Sunday, March 16, 2014

கடவுள் எனும் கோட்பாடு -2 (சிலை விளையாட்டு)




                        'விடாது கருப்பு', 'என் இனிய இயந்திரா', போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு பின் சமீப காலங்களில் வரும் "சூப்பர் ஹிட்" தொடர்கள் எதுவும் என்னை அவ்வளவாய் ஈர்த்ததில்லை. நல்ல விவாதப் பொருளுடன் வரும் சில பட்டிமன்ற நிகழ்சிகளையும், டாக் ஷோக்களையும் பார்ப்பதோடு சரி. கை உடைந்த ஒரு மாதம் தொலைக்காட்சி பார்த்தே பொழுதை நகற்ற வேண்டிய கட்டாயம் அமைந்து போனது எனக்கு. இடையிடையே வரும் அந்த விளம்பரங்கள் தான் எனக்கு ஆறுதல். அப்படி இடையே வந்த ஒரு 'இடுப்புவலி' நிவாரணிக்கான விளம்பரத்தில் ஒரு கணவனும், மனைவியும் "ஸ்டேச்யூ" என்று சொல்லி ஒரு விளையாட்டு விளையாடுவர். இதை பார்த்த போது எனக்கு எங்கள் தெருவோரம்  பால்ய காலத்தில் விளையாடிய அந்த "ஸ்டேச்யூ" என்ற விளையாட்டு நினைவுக்கு வந்தது.

                         நாலைந்து பேர் வரை விளையாடக் கூடிய அந்த விளையாட்டில் ஆங்கில அகர வரிசைப்படி முதலில் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார். அவர் ஓடலாம், பாடலாம், ஆடலாம், அவர் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் குழுவில் மற்றுள்ள ஆட்களில் ஒருவர் திடீரென்று "ஸ்டேச்யூ" என்று சொல்வார். அவர் அப்படி சொன்னதும் செய்து கொண்டிருந்த செயலை அதே இடத்தில் நிறுத்தி விட்டு சிலை போல் அசையாமல் நிற்க வேண்டும். (உ.ம் ) ஒருவர் ஓடுவதற்காக ஒரு காலை தூக்கியபடி இருந்தார் எனில் அசைவின்றி அதே நிலையில் நிற்க வேண்டும். "ரிலீஸ்" என்று சொல்லும் வரை. அதிக நேரம் நிற்க முடிந்தவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார்.  பெரும்பாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனுபவத்தோடு சென்னை வந்த புதிதில் விஜிபி கோல்டன் பீச்சில் சிலை போல் நிற்கும் மனிதரின் அருகில் அவரைப் போலவே சிலை போல நின்று வெறுப்பேற்றிய சம்பவங்களும் உண்டு.

                     இந்த நினைவு வந்து மறைந்த ஒரு சில நாட்களில் ஒரு சரித்திர புத்தகம் ஒன்று படிக்கக் கிடைத்தது. அந்தக் கதையின் ஒரு காட்சியில் காதல் வயப்பட்டிருந்த கன்னி ஒருவள் தன் காதலன் நினைவில் மூழ்கிக் கிடக்க, அந்நேரம் அவ்வழி வந்த மாமுனி ஒருவரை கண்டு கொள்ளாது கனவில் சஞ்சரிக்க, கோபம் கொண்ட அந்த முனிவர் தன் கமண்டலத்தில் இருந்த நீரை அவள் மேல் தெளித்து தன்னுடைய வரவை கூட கவனிக்காது கனவில் சஞ்சரித்த அவளை சிலையாய் போகக் கடவது என சபித்தார். அவளும் மறுகணம் சிலையாய் மாறி நின்றாள். இதுபோன்ற பல கதைகள் நிரம்பிய சிலைகள் நான் ஒருமுறை கிருஷ்ணன் அவதரித்ததாக சொல்லப்பட்ட மதுரா சென்ற போது  மதுரா அருங்காட்சியகத்தில் காணக் கிடைத்தது.

                  அங்கே 'கிருஷ்ண ஜன்ம பூமி' என்று சொல்லக்கூடிய ஒரு கிருஷ்ணர் கோவில் அமைந்திருக்கிறது. கம்சன் கிருஷ்ணனின் தாய் தந்தையரை சிறைப்பிடித்து வைத்திருந்தது இங்குதான் என்று கல்வெட்டுகள் உரைக்கின்றன. அதனால் "கர்ப்பகிரஹா" என்றும் அழைக்கப்படுகிறது.  அருகிலிருந்த பிருந்தாவன் எனும் கிராமம்  கிருஷ்ணர் தன் பால்ய காலத்தை இங்கே செலவழித்ததற்கு கட்டியம் கூறுகிறது. கிருஷ்ணர் இந்திரனை தோற்கடித்த கோபத்தில் இந்திரன் மழையால் மக்களை தண்டிக்க நினைக்க, அச்சமயம் அங்கிருந்த கோவர்த்தன மலை கொண்டு மக்களை காப்பாற்றியதாக இதிகாசம் சொல்கிறது. மலையை பெயர்த்து எடுத்ததை அப்போது என்னால் நம்ப முடியாவிட்டாலும் சமீபத்தில் மூன்றடுக்கு வீட்டை சேதாரமில்லாமல் வேறிடத்துக்கு மாற்றிய செய்தி படித்த போது நம்ப முடிந்தது.

                 ஆனாலும் இதிகாசங்கள் வெறும் கதைகளா, நிஜத்தில் மக்களோடு மக்களாக கடவுள்கள் வாழ்ந்தனரா.. இல்லை தம்மில் உயர்குணமும், வீர தீர பராக்கிரமும், நல்ல எண்ணங்களும்  கொண்ட ஒருவரை கடவுளாக பார்த்தனரா? மற்றவர்கள் சொல்லும் எல்லா விஷயங்களுக்கும் விளக்கம் கேட்கும் நம்மால் நம் மனதில் படிந்திருக்கும் பல  விஷயங்களுக்கும் பதில் சொல்ல முடிவதில்லையே, ஏன்? குறிப்பாக கடவுள் பற்றிய கேள்விகளுக்கு.. மரணம் என்ற நிகழ்வுக்குப் பின் நடப்பது என்னவென்ற கேள்விக்கு விடை தெரியாத வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா?  இறப்பிற்கு பிறகு அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்??  அப்படியென்றால் மரணத்திற்கும் கடவுளுக்கும் தொடர்பு இருக்கிறதா? சொர்க்கம் என்ற காஸ்ட்லி ஸ்வீட்டும் (Suite) நரகம் என்ற குப்பை மேடும் இருப்பதும் நிஜம் தானா?
இருந்து  இறந்து தான் பார்க்க வேண்டும்..!!


தொடரும்..

நன்றி:  கூகிள், விக்கிபீடியா.


32 comments:

  1. கோவர்த்தன மலையைத் தூக்கி மக்களைக் காத்தவன் என்பது துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பவன் என்பதன் குறியீடாக இருக்கலாம். :)))) இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகள் இருப்பதென்னவோ நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. சார்.. இப்போ ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டினார்ன்னு சொல்றோம்.. ஆனா அவர் உத்தரவின் பேரில் வேறு ஆட்கள் கட்டினார்கள்.. அதுபோல கிருஷ்ணன்னு ஒரு தனி மனிதன் ஒரு மலையை நகர்த்தியிருக்க முடியாது.. அதே சமயம் அவர் தலைமையில் ஒரு குழு நகர்த்தியிருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?

      Delete
    2. தாஜ்மகாலை ஷாஜகான் தனியாகக் கட்டியதாக வரலாறு சொல்லவேயில்லை. இதிகாசமும் புராணமும் க்ருஷ்ணர் சிறு விரலில் மலையை அலட்சியமாகத் தூக்கி நின்றதாகச் சொல்கிறது.

      Delete
    3. என் கேள்வியும் அதே தான் சார்.. இதிகாசங்களில் ஒரு சாதாரண நிகழ்வை மிகைப்படுத்தி சொல்லியிருக்கின்றனரா??

      Delete
  2. “என எதிரில் ஒரு நாற்காலி இருக்கிறது எனில் அதைச் செய்தவன் ஒருவன் இருந்துதானே தீரவேண்டும்? அப்படி பூமியில் உயிரினங்களும் இயற்கையும் அமைய ஒருவன் காரணபூதனாய் இருந்தேயாக வேண்டும். அவனை இறைவன் என்கிறேன்” என்கிற பொருளில் ஒரு கவிதை எழுதினார் கண்ணதாசன். ஆக... பெரும் கவிஞர்களும் அறிஞர்களும் கூட அறியத் துடித்த விஷயம் இது. இம்மட்டில் கடைசிவரி தான் சரியாக இருக்கும்னு தோணுது... ஒருமுறை இறந்துதான் பார்க்க வேணும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸார், அறிவியலும் ஒரு எல்லைக்கு அப்பால் சென்று நின்று விடுகிறது.. அதுவும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கைகட்டி நிற்கிறது..

      Delete
    2. கை கட்டி நிற்பது அறிவியல் அல்ல ....அறிவிய,ல் விடைகளை தேடிக்கொண்டே இருக்கிறது .கைது கட்டி கேள்வி கேட்காமல் சொல்வதை பின்பற்றும் நம்பிக்கைதான் கடவுள் நம்பிக்கை

      Delete
  3. சொர்க்கமோ, நரகமோ + இருக்கோ, இல்லையோ - இந்த வீண் ஆராய்ச்சிக்கு போய் விட்டால் மனது கெடும்... பிறகு உடம்பும் கெடும்... அடடா... எழுதின பதிவில் இருந்து copy paste செய்து விட்டேனே... ம்... பதிவில் மாற்றி விடுவோம்... எண்ணம் போல் அனைத்தும்...!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. நீங்களும் அதைப்பற்றி தான் எழுதியிருக்கீங்களா.. அருமை!

      Delete
  4. பதிவின் முடிவிலுள்ள வரி கண்ணதாசன் அவர்களின் வரிகளை ஞாபகப்படுத்தியது...

    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்...
    பிறந்து பாரென இறைவன் பணித்தான்...!
    படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்...
    படித்துப் பாரென இறைவன் பணித்தான்...!
    அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்...
    அறிந்து பாரென இறைவன் பணித்தான்...!
    அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்...
    அளித்துப் பாரென இறைவன் பணித்தான்...!
    பாசம் என்பது யாதெனக் கேட்டேன்...
    பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்...!
    மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்...
    மணந்து பாரென இறைவன் பணித்தான்...!
    பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்...
    பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்...!
    முதுமை என்பது யாதெனக் கேட்டேன்...
    முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்...!
    வறுமை என்பது என்னெனக் கேட்டேன்...
    வாடிப் பாரென இறைவன் பணித்தான்...!
    இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்...
    இறந்து பாரென இறைவன் பணித்தான்...!
    'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
    ஆண்டவனே நீ ஏன்'
    எனக் கேட்டேன்...!
    ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
    'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்...!

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் என்னமா பீல் பண்ணியிருக்காரு.. பகிர்வுக்கு நன்றி DD..

      Delete
    2. //'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
      ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்...!
      ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
      'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்...!//

      செம செம



      Delete
  5. வாழ்ந்து பார்க்கத்தானே வாழ்க்கை

    ReplyDelete
  6. அருமை.....

    இந்தப் பதிவிற்குதான் மதுரா படம் கேட்டீர்களா? சென்ற ஞாயிறன்று மதுரா, விருந்தாவன், கோவர்த்தன் சென்று வந்தேன். சில படங்களும் இருக்கிறது!

    வேண்டுமெனில் அனுப்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாஸ்.. மதுரா படம் போட்டா பொருத்தமா இருக்கும்னு நினைச்சேன்..:)

      Delete
    2. முகப்புத்தகத்தில் சில மதுரா படங்கள் பகிர்ந்திருக்கிறேன் ஆவி..... வேண்டுமெனில் பயன்படுத்திக் கொள்ளலாம்! :)

      Delete
    3. நன்றி பாஸ்!!

      Delete
  7. 'மறைந்திருப்பது என்ன? அதுவே அறியும்..அல்லது அதுவும் அறியாது' எனும் பொருளில் ரிக் வேதத்தில் சிருஷ்டி கீதம் வரும். அதாவது உங்க பிரச்சினை புதுசு இல்லை. அப்போ இருந்தே இருந்துட்டு வருது. 'கண்டவர் விண்டிலர்..விண்டவர், கண்டிலர்'.

    ReplyDelete
    Replies
    1. //கண்டவர் விண்டிலர்..விண்டவர், கண்டிலர்'.// இதன் அர்த்தம் இப்போது கொஞ்சம் புரிவது போல் உள்ளது

      Delete
  8. //இல்லை தம்மில் உயர்குணமும், வீர தீர பராக்கிரமும், நல்ல எண்ணங்களும் கொண்ட ஒருவரை கடவுளாக பார்த்தனரா? //

    இதுவும் சரிதான்! நாங்களும் இப்படி நினைத்தது உண்டு! கண்ணகி ஒரு சாதாரப் பெண் மதுரையை எரித்த கற்புக்கரசி என்பதால் கண்ணகிக்கு, கேரள தமிழ்நாடு எல்லையில் தேக்கடி, தேனி அருகில் மங்களா தேவி கோவில் என்ரு இல்லையா? அது போல இருக்கலாம்! நிகழ்வுகள் எதுவுமே பொய்யாக இருக்க முடியாது, மிகைப்படுத்தி எழுதப்பட்டாலும், இடைசெருகல்கள் நிறைய இருந்தாலும்!

    ஆனால், கடவுள் என்பதற்கும் இது போன்றவற்றிற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை! கடவுள் என்பது ஒரு மாபெரும் சக்தி! அதனை அறிவியல் வாயிலாக விளக்க வேண்டும் என்றால் இயற்பியல் தத்துவத்தால் விளக்கம் தரப்பட்ட புத்தகங்கள் உள்ளன்! ஏன் நம் எழுத்தாளர் சுஜாதா அவர்களே "கற்றதும் பெற்றதும" ல் குரிப்பிட்டிருப்பார்! அணுக்களைப் பற்றிச் சொல்லி! இறுதியில் "இதைத்தான் மறுபிறவி" என்று சொல்கொன்றோமோ என்ரும் கூட கேட்டிருப்பார்!

    ஆன்மீகம் என்பதும், நாம் நம் வாழ்வில் தினமும் செய்யும் சடங்குகளுக்கும் சம்பத்தமில்லை! ஆன்மீகம் எனப்து வேறு! எனவெ "குறிப்பாக கடவுள் பற்றிய கேள்விகளுக்கு.. " நாம் சடங்குகள் வாயிலாகத் தேடினால் விடை கிடைக்காது! அது போலத்தான் மரணத்திற்கும் அதன் பிறகு செய்யப்படும் சடங்குக்ள் வாயிலாக விடை தேடினால் கிடைக்காது! நாம் எல்லோரும் குழம்புவதும், இறுதியில் கடவுள் இல்லை என்று பலர் முடிவுக்கு வருவதும் இதனால் தான்! கடவுள் என்று உருவத்தைப் பார்ப்பதால் வரும் குழப்பம்!

    இதைப் பற்றித் தனியாக ஒரு இடுகை போடலாம் என்று நாங்கள் சில விஷயங்கள் திரட்டி வைத்துள்ளோம்! பார்ப்போம்! எப்பொது என்று!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் அந்த புத்தகத்தின் பெயர் கடவுள் என்று நினைக்கிறன்.. பாமரனுக்கும் புரியாத மாதிரி எழுதியிருப்பார்.. :-) அதைபடிக்க புரிந்துகொள்ள கொஞ்சமேனும் இயற்பியல் ஞானம் வேண்டும்.. இருந்தும் இருந்தும் முக்கி முக்கி படித்துவிட்டேன்... அதில் ஒரு மாயகணினி பற்றி குறிப்பிட்டிருப்பார் புரிந்து கொள்வதற்குள் மண்டை குழம்பிவிடும்

      Delete
    2. ம்ம்ம்.. நான் எதிர்பார்த்த விவாதங்கள் இவையெல்லாம் தான்.. நன்றி துளசிதரன் மற்றும் கீதா அவர்களே.. சீக்கிரம் உங்க பதிவை எதிர்பார்க்கிறேன்..

      Delete
    3. சீனு,, புத்தகத்தின் பெயரே கடவுளா? பேஷ் பேஷ்..

      Delete
    4. ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு படிச்சிப்பாருங்களேன் ......சிரிக்காதிங்க சீரியஸா சொல்றேன்

      Delete
  9. நம்மூர்ல,"செத்தாத் தான் சுடுகாடு தெரியும்"பாங்க,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. :) ஆமாங்க நானும் கேள்விப்பட்டிருக்கேன்..

      Delete
  10. :) ஆ.வி யின் ஆராய்ச்சி தொடரட்டும் ! நல்ல முயற்சி அண்ணே !! கடைசில ஒரு கன்க்லூசன் கொடுப்பிங்கனு நம்புறேன் :)

    ReplyDelete
    Replies
    1. நிறைய விவாதிக்க வேண்டியிருக்கு.. சில விஷயங்கள் எழுத நினைத்து தவிர்த்துட்டேன்.. பார்ப்போம்.. யாரையும் காயப் படுத்தாத வகையில் எழுத முயற்சிக்கிறேன்..

      இப்போதானே ஆரம்பிச்சிருக்கேன்.. தவிர இதுபோன்ற விஷயங்கள் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான எண்ணங்களோடு இருப்பர்.. ஆனா எல்லாருமே எதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைவர் என்பது என் நம்பிக்கை.. அந்த புள்ளி வந்துடுச்சுன்னா முற்றுப்புள்ளி வச்சிடுவேன்.. :)

      Delete
    2. காயப்படுத்தாமல்? #அப்படியெனில் பதிவின் நேர்மை கேள்விக்குள்ளாகிறது ஆவி....சொல்வதை துணிந்து சொல்லுங்க....அப்பத்தான் அதை குறித்த விவாதத்தில் வெளிச்சம் கிடைக்கும்

      Delete
    3. தீவிரவாதியின் கூற்றை நான் வழி மொழிகிறேன்

      Delete
  11. முதல் பகுதியில் இருந்த விறுவிறுப்பு இதில் மிஸ்ஸிங் தல ...
    எதற்காகவோ சலனப்பட்டு எழுதிய உணர்வு ...
    சொல்ல வருவதை தயங்காமல் சொல்லலாம் தடைகள் வரலாம் அத்தடைகளை உடைத்தெறிந்து வருவதே "தல"யின் வீரத்துக்கு அழகு

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...