Showing posts with label ஆவி's கிச்சன். Show all posts
Showing posts with label ஆவி's கிச்சன். Show all posts

Wednesday, November 15, 2017

கயல்விழியாள் சமைக்கிறாள்! -3

400 வது பதிவு!

‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்கொண்டிருந்தது.



‘நான் எங்கே கிண்டல் பண்ணினேன் செல்லம். உப்புமா கிடைக்கிறது பாக்கியம்ன்னு தானே சொன்னேன்’ என்றேன் அப்பாவியாக.


‘சரி, அத விடுங்க. தயிர்சாதத்தை ஏன் கிண்டல் பண்ணினீங்க?’ இம்முறை கடலைப்பருப்பும் சேர்ந்து வெடித்தது.


‘அச்சோ, ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு, நீ எனக்கு

தயிர்சாதம் செய்து கொடுத்தேன்னு உன்னை பாராட்டத்தானே செஞ்சேன். டோன்ட் ஆங்ரி மீ’’ என்ற என் ஆங்கிலத்தைக் கேட்டு அவள் விழித்து நிற்க,

‘என் மேல கோபப்படாதேன்னு சொன்னேன் கண்ணு’ என்றேன். அதுவரை இருந்த இறுக்கம் போய் உதட்டைக் கடந்து பொங்கி வந்த சிரிப்பிற்கு அணை போடமுடியாமல் சிரித்துவிட்டாள்.


‘சரி, இன்னைக்காவது கிண்டல் பண்ணாம சாப்பிட்டு வாங்க. எப்படி இருக்குன்னு போன் பண்ணி சொல்லுங்க’ என்றாள்.


‘சரிம்மா’, சரிம்மா’ என்றேன் ‘மெர்சல்’ வெற்றிமாறன் குரலில்.


மதியம் இரண்டு மணி.


டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கேண்டீன் சென்று அமர்ந்தேன். சாதத்துடன் சற்று உருளைக்கிழங்கு பொரியல்.

(அப்பாடா! - பெருமூச்சு)

மற்றொரு டப்பாவில் குழம்பு வடிவத்தில் ஏதோ இருந்தது. அதில் ஆங்காங்கே தக்காளியும் வெங்காயமும் நிறைந்திருந்தது.

டப்பாவைத் திறந்ததும் கடுகு கூட்டம் கூட்டமாக என்னை வரவேற்றது.

அதை கொஞ்சமாக டிபன் பாக்ஸில் ஊற்றி உண்ணத் துவங்கினேன்.

அருகே இருந்த நண்பர் ஒருவர், ‘சார் அந்த தக்காளித் தொக்கை குடுங்க’ என்றார். கொடுத்தேன். அவர் ஊற்றிவிட்டு, 'ரசமா?' என்றார். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றேன்.


அந்த நேரம் பார்த்து போன் அடிக்கத் துவங்கியது.


அவளேதான்! இப்போது இருதயம் இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக அடிக்கத் துவங்கியது. போனை எடுத்ததும் இன்று சமைத்தது என்ன? என்ற கடினமான கேள்வியை என் முன் வைத்துவிடுவாளோ என்ற பயம்தான்.

மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அதை எடுத்தேன்.


‘ஏங்க, புளிக்குழம்பு நல்லா இருந்ததா?’ என்றாள்.


ஓ, இதுதான் புளிக்குழம்பா? இத்தனை நாள், ஊர்ல எல்லாரும் வேற எதையோ கொடுத்து, புளிக்குழம்புன்னு நம்ப வச்சுட்டாங்களே. ப்ளடி ராஸ்கல்ஸ் -இது என் மைண்ட் வாய்ஸ்.

‘வாவ்..சூப்பரா இருந்தது மா. கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப்புறம் புளிப்பு சுத்தமா இல்ல. மத்தபடி அருமையா இருந்தது மா’ என்றேன்.


‘நல்லவேளை, உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு பயந்துட்டே இருந்தேன்.’என்றாள்.

மீ - ???????????
.
#அவளும்_நானும் #புளிக்குழம்பு

Thursday, December 26, 2013

ஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி!



                 
                               நீண்ட நாட்களாய் பூட்டிக் கிடந்த ஆவி's கிச்சனின் கதவை தட்டித் திறந்து விட்ட 'அந்த' பிரபல பதிவருக்கு நன்றிகள் பல கூறிக் கொண்டு ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல விழைகிறேன். சுடு தண்ணி வைப்பது எப்படி என்பதை சிறுவயதில் Physics கிளாஸில் லேப் எக்ஸ்பெரிமென்ட் செய்யும் போது மல்லிகா டீச்சரின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்த பசங்க எல்லாம் பதிவாய் போடுவதை பார்த்த போது பாரதிக்குப் பின் நெஞ்சு பொறுக்காமல் போனது எனக்குதான்! அந்தப் பதிவ படிச்சுட்டு யாரும் "பாதரச மானி" ய உள்ள விட்டு பார்த்து "பாத விஷ பானி" ய உருவாக்கிடக் கூடாதே ன்னு ஒரு நல்ல எண்ணத்துல தான் இந்த பதிவ சுடச்சுட எழுதறேன்..!

                                 
 சுடு தண்ணி 
முன்குறிப்பு: 
                      
                           பாய் கடையில ஈசியா பரோட்டா போடறாங்க ங்கிறதுக்காக பரோட்டா போடறது எப்படி ஈசி கிடையாதோ, அது போல தான் சுடு தண்ணியும். நாம கேட்டவுடனே அம்மாவோ, மனைவியோ இல்ல பல வருஷம் கிச்சன் கில்லாடியா இருந்த அப்பாவோ சில நிமிஷத்துல போட்டுக் கொடுத்தாங்க ங்கறதுக்காக அதை ஈஸியான வேலையா நினைச்சிட கூடாது. சைக்கிள் ஓட்டும் போது தள்ளிப் பழகறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமையலில் சுடுதண்ணி வைக்கப் பழகுவது. அதை "முறையா" எப்படி வைக்கிறது ன்னு இங்கே பார்ப்போம்..



தேவையான பொருட்கள்:
                              

சென்ற ஆவிஸ் கிச்சன் பதிவை படித்த என் வாசகர்களுக்கு இந்நேரம் அடுப்பு, லைட்டர் இத்யாதிகளெல்லாம் தெரிந்திருக்கும். அப்படி தெரியாதவர்கள் இங்கே கிளிக்கி தெரிந்து கொள்ளவும்.

ஒரு காப்பர் பாட்டம் பொருத்தப்பட்ட தட்டையான அடி உள்ள பாத்திரம். (எரிபொருள் மிச்சப் படுத்த)

தண்ணீர் உப்புத்தண்ணியோ நல்ல தண்ணியோ எதுவானாலும் பரவாயில்லை. ஏன்னா கொதிக்க வைப்பதே அதை சுத்தப்படுத்தி நம் உட்கொள்ளும் பொருளாய் மாற்றுவதற்கு தானே!

தண்ணீரின் அளவு பாத்திரத்தின் விளிம்பு வரை இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இங்குதான் பெரும்பாலான "அப்ரசண்டிகள்" தவறு செய்கின்றனர். தண்ணீர் கொதிக்கும் போது விளிம்பு வரை இருந்தால் களிம்பு போடும் நிலை நமக்கு வரும்.. ஆகையால் சர்வ ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்.

கருங்காலி வேர் (கேரள முறை)            

மிக்ஸர் (அ) பிடித்தமான நொறுக்குத் தீனி 


செய்முறை விளக்கம்: 
  1. பற்ற வைத்த அடுப்பின் மேல் பாத்திரத்தை வழக்கம் போல் அடி துடைத்து வைக்கவும்.
  2. கருங்காலி வேரைப் போடவும் (இது நம் ரத்தத்தை சுத்தம் செய்ய உதவும்)
  3. தண்ணீர் கொதிக்கும் வரை நேரத்தை வீண் செய்யாமல் அடுத்து செய்ய இருக்கும் சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்குவது, வெங்காயம் உரிப்பது போன்ற பயனுள்ள வேலைகளை செய்யலாம்.
  4. வேறு வேலை எதுவும் இல்லையென்றால் கொஞ்சம் மிக்ஸர் அல்லது உங்களுக்கு பிடித்தமான நொறுக்குத் தீனியை கொறிக்கவும்.
  5. அவ்வாறு செய்கையில் ஏதாவது படத்தின் கதையையோ, சீரியலையோ மனதில் அசை போடவும். ஏனெனில் "Idle Brain is the Devil's Workshop" என்றொரு பழமொழி உண்டு. சும்மா இருந்து நாமாகவே சாத்தானை கூப்பிடுவானேன்?
  6. சிறு வயதில் பபிள்கம் சாப்பிட்டு அதில் மொட்டு விட்டு களித்திருப்போம். அது போன்ற ஒரு மொட்டு மெல்ல பாத்திரத்தின் அடியிலிருந்து மேலே வரும். 
  7. ஒற்றை குமிழாய் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாய் பெருக்கமடைந்து கூட்டம் நிறைந்த கல்கத்தா வீதியில் அலையும் மக்கள் கூட்டம் போல் பல குமிழ்கள் பொங்கி வரும் போர்வீரர்கள் போல் பாத்திரத்தின் அடிப் பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு தங்களால் எப்படியும் வந்து சேர முடியும் என்று திடங்கொண்டு போராடி  மேலே வரும்.
  8. தண்ணி சூடானதை சோதனை கூடத்தில் வைத்து பரிசோதிப்பது போல பாதரச மானியெல்லாம் தேவையில்லை. தண்ணீரின் மேல்பரப்பில் குவிந்திருக்கும் எண்ணிலடங்கா குமிழ்களும், வெற்றிகரமாய் விண்ணைத் தொட புறப்படும் "ஆவியும்" தான் அளவுகோல். 
  9. அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும். (பச்சை தண்ணீர் கலந்து குடிப்பது தண்ணீர் சுட வைத்த நோக்கத்தையே வீணடித்து விடும்)
  10. சிறிது நேரம் கழித்து சுவையான சுடு நீரை குடித்து மகிழலாம். 

(மேற்சொன்ன வழிமுறைகள் குடிப்பதற்கான சுடு தண்ணி வைக்க மட்டும் தான். குளிக்க ஏதாவது ஒரு நல்ல ஹீட்டரை வாங்கி மாட்டிக்கிங்க, எரிவாயுவ வீணாக்காதீங்க. )
( பி.கு) : போதும் இத்தோட நிறுத்திக்குவோம். வேற யாரும் "நாங்களும் வெப்போம்லே சுடுதண்ணி" ன்னு ஒரு பதிவு போடாதீங்க.. நாடு தாங்காது.

                                                   **************

(இது என்னுடைய இருநூற்று ஐம்பதாவது பதிவு. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசக கண்மணிகளுக்கு என் கோடானு கோடி நன்றிகள்)


Wednesday, October 9, 2013

ஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)



                   
                                ஆவி's  கிச்சனுக்கு ஒரு நல்ல படம் தயார் செய்து தரச் சொல்லி கேட்க நம்ம வாத்தியார் கிச்சனை விட்டு நகர முடியாதபடி திகட்ட திகட்ட ஒரு படத்தை தயார் செய்து கொடுத்து திக்கு முக்காட செய்துவிட்டார். டேங்க்ஸ் வாத்தியாரே!!
                                   
 சிக்கன் குலோப் ஜாமூன் 



தேவையான பொருட்கள்:
                              
குலோப் ஜாமூன் மிக்ஸ் -  1 பாக்கெட் ( MTR சிறப்பாக இருக்கும், ஆனால் அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது.)

பாத்திரங்கள்  - 2 ( மாவு பிசைவதற்கும், ஜீரா தயாரிப்பதற்கும்)

வாணலி  - 1

பால்                 - அரை கப்  (காய்ச்ச வேண்டாம்)

வெண்ணை  - 1/4  டீ-ஸ்பூன் மட்டும் 

சிக்கன்            - 100 கிராம்  ( பொடிப் பொடி துண்டுகளாய் வெட்டி வைத்துக் கொள்ளவும்.)

சர்க்கரை - 2 கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப

பட்டர் ஷீட் - 1

எலுமிச்சை - 1

ஏலக்காய் - 2



செய்முறை விளக்கம்: 
  1. குலோப் ஜாமூன் மிக்ஸ் பாக்கெட்டை பிரித்து பாத்திரத்தில் கொட்டி அரை கப் பாலை ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். 
  2. சிக்கன் துண்டுகளை குக்கரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும் (விசில் வேண்டாம் )
  3. அதற்குள் சர்க்கரைப் பாகு தயாரித்து விட்டு வந்தால் நேரம் சரியாக இருக்கும். (கீழே பார்க்கவும் )
  4.  ஊற வைத்த மாவை பந்து போல் (பட்டர் ஷீட் மேல் ) உருட்டவும். பட்டர் ஷீட் தேவைக்கு அதிகமான ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.
  5. பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். ( ரொம்பவும் சிறியதாக இருந்தால் இனிப்பு அதிகம் உறிஞ்சி விடும், ரொம்பவும் பெரியதாக செய்தால் உள்ளே வேகாமலும் வெளியே கருகிவிடும் அபாயமும் உள்ளதால் மீடியம் சைசில் பிடிக்கவும்)
  6. வேக வைத்த சிக்கன் துண்டுகளை உள்ளே வைத்து மீண்டும் உருண்டை பிடிக்கவும்.
  7. வாணலி (அ ) வடசட்டியில் எண்ணெய் ஊற்றவும். சற்று சூடான பின் ஒரு துளி மாவைக் கிள்ளிப் போட்டுப் பார்த்து சூட்டைக் கணிக்கவும்.
  8. சூடானதை உறுதி செய்த பின் உருண்டைகளை நான்கு அல்லது ஐந்து செட்களாக போடலாம். 
  9. உருண்டைகள் பொன்னிறமாக மாறும் போது எடுத்து எண்ணையை வடிகட்டி பின் மிதமான சூட்டில் கொதிக்கும் ஜீராவில் போடவும்.
  10. எல்லா உருண்டைகளும் தயாரான பின் அடுப்பை அணைத்து உருண்டைகளை சிறிது சூடு ஆற விடவும். 
  11. ஒரு மணி நேரம் சர்க்கரைப் பாகில் ஊறிய பின் வேறொரு கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்..
  12. சுவையான சிக்கன் குலாப் ஜாமூனை பரிமாறவும்..


சர்க்கரை பாகு (ஜீரா) தயாரிக்க:

  1. ஒரு அகண்ட பாத்திரத்தில் 2 கப் நீருக்கு  2 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். 
  2. மணம் சேர்க்க பொடி செய்யப்பட்ட ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
  3. சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள பாகு கெட்டியாகாமல் இருக்கும்.
  4. மிதமான சூட்டில் இதை கொதிக்க வைத்தபடியே குலாப் ஜாமூன் ரெடி பண்ணப் போகலாம். (கம்பி பதம் தேவையில்லை )
( பி.கு) : சிக்கன் சேர்த்திருப்பதால் காலையில் செய்த பதார்த்தத்தை மாலைக்குள் முடித்து விடுவது நல்லது.

                                                   **************


Monday, September 30, 2013

ஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி!! (சைவம்)


                         ஹலோ, கிச்சனுக்குள்ள நீங்க வரப்படாது.. ஹால்ல வெயிட் பண்ணுங்க.  நான் செஞ்சு கொண்டு வர்றத சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. புரிஞ்சுதா? ( மைன்ட் வாய்ஸ்: அகில உலக சூப்பர் செப் ஆவியின் கிச்சனுக்குள்ள நீங்க வந்தா தீய்ஞ்சு போன ஐட்டத்தை எல்லாம் நான் கரெக்ட் பண்ற விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சுடும்.. சரியா வரலேன்னு பேக் சைடில ஹோட்டல்ல ஆர்டர் பண்ண விஷயம் மட்டும் தெரிஞ்சா பயபுள்ளைக சும்மாவா இருப்பாங்க)


                      கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி






தேவையான பொருட்கள்:

கேஸ் அடுப்பு அல்லது இண்டக்க்ஷன் ஸ்டவ்.

கேஸ் அடுப்பு எனில் கேஸ் சிலிண்டர் ( ஆதார் நம்பர் வாங்கி கேஸ் கம்பெனிக்காரன் கிட்ட கொடுத்தாச்சா நீங்க?)

லைட்டர் (அ) கரண்ட் (அடுப்பை பற்ற வைக்க, இண்டக்க்ஷன் பயனாளர்கள் ஈ.பி பில் கட்டியாச்சான்னு சரிபார்த்துக்கோங்க )

சிறிய பாத்திரம்- 2- (இரண்டு கிளாஸ் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு.. சின்னதா இருந்தா பால் பொங்கும்போது வழியும். பெருசா இருந்தா பாத்திரம் சூடாக பிடிக்கிற நேரம் அதிகமாகும். மைன்ட் வாய்ஸ் - எரிபொருள் சிக்கனம்..ம்ம்! )

குழம்பித் தூள்* - 1 டீ-ஸ்பூன்  ( காப்பி வைக்கவும் டீ ஸ்பூன் தான் பயன்படுத்த வேண்டுமென்பதை நினைவில் "கொல்க" )

சர்க்கரை -     1 1/2 டீ-ஸ்பூன்  ( வாழ்க்கை இனிப்பா இருக்கணும்னா ரெண்டு ஸ்பூன் போட்டுக்கோங்க.)

பால்           -        அரை டம்ளர்  ( காப்பி லைட்டா வேணும்னா முக்கால் கிளாசும், திக்கா வேணும்னா கால் கிளாசும் எடுத்துக்கோங்க)

நல்ல தண்ணி - அரை டம்ளர் ( கின்லே, அக்வா பினா போன்ற மினரல் வாட்டர்களை தவிர்ப்பது நலம்.. மைன்ட் வாய்ஸ் - சமூக சிந்தனையாம்!! )


கிடுக்கி -  பாத்திரத்தை பிடித்து/கொள்ள/ இறக்க உதவும் சாதனம். இதை உங்க ஊர்ல எப்படி சொல்வாங்களோ அப்படி அண்டரஸ்டேண்டு பண்ணிக்கோங்க

வடிகட்டி - 1

வெள்ளி டவரா - 1

* குழம்பித் தூள் - இன்ஸ்டன்ட் குழம்பித் தூள் என்று கேட்டு வாங்கவும். ப்ரு அல்லது நெஸ்கபே போன்ற பெயர்களை உபயோகித்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் விளம்பரம் ஆகிவிடும் அபாயம் உள்ளதால் அவ்வாறு செய்யவில்லை. ( மைன்ட் வாய்ஸ் - அதான் இப்ப சொல்லிட்டியே!)


செய்முறை விளக்கம்: 

1. அடுப்பை பற்ற வைக்கவும்.
2. பாத்திரத்தை நன்கு கழுவி அதன் அடியை துடைத்துவிட்டு  அடுப்பின்மேல் வைக்கவும்
3. நல்ல தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
4. அதே சமயம் பாலை வேறொரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்ததும் அரை டம்ளர் பாலைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5. தண்ணீர் கொதித்தவும் குழம்பித்தூளை போடவும்.
6. ஓரிரு நொடிகள் கழித்து கிடுக்கியின் உதவியுடன் பாத்திரத்தை இறக்கவும்.
7.  பால் இருக்கும் டம்ளரின் மேல் வடிகட்டியை வைத்து அடுப்பிலிருந்து எடுத்த குழம்பி நீரை ஊற்றவும்.
8. வடிகட்டியை எடுத்து விட்டு சர்க்கரையை சேர்க்கவும். (கலக்க வேண்டாம்.. சூடு ஆறி விடும்)
9. வெள்ளி டவராவில் வைத்து இரண்டு ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப அன்பையும் சேர்த்து பரிமாறவும்.


          சூடான "ஆவி" பறக்கும் குழம்பி தயார். ( காப்பி வைக்க ஒரு விளக்கம் தேவையான்னு நீங்க கேக்குறது புரியிது. ஆனா வெறும் சுடுதண்ணி மட்டும் வைக்க தெரிஞ்ச பேச்சிலர் ஆசாமிகளுக்கு இது பயன்படுமே.. ஹிஹிஹி )

பி.கு: இது கும்பகோணம் டிகிரி பில்டர் காப்பிக்கு போட்டி அல்ல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆவி 's கிச்சனில் அடுத்து வருவது - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~      
                   


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...