Sunday, October 31, 2010

SAW VII - திரை விமர்சனம் (18+)


முந்தைய SAW படங்களை பார்க்காதவர்களுக்கு: ஜிக்ஸா (Jigsaw ) என்பவன் ஒரு தொடர் கொலையாளி. (தொலைக்காட்சி தொடர் எடுத்து கொலை செய்பவர் அல்ல..) இவன் யாரையும் நேரிடையாக கொலை செய்வதில்லை.. இவன் கொலை செய்யும் விதத்தில் ஒரு புதுமை இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் மற்றவர்களை கொலை செய்தோ, தமது உடல் உறுப்புகளை அறுத்துக்கொண்டோ இவன் விரித்த வலைகளில் இருந்து தப்பிக்க வேண்டும். 

ஒவ்வொரு வலைகளில் இருந்து தப்பிய பின்னும் இவனுடைய கர்ண கொடூரமான  குரலில் ( நம்ம பீ. எஸ். வீரப்பா குரல் போல்) பதிவு செய்யப்பட்ட ஒரு கேசட்டை கேட்க வேண்டும். அதில் அடுத்த வலைக்கான வழி சொல்லப்பட்டிருக்கும். அவன் விரித்த வலைகளில் எல்லாம் தப்பித்து குற்றுயுரும் குலைவுயுருமாய் பிழைத்தவர்கள் வெகு சிலரே. 

             இப்போது SAW VII பற்றி.. சென்ற பாகத்தின் தொடர்ச்சியுடன் ஆரம்பிக்கிறது இந்த படம்.. தன் மனைவி பெட்சியின் சதியிலிருந்து தப்பிய ஹாப்மன் அவளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறான். பெட்சி அவனிடமிருந்து தப்பித்து போலீசிடம் தஞ்சமடைகிறாள். 

             அதே சமயம் பாபி என்பவன் தான் ஜிக்சாவின் வலைகளில் இருந்து தப்பியவன் என்றும், தான் கஷ்டப்பட்டு தப்பித்த கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்கிறான். அத்தோடல்லாமல் ஜிக்சாவினால் பாதிக்கப்பட்ட பலரையும் பேட்டி எடுத்து தன் தொலைக்காட்சி தொடரில் போடுகிறான்.. இது ஜிக்சாவிட்கு கோபத்தை உண்டாக்குகிறது.


                                 
   
               போலீசில் சரணடைந்த பெட்சிக்கு உதவ ஒரு போலிஸ் அதிகாரி முன் வருகிறார். இவர் ஹாப்மனுடன் சில வருடங்களுக்கு முன் ஒன்றாக பணிபுரிந்தவர். ஹாப்மனின் கொடூரத்தை நன்றாக அறிந்த அவர் ஹாப்மனை கைது செய்ய முற்பட அவரும் கொல்லப்படுகிறார்.
                             
                   பாபியின் செயலால் கோபமடைந்த ஜிக்ஸா அவனை கடத்தி அவனுக்கு பல வலை விரிக்கிறான். ஒவ்வொரு வலையிலும் தன் ஒவ்வொரு நண்பர்களை இழக்கிறான். கடைசியில் தன் மனைவியை காப்பாற்ற தன் உடலில் அலகு குத்திகொல்வது போல் கம்பியை குத்திக் கொள்ள வேண்டும்.

  

                     பாபி தன் மனைவியை காப்பாற்றினானா ? பெட்சி ஹாப்மனிடமிருந்து தப்பினாளா-  3டி திரையில் காண்க..  இது முழுக்க முழுக்க ரத்தத்தால் செய்த செல்லுலாய்ட் சித்திரம்...

 40 / 100
            

Wednesday, October 20, 2010

காதலர் தினம்....

                             
                              அன்று காதலர் தினம்.. கல்லூரியின் எல்லா திசையிலும் கையில் ரோஜாப் பூங்கொத்துகளுடன் மாணவர்கள் தங்களுக்கேற்ற ஜோடியை தேடிக் கொண்டிருந்தனர். மஞ்சள் பூக்கள் சொரிந்திடும் அந்த மரத்தின் கீழ் கார்த்திக் காத்திருந்தான். அதுதான் அவன் லாவண்யாவை முதன் முதலில் சந்தித்த இடம். வெகு நாட்களாய் தன் மனதில் பூட்டி வைத்திருந்த அந்த மூன்று வார்த்தைகளை இன்று அவளிடம் சொல்லி விடுவதென முடிவு செய்திருந்தான்.
                             
                             கல்லூரியின் நுழைவாயிலில் அவள் முகம் கண்டதும் அவனுள் ஒரு மின்சாரம் பரவியது. கைகளில் சிறு நடுக்கம். அவள் அருகே வந்த போது படபடப்பு இன்னும் அதிகமாகியது. இருதயத் துடிப்பு இரு மடங்காய் அடிக்க ஆரம்பித்தது. அவள் அவனைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு நகர்ந்தாள். சற்றே தயக்கத்துடன் "லாவண்யா" என்றழைத்தான். அவள் நின்று அவனை நோக்கி திரும்பினாள். "என்ன" என்பதுபோல் கண்களால் கேள்விக்கணை ஒன்றைத் தொடுத்தாள். 


                            "ம்ம்.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" .. என்று ஆரம்பித்தவனுக்கு உயிரெழுத்துகளும், மெய்யெழுத்துகளும் மறந்து போனது போன்ற ஒரு உணர்வு! அவள் இப்போது அவன் கண்களை உற்று நோக்கினாள். அவள் மௌனமே பல கேள்விகளை கேட்க அவன் சற்றே தடுமாறிப் போனான். அவள் ஏற்பாளா மறுப்பாளா என்ற பதற்றத்துடன் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்..


                            "லாவண்யா, அது வந்து.." வழக்கம்போல் ஏதோ ஒன்று அவனை சொல்ல விடாமல் தடுத்தது. அதை புரிந்து கொண்டவளாய் " இத பாரு கார்த்திக்.. நீ என்னைக்குமே எனக்கு ஒரு நல்ல நண்பன். இப்போ நீ என்ன சொல்ல நினைக்கறேங்கறதும் எனக்கு நல்லா புரியுது. ஆனா நட்புக்குள்ள அந்த மூன்று வார்த்தைகள் எப்போதும் சொல்லக் கூடாது." கார்த்திக்  மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கியது போல் உணர்ந்தான். கல்லூரி முதல் நாளன்று மரத்தடியில் வெள்ளை சுடிதாரில் நின்றிருந்த லாவண்யாவின் மேல் தான் பைக்கில் சென்ற போது சேற்றை அடித்ததற்காக அவன் ஈகோவால் சொல்ல முடியாமல் தவித்த அந்த மூன்று வார்த்தைகள் "I am Sorry "


.

Friday, October 15, 2010

சரஸ்வதி (Saraswathi)

சுந்தரத் தமிழ் மொழி பயின்றவள் பார்போற்றும்
சுந்தரத்தின் மகளாய் அவதரித்தாள்!
கலை மகளின் அனுதினத்தில் பிறந்து வந்தாள் - சர்வ
கலைகளிலும் முதலெனவே பெயர் எடுத்தாள்!!
சச்சு மேமை என்று சொன்னால் யாருக்கும் பிடிக்கும்
மற்றவர் சுமை சுமப்பதென்றால் உனக்கு மிக பிடிக்கும்

எப்பவும் உனக்கு தெரிஞ்சது Old Trend - ஆனாலும்
எப்பவும் நீதான் என் Best Friend..
உனக்கு ரொம்ப பிடிச்சது காட்டன் Saree - புதுசா ஏதும்
வாங்கினா அது உக்காந்துக்கும் பீரோ மேல ஏறி..
அன்பை டன் டன்னாய் கொடுத்திடுவாய் வாரி- அதை
யாரும் புரிஞ்சுக்கலேனா ஐ யாம் வெரி Sorry!

பாவப்பட்டு கொடுத்திடுவாய் பணத்தை - ஏமாற்றி
புண்படுத்திடுவார் உன் மனத்தை!
அப்பல்லாம் இருந்ததில்லை Miss Universe
இருந்திருந்தா 70's லே  it was yours!
தங்கம்மா பெத்தெடுத்த தாமிரபரணி -  நீ
குடிச்சு வளந்ததோ சிறுவாணி தண்ணி!

உன் Best Friend பேரு காளியம்மா! - நீ கோபப்பட்டா
Control பண்ண ரொம்ப நேரமாகுதடி யம்மா!
கணபதிக்கு இருக்குது பார் தும்பிக்கை - எனக்கு
எப்பவும் நீ கொடுப்பாய் நம்பிக்கை!
எனக்கு நல்லதையே தந்திடுவார் சாமி - அதனால்தான்
கொடுத்திருக்கார் இப்படி ஒரு Super Mommy!

.

Thursday, October 7, 2010

நினைவே ஒரு பறவை!!


விழித்தெழ விரைந்த போதுதான் - உறங்க
மறந்தது நினைவுக்கு வந்தது..
உனை நினைக்க மறந்த போதுதான் - உனை
மறக்க நினைத்தது நினைவுக்கு வந்தது..

மரங்களிலே மழைத்துளிகள் படர்ந்திருப்பதை கண்டு- அதை
ஓடிச்சென்று அசைத்தது சிறுபிள்ளைதனமாய் இருந்தாலும்
இப்போது நீ என்னருகில் இல்லாத போது - அந்த
இலை ஒவ்வொன்றும் உன் முகமாய் காட்சியளிக்கிறதே!

பேரிரைச்சல் கொண்ட பனகல் பூங்கா - பிடித்ததில்லை
எனக்கு எப்போதும்..உன் நினைவுகளை கருவாய்
சுமந்து கொண்டு இருப்பதால் அகல முடியவில்லை
அங்கிருந்து ஒருபோதும்..

எப்படியும் திரும்பி வருவாய் என - மணிகாட்டியின்
முள்போல் காத்திருக்க.. நீயோ
நம் காதல் தண்டவாளத்தின் இரு கோடுகள் என
விளங்க வைத்து சென்றாயே!!

உன் மேல் நான் கொண்ட  காதல் நோய் என்
உயிரணுக்கள் ஒவ்வொன்றாய் உருக்குகிறது!
மருந்தாக வேண்டாம் நோயாகவாவது வா
உன்னால் நான் இறந்து போகிறேன்!!!


 .

Tuesday, October 5, 2010

பலே லக்ஷ்மன்!!

                  

                        இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா "த்ரில்" வெற்றி பெற்றது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. முக்கிய வீரர்கள் நான்கு பேரை இழந்ததினால் வெற்றி தொலை தூரத்தில் இருந்தது. ஒரே வெளிச்சம் சச்சின் மட்டுமே. ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் அவரும் அவுட்டாகிவிட, இந்தியா பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
                        முதல் நாள் ஆட்டத்தில் முதுகு வலியால் அவதிப்பட்ட லக்ஷ்மன் தன் வலியையும் பொருட்படுத்தாமல் களம் இறங்கி இந்தியாவிற்கு நம்பிக்கை அளித்தார். எட்டு விக்கெட் இழந்து இன்னும் 92 ரன்கள் தேவை என்ற நிலையில் இஷாந்த் ஷர்மா இவருடன் ஜோடி சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவை கதி கலங்கச் செய்த லக்ஷ்மன் பலே லக்ஷ்மன் தான்!!

.

Friday, October 1, 2010

எந்திரன் (The ROBOT)- திரை விமர்சனம்

                                

                                  சன் பிக்சர்சின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு. ( ஆசியாவிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என கூறப்படுகிறது). சூப்பர் ஸ்டார் படம், முதல் நாள் முதல் காட்சி எப்படி இருக்கும் என நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை . சுஜாதாவின் இந்த கதையில் முதலில் கமல் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களுக்காக அது பல நடிகர்களும் தாண்டி ரஜினியிடம் இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரை தவிர வேறு யாரும் நடித்திருந்தால் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! சரி கதைக்கு வருவோம்..
                                    ரொம்ப சிம்பிளான கதை - விஞ்ஞானத்தை நல்ல வழிக்கு பயன்படுத்தினால் அது மக்களுக்கு நன்மை தரும். அதே விஞ்ஞானம் தீயவர்களின் கைகளில் இருந்தால் அது பேரழிவைத் தரும்.


                                        வசீகரன் என்கிற புரொபசர் ( ரஜினி ) ஊன், உறக்கம், ஹேர் கட் (கொஞ்சம் டூ மச்) எல்லாவற்றையும் மறந்து பத்து வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு எந்திரத்தை உருவாக்குகிறார். எந்திரத்தால் மனித உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தன்னுடைய படைப்பிற்கு மனித உணர்வுகளை ஊட்டி அதை எந்திரன் ஆக்குகிறார். உணர்சிகளை புரிந்து கொள்ள ஆரம்பித்த எந்திரன் முதலில் உணர்வது காதலை. அதுவும் புரொபசரின் காதலியிடம் (சனா- ஐஸ்). இதை தவறு என புரோபசரும் சனாவும் எடுத்து சொல்ல மனமுடைகிறான் சிட்டி என்ற எந்திரன்.
                                          இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் மற்றொரு புரொபசர் சிட்டியை தன்வசப் படுத்தி அதற்கு களவுகள் பலவும் கற்றுக் கொடுக்கிறார். சிட்டியால் கொல்லவும் படுகிறார். பின் அந்த எந்திரன் வசீகரனை கொன்றுவிட்டு சனாவை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள புறப்படுகிறது. வசீகரன் எப்படி எந்திரனிடமிருந்து தப்பிக்கிறார், சனாவை மீட்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

                                         ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் போல் மெதுவாக ஆரம்பிக்கிறது படம். பின் சிட்டி ரஜினியின் காமெடியில் தியேட்டர் கலகலக்கிறது. குறிப்பாக சலூனிலும், டிராபிக் போலீசிடமும் ரோபோ செய்யும் குறும்பு ரசிக்க வைக்கிறது. பின் கெட்ட எண்ணங்கள் தனக்குள் புகுத்தப்பட்டதும் கடைசி அரை மணி நேரம் வில்லனாக பிரமாதப் படுத்தியிருக்கும் ரஜினியின் நடிப்புக்கு நிச்சயம் இப்படம் ஒரு மைல்கல். ஐஸ் அழகுப் பதுமையாக வந்து போகிறார். பாடல்களில் கடினமான மூவ்மெண்டுகளை செய்து கைதட்டல் பெறுகிறார். டேனி, சந்தானம், கருணாஸ் எல்லோரும் ஊறுகாய்கள். கிளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் அட்டகாசம்.ரகுமான் ஆஸ்கார் வாங்கிய நாளிலிருந்து அவரிடம் கொஞ்சம் அதிகமாகவே எதிர் பார்க்கிறோமோ?

                                         நல்ல கதை, ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துயிருக்கலாமோ?? பத்து வருடம் உழைத்து உருவாக்கிய எந்திரனை சரியாக பரீட்சித்துப் பார்க்கும்  முன்  கேர்ள் பிரண்டுடன் அனுப்பி வைப்பது. ஒன டேரா பைட் வேகமுள்ள ரோபோவால் ஒரு கொசுவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதது ஏனோ? ( கொசுக்கள் மாநாடு புதுமையான முயற்சி என்றாலும் இந்த படத்தில் ஒட்டாதது போல் ஒரு பீலிங்க்ஸ்) ஒரு கோடியில் எடுக்கப்பட்ட மாவீரனில் ஒரு ரஜினி. இரண்டு கோடியில் எடுக்கப்பட்ட ராஜாதி ராஜாவில் இரண்டு ரஜினி, அப்போ இருநூறு கொடியிலே வந்திருக்கும் எந்திரனில் ? எஸ். யு ஆர் ரைட்.. இருநூறுக்கும் மேற்பட்ட ரஜினிகள். ( ஆனால் இதெல்லாம் பல படங்களில் பார்த்துவிட்டதால் ஒரு சின்ன சலிப்பு..)

                                       நல்ல கடை, நல்ல சட்டை, ஆனா கொஞ்சம் கூட விலை கொடுத்து வாங்கிட்டமாதிரி ஒரு பீலிங். அவ்வளவுதான்.. (என்னது மார்க்கா??? ரஜினி படத்துக்கு மார்க் போட்டு தர்ம அடி வாங்க நான் தயாரில்லயப்பா!!!)

.

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails