Thursday, November 5, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (1)

                      இரவின் மங்கலான ஒளியில் மழையின் மிச்சத் துளிகள் பேருந்தின் அகலமான கண்ணாடியில் கோலமிட்டபடி வருவதை ரசித்துக் கொண்டே முதல் சீட்டில் அமர்ந்திருந்த நான் வலது காதுக்கு மட்டும் இயர்போனை கொடுத்து, ஐ-போனில் ஒலித்த  ஏ.ஆர் ரகுமானை ரசித்தபடியே, அதே சமயம் பேருந்தினுள் தன் வசீகரக் குரலினால் எல்லோரையும் தூங்கவைத்துக் கொண்டிருந்த இளையராஜாவை இடது காதிலும் சுவாசித்துக் கொண்டிருந்தேன். பேருந்தில் மற்றுள்ள அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். காலை முதல் மாலை வரை தீம் பார்க்கிலும், அருவிகளிலும் ஆடித் தீர்த்த களைப்பு சிறார் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் முகத்திலும் தெரிந்தது. என்னுடைய வரமோ, சாபமோ எனக்குத் தெரியாது, ஆனால் எப்போதுமே கண்களை மூடியவுடன் நித்ரா தேவி ஆரத் தழுவ ஆரம்பித்து விடுவாள். ஆனால் இன்றோ அதற்கு நேர்மாறாக கண்களில் அயர்ச்சியோ, உறக்கமோ சிறிதும் இல்லை.அதற்கு சற்று முன் குடித்த குளம்பி கூட காரணமாக இருக்கலாம்.

                      கண்களை மூடி இரண்டு தலைமுறை இசையையும் ஒரு சேர இரசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று என் வலது காதின் விளிம்பில் அந்த இயர்போனின் இழையினூடே ஒரு இனிமையான பெண் குரல் கேட்டது. நேற்று தான் ஐ-ட்யுன்ஸில் புதிய பாடல்கள் சிலவற்றை பதிவேற்றி என் கைப்பேசிக்கு மாற்றியிருந்தேன். வழக்கமாக நான் இதுபோல் புதிய பாடல்களை கேட்கையில் அவற்றை ஒழுங்கற்ற முறையில் (Random) ஓட விட்டு அவை என்ன படத்தில் இருக்கும், யார் இசையமைத்ததாய் இருக்கும், இது யாருடைய குரலாய் இருக்கும்  என எனக்கு நானே கேள்வி கேட்டு சரியான பதிலுக்கு சபாஷ் சொல்லிக் கொள்வது வழக்கம். அன்றும் அப்படியே அந்தப் பெண் குரலைக் கேட்டவுடன் எனக்குச் சற்று குழப்பமாக இருந்தது. மற்றொரு காதுக்கும் இயர்போனைக் கொடுத்து இன்னும் உன்னிப்பாகக் கேட்க ஆரம்பித்தேன்.

                          இனிதாய் ஆரம்பித்த அந்த இசை கொஞ்சம் கொஞ்சமாக வயலின் உதவியுடன் வயலன்ட்டாக மாற ஆரம்பித்தது. அந்த இனிமையான பெண்ணின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தன் இனிமையை துறந்து ஹை பிட்சில் ஒலிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஸ்ரேயா கோஷலாக இருக்குமோ என்று எண்ணிய நான் சற்று பின்வாங்கி ஆன்ட்ரியாவாக இருக்குமோ என எண்ணத் துவங்கினேன். அதில் வரும் வரிகளைக் கேட்கும் போது ஏதோ பேய்ப் படங்களில் வரும் பாடல் போல் தோன்றியது. 'மாயா'வாக இருக்குமோ? இல்லையே அதில் ஒரே ஒரு பாடல் அதுவும் சின்மயி பாடியது. ம்ம்.. காஞ்சனா? ம்ஹும் அதில் இசை நம் காதுகளை பதம் பார்த்திருக்குமே. வேறு என்னவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த போது தான் அது நடந்தது.

                            டிரைவர் காலியாக இருந்த சாலையிலும் கோணல் மாணலாக ஒட்டிக் கொண்டிருந்தார். சற்றே கண்ணயர்ந்திருப்பார் என்றே தோன்றியது. நான் அவரைப் பார்ப்பதை அவர் பார்த்திருப்பார் என்று தான் நினைக்கிறேன். உடனே தன அருகே இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து நாலைந்து மிடறுகள் விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். என் பக்கமாய் சற்று குற்ற உணர்ச்சியோடு திரும்பிப் பார்த்து பின் தன் அருகே இருந்த டர்க்கி டவலால் முகத்தை துடைத்துக் கொண்டார். இப்போது அவர் முகம் சற்று தெளிவாய் இருப்பதாய்த் தோன்றியதால் நான் அதற்கு மேலும் ஏதாவது சொல்லி அவரை சங்கடப் படுத்த விரும்பவில்லை. நான் மீண்டும் பாடலுக்கு வந்தேன்.

                             ஸ்ரேயா கோஷல் அப்படி உச்ச ஸ்தாயியில் பாடி நான் கேட்டதில்லை. புதிய முயற்சியாகக் கூட இருக்கலாம். இல்லை வேறு புதிய பாடகியாய் இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தப் பாடகிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று எண்ணியபடி என்ன படமாக இருக்கும் என்று யோசிக்கலானேன். அப்போது அந்த பாடலின் சரணம் முடிந்ததும் அதே குரல் ஆனால் இப்போது எஸ்.ஜானகி அவர்கள் குரல் போல் சிறு பிள்ளையாய் ஒலித்தது. "என்ன என்னை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா" என்று கூறி பெருங்குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தது. சற்றே அதிர்ந்த நான் காதிலிருந்த இயர் போனை எடுத்து விட்டு சாய்ந்திருந்த புஷ்-பேக் சீட்டை சரி செய்து நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் கைப்பேசியை பார்த்தேன், அதன் டிஸ்ப்ளே கருப்பாக இருந்தது. மெதுவாய் அதன் பக்கவாட்டில் இருந்த பொத்தானை அழுத்தியதும் டிஸ்ப்ளே ஒளிர்ந்தது.

                              நான் சற்று முன் கேட்ட பாடல் என்ன என்பதைப் பார்த்தேன். அதில் 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ' என்று இருந்தது. இயர்போனைக் காதுகளுக்கு மீண்டும் கொடுத்த போது எஸ்.பி.பி "உடைவாளில் உடை தொட்டுக்" கொண்டிருந்தார். நான் சற்று முன் கேட்ட பாடலைக் கேட்க பின்னோக்கி செல்லும் பொத்தானை அழுத்த அது வேறொரு ரஹ்மான் பாடலைக் காட்டியது. அப்போது தான் உணர்ந்தேன். நான் ரேண்டம் மோடில் போட்டிருப்பதால் அதே பாடல் வராது என்று.  அந்த Random ஆப்ஷனை எடுத்துவிட்டு அந்தப் பாடலை தேட ஆரம்பித்தேன். ஆனால் சில நொடிகளிலேயே தெரிந்தது அது வீண்வேலை என்று , கிட்டத்தட்ட 16 ஜீ.பி அளவிற்கு பாடல்களை பதிவேற்றியிருக்கிறேன். இதில் அந்த ஒரு பாடலைக் கண்டுபிடிப்பது சிரமமான காரியம்.

                              மீண்டும் புஷ்-பேக்கை சரிசெய்து கொண்ட போது என் மீது ஒரு மெல்லிய தென்றல் வீசிச் சென்றது அந்த சுகந்தமான காற்றை கண்களை மூடி அனுபவித்து விட்டு மீண்டும் விழித்துப் பார்த்த எனக்கு வியர்த்துக் கொட்டியது. அங்கே எல்லா சன்னல்களும் மழைக்காக  அடைக்கப்பட்டிருந்தது. ட்ரைவரின் சன்னலைப் பார்த்தேன். அதுவும் அடைந்திருந்தது. அந்த தென்றலுக்கு விளக்கம் ஏதும் கிடைக்காமல் நான் சாய்ந்து பாடலை ரசிக்கத் துவங்கிய பத்தாவது நொடி "அந்தப்" பாடல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. இம்முறை ஸ்ரேயாவின் குரல் ஒலிக்க ஆரம்பித்தவுடன் நான் கைப்பேசியை உயிர்ப்பித்து படத்தின் பெயரைப் பார்த்தேன். "ப்ரியசகி" என்றிருந்தது. பாடகியின் பெயரைப் பார்த்தேன். அதிர்ந்தேன். அதில் 'சங்கமித்ரா' என்றிருந்தது.

                                 'சங்கமித்ரா' அந்தப் பெயரை அவ்வளவு எளிதாய் என்னால் மறந்து விட முடியாது. என் உயிரோடு உயிர் கலந்தவள். அதுமட்டுமா? என் உடலோடு உடல் கலந்தவளும் அவள் தானே! 'அவளின்றி ஓர் அணுவும்' அசையாது என்று நான் எண்ணியிருந்த நாட்களெல்லாம் என் கண் முன்னே தோன்றிப் போனது. அட, இது பதினேழு வருடங்களுக்கு முன் அவளும் நானும் தனிமையில் இருக்கையில் என்னிடம் பாடிக் காண்பித்த பாடலாயிற்றே. ஒவ்வொரு முறை பாடும் போதும் உச்ச ஸ்தாயியில் அவள் மூச்சை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தாளே. அதே பாடல். இப்போது இசைக் கருவிகள் சேர்த்து, அதுவும் என் கைப்பேசியில் எப்படி?

                                  இப்போது மீண்டும் அவள் சிரிப்பு அடங்கி  "என்ன என்னை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா" என்ற குரல் கேட்டு பின் "கண்டு பிடிச்சுட்ட போலிருக்கே?" என்றாள். அது அவளே தான். அவளின் தேன்மதுரக் குரலை நான் எப்படி மறந்தேன். என் ஜீவனாய் இருந்தாளே, கைப்பேசியில் சினிமா இசை தவிர்த்து அவள் சிரிப்பை ரிங்டோனாய் வைத்திருந்தேனே. "என்ன பிளாஷ்பேக்குக்கு போயிட்டியா?" அவள் குரல் என்னை மீண்டும் தன்னிலைக்கு கொண்டு வந்தது. இயர்போனை கழற்றினேன். நிசப்தமாக இருந்தது. என் கைகளில் தவழ்ந்த அந்த இயர்போனை நோக்கினேன். அதில் இருந்த மண்டை ஓடு என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.  கொஞ்சம் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இயர்போனை பொருத்தினேன்.

                                    இன்னமும் அதே பிரியசகி தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் என் காதுகளில் நிசப்தம் நிலவியது. வேறு பாடல் போட முயன்றேன். ஆனால் மீண்டும் மீண்டும் பிரியசகியே வந்து நின்றது. திடுக்கிட்ட நான் ஐ-போனை அணைத்தேன். முற்றிலும் அணையும் ஓசை காதில் கேட்டது கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது. காதுகளுக்கு சற்று நேரம் விடுதலை கொடுக்க எண்ணி கைகளை காதுகளின் அருகே கொண்டு சென்றேன். அப்போது மீண்டும் அவள் குரல் கேட்டது. 'செல்போன ஆப் பண்ணிட்டா ஆச்சா? நான் இருக்கிறது உன் மனசுல. அதப் புரிஞ்சுக்கடா ஸ்டுப்பிட்." "ஸ்டுப்பிட்" - அவள் என்னை ஆசையாய் அழைக்கும் பெயர். கலவியின் களிப்பு முடிந்து அவள் மார்போடு அணைந்து கிடக்கையில் என் தலைமுடியை கலைத்து விட்டு 'ஸ்டுப்பிட், ஸ்டுப்பிட், ஸ்டுப்பிட், நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா" என்று கூறி என் நெற்றியில் அவள் இட்ட எண்ணிலடங்கா முத்தங்களின் ஈரத்தை என்னால் இப்போதும் உணர முடிந்தது. அந்த குளிர்ந்திருந்த மழை இரவிலும் அவள் கதகதப்பை உணர்ந்தேன்.

                                       நடப்பதெல்லாம் நிஜம்தானா என என்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்தேன். வலித்தது. உள்ளே திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்ஸின் ஹெட்லைட் வெளிச்சம் தொலைதூரத்தில் தெரிந்த தென்னை மரத்தில் அடித்து எதிரொளித்தது. மீண்டும் என் ஸ்கல்கேண்டி  இயர்போனில் அவள் குரல் கேட்டது. "டே, ஸ்டுப்பிட். எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. வா அன்பே, இந்த சங்கை மீட்ட வா!' என்றது. 'சங்கமித்ரா' என்ற அவள் பெயரை நான் 'சங்கு' என்று செல்லமாக அழைத்தது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். அதுவும் கலவிக்கான சங்கேத வார்த்தை தான் அந்த 'சங்கை மீட்டுதல்'! அப்போது அந்தக் குரல் அவளுடையது தான். சந்தேகமேயில்லை.

                                    'ஏதாவது ஒரு காரணம் சொல்லி வண்டியை விட்டு இறங்கி வா' என்று என்னை வார்த்தைகளால் அவள் வசீகரித்தாள். இத்தனை வருடங்கள் கழித்து இப்போது ஏன்? ஆச்சர்யமும் பயமும் ஒன்றன் தோள்மீது மற்றொன்று கை போட்டுக் கொண்டு ஆக்ரமித்திருந்தது. அன்பாக பேசிக் கொண்டிருந்த அவள் குரலில் இப்போது சற்று கடுமை சேர்ந்திருந்தது. "இப்போ நீ எறங்கறயா இல்லே வண்டிய நான் நிறுத்தட்டுமா? என்றாள். இறங்க வேண்டாம் என்று என் உள்மனத்தின் கட்டளையை மீறமுடியாமல் நான் அமர்ந்திருக்க, அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சிறு கல் பஸ்ஸின் அகலமான கண்ணாடியில் மோத ஓரிரு நொடிகளில் சடசடவென உடைந்து இப்போது அங்கே வெற்றிடம் மட்டுமே இருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த டிரைவர் சடன் பிரேக் அடிக்க அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உள்ளே இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். "வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடி"

                                                                                                                     -தொடரும்..!38 comments:

 1. 'திடுக்' என்று ஒரு தொடர்!

  ReplyDelete
 2. இடையிடையே சின்ன சின்ன தொய்வு இருந்தாலும் எழுத்து கடைசி வரைக்கும் இழுத்துச் செல்கிறது. குளம்பி, சுகந்தம் போன்ற இன்ன பிற வார்த்தைகள் வலிய திணித்த உணர்வு .... மற்றபடி ரசித்தேன் தலைவரே ...

  ReplyDelete
  Replies
  1. மம்மூட்டி கையால் தேசிய விருது.. ஹிஹிஹீ

   Delete
 3. ஹேய் நல்லாருக்கு ஆவி! ஹஹ் ஆவி தொடர் போல??!!!

  ம்ம் கொஞ்சம் ஸ்லோவாக இடையில் இருப்பது போலத் தெரிந்தது. தமிழ் நல்லாருக்கு ஆனா சில வார்த்தைகளை நாம் வழக்கமாக உபயோகிப்பது போல உபயோகித்தால் இன்னும் கதையின் பாங்குடன் நெருக்கமாக முடியும் என்று தோன்றியது.

  ஆனால் கதையை மிகவும் ரசித்தேன் ஆவி. விஷுவலைஸ்டாக... சங்கமித்ரா நன்றாகவே கலக்குகின்றாள். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா சேச்சி..

   Delete
 4. சங்கமித்ரா "மித்ர" ஆகிவிட்டாள் என்னுடன்.
  கீதா

  ReplyDelete
 5. ரொம்பநாளைக்கு அப்புறம் உங்களின் கதை! ஆரம்பமே அசத்தல்! திகில் துரத்துகிறது! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. ஆஹா! ஜேசுதாசைக் கேட்டுக்கொண்டே வாசித்தவள் அதை நிறுத்தி இயர்போனை எடுத்துவிட்டேன்..
  அடுத்து என்ன ஆகுமோ?

  ReplyDelete
 7. கண்ணம்மா வார்த்தை தவறினால் தப்பில்லே !நீங்கள் தவறலாமா ?என்னடி மீனாக்ஷி என்று கேட்டவர் பாடும் நிலா பாலுவாச்சே :)
  சரி கதைக்கு வருவோம் ...வண்டி நின்னாச்சு ,சங்கு சங்கமம் ஆனாளா ,சங்கைக் கடித்தாளா:)

  ReplyDelete
  Replies
  1. பாஸ், இது நீங்க சொன்ன 'சிம்லா ஸ்பெஷல்' இல்லே.. 'சேது' படப் பாடல்.. :)

   Delete
  2. நாசமாப் போச்சு ஆவி.... பகவான்ஜீ குறிப்பிடற பாட்டு வர்ற படம் இளமை ஊஞ்சலாடுகிறது. நாட் சிம்லா ஸ்பெஷல்.

   Delete
  3. அவ்வ்வ்வ்.. அது என்னடி மீனாட்சி ஸாங்.. மறந்துட்டன்!

   Delete
 8. கலக்கலாய் ஒரு ஆரம்பம்...
  அடுத்த பகுதிக்காய் வெயிட்டிங்...

  ReplyDelete
 9. எத்தனை வாட்டி சொல்றது. !!
  இந்த ஆவி எழுதற பேய்க்கத எல்லாம் படிச்சுட்டு
  ராத்திரி நடுராத்திரி லே கத்து கத்துன்னு கத்தறீக .

  மணி ஆல்ரெடி 11 ஆயிடுச்சு.

  போய்ப்படுங்க.. நாளைக்கு காலைலே படிக்கலாம்.

  சொன்னது மீனாச்சி பாட்டி.

  சுப்பு தாத்தா தூங்கப்போனார்.
  திடீர்னு முழிப்பு வந்து பார்த்தார்.ஹால்லே
  என்ன கிழவி இன்னும் படிச்சுட்டு இருக்குது?
  என்ன படிச்சுட்டு இருக்கே. தூங்கலையா...

  இந்த கத ரொம்ப சுவாரஸ்யமா இருக்குதே..அதான் படிச்சுட்டு தூங்கலாம் அப்படின்னு முடிவு செய்ஞ்சேன்.
  கிழவி சொல்ல

  சர்தான். ஏன்னு தூங்கி விட்டேன்.

  காலைலே முழிச்சுட்டு உடனே கேட்டேன்.
  எப்ப முடிச்சு ட்டு தூங்கினே ?

  எத படிச்சுட்டு?

  ஆவி கதைய...

  நான் ஒன்னும் படிக்கலையே..நான் தான் உங்களுக்கு முன்னாடியே தூங்கிட்டேனே...

  அப்ப ஹால் லே இருந்தது..நான் பாத்தது யாரு??//
  கேட்கமுடியவில்லை. நாக்கு குழறீட்டது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. இது செம்ம டெர்ரரா இருக்கே.. ஹஹஹா தாத்தா

   Delete
 10. முதல்ல உங்க கதைன்னு நினைச்சேன். அப்புறம் இது தொடர்கதைன்னு புரிஞ்சுது. அசத்தல் ஆரம்பம்

  ReplyDelete
 11. கணேஷ் அண்ணாக்கூட சேராத ஆவி. எழுத்துல முதிர்ச்சி தெரியுது. நீ இன்னும் சின்ன பிள்ளைதானே!!?? (ஏன்னா, இத்தனை நாள் எழுதியும் இன்னும் அப்படியே இருக்கேன். என் எழுத்தில் துளிக்கூட மாற்றமில்ல.)

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா அக்கா

   Delete
  2. ஆஆஆ.. ஆவி சின்னப் பிள்ளையா...? இது ஒலகமகா அநியாயம் தங்கச்சி...

   Delete
 12. சங்கமித்ரா' என்ற அவள் பெயரை நான் 'சங்கு' என்று செல்லமாக அழைத்தது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். //// நல்லவேளை, அவன் காதலி பேர் மண்டோதரி இல்லை...

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா வாத்தியாரே.

   Delete
 13. சங்கை மீட்டப் போனா சங்கூத வெச்சுருவான்னு மனசு சொல்லிச்சாக்கும்..? நல்ல துவக்கம். இதே ஆர்வத்தை குறையவிடாம மெய்ன்டைன் பண்ணுங்க மிஸ்டர் ஆவி...

  ReplyDelete
 14. நல்ல துவக்கம்.... தொடர்கிறேன் - என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் ஜி..

   Delete
 15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
 16. ஆரம்பம் நல்லா இருக்கு. அடுத்தும் தொடர்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. பாராட்டிற்கும், தொடர்வதற்கும்..

   Delete
 17. காதால் சுவாசிப்பதும்.. சங்கை மீட்டுவதும்... நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. சார்.. நீங்க எல்லாம் சீனியர்.. உங்க கிட்ட இருந்து தான் நாங்க 'தொழில்' கத்துகிட்டோம்..

   Delete
 18. நல்ல ஆரம்பம் ஆவி. நடுவில் வர்ணனைகள் மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். தொடர்கிறேன்.

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...