
நெஞ்சத்தில் முகம் புதைத்தாயே, அப்போதா?

கார்கூந்தல் நீ முடித்து
மல்லிகையும் அதில் சேர்த்து 
காற்றில் உந்தன் வாசம் தன்னை பரவவிட்டாயே, அப்போதா?

தேன் சுவையும் தீஞ்சுவையும் 
திருக்குறளின் முப்பாலும் 
கலந்தெனக்கு நீ கொடுத்தாயே, அப்போதா?

அயல் நாட்டில் தனி வீட்டில் 
கேளீரற்ற  கானகத்தே 
அத்துணை சொந்தமுமாய் இருந்தாயே, அப்போதா?

நான் பாடும் திரைப் பாடலை 
தாலாட்டாய் எண்ணி நீயும் 
நள்ளிரவில் கண்ணுறக்கம் கொண்டாயே, அப்போதா?

ஓர் ஆராய்ச்சி எலி போலே,
உன் சமையல் நான் உண்ண 
உப்பித்தான் போனேனே, அப்போதா?

மகிழுந்தில் சில தருணம் 
மகிழ்ச்சியுடன் பல தருணம் 
சந்தோசம் வழிந்தோடியதே, அப்போதா?

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் 
பெருகிப் பொங்கும் 
உனதன்பை என்மேல் பொழிந்தாயே, அப்போதா?

மரித்தாலும் ஒருபோதும் 
மறக்காது உன்மேல் நான் கொண்ட 
பாசம் என்று சொன்னாயே, அப்போதா?

யாழ் இனிது, குழல் இனிது,
எனினும் அதனினிது  உன் மனது,
என்றிருந்த எனை விட்டு மறைந்தாயே, அப்போதா?

பார் பேசும் பல வார்த்தை- நீ, 
நான் வாழ்ந்த வாழ்க்கை 
அதை நினைக்க சில கணங்கள் மறந்தாயே, அப்போதா?

கனவினிலும் உனைக் காண 
தவங்கிடந்த எனைவிட்டு 
கனவெனவே மறைந்தாயே, அப்போதா?

எரியும் பனிக் காட்டினிலே 
எனை மட்டும் தவிக்க விட்டு 
தொலைதூரம் சென்றாயே, இப்போதா?  

பல நாட்கள் விழித்திருந்தேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!
ஆம் ! இப்போதும் விழிக்கின்றேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!!!

நீயில்லா பூமியிலே 
நீர் கூட கசக்குதம்மா.. 
நீர் இல்லாப் பாலையிலே 
செடி என்ன முளைத்திடுமோ?

கண்ணிமைக்கும் நேரத்தில் 
நிகழ்ந்திட்ட விபத்திதுவோ?
பின் சென்று அதைத் திருத்த 
காலக் கண்ணாடி தான் இல்லையோ ?

நடந்தது எல்லாம் ஒரு கனவாய் 
எண்ணி நானும் கண் மூட,
நாளைக் காலை விழிக்கையிலே  
நேரில் நீயும் வருவாயோ?




42 comments:

  1. /// பெற்றவளும் என் மனம் அறிந்து
    பல மடங்கு உளம் மகிழ்ந்து
    பெண் பார்க்க சென்றாளே அப்போதா...? ///

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்.. அது சரி, உங்க லெட்டர் எங்கே?

    ReplyDelete
  3. அருமை அருமை.. வெற்றி நமதே..!

    ReplyDelete
  4. உன் உணர்வுகளை என்னால் முழுமையாக உணர முடிகிறது ஆனந்த்! கவிதை நடையில் காதல் பொங்கி வழிந்திருக்கிறது. காதல் வந்த தருணமெது என்பதை மட்டும் துல்லியமாய் மீட்டர் போட்டு அறிந்தவர் எவரும் இலர். அதை கவிதை நடையில் நீ வடித்திருப்பது ரசனை!

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி சார்..

      Delete
  5. மகிழுந்தில் சில தருணம்
    மகிழ்ச்சியுடன் பல தருணம்
    சந்தோசம் வழிந்தோடியதே

    அழகா எழுதியிருக்கிங்க. வாழ்த்துக்கள் நட்பே.

    ReplyDelete
  6. துள்ளும் நடையில் சிறுகதைக் கடிதம். பிரமாதம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அப்பாதுரை சார்.. (அந்த காலத்துல சார் ங்கிறத தான் துரைன்னு கூப்பிடுவாங்க.. உங்க பேர்லையே துரை இருக்கு.. எப்படி கூப்பிடறது சார்.. ;-) )

      Delete
  7. பல நாட்கள் விழித்திருந்தேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!
    ஆம் ! இப்போதும் விழிக்கின்றேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!!!
    //அருமையாக இருக்கு சார்.வெற்றிபெற வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க ஸாதிகா..

      Delete
  8. ஆவி சார், கவிதையில் அசத்திட்டிங்க... வாழ்த்துக்கள் ... ஆவி சார், கவிதையில் அசத்திட்டிங்க... வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  9. காதலில் கரைந்து போய்விட்டீர்கள்§ வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க.. உங்க பாராட்டுகள் போதும்.. வெற்றியெல்லாம் வேண்டாம் ;-)

      Delete
  10. கவிதையான காதல் கடிதம் ....புன்னகை பூ ,விழி நீர் ....இரண்டும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. கவிதையை ரசித்ததற்கு நன்றி சதீஷ்..

      Delete
  11. துவக்கத்திலிருந்து முடிவுவரை அழகான காதல் சொல்லும் அருமையான கடிதம்..
    //நாளைக் காலை விழிக்கையிலே
    நேரில் நீயும் வருவாயோ?// பாதியில் திசைமாற்றி ஏக்கத்தில் முடித்துவிட்டீர்களே..
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே அப்படிதானே.. ஒரே நாளில் சந்தோசமும் இருக்கு, வருத்தங்களும் இருக்கு.. ரெண்டும் கலந்ததுதானே வாழ்க்கை. அதைத்தான் எதார்த்தமாக கூறியிருந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  12. //காற்றில் உந்தன் வாசம் தன்னை பரவவிட்டாயே//
    காதலின் பாதிப்பை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது!
    அருமை
    வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  13. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. சுகரசமாய் பரவசமாய்த் தொடங்கிய காதல் வரிகள் சோகரசத்தில் முடிகின்றன. உணர்வில் தோய்ந்த வரிகள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார்.. கவிதையை ரசித்ததற்கும், வருகைக்கும் நன்றிகள்..

      சென்னை வந்தபோது உங்களைப் பார்க்க முடியவில்லை..

      Delete
  15. //ஓர் ஆராய்ச்சி எலி போலே,
    உன் சமையல் நான் உண்ண
    உப்பித்தான் போனேனே, அப்போதா?//

    ஏன் பாஸ் ?

    அருமையாக
    ஆரம்பித்து சோகத்தில் முடித்து விட்டீர்களே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ப்ரேம்..

      ஒரு நல்ல படத்தில்/ கதையில்/ கவிதையில் கொஞ்சம் சந்தோசம், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சோகம் எல்லாம் இருந்தால் தானே அது வெற்றிபெறுகிறது.. அதுதானே வாழ்க்கையின் சாரமும் கூட.. சரிதானே?

      Delete
  16. உங்களுக்குள் காதல் பூத்த தருணத்தை படிக்க ஆவலாக இருந்த எனக்கு, கடைசி பாதியில் காதலியை மரணத்தின் வசம் கொடுத்தது துயரத்தைக் கொடுக்கிறதே, என்ன செய்ய?

    சுகமான ராகம், சோகமான ராகம் இரண்டுமே உங்களால் பாட முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள், ஆனந்த்!
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies

    1. உங்களுக்கு கவிதை பிடித்தது எனக்கு மிகவும் சந்தோசம் அளிக்கிறது.. பரிசை விட பாராட்டை ஆதிகம் விரும்புவன் நான் .. ஆதலால் இதையே எனக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.. :-)

      Delete
  17. பரிசு பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துகளுக்கு நன்றி ராஜி..

      Delete
  18. வார்த்தைக்குள் உறைந்து நிற்கும் உயிப்பு படிப்பவரை உருக செய்கிறது ஆவி அற்புதமான ஆழமான படப்பிடிப்பு இந்த படைப்பு ...............கவிதை அழகாய் செதுக்க தெரிந்தும் இன்னும் ஏன் தாமதம் ...........அடுத்ததடுத்த உங்கள் கவி காண ஆவல் ........வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. சரளா, உங்க வாழ்த்துகள் எனக்கு ஊக்கம் அளிக்கிறது. கவிதைப் புத்தகம் போடும் அளவிற்கு நன்றாக உள்ளதா?

      உங்க கருத்துகளுக்கு நன்றி..

      Delete
  19. ஆவி வர்ணனையிலே அசத்திட்டேங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. //மகிழுந்தில் சில தருணம்
    மகிழ்ச்சியுடன் பல தருணம் //என்ன ஒரு குதூகலம்!
    //ஓர் ஆராய்ச்சி எலி போலே,
    உன் சமையல் நான் உண்ண
    உப்பித்தான் போனேனே,// இப்ப புரிஞ்சிடுச்சி!
    //நான் பாடும் திரைப் பாடலை
    தாலாட்டாய் எண்ணி நீயும்
    நள்ளிரவில் கண்ணுறக்கம் கொண்டாயே// ஆஹா கொடுத்து வைச்சவங்க!
    //யாழ் இனிது, குழல் இனிது,
    எனினும் அதனினிது உன் மனது,// இசைவான மனசு உடையவங்க!

    //எரியும் பனிக் காட்டினிலே
    எனை மட்டும் தவிக்க விட்டு //குழந்தையின் ஏக்கம்!

    //நீயில்லா பூமியிலே
    நீர் கூட கசக்குதம்மா.. //துயரத்தின் விளிம்பு!
    //நாளைக் காலை விழிக்கையிலே
    நேரில் நீயும் வருவாயோ?//ஏக்கம்..எதிர்பார்ப்பு..நம்பிக்கை!

    ReplyDelete
  21. வர்ணனை அருமை.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. செம்ம கரச்சலா , கலக்கலா ஒரு கடிதம் எதிர்பார்த்தேன் ...!

    ஆனா கவிதையா கசிந்துருகீட்டீரே ஆவி ...! சூப்பர் ...!

    அழகான, வலியான ஒரு திரைப்பட பாடல் போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. முதல் காதலிக்கு எழுதின கடிதம் கொடுக்கலாம்னு பார்த்தேன்.. ரொம்ப அமேச்சுரா இருந்தது. இரண்டாவது காதலிக்கு எழுதியது கொஞ்சம் காமெடியா இருந்தது.. இதுதான் கொஞ்சம் படிக்கற மாதிரி இருந்தது.. அதான் இத போட்டேன்..

      முதல் பின்னூட்டமே பல நாள் பழகிய மாதிரி போட்டிருக்கீங்க ஜீவன்.. மூணாவது காதலிக்கு எழுதிய கடிதம் ஒண்ணு வந்துகிட்டு இருக்கு.. அது நீங்க கேட்ட மாதிரி இருக்கும்.. ;-)

      Delete
  23. அழகானதொரு கடிதம்.கவிதை வரிகளில் காதல் வழிந்தோடுகிறது.வெற்றி பெற வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தமிழ்...

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...