Wednesday, September 23, 2015

லெக்கின்ஸ் கலாச்சாரம்!




                       பெண்களின் ஆடைகள் பற்றிய சர்ச்சைகள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. சேலை கட்டுவது மட்டுமே  தமிழ் கலாச்சாரமென்றிருந்த போது புதிதாய் வந்த சல்வாரும் சுடிதாரும் கூட அணிவது கலாச்சார சீர்கேடாய் அறியப்பட்டது. நைட்டியின் வரவு கூட அவ்வாறே தான். இன்று திரும்பிப் பார்த்தோமானால் நைட்டியோ சுடிதாரோ  அணியாத இல்லத்தரசிகளோ, பள்ளி கல்லூரி செல்லும் பெண்களோ  மிகமிகக் குறைவே. மேற்கத்திய கலாச்சாரமோ, வடக்கத்திய  கலாச்சாரமோ  எதுவாயினும் அது இங்கே பரவத்தான் போகிறது.. இன்னும் சில வருடங்களுக்கு பின் திரும்பிப் பார்க்கையில் லெக்கின்ஸும் நம் கலாச்சார உடையாக மாறியிருக்கவும் கூடும். வேறு ஏதாவது ஒரு உடை கூட வந்திருக்க வாய்ப்புண்டு. 

                       அதிருக்கட்டும்! பெண்கள் ஆபாச உடை அணிகிறார்கள் என அவர்களின் அந்தரங்க பகுதிகளை புகைப்படமெடுத்து அதை வியாபாரமாக்கும் பத்திரிக்கைகள் எவ்வளவு தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளவும். ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட்டுகளும் பெர்முடாக்களும் அணிந்து கொண்டு ஆண்கள் உலவலாம் என்றால் அந்த சுதந்திரம் நிச்சயம் பெண்களுக்கும் உண்டு. தன்னுடைய உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தடுத்து அணியும் உரிமை அந்த பெண்ணுக்கு மட்டுமே உள்ளது. அந்தப் பெண்ணை இந்த உடை தான் அணிய வேண்டும், இதெல்லாம் கூடாது என்று கூற சமூகத்திற்கு நிச்சயம் அருகதை கிடையாது. 

                          அதே சமயம் தன் உடல்வாகுக்கு ஏற்ற உடையணிந்து பழகுதல் பெண்களின் கடமையாகும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான உடை தேர்விற்கு உதவுதல் வேண்டும். மேலும் எந்தெந்த இடங்களுக்கு செல்கையில் எந்த மாதிரியான ஆடைகள் அணியலாம் என்பதிலும் நிச்சயம் உதவலாம். தன் காலத்தில் இல்லாத ஆடைகளை தம் பிள்ளைகள் அணிவது கலாச்சார சீர்கேடாய் நினைக்கும் பெற்றோர்கள் நிச்சயம் மாற வேண்டும்.அந்த உடைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டு பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். சமூகப் பொறுப்புணர்வோடு அணியும் எந்த ஆடையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அது லெக்கின்ஸாக இருந்தாலும் சரி!


26 comments:

  1. //இதெல்லாம் கூடாது என்று கூற சமூகத்திற்கு நிச்சயம் அருகதை கிடையாது. //

    இந்த சமூகம் யார் என்பதை சற்று ஆழமாக தெளிவு படுத்தவும் பாஸ் ...
    அப்படியே சமூகம் யாரால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதையும் கூறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சமூகம் என்பது எவனொருவன் எச்செய்கை செயினும் அதில் குறை மட்டும் கூறக் காத்திருக்கும் சிலர். தவறி விழும் ஒருவனை காப்பாற்ற நினைக்காமல் புகைப்படம் எடுத்து முகநூலில் பதியும் சிலர். தானுண்டு தன் வேலையுண்டு என இல்லாமல் அடுத்தவர் அந்தரங்கங்களில் தலையிடும் சிலர்.. இந்த மூடர்கள் சொல்லும் வாக்கிற்கெல்லாம் தலையசைக்கும் சிலர்.

      Delete
    2. பொதுவாக கால,தேச,கலாச்சாரத்திற்கு ஏற்ற உடையே சிறந்தது, உடலை அப்படியே expose செய்யும் உடைகள் நம் சமூகத்தில் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படும். லெக்கிங்க்ஸ் உடைகள் tight ஆனவை , வெப்பமான பிரதேசத்தில் ஸ்வெட்டர் அணிவது , கோட் சூட் போடுவது எத்தனை அபத்தமோ லெகிங்க்ஸ் போடுவதும் அபத்தம் தான் , தலையணைக்கு உறை மாட்டுவது மாதிரி உடலுக்குத் திணித்து தான் இதை அணிய வேண்டும். கோழிக்கு தோலை உறிப்பது மாதிரி உரித்து எரியும் வகையில் தான் இதை கழற்ற வேண்டும் to be frank இந்த உடை கட்டாயம் comfortable கிடையாது, அப்புறம்.., லெகிங்க்ஸ் அணிவது எங்கள் உரிமை என்பவர்கள் அதை வெறிக்க வெறிக்க பார்ப்பவர்களை குறை சொல்லக்கூடாது. கலாச்சரத்தில் வெஸ்டர்னுக்கு மாறுபவர்கள் முழுதாக மாறட்டும் ... உடையோடு மட்டுமின்றி மனதளவிலும் ! திறந்த பண்டங்களை ஈ மொய்க்கத்தான் செய்யும். ஈ மொய்க்கக் கூடாதென்றால் மூடி வைக்க வேண்டும். இல்லை ஈ மொய்ப்பதை சகஜம் என ஏற்றுக்கொள்ள வேண்டும். ஈ மருந்து அடிப்பதாலோ, ஈயை அடிப்பதாலோ ஈயை கொள்ள முடியுமே தவிர மொய்ப்பதை தடுக்க முடியாது...

      Delete
  2. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான உடை தேர்விற்கு உதவுதல் வேண்டும்//

    எவ்வாறு உதவவேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. தன் அனுபவத்தில் கற்றுக் கொண்டது , தான் இதேபோல் கலாச்சார மாற்றம் ஏற்பட்ட போது அதை ஏற்றுக்கொண்ட விதத்தை பகிர்ந்தாலே போதும்.

      Delete
  3. //அந்த உடைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டு //

    எதுவுமே அறியாத "எளிய" பாமரத் தாய் யாரிடம் சென்று அறிவை வளர்ப்பாள்?

    ReplyDelete
    Replies
    1. எல்லாருமே எல்லாமும் தெரிந்து கொண்டு வருவதில்லை. இன்று லெக்கின்ஸ் அணியும் பெண்களின் தாய்மார்கள் நிச்சயம் நீங்கள் சொல்லும் 'எளிய' பாமர தாயாக இருக்க வாய்ப்பில்லை.

      ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கும் பள்ளியில் தன் பிள்ளையை சேர்த்த பாமரத் தாய் எங்கிருந்து கற்றுக்கொண்டு தன் பிள்ளையின் கல்விக்கு உதவுவாளோ , அங்கிருந்து தான்!

      Delete
  4. //சமூகப் பொறுப்புணர்வோடு அணியும் எந்த ஆடையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அது லெக்கின்ஸாக இருந்தாலும் சரி!//

    இது என்ன பாஸ் ஹைக்கூ மாதிரி முதல் இரு பாரக்காளுக்கும் சம்மந்தமே இல்லாத முடிவு .. ஓரிடத்தில் நில்லுங்கள் ஒன்று வேணும் இல்லை வேண்டாம்! அப்படி தெளிவா சொல்லுங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. // இரு பாரக்காளுக்கும் சம்மந்தமே இல்லாத முடிவு// முதலாவதாக அது முடிவில்லை. அது இந்த சர்ச்சையில் என் நிலைப்பாடு!

      Delete
    2. முதலிரண்டு பத்திகளில் உடை விஷயத்தில் பெண்களின் உரிமைகள் பற்றியும், கடைசி பத்தியில் அவர்கள் கடமைகளையும் சுட்டிக் காட்டியுள்ளேன். மேலோட்டமான வாசிப்பு நிச்சயம் அப்படி ஒரு எண்ணத்தைத் தான் கொடுக்கும். மீண்டும் வாசியுங்கள். நான் தெளிவாகத் தான் சொல்லியிருக்கிறேன்.

      உடை அணிவது பெண்களின் உரிமை, அதை பொறுப்போடு அணிவது அவர்கள் கடமை என்பது தான் அதன் சாராம்சம்!

      Delete
  5. வணக்கம்
    அண்ணா.

    உடை என்ற போர்வையில் மிகவும் கேவலமான உடைகளை அணிந்து செல்லும் பெண்கள் எத்தனை... காலந்தான் பதில் சொல்லும்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன், ஒரு சில விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக பெண்கள் இதைத்தான் அணிய வேண்டும் அதை அணியக் கூடாது என்று கட்டளையிடும் அதிகாரத்தை யார் கொடுத்தார். அவர்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாக புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் எடுத்துப் போடலாமா. ஒரு ஜனரஞ்சக பத்திரிக்கையே இப்படி செய்வது சரிதானா?

      Delete
  6. ஆடை என்பது அழகியலைத் தாண்டி இன்னொரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா ? ஒவ்வொரு முறையும் புதிய ஆடைகள் வருகையில் பெரிய சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பும் பின் அடங்கிவிடும். பின்பு அதையே மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டிருக்கிறோம் அது உண்மைதான்! மேட்டர் அதுவல்ல! மேல நீங்கள் சொன்ன நாகரீக உடைகள் அனைத்துமே உடை மாற்றமே தவிர, உடையினால் உடலை உருவகப் படுத்த கூடிய மாற்றமில்லை! நிச்சயம் பழமை பேசவில்லை, என்னோட வாதம் என்னவெனில் நாம் அணியும் உடையினால் பிறருக்கு சபலத்தை தூண்டி அதனால் தமக்கு ஆபத்து நேரிடலாம் என்று தெரிந்து அதை அணிந்து செல்வதை புத்திசாலித்தனம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா ? பிறரின் கவனத்தை ஈர்க்க எத்தனயோ வழிகள் இருக்கையில் தொடையின் நீள அகலத்தை காட்டித் தான ஈர்க்க வேண்டுமா ? என்பது தான் என்னோட கேள்வி. எல்லா விசயத்தையும் ஆணோடு ஒப்பிடுவதில் பிரச்சினை துவங்குகிறது, நீங்களும் அதே பாயிண்ட்டை தான் பிடிக்கிறீர்கள், ஒருத்தன் முட்டி தெரியவோ? நெஞ்சு தெரியவோ? சட்டை போட்டுக் கொண்டு சென்றால் அவனுக்கு உடல் ரீதியாக எவ்வித பிரச்சினையும் வராது, அதிக பட்சமாக அவனை வசைப் பாடுவதோடு நிறுத்திக் கொள்வர், இதே பெண்ணுக்கு அவ்வாறு கிடையாது அவள் ஏகப் பட்ட இன்னல்களை சந்திக்க நேரிடலாம். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம்! காத்து வாங்குவது சொகம் தான் அதற்கு நிர்வாணமாகவே போகலாமே எதற்கு அரைகுறை ஆடை ?

    ReplyDelete
    Replies
    1. //தமக்கு ஆபத்து நேரிடலாம்//
      இதைப்பற்றி நாம் முன்பே பேசியிருக்கிறோம். ஆனாலும் இங்கே மீண்டும் பதிய விரும்புகிறேன். ( டிஸ்கோதே, பப் களுக்கு போகும் பெண்களை விட்டு விடுங்கள். சராசரிப் பெண்களை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம்.) பெண்களின் ஆடை ஆபாசம் என்ற வாதம் செய்வதானால் சேலையை கூட ஆபாசமாக தோன்றக் கூடும் சில வக்கிர கண்களுக்கு. தன்னைத் தானே பண்படுத்திக் கொள்ளாத வரை அதுபோன்ற ஒரு சில காமக் கொடூரர்களை நிச்சயம் திருத்த முடியாது.

      Delete
    2. //நிர்வாணமாகவே போகலாமே எதற்கு அரைகுறை ஆடை//

      உண்மையை சொல்வதென்றால் ஆடை என்ற ஒன்று வந்ததினால் தான் இத்தனை பிரச்சனைகளும். நிர்வாண நிலையில் எல்லோரும் சமமாகவும், யாரும் யாரையும் குறை சொல்லியிருந்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

      Delete
    3. முதல் பாராவுக்கும் மூன்றாவது பாராவுக்கும் இடையே பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து காட்டும் பத்திரிகைகளை சாடியுள்ளேனே. அதெல்லாம் உங்க கண்ணுல படாதே! இல்லை அவர்கள் செய்தது கூட நியாயம் தான் என வாதிக்கப் போகிறீர்களா?

      Delete
    4. அந்த பத்திரிகை அவ்வாறு படங்களை எடுத்து பொதுவில் வெளியிட்டிருப்பது தவறென்றால் , பொதுவில் அவ்வாறு நடமாடுவது தவறில்லையா !! :/

      Delete
  7. இனிய ஆவி...

    போட்டிக்கு கட்டுரைகள் எப்போ எழுதப் போறீங்க...?

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  8. ஆவி என்ன திடீர்னு இப்படி லெக்கிங்க்ஸ் கலாச்சாரம். மதுரைத் தமிழனும் கூட எழுதியிருந்தார். ஓ ஏதாவது பிரச்சனையா..ஹஹஹ் நான் இன்னும் பார்க்கலை போல நியூஸ்...

    சரி..எனது கருத்து....ஒரு பெண் அணிவது எந்த உடையாக இருந்தாலும் சரி அது பிறரது மரியாதையைப் பெற வேண்டியதாக இருக்க வேண்டும். ஒரு பெண் லெக்கிங்க்ஸ் அணிந்தாலும் தனது உடல் மொழியால், அறிவால், பேச்சால் மரியாதை பெற முடியும். புடவை என்பது நமது கலாச்சாரம் என்றாலும் அதை அணிவதிலும் ஒரு எல்லை இருக்கிறது. அது மரியாதை பெற வேண்டிய அளவில் அணியப்பட வேண்டும். கலாச்சாரமாகிய புடவையையும் அசிங்கமாக அணிகின்றார்கள்தான். உடல் மொழி உட்பட. பேன்ட் ஷர்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள் கூட உடல் மொழி மரியாதையை ஈர்க்கும் படி அணிவதுண்டு. ஆனால் எந்த நவ நாகரீக உடையாக இருந்தாலும் பெண்கள் அதை எல்லைக்குட்பட்டு (எல்லை என்பது பெண்களின் அந்தரங்கப் பகுதிகள் வெளிப்படாமல்) அணிந்து உடல் மொழியால் மரியாதையை ஈர்க்கும் படி அமைந்தால் ஓகே...நீங்கள் சொல்லி இருப்பது போல் தங்கள் உடல் வாகிற்கு ஏற்ப .நவநாகரீக உடையுடன் உடல்மொழியும் அவசியம் என்பது குறிப்பாகப் பொது இடங்களில் மிக மிக அவசியம். பெண்கள் ஒரு சில உடைகள் அணியும் போது பெண்ணாகிய எனக்கே பல சமயங்களில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நான் கண்டு கொள்வதில்லை என்பது வேறு. எல்லாம் நம் பார்வையில் தான் உள்ளது.

    கீதா

    கீதா

    ReplyDelete
  9. ஹேய் அட அரசனும் நீங்களும் செம விவாதம்...ரசித்தேன் மிகவும். அரசனின் கருத்துகளும் செம...

    உங்கள் பத்திரிகைச் சாடலை வரவேற்கின்றேன். எனக்கும் அந்தக் கருத்து உ ண்டு. ஆனால் அங்கு நாம் ஒன்றையும் யோசிக்க வேண்டும் ஆவி. பெண்களின் சம்மதம் இல்லாமல் அப்படி எடுக்க முடியாதுதானே. அப்படிப் பார்த்தால் நம் படங்களில் கூட வேண்டாத சீன்களில்??? அவர்களின் சம்மதம் இல்லாமல் எப்படி எடுக்க முடியும். ஒன்று பணம் வருவதால் இல்லை பெண்களுக்கே அதில் சம்மதம் இருப்பதால்...இல்லையா....ஒரு சில விளம்பரங்கள் உட்பட...

    கீதா

    ReplyDelete
  10. பெண்கள் இதைத்தான் அணிய வேண்டும் என்று யாரும் அதிகாரம் செய்யக் கூடாது. அவர்களுக்கே அந்தப் பொறுப்புணர்வு இருந்தால் போதும்....அது இருக்கவும் வேண்டும். அதைப் பெற்றோர் சொல்லிக் கொடுத்தால் போதும்....

    //சமூகப் பொறுப்புணர்வோடு அணியும் எந்த ஆடையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அது லெக்கின்ஸாக இருந்தாலும் சரி!// சூப்பர் !!

    ReplyDelete
  11. மிக நன்றி. உங்கள் பார்வையும் கருத்தும் அழகு.

    ReplyDelete
  12. பெண்கள் இதைத்தான் அணிய வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த கூடாது! முடியவும் முடியாது! லெக்கின்ஸ் உடையில் ஆபாசம் இருந்தாலும் அழகாய் இருந்தாலும் அது அவர்கள் பாடு! அதை படம் பிடித்துதான் ஓர் பத்திரிக்கை அதன் அபாயத்தை விளக்க வேண்டும் என்பது அவசியம் இல்லாத ஒன்று! குமுதத்தின் செயலில் நியாயம் இல்லை! அரசனுடன் விவாதம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  13. நல்ல விவாதம்.....

    அவருக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்ததோடு, அதை வெளியிட்டு தனது Circulation-ஐ அதிகரித்துக் கொள்ளும் வியாபாரம் - வெட்கக் கேடு. இதை விட பத்திரிகையை மூடிவிட்டுப் போகலாம்...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...