தலைப்பை ஒரு முறை கூட நல்லா படிங்க. ஆமாங்க இது ஒரு காலத்துல மான்செஸ்டர் ஆப் தமிழ்நாடா இருந்த கோவை நகரத்தில வாழ்ந்த ஒரு துணி வியாபாரிய பற்றின கதை. ( இந்த கதைக்கும் மெர்சண்ட் ஆப் வெனிஸ் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. ஆதலால் இந்த கதைக்கு உரிமை கோரி யாரும் கோர்ட்டுல கேஸ் போடமாட்டங்கன்னு நம்புறேன்)
(மெர்சண்ட் ஆப் துணீஸ்)
செந்திலோட அப்பா வங்கியில் வேலை பார்த்த காரணத்தால் அடிக்கடி மாற்றலாகி வேறு ஊர் செல்வது வாடிக்கை. அப்போது செந்திலும் தன் பள்ளிகளை மற்ற வேண்டி இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்த எல்லா பள்ளிகளிலேயும், எல்லா தேர்வுகளிலேயும் முதல் மாணவனா வந்த செந்தில் ஆறாம் வகுப்புக்கு கோவைல செயின்ட் மைக்கேல்ஸ் ங்கற பள்ளில புதுசா சேர்ந்தான்.
சிறு வயது முதலே செஸ், கேரம் போன்ற உள் அரங்க விளையாட்டுகள் மட்டுமே விளையாடி பழகிய செந்திலுக்கு இந்தப் பள்ளி மிகவும் புதிதாக இருந்தது. புட்பால், கிரிக்கெட். பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளை முதன் முதலாக பார்த்ததும் புளங்காகிதமடைந்தான். ஆனாலும் புதிய சேர்க்கை என்பதால் மற்ற மாணவர்கள் இவனை விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆசிரியரின் கட்டாயத்தால் பின் சேர்த்துக் கொண்டாலும் அவனுக்கு முழுமையான பணிகள் ஏதும் கொடுக்க மறுத்தனர்.
பேஸ்கட் பால் விளையாட உயரம் தேவை என்பதால் அவனுக்கு பந்து பொறுக்கிப் போடும் பணி கொடுக்கப் பட்டது. புட்பால் விளையாடும் போது அசிஸ்டென்ட் கோலி பணி கொடுக்கப்பட்டது. அதாவது கோலி பிடிக்கத் தவறும் பந்துகள் கோட்டைத் தாண்டி விழும் போது பந்துகளை மீண்டும் மைதானத்தினுள் அனுப்ப வேண்டும். கிரிக்கெட்டில் மட்டும் அவனுக்கு விக்கெட்கீப்பர் பணி தரப்பட்டது. (ஸ்டம்புகள் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் என்பது வேறு விஷயம்)
ஒருநாள் வழக்கம்போல் ஒரு புட்பால் மேட்ச் நடந்த போது தன் அசிஸ்டன்ட் கோலி பணியை செய்து கொண்டிருந்தான். அப்போது கோல் போஸ்டில் பட்டுத் தெறித்த பந்து மைதானத்தை விட்டு வேகமாக வெளியே சென்று கொண்டிருந்தது. விடாமல் துரத்திய செந்தில் நெடுந்தொலைவு சென்ற பந்தை பிடித்து மைதானத்தை நோக்கி எட்டி உதைத்தான். பின் தன் பழைய இடத்திற்கு செல்ல எத்தனித்தவன் அருகில் ஏதோ சப்தம் கேட்டு நின்றான். சப்தம் வந்த இடத்தை நோக்கி சென்றான் செந்தில்.
அங்கே "தடக்தடக்" என்ற ஒலியுடன் அவன் முன் எப்போதும் கண்டிராத ஒரு இயந்திரத்தில் ஒருவர் இடக்கையை எதோ ஒரு மணியை அடிப்பது போல் மேலும் கீழும் அசைக்க, வலக்கையை இடமும் வலமுமாக நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் கால்கள் ஒரு கட்டையை விடாது அழுத்திக் கொண்டிருந்தது. அவரது செயல் மிக வேகமாகவும், அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள நினைத்து அவர் அருகில் சென்றான். அவனைக் கண்டவுடன் அவர் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து யாரென்று வினவினார். செந்திலும் தன் பெயரையும் தான் எல்லா விளையாட்டிலும் புறக்கணிக்கப்பட்ட கதைகளையும் அவரிடம் கூறி மேலும் அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டி வந்ததாக கூறினான்.
அதற்கு அவர் அவனை அருகில் அழைத்து வாஞ்சையுடன் தலை கோதிவிட்டு பின் அவனிடம் கூறினார் " இதுதான் வீவிங் மெஷின். இதுல தான் துணி நெய்வாங்க" என்று சொல்லி அவனை அருகில் இருத்தி அவனுக்கு அதை எப்படி நெய்வது என்று சொல்லிக் கொடுத்தார். முதல் அரை மணி நேரம் இரு கைகளையும் கால்களையும் ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்தாலும், பின் அதை லாவகமாக செய்யும் நுட்பத்தை கற்றுக் கொண்டான். பின் எப்போது விளையாட்டுக்கென நேரம் கிடைக்கும் போதும் இங்கே வந்து நேரம் செலவிடத் தொடங்கினான்.
இவ்வாறாக துவங்கிய அவன் பயணம் இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா முழுவதும் விற்பனை செய்யுமளவிற்கு உயர்ந்தது. அவனே தயாரித்து விற்பனை செய்ததுதான் செந்தில் பிராண்ட் கைக்குட்டைகள். இந்த செந்தில் பிராண்ட் கைக்குட்டைகளை ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் விரும்பி உபயோகித்தனர். ஒன்றிரண்டு வயது குழந்தைகளுக்கான சோட்டா கைக்குட்டை, நான்கைந்து வயது பிள்ளைகளுக்கென சோட்டா பீம் கைக்குட்டை, கல்லூரி மாணவிகளுக்கென சூர்யா கைக்குட்டை, மாணவர்களுக்கென அனுஷ்கா கைக்குட்டை, குடும்ப பெண்களுக்கென செல்லம்மா கைக்குட்டை இப்படி ஒவ்வொருவருக்கும் பிடித்தமான கைக்குட்டைகளை வடிவமைத்தது அவன் தொழில் திறமை.
மார்க்கெட்டில் அவன் சிந்தனையில் உதித்த கருப்பு நிற கைக்குட்டை மிக பிரசித்தி பெற்றது. கைக்குட்டை வரலாற்றிலேயே ஒரு புரட்சி படைத்தது எனவும் சொல்லலாம்.. தேசிய கோடியை கைக்குட்டையாக வடிவமைத்ததற்காக இவன் நிறுவனத்திற்கு தமிழக அரசு தடைவிதித்ததும், பின் அதன் அதன் ஓரத்தில் இரண்டு இலைகளை சேர்த்து மீண்டும் உரிமம் பெற்றதும் தனிக் கதை..!