Sunday, November 1, 2015

விடுமுறை விட்டாச்சு..!

'மேடம், உங்க பையனுக்கு  ஸ்டடிஸ்ல கான்சென்ட்ரேஷன் குறைஞ்சு போச்சு. பசங்களோடவும் மிங்கிள் ஆக மாட்டேங்குறான். கொஞ்சம் என்னன்னு கவனிங்க' கிளாஸ் மிஸ் தன் மகனைப் பற்றிக் கூறியவற்றை மனதில் அசை போட்டவாறே, தன் ஒரு வயது குட்டிப் பெண்ணிற்கு உடை மாற்றினாள். பின் பவுடர் டப்பியை தேடிய போது தான் சமையலறையில் தோசை தீய்ந்து போகும் வாடை வந்தது. ஓடிச்சென்று அடுப்பை அணைத்து விட்டு தோசைக் கல்லை கீழே இறக்கி வைத்தாள்.

பின்னர் ஹாலில் அமர்ந்திருந்த மகனிடம் சென்றாள். நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவன் அவளைக் கண்டதும் எழுதுவதை நிறுத்திவிட்டு நோட்டை மூடி வைத்தான். ஒரு சிறிய புன்முறுவலோடு அவன் அருகே அமர்ந்து அவன் தலையை வருடிக் கொடுத்தாள். பின்னர் மெதுவாக அவனிடம், 'என்ன எழுதிட்டு இருந்தே? அம்மாகிட்ட காமிக்க மாட்டியா? ' என்றதும் அவளே எதிர்பார்க்காத அந்த தருணத்தில் அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

பதறிப்போய் அவனைத் தன் மார்போடு அணைத்து "என்னாச்சுப்பா?" என்றாள் ஆதரவாக. அவள் கேள்விகள் அவன் செவிகளை அடைந்த போதும் அவன் இதழ்கள் பதில் சொல்லத் திறப்பதாய் இல்லை. இப்போது அவள் அவன் எதிரே வந்து தன் இரு கைகளால் அவன் கன்னங்களைப் பற்றி "கண்ணா, என்னடா ஆச்சு?" என்றாள் பதறியபடி. அவன் கண்களைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தபடி அவன் பதிலுக்காய்க் காத்திருந்தாள். அவள் செய்கை அவன் அழுகையை அதிகப் படுத்தியதே தவிர அவன் நாவிலிருந்து ஒலிகளை ஈர்ப்பதாய் இல்லை. 

அப்போதுதான் நடக்க ஆரம்பித்திருந்த அந்தக் குட்டிப் பெண் சுவற்றைப் பிடித்தபடி தாயை நோக்கி மெல்ல நடந்து வந்தது. அவன் மௌனம் கண்டு செய்வதறியாது திகைத்த அவள் "கண்ணா, இப்போ நீ என்ன விஷயம் னு சொல்லலேன்னா அம்மாவும் சேர்ந்து அழுவேன்" என்றாள். இதைக் கேட்ட மாத்திரத்தில் அவன் கண்களில் நீர்வரத்து குறையத் தொடங்கியது. அவன் கண்ணீர் தாரைகளை துடைத்து விட்டபடி, அருகே வந்து சேர்ந்த மகளை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். "ம்..குட் பாய், இப்ப சொல்லு' என்றாள்.

அவன் மெல்ல இதழ்கள் பிரித்து, கொஞ்சமாய் மூக்கில் எட்டிப் பார்த்த வெள்ளைக்காரனை தன் சட்டை காலர் கொண்டு துடைத்தபடி சொல்ல ஆரம்பித்தான். 
                    'அது வந்து.. எங்க கிளாஸ் கார்த்தி இருக்கான்ல.'
                     'ஆமா'
                    'அவங்க வீட்ல எப்பவும் ஈவனிங் அவன் ஸ்கூல் விட்டு வந்ததும் அவன்        அம்மா, ஏதாவது டிபன் பண்ணிக் கொடுப்பாங்க. சுடச்சுட டேஸ்டா இருக்கும்.'
                      'ம்' 
                     ''அப்புறம் அவனுக்கு காம்ப்ளான் கலந்து கொடுப்பாங்க'. 
                       "  ".

                      "அது மட்டுமில்ல, ஒவ்வொரு மாசமும் எங்கயாவது டூர் கூட்டிட்டு போவாங்க அவங்க அப்பா, போன வாரம் கூட கோவைக் குற்றாலம் போயிட்டு வந்தான்"
                        "   "

                         "ஆனா, நம்ப வீட்டுல, நீங்க எப்பவுமே இருக்கிறதே இல்ல. எப்ப பார்த்தாலும் ஆபிஸ் போய்டறீங்க. அப்படியே நைட் வந்தாலும் பாப்பாவை தான் பார்த்துக்கறீங்க."

                             இப்போது கண்ணீர் சுரந்தது -அவள் கண்களில். "அப்படி இல்லடா கண்ணா, அம்மா ஆபிஸ் போனா தானே நீ இங்கிலீஷ் மீடியத்துல படிக்க முடியும், நல்ல அழகான சட்டை போட முடியும்" அவள் சொல்லி முடிப்பதற்குள் "எனக்கு நல்ல சட்டையெல்லாம் வேணாம்மா, சாயந்தரம் நா ஸ்கூல் விட்டு வரும்போது நீ இருந்தாலே போதும்" என்றபடி தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி எறிந்துவிட்டு ஓடினான். 

                         
                               சுமார் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வு இன்னும் என் எண்ணங்களில் பசுமரத்தாணி போல். சில சமயங்களில் அவர் கூறிய நியாயங்கள் புரிவது போல் தோன்றினாலும் கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நாளும் அம்மாவின் அன்பை மிஸ் செய்தபடி தான் நானும் என் தங்கையும் கழித்தோம். முப்பத்தியாறு வருட உழைப்பிற்குப் பின் நேற்று அம்மாவுக்கு ரிட்டயர்மென்ட் டே. 'இனி எப்படி நாட்களை கழிக்கப் போகிறேனோ?' என்ற புலம்பலுடன் வீட்டிற்குள் நுழைந்தார். இனி அம்மாவுக்கு எப்போதும் விடுமுறை தான். ஆனால் தங்கை வெளிநாட்டிலும், நான் வெளியூரிலும்..!


                                                                      ***************




24 comments:

  1. தேடும்போது கிடைக்காத அன்பு....

    ReplyDelete
  2. லைப் ஒரு ஐரனி.

    வேண்டும்போது கிடைக்காது.
    கிடைக்கும்போது அதை அனுபவிக்க முடியாது.

    இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.



    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தாத்தா. But I always missed her!!

      Delete
  3. இதுதான் வாழ்க்கை...மனதைத் தொட்டது ஆவி. முதலில் கதை என்று நினைத்து இருவரும் வாசித்துவந்த போதே மனதின் அருகில் அந்தக் கதாபாத்திரங்கள் நெருங்கின...இறுதியில் அது உங்கள் கதை என்று தெரிந்ததும் தொட்டுவிட்டது... இப்போது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெலாம் அவர்களுக்காக உங்கல் நேரத்தை ஒதுக்கிவிடுங்கள்...

    கீதா: ஆவி ரியலி யு டச்ட் அவர் ஹார்ட்...அம்மா பாவம். அப்பவும் மனசு கஷ்டப்பட்டிருப்பாங்க ..இப்பவும் ம்ம்ம் அவர்களுக்குப் பிடித்தமானதைச் செய்யச் சொல்லுங்கள். நீங்களும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவர்களுக்கென நேரம் ஒதுக்குங்கள்,,ம்ம் சமீபத்து அவர்களுடனான உங்கள் பயணம் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் இல்லையா..

    எனக்கும் கூட இப்போது அப்படித்தான்..இத்தனை வருடங்கள் மகனுக்காக (வீட்டில்தான் ...) அவனுடன் இருந்துவிட்டு , இப்போது அவன் அவ்வப்போது பறந்து வருவதே நான் அவனை ரொம்ப மிஸ் பண்ணுகின்றேன்....ஏதோ இப்படி உங்களுடன் எல்லாம், ப்ளாக் என்றும் இருப்பதாலும் ஓரளவு சமாளிக்க முடிகின்றது இல்லையேல் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. //நீங்களும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவர்களுக்கென நேரம் ஒதுக்குங்கள்// கண்டிப்பாக சேச்சி.

      Delete
  4. முந்தைய தலைமுறையின் பொருளாதார பற்றாக்குறையால் குடும்பங்கள் வளமான வாழ்க்கையை இழந்தன. ஏராளம். அதை ஈடு கட்ட இருவரும் உழைப்பதுதான் நல்லது என்று முடிவ கட்டியது அடுத்த தலைமுறை. ஆனால் அது அன்பையும் நெருக்கத்தையும் பற்றாக்குறையாக்கிக் கொண்டிருக்கிறது என்பது நெஞ்சில் அறையும் உண்மை.

    ReplyDelete
  5. ஒரு சிறுகதை போல சொன்ன விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன்.

      Delete
  6. எச்சரிக்கை:
    இன்னொரு கோணத்திலும் சிறு கதையாய் தொடரகூடும்

    ReplyDelete
  7. பிள்ளைகளுக்காக பெற்றோர் செய்யும் தியாகம் என்றாலும் பிள்ளைகளுக்கு ஏக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். ஓய்வு காலத்தில் உங்கள் அன்னையோடு கொஞ்சம் பொழுதை செலவிடுங்கள். அது அவர்களின் ஏக்கத்தை குறைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சுரேஷ், நன்றி.

      Delete
  8. முதல் குழந்தை பிறந்ததுமே யாருமே பார்த்துக்கத் தயாராக இல்லை என்பது புரிந்ததுமே வேலையை விட்டேன். அதுக்கப்புறம் பண நெருக்கடியில் பல வருடங்கள் தவித்தாலும் மீண்டும் வேலைக்கு முயலவில்லை. வீட்டில் இருந்தே தையல் சொல்லிக் கொடுப்பது, ட்யூஷன் எடுப்பது, எல் ஐசி, என் எஸ்சி ஏஜென்சி எடுத்து, புடைவை வியாபாரம் செய்து என்று பற்றாக்குறையை ஈடு கட்டினோம். இறைவன் அருளால் இரண்டு குழந்தைகளுக்கும் கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைத்துக் கடைசி வரை அங்கேயே படித்தனர். ஆகவே படிப்புச் செலவு மிகக் குறைவு தான். இல்லைனா திணறி இருப்போம். :)

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்.. கீதா மேடம், இப்போது நினைத்துப் பார்த்தால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் பலனளித்தது தெரிகிறது அல்லவா?

      Delete
  9. திரு முரளிதரன் சொல்லி இருப்பதை அப்படியே வழிமொழிகிறேன். என்னோட கருத்தும் அது தான். ஆனால் வேலையை விட்டதற்காக இன்று வரையிலும் வருத்தம் என்று பெரிய அளவில் எதுவும் இல்லை. இறை அருளால் இருப்பதே போதும் என்னும் மனோநிலையும் இருக்கிறது. இதுவே அதிகம். more than enough! :)

    ReplyDelete
  10. மனதை தொட்ட பதிவு சார் ...

    ReplyDelete
  11. ப்ச் ! ஃபீலிங்க் ஆக்கிட்டீங்களே அண்ணா. Be with ur amma , அவ்ளோதான்

    ReplyDelete
  12. Replies
    1. உங்கள் ஏக்கம் புரிகிறது..அம்மாவும் ஏங்கியிருப்பார். இனி முடிந்த அளவு அம்மாவுடன் நேரம் செலவழியுங்கள்..
      மூத்தவனுக்கு ஒரு வயதானபொழுது மிகப் பிடித்த வேலையை விட்டேன். ஒரு வருடம், இரண்டு வருடம் என்று ஆகி, இளையவன் பிறந்து..இதோ அக்டோபேரோடு வேலையைவிட்டுப் பத்து வருடங்கள் ஆகிவிட்டது ஆவி. இத்தனை வருடங்கள் பசங்களோடு பசங்களுக்காக என்று யோசித்துத்தான் எதுவுமே செய்வேன்..இப்பொழுது சில பல காரணங்களால் மீண்டும் வேலைக்குச் செல்லலாமா என்ற குழப்பத்தில் இருக்கும்பொழுது உங்களின் இந்த பதிவு..!...
      take care

      Delete
    2. குழந்தைகள் சிறு வயதில் குறிப்பாக பள்ளி செல்லும் வயதில் தாய் தன்னுடன் இருக்கையில் நிச்சயம் ஒரு திருப்தியுடன் வளர்கின்றனர். வாழ்க்கை முன்னேற்றங்களை காரணம் சொல்லி பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சில குழந்தைகள் இது (என்னைப்) போலவும் இருக்கும். :)

      Delete
  13. சட்டையெல்லாம் வேணாம்மா, சாயந்தரம் நா ஸ்கூல் விட்டு வரும்போது நீ இருந்தாலே போதும்" #உருக்கும் வரிகள்.....பிரியத்தை காட்ட மறந்தவர்களுக்கு இந்த ஒரு சூடு போதும்

    ReplyDelete
  14. வாழ்க்கை இப்படி பலரை சூழ்நிலைக்கைதியாக்குது ஆவி!

    ReplyDelete
  15. பல சமயங்களில் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிடுகிறது - ஒவ்வொருவரும் சூழ்நிலைக்கைதிகளாக இருக்கிறோம்.....

    மனதைத் தொட்ட பதிவு. அம்மாவின் ஓய்வு காலத்தில் முடிந்தவரை அவருடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...