Sunday, March 20, 2016

நட்பும் கடந்து போகுமா, நண்பா?

காதலும் கடந்து போகுமா?

ஒரு முறை பூத்த  காதல் என்றென்றைக்குமாய் நெஞ்சில் நிற்குமே, என்னுள் பூத்த காதல்கள் எல்லாமே பசுமரத்தாணி போல் 'பச்சக்' என்று இன்றும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே, அப்புறம் இந்த டைட்டிலே கொஞ்சம் உதைக்கிறதே. கடந்து போவதெல்லாம் காதலா? மங்கை கடந்து செல்லும் கணத்தில் தோன்றுமே காதல், அது எப்படி நம்மை விட்டு கடந்து போகும்?
இங்கே கடந்து சென்ற ஒரு பெண்ணைத் தான் 'காதல்' என்று உருவகம் செய்கிறாரா இயக்குனர்?

இப்படி இதைப் பற்றி இன்னும் ஆழமாக யோசித்த போது தான்  நான் இங்கு உன்னைப் பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். ஆம். உனக்கு நினைவிருக்கிறதா  என்று  எனக்கு தெரியவில்லை, ஒருமுறை பால்யத்தில் பாத்திமாவின் பின் நீ சென்ற கதையை எழுதியிருந்தாய். (சரி, சரி அது உனக்கு  நடந்தது அல்ல என்று எப்போதும் போல இப்போதும் வாதிக்கத் துவங்காதே!)  உன்  வாழ்வில் காதலே கடந்து செல்லவில்லை என்று நீ கூறிய போது சத்தியமாக  நான் உன் வார்த்தையை நம்பவில்லை. ஆனால் 'காதல் போயின் காதல்' குறும்பட ஷூட்டிங்கில் நாயகியிடம் பேசுவதற்காய் ஒரு வசனத்தை நான் உனக்கு சொல்லிக் கொடுக்க, அதைப் பொறுமையாய் கேட்டுவிட்டு 'காதலர்கள் இப்படித்தான் பேசிக் கொள்வார்களா, பாஸ்?' என்று என்னைப் பார்த்து அப்பாவியாய் ஒரு லுக் விட்டாயே, அன்று  நிஜமாய் நம்பிவிட்டேன். சரி அதற்கு மேல் பகிர்ந்து தொலைதூரத்திலும்  உன்னை நெளிய  வைக்க நான் விரும்பவில்லை.

அடடே, உனக்கு கடிதம் எழுத  ஆரம்பித்த சுவாரஸ்யத்தில் கடிதத்தின் சம்பிரதாய வார்த்தைகளை எல்லாம் மறந்து விட்டேனே. பிறகு இந்த தமிழ்ச் சமூகம் எப்படி இதை கடிதம் என்று ஏற்றுக் கொள்ளும்?

அன்பு நண்பா! நான் இங்கு நலம். நீ அங்கு நலமா?

என்ன தான் தொலைபேசியில் இடைஞ்சல் இல்லாமல் (இது  எப்போதும்  சிக்னல்  கிடைக்கும் மற்றவர்களுக்கு) பேசி விடலாம்  என்றாலும் கடிதத்தில் மனதை பகிர்வது போல் எந்த ஒரு ஊடகத்திலும் சாத்தியமில்லை என்பது நான் என் வாழ்வில் உணர்ந்த ஒன்று. அது கல்வி கற்க தொலைதூரம் சென்ற போது அன்னை எழுதிய கடிதமாகட்டும், கல்லூரி வாழ்க்கைக்குப் பின் என் கல்லூரி நண்பன் எதிர்பாரா நேரத்தில் அனுப்பிய கடிதமாக இருக்கட்டும், நேரில் சந்திக்க முடியாத நாட்களில் ஒற்றர், ஒற்றிகள் (?!!) மூலமாக காதலி அனுப்பிய கடிதங்கள் ஆகட்டும் அனைத்துமே இன்றும் படித்துப் பார்க்க சுகமானவையே.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். நான் வாழ்ந்து, இன்பம் அனுபவித்த அமெரிக்க தேசத்திற்கு சென்றிருக்கிறாய். மகிழ்ச்சி! அமெரிக்கா ஒரு அழகான காதலி போன்றது. தொலைவில் இருக்கும் வரை அவள் நம்முடன் பேசமாட்டாளா? அவளுடன் சிறிது காலமேனும் வாழ்ந்திட மாட்டோமா என்று எண்ணத் தோன்றும். ஆனால் அவள் காதலை ஏற்றுக் கொண்டு அருகே வந்த பிறகு தான், அவள் நம்மைப் போல அல்ல, சிந்தனை, செயல், பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் நம்மில் இருந்து முற்றிலும் மாறுபட்டவள் என்ற உண்மை தெரிய வரும். அந்த சமயத்தில் அவளை, அவள் விருப்பங்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறவர்கள் அவளோடு வாழ்க்கையில் ஐக்கியமாகி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவளோடு ஒன்ற முடியாதவர்கள் தாயகம் தேடி ஓடி வருவர். தவிர, அவளோடு வாழ விரும்பி ஆனால் வழியின்றி ஏங்கித் தவிக்கும் ஜீவன்களும் உண்டு. பார்க்கலாம், அவள் காதல் உன்னைக் கடந்து போகிறதா? இல்லையா என்று!


என்ன தான் கிரகாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தாலும் எனக்கென்னவோ 'மார்க்'கை தான் பிடித்திருக்கிறது. அவன் ஏதோ புத்தகத்தைக் கண்டுபிடிக்கப் போய் தானே நீ அதன் மூலம் எல்லாரோடும் உரையாடித் தீர்க்கிறாய்? மேடையில்லை, மைக் செட் இல்லை. ஆனாலும்
உன்னை சுற்றி ஒரு பெருங்கூட்டம். ஒரு நண்பனாய் மிகவும் பெருமையாய் இருக்கிறது. அதே சமயம் பொறாமையாகவும் இருக்கிறது. இந்த பொறாமை புகழை நோக்கியதல்ல, நட்பினைப் பங்கிடும் ஆட்கள் கூடுகிறதே என்பதால் வருவது. அது வெறும் ஒரு கணம் தான்,. குறிப்பாய் நீ ராகவனுடன் கைகோர்க்கத் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஓர்நாள் மாபெரும் மேடையில் ஆளுயர மாலையைத் தாங்கி நீ நிற்கும்  போது 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் கூட்டத்தின் கடைசியில் நின்று கார்த்திக் ரோஜாவைப் பார்த்து பெருமிதம் கொள்வாரே, அவ்வாறே நானும் நிற்பேன்.. (கண்களில் ஆனந்தக் கண்ணீர்) ஹஹஹா!

நாம் இருவரும் எப்போது சந்தித்துக் கொண்டாலும் ஒரு 70 சதவிகிதம் சம்பாஷனை நான் பேசியதாகத் தான் இருந்திருக்கும். அந்த முப்பதும் நான் கேட்ட கேள்விகளுக்கு நீ சொன்ன பதில்களாய் தான் இருந்திருக்கும். அது சரி, இப்போது எண்ணிப் பார்க்கிறேன், உன்னையும் கொஞ்சம் பேச விட்டுக் கேட்டிருக்கலாம் என்று. இது எனக்கே எனக்காய் கிடைத்த ம்ம்ம்ம் வரம்.. இல்லையில்லை சாபம், ம்ம் வரமென்றே கருதுகிறேன். இப்போது எண்ணிப் பார்க்கையில் தான் இது உன்னோடு மட்டும் இல்லை என்னோடு நெருங்கிப் பழகிய எல்லா ஜீவன்களோடும் இப்படித்தான் இருந்திருக்கிறேன். இப்போது அவர்கள் சொல் கேட்க முடியாமல் ஏங்கி நிற்கிறேன். (கண்களில் சூடான கண்ணீர்) ஹஹஹா!

சரி போதும், ஹர்பஜனிடம் ஸ்ரீசாந்த் அடி வாங்கி அழுது கொண்டே நின்றபோது கைகொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன். இப்போது நான் அழுகையிலும் ஏதாவது ஒரு 'பிக்காலிப் பயல்' கைகொட்டி சிரித்துக் கொண்டிருப்பான் தானே. அப்புறம் அதைக் கண்டு பொறுக்க முடியாமல் ஷைனிங் ஸ்டார் வெகுண்டு எழுந்து ஆக்க்ஷனில் இறங்கி விட்டால் அமெரிக்கா தாங்காது. இப்போது தான் டெர்ரராக இருந்த அமெரிக்காவை ஒபாமா  சாந்தப் படுத்தி வைத்திருக்கிறார். ஹஹஹா!

அலுவலகத்தில் எதிரே வருபவர்கள் எல்லோரும் வணக்கம் சொல்லி புன்னகைத்துச் செல்வதாய் எழுதியிருந்தாய். அமெரிக்கக் கலாச்சாரத்துக்குள் உன்னை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். இங்கிருந்து கொண்டு இவன் என்ன வரவேற்பது என்று யாரேனும் எண்ணக் கூடும். அதைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அமெரிக்காவைப் பற்றி, அமெரிக்க கலாச்சாரத்தைப் பற்றி நீ இந்தியாவில் இருந்து கேள்விப் பட்டது எல்லாம் எவ்வளவு குறைவானது/ பெரும்பாலும் தவறானது என்பதை நேரடியாக உணரும் தருணம் இது. உன் எழுத்துகளில் எனக்கும் வாழ்வளித்த அந்த தேசத்தைப் பற்றி கேட்க/வாசிக்க ஆவலாய் இருக்கிறேன்.

சரி, துவங்கிய பாதையிலிருந்து எங்கோ சென்று விட்டு, இதை எதற்குச் சொன்னேன் என்று கேட்பதே என் வாடிக்கையாகி விட்டது. காதலும் கடந்து போகும் உனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினாய். வாழ்க்கையில் பனிக்கூழ் ஒருபோதும் சுவைத்திராதவனுக்கு ஐபாகோவின் அருமை எப்படித் தெரியும். இந்த உதாரணமும் வழக்கமாக நான் கூறும் அபத்தமான ஒரு உதாரணம்  தான்..ஆனாலும் உன்னை ஒரு காதல் கடந்து போகையில் இந்தக் 'காதலும் கடந்து போகும்' உனக்குப் பிடிக்கலாம். இல்லை அப்போதும் பிடிக்காமல் கூடப் போகலாம்!  காலம் மட்டுமே அறிந்த ஓர் பதில் இது. நீ சென்ற பிறகு இந்தப் பதினைந்து நாட்களில் மொத்தம் நான்கைந்து திரைப்படம் தான் பார்த்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை, பரபரப்பாக இருக்கும் மேடவாக்கமே இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. டாட்! ஹஹஹா!

புன்னகைகளுடன்,
ஆவி.                                                                                                 மார்ச்சு 20, 2016






19 comments:

  1. ஓர்நாள் மாபெரும் மேடையில் ஆளுயர மாலையைத் தாங்கி நீ நிற்கும் போது 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் கூட்டத்தின் கடைசியில் நின்று கார்த்திக் ரோஜாவைப் பார்த்து பெருமிதம் கொள்வாரே, அவ்வாறே நானும் நிற்பேன்.. (கண்களில் ஆனந்தக் கண்ணீர்) ஹஹஹா! //// அடேய்...இதெல்லாம் டூ மச்ரா.

    ReplyDelete
  2. நட்பினைப் பங்கிடும் ஆட்கள் கூடுவதால் பொறாமை வரலாம். தப்பில்ல... ஆனா ஆவிக்கு முன்னமேயே அவனுக்கு அறிமுகமமான ஆளுங்களப் பாத்தா நீ பொகைஞ்சா வர்றதுக்குப் பேரு பொறாமையில்லய்யா... வயித்தெரிச்சல். ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. அது அப்படி இல்லை சார், எத்தனை நண்பர்கள் இருந்தாலும் இவன் எனக்குத் தான் என்று ஒரு உரிமை கொண்டாடும் மனைவியைப் போல (உங்கள் கணக்குப்படி, மிகவும் தாமதமாக அறிமுகமானவள்) தான் ஒரு நெருங்கிய நண்பனும்!! :) :) :)

      Delete
    2. //முன்னமேயே அவனுக்கு அறிமுகமமான ஆளுங்களப் பாத்தா நீ பொகைஞ்சா// ஹஹஹா, இப்போது தான் உங்கள் வரி எனக்குப் புரிந்தது. நான் எதை மனதில் வைத்து எழுதினேன் என்று உங்களுக்குப் புரியும் போது இது உங்களுக்குப் புரியும் சார்!!

      Delete
  3. சிலேடைகள் புதை(கை)ந்திருக்கின்றன.............புரியா விடினும்..............ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  4. சிறந்த நண்பனின் மனம் திறந்த கடிதம். கடிதத்தில் நல்ல நட்பின் பரிமாணங்களை காண முடிகிறது. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. கடிதம் மூலம் நக்கலும் நட்பின் யாசிப்பும் அருமை ஆவி சார் ஆனாலும் அமெரிக்க வாழ்வைவிட்டு நீங்க ஏன் வந்தீங்க என்று நானும் ஒரு கடிதம் எழுதனும்)))

    ReplyDelete
    Replies
    1. நேசன் அத சொல்லணும்னா, மாணிக்கம் ஏன் பாஷா ஆனான்னு ஒரு பெரிய கதை சொல்லணும்.. ஹிஹிஹி

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...