Sunday, March 23, 2014

சுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..! - எஸ்.ரா
                     "கதை பேசுவோம்" என்றொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்  தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் அவர் தேர்வு செய்த நூறு சிறந்த சிறுகதைகளில் சிறந்த (?!) ஐந்து கதைகளைப் பற்றி விவரித்தார்.

                         
(படங்கள் மற்றும் இன்னும் சில தகவல்கள் விரைவில் பதிவேற்றம் செய்கிறேன்..)

                       அவருடைய உரைக்குப் பின் எழுத்தாளர்கள் மற்றும் பதிவர்கள் அவரிடம் கேள்வி கேட்கும் பகுதி இருந்தது. அப்போது நான் அவரிடம் " எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட Genre களில் மட்டுமே எழுதுகிறார்கள்.. சுஜாதா என்ற எழுத்தாளரைப் போல் வெவ்வேறான தளங்களைப் பற்றி எழுதுவதில்லையே. அவரைப் போல் உலக எழுத்தாளர்களில் யாரேனும் உள்ளனரா" என்று கேட்டேன். என் கேள்விக்கு அவர் பதிலோ திகைக்க வைத்தது. " சுஜாதா என்பவர் இலக்கியவாதியே அல்ல. அவர் ஒரு சில பொழுதுபோக்கு கதைகள் மட்டுமே எழுதியுள்ளார். மேலும் எல்லா Genre களிலும் அவர் எழுதினாலும் அவர் எந்த Genre இலும் புகழ்பெறவில்லை " என்று கூறினார். இதை  என் சுஜாதா என்ற எழுத்தாளரின் எழுத்துகளின் பால் ஈர்க்கப்பட்ட என் போன்றவர்களுக்கு அவர் பேசியது காயப்படுத்துவது போல் இருந்தது. இதுகுறித்து உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..

77 comments:

 1. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புரிதல்...

  அதனால்____________________

  ReplyDelete
 2. O! My God! சத்தியமாக ஏஸ்.ரா. வா அப்படிச் சொன்னார்?! அவரின் எழுத்துகளை ரசிப்பவர்கள் தான் நாங்களும்! ஆனால், சுஜாதாவின் எழுத்துக்களில் மிகவும் ஈர்க்கப்பட்ட எங்களால் அவர் கருத்தை ஏற்க முடியவில்லை! ஈர்க்கப்பட்ட என்பதை விட நாம் நடுனிலையாகவே பார்ப்போமே! எப்படி அவர்,

  //" சுஜாதா என்பவர் இலக்கியவாதியே அல்ல. அவர் ஒரு சில பொழுதுபோக்கு கதைகள் மட்டுமே எழுதியுள்ளார். மேலும் எல்லா Genre களிலும் அவர் எழுதினாலும் அவர் எந்த Genre இலும் புகழ்பெறவில்லை "//

  என்று சொல்ல முடியும்?! சுஜாதா புகழ் பெற வில்லை என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது! உலகமே சுஜாதாவின் எழுத்துக்களில் கட்டுண்டுக் கிடந்ததே! ஏன் இப்போதும் கூட! அவரைப் போன்று ஒரு அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் யாராலும் எழுத முடியுமா? இலக்கியம் என்று எதைச் சொல்கின்றார்?

  நல்ல அருமையானத் தமிழிலும் எழுதி இருக்கின்றாரே! எத்தனை தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கின்றார்!! மக்களின் மனதிற்கு இயைந்தவர் தானே ஒரு சிறந்த எழுத்தாளர்?!!

  சரி ஆவி அன்று வந்தவர்களில் யாரும் இதற்கு மறுப்புத் தெரிவிக்க வில்லையா? விவாதம் எழ வில்லையா? ஆச்சரியாமாக உள்ளது! வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

  இலக்கிய இதழான கணையாழியில் சுஜாதாவின் பங்குதான் உலகிற்கே தெரியுமே! சரி நாம் தான் இலக்கியவாதிகள் அல்ல! போகட்உம்! இலக்கியவாதியான மனுஷ்யபுத்திரன் இதற்கு பதில் அளிக்கலாமே! அவர் சுதாவின் நல்ல நண்பராக இருந்தவர்! சுஜாதாவே மனுஷ்ய புத்திரனை ப் பற்றி பல இடங்களில் சொல்லியிருக்கிறார்!..

  இத்தனை நாள் எஸ்.ரா மீது இருந்த ஒரு மதிப்பு குறாந்துவிட்டது! ஒரு நல்ல சக எழுத்தாளராக இருந்தவரைப் பற்றி இப்படிக் கூறியது! கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது! மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது எங்கள் அன்பார்ந்த எழுத்தாளறைப் பற்றிச் சொல்லியதற்கு!

  ஆவி இந்த நிகழ்வு பற்றித் தெரியாமல் போயிற்றே!

  மனது இன்னும் ஆறவில்லை!

  ReplyDelete
  Replies
  1. அவர் நாள் முழுவதும் பேசிய பேச்சுகளில் லயித்திருந்த என்னால் இந்த வரிகளை மட்டும் ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

   நன்றி உங்கள் கருத்துகளுக்கு..

   Delete
 3. பொழுபோக்கிற்காக எழுவது கூட லேசுப்பட்ட கலையல்ல. கிணற்றுத்தவளைகள் கத்திக்கொண்டு இருக்கட்டும். ஜஸ்ட் லீவ் இட்.

  ReplyDelete
  Replies
  1. இவர் காலை முதல் மாலை வரை ய தமிழ் எழுத்தாளர்கள், உலக எழுத்தாளர்கள் என பலரையும் அறிமுகப்படுத்தி விட்டு கடைசியாக இந்தப் பேசிய இந்த பேச்சு அத்தனை நல்ல விஷயங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டது.

   Delete
 4. விடுங்க பாஸ்... நமக்கு என்ன தேவை? எண்டெர்டயின்மெண்ட்.. அதுக்கு வாத்தியார் செம கரண்டீ... அப்புறம் என்ன ***க்கு எலக்கியம், பின்நவீனத்துவம், முற்போக்குவாதம்...

  ReplyDelete
 5. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆவி ....அய்யியூஒ ..... சுஜாதா ,எஸ் ரா ....ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... நாஒன்னுமே சொல்லைலைங்கொ ....பால் வடியும் முகத்த இப்புடி கடுப்ப்ஸ் ஆக்கி இருக்கங்களே ...அவ்வ்வ்வ்வ்வ்வ் ஜி நீங்களும் இனிமேல் பெரிய ஆளுதானுங்கோ

  ReplyDelete
  Replies
  1. //நீங்களும் இனிமேல் பெரிய ஆளுதானுங்கோ// நீங்களே சொன்னதுக்கப்புறம்.. ஹிஹிஹி..

   Delete
  2. வணக்கம்,ஆ.வி!///இவங்க(கலை)சொல்லுறத நம்பாதீங்க.

   Delete
  3. ச்சே.. கலை எப்பவும் பொய் சொல்ல மாட்டாங்கன்னு நம்பறேன்.. இருந்தாலும் அவங்க "இனிமேல்" ன்னு ஒரு வார்த்தைய சேர்த்திருக்க வேண்டாம்.. அது மட்டும் தான் பொய் மாதிரி தெரியுது.. சரிதானா பாஸ்?

   Delete
 6. அவரவர் சுவை அவரவர்க்கு...சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற படைப்புகளை அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ. சிவக்குமார் சொல்வதே சரி.

  ReplyDelete
  Replies
  1. எஸ் ரா போன்ற எழுத்தாளர் இப்படி சொன்னது அபத்தமாக இருந்தது எனக்கு. கருத்துக்கு நன்றிங்க..

   Delete
 7. [[இதை என் சுஜாதா என்ற எழுத்தாளரின் எழுத்துகளின் பால் ஈர்க்கப்பட்ட என் போன்றவர்களுக்கு அவர் பேசியது காயப்படுத்துவது போல் இருந்தது. இதுகுறித்து உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.]]

  உங்கள் மனது ஏன் புண்படவேண்டும்? அது எஸ்ரா வின் கருத்து. அதவும் அவர் சுஜாதாவின் எழுத்தைப் பற்றிதானே சொன்னார். சுஜாதவை ஒன்றும் சொல்லவில்லையே.

  மேலும், உங்கள் கருத்து தான் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு! பிடித்த நடிகனை மற்றவர்கள் திட்டினாலும் ரசிகர்கள் மனது புண்படுகிறது! கடவுள் இல்லை என்றால் ஆன்மீகவாதிகள் மனது புண்படுகிறது. கடவுள் இருக்கு என்று சொல்வதால் கடவுள் இல்லை என்று சொல்பர்கள் மனது புண்படாதா? மனது எனபது எல்லோருக்கும் தானே இருக்கு! இந்தியாவில் இந்த மனப்பான்மை அதிகம்.

  ஒருவர் புகழ்பெற்றால், யாருமே அவரை விமரிசிக்கக்கூடாதா?

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்குரிய நம்பள்கி அவர்களே,

   //உங்கள் கருத்து தான் எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு! //

   இதை நான் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. மாற்றுக் கருத்து வரும்போது தான் மாற்றங்கள் வரும் என்று நம்புபவன் நான்!


   //பிடித்த நடிகனை மற்றவர்கள் திட்டினாலும் ரசிகர்கள் மனது புண்படுகிறது! //

   பிடித்த நடிகனின் ஒரு படைப்பு பிடிக்கலேன்னா அதை விமர்சிப்பது தவறில்லை. ஆனா அவருக்கு நடிக்கவே வராதுன்னு கழுவி ஊத்தரதுதான் தப்புன்னு சொல்றேன்..


   Delete
  2. //அவர் சுஜாதாவின் எழுத்தைப் பற்றிதானே சொன்னார். சுஜாதவை ஒன்றும் சொல்லவில்லையே. //

   அவர் சுஜாதா என்ற மனிதனை பற்றி ஏதாவது கூறியிருந்தால் அவ்வளவு கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஏனெனில் அவரது தனிப்பட்ட விஷயங்கள் எனக்கு தெரியாது. அது அவசியமும் இல்லை. ஆனால் எளிய பாமரனுக்கும் புரியும் வகையில் அறிவியலையும், வாழ்வியலையும் கொண்டு சேர்த்த ஓர் எழுத்தாளனை "இலக்கியவாதியே" அல்ல என்று விமர்சிப்பது நிச்சயம் வேதனைப் பட வைக்கிறது. இதே வேதனை எஸ்.ரா, ஜெயமோகன் போன்றோரை யாரேனும் விமர்சித்தாலும் வரும்..

   Delete
  3. //ஒருவர் புகழ்பெற்றால், யாருமே அவரை விமரிசிக்கக்கூடாதா?//

   நண்பா, விமர்சனம் செய்ய ஒவ்வொரு வாசகனுக்கும் உரிமை உண்டு. நான் மறுக்கவில்லை. சுஜாதா என்பவர் எழுதிய எல்லாமே பொக்கிஷங்கள் என்றும் நான் கூறவில்லை.. இருந்த போதும் இவர் வைத்திருப்பது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு.. சுஜாதாவின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் அவமதிப்பது போல் இருந்தது. எனக்கு தெரிந்தவரை ஆங்கிலத்தில் ராபின் குக் என்பவர் அறிவியலைப் பற்றி தனது கதைகளில் அழகாக எழுதியிருப்பார். தமிழில் நான் படித்த வரை சுஜாதா என்பவர் எழுதிய விஷயங்கள் காலம் கடந்தும் பேசப்படக் கூடியவை. அவற்றை வெறும் பொழுதுபோக்காக மட்டும் ஒதுக்கி விட முடியாது. அதைத் தான் நான் கூற விழைந்தேன்..

   Delete
  4. //exactly correct நம்பள்கி//

   வாப்பா, ஊருக்குள்ள வந்துதானே ஆகணும்.. ;-) ;-)

   Delete
 8. அது அவரின் கருத்து. அவ்வளவே... அவர் சொல்வதால் மட்டும் ஒரு விஷயம் ஸ்தாபிக்கப்பட்ட உண்மையாகி விடாது. ஆகவே... இதைக் கண்டுக்காம விட்டுர்றது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. நேற்று இருந்த கோபத்தை பதிவு செய்யணும்னு நினைச்சேன். அதான் சொன்னேன் ஸார். இப்ப தூங்கி எழுந்ததும் இருக்கிற பீலிங்- "இவர் சொல்றதால மட்டும் சுஜாதாவின் புகழ்" குறைஞ்சிடாது என்பதே!

   Delete
 9. அது அவருடைய கருத்து ஆவி. இருந்துவிட்டுப் போகட்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஸார்.. இப்போ விட்டுட்டேன்.. :)

   Delete
 10. நாங்கள் இருவரும் நேற்று ஒரு சில நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி (மலையாளம், தமிழ்) பேசிக் கொண்டிருந்த வேளையில் உங்கள் பதிவு வரவும் வாசிக்க நேர்ந்தது!

  ஒரு விஷயத்தைப் பற்றி முதலில் வாசித்ததும் அதுவும் நம் கருத்திற்கு முரண்பாடாக இருந்தால் அதுவும் இருவரின் எழுத்த்க்களும் மிகவும் பிடித்து இருப்பதால் முதலில் கொஞ்சம் உணர்ச்சிகள் தங்களுக்கு எப்படி இருந்ததோ அப்படித் தோன்ரத்தான் செய்தது! பின்னூட்டம் இட்ட பின், திரும்பவும் அதைப் பற்றிப் பேசிய போது....எப்படி நமது இடுகைகளை எல்லோரும் விமர்சிக்க உரிமை உள்ளதோ, ஏன் நமது சில இடுகைகளுக்கு நெகட்டிவ் கமென்ட்ஸ் வரத்தானே செய்தது, அது போல எல்லோருக்கும் விமர்சிக்க உரிமை உண்டுதானே! நாம் அதையும் வரவேற்கத்தானே செய்கின்றோம்! அது போலத்தான் கருத்து வேற்பாடுகள் வரத்தான் செய்யும் என்று ஆற அமர யோசித்தபோது......நிதானமாக யோசித்த போது தோன்றியது.

  எனவே ஆவி, நாங்களும் உங்களைப் போல கொஞ்சம் உணர்சிவசப்பட்டது உண்மைதான்! ஆனால், பொதுவாழ்க்கையில் வந்துவிட்டால் இது போன்ற விமர்சங்களைச் சந்தித்துதானே ஆகவேண்டும்!

  சுஜாதாவே இருந்திருந்தாலும் அவர் கூட இதை பஉணர்வுபூர்வமாக அணுகியிருக்க மாட்டார்! எஸ்.ராவின் எழுத்துக்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தான் இந்த ஒரு உணர்வு!

  எஸ்.ராவும் அவரது எழுத்துக்களைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை ஃபேஸ் பண்ணிக்கொண்டுதானே இருக்கிறார்!

  முதல் பின்னூட்டம் இட்டு தெளிந்து பின்னர் இதையும் போட நினைக்கும் போது ப்ளாகர் தகராறு ஸோ இப்போது!

  பரவாயில்லை போனால் போகட்டும் ஆவி

  ReplyDelete
  Replies
  1. மேடம், ஒரு படைப்புக்கு எதிர்மறையான விமர்சனம் வருவதை நான் ஆரோக்யமான விஷயமாக கருதுவேன். ஆனால் ஒரு நல்ல எழுத்தாளரை வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் என்று முத்திரை குத்தியது வருத்தமாக இருந்தது,,, இதே போல எஸ்ரா வை யாரேனும் சொல்லியிருந்தாலும் கோபப் பட்டிருப்பேன்.. :) :) கருத்துகளுக்கு நன்றி..

   Delete
 11. முதலில் ஒரு எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்களை மதிக்க வேண்டும் என எண்ணுகின்றேன். அப்பண்பு எஸ்.ரா விடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு முன் ஒரு புத்தகத்தைப் பற்றி,
  அது ஒரு ஆயிரம் பக்கக் குப்பை என்று இகழ்ந்ததாக நினைவிருக்கிறது.
  சுஜாதா அவர்களைப் பற்றிப் பேச இவருக்க அருகதை இருப்பதாக நினைக்க வில்லை.
  என் போன்ற பலரை வாசிப்புப் பழக்கத்திற்கு அழைத்து வந்தவதே சுஜாதா தான்.
  தான் பேசுவதை பலர் கேட்கிறார்கள் என்பதற்காக, அடுத்தவர்களை மட்டப்படுத்திப் பேசுவது அழகல்ல

  ReplyDelete
  Replies
  1. //சுஜாதா அவர்களைப் பற்றிப் பேச இவருக்க அருகதை இருப்பதாக நினைக்க வில்லை.// ஸார், சமகால எழுத்தாளர்களில் எஸ்.ரா வும் குறிப்பிடத்தக்க ஒருவர் என்றே நான் நினைக்கிறேன். அவர் விமர்சித்திருந்தால் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் சுஜாதா "இலக்கியவாதியே அல்ல" என கூறியது தான் என் வருத்தம்..

   Delete
 12. தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேனே! இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பு வரையறுக்கப்பட்டதோ?
  எஸ்.ரா ,ஜெ.மோ போன்றவர்கள் அவ்வப்போது பரபரப்பாக ஏதோ பேசி தங்கள் மதிப்பை குறைத்துக் கொள்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா முரளி.. ஜெமோ ஆங்கில மொழியில் தமிழ் பற்றி பேசியதை ஜீரணிக்க முடியாமல் இருந்தவன் என்ற போதும். ஜெமோ, எஸ் ரா, ஆகியோரின் படைப்புகள் எனக்கு பிடிக்கும். இதுபோன்ற விமர்சனங்கள் கண்டிப்பாக சுஜாதா ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கும் என்பதை இவர்கள் உணர்வார்களா?

   Delete
 13. எஸ்.ரா. சில நேரங்களில் இப்படி எதாவது பேசுவார் ..கண்டுகாதிங்க

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றிங்க.. இவர் பேச்சை கேட்க வேண்டி கோவையிலிருந்து சென்னைக்கு வந்தேன். பேச்சையும் ரசித்தேன்.. இந்த ஒரு கருத்தை தவிர.. :) :)

   Delete
  2. சுஜாதா மறைந்த பிறகு ஆளாளுக்கு அவரை ஏதோவது குற்றம் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்... சாதாரண மனிதரான அவர் மனைவி முதல் (தினகரன் பேட்டி) மாபெரும் இலக்கியவாதி எஸ்ரா முதல்.. அதுதான் அவர் தலையெழுத்து அல்லது பலம் அல்லது பலவீனம்

   Delete
  3. இந்தப் பதிவிற்கு வந்த எதிர்மறையான கருத்துகளையும், சுஜாதாவிற்கு ஆதரவான கருத்துகளையும் பாருங்கள்.. சுஜாதா இன்றும் பலமாக தான் இருக்கிறார்.

   Delete
 14. அவர் மனதுக்குப் பட்டதை அவர் சொல்லி இருக்கார். இதில் தவறு ஏதுமில்ல,

  ReplyDelete
  Replies
  1. ராஜி அக்கா, உங்களுக்கு எழுதப் படிக்கவே தெரியாதுன்னு யாராவது என்கிட்டே சொன்னா நான் கோபப்படாம இருக்க முடியுமா.. அது மாதிரி தான் இதுவும்.. :) :)

   Delete
 15. இது ஒரு சிறந்த எழுத்தாளனின் உழைப்பை அவமதிக்கும் பேச்சு !!
  யார் என்ன சொன்னாலும் சரி சுஜாதாவின் எழுத்துப் படைப்புக்களை அறிந்தவர்களே அதிகம் ஆதலால் இது ஒரு வீணான பேச்சு என்றே கருத்தில் கொள்ள வேண்டியது தான் அவசியம் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகோ. காலத்தை கடந்து நிலைத்து நிற்கும் படைப்புகளை கொடுத்தவர் சுஜாதா.. அவரை பற்றி இப்படி சொல்லியிருக்க வேண்டாம்.. :) :)

   Delete
 16. சுஜாதாவை தவிர மற்ற எழுத்தாளர்கள் முற்போக்காய் எழுதி என்ன சாதித்தார்கள் ?
  இவர்களின் கதைகளைப் படித்து எத்தனை திருந்தினார்களாம் ?
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. சரியா சொன்னீங்க..

   Delete
 17. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தரத்தில் புரிதல்!

  ReplyDelete
 18. எஸ்ரா அப்படி சொல்லவில்லை சார். நீங்க பாட்டுக்கு கொளுத்தி போட்டுடாதீங்க.

  எல்லா genreஐயும் முயற்சிக்கிறவங்க, எந்த genreலும் ஆழத்தை தொடமுடியாதுங்கிற மாதிரி சொன்னாரு. ஒன்று அல்லது இரண்டு, மூன்று genreகளில் தொடர்ச்சியாக எழுதுபவர்கள் அதில் உயரத்தை அடைய வாய்ப்புண்டு என்பது மாதிரி சொன்னார். கேள்வி கேட்டவர் சுஜாதாவின் பெயரை சொல்லி கேட்டதால், எஸ்ரா சுஜாதாவை தாக்கி பேசினார் என்று நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பாஸ்.. உங்க வருகைக்கு மிகவும் நன்றி.. முதலில் எனக்கும் எஸ்.ரா அவர்களின் எழுத்துகள் பிடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

   இரண்டாவது அந்த கேள்வியை எழுப்பியது நான் தான். நான் சுஜாதா போல் எந்த எழுத்தாளரும் நிறைய Genre களில் எழுதவில்லையே, என்று கேட்டபோது தான் அவர் இந்த வார்த்தைகளை கூறினார். குறிப்பாக சுஜாதா ஒரு பொழுதுபோக்கு எழுத்தாளர் என்ற வாக்கை அவர் உபயோகித்ததால் தான் நான் அதிர்ச்சி அடைந்தேன். அநேகமாக இந்த நிகழ்ச்சியின் காணொளி பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.. அதில் கண்டிப்பாக இவை பதிவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்..

   மீண்டும் ஒரு விஷயம் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.. எனக்கும் எஸ்.ரா அவர்களின் எழுத்துகள் பிடிக்கும்

   Delete
  2. ஆவி, திரும்பவும் சொல்கிறேன். அவர் சுஜாதாவை குறிப்பிட்டு சொல்லவில்லை. நிறைய genreகளில் எழுத முயற்சிக்கும்போது focus ஒரு வீச்சாக இல்லாமல் பரவும். அதனாலேயே ஒரு குறிப்பிட்ட genreல் master ஆகமுடியாது என்கிற பொருள் படும்படி சொன்னார்.

   உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். எனக்கும் சுஜாதாதான் ஆதர்சம் :)

   Delete
 19. இந்த அவருடைய கருத்தை முன்பே சொல்லியிருக்கிறார். ஒரு நாளிதழின் சிறப்புக் கட்டுரையிலும் எழுதி இருக்கிறார். அது அவர் கருத்து அவ்வளவுதான். சுஜாதாவுக்குக் கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கை இவர்களுக்குக் கிடைக்கவில்லை. பெரும்பாலானோர் பாராட்டும் ஒருவர் மீது சிலருக்கு எரிச்சல் வருவதும், குறை கண்டுபிடிப்பதும் இயற்கை.

  எஸ்ரா காவல்கோட்டம் நாவல் பற்றி என்ன சொன்னார் என்று நினைவிருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. நினைவிருக்கிறது ஸார்..

   சமகால எழுத்தாளர் ஒருவருக்கு கிடைக்கும் பெருமைகள் தமக்கு கிடைத்ததாய் எண்ணுதல் தானே ஒரு நல்ல எழுத்தாளரின் சிறப்பு!!

   Delete
 20. எஸ்.ரா எப்படி இதை சொன்னார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது? அப்போது எது இலக்கியம் என்ற கேள்வியும் எழுகிறது! என்னைப் பொறுத்தவரை சுஜாதா ஓர் சிறந்த படைப்பாளி! அதில் மாற்றுக்கருத்து இல்லை!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பா.. எனக்கும் அதே கேள்விதான்..

   Delete
 21. ஜுனியர் விகடனில் வரும் எஸ்.ரா வின் வரலாற்று தொடரை படித்தால் தெரியும் அவர் எவ்வளவு அரைவேக்காடு என்று.

  கணையாழியின் கடைசி பக்கங்கள், ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து, மீண்டும் ஜீனோ, இவை கிட்டத்தட்ட சம கால இடைவெளியில் சுஜாதா எழுதிய நூல்கள். ஒரே நேரத்தில் இப்படி முற்றிலும் மாறுபட்ட தளங்களை வேறு யாரும் இவரைப் போல் லாவகமாக கையாண்டதில்லை.

  இன்று மக்கள் எஸ்.ரா-வின் நூல்களை படிக்கிறார்கள் என்றால், ஒரு தலைமுறை மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியவரே சுஜாதா தான். நல்ல வேளை நீங்கள் ஜெ.மோ அல்லது சா.நி-யிடம் கருத்துக் கேட்கவில்லை.. :) :)

  ReplyDelete
  Replies
  1. கிருஷ்ணா, எஸ்.ரா சொன்னது போலவே நீங்களும் அவரை சொல்ல வேண்டாம். நம் காலத்தில் ஒரு நல்ல எழுத்தாளர் அவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் கூறிய அந்த சில வார்த்தைகள் (சுஜாதா அவர்களை குறித்து) மட்டுமே எனக்கு முரணாக தெரிகிறது.

   எனக்கு வாசிப்பின் மீதான ஆர்வத்தை தூண்டியது நிச்சயம் சுஜாதா தான்..

   Delete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. சுஜாதா இப்போது இருந்திருந்தால் இதை பற்றி எதுவும் கருத்து சொல்லாமல் ஒரு புன்னகையுடன் கடந்திருப்பார். அவர் ஒரு ஜீனியஸ்

  ReplyDelete
  Replies
  1. ஆமா பாஸ்.. கரெக்ட் தான்!

   Delete
 24. அது அவர் கருத்து, விட்டுவிடுங்கள். அவருக்குப் பிடிக்கவில்லையென்றால் சுஜாதா சிறந்த எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

  ReplyDelete
 25. +1
  இப்படி வாசகர்கள் கோபப்படுவதற்கு காரணம்... ஆங்கிலத்தில் ownership எம்று சொல்வார்கள் !

  இதன் அர்த்தம் சுருங்க சொன்னால்.....
  கோபப்படும் மனிதன் "தான் விரும்பும் ஒரு பொருள், செய்தி, எழுத்து, ஆக்கம், மனிதர்கள்" பற்றி எவனுக்கும் தவறாக சொல்ல அதிகாரம் இல்லை.. நீ யார்ரா அவரைப் பற்றி சொல்வது என்ற மனப்பான்மை!

  சுஜாதவை விட பெரிய பிஸ்தா ஷேக்ஸ்பியர். என்னைப் பொறுத்தவரை இவர் எழுத்துக்கள் படு திராபை..உண்மையிலே படு திராபை! உங்களுக்கு இப்ப கோபம் வருதா? ஷேக்ஸ்பியரை கிண்டல் செய்தால்..வராது!

  ஷாருக்கான் நடிப்பு திராபை! கோபம் வராது!
  ரஜினி கமல் நடிப்பு திராபை என்றால் என்ன ஆகும்?

  சொந்தம் கொண்டாடுகிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துகளில் உள்ள, நீங்கள் சொல்ல வரும் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒருவனுக்கு நன்கு பரிச்சியப்பட்ட ஒரு கலைஞனின் படைப்புகள் உதாசீனப் படுத்தப் படும் போது கோபம் உண்டாவது இயற்கை. சொந்தம் கொண்டாடுவது தவறு என்கிறீர்களா? ஒரே ஒரு பதில் சொல்லுங்கள்.. சுஜாதா எழுதிய ஏதாவது ஒரு புத்தகம் உங்கள் மனதில் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா இல்லையா,..?

   Delete
 26. எஸ் ரா சொன்னாரோ இல்லையோ, சுஜாதா பெரிய இலக்கியவாதி இல்லை என்பதே உண்மை. அறிவியல், டெக்னாலஜிதான் அவருடைய தொழில். தமிழ் எழுத்து அவருக்குப் பொழுதுபோக்குத்தான். புகழுக்காக தனக்கு ஆடன்ஷன் கிடைக்கவேண்டுமென்றே அவர் சினிமாவில் காலடி வைத்தார். அதிலும் சங்கர் போன்ற கமர்ஷியல் இயக்குனர்கள்தான் சுஜாதாவை அரவணைத்தவர்களும். சுஜாதா பெரிய எழுத்தாளராக் ஜொளித்தபோது, அவருடைய ரசிகர்களும் அரை டவுசர்கள் இல்லைனா அம்மாவிடம் பால் குடிச்சுக்கொண்டு இருந்தவர்கள்தாம். இலக்கியம் சம்மந்தமாக எந்த ஒரு விருதையும் சுஜாதா பெற தகுதி இல்லாதவர் என்பதே உண்மை.

  He was a commercial writer and of course he never had any serious tamil literary skills or whatsoever.

  இதிலே என்னதை பெரிய தப்பை கண்டுவிட்டீர்கள்னு ஆளாளுக்கு பொங்குறீங்கப்பா!

  ReplyDelete
  Replies
  1. "தமிழ்த் திரையுலகத்தை" பொறுத்தவரை திறமை இருந்தால் மட்டுமே வாய்ப்புகள் அமையும். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. "ஆகச் சிறந்த இலக்கியவாதிகள்" எனப்படுகின்ற பலரும் முயற்சி செய்தும் சுஜாதா அளவுக்கு வர முடியவில்லையே ஏன். ஒரே காரணம் தான். திரை உலகிற்கு தகுந்தவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு எழுதியதால் மட்டுமே சுஜாதாவால் நிலைத்து நிற்க முடிந்தது.

   //இலக்கியம் சம்மந்தமாக எந்த ஒரு விருதையும் சுஜாதா பெற தகுதி இல்லாதவர் என்பதே உண்மை.//

   விருது என்பது என்ன என்பதை பொறுத்தது அது. மக்கள் ரசித்துப் போற்றினார்களே அதுதான் அவருக்கு கிடைத்த விருது. இறந்த பின்னும் பேர் சொல்ல வாழ்கிறாரே.. இதுதான் பாஸ் விருது. "சாகித்ய அகாதமி மட்டுமல்ல விருது"

   Delete

  2. ***விருது என்பது என்ன என்பதை பொறுத்தது அது. மக்கள் ரசித்துப் போற்றினார்களே அதுதான் அவருக்கு கிடைத்த விருது. இறந்த பின்னும் பேர் சொல்ல வாழ்கிறாரே.. இதுதான் பாஸ் விருது. "சாகித்ய அகாதமி மட்டுமல்ல விருது"***

   நீங்க சொல்ற விருதையெல்லாம் அவர் வாங்கவில்லைனு எஸ் ரா சொல்லவில்லை! அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

   ரஜினிகாந்த்கூட நீங்க சொல்ற விருதையெல்லாம் வாங்கினவர்தான். நான் அவர் ரசிகன் என்பதால் அவர் நல்ல இலக்கியவாதினா சொல்றது. :))) ரஜினிக்கு தமிழ் உச்சரிப்புக்கூட சரியா வராது என்பது உண்மைதான். அப்படி ஒருவர் விமர்சிக்கும்போது (உண்மையை) எனக்கு கோவம் வந்தால் அது என்னுடைய மடமை! இல்லையா?

   ஒருவர் வெற்றி என்பது, மற்றவர்களை கவர்வது என்பது மக்கள் மனதில் வாழ்வது என்பதெல்லாம் வேறு அவர் படைப்புகள் தமிழ் இலக்கியத்தை அல்லது தமிழை எந்தவகையிலாவது மேம்படுத்தியதா என்பது வேறு.

   சரி விடுங்க!

   Delete
 27. இலக்கியம் ,படைப்பூக்கம், தீவிர எழுத்து என்றெல்லாம் புரியலைனா, சுஜாதாவை "பொழுது போக்கு எழுத்தாளர்னு" சொன்னால் கோவம் வரவே செய்யும் அவ்வ்!

  எல்லா மொழியிலவும் இப்படி வகைகள் இருக்கு.எனவே அவ்வகையில் இருப்பவரை இன்னொரு வகையில் "மாஸ்டர்" என சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டால் என்ன செய்வது?

  சுஜாதா எழுதியது "பொழுது போக்கு வகை" எழுத்துக்களே,ஆனால் அதிலும் தனித்தன்மையுடன் இருந்தார் என சொல்லலாம்.

  அவரோட அறிவியல் கதைகள் "எலிமெண்டரி லெவலில்" இருப்பதை அக்காலத்தில் படிக்கும் போதே உணர்ந்துள்ளேன்.

  புதிதாக "கதைப்புத்தகங்களை" வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கு நல்ல துவக்க புள்ளி சுஜாதாவின் படைப்புகள், ஆனால் அதுவே ஆக சிறந்த இலக்கியம் என அங்கேயே சம்மணம் போட்டு குந்தினால் வாசிப்பில் தரம் உயராது என்பது எனது அவதானிப்பு!

  # நான் சுஜாதா இருந்த காலத்திலேயே "கடுதாசி எழுதி"கலாய்ச்சு இருக்கேன், எனது கேள்விகளுக்கு கூட அவரது "ஏன் ,எதற்கு,எப்படியில் பதில் சொல்லி இருக்கிறார், இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க என ,கற்றதும் பெற்றதுமில் ஒரு போட்டிப்போல அவ்வபோது வைப்பார் ,அதற்கு பதில் எழுதி புத்தகமும் பரிசாக பெற்றுள்ளேன்.

  படிப்பாரோ இல்லையோ "செமையா" விமர்சனம் செய்து அவ்வப்போது கடிதம் போட்ட ஆசாமி அடியேன் :-))

  எதுக்கு இதை எல்லாம் சொல்கிறேன் என்றால் சும்மா "ரசிக மனப்பான்மையிலே" எப்பவும் யோசிச்சுட்டு இருக்க கூடாது!

  ReplyDelete
  Replies
  1. முதலாவதா "வவ்வால்" என் தளத்து மேலயும் பறந்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன்..

   //புதிதாக "கதைப்புத்தகங்களை" வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கு நல்ல துவக்க புள்ளி சுஜாதாவின் படைப்புகள், ஆனால் அதுவே ஆக சிறந்த இலக்கியம் என அங்கேயே சம்மணம் போட்டு குந்தினால் வாசிப்பில் தரம் உயராது என்பது எனது அவதானிப்பு! //

   ஒக்கே, உங்க அவதானிப்பை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.. சுஜாதா மட்டுமே சிறந்த இலக்கியவாதி என்றோ மற்றவர்கள் யாரும் இலக்கியவாதிகள் அல்ல என்றும் சொல்ல வரவில்லை.. சுஜாதாவும் (உங்க பாஷையில ஒரு எலிமெண்டரி) இலக்கியவாதியே என்ற கருத்தையே நான் சொல்ல விழைகிறேன்..

   //அதற்கு பதில் எழுதி புத்தகமும் பரிசாக பெற்றுள்ளேன்.//
   வாவ்..அப்ப நிச்சயம் அவருடனான நெருக்கம் உங்களுக்கு அதிகமாகவே இருந்திருக்கும்..

   //சும்மா "ரசிக மனப்பான்மையிலே" எப்பவும் யோசிச்சுட்டு இருக்க கூடாது!//

   ஒக்கே பாஸ் :) :) :)

   Delete
 28. இது அவர் கணிப்பு!
  கலைகளே பொழுது போக்குக்கு உருவாக்கப்பட்டவை, அந்த வகையில் சுஜாதா வெற்றி பெற்றவர் என எஸ் ரா கூறுவதாகக் கொள்வோம்.

  ReplyDelete
  Replies
  1. பாசிட்டிவாவே யோசிப்போம் னு சொல்றீங்க.. ஒக்கே பாஸ்..! முதல் வருகைக்கு நன்றி..

   Delete
 29. ஒரு முறை சுஜாதா ஒரு ஆட்டோ ஓட்டுனர் மடித்துவைத்து ஒரு கதைப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பதைக் கண்டு இது போல எட்டாக பத்திரிக்கையை மடித்து படிக்கும் ஆட்களுக்கு நான் என்ன இலக்கியம் படைக்க முடியும் என்று ஒரு கேட்டிருந்தார். நல்ல கேள்விதான். சுஜாதாவை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு அவர் ஒரு ஜீனியஸ் என்று தோன்றுவது இயற்கையே. ஆனால் வாசிப்பின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நாம் நகரும்போது சுஜாதாவைப் பற்றிய பிம்பம் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. வவ்வால் குறிப்பிட்டதுபோல அவருடைய அறிவியல் கதைகள் ஒரு துவக்கப் புள்ளி மட்டுமே. அதையும் அவர் தான் படித்த பல ஆங்கிலக் கதைகளின் தமிழ்ப் பிரதியாகவே எழுதியிருப்பார். நான் இத்தனை படிக்கிறேன் எனக்கு இதெல்லாம் தெரியும் என்பதை அவர் வெளிப்படையாக தன் எழுத்தில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அதை நாம் சுலபமாக புரிந்துகொள்ள முடியும். சுஜாதா ஒரு நல்ல பொழுதுபோக்கு எழுத்தாளர் என்பது உண்மையே. அதற்கு அப்பால் அவரை நிறுத்தி வைத்து மிகச் சிறந்த இலக்கியவாதி என்று முத்திரை குத்துவது ஒரு சராசரி ரசிகனின் தனி மனித வழிபாடு தவிர வேறொன்றுமில்லை.

  ReplyDelete
 30. கிட்டத்தட்ட எழுபது கமெண்டுகள். மெஜாரிட்டி சுஜாதாவுக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி.

  ஆனால் தோழர்களே, கருதுகோளை மட்டுமே ஆதாரமாக கொண்டு கருத்துகளை வீணடித்துவிடாதீர்கள். உண்மைகளோடு உரையாடுவோம்.

  ‘கதைகள் பேசுவோம்’ நிகழ்ச்சியில் அன்பர் கோவை ஆவி கேட்ட கேள்விக்கு எஸ்.ரா விடையளிக்கும்போது அவர் சுஜாதாவை எவ்வகையிலும் அவமதித்துவிடவில்லை.

  “சுஜாதாவை இலக்கியவாதிகள் பொழுதுபோக்கு எழுத்தாளராக பார்க்கிறார்கள்” என்று சொன்னாரே தவிர, அது தன்னுடைய கருத்து என்று அவர் சொல்லவில்லை.

  அவ்வாறு அவர் கருதுவாரேயானால், இலக்கிய நூல்களையும் தமிழின் பெரும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்திய ‘கதாவிலாசம்’ தொடரில் சுஜாதாவை எழுதியிருப்பாரா என்று நாம் யோசிக்க வேண்டும். சுஜாதாவே கூட அப்போது இதற்காக பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.

  உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட ‘என்றென்றும் சுஜாதா’ நூலை தொகுத்தவரே எஸ்.ரா.தான். அந்நூல் வெளியீட்டு விழாவில் தன்னை சுஜாதாவின் வாசகன் என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

  இந்தப் பதிவில் அவ்ளோதான் என்னோட விவாதம்.

  ReplyDelete
 31. அவரின் கண்ணோட்டம் முற்றிலும் தவறானது.பல வித்தியாசமான கோணங்களை கையாண்டவர் சுஜாதா. அறிவியல் கருத்துக்களை எளிமை படுத்தி கூறியதில் மிக்க பங்குண்டு.

  ReplyDelete
 32. எஸ்.ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் . ஆனால் இப்போது ' இண்டர்நெட் டவுன் லோடு' எழுத்தாளராக degenerate ஆகிவிட்டார். எதைவேண்டுமானாலும் என்னால் எழுத முடியும் என்று யாருக்கோ நிரூபிக்க வேண்டிய கட்டாயம் போலும். ஆனால் சுஜாதா, அத்தகைய நிரூபணம் தேவைப்படாத போதே தன்முனைப்பு டன் புதுப்புது வார்ப்புகளில் தமிழுக்கு தொண்டு செய்தவர். (2) அவருடைய எழுத்து பொழுதுபோக்கு எழுத்து என்றால், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் எழுத்துக்களும் வெறும் பொழுதுபோக்கு எழுத்துக்களே. (3) ஒருவேளை , ராமாயண மகாபாரதங்களுக்கு தலையணை அளவில் விரிவுரை எழுதினால் அதுதான் காத்திரமான எழுத்தோ ? (4) எப்படி ஆதித்தனார் தமிழ்நாட்டில் தினத்தாள் படிக்கும் பழக்கத்தை நிலைநாட்டியவரோ, அப்படியே சுஜாதா, வார இதழ் வாசிப்பு அழியாதிருக்க அடித்தளம் நாட்டினார். அவ்வாசிப்புக்கு ஏற்ற இலக்கியத்தரம் அவர் படைப்புகளில் இருந்தது. அதே தரத்தை அடையத்தக்க படைப்பாற்றல் இராமகிருஷ்ண னுக்கும் எதிர்காலத்தில் வாய்க்க முடியுமென்று நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. செல்லப்பா,

   //எப்படி ஆதித்தனார் தமிழ்நாட்டில் தினத்தாள் படிக்கும் பழக்கத்தை நிலைநாட்டியவரோ, அப்படியே சுஜாதா, வார இதழ் வாசிப்பு அழியாதிருக்க அடித்தளம் நாட்டினார்.//

   உண்மை ...உண்மை!

   தினத்தந்தி போலவே ,சுஜாதாவின் "எழுத்து தரமும்" எப்படி தினத்தந்தியினை அதிகம் பேர் படிச்சாலும் ,தினமணி/தினமலர் தான் தரம்னு சொல்லுறாங்க?

   ஆனால் தினத்தந்தி போல சுஜாதா என சொல்லிவிட்டு ,அப்புறம் என்ன "இலக்கிய தரம்" ஓட படைச்சார்னு பிற்சேர்க்கை?

   # நான் எல்லாம் தினத்தந்தி கன்னித்தீவு படிச்சு தான் படிக்கவே கத்துக்கிட்டேன், தினத்தந்தி தான் "தமிழின்" தரமான தமிழ் செய்தித்தாள்!

   தினமணி,தினமலர், தி இந்து(தமிழ்) எல்லாம் குப்பைனு சொல்லுறேன் , நீங்க என்ன சொல்லுறீங்க?
   ---------------------------

   //அதே தரத்தை அடையத்தக்க படைப்பாற்றல் இராமகிருஷ்ண னுக்கும் எதிர்காலத்தில் வாய்க்க முடியுமென்று நம்புகிறேன்.//

   ஹி..ஹி அது எஸ்.ராவால் அடுத்த ஜென்மத்தில் கூட முடியாது, ஏன்னா அவர் கொஞ்சமாச்சும் "உழைச்சு" எழுதனும் என நினைப்பவர், சுஜாதா போல எட்டுப்பக்கம் , ஒரு மணி நேரம் என எழுதினவர் இல்லை. உங்களுக்கு அந்த கதைலாம் தெரியாது ,போயி வேற வேலை இருந்தா பாருங்க.

   Delete
 33. ஆவி பாஸ்.. வாழ்த்துக்கள்.. விவாதம் களை கட்டி இருக்கிறது போல.. :)

  ReplyDelete
 34. சுஜாதா இலக்கியவாதியா இல்லையா என்கிற சர்ச்சை அவர் வாழ்ந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது,இந்த கேள்விக்கு கடைசி வரை பதில் கிடைக்கப்போவதே இல்லை.

  சுஜாதா இலக்கியவாதியோ இல்லையோ,அவர் தமிழ் எழுத்துலகின்
  தனிப்பெரும் சாதனையாளர் என்பதை அவரின் எதிரிகள் கூட ஒத்துக்கொள்வார்கள்.

  தான் படித்து உணர்ந்த பெரிய விஷயங்களை சராசரி வாசகனுக்கும் புரியும்படி எளிய தமிழில் எழுதிய மாமனிதர் சுஜாதா.  ReplyDelete
 35. Please just Ignore his comment.
  He has to grow more!!

  ReplyDelete
 36. எஸ்ரா தொகுத்த தனக்குப் பிடித்த 100 சிறுகதைகளில் இரண்டு சுஜாதாவினுடையது

  ReplyDelete
 37. முரண்பட்டவர்கள்தான் இலக்கியவாதிகள். அப்போதுதான் படைப்புகள் சிறப்பாக இருக்கும். வாசகர்களை கதைக்குள் இழுப்பது எப்படி என்பது சுஜாதாவக்கு கைவந்த கலை. ஆதலால் அவர் சொல்வதை காற்றில் பறக்கவிடுவோம்

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...